‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 43

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் – 1

திருஷ்டத்யும்னன் புரவியை இழுத்து சற்றே முகம் திருப்பி தொலைவில் விடிகாலையின் ஒளியற்ற ஒளியில் எழுந்து தெரிந்த துவாரகையின் பெருவாயிலை நோக்கினான். அதன் குவைவளைவின் நடுவே மாபெரும் கருடக்கொடி தளிரிலைபோல படபடத்துக் கொண்டிருந்தது. அதன் நீள்அரைவட்டம் வெட்டி எடுத்த வான்துண்டு நிலைஆடி போல தெரிந்தது. எதையும் காட்டாத ஆடி. ஒவ்வொருமுறையும் போல அவன் அக்காட்சியில் தன்னை இழந்து அங்கு நின்றிருந்தான். கடிவாளம் இழுக்கப்பட்ட குதிரை தலையைத் திருப்பி மூக்கை விடைத்து நீள் மூச்செறிந்து காலால் மணலை தட்டியது. அவனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த அவன் படையின் தேர்கள் அச்சில் முட்டும் சகட ஒலியுடன் மணலில் இரும்புப்பட்டைகள் புதையும் கரகரப்புடன் விலகிச் சென்றன. பின்னால் அவனைத் தொடர்ந்து வந்த புரவிகள் இழுபட்டு நின்று மூச்சொலிகளும் சிறு கனைப்பொலிகளுமாக தயங்கின. தொடர்ந்து வந்த வண்டிகளை ஓட்டிய சூதர்கள் கடிவாளங்களை இழுக்க புரவிகள் நின்று காலுதைத்து மூச்சுவிட்டன. சகடங்களை உரசும் தடைக் கட்டைகளின் ஒலிகள் ஒன்றிலிருந்து ஒன்றென பரவி நெடுந்தொலைவுக்கு சென்றன.

அவனை அணுகி பேசாமல் நின்ற துணைப் படைத்தலைவனிடம் “என்ன?” என்றான். அதன்பின் தான் நிற்பதைக் கண்டு அவர்கள் நிற்பதை உணர்ந்து “செல்வோம்” என்றபடி கடிவாளத்தை சுண்டினான். திரும்பி படையினருடன் இணைந்து கொண்டபோது அவன் அந்த நெடும்பயணம் முடிவுக்கு வருவதை எண்ணிக் கொண்டான். மிகத் தொலைவில் என எங்கோ இருந்தது மதுரா. அங்கிருந்து யமுனையில் கிளம்பி கங்கையின் வழியாக வந்து சர்மாவதிக்குள் வழி பிரிந்து உஜ்ஜயினியை அடைந்து பாலைக்குள் வண்டிகளும் புரவிகளுமாக நிரை வகுத்து மீண்டும் தொடர்ந்தனர். பகல்வெம்மையில் ஓய்வெடுத்து இரவின் தண்மையில் விண்மீன்கள் விரிந்த வான்கீழ் துவாரகையைப்பற்றிய பாடல்களை சூதர்கள் பாட வண்டிகளின் ஓசை இணைந்துகொள்ள பயணம் செய்தனர். கிளம்பும்போதிருந்த வெற்றிக்களிப்பை பயணக்களைப்பு முழுமையாகவே அழிக்க மெல்ல ஓசைகள் அடங்கி நிழல்கள் போல இருளுக்குள் ஒழுகத்தொடங்கினர்.

படைத்தலைவன் “வெயிலுக்குள் நகர் நுழைந்துவிடலாம் இளவரசே” என்றான். திருஷ்டத்யும்னன் “நேராக இளைய யாதவரின் அவைக்கு செல்வோம்” என்றான். படைத்தலைவன் “ஆணை” என்று தலையசைத்தான். இளவெயில் முகில்முனைகளைத் தீண்டி சுடரச்செய்தபோது தொலைவில் துவாரகையின் பெரும் தோரணவாயில் தென்பட்டது. துள்ளி ஓடிய இளம்கால் ஒன்றிலிருந்து உதிர்ந்து மண்ணில் பாதி புதைந்த பொற்சிலம்பு போல. இலைவில்லைகளை வெட்டிக்கொண்டுசெல்லும் கோடைகாலத்து எறும்பு வரிசை என நான்கு வண்டிநிரைகள் அதற்குள் சென்று கொண்டிருந்தன. தோரணவாயில் ஒரு தலையென்றும் தோரணங்கள் அணிமலர் சூடிய நீள்சடைகள் என்றும் சூதர் பாடுவதை எண்ணிக்கொண்டான்.

அவ்வரிசைக்குள் சென்று இணைந்து கொண்ட அவன் படைகளை வணிகர்கள் திகைப்புடன் திரும்பி நோக்கினர். பாலைப்புழுதி அசைவில் ஆவியென எழுந்து பறக்க தேர்கள் சென்றன. வியர்த்த புரவிகளின் அடியில் புழுதியுடன் கலந்த துளிகள் குருதிபோல கொழுத்து சிவந்து சொட்டி அசைவில் சிதறி பொழிபரவிய மண்ணில் விழுந்து செம்முத்துகள் போல சுருண்டு உருண்டன. விழிகளை மூடிக்கொண்டதும் ஓசைகளாலான ஒரு மணிச்சரடு என்று அப்பாதை தோன்றியது. ஒவ்வொரு ஓசையும் ஒரு மணி. ஒவ்வொன்றுக்கும் ஒரு நிறம். ஊடாகச் செல்லும் விழைவு என்பது துவாரகை. அவர்களை நோக்கும் வணிகர்களின் மெல்லிய வினாக்களை கேட்டான். வரவேற்புக்குரல்களும் வாழ்த்துக்கூச்சல்களும் இல்லாவிட்டால் வெற்றிகொண்டு வரும் படைக்கும் தோல்வியடைந்து ஓடிவரும் படைக்கும் வேறுபாடே இல்லை.

சததன்வாவின் குருதி படிந்த தலைப்பாகையை எடுத்துச் சுருட்டி தன்னுடன் எடுத்துக்கொண்ட இளைய யாதவர் திரும்பி அவனிடம் “மதுராவுக்கென்றால் இவன் தலையையே கொண்டுசெல்வேன். துவாரகை வரை அது அழுகாதிருக்காது. தலைப்பாகை அங்கே நகர்வலம் வரட்டும்” என்றார். “ஆம், வஞ்சம் வேருடன் ஒறுக்கப்படவேண்டியதே” என்றான் திருஷ்டத்யும்னன். காசியின் எல்லையிலிருந்து கிருஷ்ணவபுஸுக்குத் திரும்புகையில் இளைய யாதவர் அவனை நோக்கி “பாஞ்சாலரே, கிருதவர்மன் எங்கு சென்றிருக்கிறான் என்று அறிந்துகொள்ளும். அவனையும் துவாரகை கைக்கொண்டாக வேண்டும்” என்றார்.

“அக்ரூரரும் அவனும் இணைந்து சென்றிருக்க வாய்ப்பில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். “வஞ்சம் கொண்ட இருவர் இணைவதேயில்லை.” இளைய யாதவர் “அக்ரூரரிடம் சியமந்தகம் அளிக்கப்பட்டிருக்கிறதென்றால் அவர் காசிக்குத்தான் செல்வார். அவருடைய அன்னை காசியின் இளவரசி என்பதை அறிந்திருப்பீர். நெடுங்காலத்திற்குமுன் அவருடைய அன்னை காந்தினியை அவரது தந்தை சுவபல்கர் காசியின் புடவிக்கிறைவனின் திருவிழாவின் ஊடு நுழைந்து கவர்ந்து கொண்டுவந்தது விருஷ்ணி குலத்தின் வெற்றி என கொண்டாடுவதுண்டு. காசி மன்னரின் மகளென்பதால் யாதவ குலத்தின் முதன்மையையும் காந்தினி அன்னை பெற்றார். அவரது மைந்தனாகிய அக்ரூரர் விருஷ்ணிகுலத் தலைமையடைந்ததும் அதனூடாகவே. காசியுடன் விருஷ்ணி குலத்திற்கு தீரா பகை எழுந்ததும் அதன் வழியாகவே” என்றார்.

“ஆனால் இன்று விருஷ்ணி குலத்திற்கு எதிரானவராக அக்ரூரர் மாறுவாரென்றால் சியமந்தக மணியுடன் அவர் சென்று சேருமிடம் காசியாகவே இருக்கும். அந்த மணியை காசி மன்னனுக்கு அளித்து பிழைபொறுக்கும்படி கூறினாரென்றால் தன் அத்தையின் குருதி வழி வந்த அவரை ஒரு போதும் காசி மன்னன் விட்டுவிட மாட்டான். காசிக்குள் புகுந்து அக்ரூரரை அடைவதென்பது எளிதல்ல. ஆனால் இன்று நாம் செய்ய வேண்டியது அதுதான். அதற்கான வழிகளை நான் தேர்கிறேன்” என்றார் இளைய யாதவர். “கிருதவர்மன் தன் எஞ்சிய படைகளுடன் மறுதிசை நோக்கி சென்றிருக்கலாம். கங்கை வழியாக வணிகப் படகுகளில் தப்பி வாரணவதம் வரை அவன் அகன்றிருக்கக்கூடும். அவனை கண்டடையுங்கள். சிறைப்படுத்தி துவாரகைக்கு கொண்டு வாருங்கள். எனது யாதவப் படைகளின் பாதி உங்களை தொடரும்” என்றார்.

“ஆணை” என்றான் திருஷ்டத்யும்னன். பலராமர் “இளையவனே, கிருதவர்மன் என்னிடம் போர்க்கலை கற்றவன். பாஞ்சாலருடன் நானும் செல்கிறேன்” என்றார். இளைய யாதவர் “மூத்தவரே, நமது குல மணியாகிய சியமந்தகத்தை நாமிருவரும் சென்று வெல்வதே முறையாகும். மேலும் காசியிடம் நாம் போர் புரிய வேண்டியிருக்காது. அரசுசூழ்கை வழியாகவே சியமந்தகத்தை நாம் பெற முடியும். அதற்கு என்னுடன் தாங்களும் இருந்தாக வேண்டும்” என்றார்.

“அரசு சூழ்கையில் நான் என்ன செய்யப் போகிறேன்? நான் எது சொன்னாலும் அது அறிவின்மையாகவே அறிவுள்ளோரால் கொள்ளப்படுகிறது” என்றார் பலராமர். “மூத்தவரே, அரசு சூழ்கையென்பது பொய்களாலானது. அங்கு உண்மை வல்லமை மிக்க படைக்கலமாக ஆகக்கூடும். எங்கும் எப்போதும் மெய்யை மட்டுமே உரைக்கும் தங்கள் மொழி என்றும் இந்தப்படையாழிக்கு நிகராக என்னுடன் உள்ளது” என்றார் இளைய யாதவர். தொடையிலறைந்து உரக்க நகைத்து “ஆம் நான் உளறுவதை எல்லாம் நீ மிகத்திறனுடன் பயன்படுத்திக் கொள்கிறாய் என்கிறார்கள் இளையோனே” என்றார் பலராமர்.

முற்றிலும் எரிந்து அணைந்த சததன்வாவின் கிருஷ்ணவபுஸுக்குள் இருந்து யாதவப் படைகள் நகர்ந்து கங்கைக்குள் நின்றிருந்த படகுகளில் ஏறிக் கொண்டிருந்தன. இளைய யாதவர் சிறைபிடிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளுடன் மூன்று கலங்களை நேராக மதுராவுக்குச் செல்லும்படி ஆணையிட்டார். பன்னிரு கலங்கள் தன்னுடன் வரும்படியும் எஞ்சிய பதினாறு கலங்கள் திருஷ்டத்யும்னனை துணைக்கும்படியும் வகுத்துரைத்தார். அங்கிருந்தபடியே காசிக்கும் மதுராவுக்கும் பறவைகள் வழியாக செய்திகளை அனுப்பினார்.

திருஷ்டத்யும்னன் “அரசே, கிருதவர்மன் தன் மிகச்சிறிய படையுடன் ஓரிரு படகுகளுடன் தப்பிச் சென்றிருக்கிறான். அவனை இப்பெரும் படையுடன் துரத்துவது எனக்கு பீடு அன்று” என்றான். “ஆம், ஆனால் அவன் எவருமறியாது சென்றான். நீரோ கிளம்பும்போதே ஒரு போர் முடித்து விட்டிருக்கிறீர். இரண்டு நாடுகளின் எல்லையைக் கடந்து செல்லவிருக்கிறீர். அந்நாடுகள் உம்மை எளிதில் வழிமறிக்காதிருக்க பெரும் படையொன்று பின் தொடர வேண்டியுள்ளது” என்றார் இளைய யாதவர். திருஷ்டத்யும்னன் ஏதோ சொல்ல வாயெடுக்க “உமக்கு பெரிய ஒற்றர்குழாமும் தேவையாகும்” என்றார்.

கிருஷ்ணவபுஸிலிருந்து கிளம்பிய திருஷ்டத்யும்னன் வலசைப்பறவைக்கூட்டம் போன்று தன் படகுகளை அணி வகுக்கச்செய்து கங்கையில் பாய் விரித்துச் சென்றான். அறுபது ஒற்றர்களைத் தேர்ந்து கங்கையின் கரையோரத்து துறை முகப்புகளுக்கு அனுப்பி அங்கிருந்து ஒற்றுச் செய்திகளை பறவைகள் வழியாக தனக்கு அனுப்பச் செய்தான். கிருதவர்மன் எந்தப் படித்துறையிலும் கரையணையவில்லை என்ற செய்தியே ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருந்தது. அயல்வணிகர் குழுமிய சந்தைகளிலும் யாதவர் மன்றுகளிலும் சென்று உளவறிந்த ஒற்றர் எதையும் அறியவில்லை. வாரணவதத்தின் படித்துறையை அவர்கள் அணுகும்போது அவன் சற்றே நம்பிக்கை இழந்துவிட்டிருந்தான்.

கிருதவர்மன் அஞ்சி முற்றாக ஒளிந்துகொள்வானென்றால் யாதவர்குலம் பெருகிப் பரந்த கங்கையமுனைக் கரைவெளியில் அவனை கண்டுபிடிப்பது எளிதல்ல என்று திருஷ்டத்யும்னன் எண்ணினான். இளைய யாதவர் அக்ரூரரைப் பிடித்து சியமந்தகத்தை கவர்வதற்குள் கிருதவர்மனை பிடித்தாகவேண்டும் என்று அவன் விடைபெற்றுக் கிளம்புகையில் எண்ணியிருந்தான். அதை நிகழ்த்த முடியாது என்று வாரணவதத்தை அடைந்ததும் தெளிந்தான். துறைகளுக்குச் சென்ற ஒற்றர்கள் வாரணவதத்தின் துறைமேடைக்கு அருகே கங்கைக்குள் நங்கூரமிறக்கி அமைந்திருந்த அவன் படகுகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக திரும்ப வந்து சேர்ந்தனர். ஏழு நாட்களில் தேடல் எந்த விளைவும் இன்றி முழுமையாக முடிந்தது.

இளைய யாதவரின் படைகள் காசியை அணுகிய செய்தி முதலில் வந்தது. போர்ச்செய்திக்காக காத்திருந்தபோது அவர்கள் காசி மன்னரின் விருந்தினராக நகர் நுழைவு செய்ததை அவன் அறிந்து வியந்தான். அதற்கு முன்னரே மதுராவின் பதினெட்டு படைப்பிரிவுகள் மகதத்தின் காவல்அரண்களை நோக்கி செலுத்தப்பட்டு நிலை கொள்ளச்செய்யப்பட்டன என்று தெரிந்ததும் அவ்வியப்பு அகன்றது. அந்த அச்சுறுத்தலின் விளைவாக மகதம் காசியிடமிருந்து சற்று விலகிக் கொண்டது. மகதத்தின் காவல் படைகள் மதுராவின் காவல்படைகளை எதிர்கொள்ளும்பொருட்டு ஆங்காங்கே குவை கொண்டன. வசுதேவரின் அவைக்கு மகதத்தின் மூன்று அரசுத்தூதர்கள் வந்தனர். காசிமன்னர் மகதத்தின் அந்த விலக்கத்தால் அஞ்சி இளைய யாதவரின் செய்தியை ஏற்று அவரை தன் நகருக்குள் வரவழைத்து அரசு விருந்தினராக முறைமை செய்ய உளம் கொண்டார்.

கங்கையில் படை நிலைகொள்ள புடவிக்கிறைவனின் ஆலயமுகப்பின் பெரும் படிக்கட்டில் இளைய யாதவரின் படகுகள் சென்றணைந்தபோது பல்லாயிரம் மக்கள் திரண்டுவந்து அடுக்கடுக்காக நின்று கைகளையும் ஆடைகளையும் காற்றில் வீசி வாழ்த்துரைகளைக் கூவி ஆர்ப்பரித்து வரவேற்றனர் என்றனர் ஒற்றர். சாலைகளின் இருமருங்கும் மாளிகை முகப்புகளில் முழுதணிக்கோலத்தில் எழுந்த மகளிர் அவரைக் கண்டு மகிழ்ந்து கூவி அரிமலர் சொரிந்தனர். காசிமன்னர் விருஷதர்பர் தன் துணைவியரும் அமைச்சரும் சூழ வந்து கோட்டை முகப்பில் இளைய யாதவரையும் மூத்தவரையும் எதிர்கொண்டு எட்டுமங்கலம் காட்டி வாள் தாழ்த்தி முறைமை செய்து வரவேற்று நகருக்குள் அழைத்துச் சென்றார். அங்கே அவருக்கு வசந்தகால அரண்மனை சித்தமாக்கப்பட்டது. அங்கே மூன்று நாள் தங்கி கலை நிகழ்வும் இசை நிகழ்வும் காவிய நிகழ்வும் கூடி விருந்துண்டு களித்தார்.

காசி துவாரகையுடன் கலம் கொள்ளவும் பொன் மாற்றவும் கடல் அணையவும் என மூன்று ஓலைச்சாத்துகளை ஏற்றுக் கொண்டது. காசிமன்னரும் இளைய யாதவரும் புடவிக்கிறைவனின் ஆலயத்தில் இணைந்து சென்று கங்கை நீரள்ளி சிவக்குறி மேல் சொரிந்து மலரிட்டு வணங்கி முறை செய்தனர். இருவரும் குன்று எழுந்தது போலவும் முகிலிறங்கியது போலவும் நடந்த இரு யானைகள் மேல் அம்பாரியில் அமர்ந்து நகருலா சென்றனர். காசிமக்கள் இரு பக்கங்களிலும் கூடி வாழ்த்தொலி எழுப்பி உவகை கொண்டாடினர். மூன்றுநாட்கள் நகரம் விழவுகொண்டாடட்டும் என்று காசி மன்னர் ஆணையிட்டிருந்தார். நகரமெங்கும் காசியின் முதலைக் கொடியுடன் கருடக்கொடியும் இணைந்து பறந்தது என்றான் ஒற்றன்.

“அக்ரூரர் அங்கில்லையா?” என்றான் திருஷ்டத்யும்னன். “இளவரசே, அக்ரூரரைப் பற்றி அங்கு எவரும் எதையும் பேசி நான் கேட்கவில்லை” என்று ஒற்றன் சொன்னான். அருகே நின்ற அவன் படைத்தலைவன் “அரசியலாடலின் நடுவே அதைப்பேசும் சூழல் அங்கிருந்திருக்காதோ?” என்றான். திருஷ்டத்யும்னன் திரும்பி அவனை நோக்கி “இந்த நகர்நுழைவும் ஆலய வழிபாடும் கொண்டாட்டங்கள் அனைத்தும் அக்ரூரருக்காகவே. அக்ரூரரின் பெயர் உச்சரிக்கப்பட வேண்டுமென்பதே இல்லை” என்றான். “எனில் அவர் எங்கிருக்கிறார்?” என்றான் படைத்தலைவன். “காசிக்குள் எங்கோ இருக்கிறார் என்பது உறுதி. காசியுடன் இளைய யாதவர் கொண்ட இந்த நட்பு அக்ரூரரை அச்சுறுத்துவதற்காகவே. வளைக்குள் புகுந்த பாம்பை புகையிட்டு வெளியேற்றுகிறார் இளைய யாதவர்” என்றான் திருஷ்டத்யும்னன்.

காசியிலிருந்து இளைய யாதவரும் மூத்தவரும் படைகளுடன் கிளம்பி மதுரா நோக்கிச்செல்வதாக செய்தி வந்தது. மேலும் முன்னகர்ந்து கங்கையின் மலைமுகம் வரை சென்று தேடலாம் என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “நமது கலங்கள் இன்னும் ஆறு நாழிகை தொலைவுக்கு அப்பால் செல்ல முடியாது இளவரசே” என்றான் படைத்தலைவன். “அதற்கப்பால் சிறு படகுகளே செல்ல முடியும். அவற்றில் சென்று நாம் எங்கு என தேட முடியும்? இரு புறமும் விரிந்திருப்பது கயிலைஆளும் வேந்தனின் சடைகள் என்று தொல்நூல்கள் கூறும் பெருங்காடு. பெரும்பகுதி மானுடர் அணுகவொண்ணாதது. கந்தர்வரும் யக்ஷரும் கின்னர கிம்புருடரும் வாழும் உயர்நிலங்கள். அரக்கரும் அசுரரும் நாகரும் வாழும் இருள்நிலங்கள். கிருதவர்மர் நம்மை அஞ்சி அக்காட்டுக்குள் நுழைந்தாரென்றால் மீண்டு அவர் ஊர்நுழைவதும் அரிதே.”

திருஷ்டத்யும்னன் “கிருதவர்மரைக் கொண்டு வருக என்று இளைய யாதவர் ஆணையிட்டபின் அவரின்றி நான் மீள முடியாது” என்றான். படைத்தலைவன் மறுமொழி சொல்லாமல் நின்றான். “கிருதவர்மர் வணிகனாகவோ சூதனாகவோ வேடமாறு செய்து எங்கேனும் இருக்கலாம்” என்று ஒற்றர் தலைவன் கலிகன் சொன்னான். “பாடியலையும் சூதர்களிடமும் மலைப்பொருள் கொண்டு துறைமீளும் வணிகரிடமும் செய்திதேர்ந்தளிக்க மீண்டும் ஒற்றர்களை விரிக்கலாம்.” திருஷ்டத்யும்னன் “மாறுவேடமிடும் இழிவை அவர் அடையமாட்டார் என எண்ணினேன். அது பிழையென படுகிறது. அவ்வாறே ஆகுக!” என்றான்.

ஆனால் அம்முயற்சியும் செய்தி ஏதும் கொண்டு மீளாது என அவன் ஆழுள்ளம் அறிந்திருந்தது. கூடவே வியத்தகு முறையில் செய்தி ஒன்று வரப்போகிறதென்றும் அவன் அறியமுடியா அடியாழம் உணர்ந்திருந்தது, ஒவ்வொருமுறை புரவி ஒன்று கரையணையும்போதும் படகொன்று தன் கலத்தை நெருங்கும்போதும் அச்செய்திக்காக அவன் சித்தம் படபடத்து எழுந்தது. வானில் சிறகடித்து அலையும் ஒவ்வொரு பறவையும் அச்செய்தியை கொண்டுவருவது என்று எண்ணி உடல் சிலிர்ப்பு கொண்டது. ஏழாவது நாள் அவர்கள் படகுக்கு மீன்நெய் விற்றுக் கொண்டிருந்த மகதநாட்டு வணிகன் பொன்கொள்ளும்போது “இளவரசே, நவமணி பொறிக்கப்பட்ட கங்கணம் ஒன்றுள்ளது. தாங்கள் விழைந்தால் பொன்னுக்கு அதை விற்க சித்தமாக உள்ளேன்” என்றான். அக்கணமே திருஷ்டத்யும்னன் அறிந்துவிட்டான் அதுதான் அச்செய்தி என்று. “கொள்கிறேன்” என்றான். மகத வணிகன் தன் தோல்கிழியைத் திறந்து ஒன்பது மணிகள் பொறிக்கப்பட்ட கங்கணத்தை எடுத்து முன்னால் வைத்தான்.

“என் படகொன்றை விற்று இதை கொண்டேன் இளவரசே. இதன் மதிப்பு மட்டுமே அன்று என் கண்ணுக்குத் தெரிந்தது. மிகக்குறைந்த விலையில் இதைப்பெறமுடியுமென்று மட்டுமே என் எண்ணம் ஓடியது. பின்னர்தான் அறிந்தேன், இதை மன்னர்களிடமன்றி என்னால் விற்க முடியாது என்று. நான் இதை திருடவில்லை என மன்னர்களிடம் எப்படி தெளிவுறுத்துவதென்று எண்ணி அஞ்சிவிட்டேன். இன்று தங்களைக் கண்டதும் துணிவுகொண்டேன்.”

அதை கையில் எடுத்து அந்தகக்குலத்து யாதவர்களுக்குரிய இளங்கதிர் முத்திரையை கையால் தொட்டுநோக்கியபடி திருஷ்டத்யும்னன் “வணிகரே, இதன் மதிப்பை தாங்கள் அறிந்திருக்க மாட்டீர். தாங்கள் எண்ணுவதைவிட மும்மடங்கு பொன் இதற்கென அளிக்கப்படும்” என்றான். விரிந்த முகத்துடன் எழுந்த வணிகன் “ஆம், நான் எண்ணினேன், இந்த மணிகள் பழுதற்றவை. இவற்றின் செவ்வி அறிவோர் சிலரே” என்றான். “இதை விற்றவரும் ஓர் இளவரசரே. அதை இம்மணியே கூறுகிறது” என்றான் திருஷ்டத்யும்னன்.

“நானும் அவ்வாறே எண்ணினேன் இளவரசே. அவர் யாதவகுலத்து இளமன்னராக இருக்கவேண்டும். கங்கையில் இரண்டு சிறு படகுகளில் என்னெதிரே வந்தார். இங்கிருந்து அப்பால் உள்ள சிறு படகுத்துறையான கண்வகத்துக்கு அருகே அவரை பார்த்தேன். என்னிடம் விளக்கெரிக்கும் மீன்நெய் உள்ளதா என வினவினார் அதை ஓட்டிய வீரர். நான் மீன்நெய் விற்கக்கண்டு உணவு உள்ளதா என்று மறுபடியும் கேட்டார். உணவுக்கு விலையாக தர அவரிடம் பொன்நாணயங்கள் இருக்கவில்லை. சிறு கணையாழி ஒன்றை எடுத்துக்காட்டி இதைக் கொண்டு உணவளிப்பீரா என்றார். அதிலிருந்த சிறு வெண்முத்தை நோக்கியதுமே அது பழுதற்ற பாண்டியர்செல்வம் என தெளிந்தேன். ஆம், இவ்வரிய நகை மதிப்புடையது என்று சொல்லி உப்பும் ஊனும் தேனும் தினையும் கொடுத்து அதை பெற்றுக் கொண்டேன்.”

“அப்போது படகின் உள்ளறைக்குள் தோற்பீடத்தில் அமர்ந்திருந்த இளவரசர் எழுந்து வெளியே வந்து என்னிடம் நீர் ஊரும் இந்த மூன்று படகுகளில் ஒன்றை எனக்கு விற்கிறீரா, மும்மடங்கு பெருமதியுள்ள கங்கணமொன்றை விலையாக அளிக்கிறேன் என்றார். என் விழிகளிலேயே ஆவலை அறிந்துகொண்டு தன் ஆடைக்குள்ளிருந்து இந்தக் கங்கணத்தை எடுத்துக் காட்டினார். இவை பழுதற்ற மணிகள் என்று அவை கூரையில் வீழ்த்திய ஒளியலைகளைக்கொண்டு அறிந்து கொண்டேன். என் படகுகள் மேலும் மதிப்புள்ளவை என்றேன். என்னிடம் மேலும் இரண்டு கணையாழிகள் உள்ளன, பெற்றுக் கொள்ளும் என்றார். அவரிடமிருக்கும் முழுச்செல்வமும் அவ்வளவுதான் என்று உய்த்தறிந்துகொண்டபின் நான் மேலே பேசவில்லை. என் ஒழிந்த பெரும்படகொன்றை அவருக்களித்து இந்நகையை கொண்டேன்.”

“தன் படகிலிருந்த வீரர்களுடன் படகிலேறிக் கொண்டு படகுகளையும் அதில் ஏற்றிக் கொண்டு அவர் வடதிசை நோக்கி விரைந்து சென்றார்” என்றான் மகத வணிகன். “அப்படகின் தோற்றம் எவ்வாறு இருந்தது?” என்றான் திருஷ்டத்யும்னன். “இளவரசே, அது கலிங்க நாட்டிலிருந்து நான் கொண்டது. இப்பகுதிகளில் கலிங்கப்படகுகள் பொதுவாக தென்படுவதில்லை. கலிங்கர்கள் படகை நம்மைப் போல் அகல் விளக்கு வடிவில் அமைப்பதில்லை. மூங்கில்இலை வடிவில் அமைக்கிறார்கள். அவற்றின் முகப்பின் கூர்மையே விரைவை அளிக்கிறது” என்றான்.

யாதவப் படைத்தலைவன் “அப்படியென்றால் அது அகலமற்ற நீண்ட படகு அல்லவா?” என்றான். “ஆம்” என்றான் மகத வணிகன். “அதில் ஓரிரு பாய்களுக்கு மேல் கட்ட இடமிருக்காதே?” என்றான் படைத்தலைவன். “இல்லை. அதன் பாய்மரம் மிக உயரமானது. பாய்களை படகுக்குக் குறுக்காக காற்றுக்கு எதிர்த்திசையில் சற்று வளைத்துக் கட்டுவது வடகலிங்கமுறை. தென்கலிங்கர்களின் படகுகளில் பாய்களை படகுக்கு இணையாகவே காற்றுத்திசைக்கு ஒப்பாக கட்டுகிறார்கள். நேர்நின்று நோக்கினால் படகில் பாய்கள் இல்லையென்றே தோன்றும்” என்றான் மகத வணிகன். “அவை காற்றை எப்படி வாங்கும்?” என்று படைத்தலைவன் கேட்க, திருஷ்டத்யும்னன் “காற்றுக்கு எதிராகப் புடைத்தால் மட்டுமே விசை என்றில்லை சுபலரே. பீதர்நாட்டுப் பாய்கள் பெரும்பாலும் காற்றுக்கு நேராக அமைபவை. சற்றே திரும்பி காற்றை திறம்பட திசை திருப்புவதினூடாக அவை விசை பெறுகின்றன. தடுப்பதினூடாக அல்ல” என்றான்.

“நன்று மகதரே! தங்கள் பொன் சிறக்கட்டும்! தாங்கள் அளித்த இம்மணி என் நிதியறையை ஒளிபெறச்செய்யட்டும்!” என்றான். மகதன் “தங்கள் நற்சொற்களால் என் இல்லம் தழைக்கட்டும். என் மூதாதையர் மகிழட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்று சொல்லி விடைபெற்றான். மூன்று ஒற்றர்கள் அக்கணமே விரைவுப்படகில் கரையோரக் காடுகளில் இறங்கி புரவிகளில் கிளம்பிச் சென்றார்கள். இரண்டாவது நாளே அந்தப் படகு வாரணவதத்திலிருந்து வடக்கே சுதமவனம் என்னும் ஊருக்கு அருகே அங்குள்ள சிறிய படித்துறையில் இருப்பதை ஒற்றன் அனுப்பிய புறாச்செய்தி சொன்னது. “எழுக படை!” என்று திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான்.

அவனது படகுகள் பாய்விரித்து வல்லூறுகள் போல கூர்முகம் தாழ்த்தி, சிறகு விரித்து நதியலைகள் மேலெழுந்து சென்றன. சுதமவனத்தின் தொலைவிலேயே கலிங்கப் படகை அவர்கள் கண்டுவிட்டனர். அவர்கள் வருவதைக்கண்டதும் சுதமவனத்திலிருந்து கிருதவர்மன் புரவிகளில் தப்பி காட்டுக்குள் சென்றுவிடக்கூடாது என்று திருஷ்டத்யும்னன் எண்ணினான். தன் படகுகளில் ஐந்தை கரையணையச்செய்து அவற்றிலிருந்து புரவிகளை இறக்கி படை வீரர்களை காடு வழியாக அனுப்பி சுதமவனத்திலிருந்து காட்டுக்குள் சென்ற மூன்று ஊடுபாதைகளையும் முன்னரே மறித்தான். அதன் பிறகுதான் அவன் படைகள் சுதமவனத்தின் படித்துறையை அடைந்தன, யாதவர்கள் படகின் நடைபாலத்தின் வழியாக போர்க்கூச்சலுடன் இறங்கி சுதமவனத்தின் சிறிய படகுப்பாதையின் மரத்தரை அதிர ஓடி எதிர்வந்த ஊர்க்காவலர் சிலரை வெட்டிவீழ்த்தியபடி அவ்வூரின் தெருக்களில் நிறைந்தனர்.

ஊர்த்தலைவனின் மாளிகைக்குப் பின்னால் இருந்த சிறிய இல்லத்தில் தங்கியிருந்த கிருதவர்மன் தன்னுடைய அணுக்க வீரர் பன்னிருவருடன் கிளம்பி புரவிகளிலேறி மறுபக்கம் காட்டுக்குள் நுழைந்தான். அங்கு முன்னரே அணிவகுத்திருந்த யாதவப் புரவிப்படை அவர்களை எதிர்கொண்டது. அவர்களுடன் அவன் போர் புரிந்துகொண்டிருக்கையிலேயே திருஷ்டத்யும்னன் தன்னுடைய புரவியில் அவனுக்கு பின்பக்கம் வந்தான். தன்னை எதிர்கொண்ட மதுராவின் யாதவர்களில் அறுவரை வெட்டி வீழ்த்தி வழியமைத்து காட்டுக்குள் புகுந்த கிருதவர்மன் குளம்படி கேட்டுத் திரும்பி புரவியில் தொடர்ந்து வரும் திருஷ்டத்யும்னனையும் அவனது வீரர்களையும் கண்டான். அவனுடைய வீரர்களில் இருவரே எஞ்சியிருந்தனர். “பின் தொடர்க!” என்று அவர்களுக்கு ஆணையிட்டபடி அவன் காட்டுப் பாதையில் முழு விரைவில் தன் புரவியில் சென்றான்.

திருஷ்டத்யும்னன் குதிமுள்ளால் புரவியைத்தூண்டி தரையில் சிதறிக்கிடந்து துடித்த குதிரைகளையும் வீரர்களையும் தாவிக்கடந்து அவனைத் தொடர்ந்து சென்றான். வெட்டுண்ட வீரர்களின் உடல்களை அலறித்துடிக்க மிதித்துக் கூழாக்கித் துவைத்தபடி அவனது சிறிய புரவிப்படை கிருதவர்மனை தொடர்ந்தது. காட்டுக்குள் ஏழு நாழிகை தொலைவு அவன் கிருதவர்மனை துரத்திச் சென்றான். அந்தப் பாதை கிருதவர்மனுக்கும் புதிதாக இருந்தது என்றாலும் வாயால் மூச்சு விட்டபடி தலைப்பாகை அவிழ்ந்து நீண்டு முள்ளில் சிக்கி அலைபாய குழல்பறக்க முழுவிரைவில் தன் புரவியை செலுத்தி பாய்ந்து சென்றான். குறுக்கே மறித்த மூங்கில்கள் அவன் உடல் பட்டு வளைந்து நிமிர்ந்து வீசியறைந்து திருஷ்டத்யும்னனின் வீரர்கள் இருவர் அலறித் தெறித்து விழ அவர்கள் மேல் பின்னால் வந்த வீரர்களின் குதிரைகள் மிதித்துச் சென்றன. யாதவப் புரவிகளில் ஒன்று கொடிவேரில் கால் தடுக்கி கனைத்தபடி துள்ளி விழுந்து புரண்டு குளம்புகள் வானை உதைக்க அலறி எழ முயல தொடர்ந்து வந்த புரவிகள் அதில் கால் தடுக்கி அதன் மேலேயே மேலும் மேலுமென விழுந்தன.

திரும்பி நோக்கிய திருஷ்டத்யும்னன் தனது படைகளில் பெரும்பாலானவர்கள் புரவிகளின் விரைவை நிறுத்த முடியாமல் வந்து விழுந்த புரவிகளில் முட்டித் தெறிப்பதை கண்டான் அவனுக்கு முன்னால் சென்ற கிருதவர்மனின் படைவீரனொருவன் கிருதவர்மன் குனிந்து சென்ற மூங்கில்கழையின் அறைபட்டு தெறித்துவிழ புரவி வளைந்து விரைவழிந்து நின்றது. திருஷ்டத்யும்னனின் புரவி அதை அணுகியபோது அவன் காலைத்தூக்கி அப்புரவியை உதைத்து விலக்கிவிட்டு அதே விரைவில் குனிந்து எதிரே வந்த மூங்கில் கழையைத் தவிர்த்து முன்னால் சென்ற கிருதவர்மனை தொடர்ந்தான். அவனும் மூச்சிரைத்தபடி உடலெங்கும் அனல் எழ வியர்த்து உருகிக்கொண்டிருந்தான். உடலெங்கும் முட்கள் வீறி குருதிகசிய புலிக்கோடிட்டிருந்தன.

ஒளி பொழிந்துகிடந்த புல்வெளிச்சரிவொன்றை அடைந்த கிருதவர்மன் மூச்சிரைக்க திரும்பி நோக்கினான். ஆடையும் குழலும் பறக்க முகிலில் விரையும் கந்தர்வன் போல சென்றபடியே அவன் “என்னை உயிருடன் பிடிக்க இயலாது பாஞ்சாலரே” என்றபடி சரிவில் விரைந்தான். திருஷ்டத்யும்னன் தன் புரவியை மேலும் மேலுமென குதிமுள்ளால் குத்தி விரைவு கொள்ளச் செய்தான். அது வெறி கொண்டு கனைத்து எழுந்த புற்களையும் சிற்றோடையின் சதுப்புக் கலங்கலையும் மிதித்துத் துவைத்தபடி கிருதவர்மனை தொடர்ந்தது. புல்வெளிச்சரிவில் இருபுரவிகளும் சென்ற தடம் செந்நிறக் கோடு போல நீண்டது.

திருஷ்டத்யும்னன் விரைந்தபடியே தன் வில்லை எடுத்து அம்பு தொடுத்து கிருதவர்மனின் புரவிமேல் எய்தான். விலாவில் பட்ட அம்புடன் அது நிலையழிந்து துள்ளி சரிவில் சரிந்து விழுந்தது. அங்கு சேறாக இருந்ததனால் விழுந்த புரவி கால்சிக்கி அதிலேயே தத்தளிக்க அதன் எடைமிக்க விலாவுக்கு அடியில் கிருதவர்மனின் வலது கால் சிக்கிக் கொண்டது. அவன் கையை ஊன்றி எழ முயல்வதற்குள் திருஷ்டத்யும்னன் அவனை அணுகி தன் புரவியின் மேலேயே காலுதைத்து எழுந்து பாய்ந்து அவன் மேல் விழுந்து முழங்கால்களால் அவன் நெஞ்சை அறைந்து அவன் இரு கைகளையும் பிடித்து அவன்தலைக்கு மேல் தூக்கி மண்ணுடன் அழுத்தி இறுக்கிக் கொண்டான்.

“பாஞ்சாலரே, என்னை உயிர் துறக்கவிடுங்கள்… என் மேல் கருணை காட்டுங்கள்” என்று கிருதவர்மன் கண்களில் நீர் எழ அடைத்த குரலில் சொன்னான். தன் முழு எடையும் கிருதவர்மன் உடம்பு மேல் அழுந்த திருஷ்டத்யும்னன் அவனை கட்டுவதற்காக தன் கச்சையை அவிழ்த்தான். கிருதவர்மன் பற்களைக் கடித்தபடி கண்களைச் சுருக்கி பாம்பெனச்சீறும் குரலில் “பாஞ்சாலரே, நானும் ஒரு வீரன் என கருத்தில் கொள்ளுங்கள். இக்கணமே உங்கள் வாளை உருவி என் கழுத்தை அறுத்து குருதியுடன் திரும்பிச் செல்லுங்கள். யாதவ அவையில் நீங்கள் விரும்பும் அனைத்து சிறப்புகளையும் பெறுவீர்கள். என்னை இழிவுபடுத்தாதீர்கள்” என்றான்.

“நீ வஞ்சகன். உன் இறைவனுக்கு இரண்டகம் செய்தவன்” என்றான் திருஷ்டத்யும்னன். “இல்லை பாஞ்சாலரே, நான் இரண்டகம் செய்யவில்லை” என்றான் கிருதவர்மன். “ஏனென்றால், நான் கொண்ட பற்று துவாரகைமேல் அல்ல. இளைய யாதவர் மீதும் அல்ல. எனக்கு என் யாதவக்குடியே ஒரு பொருட்டல்ல… பாஞ்சாலரே, நான் அத்திருமகளுக்கு மட்டுமே முடிதாழ்த்தியவன். அவளை என் அகத்தே விழைந்தேன். அவளன்றி இப்புவியிலும் அவ்விண்ணிலும் ஏதுமில்லை என இருந்தேன். அவள் காலடி அங்குள்ளது என்பதனாலேயே துவாரகையில் வாழ்ந்தேன். இங்கு நான் வந்தது அவளுக்காகவே. அந்த மணியை நான் கண்டேன். அது அவளே என அக்கணம் சித்தம் மயங்கினேன். அதுவன்றி பிறிதெதையும் எண்ணவியலாதவன் ஆனேன்” என்றான் கிருதவர்மன்.

திருஷ்டத்யும்னன் அவனை திகைப்புடன் நோக்கினான். கிருதவர்மனின் இடது கால் எலும்பு முறிந்திருந்தது. அதை இழுத்து வைத்தபடி வலியால் முகம் சுளித்து பல்லைக் கடித்து “என்ன நிகழ்ந்ததென்று நானறியேன் பாஞ்சாலரே. என்னை ஆக்கிய தெய்வங்களையும் என் குடிமூதாதையரையும் என் உளம் அமர்ந்த திருமகளையும் சான்றாக்கி சொல்வேன். இங்கு வருகையிலும் கிருஷ்ணவபுஸின் துறையில் இறங்குகையிலும் சததன்வாவை நேரில் காணும் கணம் வரைக்கும் நான் அவன் தலைகொய்து மீள்வதைக் குறித்து மட்டுமே எண்ணினேன். என் எதிர்வந்த அவன் நெஞ்சில் திறந்திருந்த அவ்விழியைக் கண்டேன். இந்திரநீலம். நஞ்சின் நிறம். ஒளி என்றான இருளின் நிறம். பாஞ்சாலரே, அதன் பின் அந்த மணியை எனக்கெனக் கொள்வதன்றி வேறெதைப் பற்றியும் நான் எண்ணவில்லை” என்றான்.

விம்மலென உடைந்த குரலில் கிருதவர்மன் “இன்று அறிகிறேன் நான் விழுந்த ஆழமென்ன என்று. இளைய யாதவர் முன் சென்று நிற்பதில் எனக்கு நாணமில்லை. பொன் விழைவதும் பெண் விழைவதும் மண் விழைவதும் மணி விழைவதும் வீரர்க்கு உரியதுதான். ஆனால் வஞ்சகனாகவும் இழிமகனாகவும் என் நெஞ்சுறைந்த திருமகள் முன் சென்று நிற்பதென்பது இறப்பினும் கொடிதெனக்கு. அந்நிலைக்கு என்னை இட்டுச் செல்ல வேண்டாம். தங்கள் கால்களில் என் தலையை வைக்கிறேன். கொய்து செல்லுங்கள். அப்பெருங்கருணையை எனக்கு அளியுங்கள்” என்றான்.

திருஷ்டத்யும்னன் அவனைப் பற்றித் தூக்கி நிறுத்தினான். புரவி ஒடிந்த ஒரு காலை ஊன்றி கனைத்தபடி எழுந்து விலகியது. வலியால் காலை நிலத்தில் தட்டியபடி உடலை சிலிர்த்துக்கொண்டது. திருஷ்டத்யும்னன் கிருதவர்மனின் கையைப்பிடித்து முறுக்கி பின்னால் இழுத்து வலக்காலால் காலைத் தட்டி குப்புற விழவைத்து இன்னொரு கையைப் பற்றி முறுக்கிச் சேர்த்து தன் இடைக் கச்சினால் இறுக்கிக் கட்டினான். “பாஞ்சாலரே, உம்மை வீரனென்று எண்ணினேன். உமது குடிப்பிறப்பை நம்பினேன்” என்றான் கிருதவர்மன். “வீரம் ஒரு போதும் வஞ்சகத்தை பொறுத்துக் கொள்ளாது மூடா” என்றான் திருஷ்டத்யும்னன்.

தோரணவாயில் அணுகி வந்தது. படைத்தலைவன் அருகே வந்து நின்றான். தன் ஆணையை அவன் எதிர் நோக்குகிறான் என்று புரிந்து கொண்ட திருஷ்டத்யும்னன் “கிருதவர்மனை மூடுவண்டியில் இருந்து இறக்குங்கள். தேர் மேல் கட்டுண்டு அமர்ந்து அவன் நகர்வலம் செல்லட்டும்” என்றான்.

முந்தைய கட்டுரைதருணம்
அடுத்த கட்டுரைபௌத்தப் பிரபஞ்சம்