தமிழியம் ஓர் ஆய்வு

நகைச்சுவை
காசிரங்கா தத்துவச்சிக்கல் தாளமுடியாமல் போனபின்னர் வேறுவழியில்லாமல் தமிழியர்களும் வேங்கடத்துக்கு மேலே தங்கள் கவனத்தைத் திருப்பி அதைப்பற்றி ஆய்வுசெய்தாகவேண்டிய கட்டாயத்தை அடைந்தார்கள். ஆகவே கோவையில் கொங்குமுனி அவர்களின் தமிழ்தேயம் இதழ் சார்பில் கருத்தரங்கு ஒன்று கூட்டப்பட்டது. அதன் அழைப்பிதழில் கீழ்க்கண்டவாறு இருந்தது. ”கன்னித்தமிழின் கற்பைக் காக்க வருக!”சோவியத் ருஷ்யா உடைந்த மூன்றாம் நாள் தமிழுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணர்ந்த கொங்குமுனி அன்றுமுதல் சோர்விலாது இவ்வழைப்பை விடுத்துவந்தபோதிலும் அனேகமாக பிற தமிழமைப்பாளரன்றி எவரும் அதை செவிமடுக்காமைக்குக் காரணமொன்றிருந்தது. நெடுங்காலமாகவே தமிழ்த்திரை கண்டுவளர்ந்த தமிழர் கற்பைக்காக்கத் துள்ளி வருவதற்குக் கடைசித்தருணம் வரை காத்திருக்கவேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்தார்கள்.

கொங்குமுனி இவ்வாறு அறைகூவினார். ‘நற்றமிழ் விலங்கு கொற்றவை ஊரும் யானை. அதை வடவர் கொள்ள பொறுப்பளோ தமிழன்னை? திரண்டுவருக!ஆனையை மீட்க அடர்களம் காண்போம்!’. தமிழ்தேயம், கோ அம் புதூர். கோவையில் இருந்த ஒவ்வொரு தமிழமைப்பும் அந்நகரின் பெயரை அவரவருக்குரிய வகையில் கோ எம் புதூர், கோ வன் புதூர், கோ வெண் புதூர் என பலவகையில் சொற்பகுப்பு செய்து பொருள் கொண்டிருந்தனர் என்பதனால் ஊர்ப்பெயரை மட்டும் எழுதினாலே சரியான விலாசத்துக்கு கடிதங்கள் சென்று கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. கிட்டத்தட்ட எண்பது வகையில் பிரிக்கப்பட்டு பொருள் கொள்ளப்பட்டபின் மேற்கொண்டு பிரிக்கமுடியாத காரணத்தாலேயே புதிய தமிழமைப்புகள் உருவாவது மட்டுப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை காலை பத்துமணிக்கு கொங்குவேளாளர் அறக்கட்டளைப் பள்ளி அரங்கில் நிகவிருந்த கருத்தரங்குக்கு கொங்கும்முனி சீடனின் கரம் பற்றி ஒன்பதரைக்கே வந்து சேர்ந்தார். பதினெரு மணிக்கு எல்லா கூட்டங்களுக்கும் வந்து கூட்டம் தொடங்கியதுமே சென்றுவிடும் எஸ்.ஆர்.கஜேந்திரன் வந்து சேர்ந்தார். பதினொன்றரைக்கு சம தமிழமைப்பாளர்கள் மூன்று அமைப்புக்கு ஒருவர் என்ற மேனிக்கு வந்துசேர்ந்தார்கள். உழவர் சந்தைக்கு காய்கறி வாங்கப்போகும் வழியில் எதற்கு வம்பு என்று தலைகாட்ட வந்த எழுத்தாளர் குமரிநாடனைக் கண்டதும் கே.ஆர்.கஜேந்திரன் எழுந்து சென்று மங்கலான புன்னகையுடன் வணங்கிவிட்டு அவரது இரு கைகளையும் இறுகப்பற்றிக் கொண்டு அறுபது பாகையில் திரும்பி நின்று பக்கத்து சுவரைப்பார்த்துக்கொண்டு முணுமுணுவென்று சரளமாகப் பேச ஆரம்பித்தார். பத்துநிமிடம் தந்திரப்புன்னகையுடன் அந்த ஒலியை செவிமடுத்த குமரிநாடன் ஒரு விபவரமறியாத இளமெழுத்தாளரை அருகழைத்து அவரை அறிமுகம் செய்யும் சாக்கில் அவர் கையை ஒப்படைத்துவிட்டு  மெல்ல நழுவினார்.

ஒருவழியாக பன்னிரண்டு மணிக்கு கூட்டம் ஆரம்பம் ஆகியது. கோவைமுனி எழுந்து தன் முன்னுரையை சுருக்கமாக முடிப்பதாகச் சொல்லி யானையை வடவர் உரிமைகோருவதைப்பற்றி சில சொற்களைச் சொல்லிவிட்டு ‘இன்று தமிழகம் அழிந்து கொண்டிருக்கிறது. எல்லாம் நாசமாகிக் கொண்டிருக்கிறது. தமிழனுக்கு தண்ணி இல்லை. தமிழனுக்கு மின்சாரம் இல்லை. தமிழனுக்கு நல்ல கல்வி இல்லை’ என்று தன் புகழ்பெற்ற முதல் சொற்றொடரை தொடங்கினார். கூட்டத்தில் பெரும்பகுதி வெளியே சென்று அறிமுகம் புதுக்கல் தேநீர் அருந்துதல் புறணி கூறுதல் முதலிய கருத்தியல் செயல்பாடுகளில் ஈடுபட்டனர். குமரிநாடன் எப்போது சென்றார் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. கைப்பிடியை விடுவிக்க தெரியாத இளம் எழுத்தாளர் தொய்ந்து சுவரில் சாய்ந்து விட்டிருந்தார்.

மாலை மூன்றரை மணி வாக்கில் கொங்குமுனி அவர்கள் ”அதனால்தான் சொல்கிறேன் தமிழனுக்கு தண்ணி வேணும். தமிழனுக்கு மின்சாரம் வேணும். நல்ல கல்வி வேணும்…” என்று தன்னுடைய புகழ்பெற்ற முடிவுரையை சொல்ல ஆரம்பித்தார். நான்குமணிக்கு அவர் சொல்லிமுடித்தபின் கருத்தரங்கம் ஆரம்பித்தது. முதலில்பேசிய வெண்கொற்றன் ”முதல்ல காசிரங்கா என்று வடவர் சொல்லும் சொல்லும் சொல்லின் உண்மையான தமிழ்வடிவம் என்ன என்பதை நாம் கண்டுபிடித்தாகவேண்டும். உலகில் உள்ள எல்லா சொற்களும் தமிழ்ச்சொற்களே என்பதை உணராமல் அந்தந்த மொழியினர் அவற்றை தவறாக உச்சரிக்கும் அறியாமையை நீக்கும் பெரும்பொறுப்பு தமிழனுக்கு உண்டு என்பதை பாவாணர் நிறுவியிருக்கிறார்.”என்று சொல்லி காசிரங்கா என்பது ‘காசு இரங்கா’ என்ற தமிழ்ச்சொல்லே என்று விளக்கினார். தொல்பழங்காலத்தில் அக்காட்டில் வாழ்ந்த மக்கள் வணிகத்துக்குச் சென்ற தமிழர்களிடம் பொருள் கொண்டுவிட்டு காசு கொடுக்காமல் சென்றமையால் அப்பெயர் வந்திருக்கலாம் என்று சொல்லியதும் சூடான விவாதங்கள் ஆரம்பமாயின.

தமிழ்வேள் [ஒவ்வொரு முறையும் பெயரெழுதும்போதும், சொல்லும்போது வேல் அல்ல என்பது அவருக்ககொரு சீலமாகிவிட்டிருந்தது] அவர்கள் எழுந்து காய் சிறு அங்கம் என்ற தூய தமிழ்ச்சொல்லே அப்படி ஆயிற்று என்று விரிவாக விளக்கினார். அங்கே அரசுக்கட்டிலில் துஞ்சிவிழித்த வேல்நெடுங்குன்றது பெருவழுதி வடவர்களின் தலையில் கல்லை ஏற்றும் பொருட்டு கடும்போரில் ஈடுபட்டபோது அவர்கள் அந்த நியாயமான கோரிக்கைக்குச் செவிமடுக்காமல் அவருடன் போரிட்டமையால் இவருக்கு சுட்டுவிரலில் காயம் பட்டு வலி எழுந்தபோது அப்பெயரை அந்தக்காட்டுக்குப் போட்டதாகச் சொல்லி சான்றாக நூல் ஒன்றையும் வாசித்துக்காட்டினார். அந்நூல் அவராலேயே எழுதபப்ட்டதாகும்.

அதைத்தொடர்ந்து தமிழறிஞர் கணிமையார் எழுந்து காவல்சிறக்கா என்ற சொல்லை முதல்சொல்லாக அவர் கருதுவதாகச் சொன்னார். இடிமுழவார் அவர்கள் கால்சிறக்கா என்று ஏன் சொல்லலாகாது, தமிழருடன் போரிட்டு வடவர் பின்னங்கால் பிடரிபட ஓடியகாலை அவர்களால் விரைந்து ஓடமுடியாமை கருதி அப்பெயர் ஏன் சூட்டப்பட்டிருக்கலாகாது என வினவினார். பேராசிரியர் சந்திரசூடனார் அவர்கள் காய் சிறக்கா என்ற பொருளே மேலும் சிறந்த பொருத்தப்பாடு உடையது என்றார். ஏனென்றால் அந்தக் காட்டில் உள்ள காய்கள் தமிழர் தம் நாவுக்கு உகக்கவில்லை. ஆனால் அர.அர. குப்புசாமி அவர்கள் கா சிறக்கா என்ற பொருளே உயிரியலாளர் ஒப்பக்கூடியது என்றார். ஏனென்றால் அக்காட்டில் காகங்கள் அதிகம் கிடையாது என்பதை நந்தமிழர் கண்டறிந்தனர்.

அப்போது சைவப்பேழை திரு.முத்துவேலனார் அவர்கள் காசி என்ற பேரிலிருந்து அச்சொல் வந்திருக்கலாகாதா என்று வினவ அக்கணமே பொங்கி எழுந்த மணவாளனார் ஏன் ரங்கா என்ற சொல்லில் இருந்து வந்திருக்கலாகாதா என்று கொதித்தார். தமிழ்வேள் எழுந்து ‘காசி என்ற சொல்லே தமிழ்ச்சொல் அல்லவா?’ என்றார். சீயக்கா என்ற சொல் பேச்சுவழக்கில் தலைகீழாக திரும்பியதே காசி. சீயக்கா சீயக்கா என்று பலமுறை வேகமாகச் சொன்னாலே காசி என்று வந்துவிடும். அக்காலத்து தமிழர் கங்கை கரையில் சிகைக்காய் போட்டு தலை கழுவி நீராடும் பழக்கம் இருந்திருக்கிறது. அதற்கும் நூலாதாரம் அவரது நூலிலேயே இருந்தது. ரங்கா என்ற சொல்லைப்பற்றி பேச்சசெடுக்காமல் மணவாளன் அமுங்கிக் கொண்டார்

உற்சாகம் கொண்ட கணிமையார் கங்கை என்ற சொல்லே கண் கை என்ற இரு சொற்களில் இருந்து வந்ததல்லவா, கண்ணால் பார்க்கபப்டும் இயற்கையின் கை அது என்ற தூய கவித்துவத்தில் இடப்பட்ட பெயரது என்றார். முட்டாள்தனமான சொற்பிரிப்புகள் வழியாக தமிழர்தன் ஆய்வுநேர்மையை வடவர் முன் இழிவுபடுத்தக்கூடாதென சொல்லி எழுந்த பல்லாடனார் ” கவின் நகை அதாவது அழகிய புன்னகை என்ற பெயரில் அதற்கு தமிழ் மூதாதை போட்ட பெயரல்லவா அது? என்ன அறிவீனம்?”என்றார். அப்படியானால் கொங்கைதான் திரிந்து கங்கையானது என்ற விழிச்செல்வனாரின் ஆய்வுநூல் கூற்றை எப்படி மறுப்பீர்கள் என்று கேட்ட மாங்காய்குடி மருதனார் கொங்கைகள் மிகுந்திருந்ததனால்தான் கொங்குமண்டலமென்ற பெயரே வந்தது என்றும் அந்நூலில் ஆய்வுசெய்துரைக்கபப்ட்டிருப்பதாகச் சொன்னபோது கொங்குமுனி குறுநகை புரிந்தார்.

ஊடே புகுந்த ச.பரணன் ”ஐயா ஒரு விண்ணப்பம். யான் தொல்தமிழில் ஆய்வுசெய்துவருகிறேன். சங்கம் தொட்டு இங்குவரை நீளும் நந்தமிழர் மரபில் எங்கும் ஆண்குறி குறித்து ஒருசொல்லேனும் இல்லை. ஐயம் தெளிவுபெற அடியேன் சிற்பங்களில் நோக்கினேன். அங்கும் பெண்டிருக்கு குறியுளதே அல்லாமல் ஆண்களுக்கு காணப்படவில்லை.  தொல்தமிழருக்கு குறியுளதா என்ற ஐயம் என்னை வாட்டுகிறது”என்றார். ‘குறியியலும் குற்றியலுகரமும்’ என்ற ஆய்வுநூலின் ஆசிரியரான ராஜபுத்தன் ”குறியிடம் சொல்லுதல் என்று சங்க கால நூல்களில் குறிப்பிடப்படுகிறதே”என்று விளக்கம் அளித்ததை ச.பரணன் ஏற்றுக்கொண்டார்.
தென்திசைமைந்தன் அப்போது கடும் சினத்துடன் எழுந்தார். காசிரங்கா என்ற சொல்லுக்கு இலக்கண ஆய்வு தேடுவது போன்று மடமையேதுமில்லை என்றார். ‘காய்ச்சிருக்கா?’ என்று நந்தமிழ் மூதாதை கேட்ட ஒரு வினாவே அந்தப்பெயரானது என்பது வெள்ளிடை முலை. [வெண்மையான இடை மற்றும் முலை என்ற அழகிய தமிழ்ச் சொல்லை சிலர் புரியாமல் சிதைத்துக்கூறுவது கண்டிக்கத்தக்கது]. தமிழருக்கு இன்று தேவை பொருளியலாய்வு. ஒரு யானை ஒருநாளைக்கு எத்தனை கில்லக் கரமம் [கிலோ கிராம் என்பதன் மூலத்தமிழ்ச்சொல்] தழைகளை உண்கிறது எத்தனை கில்லக்கரமம் கழிகிறது இரண்டுக்கும் நடுவேயுள்ள வகுதசாரம் [விகிதாச்சாரம்] என்ன என்பதை என்றாவது நாம் கணக்கிட்டு நோக்கினோமா என்றார்.

”தமிழர்தம் பொருளியல் என்பது சொற்பொருளியல் அல்லவா? அதுவல்லமா மரபு?” என்றார் கொங்குமுனி. ”வேணுமென்றால் அறம்பொருளின்பத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். அறத்திலும்பொருளிலும் உள்ள இன்பத்தைப்பற்றி பாடுவதே தமிழ் மரபு” அப்போது இளம் ஆய்வாளர் வெங்கடமலை எழுந்து ”ஆய்வு என்ற பேரில் இங்கே கூத்தடிக்கிறீர்கள். இதன் மூலம்தான் தமிழ் அழிகிறது. செம்மொழி தமிழுக்கு ஒரு செம்பதிப்பு அவசியம் தேவை”என்று சொல்லி விட்டு ”இங்கே ச.பரணன் தமிழர்தம் குறியைப்பற்றி கேட்டார். இங்குள்ள சமணர் அருட்குறியும் பொருட்குறியும் மருட்குறியும் வெவ்வேறெனக் காட்டி குன்று தோறும் நிற்பதை அவர் கண்டதில்லையா?”என்றார். ”கண்டேன், ஆனால் அது களப்பிரக்குறி என்றார் மதுரைப் பல்கலை குறியியல் ஆய்வாளர் குமரவேல்” என்றார் ச.பரணர்.

கேரளப்பல்கலையில் இருந்து வந்திருந்த இன்னாசிமுத்து ”யானை என்பது பிழை. ஆனை என்பதே தமிழ். ஆனை என்ற சொல்லை கேரளத்தில் தேடவேண்டும். ஆனைப்பிண்டத்தை அள்ளலாம் ஆனையை அள்ள முடியுமா என்ற மலையாளப்பழமொழி இந்த உண்மையை தெளிவாகச் சொல்கிறது. மலையாள எழுத்து ஆ என்பது தும்பிக்கை சுருட்டியபடி ஒரு யானை நிற்பதைப்போலவே இருக்கிறது, ஆகவே மலையாளம்தான் மூலத்திராவிட மொழி. இதை ஸ்ரீமூலம் திருநாள் ஆய்வுமைய பேராசிரியர் அனந்தசயனன் நாயர் ஆய்வுசெய்து ஒரு நூல் எழுதியிருக்கிறார் என்றார்.

தமிழில் ஆ என்ற எழுத்து தாடை நீட்டி ஆ என்று திறந்திருக்கும் வாயின் சித்திர வடிவமே என்று பேரா குஞ்சிதபாதம் சொன்னார். தமிழ் எழுத்துக்களும் சிந்துவெளி சித்திர எழுத்துக்களும் என்ற தலைப்பில் அவர் முனைவர் ஆய்வு செய்து அவ்ருகிறார். இ என்பது தலையில் முக்காடு போட்டு ஒரு பெண் இருப்பதைப்போல உள்ளது. அதேபோல ஈ என்பது சன்னல்கம்பிகள் வழியாக வரும் ஈயின் படத்தையே காட்டுகிறது. அவற்றில் ஒன்று ஆண் ஈ இன்னொன்று பெண் ஈ என்பது தமிழர்தம் நாகரீகம் எத்துணை நனிசிறந்திருந்தது என்பதற்கான சான்றாகும். சில எழுத்துக்கள் மாறி வந்துள்ளன என்பதையும் மறுக்க முடியாது. அரிவாள்மணை எப்படி உ ஆக ஆகியது என்பது ஆய்வுக்குரியது. ஊ என்பதில் அரிவாள் மணை மீது அமர்ந்து காய்கறி நறுக்கும் ஆச்சியையே காணமுடிகிறது. அதேபோல எ கால்மடக்கி அமர்ந்திருக்கும் எருதின் சித்திரத்தை அளிக்கவில்லையா? சிந்துசமவெளி சித்திர எழுத்துக்களை உருவாக்குவதற்கு முன்னரே தமிழர் தமிழ் எழுத்துக்களை உருவாக்கி விட்டிருந்தார்கள் என்பது தெளிவு

வெங்கடமலை ”…ஆனால் தமிழில் கிடைத்துள்ள பழைய எழுத்துக்கள் பிராமி எழுத்துக்கள் அல்லவா? இன்றைய எழுத்துருக்கள் பின்னர் வந்தவை அல்லவா?”என்று சொல்லிமுடிப்பதற்குள் இருபதுபேர் சேர்ந்து அது ஆரியச்சதி என்று சொல்லிவிட்டார்கள். அதன்பின் எவராலும் எதுவும் சொல்லமுடியவில்லை. தென்திசைமைந்தன் ”புதிய பொருளியல் நோக்கில் நாம் குறளை ஆராய வேண்டும். பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்று சொல்லும் வள்ளுவர் செல்வம் இருந்தால் மட்டுமே இந்தியாவில் இருக்க முடியும் என்பதுடன் அருளில்லார்க்கு அவ்வுலகும் இல் என்று சொல்லி கல்வி இல்லாதவர்களுக்கு அமெரிக்கால் இடம் இல்லை என்பதையும் சொல்லிச்சென்றமை இறும்பூது களியுவகை முதலியவற்றை அடைவதற்குகந்தது’என்றபோது அவையினர் ஆளுக்கொன்றாக அவற்றை அடைந்தார்கள்.

அதுவரை நிகழ்ச்சிகளைக் கவனித்துக்கொண்டிருந்த கவிஞரும் திடீர்க்கட்டுரையாளருமான அழக அழகரசன் எழுந்து ‘தமிழ்நீ’ என்ற தடித்த இதழை அனைவருக்கும் வழங்கலானார். அதைவாங்கிய ஒருவர் ”சார் இத நான் ஏற்கனவே வாசிச்சாச்சு” என்றார். ”இல்லையே இது இன்னிக்குத்தானே வந்தது?”என்றார் அழக அழகரசன். ”இந்த அட்டைய பாத்திருக்கேனே?” ”நல்லா பாருங்க. இதே சிற்பம்தான் ஆனா போனமாசம் நீல கலர்லே இருந்தது. இப்ப பச்சையில போட்டிருக்கோம்” என்றார். அதன் பின் அவர் அவையில் தன் கருத்துக்களைச் சொல்லலானார்.

தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் தமிழை வளரவிடாமல் அடிக்கிறார்கள் என்றார் அழக அழகரசன். தமிழை புதுக்காலகட்டத்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவராமலிருந்தால் எங்கனம் தமிழ் வளரும்? தமிழை வளர்க்க வேண்டுமானால் இன்று மக்களுக்குத் தேவையானவற்றை நல்ல தமிழில் அளிக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் பாலியல் தமிழை விரும்புவதனால்தானே சாறு சுரோணிதா போன்ற எழுத்தாளர்களின் கொடி பறக்கிறது? சங்கம் வைத்து கொங்கை பாடிய தமிழில் ஏன் அப்பாலுணர்வை எழுத இயலாது? ஒன்றுக்கு நூறென எழுத முடியும். ஆகவேதான் தமிழ்நீ இதழில் ‘படவரலல்குலும் படமெடுத்தரவமும்’ என்ற தலைப்பில் அழக அழகரசனார் ஒரு கட்டுரை தொடர் எழுதியிருக்கிறார். விரைவில் அதற்கு பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனம் தெளிவுரையும் வெளியிடவிருக்கிறது.

மேலும் திரைப்பட மதிப்புரையும் திரைவிண்மீன்கள் பற்றிய மந்தமந்தணமும் [கிசுகிசு] தூயதமிழிலேயே அவ்விதழில் அவரால் எழுதபப்டவுள்ளன.  ‘தமிழருக்கெதிரான இனத்து பெயருள கடவுள் நடிகரும் ஆலயவழிபாட்டுப் பெயருள சிங்கள நடிகையும் கொண்டுள நட்பு குறிஞ்சி பெய்த மழையென கிளைத்து நெய்தலலையென நிலைத்து பாலை வெயில காய்தலௌயறிந்தோமென்பதையறிக’ என்று அவரே எழுதிய சிறிய மந்தமந்தணத்தை வாசித்துக்காட்டியபோது தமிழறிஞர்கள் அகமகிழ்வடையாநின்றனர்.

ஆனால் செல்லப்பனார் மட்டும் அவ்விதழிலேயே இராகு.குப்புசாமி அவர்கள் குறளுக்கு எழுதும் மிகப்பெரிய விரிவுரை பற்றி வினவ அழக அழகரசன் அது மேலைநாடுகளில் இப்போது உருவாகிவரும் ஹைப்பர் ரீடிங் என்ற வகை எழுத்து என்றும் அதனை தமிழில் விவ்விரிவுரை எனலாமென்றும் சொன்னார். அது தமிழர்க்கு புதிதும் அல்ல. தடுக்கில் பாயச்சொன்னால் கோலத்தில் பாய்வது என்ற பழமொழி அதையே குறிக்கிறது. அது இன்றைய இளைஞர் குமுகத்தை [ அச்சுப்பிழையாக குமுதம் ஆகலாகாது]  கவரும் உத்தி. ஆயிரத்து முந்நூற்று முப்பது குறளையும் இக்கணினி காலகட்டத்தில் மனப்பாடம்செய்யும்படி இளைஞரிடம் சொல்வது வன்கொடுமை. ஒரே ஒரு குறளை வைத்தே தேவையான அனைத்தையும் சிந்தனைசெய்துகொள்ள முடியும் என்பதே இம்முறை காட்டும் வழியாகும் என்றார்.

மீண்டும் எழுந்த கொங்குமுனி அவர்கள் அங்கே காசிரங்கா காட்டுக்குள் யானையை வடவர் கொன்றழித்ததைப்பற்றி பேசுவதற்கு கூடியிருப்பதைக் குறிப்பிட்டு அந்த இனப்படுகொலையை கண்டித்துப் பேசும்படி உருக்கமாகக் கோரிகை விடுக்கலானார். காசிங்கா காடு இருக்கும் அஸாம் நிலப்பகுதியானது முன்பு தமிழில் அச்சமிலி என்று அழைக்கப்பட்ட ஒரு பெருவீரனின் நினைவாக உருவான பெயராக இருக்கலாம் என்று தமிழ்வேள் அவர்கள் சொன்னபோது முனைவர். தெய்வீகராகம் அவர்கள் சினந்தெழுந்து ‘அது புனித தாமையரின் முதற் சீடர் சாம் என்பவரின் நினைவாக உருவான பெயர் அந்த சாம் என்ற பொருளில் தாமையர் அசாம் என்று சொன்னதே அச்சொல்லின் வேர்” என்று சொன்னதை அறிஞர்குழு முழுமனதாக ஏற்றது.

காசிரங்கா காட்டில் தத்துவ விவாதத்துக்கு தமிழறிஞர்கள் அழைக்கப்படாததை வன்மையாகக் கண்டிக்க வேண்டுமென்றார் முத்துவேலனார். மேலும் அந்த விவாதமே தமிழில் நிகழ்ந்திருக்க வேண்டும். தமிழறியாத உலுத்தர்கள் அதில் பங்கெடுத்திருக்கவும் கூடாது.  நற்றமிழ் யானை சவிமுள்ளாம் சமசுகிருதம் கேட்டு இன்னுயிர் நீத்து தமிழ்தெய்வமாகியது. அதை ஏத்தி அவர் எழுதிய நூற்றுஎட்டு வெண்பாக்களை அவையில் வாசிக்க அவர் அனுமதி கோரி அது மறுக்கப்படுவதற்குள் இரண்டு செய்யுட்களை வாசித்தும் முடித்தபின் பொதுவாக எவருக்கும் பேசும் திராணி இருக்கவில்லை.

இறுதியாக கொங்குமுனி முன்னரே எழுதி நகலெடுத்துக் கொண்டுவந்திருந்த கோரிக்கைப்படிவங்கள் கைச்சாத்து பெறப்பட்டு மாநாட்டுமுடிவுகளாக அரசுக்கு அனுப்பப்படலாயின. அதில் உடனடியாக காசிரங்கா காட்டுப்பகுதியில் உள்ள யானைகளுக்கெல்லாம் தூய தமிழ் பெயர் சூட்டப்படவேண்டும், காசிரங்கா காட்டை தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும், கொல்லப்பட்ட யானைக்கு மெரீனா கடற்கரையில் [ மர நாய் கடற்கரை. அங்கே முன்பு காடாக இருந்திருக்கிறது.] மணிமண்டபம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தன. அடுத்த இதழ் தமிழ்தேயம் தமிழ்யானை சிறப்பிதழாக வெளிவரும் என்று கொங்குமுனி குறிப்பிட்ட போது அவை கைதட்டவில்லை. காரணம் அவைவரும் வீடுதிரும்பிவிட்டிருந்தார்கள்.

தமிழிலக்கியம் ஒருவிவாதம்

அத்வைதம் ஒரு விவாதம்

விசிஷ்டாத்வைதம் ஓர் அறிமுகம்

சைவசித்தாந்தம் ஒரு விவாதம்

இந்திய இலக்கியம் ஒரு விவாதம்

இந்து தத்துவ மரபு – ஒரு விவாதம்

மேலைத்தத்துவம் ஓரு விவாதம்

முந்தைய கட்டுரைவற்கீஸின் அம்மா:மேலும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்