‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 34

பகுதி ஆறு : மணிமருள் மலர் – 7

ஜாம்பவர்குலத்தில் மூத்தஜாம்பவரின் மகளாக நான் பிறந்தபோது எட்டு நற்குறிகள் தோன்றின என்று என் குலப்பாணர் பாடுவர். என் அன்னை பின்மதிய வேளைக்கனவில் வெண்முகில்குவை ஒன்று யானையெனத்திரண்டு அஸ்வபாதத்தின் மேல் வலது முன்கால் வைத்து இறங்கி வெண்ணுரைபெருகும் அருவியென மலைச்சரிவில் வழிந்து தழைப்பெருக்குக்குள் மான்கூட்டங்கள் போல இலையலைத்து ஓடி வருவதை கண்டாள். குளிர்ந்த நீர் அவள் கால்களை நனைக்க விழித்துக்கொண்டபோது அறைக்கு வெளியே கிரௌஞ்சம் ஒன்று மும்முறை குரலெழுப்பியது. இளமழை பெய்து இலைகள் ஒளிவிட்டுக்கொண்டிருந்தன. விண்ணில் இந்திரவில் எழுந்து நின்றிருந்தது. அவள் எழுந்து வெளியே வந்தபோது கூரை ஒழுகுமிடத்தில் வைக்கப்பட்டிருந்த மண்கலம் நிறைந்திருப்பதை கண்டாள். தோழியை அழைத்தபோது மலர்தொடுத்துக்கொண்டிருந்த அவள் கையில் மாலையுடன் ஓடிவந்தாள். அப்போதே என் அன்னை தான் கருவுற்றிருப்பதை உணர்ந்துகொண்டாள்.

என் குடியில் குழந்தைகள் எக்கல்வியும் பெறுவதில்லை. பிறந்த நாள் முதல் அவர்கள் விளையாடத் தொடங்குகிறார்கள். அகவை நிறையும் சடங்குக்குப்பின் ஆண்கள் வேட்டைக்கும் பெண்கள் குடியமைக்கவும் காப்புகட்டி உரிமைகொள்கிறார்கள். எங்கள் இளமையென்பது தீராவிளையாட்டு மட்டுமே. முதல் ஜாம்பவரின் மகளாகப் பிறந்தமையால் நான் செம்மொழியை கற்றுக் கொண்டேன். தேனெடுக்கவும், கனி சேர்க்கவும், நீராடி மகிழவும், மலர் கோக்கவும் என் குடிப்பெண்டிரிடமிருந்து அறிந்தேன். விற்கலையும் வேல்திறனும் நச்சுத்தொழிலும் அன்னையர் கற்பித்தனர். கற்பதறியாமல் கற்கவேண்டுமென்பதே எங்கள் குலமுறை. இளமையில் மலைமுடி ஏறிச்சென்று அங்கே நின்று எங்கள் காட்டை பார்ப்போம். நான் ஜாம்பவதி என நெஞ்சைத்தொட்டு உணரும் விம்மிதத்தை விரும்பினேன்.

மலைஉச்சிப் பாறை ஒன்றில் அமர்ந்து ஒருமுறை நோக்குகையில் எங்கள் குகைகளுக்குமேல் எழுந்து நின்ற நீலமுகில் ஒன்றை கண்டேன். என் விழிநிறைத்து நெஞ்சுள் குளிரென்றாகியது அந்த நீலம். மலைச்சுனைகள் ஒளிகொண்டதுபோல. எருமைவிழிகளில் இளவெயில் தெரிவதுபோல. செந்நெருப்பு அமர்ந்திருக்கும் பீடம் போல. அந்த முகில் இரு கைகளை விரித்து என்னை நோக்கி வருவதைக் கண்டேன். அது புன்னகைப்பதுபோல தோன்றியதும் எழுந்து நின்று தோழியரை நோக்கினேன். அவர்கள் தொலைவில் மலர்தேர்ந்துகொண்டிருந்தனர். நான் நின்றிருந்த பாறைமுடிமேலிருந்து இறங்குவது எளிதல்ல. கைநீட்டி கூவியழைக்க எண்ணினேன். குரல் எழவில்லை. கால்கள் அசைவிழந்திருந்தன.

நீண்டு வந்த நீலக்கைகள் என்னை  சூழ்ந்துகொண்டன. நீர்போல குளிர்ந்த முகிலால் முழுமையாக சூழப்பட்டேன். மண்ணிலிருந்து என்னை அள்ளி எடுத்து மேல்கீழற்ற வானில் நிறுத்தியது அது. ஒரு சொல்லை எவரோ என் காதில் சொன்னார்கள். பின்னர் அச்சொல்லை கனவுகளில் மட்டுமே கேட்டிருக்கிறேன். நினைவில் ஒருபோதும் தொட்டு எடுத்துவிடமுடியாத சொல். முகில் நீங்கியபோது நான் அந்த மலைமுடிமேல் மயங்கிக்கிடந்தேன். தோழியர் வந்து என்னைத் தூக்கி நீரள்ளி முகம் தெளித்து எழுப்பி ஏனென்று வினவினர். ஏதும் சொல்லவியலாமல் நான் விம்மியழுதேன்.

பின் எப்போதும் அந்த மலைமுடிப்பாறைமேல் சென்றமர்ந்துகொண்டேன். முகில் நோக்குகையில் சொல்லிழப்பேன். பின் சித்தம் அழிவேன். என்னை முகிலின் காதலி என்றே என் தோழியர் சொல்வர். முகில் நிறம் என ஒன்று உண்டா என்ன? கருமை என்று விழி சொல்கையில் நீலம் என்று அகம் கொள்கிறது. தண்மையென்று உடல் அறிகையில் வானில் நின்றெரிகிறது. அருகென உணர்கையில் கருமை. அயலென்று அறிகையில் அது நீலம். புலரியில் அது செம்மை. கதிர் பரவிய உச்சியில் அது இந்திர நீலம். கனவில் அது மணிநீலம். முகிலைப் போல் கணமொரு ஆடை மாற்றிக் கொள்ளுவது வேறொன்று இல்லை. முகிலைப் போல் முடிவிலா உருக்கொண்டதும் பிறிதில்லை. ஒரு கணம் விழி திருப்பி நோக்கினால் பிறிதொன்று நிற்கும். ஒரு கணம் கடந்து சென்றால் தன்னை அவ்வெண்ணமாக மாற்றி நம் முன் எழுந்து நிற்கும்.

அலகிலியின் விழிமாயத்தை ஒளி உண்டு உமிழும் பெரும் புன்னகையை ஒன்று பலதென பரந்து வான் நிறைக்கும் பெருங்களியாட்டத்தை, நின்று சுடர்ந்து இருண்டு மறைந்து ஒளி உண்டெழுந்து ஒவ்வொரு நாளென்று திகழும் அதன் முடிவின்மையை நான் ஒவ்வொரு நாளும் அறிந்தேன். ஒரு துண்டு முகில் என் கையில் இருக்க வேண்டுமென விழைந்தேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் விந்தையென நிகழும் ஒரு முகில் துளி. மலைமுடியில் நின்று கை நீட்டி முகிலில் ஒரு பிடியை அள்ளி எடுத்து நெஞ்சோடணைப்பதை கனவு கண்டேன். உச்சிவெயிலில் ஒளிகொண்ட இந்திரநீலத்தின் ஓர் இதழ்.

ஒரு நாள் எந்தை அதை கொணர்ந்தார். அப்போது குகை வாயிலில் என் தோழியருடன் கழற்சி ஆடிக் கொண்டிருந்தேன். மலைச் சுனையில் பொறுக்கிக் கொண்டு வந்த உருளைக் கற்களை மென் மணலில் உருட்டி கூவிச் சிரித்து துள்ளி நகைத்தபடி ஆடிக்கொண்டிருந்த என் முன் வந்து நின்று “இளையோளே, இனி இது உன் ஆடலுக்கு” என்று சொல்லி தன் கையை விரித்தார். யானைமத்தகத்தில் விழி என பெரிய கைகளில் அந்த மணி சுடர்ந்தது. “முகில்!” என்று கூவினேன். “ஆம் ஒளி கண்ட சிறு முகில் இது” என்றார். “எனக்கா?” என்று இரு கைகளாலும் நெஞ்சைப் பற்றி நின்றேன். “உனக்கென மட்டுமே” என்றார். ஓடிச் சென்று அதன் அருகில் அணுகி குனிந்து நோக்கினேன். “எங்கு கிடைத்தது தந்தையே?” என்றேன். “மலைச்சிம்மம் ஒன்றின் குகைக்குள் இதன் விழியொளிரக் கண்டேன். அக்கணமே உன்னுடையது இது என்று முடிவு செய்தேன்” என்றார்.

அதை தொட என் கை துணியவில்லை. “என்னை நோக்கி அது புன்னகைக்கிறது” என்றேன். சிரித்தபடி “மணிகளெல்லாம் மானுடரை நோக்கும் தெய்வங்களின் புன்னகைகளே” என்றார். “இது எந்த தெய்வம்?” என்றேன். “புன்னகைக்கும் விழித்துளி இது. இது அமைந்த முகம் எதுவென இப்போது நாமறிய முடியாது. நல்லூழ் அமைந்தால் அது நம் முன் தோன்றலாம்” என்றார் எந்தை. பின்னால் வந்து நின்ற முதிய ஜாம்பவர் “அது நலம்பயக்கும் தெய்வமென்று எப்படி அறிவது அரசே?” என்றார். எந்தை “மணிகளில் அமைந்த தெய்வங்கள் நம்முடன் ஆடவிழைகின்றன. அவற்றைக்கொண்டு நாம் மகிழ்கையில் அருள்கின்றன. அவற்றுக்கு பிறிதொன்றை நிகர்வைக்கையில் சினம் கொள்கின்றன” என்றார்.

நடுங்கும் சிறு விரல் நீட்டி அதை மெல்ல தொட்டேன். அனலென எரியும் என்று என் உள்ளம் அச்சம் கொண்டது. தொட்டதும் பனியென அது குளிர்ந்திருப்பதை உணர்ந்து விரலை எடுத்துக் கொண்டேன். சுட்டதா குளிர்ந்ததா என்றறியாமல் என் விரல் விதிர்த்தது. தந்தை புன்னகைத்து “என்ன?” என்றார். “சுடுகிறது” என்றேன். அவர் அதை ஒரு மரவுரி நூலில் கோர்த்து என் கழுத்தில் அணிவித்து “இந்த விழி உன் நெஞ்சில் எப்போதும் திறந்திருக்கட்டும். யாமறியாத ஒன்று எப்போதும் உன் நோக்காகட்டும்” என்றார். “அவ்வாறே ஆகுக!” என வாழ்த்தினர் என் குடியினர்.

அதை அணிந்ததுமே மலைச்சுனை மதியக்கதிர் பட்டதுபோல என் உடல் குளிரொளி கொள்வதை உணர்ந்தேன். திரும்பி தோழியரை நோக்கி “எப்படி இருக்கிறேன்?” என்றேன். “கதிரெழுந்த முகில் போல” என்றாள் ஒருத்தி. “உன் இதயம் ஒரு நீல விழியானது போல” என்றாள் இன்னொருத்தி. “நீல மலர் மேல் பனித்துளி போல” என்றாள் பிறிதொருத்தி. என் குடிப் பெண்டிரெல்லாம் என்னைச் சூழ்ந்து அதை நோக்கினர். “என்ன நிறமடி இது? நீலமா பச்சையா நிறமின்மையா?” என்றாள் என் மூதன்னை. “இருள் ஒளியாகும் முதல்கணத்தின் ஒரு நிறம்” என்று இளையவளொருத்தி மறுமொழி சொன்னாள்.

அதன் பின் எப்போதும் என்னிடமிருந்தது அந்த மணி. பகலெல்லாம் அதை நெஞ்சில் சூடி மலைச்சாரலில் அமர்ந்திருந்தேன். மண்ணிலிருக்கையில் என் நெஞ்சிலிருந்தது மணிநிற வானம். அதைச் சூடி சுனை நீரில் குனிந்து என்னை நோக்கியபோது உள்ளிருந்து என் குலதெய்வமொன்று என்னை நோக்கியதை கண்டேன். இரவில் என் அருகே அதை வைத்து படுத்துக் கொண்டேன். ஒவ்வொருவரும் விழி அல்கி துயில் கொள்கையில் அது விழித்து குகையை ஒளிரச் செய்வதை கண்டேன். பெரும் சிலந்தியென அது தன் ஒளியால் பின்னி பின்னி முடிவிலா வலையொன்றை அமைக்க நான் சிறு பூச்சியென அதில் சிறகுசிக்கி துடித்தேன். என்னை அணுகி தன் நச்சுக் கொடுக்கால் என்னைத் தொட்டு உடல் துடிக்க உயிர் பதைக்க தன்னுள் என்னை சேர்த்துக் கொண்டது.

புலரியில் கதிர் வானில் எழுவதற்கு முன் என் கையில் அது எழுந்தது. என் காலை நீலக் கதிரவன் தொட்டு எழுப்பியது. இருள் விலகா பொழுதில் காடுகளை அவ்வொளி தொட்டெழுப்புவதை கண்டேன். மலைச் சுனைகள் அதைக் கண்டு நீலப் புன்னகை எழுப்புவதை கண்டேன். இளையவனே! ஒவ்வொரு நாளும் அதன் ஒளியில் வாழ்ந்தேன். என் ஒவ்வொரு சொல்லும் அவ்வொளியை சூடியிருந்தது. என் விழிகளில் அதன் ஒளி இருந்தது என்றனர் என் தோழியர். துள்ளும் இளமங்கையென இருந்தவள் அந்த மணி பெற்றபின் சொல்லவிந்து ஆழம் கொண்டேன் என்றனர் தோழியர். என் கால்கள் இறகுபோல் எடையற்று மென்மை கொண்டன. என் உடலில் குழைவுகள் கூடின. என் குரலில் வெண்கல மணி நாதம் இழைந்தது என்றனர் பாடகர். என் புன்னகையில் என் மூதன்னையர் கண்டு மறந்த கனவுகள் படிந்தன என்றனர் குலப்பூசகர்.

மணி பெற்றவள் கன்னி என்றானாள் என்றே என் மூதன்னை சொன்னாள். நான் மின்மினி போல அம்மணியின் ஒளியைச் சூடி எங்கள் காடெங்கும் அலைந்தேன். அந்த மணி வழிகாட்ட இருண்ட காட்டுக்குள் சென்று பாறை ஒன்றில் வழிந்த சிற்றருவிக்கரையில் அமர்ந்திருந்தபோது கீழே காட்டுக்குள் ஜாம்பவர்களின் குரல் ஒலிப்பதை கேட்டேன். அயலவன் ஒருவன் புகுந்திருக்கிறான் என அவ்வொலி சொல்லவும் எழுந்து நின்றேன்.

என்னை நோக்கி ஓடி வந்த என் தோழி ஒருத்தி உரக்கச்சிரித்தபடி இன்று அயலவன் ஒருவனை கொல்லவிருக்கிறார்கள் என்றாள். ஒரு கணம் அவனுக்காக இரக்கம் கொண்டேன். ஜாம்பவர்களின் எல்லைக்குள் மானுடர் நுழைவதில்லை என்றாலும் எப்போதோ ஒரு முறை எவரோ ஒருவர் அருந்துணிவு கொள்வது நிகழ்ந்து கொண்டிருந்தது. “எவன் அவன்?” என்றேன். “யாரோ யாதவ இளையோன் என்று அச்செய்தி சொல்கிறது. கன்றுபோல் அச்சமறியாதவன் என்று எண்ணுகிறேன். இல்லையேல் அவன் கால்தளராதா என்ன?” என்றாள். “அளியன்” என்றேன். “அறிவிலி. அவன் குலத்திற்கு முன் ஒரு வெற்றியைக் காட்டும் பொருட்டு வந்திருப்பான். ஜாம்பவர்களின் ஆற்றலை அறிந்திருக்க மாட்டான்” என்றாள் தோழி.

மலை இறங்கி கீழே வருகையிலேயே முழவுகளும் கரடிக்குரல்களும் அளிக்கும் செய்திகள் மாறுபடுவதை அறிந்தேன். அவன் என் குலத்து வீரன் இருவரை வெறும் கைகளால் வென்றுவிட்டான் என்றும், என் தந்தையை தனிச் சமருக்கு அழைக்கிறான் என்றும் செய்திகள் சொல்லின. மலை அடிவாரத்திற்கு வருவதற்குள் என்னை நோக்கி ஓடிவந்த இளம் தோழியர் இருவர் கை தூக்கி “இளையோன். கரிய சிற்றுடல் கொண்டோன். சிறுத்தை போல் இருக்கிறான். மன்று நின்று மூத்த ஜாம்பவரை போருக்கு அறைகூவுகிறான்” என்றார்கள். ”தந்தையையா?” என்று நான் திகைத்து கேட்டேன். “ஒரு மானுடனா?”

“ஆம், அவன் உடலைக் கண்டால் ஒரு கணம்கூட அவர் முன்னால் நிற்க மாட்டான் என்றே தோன்றுகிறது. ஆனால் அவன் விழிகளில் சற்றும் அச்சமில்லை, இளையோளே! அவை விழிகளே அல்ல, நீலமணிகள்” என்றாள் என் தோழி ஒருத்தி. அச்சொல்லிலேயே அகம் அதிர்ந்தேன். இன்னொருத்தி “மண்ணில் விழுந்த முகில் துண்டு போலிருக்கிறான்” என்றதும் நிற்கவியலாதவளானேன். “செலுத்தப்பட்ட அம்பு போல் வருகிறான் தோழி. அவன் இலக்கு இங்கிருப்பதைப்போல…” என்று பின்னால் ஓடிவந்த பிறிதொரு தோழி சொன்னாள்.

அக்கணம் என்நெஞ்சில் பதிந்த மான் குளம்படியை என்ன சொல்வேன்! நெஞ்சில் கை வைத்தபடி கைகள் குளிர்ந்து நடுங்க மலைப்பாறைகளில் இறங்கி ஊர் மன்றுக்கு வந்தபோது அங்கே அவன் இளையோர் சூழ என் குடி மூத்தோர் அணுகி நின்றிருக்க அமர்ந்திருப்பதை கண்டேன். வலக்கையில் எங்கள் குடி அளித்த இன்கடுநீரை வைத்து பருகியபடி அவர்கள் சொல் கேட்டு அமர்ந்திருந்தவன் அக்கணம் அங்கே பூத்தவன் என தோன்றினான். ஐம்படைத்தாலி இன்னமும் அவன் இடையில் இருக்குமென்றும் அவன் இதழ்களில் முலைப்பாலின் மணம் எஞ்சியிருக்குமென்றும் தோன்றியது. இவனா என்று ஒரு கணமும் இவனே என்று மறுகணமும் என் சித்தமறிந்தது.

முதல் முறையாக நாணி என் தோழிக்குப்பின் என்னை மறைத்துக்கொண்டு அவள் தோள்வளைவில் முகம் வைத்து அவனை நோக்கி நின்றேன். அவன் குழல் சூடிய அந்தப் பீலி விழியை பல்லாயிரம் முறை கண்டிருக்கிறேன் என்றுணர்ந்தேன். அவன் கால்கள் மிதித்து நடந்த தடத்தை தொட்டுத் தொட்டு அடிவான் வரை நான் சென்றிருக்கிறேன் என்றும் உணர்ந்தேன். அவனையன்றி பிறிது எதையும் நோக்காது விழிகள்மட்டுமென ஆகி அங்கு நின்றேன். அவன் வெல்ல வேண்டுமென்று எண்ணிய மறு கணமே அவன் வெல்வான் என்பதையும் அறிந்தேன். இளையோனே, அவன் என் தந்தையை வெல்லும் அக்கணத்தை அப்போதே என் அக விழியால் கண்டுவிட்டேன். மண்ணில் எவராலும் வெல்லப்பட முடியாதவன் அவன் என்பதை அவனைக் கண்ட கணத்தே நான் அறிந்தேன்.

குகையிலிருந்து என் தந்தை இரு கைகளையும் ஓங்கி அறைந்து மலைப்பாறை நிலையழிந்து உருளுவதென ஓசையிட்டு வெளியே வந்தார். “என்னை வெல்ல வந்த மானுடன் எவன்?” என்று உரக்க கேட்டார். அவன் எழுந்து தலைவணங்கி “ஜாம்பவரே, தங்களுடன் தோள் கோக்க வந்த இளைய யாதவன் நான். என் பெயர் நந்த கிருஷ்ணன். விருஷ்ணி குலத்தவன். வசுதேவரின் மைந்தன், நந்தகோபரின் வளர்ப்பு மகன்” என்றான். “யாதவர் எம் எல்லைக்குள் நுழையலாகாதென்று அறியமாட்டாயா?” என்றார் எந்தை. “ஆம், ஆனால் அறைகூவுபவன் நுழையமுடியாத இடம் என ஏதுமில்லை” என்றான்.

அவர்கள் பேசிக்கொண்ட சொற்கள் எதையும் என் உள்ளம் பெறவில்லை. மண் மிதித்து நின்ற அவன் இளங்கால்களை, இடையை, தளிர்நரம்போடிய நீண்ட கைகளை, நிலாநிழல் பரவிய குளிரொளிமார்பை, வான்நிறைந்த மலர் போன்ற முகத்தை, குழலணிந்த பீலியிலெழுந்த கனவை மட்டும் நோக்கிக்கொண்டிருந்தேன். இளையோனே, அங்கு நிகழ்ந்தது மற்போரல்ல ஒரு நடனம். விழி இழந்த அன்னை தன் மைந்தரை கை தடவி அறிவது போல எந்தை அவனை அறிந்து கொண்டிருந்தார் என்று தோன்றியது. நெய்எழும் விறகை தழுவியுண்ணும் நீலத் தழல்போலிருந்தான் அவன்.

எங்கோ விண்ணவர் அமைத்த தருணமொன்றில் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தனர். ஆரத்தழுவி அமைந்தனர். அவன் கைபற்றி எழுந்த எந்தை விழிநிறைந்த பேருவகையுடன் சொல்லாடி முடித்து என்னை நோக்கியதும் நான் எங்கிருந்தோ மீண்டு உடல் அதிர்ந்தேன். என்னை அருகணையும்படி அவர் சொன்னபோது ஏனென்பதை நான் அறிந்திருக்கவில்லை. எந்தையின் மூன்றாவது அழைப்பைக் கேட்டு என் தோழியர் என்னை உலுக்கி “செல்லடி! உன்னைத்தான்” என்றனர். “நீ அவனுக்கு மணக்கொடையாகிறாயடி கன்னி” என்றாள் என் செவிலி.

அக்கணம் என்னைச் சூழ்ந்திருந்த பாறைகளெல்லாம் நீர்க்குமிழிகள் என்றாவதை, நான் நின்ற தரை நீர்ப்படலம் என்றாவதை, மேலிருந்த வானம் எடை கொண்டு மிக அணுகி தலை மேல் நிற்பதை அறிந்தேன். பொருளில்லாமல் தலை அசைத்தேன். “செல்லடி! நீ முழுமைகொண்டாய்” என்றாள் செவிலியன்னை. இல்லையென்று மீண்டும் தலையசைத்தேன். “அடி சிறுக்கி, இனி நீ யாதவ அரசி. மண்மயக்கும் இந்த மாயோன் மார்பிலணியும் மணி. அவன் நாடி வந்த அந்த நீல மணி உன்னிடம் இருக்கிறதல்லவா?” என்றாள்.

என் நெஞ்சிலணிந்திருந்த அந்த மணியை அழுத்திக் கொண்டேன். அதன் தண்மை எந்நெஞ்சை சுடுவதைப் போலுணர்ந்தேன். இரு கைகளாலும் அதை பொத்திப் பற்றிக்கொண்டு தலைகவிழ்ந்து கண்ணீர் உகுத்தேன். உயிருள்ளதைப் போல அது என் கையில் விதிர்ப்பதை அறிந்தேன். நீலத்தசையாலான ஓர் இதயம் போல, கை விரித்தால் சிறகடித்துப் பறந்தெழும் நீலமணிக் குருவி என. “செல்லடி” என மீண்டும் இருவர் என்னை உந்தினர். இரு கைகளிலும் அந்த மணியை ஏந்தியபடி எடை எழுந்த கால்களுடன் அடிமேல் அடியென அசைந்து முன்னகர்ந்து அவன் முன் சென்று நின்றேன்.

எந்தை என்னிடம் “இளையவளே, அந்த மணியை உன் மகட்செல்வமாகக் கொண்டு மூன்றடி முன்னெடுத்து இவன் கை பற்று” என்றார். நான் எந்தையின் அருகில் சென்று தலை குனிந்து நின்றேன். அவன் கால்களைத்தான் நோக்கினேன். பத்து நீலக்குருவிக்குஞ்சுகளின் பொன்னிற அலகுகளைக் கண்டேன். “இறைவனே, என் குல விளக்கு இவள். நீ தேடும் சியமந்தகமணியுடன் இவளை கொள்க!” என்று சொல்லி என் வலக்கை பற்றி அவன் வலக்கையில் வைத்தார் எந்தை. அவன் என் கை பற்றிய அத்தருணம் நான் நன்கறிந்ததாக இருந்தது. பலநூறு முறை நான் பற்றிய அந்தக்கை பலநூறு முறை நான் உணர்ந்த அந்த இளவெம்மை. இளையோனே, அதன் பின் அறிந்தேன், அவன் பற்றிய அனைத்துக் கரங்களும் என்னுடையதே என.

“சியமந்தகம் என அந்த மணி அழைக்கப்படுகிறது என்கிறார். அதை அவருக்கு நீயே அளி” என்றார் எந்தை. நான் என் நெஞ்சில் கைவைத்து அதை எடுத்தபோது அந்த மணி ஒளியவிந்து வெறும் கூழாங்கல்லெனத் தெரிவதை கண்டேன். திகைத்து அதுதானா என நோக்கினேன். பிற அனைவரும் அதையும் அவனையும் நோக்கி விழிதிகைத்திருந்தனர். அது எனக்கு மட்டுமே ஒளியற்றிருக்கிறதென உணர்ந்தேன். இளையோனே, அது பிறகெப்போதும் என் விழிக்கு ஒளி கொள்ளவில்லை.

அன்றிரவு எங்கள் குல உண்டாட்டுக்குப்பின் சியமந்தக மணியுடன் அவன் கிளம்பினான். வரும் வளர்பிறை மூன்றாம் நாள் எங்கள் கடிமணம் என்று என் தந்தை சொல்ல குல மூத்தார் உடன்பட்டனர். அன்று காலை எனக்குரிய மணமாலையுடன் மீள்வதாக அவன் சொன்னான். ஒரு சொல்லும் நான் அவனுடன் உரையாடவில்லை. குல மூத்தார் கூடிய பொதுச்சபையில் அவர்களின் சொல்லும் வாழ்த்தும் மலரும் கொண்டு அவன் எழுந்தான். அந்த மணியை ஆடையில் சுற்றி தன் இடையில் அவன் வைப்பதை கண்டேன். காட்டினூடாக அவன் சென்று மறைந்த போது ஒரு கணம் நெஞ்சைப் பற்றி நின்று விலகிச் செல்லும் அவன் காலடிகளை கண்டேன். பல்லாயிரம் கணம் அது என்னை விட்டு விலகிச் சென்றிருப்பதையும் அறிந்தேன். தோழியர் நடுவிலிருந்து அறியாது விலகி பாறைகளைக் கடந்து புதர்களினூடாக ஓடி அவன் சென்ற பாதை மறித்து அவன் முன் சென்று நின்றேன்.

மூச்சிரைக்க நான் கொண்டு வந்த சொல் எங்கோ உதிர்ந்து கிடக்க அவனை நோக்கி வெற்று முகத்துடன் நின்றேன். என்னை அணுகி புன்னகைத்து “சொல்க!” என்று சொன்னான். யாதொன்றும் சொல்வதற்கின்றி நான் நிற்க என் தோளில் கை வைத்து என்னை நோக்கி “இந்த மணி உன் விழியென என்னுடன் எப்போதும் இருக்கும்” என்றான். “இளையோனே, அது என் தனிமை” என்றேன். புன்னகைத்து “ஆம். அறிவேன்” என்றான். “இதை என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டேன். “மகட் கொடையாகப் பெற்றதை கன்யாசுல்கமாக அளித்து இன்னொரு பெண்ணை மணக்கப் போகிறேன்” என்றான். ஒரு கணம் அவன் சொன்னது எனக்கு புரியவில்லை. “இம்மணிக்காகக் காத்து யாதவ இளவரசி அங்கு அமர்ந்திருக்கிறாள். இதை கொண்டுசென்று அவள் தவம் முடித்து அவளை வேட்பேன்” என்றான்.

அவன் சொன்னது புரிந்ததும் திகைத்து “என்ன சொல்கிறாய்?” என்றேன். “இனியவளே, நீ அளித்த மணி அவளைப் பெறுவதற்கு எனும்போது துலாதட்டில் இருவரும் நிகராகிறீர்கள் அல்லவா?” என்றான். “எப்படி?” என வியந்து வினவிய மறுகணமே அவன் ஆடும் விளையாட்டை உணர்ந்து பீரிட்டு சிரிக்கத் தொடங்கினேன். அவனும் சிரித்து என் கைகளை பற்றிக்கொண்டான். விழிநீர் கனியும் வரை சிரித்து “இப்படியொரு தருக்கத்தை இதுவரை கேட்டதில்லை” என்றேன். “ஏன்? இதை விட சிறந்த தருக்கம் பிறிதொன்றுண்டா?” என்றான். “இல்லை. இனி நீயே உருவாக்கினால்தான் உண்டு” என்றேன்.

“அன்று சிரிக்கத் தொடங்கினேன். இன்றுவரை ஒவ்வொன்றும் சிரிப்புக்குரியதாகவே உள்ளது” என்றாள் ஜாம்பவதி. “என்னுடன் அவர் இருக்கையில் அனைத்தும் வேடிக்கைதான். இந்நகர், இதையாளும் யாதவ அரசி, அவளுடைய அகம்படியினர், படைகள், கொடிகள், குலங்கள், குடிகள் அனைத்துமே எங்களுக்கு நகைக்களியாட்டாக அப்போது மாறும்.”

திருஷ்டத்யும்னன் சிரித்தபடி “ஆம், அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” என்றான். “இப்போது சியமந்தக மணிக்காக நிகழும் பூசலை அறிந்து எண்ணி எண்ணி நகைத்தேன். அவரும் என்னுடன் இணைந்துகொண்டார். எளிய மணி அது. மிகச்சிறிய ஒரு கல் மட்டுமே. அதன் பொருட்டு ஒருவன் படை கொண்டு வருகிறான் என்றால் அதைவிட பெரிய நகையாட்டு என ஏதுளது?” என்றாள் ஜாம்பவதி. “ஆம்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். அவள் அவன் விழிகளை கூர்ந்து நோக்கி “அந்த மணியை நேரில் பார்க்கநேர்ந்தால் என்ன செய்வீர்கள்?” என்றாள். திருஷ்டத்யும்னன் “ஏன்?” என்று விளங்காமல் கேட்க “அதை கையில் எடுத்துப்பார்க்க விழைவீர்களா?” என்றாள்.

திருஷ்டத்யும்னன் சிலகணங்கள் அவளை வெற்று விழிகளுடன் நோக்கியபின் “ஆம், விழைவேன்” என்றான். அவள் புன்னகைத்து “அந்த வினா முதன்மையானது என்று இளைய யாதவர் சொன்னார். அதனால் கேட்டேன்” என்றாள். “எதனால்?” என்றான் திருஷ்டத்யும்னன். “தெரியவில்லை. அவர் சொன்னார், அதனால் நான் கேட்டேன்” என்றாள் அவள்.

முந்தைய கட்டுரைநியூ ஜெர்ஸி உரை
அடுத்த கட்டுரைதகர முரசு