பகுதி எட்டு : குருதியும் காந்தளும் – 2
துவாரகையின் தோரணவாயிலின் நிழல் பாலை மணலில் பெரிய வில் போல விழுந்துகிடந்தது. மாந்தளிர் என மின்னிய உடல்களுடன் புரவிகள் ஒவ்வொன்றாக அந்நிழலை தம் உடலில் வாங்கி இருண்டு பின் கடந்து ஒளிர்ந்து மறுபக்கம் சென்றன. தோரணவாயிலில் இருந்த சிற்பங்களின் நிழல்வடிவங்கள் குளம்புச்சுவடுகளும் கால்சுவடுகளும் கலந்து அசைவற்ற அலைப்பரப்பு என கிடந்த மென்மணலில் விழுந்திருந்தன. சிறகுவிரித்த கருடனின் மேல் புரவி ஒன்று நடந்து செல்ல அதன் முதுகில் கருடனின் சிறகு வருடிச் சென்றது.
திருஷ்டத்யும்னன் அருகே சென்றதும் புரவியைத் திருப்பி பருந்தை மிதிக்காமல் சுற்றி உள்ளே சென்றான். தோரணவாயிலின் தூண்முகப்பில் இருந்த வாயிற்காவலர் சிற்பங்களின் கால்கள் பேருருக்கொண்டு தலைக்கு மேல் எழுந்தன. அவற்றிலணிந்திருந்த கழல்கள் மட்டுமே விழிகளுக்குத்தெரிந்தன. அண்ணாந்து நோக்கியபோது வளைவின் நடுவே கட்டபட்டிருந்த பெரிய கண்டாமணியின் நாக்கின் இரும்பு உருளை கோபுரக் கலசமென தெரிந்தது. அங்கே குளவிக்கூடுகள் அன்னைப்பன்றியின் அகிடுகள் போல தொங்கின.
குதிரைக்குளம்படி ஒலிக்க அவனருகே வந்துநின்ற படைத்தலைவன் தலைவணங்கினான். அவனை ஒருகணம் நோக்கியபின் “இறக்குங்கள்” என்றான் திருஷ்டத்யும்னன். மேலும் ஒரு கணம் தயங்கி அவன் திரும்பிப் பார்க்கையில் படைத்தலைவன் வெறித்த விழிகளுடன் அசையாமல் நிற்பதை கண்டான். “என்ன?” என்றான். “இங்கு அவ்வழக்கம் இல்லை பாஞ்சாலரே” என்றான் படைத்தலைவன். “என் வழக்கங்களை எங்கிருந்தும் நான் கற்றுக் கொள்வதில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். படைத்தலைவன் மேலும் ஏதோ சொல்ல வாயசைத்தபின் புரவியை இழுத்து திரும்பினான். பின்னர் நெஞ்சச்சொல்லின் அழுத்தம் தாளாமல் தலை திருப்பி “பாஞ்சாலரே, யாதவகுலங்கள் இன்னமும் க்ஷத்ரியர்களாக திரளாதவர்கள். அந்தகக் குலத்தின் பெருவீரர்களில் ஒருவர் கிருதவர்மர். அவரை எந்நிலையிலும் அக்குலம் கைவிடாதென்றறிக!” என்றான்.
“ஆம், நாட்டைவிட குடியை முதன்மையெனக் கருதும் வழக்கமே மீண்டும் மீண்டும் நிலையழியச் செய்கிறது யாதவர்களை. குலங்களுக்கு அப்பால் நிகரற்ற வல்லமை கொண்ட மன்னனொருவன் அமையவேண்டிய காலப்புள்ளி இது. முன்னூறு ஆண்டுகளுக்குமுன் ஐங்குலங்களும் அவ்வாறு உருகி இணைந்துதான் பாஞ்சால நாடு உருவாகியது. படைத்தலைவரே, வஞ்சத்தை எந்நிலையிலும் அரசன் பொறுத்துக் கொள்ளலாகாது. முழுமையான அடிபணிதல் வழியாகவே அவன் வெற்றிகொள்ளும் படைவல்லமையை உருவாக்கிக்கொள்ள இயலும். அதற்கு வஞ்சகர்கள் ஒருவர்கூட எஞ்சியிராது தண்டிக்கப்படவேண்டும். அத்தண்டம் ஒவ்வொருவர் கனவிலும் வந்து அச்சுறுத்தும்படி அமையவேண்டும்” என்றான்.
படைத்தலைவன் “அவரைக் கொன்று சடலத்தை கொண்டுசெல்லலாம் பாஞ்சாலரே” என்றான். “வீரனுக்கு இறப்பென்பது மிக எளியது. அது ஒரு தொடக்கம் மட்டுமே. சொல்லில் என்றுமென எஞ்சியிருப்பது புகழ் மட்டுமே. படைத்தலைவரே, வீரனின் வாழ்க்கை என்பது அவன் இறப்பில் தொடங்கி புகழ் விரிய விரிய வளர்கிறது. இன்று கிருதவர்மன் இறந்தாக வேண்டும். அதற்கு முன் அவன் புகழ் இறக்க வேண்டும். இந்நகரத்தெருக்களில் அவனை நோக்கிச் சூழும் ஏளனச் சொற்கள் மட்டுமே இனி சூதர் பாடல்களில் எஞ்சவேண்டும். அதுவே நாடாளும் க்ஷத்ரியர் கண்டடைந்த வழி. இனி யாதவரின் வழியும் அதுவாகவே இருக்கட்டும்” என்றான் திருஷ்டத்யும்னன். பின்பு கையசைத்து “கொண்டு வாருங்கள்” என்றபின் புரவியை இழுத்து தோரணவாயிலுக்குள் நுழைந்தான்.
படையின் பின்பக்கம் மூடுவண்டியின் கதவைத் திறந்து உள்ளிருந்து கைகள் பின்னால் சேர்த்துக் கட்டப்பட்ட கிருதவர்மனை வீரர்கள் இறக்குவதை ஒலிகள் வழியாகவே அறிந்தான். திரும்பி நோக்காமல் நிமிர்ந்த தலையுடன் துவாரகைக்குச் செல்லும் பெருவழியினூடாக சீர்நடையிட்டு சென்றான். அவனை நோக்கி துவாரகையின் முதல் காவல் மாடத்திலிருந்த காவல்தலைவனும் நான்கு படைவீரர்களும் வந்தனர். படைமுகப்பில் சென்ற கொடிக்காரனிடம் முறைமைசொல்லி வணங்கி ஓரிரு சொல்கொண்டு மலர்ந்த முகத்துடன் விழிதூக்கிய அவர்கள் திகைப்பதை திருஷ்டத்யும்னன் கண்டான். ஒவ்வொரு கண்களிலும் எண்ணையில் நெருப்பு பற்றிக்கொள்வது போல ஒளி எழுந்தது. அவற்றை நோக்கியபடியே அவன் அணுகினான்.
காவலர்தலைவன் தலைவணங்கி “இளவரசே…” என்றான். திருஷ்டத்யும்னன் “எனக்குரிய முறைமை வாழ்த்து தங்களால் சொல்லப்படவில்லை காவலர்தலைவரே” என்றான். காவலர்தலைவன் திடுக்கிட்டுத் திரும்பி “ஆம். பொறுத்தருள்க! பாஞ்சால இளவரசரை துவாரகை வரவேற்கிறது. தங்கள் கால்களை நகர் தீண்ட அழைக்கிறது” என்று சொல்லி முறைப்படி மும்முறை தலைவணங்கினான். “துவாரகையும் அதையாளும் மாமன்னரும் வெல்க!” என்று மறுமுறைமை சொன்ன திருஷ்டத்யும்னன் “பின்னால் வருபவனை அவ்வண்ணமே இந்நகரத் தெருக்களில் கொண்டு செல்ல நான் ஆணையிடுகிறேன்” என்றான். காவலர்தலைவன் “இளவரசே…” என்றபின் மேலும் சொல்ல இயலாது தத்தளித்து “ஆம்” என்றான்.
திருஷ்டத்யும்னன் கோட்டை நோக்கிச்சென்ற மையப் பாதையில் இருபக்கமும் படைவீரரும் நகர் நுழையும் வணிகரும் பாலைநிலமக்களும் சுற்றிலும் வர சென்று கொண்டிருக்கும்போது முற்றிலும் தனித்தவனாக தன்னை உணர்ந்தான். அவனை விலக்கி நோக்கும் பல்லாயிரம் பார்வைகளால் சூழப்பட்டிருந்தான். ஒவ்வொரு மயிர்க்காலும் விழிகளை உணர்ந்தது. அவ்வழுத்தத்திற்கு எதிராக தசைகளை இறுக்கி, தலையை நிமிர்த்தி, காற்றை எதிர்கொள்பவன் போல அவன் சென்றான். அவனுக்குப் பின்னால் ஓசைகள் வலுத்து வலுத்து வந்தன. பெருங்கூட்டத்தில் மதம்கலைந்த யானை புகுந்ததுபோல என்று எண்ணிக்கொண்டான்.
வண்டிகள் நிரையழிந்து விலகி வழிவிட, அவற்றில் எழுந்து நின்ற வணிகர்களும் வினைவலரும் ஏவலரும் வியந்து குரலெழுப்ப, அவனது சிறுபடை சாலையில் ஊர்ந்தது. துவாரகையின் கற்கோட்டைமுகப்பு தெரிந்ததும் திருஷ்டத்யும்னன் பெருமூச்சு விட்டான். இதற்குள் செய்தி துவாரகையை அடைந்திருக்கும். முகப்பில் கொடிகளுடன் மெல்ல நடந்த அவனுடைய குதிரை வரிசை கோட்டைமுகப்பை அடைந்தது. கோட்டையின் உச்சிக் கொத்தளங்கள் நிழல் வடிவாக விழுந்து கிடந்த சாலை நீர் போல நெளிவதாகத் தோன்றியது.
இத்தனை தொலைவு இப்பாதைக்கென்று ஏன் நான் முன்பு அறிந்திருக்கவில்லை? ஒவ்வொரு அடியிலும் இதன் தொலைவு நீண்டு விரிகிறது. இதை ஏன் செய்கிறேன்? இந்த யாதவகுலத்து வஞ்சகனை ஒறுத்து இந்தத் தொல்குடிகளை தொகுத்து படைகளாக மாற்றும் பொறுப்பு எனக்கெதற்கு? என் பின்னால் ஒருவன் தன் குலமழிந்து தன்மதிப்பழிந்து உடலுருகி நின்று கொண்டிருக்கிறான். அவனுடன் எனக்கேது பகை? திரும்பி நோக்கும் அவாவை திருஷ்டத்யும்னன் கடிவாளத்தை இறுகப் பற்றுவதனூடாக வென்றான். திறந்த தேரின் தட்டில் அதன் இடத்தூணில் கைகள் சேர்த்து பின்னால் கட்டப்பட்டு இடையில் ஒற்றை ஆடையுடன் கலைந்த குழலுடன் உடலெங்கும் புழுதியும் உலர்ந்த குருதியும் வியர்வையில் கலந்து கரைந்து வழிய, தலை குனிந்து நின்றிருப்பான். நிமிர்ந்து எவரையும் பார்க்கும் துணிவை அவன் கொண்டிருக்கமாட்டான்.
அத்தருணத்தில் நிமிர்ந்து பார்க்க முடிந்தால் அனைத்தையும் வென்றுவிடலாம் என்று தோன்றியது. ஆனால் அதற்கு தன் செயல்மேல் முழு நம்பிக்கை இருந்திருக்க வேண்டும். அழுக்கற்றது என தன் அகத்தை எண்ணியிருக்க வேண்டும். கிருதவர்மனோ அவன்விழிகளை சந்திப்பதையே தவிர்த்தவன். திருஷ்டத்யும்னன் பெருமூச்சு விட்டான். அத்தனை நேரம் கிருதவர்மனைப் போலவே தேர்த்தட்டில் கைகள் கட்டப்பட்டு தலை குனிந்து நின்று கொண்டிருந்தது தானே என்றுணர்ந்தான். சியமந்தகத்துடன் சென்ற ஒவ்வொருவருமாகவும் தன் உள்ளம் ஏன் நடிக்கிறது? அஞ்சி ஓடி கோழை என்று ஆகி பிடிபட்டு இழிவுண்டு நின்றிருக்கும் இவனாக நானும் ஏன் என்னை நோக்கிக் கொண்டிருக்கிறேன்?
இந்த எண்ணங்களைத்தான் என் புரவி அடிமேல் அடிவைத்து கடந்து கொண்டிருக்கிறது. கணம் கணமென பெருகும் இந்த எண்ணவெளியை எண்ணி எண்ணி வைக்கும் அடிகளால் கடப்பது எப்படி? கோட்டை வாயிலில் நின்றிருந்த காவலர்கள் திகைத்த விழிகளுடன் படைக்கலங்களை இறுகப்பற்றியிருந்த கைகளுடன் நின்று அவனைக் கடந்து பின்னால் வந்து கொண்டிருந்த கிருதவர்மனை நோக்கினர். எவனோ ஒருவன் “கிருதவர்மர் அல்லவா?” என்றான். இன்னொருவன் “அந்தகக் குலம் இதை ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது” என்றான். அது அவன் கேட்க சொல்லப்பட்டது.
புரவியில் அருகே அணுகிய திருஷ்டத்யும்னனை திரும்பிநோக்கிய கோட்டைக்காவலன் “இளவரசே…” என்று தவித்து கை நீட்டி சுட்டினான். “என் ஆணை அது” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆனால்…” என்று அவன் ஏதோ சொல்லவர கைநீட்டித் தடுத்து “என் ஆணை” என்று மீண்டும் திருஷ்டத்யும்னன் சொன்னான். அவன் தலைவணங்கி கைகாட்ட கோட்டைமேல் பெருமுரசும் கொம்புகளும் ஓசையுடன் எழுந்தன.
வென்று திரும்பும் படைகளை எதிர் கொள்வதற்காக எழும் முரசின் முத்துடித் தாளம். ஆனால் வாழ்த்தொலிகள் எழவில்லை. மேலிருந்து அரிமலர் பொழியவும் இல்லை. கோட்டைக்காவலரும் சூழ்ந்திருந்த வணிகரும் பிறரும் சிலையென செதுக்கப்பட்ட விழிகளுடன் கிருதவர்மனை நோக்கி நின்றனர். கோட்டைக்குள் நுழைந்து சுங்க மாளிகையை அடைந்து திருஷ்டத்யும்னன் பெருமூச்சுடன் நின்றான். தோள்தாளாத எடையுடன் வந்தது போல உடல் களைத்திருந்தது. அவனை நோக்கி வந்த காவலனிடம் “இளைய யாதவரிடம் நான் வந்துவிட்ட செய்தியை சொல்க! எப்போது அவை புக வேண்டும் என்றறிய விழைகிறேன்” என்றான். காவலன் தலை வணங்கி “இப்போதே சென்று அறிவிக்கிறேன் பாஞ்சாலரே” என்றான்.
அவன் சென்ற பிறகு திருஷ்டத்யும்னன் பெரியதலைப்பாகையும் மீசையற்ற கொழுத்த முகமும் கொண்ட சுங்கநாயகத்தை நோக்கி திரும்பி “என்னுடன் தொடரும் படைகளுக்கான கணக்கை என் படைத்தலைவன் அளிப்பான்” என்றான். சுங்கநாயகத்தின் கண்கள் தன் கண்களை தொடவில்லை என்பதை அவன் கண்டான். அவரது கைகள் ஆடையைப் பற்றி சுழற்றி கொண்டிருந்தன. முகம் வியர்த்து மெல்லிய மேலுதட்டில் பனித்திருந்தது. திருஷ்டத்யும்னன் திரும்பி நோக்க தேர்த்தட்டில் முற்றிய வாழைக்குலைபோல கிருதவர்மனின் தலை தழைந்து தொங்கிக் கொண்டிருந்தை கண்டான். சகடங்கள் கல்லிலும் பள்ளத்திலும் விழுந்தெழுவதற்கேற்ப அவன் தலை அசைய தொங்கிய கருங்குழல் சுரிகள் காற்றில் பறந்தன. அவன் தோள்கள் வியர்வையில் பளபளத்தன.
அவன் நோக்குவதைக்கண்ட சுங்கநாயகம் “அவரை கொன்றிருக்கலாம் பாஞ்சாலரே” என்றான். திருஷ்டத்யும்னன் “கொன்று கொண்டிருக்கின்றேன்” என்றான். இதழ் வளைந்த புன்னகையுடன் “அவனுள் வாழும் இருண்ட தெய்வங்களை முதலில் கொல்ல வேண்டும். அதன் பின்னரே அவனை கொல்ல வேண்டும். இல்லையேல் அவனுடலில் இருந்து எழுந்து சிறகடித்து பிறர் உள்ளங்களில் சென்று சேக்கேற அத்தெய்வங்களால் முடியும். இன்று இப்பகலில் அவை முறைப்படி விண்ணேற்றம் செய்யப்படவேண்டும்” என்றான். சுங்கநாயகம் தன் மெல்லிய உதடுகளைக் கடித்து பார்வையை விலக்கிக்கொண்டார்.
அவர்களின் படை கோட்டையைக் கடந்ததும் திருஷ்டத்யும்னன் அதை மூன்று பிரிவுகளாகப் பிரித்து மூன்று படைத்தலைவர்களின் தலைமையில் பாசறைகளை நோக்கி அனுப்ப ஆணையிட்டான். கிளைபிரிந்து அத்திரிகளும் புரவிகளும் தேர்களுமாக அவை தங்கள் திசை தேர்ந்தன. ஒவ்வொருவரும் திரும்பி கிருதவர்மனை நோக்கியபடி ஓசையழிந்து அகன்றுசென்றனர். வெற்றிகொண்டு வந்த படைகளை எதிரேற்கும் குரல் எதுவும் எழவில்லை. வெற்றிக்கூக்குரலை படைகளும் எழுப்பவில்லை.
கிருதவர்மனை ஏற்றிய தேர் தொடர பன்னிரு புரவிவீரர்களுடன் அவன் துவாரகையின் மையச்சாலைக்குள் நுழைந்தான். கோட்டைமுகப்பில் செய்தியறிந்த யாதவர்கள் கூடத் தொடங்கினர். செவியெட்டும் தொலைவில் அச்செய்தி பரவிச்செல்லும் குரலலைகள் எழுந்தன. அணுக அணுக அவர்கள் குரலழிந்து விழிகள் மட்டுமே என ஆயினர். கோட்டைக் காவலன் திருஷ்டத்யும்னனின் அருகே வந்து “இக்கூட்டம் செல்லும்தோறும் பெருகுமென்றே எண்ணுகிறேன் இளவரசே” என்றான். “பெருகட்டும்” என்றான் திருஷ்டத்யும்னன்.
“இவர் அந்தகக்குலத்தைச் சார்ந்தவர். அவர்கள் இந்நகரில் ஏராளமாக உள்ளனர். இந்நகராளும் அரசியின் குலத்தவர். அவர்கள் இதை ஏற்கமாட்டார்கள். படை வீரர்கள் கிளர்ந்து வழிமறிக்கலாம். அவ்வண்ணமெனில் நகரத்தெருக்களில் ஒரு பூசலும் எழக்கூடும். அது அரசருக்கு உகந்ததல்ல” என்றான். திருஷ்டத்யும்னன் “அது என் பொறுப்பு” என்றதும் தலை வணங்கி “அவ்வண்ணமே” என்றான் கோட்டைக் காவலன்.
திருஷ்டத்யும்னன் கைகளை அசைத்து ஆணைகளை இட்டு தன் அகம்படியினரை மூன்று புரவி வரிசைகளாக ஆக்கினான். நடுவே தனித்தேரில் கிருதவர்மன் தேர்த்தூணில் கைகள் பின்னால் கட்டப்பட்டு நின்றான். திருஷ்டத்யும்னன் “கிளம்புக!” என ஆணையிட்டதும் கிருதவர்மன் அறியாமல் தலைதூக்கி அக்கூட்டத்தை நோக்கினான். அவனுடலில் ஒரு துடிப்பென கடந்து சென்ற உளவலியை அங்கிருந்தோர் அனைவரும் கண்டனர். கூட்டம் ஒற்றைக்குரலில் இரக்க ஒலியெழுப்பியது.
“செல்க!” என்று திருஷ்டத்யும்னன் தன் படைகளுக்கு ஆணையிட்டான். அவனது காவல்வீரர்கள் இருவர் பாஞ்சாலத்தின் விற்கொடியையும் துவாரகையின் கருடக்கொடியையும் ஏந்தியபடி முன்னால் சென்றனர். தொடர்ந்து அவனது படையினரின் புரவிகள் சீரான குளம்படி எடுத்து வைத்து பெருநடையில் சென்றன. கிருதவர்மனின் தேர் அசையாது நின்றிருக்க முன்னால் சென்றவர்கள் விலகிக்கொண்டிருந்தனர். தேர் அருகே சென்ற திருஷ்டத்யும்னன் “தேர் கிளம்பட்டும்” என்றான். தேரோட்டி தலைகுனிந்து கைகட்டி அமர்ந்திருப்பதை அதன்பிறகே அவன் உணர்ந்தான். அவன் தன் சம்மட்டியை மடியில் குறுக்காக வைத்திருந்தான்.
அவனை நோக்கி “கிளம்புக!” என்றான் திருஷ்டத்யும்னன். அச்சொல் தேரோட்டியின் உடலில் மெல்லிய அசைவொன்றை உருவாக்கியது. அஞ்சிய எலி குறுகுவதுபோல அவன் இருந்தபடியே தன்னை ஒடுக்கிக்கொண்டான். முன்னால் சென்ற புரவிகளில் சிலர் திரும்பி நோக்கினர். தேருக்கும் புரவிக்குமான இடைவெளியில் இருபக்கமும் நின்ற நகர்மக்கள் பிதுங்கி வளைந்து நிரம்பத் தொடங்கினர். திருஷ்டத்யும்னன் “இக்கணமே உன் தலையை அறுத்து வீழ்த்துவேன். எழுக மூடா!” என்றான். அவன் கழுத்துத்தசைகள் மட்டும் அசைந்தன. மீண்டும் “தேரெழுக மூடா!” என்றான் திருஷ்டத்யும்னன்.
தேரோட்டி தலைதூக்கி நீர் நிறைந்த விழிகளால் அவனை பார்த்தான். “இளவரசே, என் தலை இங்கு உருள்வதில் துயரில்லை. இத்தலையுடன் என் யாதவர் குலமன்றுக்குச் சென்று நான் நிற்க முடியாது. நாளை என் மைந்தர் அதே அவையில் தலைதூக்க முடியாது. இக்கணம் இறப்பதே நான் செய்யக் கூடுவது” என்றான். திருஷ்டத்யும்னன் தன் புரவியை உதைத்து தேரருகே சென்று அதில் காலூன்றி எழுந்து தேர்த்தட்டை நோக்கி பாய்ந்தான். பாகனின் தலையை பற்றிச் சுழற்றி மண்ணில் வீசினான். முகபீடத்தில் அமர்ந்து குதிரைச் சவுக்கை காற்றில் தூக்கி உதறியபோது அதன் இரட்டை நாக்கு ஒற்றைச் சொல்லொன்றை விடுத்தது. அந்த ஆணையைக் கேட்டதுமே இரு புரவிகளும் உடல் சிலிர்க்க காதுகளை விடைத்து மெல்லக் கனைத்தபடி முன்னகர்ந்தன. சகட ஒலியுடன் தேர் திடுக்கிட்டு பாயத் தொடங்கியது.
அவனுக்குப் பின்னால் எழுந்த தணிந்த குரலில் கிருதவர்மன் சொன்னான் “பாஞ்சாலரே, இக்கணம்கூட பிந்தவில்லை. இளைய யாதவருக்கும் இந்நகருக்கும் நான் செய்தது வஞ்சமென உணருகிறேன். அதற்குரிய தண்டனை என இத்தேர்த்தட்டில் கீழ்மைகொண்டு நான் அமர்ந்திருப்பதும் முறையே. என் குலத்தின் முன், இந்நகரின் முன் போதிய சிறுமை கொண்டுவிட்டேன். இது போதும். இங்கே என்னை இறக்கி விடுங்கள். என் உளக்கோயில் அமர்ந்த திருமகள் விழிமுன் இக்கோலத்தில் என்னை நிற்கச்செய்யாதீர்” என்றான்.
திருஷ்டத்யும்னன் திரும்பி ஏளனச்சிரிப்புடன் “எவரேனும் உன்னை இத்தோற்றத்தில் பார்க்க வேண்டுமென்றால் அது அவர் மட்டுமே” என்றான். “ஏனென்றால், அவர்பொருட்டே நீ இதைச் செய்தாய்!” புரவி விரைவுகொள்ள தேர் துவாரகையின் அரசப்பெருவீதியில் கல்பாவப்பட்ட தரையில் கடகடத்து ஓடியது. செல்லச் செல்ல இரு மருங்கும் கூடிய விழிகள் பெருகின. ஓசைகள் அழிந்து மூச்சொலிகளும் முனகல்களும் விம்மல்களும் நிறைந்த அக்கூட்டம் சாலைக்கு கரையமைத்திருந்தது. எந்த விழிகளையும் நோக்காமல் புரவிகளின் நான்கு காதுகளுக்கு அப்பால் சுருளவிழ்ந்து வந்துகொண்டிருந்த பாதையை மட்டுமே நோக்கி சவுக்கை மீண்டும் மீண்டும் சுண்டியபடி திருஷ்டத்யும்னன் அமர்ந்திருந்தான்.
முதன்மைவீதியின் மறுமுனையில் இரண்டாவது உட்கோட்டை வந்தது. அவனது படை அங்கு செல்வதற்குள்ளேயே செய்தியறிந்து கோட்டைவாயிலைத் திறந்து காவலன் இறங்கி கைகூப்பி நின்றிருந்தான். கிருதவர்மன் தலைகுனிந்து கண்களை இறுக மூடி பறக்கும் பருந்தின் கால்களில் தொங்கும் சிறு எலியென அத்தூணில் தொங்கிக் கிடந்தான். எதிரே பெருகிய மக்கள் திரளின் தடையால் தேர் விரைவழிந்தது. “விலகுங்கள் விலகுங்கள்” என்று முன்னால் சென்ற யாதவர் படை குரலெழுப்பியது. வேல்களாலும் வாள்களாலும் கூட்டத்தை அச்சுறுத்தி விலக்கினர். அதனூடாக புரவிகள் செல்ல அத்தடம் வழியாக தேர் சென்றது.
அங்காடி வளைவைக் கடந்து, படைத்தலைவர் இல்லங்களையும் வைதிகர் வீதிகளையும் கடந்து, சுழன்று மேலேறிய சாலையில் எங்கும் கிருதவர்மனின் தோற்றம் கூடிநின்றோரில் கண்ணீரை மட்டுமே உருவாக்கியது. அரண்மனையின் முதல்வளைப்பை அடைந்து தேர் நின்றதும் அமைச்சன் இறங்கி ஓடிவந்து “என்ன செய்கிறீர் இளவரசே?” என்றான். திருஷ்டத்யும்னன் “இளைய யாதவருக்கு வஞ்சமிழைத்த ஒருவனை பாரதவர்ஷமெங்கும் எம்முறையில் வஞ்சகர்களை நடத்துவோமோ அம்முறையில் கொண்டுவந்திருக்கிறேன்” என்றான். விழிதூக்கி கிருதவர்மனை நோக்கியபின் “இளவரசே…” என்று தளர்ந்த குரலில் சொன்னான் அமைச்சன். திருஷ்டத்யும்னன் “அரசவைக்கு நானே இவனை அழைத்துச் செல்வேன்” என்றபடி தேரை முன் செலுத்தினான்.
அரண்மனைகள் சூழ்ந்த முதற்பெருமுற்றத்தை நோக்கி தேர் கல்தரையில் எளிதாக உருண்டு சென்றது. வலப்பக்கம் எழுந்த மகளிர்மாளிகைகளில் ஏதோ ஒரு சாளரத்தில் எக்கணமும் யாதவ அரசி தோன்றப் போகிறாள் என்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். விழிதூக்கி அம்மாளிகையின் நூறு பெருஞ்சாளரங்களை நோக்க வேண்டுமென்ற உந்துதலை தன் முழுச்சித்தத்தாலும் அடக்கி முற்றத்தில் பதிக்கப்பட்டிருந்த கற்பலகைகளை மட்டுமே நோக்கியவனாக முன்சென்றான். மாளிகைச் சாளரங்கள் தோறும் மகளிர் முகங்கள் பெருகுவதை, அங்கிருந்து அவர்கள் கிருதவர்மனை சுட்டிக்காட்டிக் கூவுவதை கேட்டான். எதிரே இருந்த அமைச்சு மாளிகையிலும் இடப்பக்கம் எழுந்த படைத்தலைவர் மாளிகைகளிலும் நின்றிருந்த உருண்ட பெருந்தூண்கள் தாங்கிய உப்பரிகைகளிலும் நீண்டு வளைந்து சென்ற இடைநாழிகளிலும் படிகள் இறங்கிய கீழ்வளைவுகளிலும் அலுவலர்களும் ஏவலர்களும் சேடியரும் நெருக்கியடித்து நின்று அவர்களை நோக்கினர்.
தேர் மேலும் சில கணங்களில் அதன் இறுதி நிலையை அடைந்துவிடுமென்று எண்ணியபோது அவனுள் ஓர் ஏமாற்றம் எழுந்தது. அதை மேலும் பிந்தவைக்க என அவன் கைகள் கடிவாளத்தை இழுத்தன. இன்னும் சில அடிகள். சில கற்பாளங்கள். அந்த இரட்டைத்தூண் அருகே இருக்கும் தேர்நிலை. ஏதோ உள்ளுணர்வால் அவன் அறிந்தான், அவள் கிருதவர்மனை பார்த்துவிட்டாள் என்று. கிருதவர்மனிடமிருந்து எழுந்த மெல்லிய ஒலியாலா, அல்லது அங்கிருந்த அத்தனை விழிகளிலும் ஒரே கணம் தெரிந்த சிறு அசைவாலா? தலை தூக்கி சாளரத்தை நோக்கப் போகும் கணத்தில் அவன் தன்னை இறுக்கிக் கொண்டான். அலுவலர்களும் ஏவலரும் மேலே திறந்த சாளரத்தையும் கிருதவர்மனையும் மாறி மாறி நோக்கும் விழியசைவுகளை கண்டான். பல்லாயிரம் தேனீக்களைப் போல பறக்கும் விழிகளால் அவன் சூழப்பட்டிருந்தான்.
தேரை நிறுத்தி அணுகி வந்த சூதனிடம் கடிவாளத்தை வீசி தேர்ப்படிகளில் கால் வைத்து குறடுகள் ஒலிக்க கற்தரையில் இறங்கி திரும்பி தன் வீரர்களை நோக்கி “அவனை கட்டவிழ்த்து நிலமிறக்குங்கள்” என்று ஆணையிட்டான். இரு வீரர்கள் பாய்ந்து மேலேறி வாளால் கிருதவர்மனைக் கட்டிய கயிறுகளை வெட்டி சுருளவிழ்த்தனர். கைகள் அவிழ்ந்ததும் எடையிழுக்க முன் சரிந்திருந்த உடலின் விசையால் மேலிருந்து தூக்கி வீசப்பட்டவன் போல் தேர்த்தட்டில் விழுந்தான் கிருதவர்மன். நெடுநேரம் கட்டப்பட்டிருந்த கைகள் செயலற்றிருந்தமையால் அவன் முகம் தேர்த்தட்டில் ஓசையுடன் அறைபட்டது. பக்கவாட்டில் புரண்டு முனகியபடி உறைந்திருந்த கால்களை நீட்டினான். வீரர்கள் அவன் இரு கைகளையும் பற்றித் தூக்கி படிகளில் இறக்குகையில் தலை தொங்கி ஆட, கால்களும் கைகளும் உயிரற்றவையென துவண்டு அசைய ,சடலமென்றே தோன்றினான்.
கற்தரையில் நிறுத்தியபோது அவன் தள்ளாடி வீரன் ஒருவன் மேல் சாய்ந்து கொண்டான். “கொண்டுவாருங்கள்” என்றபடி திருஷ்டத்யும்னன் திரும்பினான். “பாஞ்சாலரே” என்று தாழ்ந்த குரலில் கிருதவர்மன் அழைத்தான். திரும்பலாகாது என்று எண்ணியும் திருஷ்டத்யும்னன் திரும்பி அவனை நோக்கினான். அக்கணம் வரை இல்லாதிருந்த ஒன்று குடியேறிய விழிகளால் அவனை நோக்கி, பற்களை இறுகக் கடித்தமையால் தாடை இறுகியசைய, கற்களை உரசும் ஒலியில் கிருதவர்மன் சொன்னான் “அவள் முன் என்னை நிறுத்திவிட்டீர். இதுவரை மானுடன் என்றிருந்த என்னை மலப்புழுவென்றாக்கிவிட்டீர்.”
“ஒருபோதும் இதை மறவேன்” என்றான் கிருதவர்மன். “என் எஞ்சிய வாழ்நாளெல்லாம் ஒவ்வொரு கணமும் இதையே எண்ணியிருப்பேன். இங்கு நுண்ணுருவாக சூழ்ந்திருக்கும் என் மூதாதையர் அறிக! என் குலதெய்வங்கள் அறிக! எக்கணமும் என் நெஞ்சில் நின்று வாழும் திருமகள் அறிக! ஒரு நாள் உமது நெஞ்சு பிளந்து குருதி கொள்வேன். அதுவன்றி அமையேன்.” அவன் குரல் எழுந்தது “எந்த நெறியையும் அதன் பொருட்டு கடப்பேன். எந்த தெய்வத்தின் ஆணையையும் அதற்காக மீறுவேன். ஏழல்ல ஏழாயிரம் யுகங்கள் இருள்நரகில் வாழவும் சித்தமாவேன்.”
சொல்லப்படுகையிலேயே மானுட உடலிலிருந்து விலகி தெய்வங்களின் குரலாக ஒலிக்கும் சொற்கள் சில உண்டு என்பர் சூதர். அச்சொற்கள் அத்தகையவையே என்று திருஷ்டத்யும்னன் அறிந்தான். அவன் முதுகெலும்பில் ஒரு கூச்சம் போல குளிர்போல ஒன்று கடந்து சென்றது .நெஞ்சு எடைகொண்டு இறுக, அக்கணத்தை சித்தத்தின் வல்லமையால் தள்ளி அகற்றிவிட்டு மூச்சை இழுத்து விட்டு “பார்ப்போம்” என்றான்.
“பாஞ்சாலரே, நீர் இன்று இந்தத் தேரில் ஊர் விழிகள் முன் நிறுத்தி சிறுமை செய்தது என் அகம் கொண்ட இருளை மட்டுமல்ல, உம் அகம் நிறைந்த விழைவையும்தான்” என்றான் கிருதவர்மன். திருஷ்டத்யும்னன் ஏளனச் சிரிப்புடன் “இத்தருணத்தை சொற்களால் வெல்ல முயல்கிறாய். இதைத்தான் இத்தனை தூரமும் எண்ணி வந்தாயா?” என்றான்.
கிருதவர்மன் அவனை நோக்கிய விழிகள் நிலைத்திருக்க “பாஞ்சாலரே, நானிருக்கும் இந்நிலையும் இக்கணமும் ஓர் மானுட உச்சமே. வென்று அறிந்து உய்ந்து மானுடன் அடையும் உச்சம் ஒன்று உள்ளது என்றால் வீழ்ந்து இழிந்து இருண்டு மானுடனறியும் உச்சம் இது. இன்று என்னுடன் மின்னும் விழிகளுடன் பல்லாயிரம் பாதாள நாகங்கள் நச்சுநா பறக்க சூழ நின்றுள்ளன. என் ஒவ்வொரு சொல் மேலும் அவை பல்லாயிரம் முறை கொத்தி ஆணையிடுகின்றன. இது உண்மை” என்றான்.
திருஷ்டத்யும்னன் அவ்விழிகளை தவிர்த்தான். சொல்லெடுக்க முடியாது அசைந்த இதழ்களை நாவால் நனைத்தபின் திரும்பி தன் படைவீரனிடம் “அவனை இட்டு வாருங்கள்” என்று ஆணையிட்டான். பின் அங்கிருந்து தப்புபவன் போல அரண்மனையின் படிகளை நோக்கி சென்றான்.