«

»


Print this Post

கீழ்ப்படிதல்,முரண்படுதல் பற்றி…


sure

வழக்கமாக உங்கள் ‘நகைச்சுவைக்’ கட்டுரைகளை புன்னகையுடனும் அறை அதிரும் உரத்த சிரிப்புகளுடனும் வாசிப்பேன். ஆனால் இதை வாசிக்கும் போதே உள்ளுக்குள் ஒர் எரிச்சலையும் சோகத்தையும உணர்ந்தேன். இப்படியெல்லாமா ஒருவர் பிரச்சினைகளை எதிர் கொண்டிருக்க வேண்டும்?

ஓர் எழுத்தாளர் தன்னுடைய பல வருட உழைப்பின் மூலமாக கிடைத்த வாசிப்பு அனுபவத்தை தன்னுடைய இளம் வாசகர்களுக்கும் விருப்பமுள்ளவர்களிடமும் பகிர ஒர் அழைப்பை விடுக்கிறார். எழுத்தாளர்கள் உட்பட பலபேர்கள் நீண்ட தூரம் கடந்து தங்களுடைய நேரத்தையும் உழைப்பையும் செலவு செய்து கூடும் அந்த நிகழ்ச்சி முழு பயனுள்ளதாக அமையும் வகையில் சில நிபந்தனைகளை விதிக்கிறார். அவைகளில் சில அதீதமாக இருந்தாலும் பெரும்பாலானவை ஒரு சாதாரண மனிதன் கூட இன்றைய நாகரிக உலகில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படையான நிபந்தனைகளே. இதற்கு உடன்படுகிறவர்கள் வரப்போகிறார்கள், இல்லாதவர்கள் புறக்கணிக்கப் போகிறார்கள்.

ஆனால் இது குறித்து இணையத்தில் பல கிண்டல்களையும் வன்மங்கள் மறைந்திருந்த அவதூறுகள் பல வாசிக்கக் கிடைத்தன். ஆபத்தில்லாத நகைச்சுவைகளை ரசிக்க முடிந்தாலும் எதிர்த்தேயாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்களின் கலக புரட்சி பாவனைகளை காண எரிச்சலாகவே இருந்தது. மதுவருந்துவதே புரட்சியின் கலகத்தின் ஓர் அங்கம் என்கிற கருத்துருவாக்கம் தீவிரமாக பரப்பப்படும் நிலையில் பள்ளிச் சிறுவர்கள் உட்பட புரட்சியாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் புரட்சி வெடித்துவிடும்தானே? ஆனால் பெரும்பாலான கலகவாதிகளின் புரட்சி பாவனை , மதுவரங்கில் கூடி மார்க்ஸ், சே என்ற உரத்த விவாதத்துடன் துவங்கி இயன்றால் எதிரில் இருப்பவனின் முகத்தில் குத்தி பிறகு தனியாக வீடு திரும்பும் போது ‘வாயை ஊதுடா” என்று மிரட்டும் காவல் துறையினரின் முன் கூனிக்குறுகி நிற்பதுடன் முடிந்து விடுவதுதான் சோகம்.

The Karate Kid என்கிற திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். வித்தை கற்றுக் கொள்ள விரும்பும் சிறுவனிடம் அந்த குரு முதலில் நிர்ப்பந்திக்கும் பயிற்சியே ‘கீழ்ப்படிதல்’ எனும் குணத்தையே. இன்னொன்று அவன் மூளையில் இந்த வித்தை குறித்து ஏற்கெனவெ நிரம்பியிருக்கும் அறைகுறையான எண்ணங்களை காலி செய்வது. தன்னை முழுவதுமாக குருவிடம் ஒப்படைத்தல்தான் கற்றுக் கொள்ளலின் அடிப்படை என்பதை அப்படம் வலுவாகச் சுட்டிக் காட்டுகிறது. அவ்வகையில் சில நிபந்தனைகள் அவசியமானதாகவே தோன்றுகிறது. இதுபற்றிய பல கிண்டல்களை வாசிக்கும் போது அந்த முதிராச்சிறுவன் தனியானவனல்ல என்பது புரிகிறது.

சுரேஷ் கண்ணன்

http://www.pitchaipathiram.blogspot.com

***

 

போகன்

போகன்

 

ஓர் எதிர்வினை

திரு சுரேஷ் கண்ணன் சொல்வதுபோல கராத்தே மாதிரி இலக்கியம் ஒரு வித்தையா என்று சந்தேகமாக இருக்கிறது.இலக்கியத்தை ஒரு குருவின் கீழ் ‘அடிபணிந்து’ கற்றுக் கொள்ளமுடியுமா.. ஜெமோவே சொல்வது போல இலக்கியம் என்பதே ஒரு அகங்காரச் செயல்பாடுதான்.அதனால்தான் இந்த உரசல்கள் பூசல்கள் எல்லாம் .ஜெயகாந்தனோ ஜெமொவோ சொல்லவேண்டியதை எல்லாம் சொல்லவேண்டிய விதத்தில் சொல்லிவிட்டார் என்று ஒப்புக் கொள்ளும் தருணத்தில் நான் என்னிடம் எதுவும் மேற்கொண்டு சொல்வதற்கு இல்லை என ஒப்புக் கொள்கிறேன். அல்லவா. ஆகவே புதிதாக எழுதவரும் ஒவ்வொருவனும் ஏற்கனவே எழுதுபவர்களை மறுத்துத்தான் வரமுடியும். இதற்கு சிறந்த உதாரணம் ஜெமோவேதான் எனத் தோன்றுகிறது.அவர் சு ரா, போர்ஹே, சுஜாதா போன்றவர்களை மறுப்பதை இந்த தளத்திலேயே நான் புரிந்துகொள்கிறேன். உண்மையில் இலக்கியம் என்பதே கீழ்ப் படிய மறுப்பதுதான். ஆகவேதான் இத்தகைய நிகழ்வுகளை ‘ஒழுங்கு’ பண்ணுவது கடினமாக இருக்கிறது எனத் தோன்றுகிறது

கோமதி ஷங்கர்

***

 

sure

அன்பான கோமதி ஷங்கர்,

இலக்கியம் என்பதை வித்தை என்பதாக நான் குறுக்கவில்லை. ஆனால் இலக்கியத்தின் ஆரம்ப நிலையை கடப்பதற்காக, அறிவதற்காக, கற்றுக் கொள்வதற்கு சில அடிப்படை குணாதிசயங்கள் தேவை என்பதாக நான் கருதுகிறேன். நாம் ஏற்கெனவே அது குறித்து அறிந்து வைத்திருக்கிற அரைகுறையான கருத்துக்களை உதறி காலிப்பாத்திரமாக மாறுவதும், அந்த அறைகுறை விஷயங்களை ‘ஞானமாக’ கருதிக் கொண்டு கற்றலின் போது விதாண்டாவாதம் செய்வது தவிர்க்கப்பட வேண்டியதும்தாம் அது. உண்மையான அறிதல் விருப்பத்துடன் எழுப்பப்படுகிற கேள்விகள் வேறு. இந்தச் சந்திப்பிற்கு வரப்போகிறவர்கள் பெரும்பாலும் கவிதை குறித்தும் மரபிலக்கியம் குறித்தும் அடிப்படையாகவும் அல்லது மேலதிக விவரங்களைப் பற்றி அறிவதற்காகவும் விவாதிக்கவும்தான் கூடுகிறார்கள். எனில் மேற்குறிப்பிட்ட அடிப்படை குணாதியங்கள் நிபந்தனைகளாக எதிர்ப்பார்ககப்படுவதில் தவறில்லைதானே?.

இன்னொன்று. எந்தவொரு வாசகனும் ஒரே எழுத்தாளரிடம் நிலைகொண்டிருக்க மாட்டான். அவரவர்களின் வாசிப்பனுபவத்திற்கு ஏற்பவும் அதை சரியாக உள்வாங்கிக் கொள்வதற்கேற்பவும் வெவ்வேறு காலகட்டத்தில் அடுத்த நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பான். இந்த நிலையில்தான் தாம் கடந்து சென்ற எழுத்தாளனை மறுப்பது நிகழ வேண்டும். ஜெயமோகன் ஓர் எழுத்தாளரை மறுக்கிறார் அல்லது கறாராக விமர்சிக்கிறார் என்றால் அதற்குப் பின்னால் அந்த எழுத்தாளரை ஏறக்குறைய முழுவதுமாக வாசித்திரு்க்கிறார், உள்வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதாகத்தான் நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அப்படிப்பட்ட உழைப்பில் சில சதவீதத்தை கூட செலுத்த முன்வராமல் ‘அந்தாள் எழுதுவது குப்பை’ என்று போகிற போக்கில் சொல்லிச் செல்வதை ‘கீழ்ப்படிய மறுப்பது’ என்று சொல்ல முடியாது. அவ்வாறானவர்கள்தான் இந்தச் சந்திப்பின் நிபந்தனைகள் குறித்து தவறாக புரிந்து கொள்ள முடியும். உண்மையான அறிதல் வேட்கை உள்ளவன் இது போன்ற சிறுதடைகளை பொருட்படுத்த மாட்டான்.

சுரேஷ் கண்ணன்

www.pitchaipathiram.blogspot.com

***

 

போகன்

போகன்

திரு சுரேஷ்கண்ணன் அவர்களுக்கு,

ஒரு வாசகனையும் ஆரம்பகால எழுத்தாளனையும் பிரித்துக் கொண்டே நான் அவ்விதம் சொன்னேன். அதுவும் நீங்கள் வித்தை என்ற சொல்லை பயன்படுத்தியதால்.காலிக் கோப்பை என்ற ஜென் படிமத்தை விட ‘இருப்பவனுக்கு இன்னும் கொடுக்கப் படும்’ என்ற விவிலிய உருவகம்தான் இங்கு பொருத்தமாக இருக்கும். இங்கு வெறும் கையுடன் வருபவர் வெறும் கையுடந்தான் செல்வார்கள். நேரடியாக இந்த விவாதத்துடன் சம்பந்தம் இல்லாவிட்டாலும் எந்த ஒரு ஆரம்பகால எழுத்தாளனும் தன்னை மீறிய பெரிய ஆளுமை கொண்ட எழுத்தாளர்களுடன் அவன் நிலைபெறும்வரை நெருங்கிப் பழகாமல் இருப்பதே நல்லது எனத் தோன்றுகிறது. ஆலமரத்தடியில் வேறு தாவரங்கள் வளர்வதில்லை]

கோமதி சங்கர்

***

அன்புள்ள சுரேஷ் கண்ணன், கோமதி சங்கர்,

இவ்விஷயத்தில் என் கருத்துக்களை சொல்லிவிடுகிறேன்

பொதுவாக குருகுலமுறையில் கீழ்ப்படிதல் முரண்படுதல் ஆகியவை எப்படிச் செயல்படுகின்றன என்பதை கவனித்திருக்கிறேன். இது குருகுல முறைகளில் மட்டுமல்ல, ஒரு தனிமனிதருடனான அந்தரங்க நட்பு மூலம் கற்றுக்கொள்ளும் எல்லா வழிமுறைகளுக்கும் பொருந்தும்.

‘அடிப்படை’களை கற்றுக்கொள்ளும் தளத்தில் கீழ்ப்படிதல் ஒரு விதியாகவே எங்கும் உள்ளது. எல்லாவகையான சுதந்திரங்களும் அனுமதிக்கப்படும் மேலைக்கல்விமுறையில்கூட. அடிப்படைகளை கற்கும்போது கற்பிப்பவர் அறிந்த இடத்திலும் கற்பவர் அறியாத இடத்திலும் இருக்கிறார். அங்கே விவாதத்துக்கே இடமில்லை. அங்கே விவாதம் நிகழுமென்றால் அடிப்படைகளை பயில்வதற்கான பொறுமை அர்ப்பணிப்பு ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மாணவர் இழக்கிறார். அதன் இழப்பு அவருக்கு மட்டுமே

ஞானகுருக்களை மட்டுமல்ல, சுந்தர ராமசாமி ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களைச் சந்திக்கும்போதுகூட அடிப்படை அறிதல் இல்லாமல் விவாதிக்க புகுந்தால் அவர்கள் உடனே தங்கள் வாசல்களை அனைத்தையும் மூடிக்கொண்டு இறுக்கமாகி விடுவதை கண்டிருக்கிறேன். அதன்பின் நாம் அவரிடம் நாம் யார், நமக்கு என்ன தெரியும் என்றெல்லாம் சொல்லிக்காட்டிவிட்டு மீளலாம். அது ஒரு பாறையிடம் பேசுவதுபோன்றதே. கற்பிக்கும் தளத்தில் இருப்பவர்கள் ஒருபோதும் சொற்களை வீணாக்குவதில்லை.

அடிப்படைகளை விவாதம் மூலம் கற்றுக்கொள்ள முடியாது. எந்த ஒரு கலைக்கும் எந்த ஒரு அறிவுத்தளத்துக்கும் இது பொருந்தும். ஏன்? ஒன்று அடிப்படைகள் நாம் அறியாத ஒரு தளத்தைச் சார்ந்தவை. அந்த தளத்தை நாம் அறிந்தபின்னர்தான் இந்த அடிப்படைகள் எவ்வகையான முக்கியத்துவத்தை அங்கே வகிக்கின்றன என்று நமக்குப் புரியும். அது வரை அதைப்பற்றி நாம் கொண்டுள்ள எல்லா மனச்சித்திரங்களும் அர்த்தமற்றவைதான். அடிப்படைகளை பயிலும்போது விவாதித்தால் நாம் நம் மனப்பிரமைகளை அந்த ஞானத்தளம் மீது போட்டுப்பார்க்கிறோம். அதைப்போல ஒரு வீண் வேலை ஏதுமில்லை

அடிப்படைப் பயிற்சி அதிக முக்கியத்துவம் கொண்டுள்ள கலைகளில் இந்த கீழ்ப்படிதல் நெடுங்காலம் தேவையாகிறது. கராத்தே கற்கவோ வயலின் கற்கவோ நெடுநாள் அர்ப்பணிப்பு தேவை. அந்த அர்ப்பணிப்பு முதலில் அந்த கலையிடம், பின் அந்தக்கலையை கற்றுத்தரும் குருவிடம். அதன்மூலம் அந்தக்கலையின் பயிற்சிகளை முடித்த பின்னரே ஒருவர் அதற்குள் செல்கிறார். அதன்பின்னரே அவர் விவாதிக்கும் தகுதி பெறுகிறார்.

தத்துவம் இலக்கியம் போன்றவற்றில் அவ்வாறு நெடுநாள் பயிற்சி தேவைப்படாது. ஏனென்றால் இவற்றில் பயிற்சி என்பது முழுக்க முழுக்க மூளை சார்ந்தது. மூளை எளிதில் கற்றுக்கொள்ளும். உடல் கொஞ்சம் தாமதமாகவே கற்றுக்கொள்ளும். உள்ளுணர்வு மிக மிக மெல்லத்தான் கற்றுக்கொள்ளும். இலக்கியத்தில் ஒருவர் கற்றுக்கொள்வதற்கு இருப்பது அதன் தொழில்நுட்பம் மற்றும் அடிப்படைக் கருத்துக்களைத்தான். அவற்றை அவர் தன் தர்க்கபுத்தியால் கற்றுக்கொள்கிறார். ஒப்புநோக்க அது எளிது. ஆனால் அந்த பயிற்சிக்காலத்தில் யாரிடம் கற்றுக்கொள்கிறோமோ அவரிடம் பணிவு இல்லாமல் அவரிடமிருந்து எதையுமே கற்க முடியாது.

உதாரணம் சொல்கிறேனே, என் அனுபவத்தில் சுந்தர ராமசாமியிடம் ஒருவர் வந்து பாலகுமாரன் மாபெரும் நாவலாசிரியர் என்று பேசியபோது நான் உடனிருந்தேன். அவர் அங்கே அருகே ஒரு மருத்துவமனையில் வேலைபார்த்த மருத்துவர். சுந்தர ராமசாமி அப்டியா என்று கேட்டுக்கொன்டு பேசாமல் இருந்தார். ஒருவரை முற்றிலும் தவிர்ப்பதற்கான அவரது வழி என்பது அவரது சொந்த விஷயங்களைப்பற்றி அக்கறையுடன் கேள்விகள் கேட்பது. அந்தக்கேள்விகள் வழியாக அவர் சில சொந்த விஷயங்களை பேசியதும் காபிகொடுத்து அனுப்பிவிடுவார். ‘நான் அவரிடம் ஏன் பாலகுமாரனைப்பற்றி உங்கள் கருத்தைச் சொல்லக்கூடாது?’ என்று கேட்டேன். ‘அவருக்கும் எனக்கும் பொதுவா ஒரு பிளாட்ஃபாரமே இல்லியே’ என்றார் ராமசாமி. அதாவது அவர் இவர் சொல்வதை உள்வாங்கிக்கொள்ளும் அறிவுத்திறனுடன் இல்லை. அல்லது கவனிக்கும் மனநிலையுடன் இல்லை. அவரிடம் பேசுவதென்பது சுவாச விரயம் மட்டுமே

இங்கே பணிவு என்று எதைச் சொல்கிறேன்? சுந்தர சாமசாமி வாழ்நாள் முழுக்க அனைவருக்கும் ராமசாமிதான், கண்ணனைவிட இளையவர்களுக்கும் கூட. அவரிடம் நீங்கள் கால்மேல் கால்போட்டு பேசலாம். ஒரே சிகரெட்டை அவரும் யுவன் சந்திரசேகரும் ஒடித்து மாற்றிமாற்றி குடிப்பார்கள். அவரை நீங்கள் எந்நிலையிலும் நண்பராகவே நடத்தலாம். பணிவு என்பது நம்மைவிட அவர் பல வருடங்களுக்கு முன்னரே இலக்கியத்தில் நுழைந்துவிட்டவர் ,நம்மை விட கற்றும் கேட்டும் சிந்தித்தும் நெடுந்தூரம் முன்னால்சென்றவர், அழுத்தமான இலக்கிய ஆக்கங்களை உருவாக்கியவர், நாமறியாத முன்னோடிகளைச் சந்தித்தவர் என்பதை ஆழமாக உணரும்போது உருவாகும் உணர்ச்சி. அவர் கற்பிப்பவர் நாம் கற்பவர் என்ற தன்னடக்கம்.

நான் என் ஆசிரியர்களாக எண்ணிய அனைவரிடமும் விவாதித்தவன். அதை தெளிவாக பதிவுசெய்திருக்கிறேன். ஆனால் அவர்கள் என் ஆசிரியர்கள் என்ற அளவில், புலிக்குட்டி தாயின் வாலைக் கடித்து ஆடுவதுபோல விவாதித்தவன். என்னுடைய மனநிலை எப்போதுமே பணிவு, அர்ப்பணிப்பு சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. அவர்கள் சொல்லிய ஒரு சொல்லைக்கூட நான் மறந்தவனல்ல. அவர்கள் பேசும்போது அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனிக்கும் மாணவனாகவே இருந்திருக்கிறேன். அதை என் எழுத்துக்களில் காணலாம். அந்த பணிவு மூலமே நான் அவர்களிடமிருந்து கற்றுக்கொன்டேன். அவர்கள் நிற்கும் அந்த பிளாட்ஃப்ராத்துக்கு நானும் ஏறிவிட்டேன் என அவர்களே ஒத்துக்கொண்ட பின்னரே அவர்களிடம் விவாதிக்க ஆரம்பித்தேன். ஒரு ஆசிரியர் உங்களிடம் அழுத்தமாகவும் தீவிரமாகவும் விவாதிக்கிறார் என்றால் , அவரே விவாதத்தை தொடங்குகிரார் என்றால் மட்டுமே நீங்கள் விவாதிக்கும் இடத்தை அடைந்திருக்கிறீர்கள் என்று பொருள்.

ஒவ்வொரு ஆசிரியரையும் நான் சந்திக்கும்போது எனக்கு அதிர்ச்சியும் கசப்பும் ஒவ்வாமையும் உருவாகியிருக்கின்றன என்பதை பதிவுசெய்ய விரும்புகிறேன். நாம் ஓர் ஆசிரியரைச் சந்திக்கும்போது முதலில் நமக்கு ஏற்படுவது ஒரு சுய உடைவு. அவர் நம்மை நிலைகுலையச்செய்கிறார். நம் நம்பிக்கைகளையும் நம் கொள்கைகளையும் கலைக்கிரார். நாம் நிற்கும் மண்ணை கரைக்கிறார். ஆகவே நாம் பதற்றமும் எரிச்சலும் அடைகிறோம்.சுந்தர ராமசாமியை அவரது முழு வீச்சில் சந்திப்பவர்கள் என்ன அதிர்ச்சி அடைவார்கள் என்பதை நான் அடைந்திருக்கிரேன், பிறர் அடையக் கண்டிருக்கிரேன். சுந்தர ராமசாமியே ஜே ஜே சிலகுறிப்புகளில் அதைச் சொல்லியிருக்கிறார். ஜேஜேயை சந்திக்கும்போது பாலுவுக்கு புறங்கழுத்தில் பலமான அடிகள் விழுந்துகொண்டே இருப்பது போல் இருந்தது, ஜேஜேயின் கருத்துக்கள் துருப்பிடித்த ஆணிகளை குடலுக்குள் குத்தி வைத்தது போல இருந்தது என்கிறார் சுந்தர ராமசாமி. அந்த அனுபவம் அவருக்கு எம்.கோவிந்தனில் கிடைத்தது.

நான் சுந்தர ராமசாமியைச் சந்திக்கும்போது தகழி சிவசங்கரப்பிள்லையின் ஜெயகாந்தனின் ரசிகன். அவர் என் புறக்கழுத்தில் அடிகளாக போட்டார். நான் நிலைகுலைந்தேன். என் அஸ்திவாரங்கள் சிதறின. நான் அவற்றை பொறுக்கிப் பொறுக்கி என்னை மீண்டும் மீன்டும் கட்டிக்கொண்டே இருந்தேன். சொல்லப்போனால் நான் மிக தீவிரமாகச் சிந்தனை செய்த நாட்கள் அவைதான். ஒவ்வொருநாளும் நான் கட்டிக்கொன்டு வரும் அனைத்தையும் அவர் நொறுக்கிக் கொன்டிருந்தார். நான் மனம் புண்பட்டு அவரை விட்டு சொல்லாமல் கிளம்பி திரும்ப ஊருக்குச் சென்றிருக்கிறேன்.நாட்கனக்கில் மனம் கொந்தளித்திருக்கிறேன். ஆனால் அதனூடாக நான் முற்றிலும் புதிய ஓர் உலகுக்குள் நுழைந்துகொன்டும் இருந்தேன். அதன்பின் பதினைந்து வருடங்கள் கழித்து நித்ய சைதன்ய யதியைச் சந்தித்தபோது அவர் என்னுள் இருந்த சுந்தர ராமசாமியின் அடிக்கட்டுமானங்களை உடைத்தார். ராமசாமி என்னை புண்படுத்தியதில்லை. நித்யா வேண்டுமென்றே என்னை புண்படுத்தியிருக்கிறார். சபையில் கிண்டல்செய்திருக்கிறார். நான் எழுதிய ஒரு கட்டுரையை கிழித்து குப்பைக்கூடையில் போட்டுவிட்டு பேசாமல் இருந்திருக்கிறார்.

நித்யா ஏன் அப்படி கடுமையாக இருந்தார் என நான் புரிந்துகொள்கிறேன். இலக்கிய அடிப்படைகள் தெரியாமல் ஆரம்பகால வாசிப்பின் விளைவான மனப்பிரமைகள் மட்டுமே கொண்டிருந்த ஜெயமோகனை எளிதில் சுந்தர ராமசாமி உடைத்து வார்த்தார். ஆனால் நித்யா எதிர்கொண்ட ஜெயமோகன் சுந்தர ராமசாமியால் உருவாக்கப்பட்ட நவீனத்துவர். அழுத்தமான கருத்துக்கள் கொண்டவன், எழுத்தாளனாக புகழ்பெற்றவன். ஆகவே நித்யா அவனை பெரிய பாறாங்கல்லால் புறங்கழுத்தில் தாக்கினார். அது இன்னமும் வலிமிக்கதாக இருந்தது

பணிவு ஏன் தேவையாகிறதென்றால் இந்தவகையான சந்தர்ப்பத்தில் நம் தன்னடக்கத்தை காத்துக்கொள்வதற்காகவே. நான் சுந்தர ராமசாமியைச் சந்திக்கும்போது அவர் தகழியின் எழுத்தில் மார்க்ஸியம் சாம்பாரில் மீன் துண்டுபோல கிடக்கிறது என்று சொன்னார். உடனே ‘உனக்கென்னய்யா தெரியும் எங்க தகழியைப்பற்றி?’ என்று நான் கொந்தளித்திருக்கலாம். அவரது வாசிப்பை ,நுண்ணுணர்வை, ஆளுமையை நிராகரித்திருக்கலாம். நக்கலும் கிண்டலும் செய்திருக்கலாம். பொதுவாக முற்றின அறியாமையில் இருந்தே அத்தகைய மூர்க்கங்கள் உருவாகின்றன.

நான் ஆழமாக புண்பட்டேன், நிலைகுலைந்தேன். ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று கவனித்தேன். அதைப்பற்றி மீன்டும் மீண்டும் யோசித்தேன். அவர் ஒரு இலக்கியமுன்னோடி, என் காலகட்டத்தின் மாமனிதர்களில் ஒருவர் என நான் அறிந்திருந்தேன். அந்த பணிவு என்னைக் காத்தது. இல்லையேல் அவரை நான் முழுக்கவே இழந்திருப்பேன்.மெல்லமெல்ல அப்போது எனக்கு நவீன எழுத்தின் அழகியலைப்பற்றிய அறிதலே இல்லை என்பதையும் தமிழில் ஜெயகாந்தனுக்குமேல் மிக நுட்பமான ஓர் அழகியல் உலகம் உண்டு என்பதையும் அறிந்துகொன்டேன்

நித்யாவிடம் பேசும்போதான அனுபவம் இன்னும் எனக்கு ஒரு பாடமாக இருக்கிறது. நித்யா எதையுமே மீண்டும் சொல்வதில்லை. ‘என்ன சொல்றீங்க ‘ என்று ஒருமுறை கேட்டுவிட்டால் நித்யா உடனே அந்தப் பேச்சை நிறுத்தி விடுவார். சந்தேகம் கேட்பதைக்கூட அவர் விரும்புவதில்லை. அந்த விஷயத்தின் முடிச்சுகள் அனைத்தையும் நாம் சிந்தித்து புரிந்து கொண்ட பின் நாம் அவரை தர்க்கப் பூர்வமாக எதிர்கொள்ளலாம். அப்போது அவர் தன் அனைத்து நகங்களுடனும் பற்களுடனும் விவாதத்துக்கு வருவார்.

ஆனால் இதுகூட வரலாறு இலக்கியம் தத்துவம் சம்பந்தமான தளங்களில் மட்டுமே. மெய்ஞானம் சார்ந்த விஷயங்களில், யோக விஷயங்களில் நித்யா விவாதம் மட்டுமல்ல ஐயம்கூட கீழ்ப்படிதலுக்கு எதிரானது என்றே கருதுவார். ஐயத்தைக் காட்டும் ஒரு மெல்லிய உடலசைவே போதும் நித்யாவை எப்போதைக்குமாக இழக்க நேரிடும்.

ஓர் தமிழ் எழுத்தாளனாக என் இடம் என்ன என நான் அறிவேன். ஆனால் ஒருபோதும் ஒரு ஆசிரியனாக என்னை நான் உருவகித்துக்கொண்டதில்லை, மாணவனாக என் இடம் என நான் எண்ணுகிறேன். ஆனால் இந்த வயதுக்குள்ளாகவே நன் சிலவற்றை புரிந்துகொண்டிருக்கிறேன். சுந்தர ராம்சாமியும் நித்யாவும் ஏன் அப்படி ஆட்களை தவிர்த்தார்கள் என்பது எனக்கு அன்றுபுரிந்ததில்லை. இன்று எனக்கே வேறு வழியில்லை. அடிப்படைகள் அறியாமல் விவாதிக்க வருபவர்களை நான் பூரணமாகவே தவிர்த்துவிடுகிறேன். ஒரு பொதுமேடையில் கேட்கப்பட்டால் சுருக்கமாக ஒரு பதிலை மட்டும் சொல்வேன், விவாதிக்க மாட்டேன். நேர்ப்பேச்சில் ஒருபோதும் என்னை கூர்ந்து கவனிக்காதவர்களிடம் தீவிரமாக உரையாடுவதில்லை.

இதில் எனக்கான வழிமுறைகள் உள்ளன. நான் பேச ஆரம்பிக்கும்போது நாலைந்து விஷயங்களை சொல்லுவேன். அதில் எதில் எதிரில் இருப்பவர்கள் பற்றிக்கொள்கிறார்களோ அதை மட்டுமே நீட்டித்துப்பேசுவேன். அவர்களுக்கு ஆர்வமிருக்கிறதா என்பதை அவர்கள் நடுநடுவே கேட்கும் கேள்விகள் மூலம் உடலசைவுகள் மூலம் கண்ணசைவுகள் மூலம் எளிதில் புரிந்துகொள்வேன். அது மிக எளியது. நான் படிமவியல் பற்றி பேசும்போது ஒருவர் அதில் ஒரு சினிமா உதாரணம் சொன்னாரென்றால் சினிமாவுக்கு உடனே திரும்பிவிடுவேன், ஒருபோதும் பிற்பாடு படிமவியலுக்கு வரமாட்டேன்.சுந்தர ராமசாமியிடமிருந்து கற்றுக்கொன்டது அது. சுந்தர ராமசாமி தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேச ஆரம்பித்தால் அவர் வாசல்களை சாத்திவிட்டார் என்று பொருள் ‘ உங்க ஊர்ல எருமை அதிகமா, இல்ல காளைகளா?’ என்றுகேட்டாரென்றால் ‘இனி உன்னிடம் இலக்கியமோ தத்துவமோ பேசப்போவதில்லை’ என்பதே பொருள். நான் அதற்கு முன்பு தொழிற்சங்க அரசியலை வைத்திருந்தேன், இப்போது சினிமா. தமிழ் சினிமா உற்சாகமான ஒரு உரையாடல் களத்தை உருவாக்குகிறது. பிற எல்லாவற்றையும் அந்த பளபளப்பான திரைச்சீலையால் மூடிவிடலாம். நான் ஒருபோதும் சலிப்பூட்டும் உரையாடல்காரனாக இருக்க விரும்புவதில்லை.

இன்று நான் ஓர் எழுத்தாளனாக, இலக்கிய அழகியல் மற்றும் தத்துவத்தில் கல்வி கொண்டவனாக என் கருத்துக்களை முன்வைக்கிறேன். எனக்கு ஆள்சேர்க்கவேண்டும் என்றோ எந்த அமைப்பையும் கட்டி எழுப்பவேண்டும் என்றோ எண்ணம் இல்லை. இதன்மூலம் எனக்கு எந்த லௌகீக லாபங்களும் இல்லை. ஆனால் ஞானம் என்பது ஒரு புறவயமான பேரமைப்பு என நான் உணர்கிறேன். தேனிக்கள் துளித்துளியாகக் கொன்டுவந்து கூட்டில் சேர்ப்பதைப்போல இதில் என் பங்கையும் சேர்க்க நான் கடமைப்பட்டிருக்கிரேன். அதையே செய்கிறேன். இதற்கும் ஓர் அரசியல் பிரச்சாரத்துக்கும் காப்பீட்டு பரப்புரைக்கும் இடையே வேறுபாடு உள்ளது என புரிந்துகொண்ட சிலர் இருப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. நான் குறிவைப்பது அவர்களையே. இலக்கியமும் அறிவியக்கமும் தொடரியக்கங்கள். ஒருவரில் இருந்து ஒருவருக்கு என அது சென்றுகொன்டே இருக்கிறது. அதுவே மானுட ஞனாத்தை கலையை மனிதனை விட பிரம்மாண்டமான ஒரு உயிர் அமைப்பாக திரளச் செய்கிறது.

என்னுடைய அனுபவத்தில் எப்போதும் எழுத்தாளன் என்ற தன்னுணர்வு மிக்கவனாகவே இருந்திருக்கிறேன். அது ஆற்றூர் ரவிவர்மா, பி.கெ.பாலகிருஷ்னன், ஞானி, சுந்தர ராமசாமி, நித்யா என என் ஆசிரியர்களிடம் பழகி கற்க தடையாக இருந்ததில்லை. அவர்களின் நட்புமூலமே நான் உருவாகி வந்திருக்கிறேன். நான் மதிக்கும் எழுத்தாளர்கள் அனைவருக்குமே அத்தகைய ஆசிரியர்கள், முன்னோடிகள் இருந்திருக்கிறார்கள். சுயம்புக்களும் இருக்கலாம், மறுக்கவில்லை. எழுத்தாளன் அல்லாத ஒருவரை சுந்தர ராமசாமி அல்லது நித்யா எழுத்தாலன் ஆக்க முடியாது. ஆனால் எழுத்தாளனை மிக எளிதாக சிறந்த எழுத்தாளனாக ஆக்க முடியும். ஏன் நமக்கு குருநாதர்கள் தேவைப்படுகிறார்கள் என்றால் ஞானம் என்பது ஒரு சங்கிலித்தொடர் என்பதனால்தான்.

பொதுவாக இலக்கியச் சந்திப்புகளில் அத்து மீறுபவர்கள் அல்லது அடக்கம் இழப்பவர்கள் பிற்காலத்தில் பெரிய எழுத்தாளர்களாக வந்ததே இல்லை. குற்றாலம் சந்திப்பு பட்டறைகளில் சத்தம் போட்டவர்கள் எவரும் கடந்த இருபது வருடங்களில் எதையுமே எழுதியதில்லை என்பதை எவரும் காணலாம். அந்த அவையில் பேசாமல் வந்து அமர்ந்திருந்த பலர் – உதாரணம் சு.வேணுகோபால்- பிற்காலத்தில் மிகுந்த வீரியத்துடன் எழுந்துவந்திருக்கிறார்கள்.

எளிமையாகச் சொல்கிறேனே, ஒரு மேடையில் எஸ்.என்.நாகராஜன் கீழை மார்க்ஸியம் பற்றி பேசுகிறார். அவர் நாற்பது வருடங்களாக மார்க்ஸியத்தைக் கற்றவர். சர்வதேச மார்க்சிய இயக்கங்களுடன் தொடர்புடையவர். வேளாண் அறிவியல் அறிஞர். அவர் சொல்லும் கருத்து தனக்கு ஏற்புடையதல்ல என்று ஓர் இளம் எழுத்தாளன் எழுந்து அவரை வசைபாடுகிறான், பகடி செய்கிறான் என்று கொள்வோம். அது கருத்துரிமையோ ஆளுமையை கண்டடைதலோ ஒன்றுமல்ல. அறியாமை உருவாக்கும் துணிவும் ஆணவமும் மட்டுமே. இது நடந்த நிகழ்ச்சி. உலகில் எந்த ஒரு பண்பாட்டுச்சூழலிலும் இது ஒரு அத்துமீறலாக , குற்றமகாவே பார்க்கப்படும். ஆனால் தமிழில் இது இன்றும் அனுமதிக்கப்பட்ட ஒன்றாக உள்லது.

ஆனால் இதை கலகம் என்று சொல்பவர்கள் அவர்களின் அமைப்புகளுக்குள், உரையாடல்களுக்குள் இதை அனுமதிப்பதில்லை எனப்தும் வரலாறு. காரணம் அப்படி அனுமதித்தால் கருத்துப்பரிமாற்றமே சாத்தியமில்லை என அவர்கள் அறிவார்கள். இலக்கிய மேடையில் எஸ் என் நாகராஜனை மடக்கிய அதே பின் நவீனத்துவக் கலகக் குழுவை சேர்ந்தவர்கள் நடத்திய ஒரு கருத்தரங்கில் அதே குழுவைச்சேர்ந்த ஒருவர் மது அருந்திவிட்டு வந்து சில ‘கேள்விகள்’ கேட்டார். அவரை கழிப்பறைக்கு இட்டுச்சென்று நையப்புடைத்தார்கள்! அவர்களின் எந்த அரங்கிலும் இதேபோன்ற ‘இடையூறுகள்’ அனுமதிக்கப்படுவதில்லை என்பது கண்கூடு. இந்த வகையான மனநிலையை ஒரு வகை ஆயுதமாகவே அவர்கள் பிறர் மீது பயன்படுத்துகிறார்கள்.

ஏளனம் வசைகள் ஆகியவற்றை நான் எப்போதுமே கண்டுகொன்டிருக்கிறேன். ஞானம் என்றும் கலை என்றும் சொல்லப்படுகிற எதுவும் அதை உள்வாங்கமுடியாதவர்களின் வசைகளுக்கும் ஏளனத்துக்கும் எப்போதும் இலக்காகிக் கொண்டே இருப்பவைதான். அதை ஒரு பொருட்டாக நான் நினைக்கவில்லை, அவர்கள் என் கணக்கில் இல்லை. அவர்கள் சமூகத்துக்கு வேறு எவ்வகையிலோ ஏதோ பங்களிப்பை ஆற்றுகிறார்கள் என்று நினைத்துக்கொள்கிறேன். ஆனால் கலையுணர்வும் சிந்தனைத்திறனும் கொண்டவர்கள் என நான் நினைப்பவர்கள் அதைசேய்யும்போது அவர்கள் அதன் மூலம் அடையும் இழப்புகளை எண்ணி மனம் வருந்துவதுன்டு.

பெரும்பாலான சமயங்களில் இதற்கான காரணம் வெறும் அகங்காரம்தான். நான் இதை அறிந்திருக்கிறேன், நான் இதை ஆதரிக்கிறேன், நான் இதை நம்புகிறேன் என்ற எண்ணம். ஆகவே அந்த அறிவும் நம்பிக்கையும் தன் ஆளுமையாகவே உள்ளன என்றும் அவற்றை மறுப்பதென்பது தன்னையே மறுப்பது என்றும் எடுத்துக்கொண்டு கொந்தளிப்படைவது. இரண்டாவதாக சாதி மதம் இனம் என சில அடையாளங்களை தன் சுயத்துடன் பிணைத்துக் கொண்டு அவை மறுக்கப் பட்டால் பொங்குவது. இந்த அகங்காரம் எனக்கும் இருந்தது என்றும் நானும் புண்பட்டிருக்கிறேன் என்றும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் என்னைவிட கற்ற, என்னைவிட சாதித்த, எனக்கு கற்பிக்கக்கூடிய் ஒருவரை சந்திக்கும்போது அந்த அகங்காரத்தைக் கொண்டு அவர்களை எதிர்கொண்டதில்லை. ஆகவேதான் அவர்களிடமிருந்து என்னால் கற்க முடிந்தது

எந்த ஒரு மாற்றுத் தரப்பையும், புதிய தரப்பையும் தங்களிடம் ஏற்கனவே இருக்கும் எளிய அறிதல்களைக் கொண்டு எதிர் கொள்பவர்களை, ஏளனம் மற்றும் வசையை அதற்கான ஆயுதங்களாகக் கொள்பவர்களை, கண்டு கொண்டே இருக்கிறேன். அவர்களில் உள்ள உண்மையான திறனுள்ளவர்களுக்காக வருத்தப்படுகிறேன், அவ்வளவுதான்.

ஜெ

 

முதற்பிரசுரம் Aug 10, 2010  மறுபிரசுரம்

 

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7686/

31 comments

1 ping

Skip to comment form

 1. down under

  Dear JM
  I think this is a bigger problem ,This is more to do with our general inablity to discuss about something.We would rather argue or fight over it rather then discuss.This is not unique to the field of literature it is as common in business,science,politics, family etc .

  Many of us .. do not seem to be capable of discussing about aomething without rubbing each others ego.We dont seem to know how to agree or disagree with something or someone in a constructive way.To win in an argument seems to be of foremost importance than , getting involved in a productive exchange of views or ideas.The way it iss seen is that for me to be “right” you need to be “wrong”.

  Ego is a very big hurdle ,we can’t stress enough on this .I guess as commented by JM among others “literature is a very delicate demonstration of one ego” ,Added to that its a very subjective experience not something that can be independently verified by a third party to be correct nor can the experience be realised the same way on each person who experience a piece the same piece of creative work..

  For the above two reasons it would make it much easier if everyone involved in such discussions understand that there are genuinly different ways to approach everything.
  This could arise from a
  different perception or value ( views on death penalty from a humanitarian vs a victim of crime )
  different experience ( say the experience of JM with unions from that of a non-union worker )
  different knowledge ( the knowledge of an expert and student in any field )

  I am not saying these difference in views should be accepted unquestionably for above reasons,just that we need to recognise those different cirsumstances from twhich the different views are coming given it proper weightage it deserves ,before we begin to dispute or disagree.

  —————————
  //அடிப்படைப் பயிற்சி அதிக முக்கியத்துவம் கொண்டுள்ள கலைகளில் இந்த கீழ்ப்படிதல் நெடுங்காலம் தேவையாகிறது.//
  // மூளை எளிதில் கற்றுக்கொள்ளும். உடல் கொஞ்சம் தாமதமாகவே கற்றுக்கொள்ளும். உள்ளுணர்வு மிக மிக மெல்லத்தான் கற்றுக்கொள்ளும். //

  True.Even if I were to stand upside down for three years and practice I will never become SPB , but if I wished I could pretend to write atleast one sentence like a great writer or thinker overnight

 2. down under

  Dear JM,
  //அவருக்கும் எனக்கும் பொதுவா ஒரு பிளாட்ஃபாரமே இல்லியே’ என்றார் ராமசாமி. அதாவது அவர் இவர் சொல்வதை உள்வாங்கிக்கொள்ளும் அறிவுத்திறனுடன் இல்லை. அல்லது கவனிக்கும் மனநிலையுடன் இல்லை. அவரிடம் பேசுவதென்பது சுவாச விரயம் மட்டுமே //

  //அதாவது அவர் இவர் சொல்வதை உள்வாங்கிக்கொள்ளும் அறிவுத்திறனுடன் இல்லை. அல்லது கவனிக்கும் மனநிலையுடன் இல்லை.//

  I am not sure if this is the best approach here .From the description above the Dr comes across as an immature or ignorant reader but not necessarily an incapable one.[Is reading balakumaran and able to form an opinion not good enough for a started ?, how many readers of su.ra have not read bk before coming across su.ra ?] This is like closing the door for that person forever.Wouldn’t it be better to say something to the person even if very brief that reflects su.ra’s true views ?

  We do not understand everything we read or said to immedietly , somethings we do come to realise years after we have read them.
  In the same way its quiet possible that the person may come to realise what su.ra had to say later in his life .
  A true thought or saying will be like big stone in front of the door ,one might choose to ignore and go around it but it just wont go away one would keep hitting on it over an over ..
  But by dismissing people in such a way , I feel that a golden opportunity is missed to possibly help redefine or expand the views of
  a reader for his/her own good.

  //நான் ஆழமாக புண்பட்டேன், நிலைகுலைந்தேன். ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று கவனித்தேன். அதைப்பற்றி மீன்டும் மீண்டும் யோசித்தேன்//

  why wouldn’t a similar approach work with a reader like that Dr?,

  How many people of the stature of su.ra would he be able to meet ,who could sow that seed of doubt about his views.
  If a person like su.ra can’t convey it in a way the Dr would take it , who else could do that ?

  I am not saying that it is the duty or responsibility of su.ra or JM to try to influence and improve every reader they come across , but I feel great writers are in a unique position to say things that could completly change the course of a someone and why not use that .

  In my humble opinion ignorance out of limited knowledge and exposure should be treated differently to ignorance coming out of arrogance.We readers look up to great minds in someway for a spark ..an enlightening word …thats why …we come running to you (great thinkers / personalities ) and ask your opinion about every single thing under the sky because what you say matters.

  I know the readers can’t demand this from you but can only request :)

 3. Rajan

  அன்புள்ள ஜெயமோகன்

  சு ரா அந்த டாக்டரை நடத்தியதை நீங்களும் சரியென்று கருதுகிறீர்கள் என்றே நினைக்கிறேன். காமன் ஃப்ளாட்ஃபார்ம் இல்லதவர்கள் இரண்டு வகையினர். ஒன்று அந்த டாக்டரைப் போல பா கு, சுஜாதா படித்து விட்டு ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் இருந்தாலும் ஒரு சு ரா, ஒரு ஜெயகாந்தன், ஒரு ஜெயமோகன் சொன்னால் காது கொடுத்துக் கேட்டு தங்கள் நிலையை உயர்த்திக் கொள்பவர்கள். தவறிருந்தால் திருத்திக் கொள்ள முயலக் கூடியவர்கள். ஒரு வேளை சு ரா அவர்களிடம் எல்லாம் என்னத்தப் போய் பேசுவது என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டாரோ என்னமோ? எந்தவித பின்புலனும் இல்லாம உங்கள் பேச்சை மட்டும் கேட்டு விட்டே தங்கள் நிலைப்பாட்டையே மறுபரீசீலனை செய்த எத்தனையோ பேர்களை நான் இங்கு கண்டேன். ஆகவே சு ரா போன்றவர்கள் கீழேயுள்ளவர்களிடம் சற்று பேசியிருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. சு ரா இங்கு எங்கள் பகுதியில் பல காலம் தங்கியிருந்த பொழுதிலும் சாதாரணர்களிடம் பேசவோ பொதுக் கூட்டங்களில் பேசவோ மறுத்தே வந்தார். ஒரே ஒரு முறை பிரபஞ்சன் வந்திருந்த பொழுது ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார் எதுவும் பேசவில்லை. வந்தவர்களுக்கும் அவர் யாரென்பது தெரியவில்லை. அவர் பெயரைக் கேட்டறிந்தவர்களே அந்த நூறு பேர்களில் ஒரு சிலர்தான் இருந்தார்கள். அவர் ஒரு வேளை பேசியிருந்தால் கலந்து கொண்டவர்களில் தேடல் உள்ள ஒரு சிலருக்காவது ஒரு நல்ல அறிமுகம் கிட்டியிருக்கலாமோ என்று தோன்றியது. மற்றொரு ப்ளாட்ஃபாரம் கேஸ்கள் முத்திய கேஸ்கள் அவர்களிடம் பேசுவதில் அர்த்தமேயில்லை. கலகம் செய்வதற்கே வருபவர்கள். அவர்கள் நினைப்பதைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்குள் ஏறாது. அவர்களைத் தவிர்ப்பதில் அர்த்தம் இருக்கிறது. ஃப்ரெஷ்ஷாக வருபவர்களையும் ஆரம்ப நிலையில் இருப்பவர்களையும் லேசாகவாவது தூக்கி விட முயலலாம் என்றே உங்கள் கூட்டத்திற்கு வந்தவர்களிடம் நான் பேசியதில் இருந்து புரிந்து கொண்டேன்

  அன்புடன்
  ராஜன்

 4. mohan.subramanyan

  அன்புக்குரிய ஜெமோ,

  இந்தக் கட்டுரையை மிகவும் ரசித்தேன். ’தூய அத்வைதம்’ குறித்த எனது பின்னூட்டத்திற்கு, தங்களின் பதில் மிகவும் யோசிக்கவைத்தது. என்னுடைய புரிதலை மிகவும் நாகரீகமாக விமர்சித்திருந்தீர்கள், நன்றி.

  பாம்பு சட்டையை உரிப்பதுபோல், நாமும் நம்மைப் புதிப்பித்துக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. அது சிரமமாக, வலி தரக்கூடியதாக இருந்தாலும் வேறு வழியில்லை. அதன் காரணமாகவே தங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன், இன்னும் நிறைய வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன்.

  கற்றுக் கொள்வதற்குப் பணிவு தேவைப்படுவதுபோல், குருவின் அருகாமையும் அவசியம் என்று தோன்றுகிறது. என்னைவிட வயதில் பெரியவர்களோடு பழகும்போது, நான் கற்றுக்கொண்டவை, புத்தகங்களைக் காட்டிலும் மிகவும் அதிகம்.

 5. kulasaisekar

  I wish you write your essays short. If not, at least, you can give the summary pointwise at the end?

  Looking at your long long essays discourages me to read.

  Why dont you please give the summary at the end?

 6. எம்.ஏ.சுசீலா

  அன்பின் ஜெ.எம்.,
  பிடரியில் அறைகிற மாதிரி காயப்படுத்தினாலும் – கற்றுக் கொள்ளும் இடத்தில் இருப்பவன்,கற்றுக் கொடுப்பவரிடம் கோபமும்,வெறுப்பும் கொள்ளாமல் இருக்கப் பழக வேண்டும் என்ற தங்கள் கட்டுரையின் சாரமே
  ‘’உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
  பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே’’
  என்ற புறநாநூற்று வரிகளில் பதிவாகியிருக்கிறது.

  ஏதோ மேலோட்டமாகக் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பதாலேயே தங்களை மேலானவர்களாக எண்ணிக் கொண்டு பிறரை ஏளனம் செய்து பரிகசிப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் கூட்டத்துக்கும் உங்கள் எழுத்து குட்டு வைத்திருக்கிறது.

 7. ramasamy

  அலோ.. எச்சுகுச்சுமி.. ஒரு கோனார் நோட்ஸ் கூடவே போட்ருங்க பாஸூ.. மக்கள் கயிட்ட படறாங்கள்ள??

 8. bala

  ஜெயமோகனையும் , பாலகுமாரன் வாசகரையும், இருவரின் கற்றுக் கொள்ளும் மன நிலைகளில் உள்ள வேறுபாடுகளையும் அறிந்து கொள்ள முடியாதவர் என்று சு.ராவை எடை போடுதல் தவறோ?

 9. gomathi sankar

  பொருட்படுத்தி அளித்த விரிவான பதிலுக்கு நன்றி.திரு சுரேஷ் கண்ணன் இந்த விஷயத்தை இந்த விவாதத்துக்கு இணையத்தில் கிடைத்த எதிர்வினைகளின் பின்னால் உள்ள அரசியல் என்ற பின்புலத்தில் இதை அணுகினார்.நான் அவ்விதம் இதை அணுகவில்லை.எனக்கு அது முக்கியமில்லை.எல்லா இடங்களைப் போலவே இலக்கியத்திலும் அரசியலும் தனிமனித விருப்பு வெறுப்புகளும் இருக்கும்.ஆனால் சிலசமயம் இலக்கியத்த்தைவிட அது பெரிதாகி நிற்பது கவலைக்குரிய விசயமே.அதே போல் குடித்துவிட்டு கூட்டத்தில் கட்டிப் புரளுவதுதான் புரட்சி முரண்படுதல் கலகம் என்று நான் நினைக்கவில்லை.இன்றைய சூழலில் ஒரு எழுத்தாளன் குடிக்காமல் இருப்பதே பெரும் கலகம்!இவற்றை நான் இதை தத்துவரீதியாகவே அணுகுகிறேன்.என்னைப் பொறுத்தவரை இலக்கியம் என்பது காமத்தைப் போல மிக தனித்திருந்து செய்யும் காரியம்.[கூட்டு தியானத்தை பற்றியும் எனக்கு அவநம்பிக்கை உண்டு.]அது ஒரு வகையான துறவு என்றே எனக்குத் தோன்றுவதுண்டு.[இது ஒரு கிளிஷே என்று தோன்றினாலும் தவிர்க்கமுடியவில்லை]அதை ஒரு கூட்டமாக ஒரு குருவிடம் மற்ற வித்தைகளைப் போல கற்றுக் கொள்ளமுடியுமா .இங்கு முரண்படுதல் என்பதை தனித்துப் போதல் என்ற அர்த்தத்திலேயே சொல்கிறேன்.ஒரு உதாரணம் சொல்கிறேன்.தவறெனில் மன்னிக்கவும்.சுரா வைச் சுற்றி இருந்த இலக்கியவட்டத்தில் அவருடன் முரண்பட்டு விலகிப் போனவர்களே இன்றைய இலக்கிய சூழலில் பெரும் ஆளுமைகளாய் உள்ளனர்.இல்லையா.நீங்கள் உட்பட.அவரை ஆராதித்தவர்கள் முரண்படாதவர் இடம் என்ன?..அவ்வாறு முரண்பட்டமையாலேயே நீங்கள் அந்த வட்டத்தைவிட்டு வந்து வெளியேறி குறிப்படத் தகுந்த படைப்புகளை செய்யமுடிந்தது எனத் தோன்றுகிறது.மற்ற படி உங்கள் நிபந்தனைகள் குறித்து விமர்சனம் அல்ல என் கடிதம் .என் நண்பர் ஒருவர் உங்கள் கூட்டத்தை இலக்கியகூட்டம் அல்ல .சத்சங்கம் நடத்த முயல்கிறார் ஜெமோ என்று கேலி செய்தார்.அது கூட்டுக் குடியாக திரிந்து போவதைவிட இதுவே நல்லது எனச் சொன்னேன்.

 10. ஜெயமோகன்

  அன்புள்ள ராஜன்

  சில விஷயங்களை தெளிவுசெய்துவிடுகிறேன்

  1. நான் என்னை கற்பிப்பவனாக கருதவில்லை. அதற்கு நான் செல்லவேண்டிய தூரம் அதிகம். ஆகவே எந்நிலையிலும் பணிவை நான் எதிர்பார்க்கவில்லை. அந்த தளத்தில் நின்று நான் கருத்துக்களைச் சொல்லவில்லை. என் சொந்த அனுபவத்தில் கற்பிப்பவர்களைச் சந்திக்கும்போது என்ன தேவையாகிறது என்பதையே சொல்கிஏன்

  2 ஆகவே நான் சுந்தர ராம சாமியின் வழிமுறையை கடைப்பிடிப்பதில்லை. சாத்தியமான அனைவரிடமும் உரையாடவே முயல்கிஏன். பலசமயம் அவர்கள் தகுதியற்றவர்கள். நான் எளிதாக வசைக்கும் ஏளனத்துக்கும் ஆளாவதும் அதனாலேயே. ஆகவே சுந்தர ராமசாமி ஏன் தவிர்த்தார் என்பதை புரிந்துகொள்கிறேன்

  3 சுந்தர ராமசாமி அல்லது ஜெயகாந்தன் அல்லது நித்யா போன்றவர்கள் எளிதாக மனிதர்களை எடைபோடுகிறார்கள். ஒருவனின் அறியாயமையை வைத்து அவனை எடைபோடுவதில்லை. அறிவதற்கான ஆவலை வைத்து எடைபோடுகிறார்கள்

  ஜெ

 11. ஜெயமோகன்

  அன்புள்ள கோமதிசங்கர்,

  முரண்படுவதைப்பற்றியே நானும் பேசுகிறேன் -முரண்படுவதற்கான தகுதியை வளர்த்துக்கொள்வதையும் சேர்த்தே பேசுகிறேன். அதை கட்டுரையை இன்னொருமுறை வாசித்தான் புரிந்துகொள்ள முடியும் உங்களால். அந்த தகுதி பலசமயம் அடிப்படையான பணிவில் இருந்தே வருகிரது.

  என் நண்பர்கள், இந்த தளத்தில் நான் எதிர்கொன்டு விவாதிப்பவர்கள், மிகப்பெரும்பாலும் என்னுடன் பல தளங்களில் முரண்படுபவர்கலே. முரண்படுவதற்கான கல்வியில் இருப்பவர்களும் பலர் உண்டு. முரண்படுதல் அர்த்தபூர்வமாக ஆகவேண்டும் என்பதே என் எண்ணம்

  சத்சங்கம் நடத்தும் தகுதி எனக்கு வந்தால் சத்சங்கம் என்று சொல்லியே ஆட்களை கூப்பிடக்கூடியவனாகவே எப்போதும் இருந்திருக்கிறேன். இப்போது அப்படி அல்ல

  ஜெ

 12. samyuappa

  முதலில் தகுதியை வளர்த்துக்கொண்டு தர்க்கத்திற்கு வரவேண்டும். இப்போதெல்லாம், எல்லா துறைகளிலும் 4 , 5 புத்தகத்தை படித்துவிட்டு, குதி குதி- னு குதிக்கறாங்க பாருங்க….. அடிப்படையில, மனுஷங்க தரம் குறைந்துகொண்டே வருகிறது. அவன் தயாரிப்புகளிலிருந்து அதை தெரிந்துகொள்ளலாம். கத்துக்குட்டி பசங்க தனியா தொழில் பண்ணா இப்படிதான். ரிஷிமூலம்/ நதிமூலம் ஆராய்ஞ்சா தெரியும். அடிபணியிர ஒருவன் தான் அடிபணியவைக்க முடியும். கீழ்படியிர ஒருவனுக்குத்தான் கீழ்படிய வைக்க தகுதி உண்டு. பலனை எதிர்பாராமல் நான் கீழ்படிந்ததால்தான் 8 வருடத்தில் துறைத்தலைவராக ஆக முடிந்தது.

 13. stride

  சுருக்கமாக எழுத சொல்பவர்களுக்காக ஒரு twitter feed ஆரம்பித்து விடுங்கள் ஜெ. 140 எழுத்துகளுக்குள் சாராம்சம் அடங்கினால் போதும் தானே. திருவள்ளுவர் பாரம்பரியத்தில் வந்தவர்கள் அல்லவோ நாம்.

  twitter நாவல்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கும் காலத்தில் உங்களைப் போல நீஈஈஈட்டி எழுதுபவருக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

  சிவா

  சிவா

 14. RV

  அன்புள்ள ஜெயமோகன்,

  உங்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒரு கத்துக்குட்டிக்கு இருக்கக்கூடிய ஆர்வக்கோளாறு என்னிடமும் இருக்கிறது, இவன் கேட்கிற இந்த அரைவேக்காட்டு கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்லனுமா என்று சில சமயம் நினைத்திருப்பீர்கள். :-)

  எல்லாவற்றுக்கும் – முக்கியமாக உங்கள் பொறுமைக்கு – நன்றி!

  அன்புடன்
  ஆர்வி

  பி.கு. நீங்கள் ராஜனுக்கு எழுதிய பதிலைப் படித்தபோது இதை எழுதிவிட வேண்டும் என்று தோன்றியது.

 15. down under

  Dear JM,
  //ஒருவனின் அறியாயமையை வைத்து அவனை எடைபோடுவதில்லை. அறிவதற்கான ஆவலை வைத்து எடைபோடுகிறார்கள்//
  மற்றவரை எடை போடுவது ஒரு கடினமான காரியம்தான். இது ஒரு நல்ல வழிமுறையாகத் தெரிகிறது .நன்றி.

 16. kulasaisekar

  ஒரு தடவைக்கு இரண்டு தடவை படித்தாயிற்று. கேட் பரீட்சை இங்கிலீசு பேப்பர் மாதிரி இருக்கு.

  மற்ற கட்டுரைகள் இன்னும் வாசிக்கலெ நான். ஏதோ ஒன்னை டிரை பண்ணுவோமோன்னு இதைப்படித்தேன்.

  ஜெயமோகன், தெளிவாக எழுதினால் மட்டும் போதாது. நீட்டா எழுதும் போது, பாதிலே வரச்சொல்ல முதல்ல என்ன சொன்னீங்கன்னு தெரியமாட்டேங்குது. அப்புறம் வக்காபுலரி வேற. அறிவுஜீவித்தனத்தைப்பறை சாற்றவே அவை வருதோ இங்கே என்ன வியப்பு மறுக்கவியலாது.

  என்னுடைய அண்ணாவும் ஒரு தமிழ் எழுத்தாளர். ஆனால் பேர் சொல்ல்மாட்டேன். பாமரத்தமிழிலேயே எழுதுவார். ஒருசமயம் நான் கேட்டேன். இலக்கியத்தமிழில் உன்னால் எழுத்முடியாதான்னு. எழுதினான்: கணையாளியில் வந்தது. பின்னர், அவர் தன் பாமரத்தமிழுக்கேத் தாவி விட்டார். என் உயிர் அங்கேதான் இருக்குன்னு.

  நீங்கள் ஒரு சேன்சுக்கு ரிவர்ஸ்லே போங்க: பாமரத்தமிழுக்கு. ட்ரை பண்ணுங்கோ. ஒரு கட்டுரை அப்படி எழுதுங்க. எப்படியிருக்குன்னு பாக்கலாம்.

  நம்ம எக்குச்சக்கு சார் இங்க சொன்னமாதிரி கோனார் நோட்ஸ் போடவேண்டியதான். இங்கிலீசுல ஒரு கவி இருந்தான் – உங்களுக்குத்தெரியாம இருக்குமா? அவன் பேரு எலியட்ஸூ. அவன் எழுதின ஒரு கவிதை யாருக்கும் புரியல. எல்லாரும் கம்ப்ளெயிண்ட்ஸ் பண்ணினாங்க. உடனே அவன் தன் கவிதைக்கு ஒரு நோட்ஸ் போட்டான். என்னவாச்சு?

  அந்த நோட்ஸ் கவிதையைவிட கஸ்டமாயிருக்குன்னு சொன்னாங்க. கவிதை இன்னும் படிக்கப்படுது. ஆனால் ஒவ்வொருத்தனும் ஒரு அர்த்தம் எடுத்துத்தான் வாசிக்கிறான். அதிலும், இம்மாதிரி கவிதை வாசிக்கிறவாதான் வாசிக்கிறா. மத்தவங்க யாரும் வாசிக்கிறதில்ல.

  உங்க விசயத்துக்கு வ்ருவோம். உங்கள் பிற்பகுதி முற்பகுதிக்கு விளக்கம் கொடுக்கிறமாதிரி வந்து மேலும் கட்டபடுத்துது. உங்கள் பின்னூட்டங்க்ளும் கிட்டத்தட்ட அப்படித்தான்.

  க்டைசியிலப்பார்த்தா, உங்க வாசகர்கள் வட்டம் குறுகியாகி விட்டது. எனக்கென்ன என்று சொல்லிவிட்டால் சரிதான். என் வழி தன் வழின்னு போயிட்டா யாரு கண்டுக்கப்போறா?

  நான் இன்னும் நீங்கள் எழுதிய எந்த நாவலையும் படித்த்தில்லை. என்வே அவைபற்றி சொல்வதற்கில்லை.

  பின்னூட்டம் போடுபவர்களும் டச் அண்ட் கோ மாதிரிதான் எழுதுகிறார்கள். உதாரணம் எம்.ஏ. சுசிலா. அவர்களுக்குப்பிடித்ததைத் அலசித் தேடிப்பார்த்து விட்டு கமெண்டு அடித்துவிட்டுப்போய் விடுகிறார்களாம்.

  கண்சிடர் மை ரிக்வஸ்ட். சம்மரி கொடுங்க கடைசிலே.

  என்னை சென்சார் பண்ணாதீங்க.

 17. kulasaisekar

  இப்போ உங்கள் கட்டுரைக்கு வருவோம்.

  அதை பீஸ், பீஸாகப்பார்த்து கமெண்டு போடலாம். மொததமாகப் பார்த்தும் போடலாம்.

  பீஸ், பீஸாக. ஒரு சில.

  சு.ரா – பா.கு.

  ராஜன் சொன்னதுதான் கரெக்டாப்படுது.

  சு.ரா வேறு. பா.கு வேறு. உங்கள் தமிழில் சொன்னால், அவர்கள் பயணிப்பது வேறுவேறு தளங்கள்.

  இலக்கியம் யாருக்கு ? பொதுமக்களுக்கு. அவர்களில் பல வகையினர். ஒவ்வொரு வகையினருக்கும் ஒவ்வொரு எழுத்தாளன் உண்டு. இல்லையா?

  யுனிபார்மிட்டி இருந்தால் இல்க்கியம் செத்துவிடும். எல்லாரும் ஜெய்மோகனைப்படிக்க முடியுமா? இல்லை ஜெய்காந்தனைப்படிக்க முடியுமா?

  சிவசங்கரியையும், இலச்சுமியையும், பா.குவை , இன்னபிற எழுத்தாளர்களையும் ஏராளமானவர்கள் படிக்கிறார்களே? அவர்களை மட்டமெனச்சொல்லலாமா?

  மேலானவர்கள் – கீழானவர்கள் என்ற பதங்கள் ஏன்?

  எழுத்தாளர்கள் வகைகள்தான் உண்டு. மேல் கீழ் என்றெல்லாம் கிடையா. ஆந்த்ரோவில சொல்றமாதிரி. There are no inferor or superior cultures; Only, there are different cultures. Likewsie, there are no inferior or superior writers. Only different writers for different kinds of readers.

  இப்படிப்பாத்தா, சு.ரா செய்த்து, அகங்காரம். அல்லது சிறுபிள்ளைத்தனம். நல்லவேளை, நீங்கள் அக்குணத்தை தனக்கு மாடலாக எடுத்துக்கொள்ளவில்லையென சொல்லிவிட்டீர்கள்.

 18. kulasaisekar

  ”இதில் எனக்கான வழிமுறைகள் உள்ளன. நான் பேச ஆரம்பிக்கும்போது நாலைந்து விஷயங்களை சொல்லுவேன். அதில் எதில் எதிரில் இருப்பவர்கள் பற்றிக்கொள்கிறார்களோ அதை மட்டுமே நீட்டித்துப்பேசுவேன். அவர்களுக்கு ஆர்வமிருக்கிறதா என்பதை அவர்கள் நடுநடுவே கேட்கும் கேள்விகள் மூலம் உடலசைவுகள் மூலம் கண்ணசைவுகள் மூலம் எளிதில் புரிந்துகொள்வேன். அது மிக எளியது. நான் படிமவியல் பற்றி பேசும்போது ஒருவர் அதில் ஒரு சினிமா உதாரணம் சொன்னாரென்றால் சினிமாவுக்கு உடனே திரும்பிவிடுவேன், ஒருபோதும் பிற்பாடு படிமவியலுக்கு வரமாட்டேன்.சுந்தர ராமசாமியிடமிருந்து கற்றுக்கொன்டது அது. சுந்தர ராமசாமி தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேச ஆரம்பித்தால் அவர் வாசல்களை சாத்திவிட்டார் என்று பொருள் ‘ உங்க ஊர்ல எருமை அதிகமா, இல்ல காளைகளா?’ என்றுகேட்டாரென்றால் ‘இனி உன்னிடம் இலக்கியமோ தத்துவமோ பேசப்போவதில்லை’ என்பதே பொருள். நான் அதற்கு முன்பு தொழிற்சங்க அரசியலை வைத்திருந்தேன், இப்போது சினிமா. தமிழ் சினிமா உற்சாகமான ஒரு உரையாடல் களத்தை உருவாக்குகிறது. பிற எல்லாவற்றையும் அந்த பளபளப்பான திரைச்சீலையால் மூடிவிடலாம். நான் ஒருபோதும் சலிப்பூட்டும் உரையாடல்காரனாக இருக்க விரும்புவதில்லை.

  ரொம்ப பய்ந்தாங்கொள்ளித்தன்ம்தான் தெரிகிறது. அப்படித்தான் நினைப்பார்கள். ஏற்கன்வே சிலர் உங்களைப்பற்றி இணைய்த்தில் சொல்லியிருக்கிறார்கள். ஜெய்மோகன், தனக்கு சங்கடம் தரும் கேள்விகளை நாசுக்காக தள்ளிவிடுவார் என்று.

  உங்கள் ஸ்டேரஜி இப்ப வெளியில் தெரிந்துவிட்டது.

  சு.ராவிடமிருந்த ஒன்னை தள்ளிவிட்டீர்கள். இதையும் தள்ளிவிடுதல் நல்லது.

  இடக்கானவர்கள் தனியே தெரிந்துவிடும் கூட்டத்தில். அவர்க்ளை நீங்கள் ஒதுக்கினால், அது சரியெனவே சொல்வார்கள். ஆமாம்..இடக்குன்னு எப்படி கண்டுபிடிப்பீங்க.

  பிலீவ் ஆர் நாட், உங்கள் கருத்துகளை எதிர்த்து எழதப்பட்ட விமர்சனங்கள் பலவற்றை நான் படித்திருக்கிறேன். அவைகள் அனைத்தும், ”ஏதோ மேலோட்டமாகக் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பதாலேயே தங்களை மேலானவர்களாக எண்ணிக் கொண்டு பிறரை ஏளனம் செய்து பரிகசிப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் கூட்டம்” என்று சொல்லமுடியாது.

  ஆனால், சொல்லப்பட்டால் உங்களால், நீங்கள் மாறுகருத்தைக்கண்டு மிரண்டு ஓடுகிறீர்கள் என்றே பொருள்.

  நான் மேலே சுட்டியது எம்.ஏ.சுசிலாவுடையது இங்கே போடப்பட்ட பின்னூட்டத்திலிருந்து.

 19. கோவை அரன்

  திரு.குலசை சேகர் ,

  ஏற்கனவே இது பற்றி ஜெ நிறைய பேசியுள்ளார் , அநேகமாக நீங்கள் திருவள்ளுவரின் ரசிகராக இருக்கலாம் :) டிவிட்டர் என்று கூட ஒரு சைட் உள்ளது உங்கள் கவனத்துக்கு வந்திருக்கும் என்று நினைக்கிறேன்..

  ஏதாவது தெரிந்து கொள்ள வேண்மென்றால் நாம்தானே தேடியாக வேண்டும் ? ”மேலே தளத்தில் தேட” பகுதியை உபயோகித்து கூட நீங்கள் நாராயண “குருவை ” தேடலாம் .

  http://www.jeyamohan.in/?s=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&x=-38&y=-55

 20. கோவை அரன்

  ஜெயமோகன் ஏற்கனவே சொன்னது,

  ””நான் பலமுறை சொன்னதுபோல, இந்த இணையதளம் எனக்கானது. என் சிந்தனைகளை முன்வைப்பதற்கானது. ஒரு முச்சந்தி பிரசங்கம். விரும்பியவர்கள் வாசிக்கலாம். இதற்காக நான் எவரிடமும் பணம் வாங்கவில்லை. பணம் வாங்கும் அமைப்பாக ஆக்கலாம் என்று பலர் சொன்னபோது மறுத்ததும் இதனாலேயே. இது ஒரு பொழுதுபோக்கு இணையதளம் அல்ல. அதற்கு பலநூறு இணையதளங்கள்: உள்ளன.

  இதில் தீவிரமான கட்டுரைகள் மட்டுமே வரும். அவற்றை முன்வைப்பதற்காகவே இந்த இணையதளம். இக்கட்டுரைகளில் உள்ள விஷயங்களை இதற்கு மேல் எளிதாக எவருமே எழுதமுடியாது. நல்ல தமிழில் எழுதுவது என்பது என் கொள்கை. ஆகவே தமிழ்க்கலைச்சொற்கள் இதில் இருக்கும். வாசகர்கடிதங்களில் உள்ள ஆங்கிலச்சொற்களும்கூட [நேரமிருந்தால்] தமிழாக ஆக்கப்படும்

  இணையதளம் படுத்தாலும் எனக்கொரு கவலை இல்லை. நான் பணம் செலவழிக்கவில்லை. ஆனால் இணையதளம் ‘படுப்பதை’ பற்றி யோசிக்கவேண்டிய நிலை வரவில்லை என்றே படுகிறது. சந்தேகமிருந்தால் அலெக்ஸா ரேட்டிங்கில் பாருங்கள். காந்தியைப்பற்றிய கட்டுரைகள் வெளிவந்த பின்னர் வருகைப்புள்ளி ஏறியிருப்பதைக் காண்பீர்கள். தமிழில் நீங்கள் வசிக்கும் எந்த ஒரு ஜிலுஜிலு இணையதளத்தை விடவும் அதிகமானபேரைக் கவர்ந்த இணையதளம் இது, இது மிகப்பிரபலமான ஒரு இதழுக்குச் சமம் என்பதை உணர்வீர்கள்.””

  ஜெ .

  ஹைப்பர் லிங்குகள் சில

  http://www.jeyamohan.in/?p=5030

  http://www.jeyamohan.in/?p=5154

 21. Ramachandra Sarma

  புரட்சி செய்பவர்களுக்கும், கலகக்காரர்களுக்கும் இது பொருந்துமா என்று தெரியவில்லை. பொதுவாக தமிழில் எழுத்தாளராக இருப்பதற்கு புரட்சியும் கலகமும் தானே முக்கியம். என்னையும் பொருட்படுத்தி உரையாடியதற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

 22. kulasaisekar

  Many thanks. Kovai aran. You are doing a good service to Jeyamohan here, I think. I will read Narayana guru essay.

  ‘ அநேகமாக நீங்கள் திருவள்ளுவரின் ரசிகராக இருக்கலாம்’

  எப்படி? நான் திருவள்ளுவரைப்பற்றி எழுதினேனா?

  I am not obsessed with any writer or literature proper. For me, literature is just a ‘timepass’. பெரிய அறிவுஜீவி எழுத்தாளனின் அறிவுஜீவித்தனமான எழுத்துகளும் என்னைப்போன்றோரால், ரசிப்பதற்காக மட்டுமே படிக்கப்படும்.

  இங்கு நான் ஜெயமோகனைப்படிப்பது அப்படித்தான். பின்னூட்ட்மிடுவது எனக்கு ஒரு பொழுது போக்கு.

 23. எம்.ஏ.சுசீலா

  அன்பின் ஜெ.எம்.,,
  தங்கள் கட்டுரைக்கு நான் இட்ட பின்னூட்டம் பற்றிய குலசை சேகரின் மறுமொழி என்னை ஆழ்ந்த வருத்தத்துக்கு ஆளாக்கியுள்ளது அதனால் நான் அதற்குப் பதில் தரும் வகையில் அனுப்பியுள்ள இக் கடிதத்தை வெளியிட வேண்டுகிறேன்.

  திரு குலசை சேகர் என் பெயரை அநாவசியமாக இங்கே இழுத்திருப்பது ரசக் குறைவானது.விஷமத்தனமானது.
  ஜெ.எம்மின் இந்தக் கட்டுரையே புரியவில்லை என்று பின்வருமாறு ஒப்புதல் வாக்குமூலம் தரும் அவர்,
  (//முதல்ல என்ன சொன்னீங்கன்னு தெரியமாட்டேங்குது//
  //ஒரு தடவைக்கு இரண்டு தடவை படித்தாயிற்று. கேட் பரீட்சை இங்கிலீசு பேப்பர் மாதிரி இருக்கு//)
  ஜெ.எம்மின் ஒரு நாவலைக் கூடப் படிக்கவில்லை என்று வெளிப்படையாக அறிக்கை விடுக்கும் அவர்,
  (//நான் இன்னும் நீங்கள் எழுதிய எந்த நாவலையும் படித்ததில்லை. என்வே அவைபற்றி சொல்வதற்கில்லை//)
  என் பின்னூட்டம் பற்றி இங்கே சொல்ல வேண்டிய தேவை என்ன.
  //பின்னூட்டம் போடுபவர்களும் டச் அண்ட் கோ மாதிரிதான் எழுதுகிறார்கள். உதாரணம் எம்.ஏ. சுசிலா.//
  என் பின்னூட்டத்தின் வழி இந்த வாசகருக்குவிளக்கம் தருவதும் அவர் நடையில் சொன்னால் கோனார் நோட்ஸ் போடுவதும் என் வேலையில்லை.
  குறிப்பிட்ட பதிவில் என்னைச் சிந்திக்க வைப்பதையும் சுவாரசியப் படுத்துவதையும் மட்டுமே நான் பகிர்ந்து கொள்ள முடியும்.
  பின்னூட்டம் என்பது அந்தந்த வாசகரின் வாசிப்பனுபவம்,உள் வாங்கல்,ரசனை ,அந்தப் பதிவோடு தொடர்பு கொண்ட விஷயங்களைப் பகிர்தல் ஆகியவை மட்டுமே.
  ஜெ.எம்மிடமிருந்து நான் முரண்படும் இடங்கள் வந்தால் அவற்றைத் தயங்காமல் முன் வைக்க எனக்கு எந்தத் தயக்கமுமில்லை.
  ஒரு நல்ல எழுத்தாளனைப் போலவே ஒரு நல்ல வாசிப்பு உடைய ஒரு நபரும் சுதந்திர இயக்கம் கொண்டிருப்பவரே.
  என் பின்னூட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை என்னிடம் மட்டுமே இருக்கிறது.

  மற்றொரு பின்னூட்டத்திலும் (அதே குலசை சேகரால்)என் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால் அது பற்றியும் சொல்லியே தீர வேண்டும்.
  (// உங்கள் கருத்துகளை எதிர்த்து எழுதப்பட்ட விமர்சனங்கள் பலவற்றை நான் படித்திருக்கிறேன். அவைகள் அனைத்தும், ”ஏதோ மேலோட்டமாகக் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பதாலேயே தங்களை மேலானவர்களாக எண்ணிக் கொண்டு பிறரை ஏளனம் செய்து பரிகசிப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் கூட்டம்” என்று சொல்லமுடியாது ..நான் மேலே சுட்டியது எம்.ஏ.சுசிலாவுடையது இங்கே போடப்பட்ட பின்னூட்டத்திலிருந்து//)
  நான் அப்படிக் குறிப்பிட்டது ஜெ.எம்மின் எழுத்துக்களை ஆழமாக வாசித்து விட்டு இத் தளத்திலோ பிற இடங்களிலோ அவற்றை முரண்படுபவர்கள் பற்றி அல்ல.
  ஒரு எழுத்தாளரின் எந்தப் படைப்பையுமே வாசிக்காமல் குறிப்பிட்ட பதிவையும் புரிந்து கொள்ள முடியாமல் மிக மிகத் துணிச்சலாக அவரது தளத்திலேயே இப்படி மறுமொழி பதிகிறீர்களே.உங்களைப் போன்ற மேலோட்டமானவர்களைத்தான் நான் அவ்வாறு குறிப்பிட்டேன்.
  ஜெ.எம் இணையத்துக்குள் வருவதற்கு முன்பிருந்தே அவரது எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வரும் தீவிர வாசகர்களான எங்களைப் போன்றோரைத் தங்கள் மேம்போக்கான-போகிற போக்கில் கல்லெறியும் செயல் ஆழமாகக் காயப்படுத்துகிறது என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

  என்னைப் போன்றோர் பாராட்டிப் பூப் போட்டுத்தான் ஜெ.எம்மின் தொப்பிக்கு இறகு சேர்க்க வேண்டும் என்பதில்லை என்பதை முதலில் அவர் புரிந்து கொள்ளட்டும்.

 24. Ramachandra Sarma

  புரட்சி வருகுது.. புரட்சி வருகுது…!! அதுதான் ஞாபகம் வருது…!!

 25. gomathi sankar

  திரு சேகர் அவர்களுக்கு,ஜெமோ இருபது வருடங்களாக எழுதுகிறார். அவரது தளமும் மொழியும் வேறு.உயர்வு தாழ்வு என்று கூட சொல்லவில்லை.அவர் பேச எடுத்துக் கொள்ளும் விசயங்களும் பல நேரங்களில் சற்று ஆழமானவை .சிக்கலான அமைப்பு கொண்டவை.உதாரணத்துக்கு சமீபத்தில் எழுதியுள்ள இலக்கியக் கோட்பாடுகள் என்ற கட்டுரை.அதை வேறு மொழியில் வேறு எழுத்தாளர்கள் எழுதலாம்.ஆனால் இதே அனுபவத்தைத் தருமா என சந்தேகமாக இருக்கிறது.ஆனாலும் உங்கள் துணிச்சல் என்னை வியக்க வைக்கிறது.அவர் புத்தகம் எதுவும் படிக்காமல் படிக்க நேர்ந்த ஒரே கட்டுரைக்கும் பொழிப்புரை கேட்கிறீர்கள்.அதுவும் டைம்பாஸ் என்று ஒப்புதல் வாக்குமூலம் வேறு.நீங்கள் பொழுது போவதற்காக காலை காப்பிக்கு போரும் சமாதானமும் மாலை டிபனுக்கு குற்றமும் தண்டனையும் படிப்பவர் போல தெரிகிறது.பாலகுமாரன் பற்றி சு ரா பதில் அளிக்காதது அகங்காரம் என்று சொல்கிற அதே சமயம் மதித்து பதில் அளிப்பவரைப் பார்த்து உங்கள் பதில் நீளமா இருக்கே.கோனார் நோட்ஸ் வேணும் போல என்றால் அவர் என்ன செய்வார்.அடுத்த தடவை கேள்வி கேட்கும் போது ஆத்துல குழந்தைல்லாம் சவுக்கியமா என்று விலக்கித்தான் விடுவார்.

  பாலகுமாரன் சுஜாதா பற்றி அவர் கொண்டுள்ள கருத்துக்களில் எனக்கும் முரண்பாடு உண்டு.ஆனால் ‘ஏன்னு சொல்லமுடியாது ஆனா அவங்கதான் பெஸ்ட்’என்று மட்டையடி அடிப்பது முரண் படுவது அல்ல.முரண்டு பிடிப்பது.நடுவில் சுசீலா மேடத்தையும் கோதாவில் இழுத்துக் கொண்டுவந்து விட்டீர்கள்.இதெல்லாம் உங்களுக்கு டைம்பாஸ்தான்னு சொல்லியும் அவங்களுக்கு புரியாம டென்சன் ஆனா நாம என்ன செய்யமுடியும்?

 26. கோவை அரன்

  சர்மா ,

  புரட்சி வரும் தகவல் கிடைத்தால் ஒரு எஸ்ஸெமெஸ் அனுப்பினால் முதல் ஆளாக விசுவாச பிரமாணம் எடுக்க வசதியாக இருக்கும்.

 27. gomathi sankar

  கடந்த பின்னூட்டம் எழுதியபிறகு முரண் படுதலுக்கு எதிராக நானே எழுத நேர்ந்து விட்டதின் நகைமுரண் பற்றி நகை இல்லாமல் யோசித்துக் கொண்டிருக்கும்போது என் நண்பர் பிரசன்னம் ஆகி அந்த திடுக்கிடும் உண்மையைச் சொன்னார்.அதாவது குலசைசேகர் என்று யாருமே இல்லை.தனது தளத்தை பிரபஞ்ச அளவில் பிரபலப் படுத்துவதற்காகவும் எதிர்க் கருத்துக் கொண்டிருப்பவர்களை வாயடைப்பதற்காகவும் ஜெமோவே பல்வேறு பெயர்களில் பின்னூட்டம் இடுவார் என்றும் இந்த நுண் அரசியலில் கை தேர்ந்தவர் அவர் என்பதே அது.இந்த பிரம்மாண்ட அமெரிக்க பார்ப்பனிய கூட்டுச் சதியைப் பற்றி தண்ணீர் இல்லாத ஒரு கிணற்றில் இறங்கி ஆழ யோசித்துக் கொண்டிருக்கும் போது அவனுக்கு கொல்கத்தாவில் இருந்து ஒரு மர்ம போன் வந்தது.அதன் சாராம்சமாவது கோமதி சங்கர் என்ற பேர் கூட ஜெமோவின் இன்னொரு பெயர்தான் என்றும் தசாவதாரம் கமல் போல அவர் தளத்தில் கட்டுரை எழுதுவது அதற்கு பாராட்டி பின்னூட்டம் எழுதுவது திட்டி எழுதுவது திட்டியதைப் பாராட்டியும் பாராட்டியதைத் திட்டியும் எழுதுவது எல்லாமே ஜெமொதானாம்.அதைத்தான் கமல் நான் ஜெமோவின் ரசிகன் என்று நான் கடவுள் விழாவில் மறைமுகமாகச் சொன்னாராம்.இதைக் கேட்டதும் நண்பன் என்னைச் சந்தேகமாக பார்க்க ஆரம்பித்துவிட்டான்.ஏன் எனக்கே சந்தேகம் வந்துவிட்டது.இன்செப்சன் படம் பார்த்ததிலிருந்து அது வலுப் பெற்றிருக்கிறது.மேலும் இது பற்றி ரொம்ப பழமை வாய்ந்த ஜெயமோகப் பிரபத்ததி என்ற நூலில் இருந்து ஹாய்ராம் என்ற நண்பர் ஒரு சுலோகத்தை ஆதாரமாக மின் அஞ்சல் அனுப்பி இருந்தார்.அது என்னவெனில்
  ‘இதோ ஜெயமோக ;பரதோ ஜெயமோக
  யதோ யதோ யாஹி;பரதோ ஜெயமோக’ என்பதுதான்.
  இப்போது எனக்கு ஒரே சந்தேகம்தான்.நான் இப்போது கோமதி சங்கர் என்ற த்வைதமா அல்லது ஜெமோ போல தோற்றமளிக்கும் விசிச்டாத்வைதமா என்பதுதான்.

 28. Ramachandra Sarma

  நல்ல படிப்பனுபவம் உள்ளவர்போலத்தான் தெரிகிறது. ஆனால் நேரடியான ஆழமான விவாதம் நடத்தும் அளவுக்கு அவருக்கு அவரது ஆளுமையின் மீது நம்பிக்கை இல்லை. ஏனெனில் அவரது வாசிப்பின் பலவீனம் அவருக்கு புரிந்தே இருக்கிறது. தன் அனுபவமும் தன் தரப்பும் மிகவும் பலவீனமானது என்று நிச்சயமாகத் தெரிந்த ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் ஒரு தந்திரமான உரையாடல் யுக்தியே அவர் செய்துவருவது. தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளும் சில வரிகளையும் உதிர்த்துவிட்டு பின்னர் முக்கியமான குற்றச்சாட்டுகளையும் அதனுள்ளே புதைத்துவைப்பார்கள். இது வெளிப்படையான அகங்கார நிமித்தம் மட்டுமே நிகழ்வது என்பது தெரிந்தாலும், அடியேன், நான் முட்டாள் போன்ற போலி அலங்காரங்களைச் செய்துகொள்வார்கள்.

  ஒரே வழி, அவர்கள், ஒரு முழுமையாக உரையாடலுக்குத் தயாராகவேண்டியதுதான்.

 29. Ramachandra Sarma

  கோவை அரன், எதுக்கும் இருக்கட்டும், இப்போதே ஒரு முன் விசுவாசப்பிரமானம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். புரட்சிகள் அத்தனை பக்கத்திலிருந்தும் வெடிக்கலாம். ஜாக்கிரதை.

 30. tdvel

  ஒரு தளத்தில் என்ன நடக்கிறதென்றே தெரியாது. தெரிந்துகொள்ளவும் முயற்சியில்லை. அப்படிதெரிந்துகொள்ளவேண்டிய அவசியமுமில்லை எனக்கூறிவிட்டு, தான்தோன்றித்தனமாக கருத்துகளை சிதறிவிட்டு போவதற்கும், அங்கிருக்கும் மற்றவர்களையும் அவர்கள் தகுதி தெரியாமல் சிறுபிள்ளைதனமாக எள்ளி நகையாடுவதற்கும் ஆன அகங்காரத்தை ஒருவர் கொண்டிருப்பது மிக வியப்பளிக்கிறது. அவருக்காக நாம் பரிதாபப்படுவதைத்தவிர வேறென்ன செய்ய முடியும்.

 31. Ramachandra Sarma

  கோமதி சங்கர், உங்கள் நிலமை உண்மையிலேயே கஷ்டம்தான். அத்வைதம் இல்லை என்ற வகையில் சந்தோஷம். :)

  அந்த தளத்தில் என்ன நடக்கிறதென்று தெரியாது. தெரிந்துகொள்ள முயற்சிக்கப்போவதில்லை, அப்படிதெரிந்துகொள்ளவேண்டிய அவசியமுமில்லை -இதை எனக்கு முக்கியமானவர் ஒருவரும் கிணற்றடியில் போகிறபோக்கில் சொல்லிவிட்டார். அதில் வருத்தம் மிகவுண்டு. உண்மையில் அவர் அப்படிப்பட்டவர் அல்ல என்றே எண்ணத்தோன்றுகிறது.

  இவர் கதை முற்றிலும் வேறு. குலசை சேகர் வேறு யாருமல்ல. யாராக இருப்பார் என்பது அரங்கசாமி/சிறில் அண்ணனைக் கேட்டால் தெரிந்துவிட்டுப்போகிறது.

 1. Tweets that mention jeyamohan.in » Blog Archive » கீழ்ப்படிதல்,முரண்படுதல் பற்றி… -- Topsy.com

  […] This post was mentioned on Twitter by kavirajan, Saravanakarthikeyan . Saravanakarthikeyan said: கீழ்ப்படிதல்,முரண்படுதல் பற்றி… http://www.jeyamohan.in/?p=7686 (2/2) […]

Comments have been disabled.