‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 35

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி- 1

சாத்யகிதான் விடியற்காலையில் வந்து அச்செய்தியை சொன்னான். திருஷ்டத்யும்னன் இரவில் அருந்திய மதுவின் மயக்கில் மஞ்சத்தில் கைகள் பரப்பி, ஒரு கால் சரிந்து கீழே தொங்க குப்புறப்படுத்து துயின்று கொண்டிருந்தான். விடிகாலையில் ஒருமுறை நீர் அருந்த எழுந்தபோது தலை எடை மிக்கதாக தோன்றவே தலையணையை எடுத்து தலைக்கு மேல் வைத்து அழுத்திக்கொண்டிருந்தமையால் காவலன் அவன் கேட்கும்பொருட்டு சிலமுறை அவ்வழியாக காலடியோசை கேட்க நடந்ததை அவன் அறியவில்லை. அதன் பின் காவலனைக் கடந்து உள்ளே வந்த சாத்யகியின் குரல் கேட்க அதை கனவில் என அறிந்து துயிலிலேயே மெல்லப்புரண்டு “உள்ளே வருக!” என்றான். “இளவரசே, பொறுத்தருள்க!” என்றபடி வந்த சாத்யகி அறைக்குள் தாழ்ந்து எழுந்த அகல் சுடரை கையால் தூண்டிவிட்டு அவன் தோளைத் தொட்டு உலுக்கி “பாஞ்சாலரே, எழுந்திருங்கள்” என்றான்.

மூன்றாவது உலுக்கில் திருஷ்டத்யும்னன் புரண்டு தலை தூக்கி சிவந்த விழிகளால் சாத்யகியை நோக்கி “என்ன?” என்றான். “எழுந்திருங்கள்” என்று மீண்டும் சாத்யகி சொன்னான். தலைக்குள் எங்கோ அக்குரல் சென்று உலுக்க திருஷ்டத்யும்னன் பாய்ந்து எழுந்து அமர்ந்து “என்ன நடந்தது?” என்றான். “இங்கு முற்புலரியில் செய்தி வந்துள்ளது. சியமந்தக மணி திருடப்பட்டுவிட்டது” என்றான். “திருடப்பட்டு விட்டதா அல்லது…?” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம். திருடப்பட்டுவிட்டது. படை கொண்டு வென்று கவரப்படவில்லை” என்றான் சாத்யகி.

சில கணங்கள் அவனை நோக்கி இருந்தபின்னர் தணிந்த குரலில் “அவன்தானா?” என்றான் திருஷ்டத்யும்னன். “அவனேதான். நடுப்பகலில் அனைவரும் காண வந்து கவர்ந்துசென்றிருக்கிறான்.” திருஷ்டத்யும்னன் பாய்ந்து எழுந்து தன் குறடுகளை அணிந்து ஆடையை சுழற்றி இறுக்கிவிட்டு “ஆகவே அவன் போருக்கு அழைக்கிறான்” என்றான். சாத்யகி “நாம் உடனே அரசியைப் பார்க்கச் செல்ல வேண்டும். அரண்மனையிலிருந்து சற்று முன் செய்தியுடன் அமைச்சன் வந்தான். உம்மை அழைத்துச் செல்ல வேண்டுமென வந்தேன்” என்றான். திருஷ்டத்யும்னன் அந்த உச்சநிலையில் தன்னுள் எண்ணங்கள் தனித்தனி ஒழுக்குகளாக சிதறிச் செல்வதை உணர்ந்தான். ஒரு பக்கம் சியமந்தக மணி கவரப்பட்டதை ஒட்டிய எண்ணத்தொடர். சிந்தனைகள். மறுபக்கம் சத்யபாமாவை சந்திக்கப் போகும் அரண்மனைப்பாதையைப் பற்றிய நுண்ணிய விழிச்சித்திரங்கள். அவற்றுக்கு அடியில் எங்கோ அவன் விழிக்கும் கணத்திற்கு முன் கண்டுகொண்டிருந்த கனவின் எச்சங்களும் ஓடிக்கொண்டிருந்தன.

சாத்யகி சொன்னான் “நேற்று முன்மதியம் எட்டு படகுகள் ஹரிணபதத்தின் படித்துறையை அடைந்துள்ளன. வணிகர்கள் என வேடமிட்டு வந்திருக்கிறார்கள். படியில் ஏறும்போதே அவர்களில் சததன்வா இருப்பதை சத்ராஜித்தின் வீரர்கள் கண்டு விட்டனர். இடரை உணர்ந்து அவர்கள் எச்சரிக்கை முரசை அறைவதற்குள் அவன் வீரர்கள் எதிர்பட்ட யாதவ வீரர்களை வெட்டி வீழ்த்தியபடி ஹரிணபதத்தின் அரசரில்லம் நோக்கி சென்றனர். இல்லத்தின் உள்ளிருந்து தன் காவல்வீரர் எழுவருடன் வாளேந்தி சத்ராஜித் முன்னால் வந்தார். வரும்போதே இளையவனே, நாம் அந்தகக் குலம். இது முறையல்ல. நாம் அனைத்தையும் மன்றமர்ந்து பேசுவோம் என்று கூவியிருக்கிறார். ஆனால் ஒரு சொல்லும் எடுக்காமல் அவரை வாளால் எதிர்கொண்டான் சததன்வா.”

சத்ராஜித் நன்கு மதுவுண்டிருந்தமையால் கால் நாழிகை கூட அப்போர் நிகழவில்லை. சததன்வாவின் வாளால் அவரது வாளேந்திய கை அறுபட்டு நிலம்படிய அவர் “இளையோனே” என்று கூவியபடி பின்னால் சென்றார். அவரை நெஞ்சில் மிதித்துச் சரித்தான். தலைப்பாகை அவிழ்ந்து நீண்டு விழுந்த கூந்தலைப் பற்றி தலையை இழுத்துத் தூக்கி கழுத்தை வெட்டினான். குருதி கொட்டும் தலையை கையில் எடுத்து மேலே தூக்கி தன் வீரர்களுக்குக் காட்டி ஆர்ப்பரித்தான். அவர்கள் குருதிவாட்களைத் தூக்கி ஆட்டி அமலை கொள்ள தலையை சுழற்றி வீசினான். அரசரின் தலையைக் கண்டதுமே யாதவர் அஞ்சி ஓடத்தொடங்கினர். சற்றே துணிந்து அணுகிய சிலரை அவன் படை வீரர்கள் எதிர்கொள்ள அவன் மட்டும் குருதி படிந்த வாளுடன் அவர் இல்லத்திற்குள் நுழைந்தான்.

கதவுகளை உதைத்துத் திறந்து உள்ளே சென்று உள்ளிருந்த பெண்களை வெட்டி வீழ்த்தியபடி கருவூல அறையை அடைந்து அதன் கதவின் மேல் நெய்யூற்றி நெருப்பிட்டான். எரிந்து கனலான கதவை உதைத்து உள்ளே சென்று அங்கே எரிந்துகொண்டிருந்த பெருநிதிப் பெட்டிகளைத் திறந்து சியமந்தக மணி வைக்கப்பட்ட பொற்பேழையை எடுத்தான். எரிந்து அமைந்த அரசரில்லம் விட்டு அவன் வெளிவந்தபோது ஆயர்பாடியே எரிந்துகொண்டிருந்தது. வெட்டுண்ட ஆயர்கள் குருதியுடன் விழுந்து துடித்துக் கிடந்த பாதை வழியாக விரைந்தோடி படகுகளில் ஏறி அக்கணமே விரைந்து சென்றார்கள். அவர்களின் காலடிகளால் குருதி படித்துறை வரை இழுபட்டது. படித்துறையிலிருந்து யமுனையில் வழிந்து கலந்தது.

“உயிர் பிழைத்தவர்கள் ஏழு மூதாயர்கள் மட்டுமே. பிற அனைவரும் கன்று மேய்க்கவும் நெய் கொண்டு செல்லவும் மன்று சூழவும் சென்றிருந்த மதிய நேரம். ஆயர்பாடியில் எப்போது ஆண்மகன்கள் குறைவாக இருப்பார்கள் என்று அறிந்திருக்கிறான். முதியவர்கள் அவர்களின் வாளுக்கு பயந்து அஞ்சி ஒளிந்திருந்ததனால் உயிர் தப்பினர். ஆயர்பாடியில் தீப்புண்பட்ட பசுக்கள் அலறியபடி சுற்றிவருகின்றன” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் சில கணங்களுக்குள் அச்சொற்கள் வழியாக அங்கு நிகழ்ந்த அனைத்தையும் கண்முன் காணத் தொடங்கினான். சொற்களின் இறுதியில் குருதி நிணம் வழிந்த கால்களுடன் படகுகளில் பாய்ந்தேறி பாய் விரித்து யமுனையில் வளைந்து கடந்து செல்லும் சததன்வாவின் படகுகளைக் கண்டபடி அவன் நின்றிருந்தான்.

பின்னர் திரும்பி “செய்தியை அனுப்பியது யார்?” என்றான். “அவர்கள் கொன்று மணிகொண்டு சென்ற செய்தியை முழவொலி வழியாக மூதாயர் அறிவிக்க அருகிலிருந்த அனைத்து ஊர்களிலிருந்துமே அந்தகர்கள் அங்கு குழுமி விட்டனர். சத்ராஜித்தின் உடல் அரண்மனை முற்றத்தில் தலையற்றுக் கிடந்தது. அவரது தலை அப்பால் நீலக்கடம்பு மரத்தினடியில் புழுதியில் நிணம் வழிய உருண்டிருந்தது. அவர்கள் அணுகும்போது ஆயர் இல்லம் முற்றிலும் எரிந்து சாம்பல்குவையாகி விட்டிருந்தது. உடன் வந்த அந்தகக்குலத்து அமைச்சன் செய்தியை விரிவாகப் பொறித்து பறவை காலில் கட்டி நமக்கு அனுப்பினான். இரவெலாம் பறந்து செங்கழுகு இன்று வந்து சேர்ந்தது” என்றான் சாத்யகி.

திருஷ்டத்யும்னன் அவன் மேல் நாட்டிய விழி விலக்காமல் கைநீட்டி தன் உடைவாளை எடுத்து இடையில் பொருத்திக்கொண்டான். “செய்தி அறிந்த அரசி அனலுருவாக இருக்கிறார்” என்றான் சாத்யகி. “முகம் கழுவிக்கொண்டு வாரும். செல்லும்போதே நம் சொற்களை வகுத்துக்கொள்வோம்” என்றான். திருஷ்டத்யும்னன் திரும்ப அறைவாயிலில் நின்றிருந்த அணுக்கன் “நறுநீரும் நல்லாடையும் சித்தமாக இருக்கிறது இளவரசே” என்றான். திருஷ்டத்யும்னன் அவனுடன் சென்று தாழியில் நிறைந்த தாழை மணம் கொண்டநீரில் முகத்தைக் கழுவி துடைத்து ஆடைமாற்றி வந்து “கிளம்புவோம்” என்றான்.

அவர்கள் படிகளில் குறடுகள் ஒலிக்க நடந்து அரண்மனை முற்றத்தை அடைந்து புரவிகளில் ஏறிக்கொண்டனர். அவர்களின் நிழல் பேருருவாக எழுந்து சுவர்களை மடிந்துக் கடந்தது. சாத்யகி தனக்குள் என “எங்ஙனம் இதற்குத் துணிந்தான் என்று எத்தனை எண்ணியும் என்னால் உணர முடியவில்லை” என்றான். திருஷ்டத்யும்னன் “அது கோழையின் செயல். அவர்கள் எப்போதும் ஒரு அடி கூடுதலாகவே அடிப்பார்கள்” என்றான். சாத்யகி புரியாதவன் போல் திரும்பி நோக்கி ஏதோ சொல்லவந்து சொல்லாமல் மீண்டும் புரவியைத் தட்டினான். “தன் தாக்குதல் அந்தகர்களை அச்சுறுத்த வேண்டும் என்றும் விருஷ்ணிகள் தொடர்ந்து தன்னைத் தாக்காது தயங்கவேண்டும் என்றும் சததன்வா எண்ணுகிறான். செயலின் விளைவை அஞ்சும் எளியோன் செயல் அது” என்றான் திருஷ்டத்யும்னன். “ஷத்ரியனின் எண்ணம் அதுவாக இருக்காது.”

“சியமந்தக மணி அந்தக குலத்தின் குலதெய்வம். நம் அரசியின் குலக்குறி அது. எப்படி அதை யாதவர்குலம் விட்டுவிடும் என்று அவன் எண்ணுகிறான்? துவாரகையின் பெரும்படை தன்னைச் சூழ்ந்தால் எப்படி காத்துக்கொள்வான்? மூடன், முழுமூடன்!” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “மூடனல்ல. அவனுக்குப்பின்னால் காசியும் மகதமும் உள்ளன. இந்த மணிகவர்தல் ஒரு தூண்டில் எனவும் இருக்கலாம். நம்மை அவன் எல்லைக்குள் இழுக்கிறானா?” என்றான். சாத்யகி திரும்பி நோக்கி அறியாது கடிவாளத்தை இறுக்கி குதிரையை நிறுத்தினான். பின்னர் “ஆம், அவ்வண்ணமும் ஆகலாம்” என்றான்.

“சென்ற பல்லாண்டுகளாக மகதம் துவாரகையை போருக்கு சீண்டிக்கொண்டிருக்கிறது. ஒரு போர் நிகழ்ந்தால் வென்றாலும் தோற்றாலும் மகதத்திற்கு இழப்பதற்கு ஏதுமில்லை. தன் எல்லைகள் முழுக்க ஜராசந்தர் தொடர்ந்து போர் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு செங்கல்லையும் எண்ணி எண்ணி எடுத்து வைக்கும் துவாரகை இன்று போர் புரிய முடியாது. களஞ்சியத்திலிருந்து செல்லும் ஒவ்வொரு பொன்னும் இன்னொரு பொன்னுடன் திரும்பி வரவேண்டும் என்று எண்ணுபவர் யாதவர். போர் என்பது பொன்னை அள்ளி புழுதியில் வீசுவதற்கு நிகர் என்று அவர் சொல்வதுண்டு. ஆகவே இத்தனை நாளாக ஒவ்வொரு அவமதிப்பையும் துவாரகை பொறுமை காத்துள்ளது. ஒவ்வொரு போர் முனையிலும் பாராமுகத்தை காட்டியுள்ளது” என்றான் சாத்யகி.

“இம்முறை அதை செய்ய முடியாது” என்று திருஷ்டத்யும்னன் புன்னகைத்தான். “சியமந்தகமணியை கொண்டு சென்றவனை விட்டுவிட்டால் யாதவகுலங்கள் துவாரகை மேல் நம்பிக்கை இழப்பார்கள். ஒரு படை கொண்டு சென்று சததன்வாவை வெல்லாமல் இருந்தால் இளைய யாதவர் ஒருபோதும் யாதவ பெருங்குடிகளை தன்னுடன் நிறுத்த முடியாது. சததன்வா தான் அந்த மணி கவர்ந்ததைக் காட்டியே தன்னை ஒரு யாதவர்தலைவனென நிறுத்தி சில யாதவ குடிகளை சேர்த்துக்கொள்ளவும் முடியும். ஆகவே இது நன்கு எண்ணித் துணிந்த செயலே” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி “ஆம்” என்று சொல்லி பெருமூச்சு விட்டான்.

புரவிகள் இருண்டு குளிர்ந்துகிடந்த துவாரகையின் தெருக்களில் குளம்போசை எழுந்து சுவர்களில் எதிரொலிக்க விரைந்து சென்றன. விடியற்காலையில் கடற்காற்றில் நீர்த்துளிகள் நிறைந்திருந்தன. கீழே ஒளிவெள்ளமென நிறைந்திருந்த துறைமுகப்பில் பீதர்களின் பெரும்கலம் ஒன்று கொம்பு ஊதியபடி பாய் விரிப்பதை காண முடிந்தது. பாய் நுனியில் கட்டப்பட்ட மீன் எண்ணெய் விளக்கு மண்ணிலிருந்து ஒரு செந்நிறக்குருவி போல மேலெழுந்தது. மீண்டும் ஒரு கொம்போசையுடன் இன்னொரு விளக்கு மேலெழுவதை காண முடிந்தது. கால்பட்டு கலைந்த மின்மினிகள் மட்கிய தடியிலிருந்து எழுவதுபோல பாய்மர விளக்குகள் எழுந்தன. சுருள் வழிகளில் அவர்களின் புரவிகள் செல்லச் செல்ல கீழே நின்ற பீதர் கலத்தின் மேல் விண்மீன் கூட்டம் ஒன்று மொய்த்து நின்றதை திருஷ்டத்யும்னன் கண்டான்.

திருஷ்டத்யும்னன் திரும்பி சாத்யகியிடம் “இத்தனை பெருவணிகம் நிகழும் ஒரு நாடு இன்றுவரை போரை எதிர்கொள்ளவில்லை என்பது வியப்புக்குரியதே” என்றான். சாத்யகி “இங்கு போர் நிகழாதிருப்பதற்கு சில பின்புலங்கள் இருக்கின்றன இளவரசே” என்றான். “ஷத்ரிய நாடுகளில் முதன்மையான அஸ்தினபுரியிடம் இளைய யாதவர் கொண்ட உறவு முதன்மையானது. அவர்களின் மண உறவு கொண்ட குடியான பாஞ்சாலத்துடன் கூடிய உறவும் எங்கள் வல்லமைகளுள் ஒன்று. அத்துடன் இளைய யாதவர் கொண்ட எட்டு மண உறவுகளும் எம்மை வலுப்படுத்துகின்றன. ஜாம்பவர்களும் களிந்தர்களும் உபமத்ரர்களும் இளையவரின் ஒரு சொல்லுக்கு எழுந்து படை கொண்டு வந்து எங்கள் களம் நிரப்பும் வல்லமை கொண்டவர்கள். அதை மகதமும் அறியும்.”

“எங்களை அஞ்சி ஜராசந்தர் நிஷாதர்களிடமும் மச்சர்களிடமும் மணம் புரிந்து தன் படைபெருக்கும் செயலில் இருக்கிறார். துவாரகைக்கு நிகரான பொருளும் படையும் இன்று மகதத்திடம் இல்லை என்பதே உண்மை” என்றான் சாத்யகி. “ஆனால் மகதம் தொன்மையான ஐம்பத்தி ஆறு ஷத்ரிய குலங்களில் ஒன்று. ஷத்ரியர்கள் புவியில் ஒரு பேரரசு எழுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். துவாரகைக்கு எதிராக நிற்பது பாரதவர்ஷத்தின் தொன்மையான ஷத்ரிய குலங்கள் ஐம்பது என்பதை மறக்கவேண்டாம்” என்றான் திருஷ்டத்யும்னன். “அதை அறிவோம். ஆகவே ஒவ்வொரு அடியிலும் சித்தம் கூர்ந்து இருக்கிறோம். எங்கள் களக்கொடியென எழுந்து நின்றிருப்பது எங்கள் இளைய யாதவரின் அருள்” என்றான் சாத்யகி.

அரண்மனை முற்றத்தில் அவர்களைக் காத்து அரண்மனையின் துணையமைச்சர் பத்ரர் நின்றிருந்தார். சாத்யகி இறங்கியபடியே “அக்ரூரரும் கிருதவர்மனும் வந்து விட்டனரா பத்ரரே?” என்றான். “அவர்கள் அரசியுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார் அவர். திருஷ்டத்யும்னன் தன்னை அணுகி வந்த சேவகனிடம் குதிரையின் சேணத்தை அளித்துவிட்டு “செல்வோம்” என்றான். இருவரும் பந்த வெளிச்சம் விழுந்துகிடந்த பெரிய முற்றத்தில் குறடுகள் இணைச்சரடு என ஒலித்துத் தொடர சீராக நடந்து படிகளில் ஏறி பெரும் தூண்களைக் கடந்து இடைநாழி வழியாக சென்றனர். ஒவ்வொரு அறையிலும் அமைச்சுப்பணியாளர் விளக்கொளியில் பணியாற்றிக்கொண்டிருந்ததை திருஷ்டத்யும்னன் கண்டான். எங்கும் மெல்லிய பரபரப்பு ஓடிக்கொண்டிருந்தது. அவ்வரண்மனை முழுக்க ஹரிணபதத்தில் நடந்த செய்தி பரவிவிட்டதென்றும் ஒரு படை திரட்டலுக்கான பணி முன்னெடுப்புகள் நிகழ்கின்றன என்றும் அவன் உய்த்தறிந்து கொண்டான்.

ஒவ்வொரு அறைக்குள்ளிலிருந்தும் ஒருவர் கைகளில் ஓலையுடனோ பட்டுச்சுருளுடனோ வெளிவந்து இடைநாழிகளில் விரைந்து பிறிதொரு அறைக்குள் சென்று கொண்டிருந்தனர். எவரும் அவர்களை நோக்கவில்லை. சாத்யகி திரும்பி “படைப் புறப்பாட்டிற்கு அரசி முடிவு செய்து விட்டார் என்று தெரிகிறது” என்றான். “ஆம். ஆனால் இத்தருணத்தில் ஒரு படை புறப்பாடு தேவையா என்று நான் ஐயம் கொள்கிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி நின்று திரும்பி சினத்துடன் “இதுவரை நீங்கள் பேசி வந்ததே படை புறப்பாட்டிற்குத்தானே. நாம் சததன்வாவை வென்று சியமந்தக மணியை கொள்ளாவிட்டால் யாதவத்தலைமையே அழிந்து விடும் என்றல்லவா சொன்னீர்கள்?” என்றான்.

“ஆம், சியமந்தகமணியை கொள்வது இன்றியமையாதது. ஆனால் அதற்கென்று ஒரு படை புறப்பாடு உடனே நிகழமுடியுமா என்று எனக்கு விளங்கவில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி அவனை நோக்கி சொல்விளங்கா விழிகளுடன் நிற்க திருஷ்டத்யும்னன் “உடனே நான் ஏதும் சொல்ல விழையவில்லை. இங்கு இறுதிச் சொல்லென்பது யாதவ அரசிக்குரியது என அறிவேன்” என்றான். “ஆம், அவர் சொல்வதையே கேட்போம்” என்று சொல்லி சாத்யகி திரும்பி நடந்தான். திருஷ்டத்யும்னன் “என் உள்ளம் குழம்பியிருக்கிறது யாதவரே” என்றபடி தொடர்ந்தான்.

அரண்மனையின் பெருங்கூடத்தில் துவாரகையின் ஏழு படைத்தலைவர்களும் முன்னரே வந்து அமர்ந்திருந்தனர். அனைவரது முகங்களும் ஒன்றுபோல் இருந்தன. படைத்தலைவர்கள் தங்கள் உள்ளங்களில் எப்போதும் போர்களை நடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று திருஷ்டத்யும்னன் எண்ணுவதுண்டு. நடிப்பு சலிக்கையில் அவர்கள் போருக்கு எதிரான எண்ணங்களை கொள்கிறார்கள். குடித்து, காமத்திலும் வேட்டையிலும் திளைத்து சோர்ந்து, கழிவிரக்கம் கொண்டு மீண்டும் போர் குறித்த எண்ணங்களை வந்தடைகின்றனர். போர் ஒன்றே அவர்களை உயிர் கொண்டவர்களாக வைத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் செய்யும் பொருளற்ற படைப்பயிற்சியை பின்னிரவுகளில் சோம்பல் மிக்க பொழுதுகளை பொருள் கொண்டதாக்குவது போரே. அத்தருணம் வந்து விட்டதென்பதை அவர்கள் உணர்ந்துகொண்டது போல் இருந்தது.

கதவு மெல்லோசையுடன் குடுமியில் சுழன்று திரும்ப குறடுகள் ஒலிக்க அவர்கள் உள்ளே நுழைந்ததும் படைத்தலைவர்கள் எழுந்து தலை வணங்கினர். அக்கணமே அங்கிருந்து ஒரு போருக்குக் கிளம்புவது போலிருந்தனர். அமைச்சர் உள்ளே சென்று உடனே மீண்டுவந்து தலைவணங்கி “அரசி அழைக்கின்றார்” என்றார். அவரும் ஒரு நாடகத்தில் அழுத்தமாக நடிப்பது போலிருந்தது. அவருள்ளும் போர் தொடங்கிவிட்டது என்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான்.

தயங்கும் காலடிகளுடன் அமைச்சரைத் தொடர்கையில் அவையில் தான் சொல்ல வேண்டியது என்ன என்பதை எண்ணி நோக்கினான். ஒரு சொல்லும் உள்ளத்தில் எழவில்லை. மாறாக கடைத்தெருவில் கண்ட சூதன் சொன்ன ஒரு வரி நினைவில் எழுந்தது. மாறா பெரும்காதல் ஒன்றை அறிந்தவன் அவன். மறுகணம் அன்று விழிக்கையில் கண்ட கனவில் அவன் அவ்விறலியின் அருகே அமர்ந்திருப்பதைக் கண்ட நினைவு எழுந்தது. தெளிவற்று ஒரு எண்ணமாக எழுந்தபோதே அவன் நெஞ்சம் கைபட்ட யாழ் நரம்பென அதிர்ந்தது. பின் எங்கிருக்கிறோம் என்று தெளிவடைந்தான். தளிர்பூத்த இளம்காட்டில் ஒளிரும் சிறு நீர்நிலை அருகே கவிழ்ந்த படகொன்றின் மேல் அமர்ந்து அவளை அருகமைத்து இடை வளைத்து தோள் சேர்த்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். சொல்லென ஆகாத இனிய உணர்வு ஒன்றை.

சாத்யகி திரும்பி “வருக இளவரசே!” என்றபோது ஒரு கணத்தில் தான் சென்ற தொலைவை உணர்ந்து வியந்தபடி திருஷ்டத்யும்னன் உள்ளே நுழைந்தான். அரசுசூழ் அறையில் சாளரத்தருகே வெண்பட்டு விரிக்கப்பட்ட பீடத்தில் அவள் அமர்ந்திருக்க பின்னால் அவளது அணுக்கத்தோழி நின்றிருந்தாள். முன்னால் அக்ரூரரும் கிருதவர்மனும் அமர்ந்திருந்தனர். உள்ளே நுழைந்த சாத்யகியை நோக்கி சத்யபாமா கையசைத்து அமரும்படி சொன்னாள். முகமன் எதுவும் சொல்லாமல் அவன் பீடத்தில் அமர்ந்துகொள்ள திருஷ்டத்யும்னன் “யாதவ அரசியை வணங்கும் பேறு பெற்றேன்” என்று சொல்லி தன்பீடத்தில் அமர்ந்தான். சத்யபாமா “நிகழ்ந்ததை அறிந்திருப்பீர் பாஞ்சாலரே. எந்தை கொல்லப்பட்டிருக்கிறார்” என்றாள்.

“ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். “நம்முன் வழியொன்றும் இல்லை. யாதவப் படைப்பிரிவுகள் ஏழு உடனே மதுராவிலிருந்து கிளம்பி காசிக்குச் சென்று சததன்வாவைக் கொன்று சியமந்தக மணியைக் கவர்ந்து வர ஆணையிட்டிருக்கிறேன். படைகளை அக்ரூரரும் கிருதவர்மனும் நடத்துவர். உடன் செல்ல சாத்யகியையும் உங்களையும் பணிக்கிறேன்” என்றாள். அச்சொல்லில் இருந்த உறுதியே அவன் சொல்லவேண்டியதென்ன என்ற தெளிவை அளிக்க திருஷ்டத்யும்னன் தன் சொற்களை கோத்துக்கொண்டு “அரசி, பொறுத்தருள்க! இப்போது இப்படை நகர்வு உகந்ததல்ல” என்றான்.

விழிகளில் சினம் மின்னி அணைய சத்யபாமா “ஏன்?” என்றாள். “மதுராவில் நாம் நிறுத்தியிருக்கும் படைப்பிரிவுகள் அனைத்தும் அதைச் சூழ்ந்துள்ள மகதத்தின் பதினெட்டு காவல் அரண்களில் இருந்தும் நகரைக் காக்கும் பொருட்டே. மதுராவிற்கு மிக அருகேயுள்ளது தேவகரின் உத்தர மதுரா. அதற்கு சற்றே சேய்மையில் உள்ளது குந்திபோஜரின் மார்த்திகாவதி. இந்நகரங்கள் அனைத்தும் மகதம் கை எட்டினால் தொடமுடியும் தொலைவில் உள்ளவை. நம் படைப்பிரிவுகளைத் திரட்டி கங்கை வழியாக கொண்டு சென்று காசியைக் கடந்து சததன்வாவின் நகரைத் தாக்குவதென்பது மதுராவையும் பிற இரு தலைநகர்களையும் நாம் பாதுகாப்பற்று விட்டுவிட்டுச் செல்கிறோமென உலகிற்கு அறிவிப்பதற்கு நிகரே” என்றான்.

அக்ரூரர் “ஆம். அதை நான் ஏற்கெனவே எண்ணினேன். அரசிக்கு குறிப்புணர்த்தவும் செய்தேன்” என்றார். விழிகள் குழப்பம் கொண்டு அலைய “ஆனால் நம்முன் வேறு வழியில்லையே! இப்போது தயங்கினோம் என்றால்…” என்றாள் சத்யபாமா. கிருதவர்மன் “ஒன்று செய்யலாம். துவாரகையிலிருந்து ஒரு படையை கொண்டு சென்று…” என்று சொல்வதற்குள் சத்யபாமா கைவீசி “அது ஆகாத எண்ணம். இங்கிருந்து ஒரு படை மதுரா வரைக்கும் செல்வதற்கு பன்னிரெண்டு நாட்களாகும். பன்னிரெண்டு நாட்கள் சியமந்தகத்துடன் அவன் வாழ நான் ஒருபோதும் ஒப்பேன்” என்றாள். மூச்சிரைக்க “அந்த மணி அவன் கையில் இருக்கையில் நான் திருமகள் அல்ல. நான்…” என திணறி மேலே சொல்லெடுக்க முடியாமல் மூச்சிரைக்க அவள் எழுந்துகொண்டாள்.

“படை கொண்டு செல்லாமல் சததன்வாவை வெல்வது எப்படி?” என்றார் அக்ரூரர். திருஷ்டத்யும்னன் “பாஞ்சாலத்தின் படைகள் என் ஆணையின் கீழ் உள்ளன. என்னிடம் பொறுப்பை அளியுங்கள். அவன் குருதி படிந்த சியமந்தக மணியுடன் நான் வந்து தங்கள் தாள் பணிகிறேன்” என்றான். வெடித்தெழுந்த குரலில் “இல்லை!” என்றாள் சத்யபாமா. “இது என் குலமணி. இளைய யாதவரின் படைக்கலங்களால் மட்டுமே இது வெல்லப்பட வேண்டும். சியமந்தகத்தை வெல்லாவிட்டால் இளையவர் என் இறைவனல்ல” என்றாள். “அரசி” என்று திருஷ்டத்யும்னன் மேலும் சொல்ல குரலெடுக்க கையமர்த்தி “உங்கள் அன்பிற்கு நன்றியுடையேன் இளவரசே. இன்று நான் கோருவது படை அமைக்கவும் களம் சூழவும் உங்கள் கல்வியை மட்டுமே” என்றாள். திருஷ்டத்யும்னன் தலைவணங்கினான்.

சாத்யகி “அஸ்தினபுரியிடமிருந்தும் நாம் ஒரு படைப்பிரிவை பெற்றுக்கொண்டால் என்ன?” என்றான். “அதுவும் யாதவர்க்கு பீடு அன்று” என்றாள் சத்யபாமா. “முறைப்படி அந்தகக் குலத்து யாதவர்களால் வென்று கொள்ளப்பட வேண்டியது அம்மணி. விருஷ்ணி குலத்து யாதவர்களின் அரசி என்ற வகையில் அனைத்து யாதவர்களையும் திரட்டி களம் அனுப்புவதும் எனக்கு உகந்ததே. ஆனால் யாதவர்கள் வாளால் வென்று கொள்ளப்பட வேண்டும் சியமந்தகம். வேறு எவ்வகையிலும் அது நிகழலாகாது” என்றாள்.

முந்தைய கட்டுரைதகர முரசு
அடுத்த கட்டுரைநான் இந்துவா?