தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் : 2 – பேய் சொன்ன பேருண்மை

நான் வாழும் இடம் நாகர்கோவிலின் புறநகரான பார்வதிபுரம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி கள்ளியங்காடு என்று அழைக்கப்பட்டது. இதன் அருகே இருக்கும் கணியாகுளம் என்ற விவசாய கிராமம் தவிர இப்பகுதியில் மக்கள் வாழ்க்கை அன்று அனேகமாக இல்லை. பேச்சிப்பாறை அணைகட்டப்பட்டு இவ்வழியாக அதன் கால்வாய் வந்தபோது இந்நிலமெல்லாம் வயலாகியது. நகரம் வளர்ந்தபோது புறநகராகியது

கள்ளியங்காடு அக்காலம் முதல் மனிதர் அணுக முடியாத ஒரு பகுதியாகவே இருந்தது. ஆனால் கள்ளியங்காட்டுக்கு அதற்கும் முன்னரே ஒரு நீண்ட வரலாறு உண்டு. அனேகமாக ஆயிரம் வருடங்களுக்கு முன்னாலே அது புகழ் பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் கள்ளியங்காட்டின் நடுவே ஒரு சிறிய ஆலயம் உள்ளது. கள்ளியங்காட்டு நீலி என்று அழைக்கப்படும் ஒரு தெய்வத்தின் கோயில். தெய்வம் என்றால் படைத்துக் காத்து அருளும் விண் வாழும் தெய்வமல்ல. மண்ணில் காலூன்றி நின்று குரோதமும் சினமும் கொண்டு மனிதரைப் பார்க்கும் தெய்வம். நாட்டார் மரபில் அதைப் பேய்த் தெய்வங்கள் என்றும் நீத்தார் தெய்வங்கள் என்றும் சொல்வார்கள்.

கள்ளியங்காட்டு நீலியின் கதை பலவடிவில் தமிழகத்தில் பலர் அறிந்தது தான். அவள் குமரி மாவட்டத்தில் தலக்குளம் என்ற ஊரில்’ ஒரு நிலப்பிரபுவுக்கு மகளாகப் பிறந்தாள். பேரழகி. நற்குணங்கள் கொண்ட பெண். அவளுக்கு ஆயிரம் பொன் நகை செய்து வைத்திருந்தார் அவளுடைய தந்தை. தனக்கு நிகரான பெரும் செல்வன் ஒருவனுக்கே அவளை மணமுடித்துக் கொடுப்பதாக தந்தை எண்ணமிட்டிருந்தார். ‘முற்றத்து வெயில் முகத்தில் படாமல்’ அவளைத் தந்தை வளர்த்ததாக நாட்டுப் புறப்பாடல் சொல்கிறது.

அழகி, செல்வம் கொண்டவள், நற்குணம் கொண்டவள் என்பதே ஏதோ ஒரு வகையில் எதோ சில சக்திகளுக்கான ஒரு சீண்டல், ஒரு அழைப்பு என்று தோன்றுகிறது. அவளைத் தேடி பாண்டிய நாட்டிலிருந்து ஒருவன் வந்தான். பேரழகன். அதைவிட இனிய சொற்களைச் சொல்வதில் வல்லவன். அவள் தந்தையிடம் பட்டு விற்பதற்காக அவன் வந்தான். பட்டு தேர்வு செய்வதற்காக அவள் அவனருகே வந்தாள். அவளுடைய இனிய சொற்களால், ஒளி விடும் அழகிய கண்களால், அண்மையை அறிவிக்கத்தெரிந்த புன்னகையால் கவரப்பட்டான். பட்டு விற்கும்போது அவள் கையை அவன் தொட்டான். அது காதலாக மலர்ந்தது

அவனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அவள் சொல்ல தந்தை அவனிடம் குலமும் கொடி வழியும் கேட்டார். அவன் தன்னை பூம்புகார் நகரத்துப் பெரு வணிகன் என்று சொன்னான். அதற்குச் சான்றாக ஒரு முத்திரை மோதிரத்தையும் காட்டினான்.மனமகிழ்ந்த தந்தை அவனை தன் இல்லத்துக்கு அழைத்து உபசாரங்கள் செய்து மகளை மணமுடித்துக் கொடுத்தார். ஏழு நிலைப் பந்தலில் பொன்னாலான மாவிலைத் தோரணங்கள் கட்டி பட்டு விதானம் விரித்த மணப்பந்தலில் அமர்த்தி மகளைக் கைப்பிடித்துக் கொடுத்தார் தந்தை.

அன்றில்கள் போலவும், இணை மான்கள் போலவும், துதிக்கை கோர்த்த யானைகள் போலவும் அவர்கள் காதல் கொண்டு மகிழ்ந்திருந்தனர். அதன் விளைவாக அவள் கருவுற்றாள். நிறை சூலி . நிறை மாத மனைவியை தன்னுடைய அன்னைக்குக் காட்டி அருள் பெற்று குலதெய்வத்தின் முன்னால் நிறுத்தி சில சடங்குகள் செய்ய வேண்டுமென்று அவன் சொன்னான். நெற்றி வகிடில் மங்கல மஞ்சளிடுவது, தாலி பெருக்கிப் போடுவது போன்ற சில சடங்குகள் அவர் குலத்தில் இருந்தன.. தந்தை அதற்கு ஆவன செய்தார். அவளுடைய அனைத்து நகைகளுடனும் மற்ற செல்வங்களுடனும் சீர்வரிசைகளையும் ஏற்றி அவளையும் ஒரு வண்டியில் உடன் அனுப்பி வைத்தார். அவ்வண்டியில் மனைவியை அமரச் செய்து பின்னால் நடந்து அவன் வந்தான்.

அவர்கள் பத்மனாபபுரம் வழியாக வில்லுக்குறி கடந்த போது அந்தி ஆகிவிட்டது. இரவில் அவ்வழியே எவரும் செல்லமாட்டார்கள் என அவர்கள் அறியவில்லை. கள்ளியங்காடு வந்தபோது வானில் முழுநிலவு எழுந்தது. பயன அலுப்பால் அவள் பெரும் தாகம் கொண்டாள். தண்ணீர் வேண்டுமென்று கேட்டாள். கள்ளியங்காடோ ஒரு துளி நீர் கொண்ட வறண்ட கூழாங்கற்கள் பரவிய வெற்று நிலம். அவளைக் கைபிடித்து இறக்கி இங்கே அமர்க என்று சொன்னான். அங்கே ஒரு மாபெரும் கள்ளிச்செடி ஒற்றைக்காலில் நூறு கிளை விரித்து நின்றது. அதன் நிழலில் இருந்த ஒரு பாறையில் அவளைச் சற்றுப் படுக்க வைத்தான். ‘நீ ஓய்வெடு நான் சென்று நீரள்ளி வருகிறேன்’ என்றான். நாகம்போல் நா தவிக்கும் தாகத்துடன் அவள் அமர்ந்திருக்க அவன் அவளை விட்டு விலகிச் சென்றான்.

நெடு நேரம் கழித்து மெதுவாக அவன் வந்து பார்க்கும் போது உடலெங்கும் பற்றி எரிந்த தாகத்தால் அவள் களைத்து அப்பாறையில் தலை சாய்த்து படுத்திருந்தாள். பூனைபோல் காலடி வைத்து அணுகி அருகிலிருந்த பெரிய பாறாங்கல் ஒன்றைத்தூக்கி அவள் தலையில் ஓங்கிப் போட்டான். தலை சிதைந்து துடித்து இறந்தபோது வலி தாளாமல் துடித்த அவளுடைய தொடைகளைப் பிளந்து கொண்டு வயிற்றுக் றகுருதி வழிய அந்தக் குழந்தை வெளியே வந்தது விழுந்தது. தன் குழந்தையை இரு கைகளாலும் பற்றிக் கொண்டு ” கள்ளி! நீயே சாட்சி” என்று சொல்லி அவள் உயிர் துறந்தாள். அவளுடைய நகைகள் அனைத்தையும் கழற்றி எடுத்துக் கொண்டு அவன் அந்த மாட்டு வண்டியில் ஏறி கள்ளியங்காட்டைக் கடந்து பாண்டி நாட்டுக்குள் நுழைந்தான்.

உண்மையில் அவன் பாண்டி நாட்டின் புகழ் பெற்ற பெரும் திருடர்களில் ஒருவன். அந்த மோதிரம் கூட திருடப்பட்டதுதான். அவள் உடல் அங்கே கிடந்து மட்கி எலும்பாகியது. வானைநோக்கி சிரித்துக்கிடந்தது மண்டை ஓடு. ஆனால் அவளுடைய தாகம் மட்டும் உடலில் இருந்து தனியாக பிரிந்து எழுந்தது.

அடுத்த பௌர்ணமியில் அவ்வழியாக ஒரு வணிகன் வண்டியிலே சென்றான். அப்போது நிலவொளியில் எண்ணை பூசப்பட்டது போல ஒளிவிட்ட கள்ளிச் செடிகளின் நடுவே ஒரு பெண் இடையில் தன் குழந்தையுடன் நிற்பதைக் கண்டான். பேரழகி. ஒளிவிடும் அழகிய கண்கள் கொண்டவள். அவள் கூந்தல் சரிந்து தொடைக்கும் கீழே அருவி போலக் கொட்டி நெளிந்து கொண்டிருந்தது. குழந்தை சிரித்தபடி தன் வாய்க்குள் கையை விட்டு சப்பிக் கொண்டிருந்தது. இவ்வேளையில் இவ்வளவு அழகிய பெண் தனியாக கள்ளியங்காட்டில் நிற்பதெப்படி என்று அந்த வணிகர் வியந்தார்.

அவள் கையை நீட்டி ”வணிகரே! வண்டியை நிறுத்துங்கள்” என்று கூவினாள். வண்டியை நிறுத்தும்படி வண்டிக்காரனிடம் சொல்லி வணிகர் தலையை வெளியே நீட்டினார். அவள் அருகே வந்து ”வணிகரே! வழி தவறி இக்காட்டிலே நிற்கிறேன். தங்கள் வண்டியின் பின்னே வந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். என்னை அருகிருக்கும் ஊருக்குக் கொண்டு சென்று விட்டுவிடுங்கள்” என்றாள். ”வாம்மா. உனக்கு நான் வழி அளிக்கிறேன்” என்றார் வணிகர். இந்த அழகிய பெண்ணை காட்டைக் கடப்பதற்குள் அடைந்துவிட வேண்டும் என்று அவர் மனம் கணக்குப் போட்டது.

அவளை வண்டியில் ஏறும்படி கேட்டார். இல்லை வண்டியில் நான் ஏறுவதில்லை பின்னால் நடந்து வருகிறேன் என்று சொல்லிவிட்டாள். திரும்பத் திரும்ப வண்டியில் ஏறும்படி கேட்டுக் கொண்டும்கூட அவள் வண்டியில் ஏறவில்லை. இடையில் குழந்தையுடன் நடந்து வந்தாள். சற்றுதூரம் வந்தவுடன் அவள் வெற்றிலை ஒன்றை இடையிலிருந்து எடுத்து “இந்தத் வெற்றிலைக்கு சற்று சுண்ணாம்பு கிடைக்குமா?” என்று அவரிடம் கேட்டாள். அது பெண் ஆணிடம் பாலுறவுக்காக அழைக்கும் ஒரு குழூக்குறிச் சொல். அவளுடைய கண்களில் இருந்த ஒளியையும் இதழில் இருந்த புன்னகையையும் பார்த்து வணிகர் கிளர்ச்சியடைந்தார். உடனே தன் வெற்றிலைச் செல்லத்தை திறந்து சுட்டு விரலை அதற்குள் விட்டு சுண்ணாம்பை எடுத்து அவளிடம் நீட்டினார்.

அந்த விரலை தன் கைகளால் பற்றி இழுத்து வாயில் வைத்து அவள் கடித்தாள். தளிர் வெண்டைக்காயைக் கடித்து முறிப்பது போல அந்த விரலைக் கவ்வி மென்றாள். அவர் அலறியபடி வெளியே விழ அவரை அப்படியே தூக்கிக்கொண்டு பறந்து சென்று கள்ளிச் செடியின் கீழிருந்த அந்தப் பாறையில் போட்டு அவர் மேல் ஏறிப் படர்ந்து அவர் கழுத்தை கவ்வி மாம்பழச் சாறை உறிஞ்சுவது போல அவருடலில் இருந்த குருதியை அனைத்தையும் உறிஞ்சி உண்டாள்.
மறுநாள் அவர்கள் கள்ளியங்காட்டைத் தேடி வந்தபோது ஓநாய்க்கூட்டம் உண்டு மிச்சம் விட்ட எலும்புகள் போல ஒரு சதை கூட இல்லாமல் வெள்ளை வெளேரென்று நக்கி உண்ணப்பட்ட எலும்புகளும் மண்டை ஓடுகளும் மட்டும் அந்தப் பாறைமேல் கிடந்தன. அத்துடன் அவளைக் கள்ளியங்காட்டு நீலி என்று அனைவரும் அழைக்க ஆரம்பித்தார்கள். அவ்வழியே செல்லக்கூடிய அத்தனை வணிகர்களிடம் அவள் சுண்ணாம்பு கிடைக்குமா என்று கேட்பதும் காமம் கொண்டு அவர்கள் கை நீட்டினால் அவர்களைக் கொன்று உண்பதும் நடந்தது.

நெடு நாளைக்குப்பின் தன் இளமனைவியுடன் கள்ளியங்காடு வழியாக அந்த வணிகன் சென்றான். அவனுக்கு அங்கு ஒரு கொலை செய்தது மறந்துவிட்டது. கள்ளியங்காட்டு நீலியிடம் இருந்து கவர்ந்த பணத்தால் மதுரைக்குச் சென்று வணிகம் செய்து பெரும் செல்வம் ஈட்டி பெரிய வணிகனாக மாறியிருந்தான். பொன்னிழைத்த பூண்வைத்த வண்டியில் அவன் வந்தான். உடன் இருந்தவள் அவன் மனைவி. அவள் நிறை சூலியாக இருந்தாள்.

மாட்டு வண்டி கள்ளியங்காட்டுக்குள் நுழைந்தபோது சாலையோரத்தில் நின்றிருந்த கள்ளியங்காட்டு நீலியைக் கண்டான். எங்கோ பார்த்தது போல அவனுக்குத் தோன்றியது. அவனுடைய காமம் விழித்துக் கொண்டது. அருகே வந்தவுடன் இறங்கி அவளிடம் ‘ பெண்ணே நீ யார்? ‘ என்று கேட்டான். அவள் தன் தந்தை தாய் வணிகர்கள் பேரைச் சொல்லி அவர்களுடைய இரண்டாவது மகள் என்று சொன்னாள். அவனுக்கு அவருடைய முதல் மகளைத் தான் மணந்ததும் கொன்றதும் நினைவுக்கு வந்தது. அவளைவிட பேரழகி இவள் என்று நினைத்தான். வண்டிக்குள் அவனுடைய மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள்.

வண்டியைச் சற்று ஒதுக்கி கள்ளியங்காட்டில் நிறுத்திவிட்டு இந்தப் பெண்ணிடம் சற்றுக் காமம் கொண்டாடி வந்தாலென்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. “நீ ஏன் இங்கு நிற்கிறாய் ?” என்றான். “என் கணவர் என்னை மாட்டு வண்டியில் அழைத்து வந்தார் இங்கு இறக்கி விட்டு விட்டுச் சென்றார் திரும்பி வரவில்லை. அவரை ஓநாயோ புலியோ பிடித்திருக்கலாமென்று நினைக்கிறேன். எனக்கு வேறு வழியில்லை” என்றாள். அவன் “நான் உன் தந்தையிடம் சேர்ப்பிக்கிறேன். உன் தந்தையை எனக்கு நன்றாகத்தெரியும்” என்றான்.

அவள் “மறைந்து போன என் அக்காவைத் தெரியுமா?” என்று கேட்டாள் “அவளை ஒரு பாண்டி நாட்டு வணிகன் திருமணம் செய்து கொண்டு சென்றான் என்று” என் தந்தை சொல்லியிருக்கிறார் என்று சொன்னாள். அவள் கண்களில் மின்னிய வஞ்சத்தை அவன் கவனிக்கவில்லை. “தெரியும் என் தம்பிதான் அவளைத் திருமணம் செய்து கொண்டு பாண்டி நாட்டுக்குக் கொண்டு சென்றான், இப்போது அவர்கள் அங்கே இன்பமாக வாழ்கிறார்கள் அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது” என்று அவன் சொன்னான்.
கள்ளிப் புதர்கள் வழியாக அவனை அவள் அழைத்துச் சென்றான் நிறை நிலாவின் ஒளியில் கள்ளியின் நிழல்கள் கூடக் கூர்மையடைந்திருந்தன. ஆனால் தன் மேல் ஒரு முள் கூடப் படாமல் அவள் சென்றாள். “உன் மேல முட்கள் படுவதில்லையா ?”என்று அவன் கேட்டான். “முள்படாத உடல்கொண்டவள் நான்” என்று சொல்லி சிரித்தாள்

அந்தப் பாறை அருகே சென்றபோது அவனுக்குச் சற்று ஐயமேற்பட்டது. ஏனென்றால் அவன் கனவில் திரும்பத்திரும்ப வந்து கொண்டிருந்த பாறை அது. அவள் அந்தக் கள்ளிச் செடியை நோக்கி செல்வதைக் கண்டான்.பயந்து திரும்பிவிடலாம் என்று நினைத்தால் அவனுடைய கால்கள் இரும்பு போல கனமாக மாறி அசைக்க முடியாதவையாக இருந்தன. “இந்தக் கள்ளியைத் தெரியுமா?” என்று அவள் கேட்டாள். “”தெரியும் என்று அவன் சொன்னான். “இது சொன்ன சாட்சியைத் தெரியுமா ?”என்று கேட்டாள். அவன் “தெரியும்” என்று நடுங்கியபடிச் சொன்னான்

ஒரு பெரிய சிரிப்பொலி கேட்டது. கூடவே ஒரு குழந்தை அழும் ஒலியும் இணைந்து கொண்டது. அவன் பார்த்தபோது அவள் அந்தக் கள்ளி மரத்தருகே இன்னொரு கள்ளி மரம் போல நின்றிருந்தாள். கள்ளிச் செடியில் கிளை முளைப்பது போல அவள் உடலில் இருந்து கைகள் எழுந்து கொண்டே இருந்தன ஆயிரம் கைகள். அவன் அலறியபடி ஓட முயல்வதற்குள் அவள் அவனைப் பற்றிக் கொண்டாள்.

சிலந்தி இரையைக்கொண்டு செல்வது போல அவனை அள்ளி எடுத்து வானத்தில் கொண்டு சென்றாள். அவன் தலையை இளநீர் உடைப்பது போல உடைத்து அவன் மூளையை உண்டாள். அவன் உடலைக் கிழித்து அவன் ரத்தத்தை தன் தலையில் கொட்டி நீராடினாள். அவன் உடலில் இருந்த நிணத்தை அள்ளி தன் கூந்தலில் இட்டு நீவி குழல் முடித்தாள். அவனை உண்டு செரித்தபின் அவ்வெலும்புகளை தன் காதில் குழையாக அணிந்து கொண்டாள். அவன் மண்டையோட்டை அவன் தோலில் கோர்த்து தன் கழுத்தில் அணிகளாக அணிந்து கொண்டாள்.

கள்ளியங்காட்டு நீலியின் கதையை எனது பாட்டி அம்மா என வெவ்வேறு வடிவில் வெவ்வேறு பேர் சொல்லியிருக்கிறார்கள். கள்ளிச் செடிகளின் மென்பரப்பில் வழியும் ரத்தத்தை கூரந்த முட்களின் நுனியில் குன்றி மணி போல உருண்டு நிற்கும் துளிகளை கனவில் பார்த்து பயந்து எழுந்திருக்கிறேன்.

பிறகுதான் தெரிந்து கொண்டேன். கள்ளியங்காட்டு நீலியின் கதை சிறிய சிறிய மாற்றங்களுடன் தமிழகம் முழுக்க இருந்து கொண்டிருக்கிறது. தஞ்சாவூர் பகுதியில் பழையனூர் நீலி கதை என்று அதைச் சொல்வார்கள். இந்தக் கதைக்கு பிரபலமான பத்து வடிவங்கள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். மிகத் தொன்மையான கதை நீலகேசியின் கதை. தமிழகத்தின் ஐந்து பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி. ஐந்து குறுங்காப்பியங்களாகிய உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, ஆகியவற்றில் நீலகேசி ஐந்தாவது

நீலகேசியின் கதை கள்ளியங்காட்டு நீலியின் இதே கதைதான். பாஞ்சால நாட்டில் உள்ள புண்டவர்தனம் என்ற ஊரில் சுடுகாட்டில் இடப்படும் உயிர்ப்பலியை முனிச்சந்திரன் என்னும் சமண ஞானி தடுத்தார். அதனால் கோபம் கொண்ட காளி பழையனூர் நீலியை அவர் மேல் ஏவினாள். நீலி அவரை வழிமறித்தாள். தன் அழகுடல் காட்டி, இனிய சொல்காட்டி ,நாணம் காட்டி அவரை அழைத்தாள். ஆனால் காமத்தை முழுமையாக வென்ற அவரை அவளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவள் அவரை பயமுறுத்த பார்த்தாள். கள்ளி மரம்போல ஆயிரம் கைகளைக் கொண்டு எழுந்து அவரை அச்சுறுத்தினாள். அவர் பயப்படவுமில்லை.

முனிசந்திரர் தன்னுடைய இனிய குரலால் அவளை நோக்கி “அருகரின் நாமத்தைச் சொல்”. இந்த அகிம்சைச் செய்தியைக் கேட்டு அவள் அடங்கி அழகிய சின்னப் பெண்ணாக மாறி அவள் அவர் முன் நின்றாள். அந்த இளம் சிறுமியின் கைகளைத் தொட்டு வாழ்த்தி அவர் அவளைத் தன்னிடம் சேர்த்துக் கொண்டார். சமண முனிவரின் மாணவியாக நீலி சேர்ந்தாள் அவளைத் தன் குகைக்கு அழைத்துச் சென்றார் அவர். அங்கு அவளுக்கு சமண ஞானம் அனைத்தையும் கற்பித்தார்

அதன்பிறகு அந்த நீலகேசி ஒரு சமணத்துறவியாக மாறி அங்கிருந்து கிளம்பிச் சென்று மதுரையிலும் புகாரிலும் காஞ்சியிலும் சென்று அங்கிருந்த பிற மதத்தைச் சேர்ந்த அனைத்து சமயக் குரவரிடமும் சமணக் கருத்துகளை முன் வைத்து விவாதித்து வென்றதைப் பற்றித்தான் நீலகேசி என்ற இந்தக் காப்பியம் சொல்கிறது.

இந்த முரண்பாடு மிகக்கூர்மையாக கவனிக்கத் தக்கது. கொலைத் தெய்வம் பேரருள் கொண்ட தெய்வமாவதும், பேரருள் கொண்ட தெய்வம் கையில் கொலஆயுதத்துடன் அமர்ந்திருப்பதும் இந்தியாவுடைய பண்பாட்டில் திரும்பத் திரும்ப நாம் காணக்கூடியதுதான்.

இந்து மதத்தில் இரண்டு அடுக்குகள் உண்டு. புராண கதை மரபு ஒரு பெரிய அடுக்கு. அதற்கு அடியில் நாட்டுப்புறக் கதைகளின் ஒரு அடுக்கு. வெள்ளை கறுப்பு பக்கங்கள் என அவற்றை முன்பு சொன்னேன். சமணம், பௌத்தம் ஆகியவை நாட்டார் தெய்வங்களின் கதைகளை எடுத்து தங்கள் தெய்வங்களாக ஆக்கின. அப்படி எடுத்துக் கொண்ட தெய்வங்கள் தான் கண்ணகியும் குண்டலகேசியும்

நம் நாட்டுப்புறதெய்வங்கள் கணிசமானவை அறுகொலை தெய்வங்கள்’ .அவை இயற்கைக்கு மாறான இறப்பை அடைந்தவை. வஞ்சிக்கப்பட்டவை, தியாகம் செய்தவை, அகாலமரணம் அடைந்தவை. அவை தங்கள் சீற்றத்தால் தெய்வங்களாகின்றன. ரத்தபலி கொள்கின்றன. அத்தகைய் தெய்வங்களில் ஒன்றிலிருந்து அகிம்சையைப் போதிக்கக்கூடிய மெய்ஞானத்தை தன் மணிமுடியாக சூடிய ஒரு தெய்வமாக எழுந்து வந்ததை நாம் நீலகேசியிலே பார்க்கிறோம். அதாவது புராணத்தின் கறுப்பு பக்கத்தில் இருந்து வெள்ளைப் பக்கத்துக்கு அந்த தெய்வம் சென்று சேர்கிறது. இந்த ஊடாட்டத்தை அறிவதுதான் இந்து மதத்தையும் அதனுடன் சமணமும் பௌத்தமும் கொண்ட உறவையும் புரிந்துகொள்வதற்கான முதல்படி.

ஜன்னல் மாதமிருமுறை இதழில் எழுதும் தொடர்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 42
அடுத்த கட்டுரைதருணம்