தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் : 1 – இரு புராண மரபுகள்

நான் சின்னப்பையனாக இருந்தபோது ஒரேசமயம் இரண்டு கதையுலகங்களில் வாழ்ந்தேன். என் பாட்டி லட்சுமிக்கு அப்போதே எண்பது வயது தாண்டியிருந்தது. பாட்டி ஒரு சம்ஸ்கிருத பண்டிதை , புராண கதைக்களஞ்சியம். அந்திக்கு விளக்கு கொளுத்தியதும் கைகால் கழுவி அமர்ந்து ராமநாம ஜபம் முடிந்தபின் என்னை மடியிலமர்த்தி என் தலையை கையால் மெல்ல தடவியபடி கதை சொல்லுவாள். தேவர்களும் கின்னர கிம்புருடர்களும் உலவும் மிகப்பெரிய கதைவெளி. அசுரர்கள், பாதாளநாகங்கள், அரக்கர் அவர்களை வதம் செய்ய பிறவியெடுக்கும் தெய்வங்கள். அவளுடைய கை பசுவின் நாக்கு போல. கதை அவள் சுரக்கும் பால். நான் சொல்லிப்போய் இரவு கனப்பது வரை கேட்டுக்கொண்டிருப்பேன்

கதைகளில் வாழ்ந்துகொண்டிருந்தேன். இவ்வுலகில் உள்ளவை எல்லாம் மிக எளிமையான விதிகளின் அடிப்படையில் அர்த்தமே இல்லாமல் இயங்கிக்கொண்டிருந்தன. மனிதர்கள் பறக்கமுடியாது என்பது, நினைத்த இடத்தில் தோன்றமுடியாது என்பது, விரும்பிய தோற்றம் பூண முடியாது என்பது எத்தனை பெரிய கட்டுப்பாடு என மனம் புழுங்கினேன். இயற்பியலின் இரும்பு விதிகளுக்குள் மனிதனைக் கட்டிப்போட்டுவிட்டு தெவ்யவ்ங்களும் பேய்களும் மட்டும் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருந்தன என்று எண்ணும்போதே கசப்பாக இருந்தது. இவ்வுலகில் நான் விரும்பியவை அமர்சித்ர கதா நூல்கள் மட்டுமே

இன்னொரு கதையுலகம் எங்கள் வீட்டில் நெடுங்காலமாகவே வேலைசெய்து வந்த தங்கம்மாவுடையது. எப்போதும் ஏதேனும் வேலைசெய்துகொண்டே இருக்கும் தங்கம்மாவின் பின்னால் சின்னச்சின்ன கேள்விகளுடன் நடந்தபடியே நான் கதை கேட்பேன். சாணி வழித்தபடி , புல் பறித்தபடி, நெல் குத்தியபடி, மாட்டைக்குளிப்பாட்டியபடி கேட்ட கதைகளில் தெய்வங்கள் மிகக்குறைவு. கொலைவெறிகொண்ட பேய்கள், குருதி குடிக்கும் தெய்வங்கள், விசித்திரமான மிருகங்கள் நிறைதிருக்கும். அவர்கள் இருவரும் அறியாத ஓரிடத்தில் எனக்குள் இரு கதையுலகங்களும் ஒன்றாகி இருப்பதை இப்போது காண்கிறேன். அந்தக்கதையுலகமே நான் எழுதுவது என்று தோன்றுகிறது

எங்கள் வீட்டுமுன் ஒரண்டு செந்தென்னைகள் நின்றன. அவற்றின் காய்கள் இளநீருக்கு மட்டுமே பயன்படும். காயில் உள்ள இனிப்பு காரணமாக குழம்புக்கு அரைக்கமுடியாது. அவற்றை எங்கள்பக்கம் கௌரிபாத்ரம் என்று அழைப்பார்கள். அது ஏன் என்று பாட்டியிடம் கேட்டேன். “முன்பு பார்வதிக்கு பரமேஸ்வரன் கொடுத்தது அது. கௌரியால் கொடுக்கப்பட்டதனால் அந்தப்பெயர் என்றாள் பாட்டி. நான் கதைக்காக உடனே அவளுடைய பெரிய வயிற்றை ஒட்டி படுத்துக்கொண்டேன்.

பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது கூடவே பல மங்கலப்பொருட்கள் எழுந்து வந்தன. காமதேனு என்ற தெய்வப்பசுவும். கல்ப விருட்சம் என்ற பொன்னிறமான தென்னை மரமும் அவற்றில் முக்கியமானவை. அவற்றை தேவர்களின் அரசனான இந்திரன் உரிமையாக்கிக்கொண்டான். அவனுடைய தோட்டத்தில் அவை வளர்ந்தன. மூப்பும் குறைவும் இல்லாதவை அவை. வேரின்றி காய்ப்பது கல்ப விருட்சம். கன்றில்லாமல் கறப்பது காமதேனு.

ஒருநாள் பார்வதியும் பரமேஸ்வரனும் ஒரு வைதிகனாகவும் அவன் மனைவியாகவும் மாறி ஒரு காட்டுக்குள் காதலில் ஈடுபட்டிருந்தபோது தேவி இனிய பானம் எதையாவது குடிக்க விரும்பினார். சிவன் அந்தக்காட்டில் இருந்த அத்தனை தென்னைகளையும் தேர்ந்து நோக்கி மிகச்சிறந்த இளநீரை வெட்டிக்கொண்டு வந்து அவளுக்குக் கொடுத்தார். அதை அருந்திய கௌரி சுவையாக இல்லை என்று சொல்லிவிட்டாள்.

அதற்கு என்ன காரணம் என்று சிவன் நோக்கினார். ஒவ்வொரு தென்னையின் அடியிலும் ஒரு மனிதனாவது புதைக்கப்பட்டிருந்தான். அல்லது அவன் சாம்பல் அங்கே கலந்திருந்தது. மனிதனர்கள் வாழ்ந்தபோது அடைந்த துன்பங்கள் அவனர்கள் உடலில் உப்பாக மாறும். அவற்றில் சிறிய அளவிலான உப்பு மட்டும்தான் கண்ணீராக வழிந்தது. எஞ்சியதெல்லாம் குருதியில் கலந்திருந்தது அந்த உப்பு கலந்துதான் காய்கள் கரித்தன. அந்தக் கரிப்பு கொஞ்சமேனும் இல்லாத ஒரு காயும், ஒரு கனியும் மண் மீது இல்லை என உணர்ந்தார் இறைவன்

ஆகவே அங்கிருந்த அழகிய பசுக்களில் ஒன்றின் பாலைக்கறந்து கொண்டு வந்து கொடுத்தார். அதில் குருதிவாசனை வீசுவதாகச் சொன்னாள் தேவி. ஏனென்றால் எந்தப்பசுவும் மானுடருக்காகச் சுரப்பதில்லை. தன் குட்டிக்காகவே சுரக்கிறது. அந்தப்பாலை மானுடர் கவரும்போது அது கண்ணீர் வடிக்கிறது என்று சிவன் அறிந்தார்’

ஆகவே அவர் விண்ணுலகில் வாழ்ந்த இந்திரனை அழைத்தார். கல்பவிருட்சத்தையும் காமதேனுவையும் மண்ணுக்கு கொண்டுவரும்படி ஆணையிட்டார். அவை விண்ணுலக தெய்வங்கள், மண்ணுக்கு வரமுடியாதவை என்று இந்திரன் சொன்னார். அவ்வண்ணமென்றல் அவற்றின் நிழல் இங்கே விழட்டும் என்றார் சிவன். கல்ப விருட்சத்தின் நிழல் மண்ணில் விழுந்தது, அது ஒரு செந்நிறத்தென்னையாக ஆகியது. காமதேனுவின் நிழல் ஒரு நீர்நிலையில் விழுந்தது, அது வெண்ணிறமான உடலும் கரிய காம்புகளும் கொண்ட காராம்பசுவாக ஆகியது. இன்றும் அவையே மண்ணில் நீடிக்கின்றன. அவற்றில் கண்ணீர் ருசியோ குருதி வாசனையோ இருப்பதில்லை

தேவி அருந்திய கலம் என்பதனால்தான் செவ்விளநீருக்கு கௌரி பாத்ரம் என்று பெயர் என்று பாட்டி சொன்னாள். நான் உடனே வெளியே சென்று செவ்விளநீரை நோக்கினேன். என் வீட்டு முற்றத்தில் தேவருலக மரம் ஒன்று நிற்கிறது. பார்வதி தேவி அருந்திய இளநீர்! கௌரிபாத்ர இளநீரும் காராம்பசுவின் பாலும் மட்டுமே கோயிலில் தெய்வங்களுக்குப் படைக்கத்தக்கது என்று அப்போது புரிந்துகொண்டேன்

பின்னர் ஒருமுறை அதைப்பற்றி தங்கம்மாவிடம் பேசவேண்டியிருந்தது. எங்களுக்கு பன்னிரண்டு பனைமரங்கள் இருந்தன. அவற்றை குத்தகைக்கு விட்டிருந்தோம். தினமும் காலையில் பதநீர் கொண்டுவந்து தருவார் பனையேறி. தினம் குடித்து சலித்திருந்தமையால் நான் பதநீர் சற்றே சுவைமாறியிருந்தாலும் குடிப்பதில்லை. தங்கம்மா ‘குடிக்கவேணும் எஜமான், கல்பவிருச்சத்துக்க பாலுலல்லா?’ என்றாள். கல்பவிருட்சம் என்றால் தென்னை அல்லவா? என்றேன். ‘இல்ல, பனையாக்கும் கல்பவிருட்சம் என்றாள் தங்கம்மா

அது முற்றிலும் வேறு கதை. முன்பொருகாலத்தில் பெரும்பஞ்சம் வந்தது. பசி பொறுக்காமல் கல்லையும் மண்ணையும் தின்று மக்கள் செத்த பஞ்சம். எட்டு குழந்தைகளின் அன்னையாகிய ஏழைப்பெண் ஒருத்தி பிள்ளைகள் பசியால் துடிப்பது தாளாமல் சோற்றுக்கற்றாழையை அரைத்துக்கொடுத்தாள். அதுவும் வற்றி உலர்ந்த பின்னர் என்னசெய்வதென்று தெரியாமல் கண்ணீர் விட்டாள். குழந்தைகளின் பரிதவிப்பை தாளமுடியாமல் சாவதற்கே முடிவெடுத்தாள்

பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு காட்டுக்குள் சென்று அங்கே பாழடைந்து கிடந்த ஒரு கிணற்றுக்குள் ஒவ்வொரு குழந்தையாகத் தூக்கிப்போட்டாள். ‘எனக்கு யாருமில்லை, இருட்டே நீயே அடைக்கலம்’ என்று கூவி அழுதாள்.அவளுடைய கண்ணீரால் மார்புகள் நனைந்தன. தாகம் தாளாத குழந்தை ஒன்று அந்தக்கண்ணீரையே குடித்தது.

உண்மையில் அந்தக் கிணறு பாதாளநாகங்கள் பூமிக்குமேலே வருவதற்கான வாசல். அந்த பிரம்மாண்டமான பாம்புவளைக்குள் ஒவ்வொரு குழந்தையாகச் சென்று பாதாளத்திற்கு சென்று விழுந்தன. பாதாளநாகங்களின் அரசனான வாசுகியின் அரசவையில் அவை சென்று விழுந்தபோது அவன் அதிர்ச்சியுடன் பார்த்தான். கடைசியாக அன்னையும் வந்து விழுந்தாள்

பாதாளத்தின் அரசன் ஆயிரம் சுருள்களாக இருளுக்குள் பெரிய மலைபோலக் கிடந்தான். அவன் கண்கள் இரு நட்சத்திரங்கள் போல ஒளிவிட்டன. அவனைச்சுற்றி கோடிக்கணக்கான இருண்ட நாகங்கள் சுருண்டு நெளிந்தன. அவற்றின் கண்கள் மட்டும்நட்சத்திரங்களாகத் தெரிந்துகொண்டிருந்தன

புயல்போல சீறி, மின்னல் போல ஒளிவிட்ட நாக்கை பறக்கவிட்டு , இடிபோன்ற குரலில் அவளிடம் அவள் ஏன் அங்கே வந்தாள் என்று கேட்டான். அவள் பசியில் பட்டபாட்டை சொல்லி சாவதற்காக வந்ததாகச் சொன்னாள். அவள் அழுகையைக் கண்டு நாகராஜன் மனமிரங்கினான். ‘நீ என்னை அடைக்கலமாக எண்ணி வந்தவள். ஆகவே உனக்கு வேண்டியதைச் செகிறேன். ஆயிரம் கலம் நிறைய பொன்னை தருகிறேன், நீயும் உன் பிள்ளைகளும் போய் மகிழ்ச்சியாக வாழுங்கள்’ என்றான் வாசுகி

‘என் அண்டைவீட்டுக்குழந்தைகள் பட்டினியால் சாகும்போது நான் மட்டும் எப்படி சாப்பிடுவேன். உன் செல்வம் எனக்கு வேண்டியதில்லை’ என்றாள் அன்னை. ‘சரி உன் ஊரே சாப்பிடும்படி பொன் அளிக்கிறேன்’ என்று வாசுகி சொன்னாள். ‘நாகராஜனே, மண்ணில் ஒரே ஒரு குழந்தை பசியால் சாகக்கண்டால் கூட முலைசுரக்கும் அன்னையாகிய என்னால் மகிழ்ச்சியாக ஒருவாய் சோறு உண்ண முடியாது. எனக்கு உலகமே தேவையில்லை. இனி நான் இங்கே இந்த இருளிலேயே இருக்கிறேன்’ என்று அன்னை சொன்னாள்

‘சரி, உங்கள் அனைவருக்கும் இனி பஞ்சமே வராது அருள்புரிகிறேன்’ என்று வாசுகி சொன்னான். அவனுடைய ஆணைப்படி கராளன் கரியன் என்ற கன்னங்கரிய பாதாள நாகங்கள் இரண்டு மண்ணுக்கு வந்தன. கராளன் ஒரு பனைமரமாக ஆனான். கரியன் எருமையாக ஆனான். எருமை குப்பையை உண்டு அமுதாகிய பாலை அளித்தது. பனை புளியமரம் கருகும் கோடையிலும் வற்றாது சுரந்துகொண்டிருந்தது. அதன் காயும் கனியும் வேரும் உணவாயின. அதன் ஓலையும் தடியும் பணமாகின. எருமையும் பனையும் இருக்கு வரை மண்ணில் பஞ்சமே வராது என்று அனைவரும் அறிந்தனர்

ஏழைகளுக்கான தெய்வம் மண்ணுக்கு அடியில் வாழ்கிறது என்று அன்று அறிந்துகொண்டேன். வெண்ணிறமான தெய்வங்களுக்கு சமானமாகவே கறுப்புநிற தெய்வங்களும் உண்டு என்றும். அந்த வயதில் அவ்வறிதல் அளித்த கொந்தளிப்புகளின் வழியாக நெடுந்தூரம் சென்றேன். புனைகதைகள் எழுத தொடங்கினேன். இலக்கியவாதி ஆனேன்.

இன்று தெரிகிறது, எந்தக்கதைக்கும் ஒரு கறுப்பு வடிவமும் உண்டு என்று. அதிகமும் கேட்கப்படாதது அது. ஆனால் ஓயாமல் சொல்லப்படுவது. அதையும் சொல்லாமல் எந்தக்கதையும் முழுமையாவதில்லை.

ஜன்னல் இருமாத இதழில் எழுதிவரும் தொடர்

முந்தைய கட்டுரைதாயார்பாதம், அறம்- அஸ்வத்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 40