‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 41

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி – 7

கங்கையின் காற்றில் படகின் பாய்கள் கொடிமரத்தில் அறையும் ஒலி கேட்டது. அது அலையோசை என நெடுநேரம் திருஷ்டத்யும்னன் எண்ணிக்கொண்டிருந்தான். படகுகள் பொறுமையிழந்து நின்றிருப்பதுபோல தோன்றியது. பலராமர் “இளையோனே, நாம் போருக்கெழுகிறோம் என்றால் நல்ல உணவுக்குப்பின் செல்வதல்லவா நன்று?” என்றார். “இது போரே அல்ல. அரைநாழிகைகூட இந்த ஊர் நம் முன் நிற்க முடியாது” என்றான் திருஷ்டத்யும்னன். இளைய யாதவர் “அரைநாழிகை நேரம் போரிடுவதற்கும் மூத்தவருக்கு உணவு வேண்டுமே” என்றார். பலராமர் உரக்க சிரித்து “நான் கதாயுதம் ஏந்துபவன். இதற்கும் சேர்த்து நான் உண்ணவேண்டும்” என்றார்.

வெளியே கொம்புகளும் முரசுகளும் இணைந்து ஒலித்தன. வாசலில் வந்து நின்ற படைத்தலைவன் “அரசே, கிருஷ்ணவபுஸின் படகுகள் துறையிலிருந்து எழுகின்றன” என்றான். நற்செய்தி ஒன்றை கேட்டதுபோல புன்னகை மலர்ந்த முகத்துடன் “முழுதாக அழியுங்கள்” என்றார் இளைய யாதவர். “அவ்வண்ணமே” என்று சொல்லி தலைவணங்கி படைத்தலைவன் வெளியேறினான். பலராமர் “ஆக, நெடுநாட்களுக்குப்பின் ஒரு போர். இளையோனே, நான் உண்மையில் போரை விரும்பவில்லை. எதன்பொருட்டென்றாலும் மானுடர் இறப்பது எனக்கு உகப்பதல்ல” என்றார்.

“போரின்றி படைக்கலங்களுக்கு என்ன பொருள் மூத்தவரே? படைக்கலங்கள் இல்லாமல் நம் தோள்களுக்கு என்ன பொருள்?” என்ற திருஷ்டத்யும்னன் “எனக்கு போரில்லாமலிருக்கும் பொழுதுகள் உகந்தவை அல்ல. அப்போது காயோ மலரோ எழாத வெற்றுமரமென என்னை உணர்வேன்” என்றபடி தன் வில்லையும் அம்பறாத்தூணியையும் எடுத்துக்கொண்டு வெளியே சென்றான். அவனை நோக்கி வந்த ஏவலனிடம் “என் அம்பறாத்தூணியை நிறைத்துக் கொடுங்கள்… விரைவு” என்றபடி கலத்தின் அணைச்சுவர் விளிம்பை நோக்கி சென்றான்.

தொலைவில் கிருஷ்ணவபுஸின் இருபத்தைந்து காவல்படகுகள் பாய்களை விரித்து காற்றிலாடும் தோரணத்தின் வெண்மலர்கள் போல அலைகளில் எழுந்தமைந்து வந்துகொண்டிருந்தன. அவற்றின் அசைவிலேயே அப்படைவீரர்கள் அஞ்சியிருப்பது தெரிவதாக திருஷ்டத்யும்னன் எண்ணினான். தன் வில்லை நாணேற்றாமலேயே குறுக்காக வைத்துக் கொண்டு கண்களைச் சுருக்கி ஒளிபரவிய நீர்வெளியை நோக்கி நின்றான். யாதவர்களின் படகுப்படை மீன் வடிவிலிருந்து வில் வடிவாக மாறியது. பின் அதன் இரு ஓரங்கள் முன்னால் செல்ல பிறை வடிவம் கொண்டது. வீசப்பட்ட மீன்வலை என மெல்ல இறங்கி கிருஷ்ணவபுஸின் படைகளை சூழ்ந்தது.

கிருஷ்ணவபுஸின் படகுகள் யானையை அணுகும் நாய்களுக்குரிய உடலசைவு கொண்டிருந்தன. முதலில் வந்த படகு விரைவழிந்து பின்னால் வந்தவற்றுடன் சென்று இணைந்துகொண்டது. அவன் நோக்கி நிற்கையிலேயே யாதவப்படைகளிலிருந்து கிளம்பிய எரியம்புகள் உலை உமிழ் அனல் பொறிகளாக எழுந்து வானில் வளைந்து சததன்வாவின் படகுகளை நோக்கி இறங்கின. நூற்றுக்கணக்கான அரக்குருளைகளால் அத்தனை படகுகளும் ஒரே கணத்தில் பற்றிக்கொண்டு செந்தழல் எழுந்து புகைந்து எரிய நிலையழிந்தன.

அதிலிருந்த வீரர்கள் சிலர் நீரில் குதித்தனர். நீர்ப்பறவைகள் மொய்த்துக்கொள்வதுபோல வெண்ணிற இறகுகள் கொண்ட அம்புகள் அவர்களைச் சூழ்ந்து வீழ்த்தின. பாய்மரத்தின் மேலே இருந்த பரண்களிலிருந்து ஏவப்பட்ட நீண்ட அம்புகள் நீருக்குள்ளும் இறங்கி மூழ்கியவர்களையும் கொன்றன. நீரில் குமிழியிட்டு எழுந்த குருதி அனல் போல பரவி சுழித்து நீண்டு ஓடியது. அங்கே மீன்கூட்டங்கள் வந்து துள்ளிமறிந்தன.

சிறிய தடைகூட இல்லாமல் களிமண் அணையை நொறுக்கும் காட்டுவெள்ளம் என யாதவர்களின் படை கிருஷ்ணவபுஸை நெருங்கியது. அவர்களின் படகுகள் அனைத்தும் தீப்பற்றி எரிந்தபடி தூண்முறிந்த மாளிகைகள் போல மெல்ல சாய்ந்து சென்று விலாவில் நீர்விளிம்பு அலைத்து அலைத்து மேலேற படிப்படியாக மூழ்கின. அனைத்து வீரர்களும் அரை நாழிகை நேரத்தில் கொன்று வீழ்த்தப்பட்டனர். படகுகளின் அடிவளைவை பெரிய இரும்புத்தண்டுகளால் மோதி உடைத்து முழுமையாக நீரில் மூழ்கடித்தது யாதவப்படை. யாதவப் பெருங்கலங்கள் பாய் சுருக்கி யானைக்கூட்டங்கள் போல கிருஷ்ணவபுஸின் சிறிய துறைமுகத்தை நோக்கி சென்றன.

முதலில் சென்ற பெருங்கலத்தின் அளவுக்கே அந்தப் படகுத்துறை இருப்பதுபோல் தோன்றியது. அதிலிருந்து எழுந்த பெரிய எரியம்புகள் படகுத்துறையின் தூண்கள்மீதும் பலகைகளின் மேலும் விழுந்து பற்றி எரியவைத்தன. படகுத்துறையை சுற்றியிருந்த சிறுபடகுகளும் சுங்கக்கட்டடங்களும் பற்றி எரிய கொழுந்துகள் மேலெழுந்து பெரிய சிதை போல ஆகியது கிருஷ்ணவபுஸின் துறைமுகம். அங்கிருந்த படைவீரர்கள் அலறியபடி அப்பாலிருந்த உயிர்மரக்கோட்டையை நோக்கி ஓடும்போதே அம்புபட்டு விழுந்து துடிக்க அவர்கள் மேல் எரியும் தூண்கள் தழல் அலைக்க விழுந்தன.

கரையணுகிய யாதவப் படகு ஒன்று நாநீட்டி நடைபாதையை கிருஷ்ணவபுஸின் மரங்களடர்ந்த காட்டை இணைத்து அமைத்துக் கொண்டது. அப்படகுடன் இன்னொரு படகு நடைபாதையால் இணைய படகுகளாலான பெரிய பாலம் ஒன்று கங்கை மேல் நீண்டு அதன் அனைத்துக் கலங்களையும் இணைத்தது. அதனூடாக யாதவப் படைவீரர்கள் “விண்ணவன் வாழ்க! வெற்றிகொள் யாதவர் குலம் வாழ்க! மூத்தோர் வாழ்க! இளையோன் வெல்க!” என்ற போர்க்கூச்சலுடன் தோளிலேந்திய அம்புகளும் கையில் துடித்த நீண்ட விற்களுமாக குறடுகள் தடதடக்க இறங்கி நகருள் நுழைந்தனர். மலை இடிந்து சரிவதுபோல அவர்களின் குறடோசை நகர் மேல் பொழிந்தது.

நகருக்குள் பல இடங்களில் முரசுகள் முழங்க அது அஞ்சிப் பதுங்கி பின்கால்களில் அமர்ந்து தலைதாழ்த்தி உறுமும் கரடிபோல தெரிந்தது. தெருக்களில் மக்கள் சிதறி பல பக்கமும் ஓடும் ஒலிகள் கேட்டன. படகிலிருந்து பெரிய எரியம்புகளுடன் கூடிய விற்களுடன் இறங்கிய வில்லவர்கள் தரையில் வில்லை ஊன்றி நாணேற்றி எரியம்புகளை நகரம் நோக்கி தொடுத்தனர். சில கணங்களில் கிருஷ்ணவபுஸின் மரவீடுகள் அனைத்தும் பற்றிக் கொண்டு எரியத் தொடங்கின. புகை முகிலெனச் சுருண்டு எழுந்து கரிய மரம்போல குடைவிரித்து நின்றது.

மக்களின் கூச்சல்களும் புண்பட்டோரின் அலறல்களும் கொம்புகளும் முரசுகளும் ஒலிக்கும் ஓசைகளும் கலந்து எழுந்தன. யானைகளும் குதிரைகளும் அத்திரிகளும் முழுமையாக கைவிடப்பட்டன என அவை எழுப்பிய குரல்கள் காட்டின. அஞ்சி அலறிக்கொண்டிருந்த நகரின் முழக்கத்தின் நடுவே தானும் அஞ்சியதுபோல தளர்ந்து போர் முரசு ஒலித்துக் கொண்டிருந்தது. திருஷ்டத்யும்னன் தன் வாளை உருவியபடி படைகளின் முன்னால் விரைந்தோடி துறைமுகப்பிலிருந்து ஊருக்குள் செல்லும் சாலையை அடைந்தான்.

கிருஷ்ணவபுஸ் கங்கையை நோக்கி அமைந்த நான்கு அடுக்குகளாலான அரைவட்டச் சாலைகளால் ஆனது. முதல் அரைவட்டத்தின் நடுவே இருந்த மூன்றடுக்கு மாளிகை சததன்வாவின் அரண்மனை. இருபக்கமும் அவனுடைய மூன்று துணைவிகளின் சிறிய இல்லங்கள். பின்பகுதியில் யாதவர்களும் வணிகர்களும் குடியிருந்தனர். அரண்மனை முகப்பிலிருந்த பெரிய முற்றம் அங்காடியாகவும் படைப்பயிற்சிக் களமாகவும் இருந்தது. அங்கே எட்டு சிறிய தேர்களும் மூன்று பல்லக்குகளும் நின்றிருந்தன. ஊரைச் சுற்றி மரங்களை நெருக்கமாக நட்டு ஒன்றுடன் ஒன்று மூங்கில்களால் பிணைத்து முட்களைப் படர விட்டு இணைத்துக் கட்டி உருவாக்கிய வேலியே கோட்டை போல இருந்தது.

கோட்டை முகப்பில் இருந்த தடித்த மரக்கதவை இழுத்து மூடிவிடலாமென்று சிலர் முயல அவர்கள் அக்கணமே மதுராவின் வீரர்களின் அம்புகளால் கொல்லப்பட்டனர். ஆனால் மேலும் சிலர் ஓடிச்சென்று வடம் ஒன்றை வெட்ட மரங்களின் மேல் கட்டப்பட்டிருந்த முள்மூங்கில் கதவு ஓசையுடன் சரிந்து விழுந்து வாயிலை மூடிக்கொண்டது. எரியும் அரக்கில் முக்கிய அம்புகளுடன் உயர்ந்து தலைக்கு மேல் வளைந்த நிலைவிற்களுடன் உருவிய வாள்களுடன் யாதவ வீரர்கள் போர்க்குரல் எழுப்பியபடி நகருக்குள் நுழைந்தனர். அவர்களை எதிர்கொள்ள அங்கு வீரர் எவரும் இருக்கவில்லை. தப்பி ஓடிய மக்கள் உயரமற்ற மரச்சுவர்களுக்கு அப்பால் ஒளிந்து கொண்டு அச்சத்துடன் கூக்குரலிட்டனர்.

கோட்டையின் மூங்கில் கதவை படகில் இருந்து இறக்கிய தண்டு வண்டியால் மோதி சிதறடித்து உள்ளே நுழைந்த மதுராவின் படைகள் முன்னரே அங்கு சென்று விழுந்த எரிஅம்புகளால் பற்றிக்கொண்டு எரிந்து அனல் சூடி உடைந்து அடித்தளங்கள் மேல் அமர்ந்துகொண்டிருந்த இல்லங்களை நோக்கி முன்னேறின. குட்டிச் சுவர்களுக்குப் பின்னாலும் மரங்களுக்குப் பின்னாலும் நின்று அம்பு தொடுக்க முயன்ற கிருஷ்ணவபுஸின் யாதவர்கள் கொன்று வீழ்த்தப்பட்டனர். அங்கு எதிர்ப்பென ஏதும் இருக்காது என்று உணர்ந்ததுமே மதுராவின் படைகள் கள்வெறி கொள்ளத் துவங்கின. ஆடுமாடுகளும் குதிரைகளும்கூட அவர்களால் வெட்டி வீழ்த்தப்பட்டன. வாளைத்தூக்கி அமலையாடிய வீரர்கள் உரக்க நகைத்தனர். கூச்சலிட்டபடி பெண்களை நோக்கி சென்றனர்.

பின்னால் இருந்து பலராமர் “குழந்தைகளும் பெண்களும் முதியவர்களும் பசுக்களும் அன்றி ஒரு உயிரும் இங்கு எஞ்ச வேண்டியதில்லை” என்று ஆணையிட்டார். தன் வலக்கரத்தில் இரும்பு கதாயுதத்தை ஏந்தியபடி நிலமதிர பெருங்குறடுகளை எடுத்து வைத்து உள்ளே வந்த அவர் எரிந்து சரிந்த இல்லங்களின் துண்களை அறைந்து சிதறடித்தார். சததன்வாவின் அரண்மனை நோக்கி சென்ற யாதவர்கள் அது முன்னரே எரிந்து நீர் புகுந்த மரக்கலம் என ஒருபக்கம் சரிந்து விட்டிருப்பதை கண்டனர். உள்ளே நுழைந்த பலராமர் அவரை நோக்கி ஓடிவந்த ஒருவனின் தலையை நீர்க்குமிழியென சிதறடித்தார்.

அவனைத் தொடர்ந்து ஓடிவந்த இன்னொருவன் “யாதவரே, நாங்கள் தங்கள் காலடியில் தஞ்சம் கொள்ள வந்தவர்கள்” என்று கூவி தலைக்கு மேல் கைகூப்பியபடி நிலத்தில் அமர்ந்தான். அவன் கையையும் தலையையும் சேர்த்து சீவி எறிந்தது பின்னாலிருந்து வந்த இளைய யாதவரின் படையாழி. “ஒருவரும் தஞ்சம் புக தகுதியானவர்கள் அல்ல. இந்நகரில் சிறைபிடிக்கப்படாத பெண்களோ கொல்லப்படாத ஆண்களோ எஞ்ச வேண்டியதில்லை” என்றார் இளைய யாதவர்.

“குடிமூத்தவர்?” என்று ஒரு படைத்தலைவன் திரும்பி கேட்டான். “முதியவரும் கொல்லத் தக்கவர்களே. உற்ற நேரத்தில் உரிய சொல் சொல்லாத பிழைக்காக அவர்கள் குருதி சிந்தட்டும்” என்றார் இளைய யாதவர். திருஷ்டத்யும்னன் ஊருக்குள் புகுந்து தரையெங்கும் சிந்திக் கிடந்த குருதியின் மேல் நடந்தான். சாம்பல் புகை எழுந்து கரித்திவலைகள் மழையென பொழியத் தொடங்கின. யாதவ வீரர்களின் வியர்வை மேல் கரிபடிந்து கறையென வழிந்தது. எரிந்து கொண்டிருந்த மாளிகையின் முகப்பில் சென்று நின்ற இளைய யாதவர் “இங்கு எவருள்ளனர்?” என்றார்.

வலைபோல இருபக்கமும் விரிந்து முழு ஊரையும் வளைத்துக் கொண்ட யாதவப் படையின் மறு எல்லையிலிருந்து உருவிய வாளுடன் ஓடி வந்த படைத்தலைவன் “அரசே, ஊருக்குள் அவர்கள் மூவரும் இல்லை” என்றான். இளைய யாதவர் புன்னகைத்து “எண்ணினேன்” என்றார். “நாற்புறமும் புரவிக்குளம்படிகள் தெரிகின்றன. இந்தக் கோட்டை எளிதாகத் திறக்கும் மரவாயில்களை கொண்டது. நான்கு வாயில்கள் பின்பக்கம் உள்ளன” என்றான் படைத்தலைவன். “அவர்கள் நம்மைக் கண்டதுமே கிளம்பிவிட்டிருக்கவேண்டும்.”

இளைய யாதவர் “இங்குள்ள பெண்டிரை சிறைப்பிடித்துக் கொண்டு வாருங்கள்” என்று சொல்லி மாளிகை முகப்பின் முற்றத்தில் சென்று நின்றார். பலராமர் “இளையோனே” என்று ஏதோ சொல்லவர “இவர்கள் நம் எதிரிகள் மூத்தவரே” என்ற இளைய யாதவர் படைத்தலைவனிடம் “விரைவில்” என்று கூவினார். யாதவப் படையினர் எரிந்து கொண்டிருந்த இல்லங்களுக்குப்பின்னால் தோட்டங்களிலும் குழிகளிலும் ஒளிந்துகொண்டிருந்த பெண்களை குழல் பற்றி இழுத்துக்கொண்டு வந்து முற்றத்தில் தள்ளினர்.

ஒருவரையொருவர் அணைத்தபடி குழந்தைகளை இடையோடு சேர்த்து நிலம்நோக்கி வளைந்தமர்ந்து அவர்கள் கதறி அழுதனர். முதியபெண்கள் நெஞ்சிலும் தலையிலும் அறைந்து ஓலமிட்டனர். அவர்களின் கண்ணீரின் நடுவே அவற்றுக்கெல்லாம் அப்பால் எங்கிருந்தோ நோக்கும் கற்சிலையென இளையயாதவர் நின்றார். திருஷ்டத்யும்னன் அவர் விழிகளை நோக்கினான். ஒரு துளி கருணையேனும் இல்லாத விழிகள் என எண்ணிக்கொண்டான். ஒரே இமைப்பில் தன் படையாழியை எழுப்பி இவர்கள் அனைவரின் தலையையும் கொய்ய இவரால் முடியும் என்று தோன்றியது. இரக்கமற்றவர் இரக்கமற்றவர் என்று அவன் உள்ளம் அரற்றியது. புன்னகை ஒளியென உறைந்த அம்முகத்தை நோக்கி விழியெடுக்க முடியாமல் தன்னை விலக்கி தலை திருப்பி அகன்றான்.

நாற்புறமும் இல்லங்களுக்குள் இருந்து பெண்களை இழுத்துக் கொண்டுவந்து கொண்டிருந்தனர். குழந்தைகள் உடல் விதிர்க்க அலறியபடி அன்னையரின் மார்புகளை அள்ளிப் பற்றிக்கொண்டிருந்தனர். சிறுவர்கள் கால்தளர்ந்து நிலத்தில் விழ அவர்களை கைப்பற்றி இழுத்துக்கொண்டு வந்து குவியல்களாக அள்ளிக் குவித்தனர். திருஷ்டத்யும்னன் தரையெங்கும் பரவிய கரிப்புழுதியின் மேல் கால்குறடின் தடம் பதிந்து பதிந்து தொடர மெல்ல நடந்தான். கிருஷ்ணவபுஸ் முற்றாகவே எரிந்தழிந்து சரிந்துவிட்டது என்று தெரிந்தது. படைத்தலைவர்கள் “ஒருவர் எஞ்சலாகாது! ஒருவர் கூட!” என்று கூவியபடி அனைத்து திசைகளிலும் படை வீரர்களை அனுப்பிக்கொண்டிருந்தனர்.

கிணறு ஒன்றுக்குள் நோக்கிய யாதவவீரன் “இங்கே! இங்கே!” என்று கூவ நாற்புறத்தில் இருந்தும் படைவீரர்கள் அக்கிணற்றை நோக்கி சென்றனர். கிணற்றுக்குள் ஒளிந்திருந்த கிருஷ்ணவபுஸின் படைவீரர்கள் கூச்சலிட்டு கதறினர். ஒருவன் விளிம்பில் தொற்றி மேலேறி “யாதவர்களே, நாங்களும் அந்தகக் குலத்தவரே. அறியாது செய்த பிழைக்காக பொறுத்தருளுங்கள். எங்கள் உயிர் ஒன்றே நாங்கள் கோருவது” என்றான். அவர்களை வளைத்துக்கொண்ட யாதவப் படைவீரர்கள் திரும்பி நோக்க படைத்தலைவன் “கொல்லுங்கள்! அதுவே அரச ஆணை” என்றான்.

கண்ணிர் வழிய கைகூப்பி மன்றாடி நின்ற முதிய யாதவவீரனின் தலையை ஒரு வீரன் வெட்டி வீழ்த்த அது நீர்நிறைந்த சிறுகலம் போல ஓசையிட்டபடி கிணற்றுக்கு வெளியே உருண்டு தெறித்தது. குருதி பீரிடும் கழுத்துடன் கைவிரித்துத் தள்ளாடிய உடல் சரிந்து உள்ளே விழுந்தது. உள்ளிருந்து ஏறமுயன்ற யாதவர்கள் கதறி அழுதபடி ஒருவர் மேல் ஒருவர் என விழுந்தனர். கிணற்றைச் சுற்றி நின்று உள்ளே அம்புகளைத் தொடுத்தனர் மதுராவின் வீரர்கள். திருஷ்டத்யும்னன் இடையில் கை வைத்து நின்று அதை நோக்கினான். அம்புகள் விழ விழ உள்ளிருந்து எழுந்த அலறலோசை அடங்கியது.

இறுதியாக அம்பை செலுத்திவிட்டு ஒரு வீரன் வில்லைத்தாழ்த்த கிணற்றைச் சுற்றி நின்ற யாதவர்கள் ஒவ்வொருவரும் சோர்ந்தவர்கள் போல திரும்பி அந்த ஆழத்தை நோக்கவிழையாதவர்கள் போல விலகினர். படைத்தலைவன் “பிணங்களுக்கு அடியில் ஒளிந்து எவரேனும் எஞ்சக்கூடும். எரியும் தடிகளை உள்ளே போட்டு சேர்த்து பொசுக்கி விடுங்கள்” என்று ஆணையிட்டான். யாதவ வீரர்கள் எரிந்து கொண்டிருந்த இல்லங்களிலிருந்து மரக்கூரைகளையும் தூண்களையும் உள்ளே அள்ளிப் போட்டனர். பற்றியெரிந்து கனல் வடிவாக இருந்த தூண்களை உடைத்து உள்ளே போட உள்ளிருந்து அனலெழத் துவங்கியது. அப்போதும் இறக்காமல் இருந்த கிருஷ்ணவபுஸின் யாதவர்கள் சிலர் அலறியபடி மேலெழ அவர்களை வெட்டி திரும்பவும் அனலுக்குள்ளேயே போட்டனர்.

திருஷ்டத்யும்னன் அந்தத் தலையை நோக்கினான். அது வியந்தபடி பற்களைக்காட்டி கிடந்தது. மூக்குக்குள் அடர்ந்த முடி தெரிந்தது. உடலற்ற தலையின் விழிகளிலும் உதடுகளிலும் தெரிந்த உணர்ச்சி அச்சமூட்டும் பொருளின்மை கொண்டிருந்தது. எரிபுகைசூழ்ந்த தெருக்கள் வழியாக நடந்தான். எங்கிருக்கிறது சியமந்தகம் என எண்ணிக்கொண்டான். சததன்வா அதை தன் நெஞ்சோடு அணைத்தபடி விலகி ஓடி இருக்கக்கூடும். கங்கை வழியாக செல்லும் அளவிற்கு அவன் மூடன் அல்ல என்று தோன்றியது. கரை வழியாக சென்றால் யாதவர்கள் அவனைப் பிடிப்பது எளிதல்ல. காசிக்குள் புகுந்து மகதத்தின் எல்லைக்குள் நுழைந்தால் பிறகு ஒருபோதும் அவன் இளைய யாதவரின் கைக்கு சிக்கப் போவதில்லை. சியமந்தகத்தை மகதனுக்கு காணிக்கை வைத்தான் என்றால் அங்கொரு படைத்தலைவனாக அவன் பொறுப்பு கொள்ளவும் கூடும்.

இருண்ட புதர்க்காடுகளுக்குள் புரவியில் சியமந்தகத்தை கச்சையில் இறுக முடிந்தபடி செல்லும் சததன்வாவை அவன் நினைவுள் எழுப்பினான். ஒரு கணம் கோழை என்று கசந்தது அவன் அகம். மறுகணம் அவ்வாறு செல்பவனுடன் தன்னையும் இணைத்துக்கொண்ட தன் நெஞ்சின் ஆழத்தை எண்ணி துணுக்குற்று அதை எவரேனும் அறிகிறார்களா என்பதுபோல சூழ நோக்கினான். பின்னர் நீள்மூச்சுடன் எளிதாகி தன் உள்ளத்தை முழுதறிந்தவர் எவரேனும் இருக்கமுடியுமா என எண்ணிக்கொண்டான். இருந்தால் அவர் இப்புவியில் அறிய பிறிது ஏதுமில்லை.

கிருஷ்ணவபுஸின் ஒவ்வொரு மூலையிலும் இடுக்குகளிலும் துழாவி ஒருவர்கூட எஞ்சாது கொன்றுவிட்டு குருதி சொட்டும் வாள்களுடனும் குலுங்கும் ஆவநாழிகளுடனும் மதுராவின் வீரர்கள் முற்றத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்களை அதுவரை இயக்கிய உளஎழுச்சி வடிந்து மெல்ல தளரத்தொடங்கியிருந்தனர். எவரும் பேசிக்கொள்ளவில்லை. அவர்களுக்குப்பின்னால் மண்ணை அணைத்தபடியோ விண்நோக்கி கைவிரித்தபடியோ சடலங்கள் கிடந்தன. ஒவ்வொருமுகமும் ஒரு சொல்லில் சிலையாகியிருந்தது. அச்சொல்லுடன் அவர்கள் விண்ணேகுவர் போலும். அது மண்ணில் அவர்கள் சொல்லிச்சென்றதா? விண்ணுக்குக் கொண்டுசென்றதா?

பொருளின்றி எண்ணங்களை ஓட்டும் பழக்கம் நோய்ப்படுக்கையில் தனக்கு வந்ததா என்று திருஷ்டத்யும்னன் வினவிக்கொண்டான். தன்னை கலைத்துக்கொண்டு பெருமூச்சுடன் கிருஷ்ணவபுஸின் சிதையை நோக்கி நின்றான். குருதியை அழிப்பதற்கு எளிய வழி நெருப்பிடுவதே என்று எண்ணம் வந்தது. கசப்புடன் புன்னகை புரிந்தபடி வானை நோக்கினான். இளம் வெயில் விரிந்து கிடந்த நீல வானம் அந்தப் புகைக்கும் அனலுக்கும் அப்பால் ஏதுமறியாத தூய பளிங்குக் கூரையென கவிழ்ந்திருந்தது. இல்லங்கள் கனல் குவைகளாக மாறி விட்டிருந்தன. நடுவே சததன்வாவின் மாளிகை செந்நெருப்பு தேங்கிய குளம் போல தெரிந்தது.

மாளிகையை சுற்றிக்கொண்டு அவன் மீண்டும் கிருஷ்ணவபுஸின் அரைவட்ட அரண்மனை முற்றத்திற்கு வந்த போது பெண்களும் குழந்தைகளும் அமர வைக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலானவர்கள் நிலத்தில் முகம் பொத்தி விழுந்து கிடக்க அவர்களைச் சூழ்ந்து உருவிய வாள்களுடன் மதுராவின் யாதவர் நின்றிருந்தனர். பலராமர் தன் கதாயுதத்தை நிலத்தில் ஊன்றி அதன் மேல் இடையை சற்றே சாய்த்தவர் போல நின்றிருக்க அருகே இளைய யாதவர் மார்பின் மேல் கைகளைக் கட்டியபடி அலறியழும் பெண்களையும் குழந்தைகளையும் உயிரற்றவற்றை என நோக்கிக் கொண்டிருந்தார்.

திருஷ்டத்யும்னன் குறடு ஓசையிட அவரருகே சென்று நின்றான். இளைய யாதவரின் விழிகள் ஒவ்வொரு முகமாக தொட்டுத் தொட்டு சென்றன. பின் ஒரு பெண்ணை அடையாளம் கண்டார். அவளைச் சுட்டி “எழுக” என்றார். அவள் உடல் நடுங்கியபடி எழுந்து கைகூப்பியபடி தலை குனிந்து நின்றாள். நீண்ட கருங்குழல் அவிழ்ந்து பின்பக்கத்தை தழுவியது. பொன்னிற முகத்திலும் கழுத்திலும் கண்ணீரும் வியர்வையும் கரைத்த கரி வழிந்திருந்தது. “உனது பெயர் என்ன?” என்று இளைய யாதவர் கேட்டார். “நான் அந்தகக் குலத்து மாலினி. படைத்தலைவர் அக்கிரசேனரின் மகள்” என்றாள். “நீ அறிவாய் சததன்வா எங்கு சென்றான் என்று” என்றார் இளைய யாதவர்.

அவள் திடுக்கிட்டு விழிதூக்கி ஏதோ சொல்ல சிறிய இதழ்களை அசைக்க இளைய யாதவர் “உன் நெஞ்சை நானறிவேன். இவ்வூரை விட்டுச் செல்லும்போது அவன் உன்னிடம் மட்டுமே விடைபெற்றிருக்கிறான்” என்றார். “நான் ஒன்றும் அறியேன் இளைய யாதவரே” என்று அவள் சொல்ல “உன்னை கணவனை இழந்தவள் எனும் இடத்தில் துவாரகையில் அமர்த்த நான் உளம் கொண்டுள்ளேன். இக்கணம் அவன் சென்ற திசையை சொல்லாவிட்டால் தொழும்பி என அதே நகரில் நீ வாழ நேரும்” என்றார். அவள் கழுத்தும் தோள்குழிகளும் அதிர விம்மி அழுதபடி “என்னிடம் மட்டும் சொல்லிச் சென்ற ஒரு சொல்லை நான் எங்ஙனம் சொல்வேன்?” என்றாள்.

அவர் அவள் அருகே சென்று “சொல்லியே ஆக வேண்டும். பெண்ணுக்கு உயர்வென்பது அவள் தன்மதிப்பே. அதன் பொருட்டு உன்னிடம் சததன்வா சொன்னதை நீ சொல்வாய்” என்றார். அவள் ஈற்று நோவுகொண்ட பசு என உடல் அதிர சிலகணங்கள் நின்றாள். பின்னர் அவளுக்குள் எதுவோ எழுவதை காண முடிந்தது. நிமிர்ந்து விழி தூக்கி இளைய யாதவரை நோக்கினாள். ஒரு கையால் தன் பரந்த கூந்தலை சுழற்றிக் கட்டிக்கொண்டு இன்னொருகையை இடையில் ஊன்றி “இளைய யாதவரே, பெண்ணுள்ளத்தை நீர் அறிவீர். எந்தப்பத்தினியையும்போல என் கொழுநன் பொருட்டு எந்த இழிநரகமும் செல்ல சித்தமானவள் நான். ஒருநிலையிலும் அவர் சொன்ன சொற்களை சொல்லப் போவதில்லை” என்றாள்.

இளைய யாதவர் அருகே வந்து அவள் விழிகளை நோக்கி புன்னகைத்து “எனக்காகக் கூடவா?” என்றார். அவள் அவர் விழிகளை ஏறிட்டு “யாதவரே, என் உள்ளத்தில் என்றும் உம் பீலிவிழி நோக்கியிருந்தது. ஆனால் அதை சூடியிருந்தது என் கொழுநரின் என்றும் வாடாத இளமைதான்” என்றாள். அவர் கண்கள் மாறின. “அவனும் நானே” என்றபின் புன்னகையுடன் திரும்பிக்கொண்டார்.

அவள் “அத்துடன் இன்னொன்றும் அறிவேன், ஒருநிலையிலும் எந்தப் பெண்ணின் தன்மதிப்பையும் நீர் அழிக்கமாட்டீர் இளையோனே. நீர் வந்தது அதற்கல்ல என்று அறியாத ஒரு பெண்ணேனும் இன்று பாரத வர்ஷத்தில் உள்ளனரா?” என்றாள். அவள் விழிகளை பிறிதொருமுறை நோக்கி புன்னகைத்து ஒரு சொல்லும் சொல்லாமல் அவர் விலகி நடந்தார். திருஷ்டத்யும்னன் அவனறியாமல் அவளை நோக்கி நின்றான். நீண்டநாட்களுக்குப்பின் சுஃப்ரையை மீண்டும் நினைத்துக்கொண்டான்.

முந்தைய கட்டுரைகொலம்பஸ் (ஓஹையோ) தமிழ்ச் சங்கத்தில்
அடுத்த கட்டுரைமலையாள இலக்கியம்