பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி – 3
துவாரகையிலிருந்து கிளம்பி தேர்களிலும் பின் படகுகளிலும் பயணம் செய்து ஐந்தே நாட்களில் மதுராவை வந்தடைந்தனர். பயணம் முழுக்க அக்ரூரர் தன் தாக்குதலுக்கான திட்டங்களை வகுத்து பறவைச் செய்திகளாக மதுராவுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். மதுராவில் பலராமர் இல்லை, அஸ்தினபுரியில் துரியோதனனுக்கு கதாயுதப் பயிற்சி கொடுக்கும் பொருட்டு சென்றவர் அங்கிருந்து அவனுடன் காட்டுக்குச் சென்றுவிட்டதாக செய்தி வந்திருந்தது. எங்கிருக்கிறார் என்பதை முறையாகத்தெரிவிக்கும் இயல்பு அவருக்கு இல்லை என்பது அனைவரும் அறிந்தது.
மதுரா வசுதேவரின் ஆட்சியில் இருந்தது. அவரோ அரண்மனை சூதுப் பலகையை விட்டு எழுவதே குறைவு என்றனர். திறமையான படைத்தலைவர்களால் ஆளப்பட்டமையால் அரண்மனையில் எவர் இருக்கிறார்கள் என்பதே மக்களுக்கு பொருட்டாக இல்லாமல் இருந்தது. “இளவரசே, துவாரகை மேலைக்கடலில் எழுந்ததுமே மதுரையும் வலுவாக வணிகத்தில் ஊன்றி படைகள் விரித்து புகழ் கொண்டுவிட்டது. மதுராவின் துறைமுகத்தில் இருந்து ஒரு படை கிளம்புவதென்பது எளிதல்ல. பல நூறு வணிகக்கலங்கள் யமுனையில் நின்றிருக்கையில் சிறு படைப்பிரிவு எழுந்தால் கூட அனைவராலும் நோக்கப்படும். மறுநாளே பாரதவர்ஷம் முழுக்க செய்தியுமாகும்” என்றார் அக்ரூரர்.
“படைப்பிரிவுகள் கருக்கிருட்டில் வணிகப் படகுகள் போல மாறுதோற்றம் கொண்டு கிளம்ப முடியும் அல்லவா?” என்றான் கிருதவர்மன். “ஆம், அதுவே நம் திட்டம். நமக்குத் தேவை நூறு பேர். அங்கு ஆயிரம் படை வீரர்களை சமரிட்டு வென்று மீளூம் திறன் கொண்டவர்கள்” என்றார் அக்ரூரர். “ஒவ்வொருவரையும் பெயர் குறிப்பிட்டு தேர்ந்து அணி நிரக்கச் சொல்லி படைக்கலம் சூடி நிற்க ஆணையிட்டிருக்கிறேன். சென்றதுமே படையெழவேண்டியதுதான்.” “எத்தனை படகுகளில்?” என்று கிருதவர்மன் கேட்டான். “ஒரே படகில் கிளம்பமுடிந்தால் நன்று…” என்றார் அக்ரூரர். “ஒரே படகிலா? நூறு புரவிகளுடனா?” என்று கிருதவர்மன் கேட்க “புரவிகளைக் கொண்டுசெல்வதென்பது படைகொண்டுசெல்வதாகவே தெரியும்” என்றார் அக்ரூரர். “புரவிகள் இன்றியே சென்று வென்று மீளும் திட்டம் வகுத்திருக்கிறேன்.”
கிருதவர்மனும் அக்ரூரரும் படகின் வளைவில் அமர்ந்து நடுவே குறும்பீடத்தில் கன்றுத்தோலில் வரைந்த வரைபடத்தை வைத்து கைகளால் சுட்டியும் வண்ண மையால் இடங்களைக் குறித்தும் எழுச்சியுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு சாத்யகி புன்னகையுடன் திரும்பி “ஒரு போருக்கென நெடுநாள் காத்திருந்தார்கள் போலும்” என்றான். திருஷ்டத்யும்னனும் “ஆம், அக்ரூரராவது அரசுசூழ்தலில் தன்னை ஒவ்வொரு நாளும் இளையயாதவருக்கு முன்னால் நிறுத்திக் கொண்டிருக்கிறார். கிருதவர்மன் எளியதோர் காவல் வீரனாக மாறிக் கொண்டிருந்தான். இப்போர் இருவரையும் வீரர்களென அவர் முன் நிறுத்தும்” என்றான். “அக்ரூரருக்கு இணையாக தானும் ஆனதைப் போல் கிருதவர்மன் எண்ணுவதை அவர்கள் அமர்ந்திருப்பதிலேயே காண முடிகிறது.”
சாத்யகி சிரித்துக் கொண்டு “போர் என்பது மிகப் பெரியதோர் நாடகம் என்று நான் எண்ணுவதுண்டு பாஞ்சாலரே. அதில் இறப்பதும் ஒரு வகையில் நடிப்பே” என்றான். திருஷ்டத்யும்னன் சிரித்து “போரில்லாதபோது போர்களைப்பற்றி அழகிய சொற்றொடர்களை உருவாக்கிக் கொள்வதும் வீரர்கள் எங்கும் செய்வதுதான். போர் குறித்து சில சொல்வதற்கில்லாத படைவீரரை நான் பார்த்ததே இல்லை” என்றான். “போரைக் கண்டபின் நான் சொல்லாமலாகிவிடுவேனா?” என்றான் சாத்யகி. “சொல்வீர். சில தன்னறிவுகளையும் கற்பனைகளையும் சேர்த்துக்கொள்வீர்” என்று திருஷ்டத்யும்னன் சொல்ல இருவரும் சிரித்தனர்.
மதுராவை அவர்கள் விடியற்காலையில் நெருங்கினார்கள். துறைமுகம் முழுக்க அடர்ந்திருத நெய்கொள் கலங்கள் மீன்நெய் விளக்குகள் கமறி சுடர்தாழ எரியும் பாய்மர முகப்புகளுடன் மாலையில் காட்டில் இருந்து அன்னையரைத்தேடி அணையும் கன்றுக்கூட்டம் போல் பெருங்குழலோசைகள் ஒன்று கலந்து ஒலிக்க பாய்மரங்கள் புடைத்தும் தளர்ந்தும் ஒன்றை ஒன்று உரசி ஓசையிட நின்றிருந்தன. அவர்களின் படகு கரையணைந்ததும் முன்னரே ஆணையிட்டிருந்தபடி வரவேற்புகளோ கொம்போசைகளோ முழவோசைகளோ இல்லாமல் துறைக்காவலர் நடைபாலத்தை இணைத்தனர். மதுராவின் படைத்தலைவன் கௌசிகன் வந்து வணங்கி “அனைத்தும் சித்தமாக உள்ளன அமைச்சரே” என்று அக்ரூரரிடம் சொன்னான்.
அக்ரூரர் திரும்பி திருஷ்டத்யும்னனிடம் “இன்று பகல் விடிவதற்குள்ளேயே கிளம்பிவிடலாமென்று எண்ணியிருக்கிறேன் பாஞ்சாலரே” என்றார். “நமக்கு நேரமில்லை. ஓய்வெடுப்பதை கலத்திலேயே செய்து கொள்ளலாம். நான் நேராக படைப் பிரிவை நோக்கச் செல்கிறேன். தாங்கள் அரண்மனை சென்று உடை மாற்றி மீண்டும் துறை முகப்புக்கு வருவதற்குள் அனைத்தும் சித்தமாக இருக்கும்” என்றார். திருஷ்டத்யும்னன் புன்னகையுடன் “அரைநாழிகை நேரம் எனக்கு அளியுங்கள்” என்றான். அக்ரூரர் அவன் விழிகளைச் சந்தித்ததும் அவன் மீண்டும் அந்த அதிர்வை உள்ளே அறிந்தான். அவர் தலை வணங்கி கௌசிகனுடன் குதிரையில் ஏறி கோட்டைக்குள் புகுந்தார். கிருதவர்மன் அவரைத் தொடர்ந்தான்.
மதுராவின் நகரில் அயல்வணிகர்களும் மலைப்பொருள் கொணர்ந்தவர்களும், நெய்விற்று பணம் பெற்று நகர்ப்பொருள் கொள்ள வந்த ஆயர்களும் அங்காடித் தெரு முழுவதும் நிறைந்திருந்தனர். அவர்களின் புரவிகள் நெரித்த உடல்களை மூச்சொலியாலேயே விலக்கி முன்னால் சென்றன. “மதுரா புலரியில்தான் உச்சகட்ட செயல்விரைவு கொள்ள இயலும்” என சாத்யகி சொன்னான். “காலைவெயிலில் நெய் உருகுவதற்குள் வணிகம் முடிந்திருக்கும். பகலெல்லாம் இந்நகரம் பிறிதொரு தோற்றம் கொள்ளும். இப்போது விற்கும் நேரம். பகல் முழுக்க வாங்கும் நேரம்.” திருஷ்டத்யும்னன் புதிதாகக் கட்டப்பட்ட மதுராவின் குவைமாட அரண்மனைகளை நோக்கினான். “இங்கும் யவனர்களின் தூண்களா?” என்றான். “ஆம். பீடிகையும் வேதிகையும் அமைந்த பெரும் தூண்கள் மீது இளைய யாதவருக்கு தனிவிருப்பு இருக்கிறது” என்றான் சாத்யகி.
திருஷ்டத்யும்னன் “அரசு அமைக்கும் எவருக்கும் தூண்கள் பெருவிருப்பை அளிக்கும். அவை மண்ணில் ஊன்றி விண்தாங்கி நிற்பது போல. மானுடன் அமைக்கும் வாடா மரங்கள்” என்றபின் திரும்பி “காட்டு மரங்கள் தழைப்பதைப் போலவே இக்கல்மரங்களும் ஒன்று பலவென தழைக்கத்தான் செய்கின்றன” என்றான். சாத்யகி புரவியை இழுத்து நிறுத்தி மதுரா முழுக்க கட்டப்பட்டிருந்த யவனத் தூண்களை நோக்கி “ஆம், பெருங்காடென கற்தூண்கள் எழுகின்றன” என்றான். திருஷ்டத்யும்னன் “நமக்கு அரை நாழிகை நேரமே உள்ளது யாதவரே” என்றான். “நாம் போரிடச் செல்கிறோமா?” என்றான் சாத்யகி. “இல்லை. அவர்கள் காசிக்குள் நுழையும்போது எல்லையில் நாம் நின்றிருப்போம். கிருஷ்ணவபுஸுக்குள் செல்வது அவர்களுக்கு எளிதாக இருக்கும். சியமந்தகத்தைக் கவர்ந்து மீள்வதுதான் கடினம். நம் வாளின் துணை தேவையாகலாம்” என்றான் திருஷ்டத்யும்னன்.
தயக்கத்துடன் கடிவாளத்தை இழுத்து “இப்போர் எங்கு எப்படி தொடங்கும் எவ்வண்ணம் முடியும் என்று எனக்குப் புரியவில்லை. இது போரென்றே தோன்றவில்லை. ஆயர்களின் ஆநிரை கவர்தலுக்கு நிகரானதென்றே எண்ணம் ஓடுகிறது” என்றான் சாத்யகி. “இதுவும் அதுவே. வெட்சி சூடி சென்று வாகை சூடி மீண்டார்கள் என்றால் போர் முடிந்தது” என்று சொல்லி திருஷ்டத்யும்னன் நகைத்தான். “ஆநிரைகவர்தலில் உயிர் விழுவதில்லை” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “அஞ்சுகிறீரா?” என்றான். “இல்லை, ஆனால் என்னுள் ஓர் பதற்றம் இருந்துகொண்டே இருக்கிறது” என்று சாத்யகி சொன்னான்.
மதுராவின் அரண்மனை வாயிலில் அவர்களை எதிர்கொண்ட காலவர் தலைவன் “தாங்கள் நீராடி உடை மாற்றி படைக்கலம் கொண்டு கிளம்ப அனைத்தும் சித்தமாக உள்ளன இளவரசே” என்று திருஷ்டத்யும்னனிடம் சொன்னான். திருஷ்டத்யும்னன் அவனை நோக்கி தலை அசைத்தபின் சாத்யகியிடம் “ஒவ்வொன்றும் நமக்கென ஒருக்கமாக உள்ளன. அக்ரூரர் நாம் இதை தனித்துணர வேண்டுமென எண்ணுவதையும் அறிய முடிகிறது” என்றான். “அது அவரது இயல்பு” என வேறெங்கோ ஆட்பட்டிருந்த உள்ளத்துடன் சாத்யகி சொன்னான்.
மிக விரைவிலேயே குளித்து உடைமாற்றி உணவுண்டு ஆடைக்கு மேல் கவசமும் இடையில் வாளும் தோளில் வில்லும் அணிந்து திருஷ்டத்யும்னன் அரண்மனை முகப்புக்கு வந்தான். சாத்யகி அங்கு முன்னரே சித்தமாக நின்றிருந்தான். அவர்களுக்கான தேர் இரு கரிய புரவிகள் பொறுமையிழந்து அவ்வப்போது காலெடுத்து வைக்க சங்கிலிகள் குலுங்க சகடங்கள் ஒலிக்க நின்றிருந்தது. அவர்கள் ஏறிக் கொண்டதும் அதன் பாகன் சாட்டையால் தொடுவதற்குள் அந்த இடத்தின் மென்மயிர்ப்பரப்பு சிலிர்த்தசைய புரவிகள் முன்னால் பாய்ந்தன. குளம்படி மழை பொழிய நகர்த்தெருக்களெங்கும் அந்த ஓசை எதிரொலிக்க கல் பரப்பப்பட்ட தரையில் பாய்ந்தோடின.
“நாம் அரசரைக் காணவில்லை. அவரிடம் ஆணை பெறவும் இல்லை” என்றான் சாத்யகி. “இவ்வேளையில் எழுவது வசுதேவருக்கு வழக்கமா?” என்றான் திருஷ்டத்யும்னன். “இல்லை. ஆனால் அரசி புலரிக்கு முன் எழுவதுண்டு. இவ்வேளையில் மணிவண்ணன் கோட்டத்திலும் அனல்வண்ணன் கோட்டத்திலும் இந்திரன் கோட்டத்திலும் அவர் பூசை செய்து மீள்வார். விரும்பியிருந்தால் நாம் ஒரு சொல் பெற்றிருக்கலாம்” என்றான். “சியமந்தகத்துடன் திரும்ப வருகையில் நாம் அச்சொல்லை பெற்றுக் கொள்வோம்” என்றான் திருஷ்டத்யும்னன்.
அவர்கள் மதுராவின் துறைமுகப்பை அடைந்தபோது கௌசிகன் அங்கிருந்தான். அவர்களை நோக்கி வந்து இயல்பாக தலை வணங்கி “அந்தகக் குலத்தின் கொடி பறக்கும் அச்சிறிய கலம் தங்களுக்குரியது இளவரசே” என்று திருஷ்டத்யும்னனிடம் சொன்னான். “அக்ரூரர் எங்கே?” என்றான் திருஷ்டத்யும்னன். கௌசிகன் “அவர்கள் முன்னரே வந்து தங்கள் படகில் ஏறிக்கொண்டுவிட்டனர்” என்றான். திரும்பி அந்தக் கலத்தை நோக்கிய திருஷ்டத்யும்னன் அதன் அகல் வளைவிலும் அமரமுனையிலும் அடுக்குகள் அனைத்திலும் பலவகையான பெரிய நெய்கொள் கலங்கள் மட்டுமே தெரிவதை நோக்கி புன்னகை செய்தான். “அவை வெறும் கலங்கள். நெய் கொண்டு செல்லும் மரக்கலமென மாறுதோற்றம் கொண்டு பொருத்தப்பட்டுள்ளன. உள்ளறைகளில் வீரர்கள் ஒளிந்து அமர்ந்திருக்கிறார்கள் “என்றான்.
திருஷ்டத்யும்னன் அவனிடம் தலை அசைத்துவிட்டு நடந்து தன் படகை அணைந்து நடைபாலம் வழியாக சென்று அகல் விளிம்பில் நின்று உள்ளே நோக்கினான். உள்ளறைகளுக்குள் வீரர்கள் தோள்ஒட்டி முதுகு உரசி கவசங்கள் மின்ன படைக்கலங்களை மடியில் வைத்து அமர்ந்திருந்தனர். சாத்யகி “ஒவ்வொருவரும் போரை உள்ளத்தால் தொடங்கிவிட்டனர்” என்றான். “ஆம். போருக்குச் செல்வதென்பது போரை விட எழுச்சியூட்டும் நிகழ்வு. அவர்கள் தங்கள் உள்ளத்தில் இதற்குள் பலநூறு முறை போரை நிகழ்த்திக் கொண்டிருப்பார்கள்” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆனால் அவர்கள் அறியப்போகும் போர் நிகழ்ந்த போரைவிட எப்போதும் மாறானது. எல்லா கற்பனையையும் கடந்தது. எளியது, எதிர்பாராதது, ஒவ்வொரு முறையும் துயரளிப்பது” என்றான்.
“போரில் அல்லவா வீரன் முழுமை கொள்கிறான்? அவனுக்கு வெற்றியும் புகழும் மற்றுலகும் அளிப்பது அதுவல்லவா? போரை பெருங்களியாட்டெனக் கொள்வார்கள் என்றல்லவா அறிந்திருக்கிறேன்” என்றான் சாத்யகி. “முதல் போர் ஒரு களியாட்டே முதல் படைக்கலம் கொலைக்கென எழுவது வரை” என்றான் திருஷ்டத்யும்னன். “போரென்றும் சமரென்றும் வெற்றியென்றும் தோல்வியென்றும் சூதர் பாடலென்றும் வரலாற்றில் இடமென்றும் நாம் எண்ணிக் கொள்வது ஒன்றையே. இறத்தல் என்று ஒற்றைச் சொல்லில் அதை சுட்டலாம். முழு இறப்பு அல்லது என்னைப் போல் சற்றே இறப்பு” என்றான். சாத்யகி தலை திருப்பி யமுனையின் அலைகளை நோக்கியபின் அவன் சொன்னதை கூர்ந்துணர்ந்து திகைப்புடன் திரும்பி நோக்கினான்.
திருஷ்டத்யும்னன் கையசைக்க அமரத்தில் நின்றிருந்த வீரன் அதைக் கண்டு தன் கையிலிருந்த மஞ்சள் நிறக் கொடியை அசைத்தான். படகில் முதல் பெரும் பாய் அதன் உச்சியில் கட்டப்பட்ட பீதர் நாட்டு நெய் விளக்குடன் மேலெழுந்து சென்றது. தொடர்ந்து அதன் ஏழு பாய்களும் மேலெழ துயிலெழுந்து சோம்பல் முறிப்பது போல் அசைந்தது அவர்களின் படகு. அப்போதும் விடிந்திருக்கவில்லை. தொலைவில் கீழ்வானில் செவ்வண்ணத் தீற்றல்களாகவும் கடலாழத்தில் நீலநிறத்தீற்றல்களாவும் எழுந்த கதிரவனின் பாதை துலங்கத் தொடங்கியது. அங்கிருந்து புலரியின் செய்தியுடன் பறவைகள் சிறகு நீந்தி வந்து கொண்டிருந்தன.
அக்ரூரரின் படகு அதன் பன்னிரண்டு பாய்களுடன் எழுந்து அலைகளில் எழுந்தமைந்து மைய நீர்ப்பெருக்கு நோக்கி சென்றது. அதைத் தொடர்ந்து மேலும் இரு வணிகப் படகுகள் சென்றன. மூன்றாவது படகிலிருந்த ஒரு ஆயன் இரு கைகளையும் விரித்து கரை நோக்கி எதையோ சொல்லி சிரித்தான். கரையிலிருந்தவன் அவனை நோக்கி ஒரு பலகைத் துண்டை வீச அது வளைந்து நீரில் விழுந்தது. பாய்மரங்கள் இழுத்துக் கட்டிய கயிறுகள் மேல் கலமோடிகள் தொற்றி நகர்ந்தனர். பாய்களை திசை மாற்றி கட்டினர். கலங்கள் யமுனைக்கு நடுவே சென்று சிற்றுருவம் கொண்டு குளிர்ந்த கரிய நீர்ப்பரப்பில் ஒளிப்புள்ளிகளாக மாறுவதை திருஷ்டத்யும்னன் நோக்கி நின்றான்.
கதிர் எழுந்து காலை வானம் முகில்வெளியாக ஒளி கொள்கையில் அவர்கள் யமுனையில் நெடுந்தொலைவு சென்றிருந்தனர். முந்தையநாள் சரியாக துயில் கொள்ளாததால் திருஷ்டத்யும்னன் படகுக்குள்ளேயே கவசங்களைக் கழற்றி அருகே வைத்து விரிப்பலகையில் கால் நீட்டி படுத்துக்கொண்டு அக்கணமே அகமழிந்து துயின்றான். “துயில்கிறீர்களா இளவரசே?” என்று கேட்ட சாத்யகி அவன் குறட்டையோசையைக் கேட்டு கைகளைக் கட்டிக்கொண்டு பெருமூச்சு விட்டான். அவனருகில் அமர்ந்து அலைகளை நோக்கிக் கொண்டிருந்த சற்று நேரத்திலேயே அவனும் துயின்று விட்டான்.
அவர்களின் படகு யமுனையைக் கடந்து கங்கையை அடைந்து திரும்பி மேலும் விரைவு கொண்டு ஒரு கட்டத்தில் காற்றில் தன் சிறகுகளை ஒப்படைத்து ஒழுகிச் செல்லும் சிறு பூச்சியென ஆயிற்று. திருஷ்டத்யும்னன் விழித்துக் கொண்டபோது படகின் அமரக்காரன் பார்க்கவன் அவனைக் காத்து அறை வாயிலில் நின்றிருந்தான். பின் மதிய ஆறு நீராவியாக அவர்களை சூழ்ந்திருந்தது. திருஷ்டத்யும்னன் விழித்தபோது படுத்திருந்த பலகைக்கும் அவனுக்கும் நடுவே உடல் வியர்த்து வெம்மை கொண்டிருந்தது. மேலே திறந்திருந்த உடலில் கங்கைக் காற்று குளிர்ந்து புல்லரிப்பை படரவிட்டிருந்தது.
திருஷ்டத்யும்னன் எழுந்து கைகளைத்தூக்கி உடல் முறித்தபின் கவசங்களையும் வாளையும் எடுக்கையில் வாசலில் நின்றிருந்த பார்க்கவனை நோக்கினான். பார்க்கவன் தலை வணங்கி “படகு காசியை அணுகிக் கொண்டிருக்கிறது இளவரசே” என்றான். “நாம் எப்போது செல்வோம்” என்றான் திருஷ்டத்யும்னன். “ஒரு பொழுது” என்றான் பார்க்கவன். “இன்று கருநிலவு பன்னிரண்டாவது நாள். இரவு விரைவிலேயெ வந்துவிடும்.” திருஷ்டத்யும்னன் கங்கைக்குள் நோக்கியபோது தொலைவில் ஒரு நெற்றுபோல அக்ரூரரின் படகு அலைகளிலாடுவதை கண்டான். “நாம் அவர்களிடமிருந்து அரைநாழிகை தொலைவிலிருக்கிறோம்” என்றான் பார்க்கவன்.
சாத்யகி அவர்கள் பேசுவதைக் கேட்டு விழித்தபடி சிவந்த கண்களுடன் நோக்கி இருந்தான். திருஷ்டத்யும்னன் தலை அசைத்ததும் தலை வணங்கி பார்க்கவன் விலகிச் செல்ல சாத்யகி “அவர்களுக்கு சததன்வாவின் அழைப்பு வந்திருக்கிறதா இளவரசே?” என்றான். “அச்செய்தியை இன்னமும் நமக்கு அக்ரூரர் அளிக்கவில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். “இப்போரை அவர் தனக்கென நடத்த விழைகிறார் போலும்” என்று சாத்யகி சிரித்துக்கொண்டே சொன்னான். திருஷ்டத்யும்னன் “வெற்றியை அவர்களிருவரும் பகிர்ந்து கொள்ளவேண்டுமே என நான் அஞ்சுகிறேன்” என்றான். எழுந்து கைதூக்கி சோம்பல் முறித்தபடி அக்ரூரரின் கலத்தை நோக்கிய சாத்யகி “அங்கிருந்து கிளம்புகையிலேயே நாடகமொன்றினூடாக கிருதவர்மன் படைத்தலைவனாகவும் அக்ரூரர் அரசு சூழும் பேரமைச்சராகவும் ஆகிவிட்டனர். இப்போரில் அவர்கள் அதை முழுதும் நடிப்பார்கள்” என்றான்.
திருஷ்டத்யும்னன் கூர்ந்து நோக்கி புன்னகையுடன் “அவர்கள் மேல் உமக்கிருக்கும் சிறு ஏளனத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றான். சாத்யகி “ஒவ்வொரு நாளும் தன்னை நிறுவிக்கொள்ள ஏன் ஒருவன் முயல வேண்டுமென்பதை எத்தனை சிந்தித்தும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை பாஞ்சாலரே. அக்ரூரர் நானறிந்த நாள் முதல் ஒவ்வொரு கணமும் இளைய யாதவரின் கண்முன் தன்னை நிறுவிக்கொள்ள முயன்று கொண்டிருக்கிறார். முழு உடலாலும் மண்ணுக்குள் தன்னைச் செலுத்த முயலும் மண்புழு அவர் என்று ஒரு முறை எனக்கு தோன்றியிருக்கிறது” என்றான். வாய்விட்டுச் சிரித்து “நல்ல உவமை, போதிய வெறுப்பு இல்லாமல் இது உருவாகாது” என்றான் திருஷ்டத்யும்னன்.
அவர்கள் முகம்கழுவி அமர்ந்தபோது உணவு வந்தது. படகின் அகல்முகப்பில் வடங்களில் கால்தளரவிட்டு அமர்ந்து உணவுண்டனர். விரைவிலேயே இருட்டத்தொடங்கியது. கங்கைப் பெருக்கு முழுக்க விளக்கொளிக் குவைகள் என கலங்கள் ஒழுகிச் சென்றன. கடந்து சென்ற சிறுபடகுகளில் இருந்து சூதர் பாடல்கள் சிந்திச் சென்ற திவலைகள் அவர்களை அடைந்தன. கங்கை மீன் கலந்த உணவு மீண்டும் துயிலை நோக்கி தள்ளியது. ஈரக்காற்று குளிர்ந்த அலைகளாக அறைந்து அறைந்து சென்ற அகல் முகப்பு துயில்க துயில்க என்றது. திருஷ்டத்யும்னன் எழுந்து கைகளை முறித்தபின் “படகுப் பயணம் என்னை சோர்வுறச்செய்கிறது” என்றான். “இத்தனை தொலைவு குதிரையில் கடப்பதைக் கூட விழைவேன். படகில் என் தசைகள் அலுப்புறுகின்றன. துயில்வதையன்றி படகில் பிறிதொன்றையும் என்னால் செய்ய முடியவில்லை.”
“போருக்கு முன் படை வீரர்கள் துயில்வதுண்டல்லவா?” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் சிரித்து “இதை ஒரு போர் என்று எண்ணியிருக்கிறீர்களா?” என்றான். சாத்யகி “போரென்று நீங்கள்தானே சொன்னீர்கள்?” என்றான். “ஆம், போர்தான். ஆனால் உளப்பூசலுக்கு அப்பால் எதுவும் நிகழுமென நான் எண்ணவில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி அவன் சொல்லப்போவதை எதிர்பார்த்து காத்திருந்தான். “சததன்வா அவர்களிருவரையும் முழுக்க நம்புவானென்று எண்ணுகிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “ஏனெனில் அவன் பெருவிழைவு கொண்டிருக்கிறான். யாதவர் சியமந்தக மணியின் பொருட்டு தன்னை தலைவனாக ஏற்று சூழ்வதை கற்பனை செய்கிறான். தானுமொரு இளைய யாதவனாக பிறிதொரு துவாரகை அமைத்து கொடி பறக்க அரியணை அமர்வதை ஒவ்வொரு நாளும் நினைக்கிறான்.”
“ஒரு முறை நடித்த நடிப்பு உண்மையாகிறது. இன்று உள் ஆழத்தில் அவன் முன்னரே இளைய யாதவராகி விட்டிருக்கிறான். இவர்கள் தன்னை நாடி வருவது தன்னுடைய தலைமை ஆற்றலால் என்று எண்ணிக் கொள்வான். யாதவரே, பெருவிழைவு கொள்பவன் விழைவுக்கேற்ப புறவாழ்க்கையை தன்னையறியாமலேயே மாற்றி எண்ணுகிறான். எனவே மிக எளிதாக சததன்வாவின் நகருக்குள் இவர்கள் நுழைவார்கள். அங்கு போதிய காவலிருக்காது. நானறிந்தவரை இன்னும் ஒரு படை நகராக அந்நகர் திரளவில்லை. அவ்வெளிய ஆயர்குடியை முழுப் படைக்கலன் கொண்ட இந்நூற்றுவர் மிக எளிதில் வென்று மணியை கைக்கொண்டு மீள முடியும். பத்து பேருக்கு மேல் படுகளம் விழ வாய்ப்பில்லை” என திருஷ்டத்யும்னன் சொன்னான்.
மறு நாள் காலை புலரும்போது அக்ரூரரின் பறவைச் செய்தி அவர்களை அடைந்தது. சததன்வாவின் அழைப்பு வந்திருப்பதாகவும் கிருஷ்ணவபுஸுக்குள் அன்று முன் மதியம் அவர்கள் நுழையவிருப்பதாகவும் அக்ரூரர் செய்தி அனுப்பி இருந்தார். அவர்களின் படகுகள் காசியை கங்கை வழியாக கடந்து சென்று கொண்டிருந்தன. காசியின் படைவீரர்கள் தங்கள் எல்லையை அப்படகுகள் அடைந்ததும் முதலைக்கொடி பறக்கும் சிறு காவல்படகுகளில் வந்து கீழே நின்றபடி அவர்களின் இலச்சினையை கோரினர். படகுகளை நடத்திய வணிகன் முன்னால் சென்று தன் கொடியைக் காட்டி “மதுராவின் நெய்ப்படகுகள் காவலரே. காசி துறைமுகத்திற்கு செல்லுகிறோம்” என்றபோது “சுங்கமுத்திரை காட்டுங்கள்” என்றான் காவலர்தலைவன். சுங்கமுத்திரையைக் காட்டி “இன்று நெய் விலை என்ன?” என்றான் வணிகன். “கலம் மூன்றுபொன் என்றார்கள்…” என்ற காவலன் “நன்று சூழ்க!” என விலகிச்செல்ல கையசைத்தான்.
சாத்யகி “ஒருவனாவது படகுக்கு மேல் வந்து நோக்குவான் என்று எண்ணினேன்” என்றான். திருஷ்டத்யும்னன் “கங்கையில் செல்லும் அனைத்துப் படகுகளையும் நோக்குவது இயல்வதல்ல யாதவரே” என்றான். “ஆயினும் இத்தருணத்தில் நோக்கியாக வேண்டுமல்லவா? போர் கனிந்திருக்கிறது. துவாரகையோ அஸ்தினபுரியோ சியமந்தகத்தைத் தேடி காசிக்குள் நுழையலாமல்லவா?” திருஷ்டத்யும்னன் சிரித்து “இப்போர் உமக்கு ஒரு முதன்மை நிகழ்வாக இருக்கலாம் .சியமந்தகமோ அதைத் தேடி வரும் துவாரையின் சினமோ காசிமன்னனின் அவையில் கால் நாழிகை நேரம் பேசுவதற்குக்கூட தகுதியற்றதாகவே எண்ணப்படும். சததன்வா அவர்களின் நூறு சிற்றரசர்களில் ஒருவன் என்றே எண்ணப்படுவான்” என்றான். சாத்யகி சில கணங்கள் கங்கையின் நீரலைகளை நோக்கியபடி நின்றான். பின்பு “இருக்கலாம். எனக்கு இது முதல் போர். இதை எளிதில் என்னால் கடக்க முடியாதென்றே தோன்றுகிறது” என்றான்.
காசியின் துறைமுகத்தை அவர்களின் படகுகள் கடந்து சென்றன. புடவிக்கிறைவனின் ஆலய கோபுரம் பன்னிரு அடுக்குகளாக பெரிய படிக்கட்டுகளுக்கு மேல் எழுந்து தெரிந்தது. அதிலிருந்த ஒற்றை அணையா விளக்கு மலரிதழ் போல விழிமயக்கு காட்டியது. படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் மக்களால் வண்ண நீரலைகள் அங்கே நெளிவது போல தோன்றின. பகலில் மணிகர்ணிகை தேவியின் கொடி கொண்ட படிக்கட்டில் சிதைகள் எரிந்து கொண்டிருந்தன. சிற்றகல்களென தொலை தூரத்தில் சிதைநெருப்பு தெரிந்தது. செம்மலர் பூத்த புதர் போல அரிச்சந்திர ஆலயம் அமைந்த படிக்கட்டில் மேலும் சிதைகள் எரிந்தன. “சிதைகளைப் பார்ப்பது நல்ல குறி” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி திரும்பி நோக்க “காசியின் புடவிக்கிறைவனின் வேள்விக்குளமென இவை எண்ணப்படுகின்றன. இப்பெரு நகரின் மிகச்சிறந்த மங்கலக் காட்சியென்பது சிதைகளே” என்றான்.
கடந்து சென்ற வணிகப்படகின் வணிகர்கள் அகல் விளிம்பில் எழுந்து நின்று சிதைகளை நோக்கி கை கூப்புவதை சாத்யகி கண்டான் . முன்னால் சென்ற அக்ரூரரின் படகை நோக்கியபடி “இது நம் எல்லை” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். அக்ரூரரும் கிருதவர்மனும் தங்கள் படைகளுடன் சததன்வாவின் எல்லைக்குள் நுழைவதை அவர்கள் தொலைவிலிருந்து நோக்கினர். தொலைவில் தெரிந்த சிறிய துறைமேடையிலிருந்து ஒற்றைப்பாய் விரித்து சிட்டுகள் போல் வந்த சததன்வாவின் இரண்டு சிறு படகுகளில் இருந்த வீரர்கள் அக்ரூரரின் படகை அணுகி கணை வடத்தை வீசி தங்களை இணைத்துக் கொண்டு கீழேஇறக்கப்பட்ட நூலேணிகள் வழியாக ஏறி பெரும் படகை அடைந்தனர். முதலில் வந்த படைத்தலைவனை அக்ரூரரும் கிருதவர்மனும் தழுவிக் கொள்வதை அவர்கள் நோக்கினர். அக்ரூரர் அவர்களிடம் முகமன் பேசுவதை தொலைவிலிருந்தே காண முடிந்தது.
பின்னர் அக்ரூரின் படகின் முகப்பில் சததன்வாவின் கொடி மேலேறியதை கண்டனர். முகப்பில் தோன்றிய ஒரு வீரன் கொம்பும் முழவும் துணை சேர்க்க கருடக் கொடியை ஆட்டினான். தொலைவில் படகுத்துறையில் கிருஷ்ணவபுஸின் கொடி அசைந்தது. அக்ரூரரின் படகு திரும்பி அப்படகுத்துறையை நோக்கி சென்றது. திருஷ்டத்யும்னன் “இன்னும் மூன்று நாழிகைக்குள் அவர்கள் சியமந்தகத்துடன் இவ்வெல்லை கடந்து நம்மருகே வரவேண்டும். அவர்கள் கங்கை பெரும் பெருக்கை அடைவது வரை நாம் இங்கு நிற்போம். சததன்வாவின் குருதிக்கு நிகர் கொள்ள அவன் படைகள் தொடரும் என்றால் அதை தடுப்போம்” என்றான்.
சாத்யகி “என் கால்கள் நிலைகொள்ளவில்லை பாஞ்சாலரே” என்றான். திருஷ்டத்யும்னன் புன்னகைத்தான். “இக்கணம் போல என் உடலும் உள்ளமும் எழுச்சி கொண்ட பிறிதொரு தருணம் அமைந்ததில்லை. இப்போரில் இளைய யாதவருக்கென நான் உயிர் துறப்பேனென்றால் நான் விழையும் வீடு பேறு அதுவே” என்றான். திருஷ்டத்யும்னன் “போருக்கு முன் தான் எப்படி இறக்கவேண்டுமென்று எண்ணாத வீரன் எவனுமில்லை. இறக்கலாகாது என்று விழையும் உயிரின் நடிப்புகளில் ஒன்று அது” என்றான். சாத்யகி சினத்துடன் திரும்பி “இது நடிப்பு அல்ல. இளைய யாதவருக்காக உயிரை எண்ணி வைத்தவன் நான். இங்குள்ள அத்தனை வீரர்களும் தங்கள் உயிரெண்ணி வைத்தவர்களே” என்றான்.
“அவர்கள் உயிரை இழக்கவும் செய்வார்கள் ஆனால் உயிர் கொள்ளும் விழைவென்பது இக்குலக்குறிகளால் கடமைகளால் குடிச்சின்னங்களால் ஆனதல்ல” என்றான் திருஷ்டத்யும்னன். “உயிரை ஆள்வது இப்புடவியை ஆளும் பெருந்தெய்வங்களில் ஒன்று. அதற்கு இவை ஒரு பொருட்டல்ல.” சாத்யகி அவனை சினத்துடன் நோக்கியபின் திரும்பி படகின் அமரமுனையை அடைந்து சததன்வாவின் தொலைதூரத்து படகுத்துறையை அக்ரூரரின் படகு சென்றடைவதை நோக்கி நின்றான்.