ஊமைச்செந்நாய் (குறுநாவல்) : 1

சிறுகதை
யானைத்துப்பாக்கியை தூக்கி தனக்கு இணையாக நிறுத்திக்கொண்டு துரை என்னைப்பார்த்து கண்ணைச்சிமிட்டினான். பெரும்பாலான துரைகளுக்கு கண்களைச் சிமிட்டும் பழக்கம் உண்டு. சின்னவயதில் நானும் என்ன செய்வதென்று தெரியாமல் பதிலுக்கு கண்களைச் சிமிட்டிக் காட்டுவேன். அது துரைகளுக்கு கோபத்தை உருவாக்கும் என்று சீக்கிரமே புரிந்து கொண்டேன். அதன்பின் முப்பதுவருட வேட்டைத்துணைவனின் வாழ்க்கையில் நான் மிகமிக அமைதியாக இருக்கக் கற்றுக்கொண்டேன். வேட்டை நாய் எப்படி இருக்குமோ அப்படி இருப்பேன். நான் கூடச்செல்வதே தெரியாது. தேவையான இடத்தில் மட்டும் சைகை செய்வேன். சைகைமூலம் சொல்லமுடியாத விஷயத்துக்கு மட்டும் குரல். அதுவும் ஒருசொல் அல்லது இரண்டு சொல். எனக்கு ஆங்கிலம் சொற்களாகத்தான் தெரியும். ஆகவே என்னை ‘ஊமைச்செந்நாய்’ என்று அவர்கள் அழைத்தார்கள்.

”என்னை வில்சன் என்று கூப்பிடு” என்றான் துரை. அவனுக்கு நாற்பது வயதுதான் இருக்கும். ஆனால் நம்மூரில் நாற்பதுவயதில் இருபது வயதான மகன் வந்து அவனுக்கும் பிள்ளை பிறந்து தாத்தா ஆகி மிச்சமிருக்கும் நாட்களை எண்ண ஆரம்பித்திருப்பார்கள். தொப்பை சரிந்து தடைக்கு கீழே சதை தொங்கி கண்ணுக்கு கீழே கறை விழுந்து தெரிவார்கள். துரை இறுக்கமாக பனைநாரால் பின்னிச் செய்தவன்போல இருந்தான். நரம்புகள் பச்சை நிறமாக தோளிலும் கழுத்திலும் கைகளிலும் தெரிந்தன. உதடே கிடையாது.காட்டுபூனையின் கண்கள். இரு பக்கங்களிலும் கைகளைக் கொடுத்து அழுத்திச் சப்பியது போன்ற முகம் அவனுக்கு. மூக்கு நீளமாக வயதான கழுகின் அலகு போல. தேங்காய்நார்போன்ற தலைமுடி. சேற்றுப்பாறை போல மடிப்பு மடிப்பாக இறுகி இருந்த அவன் வயிற்றைப் பார்ப்பவர்கள் அவன் ஒரே வேளையில் இரண்டு காட்டுச்சேவல்களைத் தின்பவன் என்று நம்ப மாட்டார்கள்.

துரையளவுக்கு உயரம் இருந்தது துப்பாக்கி. அதன் கட்டைக்கு நல்ல ஈட்டியை போட்டிருந்தார்கள். கைபட்டு கைபட்டு எண்ணை ஊறி வழவழப்பாக கறுத்திருந்த அந்த தடி ராஜநாகம் போலிருந்தது. அதன்மீது நல்ல மினுமினுக்கும் உருக்கில் இரட்டைக்குழாய்கள். துப்பாக்கியின் விசைக்கொண்டி பித்தளை. அதில் விரல்படும் இடம் பொன்னிறமாக இருந்தது. சொந்த தம்பியை கூட நிறுத்தி அணைத்துக் கொள்பவன்போல துரை நின்று புளியங்கொட்டைகள் போன்ற பற்களைக் காட்டி சிரித்தான். ”எப்படி இருக்கிறது?” என்றான். நான் புன்னகை செய்தேன்.”ஒரே குண்டுபோதும். மத்தகம் பிளந்து மூளை வெளியே கொட்டும்….வெண்ணைப்பானை உடைவது போல” நான் அவன் சொன்னதைப் புரிந்துகொண்டாலும் அதே புன்னகையை மட்டும் காட்டினேன்.

”நாம் நாளைக்காலை கிளம்புவோம். விடிவதற்கு முன்பாக…”என்றான் துரை.  நான் அதற்கும் புன்னகை மட்டுமே செய்தேன். துப்பாக்கியை மெல்ல சாற்றிவிட்டு அவன் நாற்காலியில் அமர்ந்தான். கால்மேல் கால் போட்டுக்கொண்டு ஒரு வெள்ளி சம்புடத்தை எடுத்து திறந்து உள்ளிருந்து ஒரு சுருட்டை எடுத்து வாயில் வைத்துக்கொண்டான். கரிய ஆண்குறி போல பெரிய சுருட்டு. அதை பற்றவைக்க அவனிடம் ஒரு கருவி இருந்தது. அதை பலமுறை சொடுக்குவான். சிட்டுக்குருவி சிலைப்பு போன்ற அந்த ஒலி எனக்குப் பிடிப்பதில்லை. என் முதுகு சிலிர்த்துக் கொண்டிருக்கும். அதில் சுடர் அடியில்சிவப்புள்ள நீலநிறத்தில் சங்குபுஷ்ப இதழ் போல எரிய ஆரம்பித்ததும் அதில் சுருட்டை கருக்குவான். சுருட்டு புகைய ஆரம்பிப்பது எனக்குப் பிடிக்கும். பின்னர் புகையை ஊதி உள்ளிழுத்து மூக்கு வாய் வழியாக வெளியே விடுவான். அவன் வரும் மோட்டாரின் பின்பக்கம் அதேபோலத்தான் புகை எழுகிறது.

நான் நின்றுகொண்டிருந்தேன். துரை என்னைப் பார்த்து ”ஒரு சுருட்டு எடுத்துக்கொள்”என்றான். நான் அதை மறுத்தேன். மறுக்க வேண்டும் என்றுதான் துரைகள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அந்தச்சுருட்டு அதன் காகிதச் சுருள் வரை வந்ததும் எனக்கு தந்துவிடுவார்கள். நான் அப்படி நிறைய சுருட்டு வைத்திருந்தேன். என் மடியில் கூட இரண்டு சுருட்டுத்துண்டுகள் இருந்தன. தினம் இரு முறை நான் சுருட்டு பிடிப்பேன். சாராயம் குடித்தபின் சுருட்டை இழுக்க மிகவும் பிடிக்கும். துரையின் பற்களில் சுருட்டுக்கறை அடுப்புக்கல் போல பழுத்திருந்தது. அவன் சுருட்டு பிடிக்கும்போது ஏதாவது ஒரு திசையைக் கூர்ந்து பார்ப்பான். மெல்ல ஆங்கிலத்தில் முனகிக் கொள்வான். அது பெரும்பாலும் ஏதாவது பாட்டாக இருக்கும்.

துரை என்னிடம் மிஞ்சிய சுருட்டைத் தந்ததும் நான் அதை வாங்கி குத்தி அணைத்து மடியில் வைத்துக் கொண்டேன். மெதுவாக பின்னுக்கு நகர்ந்து பங்களாவின் பின்பக்கம் சமையலறைக்குச் சென்றேன். தோமா சமையல் செய்துகொண்டிருந்தான். நான் வெளியே நின்றேன். ”எந்தா கோணா, எந்து காரியம்?” என்றான். நான் மெல்ல ”சோறு?” என்றேன். ”இரியெடே…சாயிப்பு உண்டிட்டில்ல….நினக்கு நாய்க்கும் பின்னீடு ஆவாம்…” என்றான்.

நான் சமையலறையின் சிறிய வராந்தாவிலேயே அமர்ந்திருந்தேன். பங்களாவின் முன்னால் நின்ற பெரிய இலந்தைமரத்தின் உச்சியில் ஒரு தேன்கூடு, அல்ல அது பழஉண்ணி. பெரியது. நிதானமாக, கொடிக்கயிறில் மழைத்துளி போவதுபோல,  கிளைவழியாகச் சென்றது. பழ உண்ணியைப் பிடிக்கவேண்டுமென்றால் அதன் வழியை நன்றாக கவனித்தபின் அங்கே பொறி வைக்க வேண்டும். அதன் வழியைக் கண்டுபிடிப்பது எளியது. முகர்ந்துபார்த்தால் போதும். பழ உண்ணி தலைகீழாக கிளையில் நகர்ந்து இலைகளுக்குள் சென்றது.

பெரிய தட்டில் முழுதாகப் பொரித்த இரண்டு வான்கோழிகளுடன் தோமா முன் அறைக்குச் சென்றான். பிறகு சீமைப்பலாவும் பன்றியிறைச்சியும் போட்டுச்செய்த கறி, செங்கல் போன்ற பெரிய ரொட்டி, ஒரு பெரிய கண்ணாடி குடுவை நிறைய  நிறைய பொன்னிறமான அன்னாசிப் பழச்சாறு. பெரிய வெள்ளைத்தகரப்பாத்திரம் நிறைய வெங்காயம் வெள்ளரிக்காய் உப்பு போட்ட முள்ளங்கி துண்டுகள். அவன் உள்ளே அவற்றை பரப்பி வைப்பதை என்னால் காண முடிந்தது. பங்களாவின் ஜன்னல்கள் மிகவும் பெரியவை. தாழ்வானவையும்கூட.  தோமா அங்கே தொங்கிய ஒரு நாழிமணியின் நாவை பிடித்து ஒருமுறை அடித்தான்.

துரை எழுந்து வந்து ஒரு வெண்ணிறத் துண்டை கழுத்தில் கட்டிக்கொண்டு அமர்ந்து கொண்டான். மனைவி போல தோமா அருகே நின்று துரைக்கு முதலில் காய்கறிக¨ளை பரிமாறினான். துரை பூனைக்கால் கரண்டியால் அவற்றைக் குத்தி எடுத்து வாயிலிட்டு உதடுகளை மூடிக்கொண்டு மென்று தின்றான். அவனது சவரம் செய்யப்பட்ட தாடை உரித்த கோழியின் தொடை போல சிவப்பாக இருந்தது. அவன் மெல்வதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பின் வான்கோழிகளை கத்தியால் வெட்டி பூனைக்கால் கரண்டியால் குத்தி பிய்த்து தின்றான். அவன் பழச்சாறை குடித்து முடித்ததும் அருகே நின்ற தோமா அவன் வாயை துடைத்தான்.

நான் காத்திருந்தேன். தோமா தட்டுகளுடன் வந்தான்.  அவற்றில் வான்மோழியின் எலும்புகளும் கொஞ்சம் சதையும் இருந்தன. தோமா தனக்காக சோறு பொங்குவான். தேங்காய் போட்டு வான்கோழிக் குழம்பும் வைப்பான்.  கொஞ்ச நேரத்தில் எனக்கு சட்டியில் சோறு வந்தது. வான் கோழிக்குழம்பு ஊற்றப்பட்டிருந்தாலும் துண்டுகள் இல்லை. துரை மிச்சம் வைத்த பொரித்த கோழி எலும்புகளை சோற்றுடன் சேர்த்து போட்டிருந்தான். நான் ஆவலுடன் சோற்றை வாரி வாரித் தின்றேன். நான் காலைமுதலே ஒன்றும் சாப்பிடவில்லை. மேலும் எனக்கு வேகமாக தின்றுதான் பழக்கம்.

சுருட்டை எடுத்து மூக்கில் வைத்து அதன் வாசனையை முகர்ந்த பிறகு நான் மெல்ல நழுவி கக்கூஸ் சுவருக்கு அருகே அமர்ந்து என் கச்சையில் இருந்து சிக்கிக்கல்லை எடுத்து உரசி நுங்கெண்ணை தோய்த்த பஞ்சுப் பிசிறை பற்ற வைத்து சுருட்டை கொளுத்தினேன். அதை ஆழமாக இழுத்து மெல்லமெல்ல விட்டேன். என் மனதில் சிந்தனைகள் நிறைந்தன. ஆனால் நான் எதைப்பற்றி சிந்திக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை.

தோமா என்னை அழைத்த ஒலி கேட்டு ஓடிச்சென்றேன். ”சாயிப்பினு பெண்ணு வேணும்…ஓடிப்போ”. நான் கொல்லைப்பக்கம் பள்ளத்தில் இறங்கி ஊடு வழியை அடைந்து அதன்வழியாக காட்டுக்குள் சென்றேன். காட்டுக்குள் மதிய வெயில் ஆறுவதன் வெக்கை இலைமணத்துடன் கலந்து வீசியது. ஒரு கீரி என் வழியை கடந்து சென்றது. செள்ளைப்பாறை ஏறி மறுபக்கம் சென்று ஒடைக்கரையில் இருந்த குடிகளை அடைந்தேன். என்னைக்கண்டதும் அங்கே கூவைக்காயை உரலில் இடித்துக்கொண்டிருந்த பெண்கள் வேலையை நிறுத்தி கூர்ந்து பார்த்தாகள்.

”துரையினு கூட்டு வரணும்” என்று சொன்னேன். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. தரையில் இருந்த சேவப்பெண்ணை பார்த்தார்கள். சேவப்பெண்ணை நான் பையனாக இருந்தபோது பார்த்திருக்கிறேன். அப்போது அவள் முலைகள் தேங்காய் போல இருக்கும். இப்போது அவை தூக்கணாங்குருவிக்கூடுகள் போல இருந்தன. சேவப்பெண்ணு என்னை பார்த்து ”நீயல்லடா எரப்ப நாயி?” என்றாள். நான் புன்னகைத்தேன். ”சோதி நீ போயிட்டு வாயெடீ” என்றாள் கிழவி. ”சோதி வேண்டா…” என்றேன் ”துரை அடிப்பான்” கிழவி தூ என்று துப்பி ”சோதி மதி…நீ போடி பெண்ணே”என்றாள்

சோதி என்னுடன் வரும்போது தலை குனிந்து மெல்ல அழுதபடியே வந்தாள். விசும்பல் ஒலி கேட்டு நான் ”நீ எந்தெடீ குட்டி கரையுந்நே?” என்றேன். அவள் தூ என்று தரையில் துப்பினாள். நான் அதன்பின் அவளைப் பார்க்கவில்லை. நாங்கள் மீண்டும் பங்களாவை அடைந்தபோது தோமா வாசலிலேயே நின்றான். ”இவளா? இவளை அந்நு சாயிப்பு சாட்டை கொண்டு அடிச்சானே”என்றான்.

தோமா சோதியை கூட்டிச்சென்று முற்றத்தில் வைத்தே அவளுடைய முண்டுகோந்தலையை அவிழ்த்து நிர்வாணமாக ஆக்கினான். அவள் தன் கையால் முலைகளை பொத்தியபடி கண்ணீருடன் என்னைப் பார்த்தாள். அவளுடைய பின்பக்கம் பருத்து இரு பலாக்காய்களை சேர்த்து வைத்தது போல் இருந்தது. தோமா அவள் புட்டத்த்¢ல் படீரென்று அடித்து ”போ போ” என்றாள். அவள் தயங்கி உள்ளே செல்வதற்கு முன் என்னை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

நான் வராந்தாவில் மீண்டும் கால் மடித்து அமர்ந்துகொண்டேன். தோமா பக்கவாட்டில் சென்று நின்று ஜன்னல் வழியாக உள்ளே பார்த்து சிரித்தான். திரும்பி என்னைப்பார்த்து வா வா என்று கைகாட்டினான். நான் எழுந்து தோமாவின் அருகே நின்றேன். உள்ளே துரை நிர்வாணமாக நின்று தரையில்  அமர்ந்திருந்த சோதியின் முகத்தை தன் இடுப்புடன் சேர்த்து, அவள் தலைமயிரைப் பிடித்து இறுக்கி வேகமாக அசைத்தான். அவள் மூச்சுத்திணறி துடித்துக் கொண்டிருந்தாள்.

தோமா என்னிடம் பெரிய பற்களைக் காட்டி சிரித்தான். நான் பேசாமல் நின்றேன். கொஞ்ச நேரத்தில் துரை மாட்டுத்தோல் சாட்டையால் சோதியை அடித்துக்கொண்டே நரி குழறுவது போல ஏதோ சொன்னபடி அவளை துரத்தி வந்தான். அவள் முலைகள் குலுங்க ”என்றே தேவே…என்றெ தேவே”என்று அலறியபடி ஓடி வந்து முற்றத்தில் நின்றாள். நிர்வாணமாக வந்த துரை முற்றத்தில் துப்பி விட்டு உள்ளே போனாள். சோதி தரையில் குந்தி அமர்ந்து ஓங்கரித்து கோழையைத் துப்பினாள்.

தோமா அவளை தலைமுடியைப் பிடித்து தூக்கி சமையலறைக்குள் இழுத்துக் கொண்டு சென்றான். அவள் ”என்றெ தேவே என்றெ தேவே’ என்று சொல்லி அழுதுகொண்டிருந்தாள். அவன் உள்ளே சென்றதுமே அவளை கீழே தள்ளிப் போட்டு மேலே படுத்துக் கொண்டான். நான் அவன் செய்வதை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பழ உண்ணி கீழே இறங்கி வருவதைக் கண்டேன். அது அடுத்த மரம் நோக்கி வேகமாக ஓடிப்போய் ஏறிக் கொண்டது.

நிர்வாணமாக சோதி வந்து என்னிடம் அவளுடைய முண்டுதுணியை எடுத்து தரச்சொன்னாள். நான் எடுத்துக் கொடுத்ததும் அதை அவள் தோளில் முடிச்சிட்டு தற்றுடுத்துக் கொண்டாள். தோமா பீடி பற்ற வைத்தபடி உள்ளிருந்து வந்து ”இந்நாடீ , இதெடுத்தோ”என்றான். அவன் சுட்டிக்காட்டிய பெரிய சட்டியில் பழையசோறும் வான்கோழிக்கறியும் சேர்த்து கொட்டப்பட்டிருந்தது. சோதி அந்த சட்டியை எடுத்துக் கொண்டாள்.

நாங்கள் நடந்து செல்லும்போது அவள் தலைகுனிந்தே வந்தாள். நான் சட்டியை வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டேன். அவள் திரும்பியே பார்க்கவில்லை. முச்சலோடை அருகே வந்தபோது அவள் சட்டியை கீழே வைத்துவிட்டு முண்டுசுற்றை அவிழ்த்து கரையில் வைத்துவிட்டு நீரில் இறங்கினாள். அவளுடைய முலைகள் நீரில் மிதப்பதைப் பார்த்துக்கொண்டு இலஞ்சி மரத்து வேரில் அமர்ந்திருந்தேன். அவள் என்¨னைப் பார்க்கவில்லை. நீரில் இருந்தபடியே சேற்றுமண் எடுத்து பல் தேய்த்தாள். பிறகு எழுந்து வந்து என்னை தாண்டிச்சென்று உடையை எடுத்தாள். அவளை நான் திரும்பிப்பார்த்தபோது அவள் கூந்தல் புட்டத்தில் நீரைச் சொட்டிக்கொண்டிருந்தது.

சட்டென்று சோதி என்னை பின்னாலிருந்து வந்து அணைத்துக் கொண்டாள். அவளுடைய குளிரான கனத்த முலைகளை நான் என் முதுகில் உணர்ந்தேன். உடனே நான் அவளை திரும்பி தழுவிக்கொண்டேன். அவளுடைய கைகளும் கால்களும் என்னை இறுக்கிக் கொண்டன. அவள் என்னை ”நாயே நாயே” என்று திட்டிக்கொண்டும் என் முதுகை தன் நகங்களால் பிராண்டிக்கொண்டும் இருந்தாள். கடைசியில் என் தோளில் அத்தனை பற்களும் பதிந்து ரத்தம் வரும் அளவுக்கு கடித்தாள்.

பின்னர் நாங்கள் இருவரும் ஓடையில் இறங்கிக் குளித்தோம். இலவம்பஞ்சு வெடித்ததுபோல சிறிய வெண்பற்கள் காட்டி அவள் சிரித்து என் மீது வண்டலை வாரி வீசினாள். நான் குளித்தபின் என்னுடைய காக்கி நிக்கரையே மீண்டும் அணிந்துகொண்டேன். எனக்கு ஒரே நிக்கர்தான் உண்டு. அவள் எழுந்து தன் உடைகளை அணிந்து கொண்டு சட்டியை எடுத்தாள். என்னிடம் ”பயிக்கிணா?” என்றாள். எனக்குப் பசித்தது. ”ஆந்நே” என்றேன்.

அவள் ஒரு தேக்கிலையை பறித்து பரப்பி அதில் குழம்பு கலந்த பழைய சோற்றை போட்டாள். நான் வேகமாக தின்றேன். ”தோனே  வேணுமா?” என்று கேட்டபோது தலையாட்டினேன். நானே எல்லா சோற்றையும் தின்றுவிட்டேன். அவள் சட்டியை ஓடையில் கழுவினாள். நான் ”நினக்கு நான் மானிறைச்சி தரும்”என்றேன். ”எப்போ?” என்றாள். ”நெலாவு கறுக்கும்போ…நாளையிலெ நான் ஆனை வேட்டைக்கு போகும்”என்றேன். அவள் என்னைப் பார்த்தபடி கொஞ்ச நேரம் இருந்துவிட்டு ”காரிக்கொம்பனையா?”என்றாள். ”ஓ” என்றேன்.

சோதி ”காரிக்கொம்பனுக்கு மலதெய்வம் மாதி துணையுண்டு….தீயுண்டை அவன்டெ மேலே கொள்ளுகில்ல”என்றாள். நான் மலைதெய்வங்கள் துரைகளைப் பார்த்தால் பயபப்டும் என்றேன். மலைதெய்வங்களெல்லாம் இப்போது மலைதாண்டி பாண்டிநாட்டுக்கு போய்விட்டன என்று தோமா என்னிடம் சொன்னான். சத்திய வேத தெய்வம் மட்டும்தான் இனி மலைகளுக்கு தெய்வம். அது துரைகளுக்குக் கட்டுப்பட்ட தெய்வம். அந்த தெய்வம் யானைகளுக்குக் காப்பு அல்ல. ஆகவே காரிக்கொம்பனை துரை கண்டிப்பாகக் கொல்வார்.

சோதி பேசாமல் எழுந்து சட்டியுடன் நடந்தாள். நான் அவள் பின்னால் சென்றேன். அவளை பின்தொடர்ந்து சென்று சத்தியவேத தெய்வத்தைப்பற்றி தோமா சொன்னதைச் சொல்ல விரும்பினேன். சோதியின் குழந்தைகளுக்கு தேன் கொண்டு கொடுக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான் அந்த பழ உண்ணியைப்பற்றி நினைக்க ஆரம்பித்தேன்.

சோதியைவிட்டுவிட்டு நான் திரும்பி வந்தேன். தோமா சமையல் அறைக்குள் வாயை திறந்து வைத்து கனத்த குரட்டை விட்டுக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தான். நான் அவனைப்பார்த்தபின் மெல்ல உள்ளே போய் சட்டியை திறந்து மிஞ்சியிருந்த கோழிக்கறியின் துண்டுகளை எடுத்துத் தின்றேன். அதன்பின்னர் பங்களாவுக்கு வந்தேன். துரை உள்ளே குரட்டை விடும் ஒலி கேட்டது. நான் மெல்ல நடந்து உள்ளே சென்றேன்.

துரையின் மேஜைமீது நீலநிறமான வாத்துக்கழுத்து குப்பியில் சீமைச்சாராயம் இருந்தது. மெல்லிய கண்ணாடியால் ஆன கொக்குக்கால் கோப்பையில் கொஞ்சம் சாராயம் மிச்சம் இருந்தது. நான் சராயத்தை ஊற்றி நாலைந்து முறை குடித்தேன். பின் அந்தக் குப்பியில் இருந்தும் கொஞ்சம் குடித்தேன்.காட்டில் அம்மச்சிப்பலா அருகே பலாப்பழம் பழுத்து உதிர்ந்து அழுகி நாறுவது போல ஒரு இனிமையான குமட்டல் அதற்கு.

அதன் பின் மெல்ல உள் அறைக்குச் சென்றேன். அங்கே அந்த யானைத்துப்பாக்கி சுவரில் மாட்டப்பட்டு நின்றிருந்தது. அதை கையில் எடுத்துப்பார்த்தேன். பெண்ணின் கை போலவே மென்மையாக இருந்தது. அதன் குழாயில் என்னுடைய பிம்பம் சப்பிப்போய் தெரிந்தது. அதை திறந்து குழாய் வழியாக கண்ணை வைத்துப் பார்த்தேன். இரண்டு குண்டுகளை அதில் ஒரே சமயம் போட முடியும். குழாய்க்கு ஒரு குண்டு. அதன் வழியாக நான் ஜன்னலுக்கு அப்பால் தெரிந்த காட்டை பார்த்தேன். எனக்கு பாட வேண்டும் போலிருந்தது. எனக்கு சின்ன வயதில் என் தாத்தா சொல்லித்தந்த பாட்டை பாடினேன்.

கன்னங்கறுத்திட்ட பாறையாணே -ஓளே
பென்னம்பெரியொரு பாறையாணே
தும்பிக்கை உள்ளொரு பாறையாணே -ஓளே
அம்பரம் போலத்தே பாறையாணே…
[ 2 ]
மறுநாள் அதிகாலையில் நான் குளிருக்குள் எழுந்து தோமாவை எழுப்பினேன். அவன் என்னை ”புலையாடி மோனே” என்று திட்டியபடி எழுந்து சிலுவை போட்டபின்பு போய் அடுப்பில் ஒரு சில்லாட்டையை பற்றவைத்து காப்பிக்கு தண்ணீர் போட்டான். நான் சென்று துரையின் சப்பாத்துகளை எடுத்து வைத்தேன். அவற்றை நேற்றே பாலீஷ் போட்டு வைத்திருந்தேன். வராண்டாவில் நான் காத்து நின்றபோது தோமா கையில் பெரிய வெள்ளைத்தகரக் கோப்பையில் சூடான காப்பியுடன் சென்று துரையை எழுப்பினான். துரை தலைக்குமேல் கம்பிளியை இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான்.

அவனருகே நின்று தோமா ”குட்மானிங்! குட்மானிங் !” என்று நிறைய தடவை சொன்னான். போர்வைக்குள் இருந்து துரை குழறலாக ஏதோ சொன்னான். தோமா அதற்கும் ”குட்மானிங்!” என்றான். துரை போர்வையை விலக்கி எழுந்து அமர்ந்து தோமாவின் கன்னத்தில் அறைந்தான்.  ”டாமிட் ஸ்டுபிட்….கண்ரி ·பூல்… ·பக் யுவர் ஆஸ்” என்று அவன் வழக்கமாகச் சொல்வதைச் சொன்னான். அடிபட்டபோதும் தோமா காபியை தளும்ப விடவில்லை. ”காபி சாய்பே”என்று பவ்யமாக நீட்டினான்.

துரை ஒன்றும் சொல்லாமல் காபியை ஊதி ஊதி குடிக்க ஆரம்பித்தான். தோமா அதற்குள் பக்கத்து அறைக்கு ஓடினான். துரை டீ குடித்த பின்னர் நிர்வாணமாக எழுந்து பின்பக்க அறைக்குச் சென்றான். அங்கே ஒரு மர முக்காலியில் ஓட்டை போட்டு வைத்திருந்தான். அதன் கீழே தோமா நாலைந்து தேக்கிலைகளை பரப்பி வைத்திருந்தான். துரை முக்காலியில் அமர்ந்து மலம் கழிக்க ஆரம்பித்தான். அப்போது தோமா அவனுக்கு பனையோலை போலிருந்த மென்மையான கூரிய கத்தியால் ஷேவ் செய்து விட்டான். முகத்தை தைலம்போட்டு துடைத்து முடித்த பின்னர் துரையின் பின்பக்கத்தை ஒரு பெட்டியில் இருந்து எடுத்த இலவம்பஞ்சால் நன்றாக நாலைந்து முறை துடைத்தான்

துரையை ஈரமான டவலால் தோமா துடைத்துவிடுவதை நான் பார்த்துக்கொண்டு நின்றேன். அந்த பங்களாவில் எல்லா கதவுகளும் மிக அகலமானவை. உயரமானவை. முன்வாசல் கதவை மட்டுமே இரவில் மூடுவார்கள். எல்லா அறையும் எல்லா இடத்திலும் தெரியும். துரை எழுந்து ஒரு மரத்தொட்டியில் தோமா கொண்டு வந்து வைத்த வெந்நீரால் தன் முகத்தையும் கைகளையும் அக்குளையும் கழுவிக்கொண்டான். அதன் பின் தோமா அவனை துடைத்தான்.

துரை தன் காக்கி கால்சட்டைக்குள் கால்களை நுழைத்து அதன் மீது நிறைய பைகள் தைத்த காக்கி சட்டையை அணிந்து உள்ளே செலுத்தினான். அப்போது அவன் ஒரு மரப்பொம்மை போல ஆகிவிட்டதாக எனக்குத் தோன்றியது. முழங்கால்களுடன்கூடிய பெரிய ரப்பர் சப்பாத்துக்களைப் போட்டபின் யானைத்துப்பாக்கியை எடுத்தான். அதன் குழாயை திறந்து உள்ளே கண்விட்டு பார்த்தான். சுவர் அடுக்குப்பெட்டியில் இருந்து சிறிய அலுமினியப்பெட்டியை எடுத்து அதில் இருந்த சிறிய கரிய புட்டியை எடுத்து  திறந்தபோது எரியும் தைலமணம் எழுந்தது. அந்த கரிய குழம்பை பஞ்சில் தேய்த்து குச்சியில் பொருத்தி உள்ளே விட்டு இழுத்தான். அதே எண்ணைக்குழம்பை துப்பாக்கியின் விரல்வளையத்துக்கு உள்ளே இருந்த இடைவெளிவழியாக விட்டு உள்ளே இருந்த சிறிய சக்கரங்களில் பூசினான்.

என்னிடம் ” இவள் ரொம்ப அழகி இல்லையா?” என்று கேட்டு கண்ணைச் சிமிட்டினான். அப்போதுதான் துரை அந்த துப்பாக்கியை பெண்ணாக நினைப்பது எனக்குப் புரிந்தது. அதை மெல்ல முத்தமிட்டு விட்டு ”அவள் வெடி நிறைந்தவள்..”என்று என்னிடம் சொல்லி மடியில் கிடைமட்டமாக வைத்துக் கொண்டான். அதன் வளைவில் என் தோற்றம் ஒரு நிறமாக தெரிந்தது.

தோமா ரொட்டியும் பொரித்த கோழியும் பால் இல்லாத காபியும் கொண்டுவந்து பரிமாறிவிட்டு மணியை அடித்தான். துரை சாப்பிட ஆரம்பித்தபோது நான் பேசாமல் நின்றேன். துரை எனக்கு ஒரு ரொட்டித்துண்டை எடுத்து வீசினான். நான் அதைப்பொறுக்கி மண்போக ஊதிவிட்டு வேகமாக தின்றேன். அதற்குள் எனக்கு கோழித்தொடை ஒன்றை அவன் எறிந்தான். துரை சாப்பிட்டு எழுந்ததும் நான் வெளியே சென்றேன்.

எடை குறைவான பெரிய மரப்பெட்டியில் துரைக்கு தேவையான பொருட்கள் நான்குநாட்கள் முன்னரே எடுத்து வைக்கப்பட்டிருந்தன.மென்மையான காகிதங்களில் சுற்றப்பட்ட நன்றாக வெயிலில் உலர்த்திய ரொட்டிகள். டப்பாக்களில் காற்று புகாமல் அடைக்கப்பட்ட வெண்ணை. சாராயக்குப்பிகள். மாற்று உடைகள். இன்னும் ஒரு சப்பாத்து. கூடாரம் கட்டும் துணி என்று பலவகையான பொருட்கள். அவற்றை முறையாக உள்ளே அடுக்கவும் திருப்பி எடுக்கவும் என்னால் மட்டும்தான் முடியும்.

துரை தன் தோளில் மாட்டிய தோல்வார் கொண்ட கித்தான் பையில் வடக்குநோக்கி கருவி, பாட்டுபெட்டி ஆகியவற்றையும் துப்பாக்கிக்குரிய அலுமினியப்பெட்டியையும் புகையிலை டப்பாவையும் வைத்தான். தலையில் கட்டிக்கொள்ளும் விளக்குகள். கையில் பிடித்துக்கொள்ளும் விளக்கு ஆகியவையும் அவனிடம்தான் இருந்தன. என்னுடைய பெட்டிக்குள் பத்து பேட்டரிகள் மேலதிகமாக வைத்திருந்தேன். துரை ஒரு துவாலை பத்து கைக்குட்டைகள் ஆகியவற்றையும் எடுத்துக்கொண்டான். கழுத்தில் தூரநோக்கி குழாயை தொங்கவிட்டான். துப்பாக்கி தோளில் குறுக்காக தொங்கியது. இடுப்பில் கட்டப்பட்ட தோல்பட்டையில் ஒருபக்கம் தோலுறைக்குள் சிறிய கைத்துப்பாக்கியும் இன்னொரு பக்கம் குடிநீர் பையும் தொங்கின.அலுமியியத்தால் ஆன ஊன்றுகம்பு. அதை விரித்து குத்திவிட்டு முக்காலிபோல உட்கார்ந்தும் கொள்ளலாம். துரை தயாரானதும் தோமா கொண்டுவந்த இன்னொரு காப்பியை சூடாகக் குடித்துவிட்டு தன்னுடைய காக்கி நிறமான சட்டித்தொப்பியையும் வைத்துக்கொண்டான்.

நான் பெட்டியை என் தோளில் வார்களைப் போட்டு பின்பக்கம் தூக்கிக்கொண்டதும் நாங்கள் கிளம்பினோம்.  நான் முந்தைய நாளே நன்றாக கூர் தீட்டி வைத்திருந்த என்னுடைய நீளமான கத்தியை எடுத்துக் கொண்டேன்.  துரை படிகளில் கால் வைத்ததும் ”ஜீஸஸ்!”என்று சொல்லி சிலுவைக்குறி போட்டுக்கொண்டான். பங்களாவில் இருந்து இறங்கி இடுங்கலான பாதை வழியாக நாங்கள் காட்டுக்குள் நுழைந்தோம்.

காலைநேரத்தில் காடு தலைக்குமேல் பறவைகளின் ஒலியால் நிறைந்திருந்தது. இருட்டு விலகாத இலையடர்வின் உள்ளே  இளமழை போல பனித்துளிகள் சொட்டின. நானும் துரையும் சில கணங்களிலேயே நன்றாக நனைந்து விட்டோம். குளிரில் என் உடம்பு சிலிர்த்து அசைந்து. துரை இருபக்கமும் பார்த்தபடி தனக்குள் ஏதோ முனகியபடி நடந்துவந்தான். துரை அவ்வளவு எளிதில் மூச்சுவாங்குவதில்லை என்பதை நான் கவனித்திருக்கிறேன். ஊரில் வாழ்பவர்கள் என்றால் சீராக மேடேறிச் சென்றுகொண்டே இருக்கும் இந்த ஒற்றையடிப்பாதையில் இதற்குள் மூச்சு திணறி நின்றிருப்பார்கள்.

காட்டில் அப்பகுதி முழுக்க காட்டிலந்தை, சீலாந்தி ,பெருநெல்லி, கொடுந்தை மரங்களும் தவிட்டைப்புதர்களும்தான். எவையுமே காயோ கனியோ கொட்டையோ தருவதில்லை. மேலே நெடுந்தூரத்துக்கு ஏறிய பின்பு காட்டுச்செடிகளின் அடர்த்திக்குள் சுழலிப்பாறை தெரிந்தது. பாறையின் வெடிப்பு வழியாக தண்ணீர் கசிந்து வழிந்தது. பாறையை அடைந்ததும் துரை மூச்சுவிட்டபடி சற்று அமர்ந்துகொண்டார். நான் பெட்டியை தரையில் வைத்துவிட்டு அமர்ந்து கொண்டேன். அப்போதெல்லாம் உடனடியாக தூங்கி விடுவேன். எனக்குதெரியாத எங்கெல்லாமோ சென்றுகொண்டிருந்துவிட்டு குரல் கேட்டதும் திரும்பி விடுவேன். அப்படி நான் போகும் இடங்களும் காடுகள்தான். ஆனால் நான் அங்கே நன்றாகவே ஆங்கிலம் பேசிக்கொண்டிருப்பேன்.

துரை ஒரு சுருட்டைப் பற்றவைத்தான்.சில நிமிடங்கள் ஆழமாக இழுத்துவிட்டு உடனே அதை குத்திஅணைத்து திரும்பி தன் இடுப்பு பைக்குள் வைத்துக் கொண்டபின் ”நேற்று அந்த பெண்ணை நீயா கூட்டி வந்தாய்?”என்றான். நான் ”அவள்தான் இருந்தாள்”என்றேன். ”அவளுக்கு நோய் இருக்கிறது. அவளை வரக்கூடாது என்று நான் சொல்லியிருந்தேன்…”என்றான். நான் ஒன்றும் சொல்லாமல் பார்த்தேன். ”பெருச்சாளி போல பார்க்காதே…இந்தியக் கறுப்புப் பெருச்சாளி… ”என்று சொல்லி துரை என் மீது ஒரு கல்லை எடுத்து எறிந்தான். ”கரடி போல நாற்றமடிக்கிறாள் அந்த வேசி…அவளை இனிமேல் கூட்டிவந்தால் உன்னையும் அவளையும் சுட்டுவிடுவேன்” துரை என் கண்களைப் பார்த்து ”டாமிட்”என்றான்.

மீண்டும் நாங்கள் கிளம்பி பாறைக்கு அப்பால் சரிந்து இறங்கும் காட்டுச்சாலையில் சென்றோம். அது யானைப்பாதை. அவ்வப்போது தேனெடுக்கும் காணிகளும் சென்றிருக்கலாம். மழைபெய்துகொண்டே இருப்பதனால் இலைகள் வளர்ந்து வழியை மூடியிருந்தன. சிலஇடங்களில் காட்டு ஈஞ்சையும் துடலியும் முள்கொடிகளை நீட்டியிருந்தன. அவற்றை வெட்டித்தள்ளி துரை வருவதற்கு வழிசெய்துகொடுத்தேன். துரை ஒரு செடியில் இருந்து பச்சைப்பாம்பு ஒன்றை சட்டென்று பிடித்தான். மிகவும் சின்ன பாம்பு. பச்சைநிறமான அரக்கால் செய்தது போல இருந்தது.

”பார் பச்சைக்கண்ணாடிக் குழாய் போல இருக்கிறது…”என்றான் துரை. அது அவன் பிடியில் நின்று நெளிந்து நாக்கை பறக்கச் செய்தது. அவனது முழங்கையில் வாலைச்சுற்றி வைத்துக்கொண்டது. நான் முன்னால் சென்றபோது பின்பக்கம் அந்த பாம்புடன் துரை மெல்ல ஏதோ சொன்னபடியே வந்து கொண்டிருந்தான். எனக்கு அந்த குரலை விட்டு கவனத்தை நீக்கவே முடியவில்லை. மெல்லமெல்ல என் பதற்றம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் நான் அவன் கையில் நெளியும் பாம்பைப்பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தேன்.

காட்டுக்குள் ஈரம் உலர்ந்து நீராவி எழ ஆரம்பித்தது. எனக்கு வியர்த்துக் கொட்டியது நான் நவரப்பச்சிலைகளைப் பறித்து மென்று சாற்றைக் குடித்து சக்கையை உமிழ்ந்து தாகத்தை தணித்துக்கொண்டு நடந்தேன். துரை தன் புட்டியில் இருந்து தண்ணீர் குடித்துக் கொண்டான். பாதையைக் கடந்து சென்ற கொடி காட்டுகும்பளம் என்று கண்டதும் நான் அதை தொடர்ந்துசென்று ஒரு கும்பளக்காயை பறித்தேன். அதன் சாறைக் குடித்து முடித்ததும் என்னுடைய தாகம் முழுமையாக நீங்கியது.

நாங்கள் மீண்டும் அமர்ந்தபோது துரை என்னிடம் ” இவள் நல்ல நடனக்காரி இல்லையா?”என்றான். பச்சைப்பாம்பு அதன் வாயைத்திறந்து மூச்சுக்காக ஏங்கியபடி எரியும் கயிறு போல முறுகியது. துரை அதை கீழே போட்டு தன் சப்பாத்தால் அதன் தலையை அழுத்தி தேய்த்தான் அதன் வால் தீயின் நாக்கு போல துடிதுடித்து சப்பாத்தின் பக்கவாட்டு ரப்பரில் அறைந்தபின் மெல்ல சொடுக்கிச் சொடுக்கி அசைவிழந்தது. துரை மீண்டும் அந்த எஞ்சிய சுருட்டை பற்றவைத்து இழுத்தான்.

நாங்கள் மீண்டும் கிளம்பி சுண்டுமலை நோக்கிச் சென்றோம். காட்டுக்குள் வெயில் கண்ணாடிக்குழாய்கள் போலவும், திரைசீலைகள் போலவும், காட்டருவி போலவும், பெரிய அடிமரங்கள் போலவும், சில இடங்களில் வெள்ளைச் சுவர் போலவும் விழுந்துகிடந்தது. வெயில் காற்றில் ஆடுவதைக் காட்டில்தான் காணமுடியும். இலைகள் மீது விழுந்த பச்சைநிற ஒளிவட்டங்கள் காற்றில் குளத்து நீரின் ஆம்பல் இலைகள் போல அலையடித்தன. வெயில் எங்கள்மீது அடிக்கவில்லை என்றாலும் நன்றாக புழுங்கியது. குளிர்ந்த காற்று மேலே பட்டபோது மெல்ல புல்லரித்தது.

[மேலும்]

முந்தைய கட்டுரைஊமைச்செந்நாய் (குறுநாவல்) : 2
அடுத்த கட்டுரைநகைச்சுவை:கடிதங்கள்