பரிந்து இட்டோர் – கடலூர் சீனு

இட்டோர் உயர்ந்தோர்: இடாதோர் இழிகுலத்தார்;

காலை. எழுதிக் கொண்டிருந்தேன். எழுதுகையில் அது முடியும்வரை அதை விட்டு விலகமாட்டேன் என அம்மா அறிவார்கள். ஆகவே அச்சமயங்களில் அது உணவு நேரம் எனில் எனக்கு ஊட்டி விடுவார்கள். அப்போது வீட்டுக்குள் நுழையும் எவர் குரலிலும் சற்று பொறாமை துளிர்க்கும் . மாடு பூனைகள் நாய் என அம்மா பரிபாலிக்க எத்தனை ஜீவன்கள். என்ன ஜீவன் ஆனால் என்ன உண்னைய்யா என்றெடுத்து ஊட்டும் கை ஒன்றுக்காக ஏங்காத மனம் உண்டா. ஊட்டிக்கொண்டே ”தம்பி உன் டேபல்ல ஜெயமோகனோட புறப்படுன்னு புக்கு ஒன்னு பாத்தேம்பா. சும்மா புரட்டினேன். அது ஏன் அந்தப் பய திட்டிக்கிட்டே சோறு போடுறான்?” என்று கேட்டார்கள்.

எண்ணம் எங்கெங்கோ சென்றது.எழுத்து நிற்க , நாகமணியை நினைத்துக்கொண்டேன், தன் தட்டிலிருந்து இன்னும் ஒரு கை சோறு அள்ளி வைத்து சொல்கிறான் ”தின்னுல பண்ணத் தாயளி”’.

போதும் என்று கை மறைக்கும் டிரைவர் பிரசாத் கையில் அன்னக் கரண்டி கொண்டு செல்ல அடி அடித்து மேலும் சோறு வைக்கிறார் ஷிண்டே.

பிறந்த நாள் ஒன்றினில் நானும் தம்பியும், பாலர் அநாதை விடுதி ஒன்றுக்கு அன்னதானம் அளித்து, அக் குழந்தைகளுடன் மதிய உணவு உண்ண அமர்ந்திருக்கிறோம் உணவில் கை வைக்குமுன் குழந்தைகள் கோரசாக பாடுகிறார்கள் ”பகிர்ந்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”.

ஈரோடு. நண்பர் காரைக்குடி பிரபுவுடன் அம்மா உணவகத்தில் காலை உணவு. கருப்பு முக்காடிட்ட பாயம்மா இன்முகத்துடன் உணவு டோக்கன் தந்து கொண்டிருக்கிறார்கள். ஆபிஸ் போகும் யுவதி நின்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். அவள் காலுக்கு அருகே இரண்டு பிச்சைக்கார பெண் குழந்தைகள். துருத்திய வையிறு, குச்சி கால் கை, எண்ணை இன்றி வறண்டு பனங்காய் மண்டை. அவர்கள் முன்புஎவர் சில்வர் தட்டில்சுட சுட கடலைப் பருப்பு சாம்பாரில் மிதக்கும் ஐந்து பருத்த இட்லிகள். பெரிய குழந்தை சிறிய குழந்தைக்கு ஊட்டிக் கொண்டிருந்தது. எல்லோரும் ஓர் குலம்,எல்லோரும் ஓர் நிறை, எதோ ஒரு பண்ணத் தாயளி கண்ட கனவின் ஒரு துண்டு.

பரிமாறும் பெண்ணைக் காட்டிலும், பரிந்து உவந்து பரிமாறும் ஆணில் எதோ ஒரு தெய்வாம்சம் கூடுதலாக துலறதுங்குகிறது . ”தின்னுல எரப்பாளி” என்றபடி பரிமாறும் கெத்தெல் சாகிப் குரலைக் காட்டிலும் எத்த அன்னையின் குரலுக்கு காருண்யம் அதிகம்.

தன் பொருள் திருடு போவது பற்றி சாகிப்புக்கு கவலை இல்லை. ஆனால் கண் முன் ஒரு பெண் மானபங்கம் அடைவது அவரால் பொறுக்க முடியாது. ஒரே அடி. காயலாகக் கிடந்தே ஆள் காலி. தரையிலிருந்து முளைத்து வானம் கோத கிளைகளை விரிக்கும் விருட்சம் போல வளருகிறார் சாகிப்.

அவரது உணவகத்தில் இன்னார் இனியார் பேதம் பாராது எலோருக்கும் உணவிடுகிறார். கறிச்சோறு. இயன்றோர் காசு தரலாம். இயலாதோர் அவர்களின் விருப்பு.

கதை சொல்லி, ஏழ்மையான பின்புலம் கொண்டவன். கஞ்சிக்கு ஆற்றோர கீரை கொண்டு கடையப்பட்ட குழம்பே அவன் குடும்ப அன்றாட உணவு. மேல் படிப்பு படிக்க அப்பா அவனை மாமா வீட்டில் தங்க வைக்கிறார். மாமி அவனுக்கு போடும் மிஞ்சிய பழைய சோற்றுக்கு கூட கணக்கு வைத்திருக்கிறாள்.அவனது கல்லூரி புத்தகங்களை சோற்றுக்காக அடமானம் பிடித்துக் கொள்கிறாள்.

பசி கதை சொல்லியை சாகிப் வசம் கூட்டி செல்கிறது. வாழ்வில் முதன் முறையாக தேவை அறிந்து உணவிடும் அன்னையின் கை ஒன்றினை காண்கிறான். ஐந்து வருடங்கள் காசு தராமல் சாகிப் வசம் சாப்பிடுகிறான்.
நல்ல வேலை கிடைக்கிறது. அவன் மாமன் மகள் ராம லட்சுமியே திருமணம் செய்து கொள்கிறான்.

கதைக்குள் எத்தனை நுண்ணிய தருணங்கள்? அவனது சம்பளத்தை கேட்டதும் அப்பாவின் கண்களில் தெறிக்கும் பொறாமை. நல்ல நிலைக்கு வந்த பின்னும், கரண்டியில் முழுதாக அன்னத்தை அள்ள மனம் கூடாத அம்மா. இவர்கள் மத்தியில் இருந்து சாகிப் வசம் வரும் கதைசொல்லியால் சாகிப்பைக் கண்டு ஆச்சர்யம் கொள்ளாமல் இருக்க முடியுமா?

முதன் முறையாக காசு தராமல் உணவகத்தை விட்டு வெளியில் வரும்போது அவன் மனதில் சாகிப் மீது எழும் துவேஷம். நுட்பமான நான் நேரில் கண்ட மன நாடகங்களில் ஒன்று.
வீட்டில் மாமி பழைய சொற்றுக்குகூட கணக்கு பார்க்கிறாள். வெளியே சாகிப் எதைப் பற்றியும் கவலை இன்றி பசியறிந்து கறிச்சோறு போடுகிறார். சாகிப் கடைக்கான மீனை பாப்பீ மாப்ள எவ்வாறு கொண்டு வருவார் என்றொரு நுட்பம் வருகிறது. காயலிலிருந்து மீன் நேராக குழம்புக்குதான் செல்லும். அப்படி ஒரு சோறு சோறு போடுகிறார். சாகிப் .அதுவும் இலவசமாக, அதுவும் பசியறிந்து.

அனைத்தையும் இழந்து தெருவுக்கு வரும் மாமி. நல்ல காலத்தில் தான் அவனுக்கு சோறு போட்ட நன்றிக்கு பத்தாவது தாண்டாத தன் மகள் ராமலட்சுமியை கல்யாணம் செய்து கொள்ள சொல்கிறாள்.

முதல் சம்பளத்தில் சீட்டு சேர்ந்து, பணம் எடுக்கிறான். அந்தப் பணத்தில் ஒரு வீடே வாங்கலாம். மொத்தப் பணத்தையும் சாகிப் கடை உண்டியலில் போடுகிறான்.

இணை சொல்ல இயலா கதைத் தருணம். அவன் ஏன் மொத்தக் காசையும் உண்டியலில் போடுகிறான்? மறுத்தால் ஒன்றும் ஆகிவிடாது என்ற நிலையிலும் ஏன் ராமலட்சுமியை மணம் செய்துகொள்கிறான்?

இது இரண்டும் வெறும் மன எழுச்சியின் பாற்பட்ட செயகைகளா?

இல்லை. சாகிப் அவனுக்கு என்ன கொடுத்தாரோ, அதைத்தான் அவன் திருப்பி எல்லாருக்கும் தருகிறான்.

சிறுமைகள் மலிந்த இவ்வுலகில் சாகிப் உணவென அவனுக்கு அளித்தது என்ன? என்னளவில் அதை பெருந்தன்மை என வகுத்துக் கொள்வேன். ஆம் பெருந்தன்மை அதுவே சரியான சொல். அவன் உண்டியலில் காசு போட்டது சாகிப்புக்கு திருப்பி செய்வது அல்ல. இனியும் அவன் போல சாகிப்பை நாடி வரப்போகும் பசித்த வயிருகளுக்காக. ஐநூறு வேளை சோற்றுக்கு ஈடாக ஒரு தாயால் மகளை வைத்து எண்ண இயலும். அது பெற்ற கணக்கல்ல , உண்மையில் ராம லட்சுமியிதான் சோற்றுக் கணக்கு.

அந்த சோற்றுக் கணக்கிலிருந்து ராமலட்சுமிக்கு மீட்பளிக்கிறான் அவன். அன்னையான சாகிப்பின் மடி கிடந்தது, மதலையென முலையுண்டவன் அதை செய்யாமல் போனால்தான் ஆச்சர்யம்.

பரிமாறும் பெண்ணைக் காட்டிலும், பரிந்து உவந்து பரிமாறும் ஆணில் எதோ ஒரு தெய்வாம்சம் கூடுதலாக துலங்குகிறது. அதன் பெயர் பெருந்தன்மை.

முந்தைய கட்டுரைமலையாள இலக்கியம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 42