கோணங்கியின் குரல்

கோணங்கி தமிழ் விக்கி

பத்தாண்டுகளுக்கு முன்பு  Aug 12, 2010 ல் எழுதிய ஒரு குறிப்பு. கோணங்கியை புத்தகக் கண்காட்சியில் சந்தித்த நா.முத்துக்குமார் ஃபோனை என்னிடம் தந்துவிட்டார். ஒரு சிறு உரையாடல். அதை பதிவு செய்திருக்கிறேன். இன்று பார்க்கையில் ஒருவகையான ஏக்கம் மனதை நிறைக்கிறது. நா.முத்துக்குமாரின் நினைவுதான் காரணம் என நினைக்கிறேன்- ஜெ

நா.முத்துக்குமார் தொலைபேசியில் அழைத்தார் ”சார் நல்லா இருக்கீங்களா? கோணங்கி அண்ணன் இங்கதான் இருக்கார். புக்லேண்ட்ஸ் போனப்ப பாத்தேன். கொற்கை வாங்கிக்குடுடான்னார். வாங்கிட்டு வந்து சாப்பிட்டுட்டு பேசிட்டிருந்தோம். உங்களப்பத்தி பேசிட்டிருந்தப்ப போன போடுடான்னார். அதான். பேசறீங்களா. இந்தாங்க” என்று கோணங்கியின் கையில் கொடுத்துவிட்டார்.

லேசான திக்கலுடன் கூடிய கோணங்கியின் குரல் ”ஹலோ.”

நான் நாப்பழக்கமாக ”வணக்கம் கோணங்கி, எப்டி இருக்கீங்க?” என்றேன்.

”என்னடா வணக்கம்லாம் போடுறே? பெரிய மனுஷன் ஆய்ட்டியா? கார் வாங்கியாச்சா?”

நான் ”இன்னும் வாங்கலை. சாரி வாய்ல வந்திட்டுது” என்றேன்.

”சரிதான், எப்டி இருக்கே? அருண்மொழி பாப்பால்லாம் எப்டி இருக்காங்க? தம்பி பெங்களூர்லே சேந்துட்டான்னு சொன்னாங்க. நேத்துகூட உன் கொற்றவையைப் பத்தித்தான் பேசிட்டிருந்தேன். நாவல் நல்லா இருக்கு, ஆளு  இருக்கிற எடம் சரியிலேன்னு சொன்னேன்”

”நான் இப்பகூட என் வெப்சைட்ல உங்களப்பத்தி எழுதியிருந்தேன்.” என்றேன். எழுதியதைச் சொன்னேன், அவர் ஒரு தூய்மைவாதி. அந்தக்குரல் எனக்குள் ஓர் எச்சரிக்கையாக இருந்து கொண்டிருக்கவேண்டும் என்று.

”சரிதாண்டா நீ தப்பிச்சுக்குவே.. நீ எப்பவுமே ஒரு வெரதம் புடிக்கிற மனநிலை உள்ள ஆளு. தம்பி ராமகிருஷ்ணன்தான் மாட்டிக்கிட்டானோன்னு சந்தேகமா இருக்கு”

”நான் இங்க நாகர்கோயிலிலேதான் இருக்கேன். ஆனியாடிச்சாரல் அடிச்சிட்டிருக்கு. இந்தச் சாரலுக்குள்ள இருக்கிற வரைக்கும் ஒண்ணும் பயமில்லைன்னு தோணுது” என்றேன்.

கோணங்கி வாய் விட்டுச் சிரித்தார். ”இந்த மண்ணிலே எனக்கு வேற அடையாளமும் வேற மனசும் இருக்கு. இங்கேருந்து நான் எங்க வேணுமானாலும் போய்ட்டு வரலாம்”

”நம்ம உப்புமேலே நாம நின்னிட்டிருக்கணும்” என்றார் கோணங்கி.

நான் சொன்னேன், ”இன்னைக்கு காலையிலே நான் வேளிமலை அடிவாரமா வாக்கிங் போனேன். நல்ல சாரல்மழை. ஊசிகள வாரி வீசுற மாதிரி காத்தில மழை வந்து அடிச்சிட்டே இருந்தது. சானலோரமா வர்ரப்ப மண்சாலையிலே ஒரு மலைப்பாம்பு கிடக்கிறத பாத்தேன்.”

”மலைப்பாம்பா? பெரிசா?” ‘

”ஆமா தொடை சைசுக்கு இருக்கும். இங்க மலையடிவாரத்திலே மலைப்பாம்பு ரொம்ப சகஜம். ரெண்டு கிலோமீட்டர் உயரத்திலே பெரிய காடு இருக்குல்ல. முதல்ல ஏதோ மரக்கிளை மாதிரி தெரிஞ்சுது. பக்கத்திலே போய் பாத்தா அதான். எதையோ புடிச்சு தின்னுட்டு படுத்திருக்கு. வய்று ஏழு மாச கர்ப்பம் மாதிரி. என்ன பண்றதுன்னே தெரியலை. திரும்பி போகலாம்னா மனசு வரலை. தாண்டி வந்துடலாம்னா அதிலே ஒரு தப்பு இருக்கிறதா தோணிச்சு. அரைமணிநேரம் அங்கதான் நின்னிட்டிருந்தேன். இன்னொருத்தர் வர்ர சத்தம் கேட்டப்ப மெதுவா நகர்ந்து புதருக்குள்ள போய்ட்டுது”

கோணங்கி சிரித்தார் ”பாம்பு வந்துட்டே இருக்கணும்டா, அதுதான் நமக்கெல்லாம் வழிகாட்டணும். இந்த நகரத்திலே பாம்போட நெழல் கூட வர்ரதில்லை.”

நான் சிரித்துக்கொண்டு ”வேற ஒரு காலத்திலே அது படுத்திருக்கு. அங்க எல்லாமே ரொம்ப மெதுவா நடந்திட்டிருக்கு. நகந்து போனதுகூட மெதுவா தண்ணி ஓடுறமாதிரித்தான்”

”பாம்புகள் வரணும். நம்மள அப்பப்ப வழிமறிக்கனும்” என்றார்.

”என்ன மெட்றாசிலே வேலை?”

”என்ன வேலை, ஒண்ணுமே இல்லை. பாண்டிச்சேரியிலே முருகபூபதி நாடகம். அங்க போய்ட்டு அப்டியே சிட்டிய பாத்துட்டு போகலாம்னு வந்தேன். கிறுக்கு புடிச்சதுமாதிரி இரைச்சலா இருக்கு. இதுக்குள்ள வந்தா ஒண்ணுமே மிஞ்சாது. நீ சொன்னது சரிதான். தம்பி ராமகிருஷ்ணன் கிட்டே சொல்லணும், வேண்டாம்டா பேசாம ஊருக்கே போய் இருன்னுட்டு.”

”அது அவ்ளவு ஈஸியா என்ன? எம்.டி.வாசுதேவன் நாயரோட ஒரு வரி இருக்கு. நகரம் ஒரு கிழட்டு வேசின்னு. நமக்கு அவள அருவருப்பு. ஆனா நம்மள எப்டி புடிச்சு வச்சுக்கிடறதுன்னு அவளுக்கு தெரியும்.”

கோணங்கி அதற்கும் சிரித்தார். ”கொஞ்ச நாளிலே எல்லாருக்கும் புடிச்சு போய்டுது. அப்றம் அப்பத்தா அப்பச்சி கிராமம் எல்லாம் பேப்பரிலே இருந்தாத்தான் நல்லா இருக்குன்னு படுது.”

நான் சிரித்தேன்.

”டேய் நான் என்ன சொல்றேன்னா நாமள்லாம் மெட்றாஸுக்கு வந்தா மெட்ராஸ் நம்மள வேடிக்கை பாக்கணும். நாம ஊருக்குப்போனா நம்மள ஊரு வேடிக்கை பாக்கிற மாதிரி ஆயிடக்கூடாது. நம்ம உப்பு அங்க இருக்கு. அதுமேல நாம இருந்திட்டிருக்கணும். என்ன?” என்றார் கோணங்கி. ”இந்த கொற்கை எப்டி இருக்கு?”

”நான் இன்னும் முழுசா படிக்கலை. கிரியேட்டிவா வராத பகுதிகள் நிறைய இருக்கும். சும்மா தகவல்தகவலா போய்ட்டே இருக்கு. ஒட்டுமொத்தமா வடிவமும் கைக்கு நிக்கலை. ஆனா நெறைய பகுதிகள ரொம்ப நல்லா உணர்ச்சிகரமா எழுதியிருக்கார். முக்கியமான முயற்சின்னுதான் சொல்லணும்…”

”சரிதான், படிச்சுப் பாக்கறேன். தம்பி உசிரக்கொடுத்து எழுதியிருக்கான்ல” என்றார் கோணங்கி.

”..வெங்கசேடன் நாவல் படிச்சியா? இவன் இல்ல. இவனப்பத்தி நீ எழுதியிருந்தத வாசிச்சேன். பல பகுதிகளிலே கொஞ்சம் ஓவரா போய்ட்டியோன்னு பட்டுது. இருந்தாலும் இந்தளவுக்கு முக்கியமா நெனைச்சு விரிவா எழுதியிருக்கே. அது நல்ல விஷயம். நான் சொல்றது அவனை, ஓசூர் வெங்கடேசன்.”

”தாண்டவராயன் கதைதானே? படிச்சேன்.”

”நீ எழுதுவேன்னு நினைச்சேன்.”

”இன்னொருவாட்டி பாத்துட்டு கொஞ்சம் விரிவாகவே எழுதலாம்னு நினைக்கிறேன்.”

”நீ என்ன நெனைக்கிறே?”

”இந்த வகையான நாவல் சரித்திரத்த திருப்பிச் சொல்றது. இப்ப கோயில்பட்டியிலே வெள்ளைக்காரங்க வந்த வரலாறு ஒண்ணு இருக்கும். ஊரிலே இருக்கிற அப்பத்தாகிட்ட கேட்டா அது ஒரு வரலாற்ற சொல்லும். முத்தாரம்மன் கோயில் சாமிகொண்டாடி இன்னொரு வரலாற்ற சொல்வார். வரலாறு ஒண்ணுக்கு அடியில இன்னொண்ணா படிஞ்சிருக்கு. அந்த சிக்கலான அடுக்குகள ஃபிக்ஷனோட சுதந்திரத்த பயன்படுத்திகிட்டு சொல்ற கதை. வெளிநாட்டிலே நெறைய முயற்சி பண்ணியிருக்காங்க. இப்ப படிச்ச 2066ங்கிற நாவல்கூட அந்த வகை. ராபர்ட்டோ பொலானோ எழுதினது. தாண்டவராயன்கதை ஒரு துணிச்சலான பெரிய அட்டெம்ப்ட். அம்பிஷியஸ்னு சொல்லணும். அதுக்காகவே அந்தாளை பாத்தா கட்டிப்பிடிச்சுக்கிடணும் நாமள்லாம். ஆனா அந்த வகையான ஒரு நாவலை கிரியேட்டிவா வெற்றிபெற வைக்கிறதுக்கு ரெண்டு விஷயம் தேவை. ஒண்ணு பெரிய நகைச்சுவை உணர்ச்சி. சும்மா ஐரனியும் சட்டயருமா கொப்பளிக்கணும். ரெண்டு கவித்துவம். வரிகள் ஒவ்வொண்ணும் கவிதையா திருகிக்கணும். இது ரெண்டுமே இதில வீக்கா இருக்கு. அதனால மொழி சலிப்பூட்டுது. நாவலோட கட்டமைப்பு நல்லா இருக்கு. டீடெய்ல் அழகா இல்ல.. இது முதல்ல ஒருநல்ல மொழியனுபவமா ஆகியிருக்கணும். அப்டி ஆகலை”

”பலசமயம் அவன் என்கிட்ட இதோட சேப்டர்ஸ குடுத்து வாசிக்கச் சொல்லியிருக்காண்டா. பல ஏரியா ரொம்ப நல்லா இருந்தது” என்றார் கோணங்கி.

”கண்டிப்பா, சரித்திரத்தோட சாத்தியமும் சரித்திரமும் பின்னிப்பிணையற பல எடங்கள் அற்புதமா வந்திருக்கு. அவர் மண்டையால மோதி உடைச்சு வழிய திறக்க முயற்சி செஞ்சிருக்கார், பெரிய அட்டெம்ட். அதனால தமிழிலே முக்கியமான ஒரு நாவல்தான். சந்தேகமே இல்லை. ஆனா இதான், இன்னும் கொஞ்சம் கிறுக்கு இருந்திருக்கலாம்” என்றேன்.

கோணங்கி வெடித்துச் சிரித்து ”மண்டையில கிறுக்கு இல்லேன்னா என்ன பண்றது,  கிறுக்கு வேணும் அப்பதான் மொழி கிட்டக்க வருது. யோசிச்சு பிடிக்கப்போனா பறந்திடுது” என்றார்

”என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”

”மறுபடி நாவல்தான், தஞ்சாவூர் பேக்கிரவுண்டிலே. காவேரிதான். முலைசூம்பி கருத்துப்போயி கிடக்காள்ல.  அவளோட கதை, எழுதிட்டு இருக்கேன். பாதிய கிழிச்சு போடுறது. வந்திரும்னு நினைக்கிறேன்” கோணங்கி சொன்னார்.

“எறங்கிருங்க” என்றேன்.

”…இப்ப நீ நான் ராமகிருஷ்ணன் ரெண்டு வெங்கடேசனுங்க எல்லாரும் ஏதேதோ தெசையிலே என்னென்னவோ பண்ணிட்டிருக்கோம்டா. சமீபத்திலே நாவலிலே செஞ்சிருக்கிற முயற்சிகள்தான் தமிழிலக்கியத்திலேயே மேஜர் அட்டெம்ப்டுன்னு நெனைக்கிரேன். ஆனா ஒருத்தருக்கொருத்தர் சந்திக்கிறதே இல்லை. நீ ஒருத்தந்தான் எல்லார்த்துக்கும் வேண்டியவனா கொஞ்சம் தொடர்புகள வச்சிட்டிருக்கே. ஒரு எடத்திலே கூடி உக்காந்து இதப்பத்தி பேசணும். எல்லாருக்கும் சேலஞ்சஸ் இருக்கு. என்னென்னமோ செஞ்சு பாக்கறோம். மொழி ஒருபக்கம். லைஃப் இன்னொரு பக்கம் போட்டு இழுத்திட்டிருக்கு.” என்றார் கோணங்கி. ”நாம எங்கியாவது சந்திக்கணும், உக்காந்து பேசணும், நீ ஏதாவது பண்ணு.”

”நானும் அதே மாதிரித்தான் நினைக்கிறேன்.” என்றேன். ”இருக்கிறதிலேயே பெரிய முயற்சிகள் நாவலிலேதான் நடக்குது. கொற்கைய எடுத்துப்பாத்தாக்கூட எவ்வளவு பெரிய கனவோட எறங்கியிருக்கார். அந்த மாதிரி கனவு வேற எந்த ஏரியாவிலேயும் இப்ப தமிழிலே இல்ல. எல்லாருமே ஒரு பொது திட்டத்தோட இருக்காங்க. நம்ம சரித்திரத்த சொல்ல முயற்சி செய்றாங்க. வேற யாரோ சொன்ன நம்ம சரித்திரத்த நாமளே சொல்லிப்பாப்பமேன்னு டிரை பண்றாங்க. ண்டு வெங்கடேசனும் ரெண்டு திசையிலே டிரை பண்றாங்க. பேசிப்பாக்கலாம். பாப்போம்” என்றேன்

கோணங்கி ” மலைப்பாம்புகள பத்தி பேசுவோம். நம்ம வழிகளுக்கு குறுக்க கெடக்கே அசையாம. சரிடா பாப்போம். பாப்பாக்கிட்ட சொல்லு” என்றார்.

முத்துக்குமார் ”சரி சார் நான் மறுபடி கூப்பிடறேன்” என்றார்.

கோணங்கியின் குரல் காதுகளில் எஞ்சியிருந்தது. நானும் மலைப்பாம்பைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தேன். ஆகப்பெரியதை விழுங்கிவிட்டு மண்ணைப்போல மௌனமாக செரித்தபடி மண்ணில் ஒட்டிக்கிடக்கும் மலைப்பாம்பைப் பற்றி.

Aug 12, 2010

அஞ்சலி- நா.முத்துக்குமார்

முந்தைய கட்டுரைகருத்து ஜனநாயகம் – ஒரு விளக்கம்
அடுத்த கட்டுரைகனசியாம யோகம்