‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 39

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி – 5

கிருஷ்ணவபுஸின் துறைமுகத்திலிருந்து பன்னிரண்டு போர்ப்படகுகள் கொடிகள் பறக்க, முரசு ஒலிகள் உறும வருவதை திருஷ்டத்யும்னன் கண்டான். அவை காட்டுப்பன்றிக்கூட்டம் போல அரைவட்ட வளையம் அமைத்து மூக்கு தாழ்த்தி செவி விரித்து கூர்மயிர் சிலிர்த்து தங்களுக்குள் என உறுமியபடி வருவதாகத் தோன்றியது. சாத்யகி “அனைத்துப் படகுகளிலும் வில்லவர் நிறைந்திருக்கிறார்கள் பாஞ்சாலரே. நம்மால் அவர்களை எதிர்கொள்ள முடியாது. திரும்பிவிடுவோம்” என்றான். திருஷ்டத்யும்னன் “பார்ப்போம்” என்று சொல்லி படகின் விளிம்பை அடைந்து இடையில் கைவைத்து கண்களைச் சுருக்கி நோக்கி நின்றான்.

சாத்யகி பதற்றத்துடன் திரும்பி உள்ளே நோக்கி கையசைத்து வீரர்களை எழ ஆணையிட்டுவிட்டு “இளவரசே, நம்மிடம் வெறும் பதினெட்டு வீரர்கள் மட்டுமே உள்ளனர். நம்மால் அவர்களை எதிர்க்கமுடியாது. நாமும் அகப்பட்டுக் கொண்டால் இங்கு நடந்தது என்னவென்று இளைய யாதவரிடம் சொல்லவும் எவரும் இருக்கமாட்டார்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் தலையசைத்தபடி கண்களை விலக்காமல் நின்றான். நீரலைகள் அவன் முகத்தில் ஒளியாக அசைவதைப் பார்த்தபடி சாத்யகி சில கணங்கள் திகைத்து “நம்மை அவர்கள் பிடித்துக் கொண்டால் என்ன நடக்கும் என்று எண்ணிப்பாருங்கள் பாஞ்சாலரே. அவர்களுடன் சேர்ந்து நாமும் இளைய யாதவரை வஞ்சித்துவிட்டோமென்றே சொல்வார்கள். அந்தச் சித்திரத்தை உருவாக்கவே சததன்வா முயல்வான். இப்போதே நாம் திரும்பிவிடுவதன்றி உகந்தது பிறிதொன்றுமில்லை” என்றான்.

உள்ளே படைவீரர்கள் விற்களுடன் எழும் கூச்சல்கள் ஒலித்தன. திருஷ்டத்யும்னன் மீசையை இடக்கையால் நீவியபடி திரும்பி சற்றே இதழ் வளைய புன்னகைத்து “ஆம், ஆனால் சற்றேனும் போரிடாமல் நாம் திரும்பினால் எப்படி இளைய யாதவர் முன் சென்று நிற்போம்?” என்றான். சாத்யகி தோள்களை தளரவிட்டு பெருமூச்சுவிட்டு “அதுவும் உண்மை. ஆனால்…” என்றான். “இவர்களிடம் நாம் அகப்பட்டுக்கொள்ளப் போவதில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். “நாம் போரிட்டு இவர்களை அழித்துவிட்டுத் திரும்புவோம். அல்லது கங்கையில் இறந்து மிதந்து மதுரா செல்ல நமக்கு முழு உரிமை உள்ளது அல்லவா?” என்றான். சாத்யகி பெருமூச்சுடன் தலையசைத்தபின் “ஆணையிடுங்கள்” என்றான்.

“வீரர்களை எரியம்புடன் எழச்சொல்லும்” என்றான் திருஷ்டத்யும்னன். அணுகிவரும் படகுகளை கூர்ந்து நோக்கியபடி “நம்மிடம் எரியம்பு எய்யும் திறன்கொண்ட ஏழு பேர் மட்டுமே உள்ளனர்” என்றான் சாத்யகி. “ஏழு என்பது மிகப்பெரிய எண்” என்று சிரித்த திருஷ்டத்யும்னன் கிருஷ்ணவபுஸின் படகுகளை நோக்கி “அவர்களிடம் இருக்கும் மிகப்பெரிய குறைபாடு என்னவென்றால் நாம் வெறும் தனிப்படகு என்று எண்ணுவதுதான். பாரும், அவர்கள் எதிர்த்து நின்றிருக்கும் ஒரு படகை அணுகுகிறார்கள். ஆனால் பாய்களை முழுதாக விரித்து வைத்திருக்கிறார்கள். அதாவது நம்முன் பன்னிரண்டு காய்ந்த வைக்கோல் குவைகள் உள்ளன” என்றான். சாத்யகி புன்னகைத்து “ஆம்” என்றபின் “களத்தில் தங்களிடமுள்ள இந்த உறுதிநிலையை நான் என்று அடைவேன் என ஏங்குகிறேன் பாஞ்சாலரே” என்றான்.

“ஒரு முறை களத்தில் இறந்து மீள்பிறப்பு எடுங்கள். அதன்பின் கால்கள் ஒருபோதும் பதறாது” என்றான் திருஷ்டத்யும்னன். சததன்வாவின் படகுகள் அணுக அணுக அவற்றின் அரை வட்டச் சூழ்கை வீசப்பட்ட வலை போல விரிந்து அகன்றது. முதலில் வந்த படகில் அமரத்தில் ஏறி நின்ற கலத்தலைவன் இளமஞ்சள் கொடியை ஆட்டி அவர்களிடம் விரித்த பாய்களை சுருட்டிக்கொண்டு படகின் அகல் விளிம்பை முன்னால் காட்டி பக்கவாட்டில் வரும்படி ஆணையிட்டான். திருஷ்டத்யும்னன் “பாய்களை இறக்குங்கள். அவன் ஆணைப்படி நமது கலம் விலா காட்டட்டும்” என்றான்.

சாத்யகி உயரத்தில் ஏறி அவர்களின் ஆணையை உரக்கக்கூவ கலக்காரர்கள் கயிற்று முடிச்சுகளை இழுத்து அவிழ்க்க விரிந்த பாய் தளர்ந்து இறங்கி படகு விரைவு அழிந்தது. சுக்கான் இரும்பு உரசும் ஒலியுடன் படகைத் திருப்ப அலைகள் படகை அறையும் ஒலி மாறுபட்டது. அடிவயிறு காட்டி பணிவு கொள்ளும் நாய் போல அவர்களின் படகு விலாவைக் காட்டியபடி அலைகளில் குழைந்தாடி முன்னகர்ந்தது. கிருஷ்ணவபுஸின் முதற்படகிலிருந்த அமரக்காரன் அதைக்கண்டதும் இயல்படைந்து போர் முரசுகள் நிற்கும்படி கைகாட்டினான். போர் முரசு அவிந்ததும் ஓசையற்ற விரைவுடன் அனைத்து படகுகளும் அவர்களைச் சூழ வந்தன. திருஷ்டத்யும்னனின் விழிகள் அந்தப் படகுகளுக்கும் தங்களுக்குமான தொலைவை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தன. அவன் கைகள் எழுந்து இரையைக் கவ்வ உன்னி தலைதாழ்த்தி சற்றே சிறகு விரித்து விழிசுடர கிளையில் அமர்ந்திருக்கும் பருந்துகள் போல காற்றில் அசைவற்று நின்றன. அக்கைகளை நோக்கியபடி எரியம்பு தொடுக்கப்பட்ட விற்களுடன் படகின் அகல்முனையின் விளிம்புக்கு அடியில் ஏழு வில்லவர்களும் காத்து நின்றனர். பருந்துகள் மேலும் கூர்ந்து முன்னகர்ந்தன. சிறகு விரித்து தலை குனித்து அக்கணத்தை நோக்கி அமர்ந்திருந்தன.

சாத்யகி தன் நெஞ்சின் ஓசையை காதில் கேட்டான். ‘இது போர் இது போர்’ என்று அவன் அகம் பொங்கியது. இக்கணம்! இன்னும் ஒரு கணம்! அதற்கடுத்த கணம்! பருந்துகள் மெல்ல சிறகசைத்து காற்றில் எழுந்தன. ஏழு எரியம்புகளும் வானில் சிவந்த சிறிய சிட்டுகள்போல சீறி மேலேறி சீராக வளைந்து முதலில் வந்த ஏழு பெருங்கலங்களின் முகப்புப் பெரும்பாயின் பரப்பில் விழுந்தன. அவை குத்தி நின்றதும் அவற்றிலிருந்த மீன்நெய்யும் தேன்மெழுகும் அரக்கும் கலந்த எரிகுழம்பு தீயாகவே வழிந்து பற்றிக் கொண்டது.

பாய்கள் எரியத் தொடங்கிய பின்னரே கலத்தில் வந்தவர்கள் அதை உணர்ந்தனர். படகுகளின் பாய்களை தணிக்கவோ படகுகளின் வேகத்தை எதிர்த்துடுப்பால் குறைக்கவோ அவர்களால் முடியவில்லை. அமரத்தில் நின்ற கலத்தலைவன் வெறிபிடித்தவன் போல கைகளை விரித்துக்கூவி இழுத்துக்கட்டப்பட்டிருந்த வடம் மீது ஓடி உள்ளே குதித்தான். எரிந்த படகுகளிலிருந்து வீரர்கள் பெரிய விற்களுடன் கலமுகப்புக்கு வந்து நாணேற்றி வளைத்து அம்புகளை தொடுத்தனர். நீரிலிருந்து துள்ளி எழும் வெள்ளிப் பரல் மீன்கள் போல இளவெயிலில் உலோக முனைகள் மின்னியபடி அம்புகள் அவர்களை நோக்கி வந்தன. பாய்மரத்தில், அகல் விளிம்பில், மரத்தரையில், அமரத்தில் எழுந்த சுக்கானில், அறைச்சுவர்களில், தூண்களில் அம்புகள் சிட் சிட் சிட் என்று ஒலியுடன் வந்து தைத்து நின்று சிறகு நடுங்கின.

திருஷ்டத்யும்னன் உடலை நன்றாகப் பரப்பி படகின் அகல் முனைக்கு அடியில் ஒளிந்துகொண்டு தன் வில்லை எடுத்து அம்பு தொடுத்தான். சாத்யகி தன் வில்லை காலால் வளைத்து அம்பு தொடுத்தபோது திருஷ்டத்யும்னன் “தலைவர்களை மட்டும்” என்று உரக்கக்கூவும் ஒலியைக் கேட்டான். “தலைவர்களை மட்டும்” என்று அவன் திரும்பக் கூவினான். திருஷ்டத்யும்னன் எய்த அம்பில் அமரத்தில் மீண்டும் எழுந்த கிருஷ்ணவபுஸின் படைத்தலைவன் நெஞ்சில் துளைத்த அம்புடன் தடுமாறி நீரில் தலைகீழாக விழுந்தான். அவன் முகத்தில் இறுதியாக எழுந்த திகைப்பைக்கூட காணமுடிந்தது. மறுகணம் சாத்யகியின் அம்பு பட்டு இரண்டாவது படகின் தலைவன் விழுந்தான். மூன்று படகுகளிலிருந்து தலைவர்கள் கைகளை விரித்து அலறும் முகத்துடன் நீருக்குள் விழுந்தனர். நீர் சிதறி பளிங்கு உதடுகள் அவர்களைக் கவ்வி விழுங்கின.

பற்றிக் கொண்ட பாய்களுடன் ஏழு படகுகளும் குழம்பி ஒன்றுடனொன்று முட்டிக்கொள்ள எட்டாவது படகின் பாயும் பற்றி எரியத் தொடங்கியது. “தலைவர்களை மட்டும்” என்று மீண்டும் திருஷ்டத்யும்னன் கூவினான். அவர்கள் தலைவர்களை குறி வைத்திருக்கும் செய்தியை புரிந்துகொண்டு படகுகளிலிருந்து அமரத்தலைவர்கள் உள்ளே ஓடி ஒளிந்து கொண்டு வில் ஏவினர். திருஷ்டத்யும்னனின் அருகே நின்ற வில்லவன் அம்பு குறியடைந்ததா என நோக்க சற்றே தலைதூக்க தன் கழுத்தில் பாய்ந்த அம்புடன் சரிந்து அவன் மேலேயே விழுந்தான். அவனை இடது தோளால் தள்ளி மறுபக்கம் வீழ்த்தி விட்டு “முடிந்த வரை கொல்லுங்கள்” என்று திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான்.

சாத்யகியின் பின்னால் நின்ற படைவீரன் நெஞ்சில் பட்ட அம்புடன் பின்னால் சரிந்து விழுந்தான். அவனுடைய இறுதிமுனகலும் படகின் பலகையை அவன் கால்கள் தட்டித்தட்டி ஓய்வதும் சாத்யகிக்கு கேட்டன. அவன் உடல் தன்னிச்சையாக துடித்துக்கொண்டிருந்த போதும் உள்ளம் மிக அமைதியுடன் இருந்தது. விழிகள் பெருகி நான்குதிசைகளையும் நோக்கின. கைகள் எண்ணங்களை தாங்களே உருவாக்கிக் கொண்டு அம்புகளை எய்தன. அவன் அங்கிருந்தான். அம்புகள் சென்றடையும் எதிரிப்படைகளுடனும் கலந்திருந்தான்.

தன் ஒரு அம்புகூட பிழைக்கவில்லை என்பது அவனை மேலும் மேலும் பேருருக் கொள்ளச் செய்தது. அம்புகள் சென்று தைப்பதை கனவுருவென காணமுடிந்தது. அம்புபட்ட வீரர்கள் திகைத்து பின் நிலையழிந்து படகுகளிலிருந்து அலறி விழுந்து கொண்டிருந்தனர். அவனுக்கு முன்னால் தூண்மறைவில் நின்ற யாதவவீரன் பின்னால் சரிந்து சுவரில் முட்டி முன்னால் வந்து தள்ளாடி நீரில் விழுந்தான். அவனுடைய அலறல் நீரை அடைவதை சாத்யகியின் ஒரு பகுதி கேட்டது. இன்னொரு பகுதி எதிர்வந்த படகில் கயிற்றின் மேல் எழுந்த ஒரு வீரனின் தலையைக் கண்டது. அக்கணமே அவன் கை ஓர் அம்பால் அவன் கழுத்தை குத்தியது. அவன் விழுவதைக் கண்ட ஒருபகுதி இன்னொருவனை வீழ்த்திய அம்பைச் செலுத்திய பகுதிக்கு நெடுந்தொலைவில் இருந்தது.

“திரும்புக!” என்று திருஷ்டத்யும்னன் கைதூக்கினான். சாத்யகி “திரும்புக! திரும்புக!” என்று கூவியபடி பாய்மர மறைவிலிருந்து அறைக்குள் பாய்ந்து சென்றான். அவனுக்கு மேல் வந்த அம்பு ஒன்று மரச்சுவரில் குத்தி நின்றது. அவன் எழுவதற்கும் அவன் உடல் தன்னை அறியாமல் ஒரு கணம் எழுந்து சற்றே திரும்ப இன்னொரு அம்பு அவன் தோளை தாக்கியது. தோளில் காகம் ஒன்று பறந்துவந்து கால்வைத்தது போல அந்த அம்பை அவன் உணர்ந்தான். தன் இடக்கையால் அந்த அம்பு எய்த வீரனை வீழ்த்திய பிறகுதான் தன் இடத்தோளில் அம்பு ஆழப்பாய்ந்திருப்பதை உணர்ந்தான்.

“உள்ளே செல்லுங்கள்… உள்ளே” என்று திருஷ்டத்யும்னன் ஆணை விடுத்தான். சாத்யகி தன் இடது கை செயலற்றிருப்பதை உணர்ந்தான். அவன் நடந்தபோது நனைந்து குளிர்ந்த ஈரத்துணிச்சுருள் போல அது தொடை தொட்டு அசைந்தது. புயத்தில் வழிந்து கை மடிப்பில் தயங்கி விரல்களை அடைந்து சொட்டிய குருதி சூடாக கால்களில் விழுந்தது. அவன் அறைக்குள் சென்று முழந்தாளிட்டு அமர்ந்து கொண்டான். திருஷ்டத்யும்னன் உரக்க “அம்பை பிடுங்கி விடுங்கள்” என்றபடி ஆணைகளை கைகளை வீசி தெரிவித்தபடி அமரமுகப்பு நோக்கி ஓடினான்.

சாத்யகி அம்பின் பறவை இறகு பதித்த பின்பகுதியை பிடித்து எடுக்க இறகுகள் அவன் கையில் உருவிக் கொண்டு வந்தன. அவனால் அம்பை பிடுங்க முடியவில்லை. வலியை எண்ணியதுமே அம்புபட்ட தசை விதிர்த்தது. உள்ளிருந்து வந்த முதிய வீரர் ஒருவர் “அம்பின் உலோகமுனையைப் பிடித்து பிடுங்கவேண்டும் யாதவரே” என்றபடி அம்பு தைத்திருந்த முனைக்கு சற்று மேல் பிடித்து தசைக்குள் சென்றிருந்த உலோகக்கூரை சற்றே சுழற்றி வெளியே எடுத்தார். தசைக்குள் அம்பு முனை அசைந்தபோது எழுந்த வலியில் சாத்யகியின் உடல் முறுக்குண்டு அதிர்ந்தது. அம்பு உருவப்பட்டவுடன் கோழியின் வாய் எனத்திறந்த புண்ணை அவன் திரும்பி நோக்கினான். அலை பின்வாங்கிய சேற்றில் நண்டுவளைகள் போல சிறிய குமிழிகளாக குருதி வெடித்து வெளிவந்தது.

முதிய வீரர் தன் தலைப்பாகையை அதன் மேல் வைத்து சுற்றி இறுக்கி கட்டி மீண்டுமொரு முடிச்சைப் போட்டு கையில் இருந்த குருதியை உரசித்துடைத்தபடி எழுந்தார். அந்தக் கட்டை உள்ளிருந்து நனைத்து ஊறிப்பெருகியது குருதி. கட்டுக்கு வெளியே குருதி குளிர்வது போலவும் உள்ளே அது ஊறும் தசை வெம்மை கொள்வது போலவும் அவனுக்குத் தோன்றியது. விரல்களை அசைக்க முயன்றபோது அவ்வெண்னம் சென்றடையவில்லை என்பதை கண்டான். திருஷ்டத்யும்னன் குறடுகள் ஒலிக்க அறைக்குள் ஓடி வந்து “அனைத்துப் பாய்களையும் விரியுங்கள். திசை தேருங்கள். நாம் விலகிச் செல்கிறோம்” என்று ஆணை கூவினான்.

அவர்களின் படகின் மேல் பாய்மரங்கள் புடைத்து மேலெழுந்தன. வீரர்கள் கூவியபடி படகின் தளத்தில் ஓடும் ஓசை கேட்டது. சாத்யகி வலக்கையை ஊன்றி எழுந்தான். முதல் பாய் விரிந்ததும் படகு திடுக்கிட்டு முன் நகர்ந்தது. சுக்கான் திருப்பும் ஓசை புண்பட்ட யானையின் உறுமலென எழுந்தது. வளைந்து திரும்பிய படகு கங்கையின் அலைகளின் மேல் தன் கூர்முகப்பை ஏற்றி இறக்கி விழுந்தும் எழுந்தும் முன்னகர்ந்தது. ஒவ்வொரு பாயாக விரிய விரிய படகின் விசை கூடிக்கூடி சென்றது. அமர முனையில் நின்ற கலக்காரன் அலறி விழும் ஓசையை சாத்யகி கேட்டான். “எத்தனை பேர் எஞ்சியிருக்கிறார்கள் பாஞ்சாலரே?” என்றான். “மூவர்” என்றான் திருஷ்டத்யும்னன். “நானுமிருக்கிறேன்.”

சாத்யகி “நாம் காசியைக் கடந்து செல்ல வேண்டும். இச்செய்தி அவர்களை அடைந்தால் நம்மை அங்கு தடுத்து விடுவார்கள்” என்றான். “காசியின் எல்லையை நாம் அரை நாழிகைக்குள் இதே விரைவில் கடந்து செல்ல முடியும்” என்றான் திருஷ்டத்யும்னன். “காசியின் படகுகள் விரைவு மிகுந்தவை. நம்மை அவை பிடித்து விடக்கூடும்” என்று சொன்னபடி சாத்யகி வெளியே சென்றான்.

திருஷ்டத்யும்னன் “பார்ப்போம்” என்றபடி மறுமுனைக்குச் சென்று கங்கையை நோக்கி நின்றான். கங்கையில் மிதந்து சென்று கொண்டிருந்த வணிகப்படகுகளில் இருந்தவர்கள் அச்சம் கொண்டு அவர்களின் படகை திரும்பி நோக்கினர். அவற்றின் அமர முனையில் இருந்த கலக்காரர்கள் அவர்களின் படகை கைசுட்டி உரக்கக் கூவினர். அனைத்துப் பாய்களையும் விரித்து முழு விரைவில் அலைகளின் மேல் ஏறிச்சென்றது அவர்கள் படகு. தொலைவில் பற்றி எரிந்துகொண்டிருந்த கிருஷ்ணவபுஸின் படகு மூழ்குவதை காண முடிந்தது. பிற படகுகள் பாய்களை தாழ்த்திவிட்டிருந்தன. நான்கு படகுகள் எரியாத பாய்களைக் கொண்டிருந்தபோதும் அவர்களைத் தொடர்ந்து வரும் துணிவை கொள்ளவில்லை.

வில்லுடன் அகல்விளிம்புக்குக் கீழே பதுங்கியிருந்த யாதவவீரன் ஒருவன் திருஷ்டத்யும்னனை நோக்கி “அவர்கள் நினைத்திருந்தால் நம்மை அணுகிப் பிடித்திருக்க முடியும் இளவரசே” என்றான். திருஷ்டத்யும்னன் “ஆம்” என்று தலையசைத்தான். “அஞ்சிவிட்டார்கள்” என்றான் இன்னொருவன். திருஷ்டத்யும்னன் அதற்கு மறுமொழி கூறாமல் மீசையை நீவிக்கொண்டு அலைகளை நோக்கி நின்றான்.

அவர்களின் படகு காசியை நெருங்கும்போது முன்னரே அங்கு நிகழ்ந்த போரைப்பற்றி காசி அறிந்திருப்பதை திருஷ்டத்யும்னன் தொலைவிலிருந்து அறிந்து கொண்டான். காசியின் காவல்படகுத்துறையிலிருந்து இரண்டு விரைவுப் படகுகள் அவர்களை நோக்கி கிளம்பின. அவற்றில் ஒன்றின் முகப்புக்கொடிமரத்தில் அவர்களை நிற்கச் சொல்லும் ஆணையை படபடத்தபடி மஞ்சள்கொடி ஒன்று மேலேறியது. சாத்யகியின் தோளிலிருந்த புண்ணுக்கு தேன்மெழுகை பூசி கட்டுபோட்டு இறுக்கிக் கொண்டிருந்த முதிய வீரர் “அவர்கள் கால் நாழிகையில் நம்மை அடைந்துவிடுவார்கள்” என்றார். திருஷ்டத்யும்னன் “பார்ப்போம்” என்றான்.

சாத்யகி “அவர்கள் நம்மை பிடித்துக்கொண்டால் மகதத்திடம் கையளிப்பார்கள். அதில் ஐயமேயில்லை” என்றான். திருஷ்டத்யும்னன் “அவர்கள் நம்மை பிடிக்கப்போவதில்லை யாதவரே” என்றான். “நாம் இங்கிருந்து செல்வோம். அல்லது நீருக்கு அடியில் மறைவோம்.” சாத்யகி முதிய வீரர் கட்டை இறுக்கியபோது சற்றே வலியுடன் முனகியபடி பற்களை கடித்தான். பின்பு “இறப்பு என்பது இத்தனை ஆறுதல் தரும் சொல் என்று இப்போதுதான் உணர்ந்தேன்” என்றான். “ஒரு கையால் உம்மால் வில்லெடுக்க முடியுமா?” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம்” என்று சொல்லி சாத்யகி எழுந்தான்.

திருஷ்டத்யும்னன் “நம் கலத்தின் அமரமுனைக்கு அருகே அகல்வளைவின் விளிம்புக்கு அடியில் அமர்ந்து கொள்ளும். காசியின் முதற்படகின் முகப்புப் பெரும்பாயை நீர் இறக்க வேண்டும்” என்றான். “எரியம்பா?” என்றான் சாத்யகி. “அல்ல. அப்படகின் பாய் எளிதில் எரியாது. அதில் பீதர் நாட்டு வெண்களிமண் பூசப்பட்டுள்ளது. அதை மேலே சேர்த்து கட்டியிருக்கும் வடத்தின் முடிச்சை அறுக்கவேண்டும்.” சாத்யகி சில கணங்கள் நோக்கிவிட்டு “இரு கைகளுமெழுந்தால் என்னால் மிக எளிதில் அதை செய்ய முடியும். இன்று நான் முயல்கிறேன் என்று மட்டுமே சொல்வேன்” என்றான்.

முதிய யாதவவீரர் “அசையும் படகின் பறக்கும் பாயின் மேல் முடிச்சை அறுக்க பார்த்தரால் மட்டுமே முடியும் பாஞ்சாலரே” என்றார். திருஷ்டத்யும்னன் அவரை நோக்கி சற்றே பார்வை கூர்மை கொள்ள “நானும் துரோணரின் மாணவனே” என்றான். “பொறுத்தருள வேண்டும்” என்றார் முதிய வீரர். “நீர் அதை செய்தே ஆகவேண்டும் யாதவரே” என்றபின் திருஷ்டத்யும்னன் பிற வீரரை நோக்கி “சுக்கானை நீர் நோக்கிக் கொள்ளும். பிற இருவரும் நமது பாய்களை பேணட்டும்” என்றான். சாத்யகி “ஆணை” என்றான். திருஷ்டத்யும்னன் முன்னால் சென்று எதிரே வந்த காசிநாட்டு காவல்கலத்தை நோக்கியபடி “யாதவரே, என் சொல்லுக்காக காத்திருங்கள்” என்றான்.

முதலைக்கொடி பறந்த காசியின் படைப்படகு தனது மூன்று பெரும் பாய்களுடன் அவர்களை நோக்கி எழுந்து வந்தது. அதன் அமர முகப்பிலிருந்த யாளியின் உருண்ட விழிகள் தெளியத்தொடங்கின. சாத்யகி தன் உடலைக் குறுக்கி அகல்விளிம்புக்குக் கீழே அமர்ந்து கால்களால் நாண் பற்றி அசைவிழந்த இடக்கையை அதன் தண்டின் மேல் வைத்து வலக்கையால் நாணிழுத்து அம்பை இறுக்கினான். முழு உயிரையும் விழிகளில் அமைத்து அப்படகின் முதற்பெரும்பாயின் மேல் உச்சியில் எரியாத பீதர் விளக்கு தொங்கி காற்றில் ஆடிக்கொண்டிருந்த பாய் முடிச்சை நோக்கினான். ஒவ்வொரு கணமும் அது அது அது என தன்னை குவித்தான். வானை, கங்கையை, கலத்தை, பாயை, கொடிமரத்தை நோக்கிலிருந்து விலக்கினான்.

பாயை கட்டியிருந்த வடத்தின் முடிச்சு மட்டும் அண்மையில் மேலும் அண்மையில் மேலும் அண்மையில் என தன் முன் விரியச் செய்தான். திருஷ்டத்யும்னனின் குரல் ஒலித்ததும் அவனை அறியாமலேயே அவன் வலக்கரம் அம்பை எய்தது. எழுந்து மின்னி சற்றே சுழன்றபடி சென்ற பின்தூவல் பிசிரலைவைக்கூட அவனால் காண முடிந்தது. வெள்ளி அலகு கொண்ட பருந்து போல சென்ற அவனது அம்பு அந்த முடிச்சின் மையக்குழிக்குள் சென்று அக்கணமே இறுக்கத்தை அறுப்பதை அவன் கண்டான். காற்றில் புடைத்த பாயின் இழுவிசையாலேயே முடிச்சு மேலும் மேலும் அறுந்து வடநார்கள் தெறிக்க அம்பு மறுபக்கம் தழைந்து கீழே விழுந்தது. பாய் காற்றில் பறந்து எழுந்து விரித்த கைபோல வானை அளைந்து பின்வாங்கும் அலைபோல வளைந்து இறங்கி இருமுறை படபடத்து ஓசையுடன் கீழே விழுந்து அங்கே நின்ற வீரர்களை அறைந்து மூடியது.

மறுகணம் திருஷ்டத்யும்னனால் அறுக்கப்பட்ட இரண்டாவது பாய் அதன்மேலேயே வந்து விழுந்தது. இரு பாய்களும் சரியவே மூன்றாவது பாய் திடுக்கிட்டது போல திசைவிலகி மறுபக்கமாகத் திரும்பி முறுக்கிக் கொண்டு எழுந்து அதிர்ந்து படகை நேரெதிர் பக்கமாக திருப்பியது. விழுந்த பாய்களை கிழித்துக் கொண்டு கருவறைதிறந்து பிறந்தெழுபவர்கள் போல மேலே வந்த வீரர்கள் அம்புகளை அவர்களை நோக்கி எய்தார்கள். அமரமுனையில் நின்றிருந்த வீரன் திருஷ்டத்யும்னனின் அம்பு பட்டு நீரில் விழுந்தான். அவனை நோக்கி ஓடிவந்த இன்னொருவனை சாத்யகி வீழ்த்தினான். திரும்பி ஓடிய மூன்றாவது வீரனை திருஷ்டத்யும்னனின் அம்பு வீழ்த்தியது.

திரும்பிக் கொண்ட பாய் காற்றில் முழுவிசையுடன் புடைத்து முற்றிலும் வேறு திசையில் படகை இழுத்தது. கலக்காரர்கள் கைகாட்டி கூச்சலிட்டு அங்குமிங்கும் ஓட அந்தப் படகு தத்தளித்து திசை மாறி வளைந்தது. அவர்களின் படகு அதிலிருந்து விலகிச் செல்லும் விரைவை நீரை குனிந்து நோக்கி மதிப்பிட்ட சாத்யகி “இனி அவர்களால் நம்மை பிடிக்கமுடியாது” என்று கூவினான். “அவர்கள் மூன்றாவது பாயையும் அறுத்து விலக்காவிட்டால் அது நம்மைவிட்டு விலக்கியே கொண்டு செல்லும். அறுத்துவிட்டால் அவர்களால் அசைய முடியாது” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி “எப்படி கணித்தீர்கள் அதை?” என்றான். “அது மூன்று பாய் கொண்ட படகு. அதற்கு பீதர் பாய்முடிச்சு என்று பெயர். முதலிரு பாய்களால் அள்ளித்திருப்பப்படும் காற்றை வாங்கும் மூன்றாவது பாய்தான் அப்படகை செலுத்துகிறது. நாம் இரண்டை அறுத்துவிட்டோம்.”

காசியின் முதற்படகிலிருந்த வீரர்கள் மூன்றாவது பாயை அவிழ்த்து கீழே இறக்கினர். தத்தளித்தபடி திசை மாறிச் சென்ற படகு விரைவழிந்து நின்றது. “போர் முடிந்துவிட்டது பாஞ்சாலரே” என்றான் சாத்யகி. “ஆம். ஆனால் ஓரிருவரை நாம் மீண்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்றான் திருஷ்டத்யும்னன். எதிர்த்திசையிலிருந்து அவர்களை நோக்கி சங்கொலிக்க கொடிகள் அசைத்தபடி வந்த காசியின் காவல்படகுகளில் இருந்தவர்களை திருஷ்டத்யும்னன் மிக எளிதாக அம்பு தொடுத்து கொன்று வீழ்த்தினான். மூன்று படகுகளில் இருந்தவர்கள் அலறிச் சரிய நான்காவது படகு திரும்பி அவர்களை விட்டு விலகி ஓடியது.

திருஷ்டத்யும்னன் வில்லைத் தாழ்த்தியபடி முதுகை நிமிர்த்தி நின்று பெருமூச்சுவிட்டான். காசியின் நீரெல்லை கடப்பதை சாத்யகி அமர முனைக்கருகே நின்று நோக்கினான். அவன் கட்டுகளை மீறி குருதி மீண்டும் வழிந்து கச்சையையும் இடையில் அணிந்த ஆடையையும் நனைத்தது. முதியவீரர் “அழுத்தமான புண்” என்றார். திருஷ்டத்யும்னன் அதை திரும்பி நோக்கவில்லை. காசியின் எல்லை கடந்ததும் வீரன் ஒருவன் “கடந்துவிட்டோம்!” என்று உரக்கக் கூவினான். சாத்யகி தன்னுடலில் தசைகளனைத்தும் தளர்வதை உணர்ந்தான். “ஆம். வென்றுவிட்டோம் பாஞ்சாலரே” என்றான். திருஷ்டத்யும்னன் “ஆம்” என்றபின் அவன் முன்னால் அமர்ந்து “உமது காயம் பெரிது. நமது எல்லைக்குள் சென்றதும் மருத்துவரை வரச்சொல்லவேண்டும்” என்றான்.

சாத்யகி கங்கையை நோக்கி “நம்ப முடியாத போர்!” என்றபடி திரும்பிப் பார்த்தான். “கிருஷ்ணவபுஸின் பன்னிரு போர்ப்படகுகளுடன் காசியின் திசைதேர் பெரும்படகையும் வென்றிருக்கிறோம்” என்றான். களிப்புடன் கைகளை நீட்டி “பாஞ்சாலரே, உம்மால் யாதவர் முன் தலை தூக்கி நிற்கும் வாய்ப்பைப் பெற்றேன்” என்றான். திருஷ்டத்யும்னன் முகத்தில் உவகை ஏதும் தெரியவில்லை. வலக்கையால் மீசையை நீவியபடி “இங்கு நிகழ்ந்ததென்ன என்று இளைய யாதவரிடம் சொல்ல வேண்டியுள்ளது” என்றான். சாத்யகி “அவர் அஸ்தினபுரியில் அல்லவா இருக்கிறார்?” என்றான். “அவருக்கு எவ்வகையிலோ அனைத்தும் தெரியும்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான்.

சாத்யகி திடுக்கிட்ட நோக்குடன் “அனைத்தும் என்றால்?” என்றான். “இங்கு நிகழ்ந்தவை அனைத்தும்தான். தனது காய்கள் தானாக நகரும் திறன் கொண்டவை என்றறிந்த நாற்கள ஆட்டக்காரர் அவர். இங்கு எங்கோ மிக அருகே அவர் நமக்காக காத்திருக்கிறார். தான் செய்ய வேண்டியதென்ன என்பதை முன்னரே அறிந்திருக்கிறார்” என்றான் திருஷ்டத்யும்னன். பெருமூச்சுடன் உடலை அசைத்து அமர்ந்து “ஆம், இப்போது அனைத்தையும் என்னால் காண முடிகிறது” என்றான்.

“அக்ரூரரின் விழிகளில் ஒரு ஒளியின் அசைவை முதலில் நான் கண்டேன் யாதவரே. அது என்ன என்று அப்போது நான் வியந்தேன். அதே அசைவை கிருதவர்மன் விழிகளிலும் கண்டேன். நாகம் இருக்கும் புற்றுக்கு நம் அகம் மட்டுமே உணரும் அசைவொன்று உண்டு. அதைப் போன்றது அது” என்றான் திருஷ்டத்யும்னன். “அதை எப்போதோ இளைய யாதவர் கண்டிருப்பார். இந்த ஆடலுக்காக அவர்களை அதற்குத்தான் அவர் அனுப்பி இருக்கிறார்.”

சாத்யகி “நாம் யாதவர் படைகளுக்குள் நுழைவோம். மதுராவிலிருந்து முழுப்படையையும் கொண்டு கிருஷ்ணவபுஸுக்குள் நுழைந்து சததன்வாவையும் அவர்கள் இருவரையும் கொன்று அந்த மணியைக் கவர்ந்து இளைய யாதவரிடம் கொண்டு வைப்போம்” என்றான். திருஷ்டத்யும்னன் “என்னால் அதை செய்ய முடியும் யாதவரே. ஆனால் சியமந்தகத்தை நான் கொள்ளலாகாது. அது யாதவர்களுக்குரிய மணி. அதை வெல்ல வேண்டியவர் இளைய யாதவரே” என்றபின் “அந்த மணியும் அதைத்தான் விழைகிறது போலும்” என்றான்.

முந்தைய கட்டுரைந.பிச்சமூர்த்தியின் படைப்புப் பயணம்
அடுத்த கட்டுரைதாயார்பாதம், அறம்- அஸ்வத்