தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்: 3 – வேர்களும் விருட்சங்களும்

திருவட்டாறு ஆதிகேசவ பேராலயத்திற்கு முன்பக்கம் அருகே நாகங்கள் பதிட்டை செய்யப்பட்ட அரச மரத்திற்கு அருகே என் தந்தைவழிப் பாட்டியின் வீடு இருக்கிறது. தன் 90 வயது வரையில் பாட்டி அங்கு தான் வாழ்ந்தாள். இளவயதில் அவ்வப்போது அங்கு சென்று பாட்டியிடம் தங்குவதுண்டு

பாட்டியின் கை பிடித்துச் சென்று திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தை சுற்றி நோக்கி ஒவ்வொரு தூணாக நின்று சிற்பங்களையும் அலங்காரங்களையும் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். பாட்டி என்னைக் கொண்டு சென்று முகப்பு மண்டபத்தின் மேலேற்றி சிறு சாளரம் வழியாக உள்ளே மூன்று கருவறைகளை நிறைத்துப் படுத்திருக்கும் பெருமாளின் பேருருவத்தைக் காட்டுவாள்.

முன்பெல்லாம் வைகுண்ட ஏகாதசி அன்றைக்கு மட்டும் தான் மூன்று கருவறைகளையும் திறப்பார்கள் .முதல்க் கருவறையில் பெருமானின் உலகளந்த திருப்பாதம். நடுக் கருவறையில் புடவி அமைத்த உந்தி .மூன்றாவது கருவறையில் மணிமுடி சூடி அறிதுயிலில் புன்னகைத்து அமைந்திருக்கும் பெருமுகம். என்னுடைய விஷ்ணுபுரம் நாவலுக்கான கருவை மிக இளம் வயதிலேயே இந்தக் கருவறையிலிருந்துதான் நான் பெற்றுக் கொண்டேன்.

இந்த விஷ்ணு படுத்திருக்கும் அந்த நிலைக்கு மகா யோக நிலை என்று பெயர். தரைக்கு மேல் ஒரு கையை வைத்து ஒரு கையை தொங்கவிட்டு மல்லாந்து படுத்திருக்கும் கோலம். கன்னங்கரிய 22 அடி நீளப் பேருடல் கொண்டவர். அனேகமாக இந்தியாவின் மிகப்பெரிய பெருமாள் சிலைகளில் ஒன்று இது.மகாயோக நிலை என்பது சிருஷ்டிக்கும் முந்தைய நிலை. அப்போது பிரபஞ்சத்தில் பெருமாள் மட்டுமே இருந்தார். பிறிதொன்று இலாததினாலேயே அவரும் இன்மை எனும் நிலையில் இருண்டிருந்தார்.

அந்த கரு வடிவ பெருமாளின் அகம் எங்கோ தன்னை தானென உணர்ந்த கணத்தில் பிறிதென எதையோ அறிந்தது அங்கிருந்து பிரபஞ்ச சிருஷ்டி தொடங்கியது என்பது புராணம்.

நான் சிறுவனாக இருந்த போது ஒரு முறை அந்த ஆலமரத்தடியில் நின்று விளையாடிக் கொண்டிருந்தேன், அப்போது ஒரு அம்பாசிடர் கார் அங்கே வந்து நின்றது. அதிலிருந்து சுருண்ட தலை முடியும் கன்னங்கரிய ஆறடி உயரமும் கொண்ட அழகிய மனிதர் வெளியே வந்தார். ஆவலுடன் வேடிக்கை பார்க்கவந்த என்னிடம் “நீ ஆங்கிலம் பேசுவாயா?” என்று கேட்டார். “ஓரளவு பேசுவேன்” என்று நான் சொன்னேன்.

எனக்குப் புரியும்படி நிறுத்தி நிதானமாக “இந்த ஆலயம் இந்துக்கள் அல்லாதவரை உள்ளே அனுமதிக்குமா?” என்று கேட்டார். நான் “ஆம்” என்று சொன்னபிறகு கோயிலுக்கு வெளியே இந்துக்கள் அல்லாதவருக்கு அனுமதியில்லை என்ற பலகை இருப்பதை நினைவு கூர்ந்தேன். ஆனால் அன்று ஆதிகேசவ பெருமாள் வளாகத்திலேயே மனித நடமாட்டம் மிகக் குறைவு சொந்தத்தில் எனக்கு மாமா முறைகொண்ட ஒருவர்தான் அங்கே காவலராக இருந்தார் அவர் கோயிலுக்குள் ஒரு ராணுவமே வந்து சென்றாலும் அறியாத நிலையில் தான் பெரும்பாலும் இருப்பார். ஆகவே அவரை உள்ளே கொண்டு செல்லலாம் என்று நினைத்தேன்.

“உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டேன். “காளிச்சரண்” என்றார். “எந்த ஊர்?” என்று நான் மீண்டும் கேட்டேன் “நீ கிரிக்கெட் பார்ப்பதில்லையா?” என்று கேட்டார். எனக்கு கிரிகெட் பழக்கமே அன்று கிடையாது. “நாளிதழ்கள் கூடவா பார்ப்பதில்லை?” என்றார்.

நாளிதழ்களை அடிக்கடிப் பார்ப்பதில்லை என்றேன். அவர் சற்று நம்பமுடியாமல்தான் என்னைப் பார்த்தார் ஏனென்றால் காளிச்சரண் அன்றைக்கு மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் அணியில் உச்ச நட்சத்திரமாக இருந்தார்.

நான் அவரை அழைத்துக் கொண்டு ஆலயத்துப் படிகளில் ஏறினேன். என் மாமாவிடம் அவரை உள்ளே அனுப்ப முடியுமா என்று கேட்டேன். ஆளைப் பார்த்தால் நம்மூர் இல்லையென்று தோன்றுகிறது. எதாவது பிரச்னையாகிவிடப்போகிறது என்றார். “மாமா, அவர் பெயர் காளிச்சரண்” என்று சொன்னேன். “காளிச்சரண் என்றால் இந்து தானே உள்ளே செல்லலாம்” என்று மாமா சொன்னார் .நான் அவரை உள்ளே அழைத்துச் சென்றேன்.

பிரமை பிடித்தவர் போல அவர் என்னுடன் நடந்து வந்தார். “திருவனந்தபுரம் ஆலயத்திற்குச் சென்றேன். அவர்கள் என்னை உள்ளே விடவில்லை. அங்குள்ள இறைவன் கன்னங்கரிய பேருருக் கொண்டவன் என்றார்கள் ,அதைப் பார்க்கலாம் என்று விரும்பினேன். இங்கே அதைவிடப் பெரிய உருவம் இருப்பதாகவும் என்னை அனுமதிப்பார்கள் என்றும் சொன்னார்கள் “என்றார் காளிச்சரண்.

நான் அவரை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றேன். கருவறைகள் திறந்து கரிய திருமேனி வெளிப்பட்டது. இருட்டுக்குள் இருட்டாலேயே செய்யப்பட்டது போல மெல்லிய ஒளியுடன். விரிந்து மல்லாந்திருந்தது பெருமாளின் பேருருவம் இரவில் நீர் நிலையைப் பார்ப்பது போன்ற பளபளப்பு அவரது கன்னங்களில் உந்திச் சுழிப்பில் தெரிந்தது.

வாயடைந்துபோய் போல காளிச்சரண் நோக்கி நின்றார். நான் “கை கூப்புங்கள்” என்றேன் அறியாது கை கூப்பினார் .எதுவும் வேண்டிக் கொள்ளவில்லை. கண்கள் அந்தக் கால்களிலிருந்து தலை வரைக்கும் திரும்ப திரும்ப சுழன்று கொண்டிருந்தன.

திரும்பும்போது “இது தான் கடவுள் உண்மையான கடவுள். உண்மையான கடவுள். கருமை நிறம் கொண்டவர்” என்றார். என்னிடமல்ல, தனக்குத் தானே. காரிலேறியதும் கிளம்பும்போது எனக்கு 5 ரூபாய் அளித்தார் அதை நான் மறுத்து “நன்றி” என்று சொன்னேன். என் தலையை லேசாகத் தொட்டுவிட்டு காரிலேறிக் கிளம்பிச் சென்றார்.

உண்மையில் அதன் பிறகுதான் அந்தக் கருமை என்னை ஆட்கொண்டது. உலகம் எங்கும் பொன்னிறம் வெண்மை நிறம் அழகென்று கொண்டாடப்படும்போது அழகுக்கு உச்சமென்று நம்முன்னோர் வடித்து வைத்த திருமேனி நிகரற்ற கருப்பு நிறத்துடன் இருக்கிறது. காளிச்சரண் வேறு எங்கு போய் கந்நங்கரிய பேரழகைப் பார்க்கமுடியும்?

எத்தனை சொற்களில் திரும்பத் திரும்ப இந்தக் கருமையை பாடியிருக்கிறார்கள்! கடலின் கருமை ,கார்முகிலின் கருமை, கருமணியின் கருமை ,நீல மலரின் கருமை, இருளின் கருமை பிரபஞ்ச பெருவெளியின் கருமை !

திருவட்டாறு கோயிலுக்கென்று ஒரு தொன்மம் உள்ளது அனேகமாக பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிறகு உருவானதாக இருக்கலாம். வாய்மொழி மரபாகவே பெரிதும் இந்தத் தொன்மம் இருந்து வந்திருக்கிறது. மிகப் பிற்காலத்திய எளிய புராணங்களில் மட்டுமே இந்தத் தொன்மத்தை குறிப்பிடுகிறார்கள்.

இருளில் பிரபஞ்சப் பேரிருளின் வடிவமாகப் படுத்திருந்த பெருமாள் தன்னுள் ஓர் எண்ணமெனத் தோன்றிய உந்திச் சுழியிலிருந்து ஒளி மிக்க பொன் மலரொன்றை எழுப்பி அதில் பிரம்மாவை பிறப்பித்தார். பிரம்மம் படைத்த ஏழுலகங்கள் ஏழாயிரம் பேருலகங்களாக மலர்ந்தன. ஒன்றிலிருந்து ஒன்றென பிறந்து பிறந்து பெருகி பிரபஞ்ச வெளியாக எங்கும் நிறைந்தன.

பிரம்மனை படைப்பித்தது விஷ்ணுவின் இனிய கனவு. அவரது கரிய கனவிலிருந்து இருவர் தோன்றினார்கள். கேசி கேசன் என்று இரு அரக்கர். புராணப்படி அவரது காதின் குறும்பியிலிருந்தும் மூக்கின் சளியிலிருந்தும் அவர்கள் பிறந்தனர். அவர்கள் விஷ்ணுவின் உடலிலிருந்து பிறந்தவர்கள் என்பதால் விஷ்ணு அளவுக்கே ஆற்றல் கொண்டவர்கள் , விஷ்ணுவைப்போலவே அழிவற்றவர்கள்

தல புராணத்தின் படி கரிய பேருருக் கொண்ட கேசியும் அவள் தமையன் கேசனும் தங்களுக்குரிய இடமாக கண்டடைந்தது திருவட்டாறு. அன்று இது பெரும்பாலைவனம் சூழும் ஒரு குன்றாக இருந்தது. அதன்மேல் அவர்கள் கேசபுரம் தங்கள் நகரத்தை அமைத்தனர். அங்கிருந்து கொண்டு தேவர்களை வென்றனர். இந்திரனை சிறைப் பிடித்துக் கொண்டு வந்து தங்கள் வாசல்நிலையில் கட்டி வைத்தனர். ஐராவதத்தையும் வ்யோமயானத்தையும் தனக்கென வாகனங்களாக எடுத்துக் கொண்டனர். தேவர்களைக் கொண்டு வந்து தங்களுக்கு குற்றேவலர்களாக அமர்த்தினர் ஏழு வானுலகங்களையும் ஏழு கீழுலகங்களையும் தங்கள் ஆட்சியில் வைத்திருந்தனர். தங்களுக்குக் காவலாக பாதாள நாகங்களை எட்டுத் திசைகளிலும் நிறுத்தியிருந்தனர்.

வெல்ல முடியாத கேசனையும் கேசியையும் கண்டு நடுங்கிய தேவர்கள் ‘உங்களில் இருந்து தோன்றியதை நீங்களே வெல்ல முடியும் பெருமானே’ என்று விஷ்ணுவின் காலடிகளில் பணிந்தார்கள் .புன்னகைத்து ‘அவர்களை அழிக்க என்னால் முடியாது .ஆனால் எப்போதும் இருளை ஒளி சமன் செய்யும்” என்றார் விஷ்ணு.

விஷ்ணுவின் ஆணைப்படி ஆதிசேஷன் மலை உச்சியில் பெரு வெள்ளம் பெருக்கும் ஒரு காட்டாறாக பிறந்தார். செந்நிறத்தில் அலைபுரண்டு வந்த அந்தக் காட்டாறு கேசனின் நகரத்தைச் சுற்றி வளைத்து இறுக்கிக் கொண்டது. அசைவற்று திகைத்த கேசனின் நகரம் மீது பெருமாள் தன் காலை வைத்து அமர்ந்து பின் பள்ளி கொண்டார். அவருடைய பேருடலுக்கு அடியில் கேசனும் கேசியும் தங்கள் பன்னிரண்டு கரங்கள் கொண்ட உடம்புகளுடன் புதைந்தனர்.

பள்ளி கொண்டிருக்கும் திருவட்டாறு ஆதிகேசவனுக்கு அடியில் கேசனும் கேசியும் வேர் வடிவில் வாழ்வதாக தலபுராணம் சொல்கிறது.என் சின்ன வயதில் திருவட்டாறு கோயிலைச் சுற்றியிருக்கிற எந்தக் இடத்திலும் ஆழமாகக் கிணறுகள் வெட்ட மாட்டார்கள் ஐந்தடியிலேயே அங்கு நீர் வரும் அதற்கு மேல் சென்றால் கேசனும் கேசியும் கரிய சரடுகளாக படர்ந்திருப்பதைக் காண முடியும் என்று சொல்வார்கள் .

கேசனும் கேசியும் நீண்டு பரந்த பெரிய கருங்கூந்தல் கொண்டவர்கள் ஆகவே தான் அவர்களுக்கு கேசனும் கேசியும் என்று பெயர். கைகளைப்போலவே கவ்வவும் பற்றவும் போரிடவும் திறமை கொண்ட கூந்தல் அவர்களுடையது. ஆகவே அவை வேர்களாக மாறின

பின்னர் எப்போது திருவட்டாறில் நிற்கும்போதும் என் காலடியில் கேசனும் கேசியும் பரந்திருப்பதாக எண்ணிக் கொள்வேன். எந்த இடத்திலிருந்தும் அவர்களின் முடி மண்ணைப் பிளந்து வெளிவந்து என் கால்களைச் சுற்றிக் கொள்ளும், என்னை அள்ளி இழுத்து மண்ணுக்கடியில் கொண்டு செல்லக்கூடும் என்று நினைப்பேன்.

இன்னும் முதிர்ந்தபோது அந்த தொன்மத்தின் வீச்சு என்னை மேலும் ஆட்கொண்டது இந்திய பெருநிலத்தின் புராணங்களின் அமைப்பை விளக்கும் இதற்கு நிகரான ஒரு கதை கிடையாது பேரருள் கொண்ட தெய்வமொன்றுக்கு அடியில் வெல்ல முடியாத கரிய பெரும் சக்தியொன்று குடி கொள்கிறது. அதுவும் பெருமாளே. பெருமாளிலிருந்து பிறந்து பெருமாளால் வெல்லப்பட்டு அழிக்கப்படமுடியாத பெருமாளின் இருள் அது. மூன்று கருவறை முன் நின்று வணங்கும்போது நாம் அதையும்தான் வழிபடுகிறோம்

நன்மையும் தீமையும் ஒளியும் இருளும் சமன் செய்யப்பட்ட ஒரு தருணமே அங்கு பள்ளி கொண்டிருக்கும் பெருமாள். ஒரு தருணத்திலும் இப்பிரபஞ்ச கட்டமைப்பில் ஒன்றை இன்னொன்று முற்றாக அழிப்பதில்லை ,முழுமையாக வென்று செல்வதும் இல்லை.

சமூகவியல் கோணத்தில் நோக்கினால் இன்னொரு பொருளைச் சென்றடையலாம். கேசனும் கேசியும் இக்காடுகள் அனைத்தையுமே ஆட்கொண்டிருந்த தொல் தெய்வங்களாக இருக்கலாம் . காட்டை முடி என்று சொல்வது முடி என்று சொல்வ.து தொல்குடிகளின் வழக்கம் காடுதான் நீலகேசி. கேசி என்னும் தெய்வ உருவகம் பின்னர் பௌத்த சமண மதத்திற்குள் புகுந்தது. குண்டலகேசி,நீலகேசி போன்ற பல கேசிகளை அங்கே நாம் காணலாம். கேசனும் கேசியும் அங்கே கோயில்கொண்டவர்களாக இருக்கலாம்

பின்னர் எப்போதோ ஆதி கேசவனின் வெற்றி அவர்கள் மேல் நிகழ்ந்தது. அவர்கள் பள்ளி கொண்ட பெருமாளின் அடியில் வேர் வடிவமாக மாறினர்.

உடனே நம்மூர் ஒன்றரையணா அரசியலை இதனுள் புகுத்தாமலிருந்தால் நாம் தப்பித்தோம். கேசனையும் கேசியையும் விடவும் கரியவர் பெருமாள். கடல்தாண்டி வந்த ஒரு கருப்பன் தன் கடவுள் என்று சொல்லும்படி பள்ளிகொண்டவர்.

இன்று நான் சென்று நிற்கும் போது கிளை விரித்து விழுதுகள் பரப்பி இலைகள் மந்திரங்களால் சொல்லும் நாவு போல் துடித்து நின்றிருக்கும் பேராலமரத்தைக் காண்கிறேன் .ஆனால் மண்ணுக்கு அடியில் நிற்கும் வேர்களையும் சேர்த்துதான் மரம் என்று சொல்ல வேண்டும். ஒரு தருணத்திலும் மரமும் வேரும் இரண்டாவதில்லை. வேர்களால் மண்ணில் உயிரையும் கிளைகளால் விண்ணின் ஒளியையும் உண்டுதான் இந்த மரம் இங்கு நின்றிருக்கிறது.

முந்தைய கட்டுரைகல்கி, பு.பி.- அஸ்வத்
அடுத்த கட்டுரைஇளையராஜா, எம்.எஸ்.வி, ஞாநி