பயணம்- கடிதம்

அன்புள்ள ஜெ,

தலைப்பைப் படித்த உடனேயே மனம் ஒரு துள்ளு துள்ளியது. நீங்கள் சென்று வந்த இப்பகுதி இலையுதிர்கால வண்ணங்களுக்கு மிகவும் புகழ்பெற்றது. இலையுதிர்காலத்திற்காகக் காத்திருக்கும்ஓர் ஓவியப் பலகை. கண்ணுக்குத் தெரியாத அந்த அன்னையின் கரம் வண்ணங்களை அள்ளித் தூவக் காத்திருக்கும் ரங்கோலி களம். மொத்த மரங்களும் நாம் எதிர்பாரக்கக் கூடச் செய்யாத வண்ணத் தொகையாக, அவ்வருட வாழ்வின் உச்ச பட்ச மகிழ்வு தருணத்தில் தோகை விரித்த மயிலென வண்ணம் பூசி நிற்பதை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். என்னுள் இருந்த தமிழை மீண்டும் எனக்கு நினைவூட்டிய இடம். என்னை மீண்டும் பயணியாக, ரசிகனாக மாற்றிய இடம் என்ற வகையில் என் மனதுக்கு நெருக்கமான பகுதி அது. அங்கே நீங்களும் சென்று வந்தது மிகுந்த நிறைவளிக்கிறது. அக்காவும் உடன்வந்தது சிறப்பு.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்

அன்புள்ள ஜெயமோகன்,

பயணங்கள் எப்போதும் அலாதியானவை. மகிழ்வை அளிப்பவை. இன்பத்தைப் பெருக்குபவை. இவை எப்போதோ ஒரு முறை மேற்கொள்ளும் நீண்டதூரப் பயணங்களுக்குப் பொருந்தும். ஆனால் நாம் அன்றாடம் மேற்கொள்ளும் பிரயாணங்கள், குறிப்பாக பேருந்துப் பிரயாணம், சாகஸங்களும் மோதல்களும் நிறைந்த ஒரு வீரவிளையாட்டு. அதைப் பற்றி முன்பு ஒரு முறை நான் ‘பக்கத்து இருக்கை’ எனும் தலைப்பில் எழுதிய பதிவு பின்வருமாறு. இந்தக் கட்டுரை நகைச்சுவையா அல்லது சீரியஸானதா என்பதை படிப்பவர்கள் தீர்மானித்துக்கொள்ளட்டும்.

பேருந்துப் பயணத்தின் மகிமைகள் பற்றி சில எழுதலாம் என்று தோன்றியது. உண்மையில் நம்முடைய சகபயணிகளிடையே நாம் பேருந்தில் பயணிப்பது ஒரு பேரனுபவம். சகிப்புத் தன்மையின் உச்ச பட்ச அனுபவத்தைப் பேருந்துப் பயணத்தில் அன்றி நாம் வேறெங்கும் கற்க முடியாது. நம்முடன் பயணிப்பவர்கள் சக பயணிகள் அல்ல மாறாக அவர்கள் சக எதிரிகள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, நம் மனதில் குரூரத்தையும் கொலை வெறியையும் உண்டுபண்ணுவது பேருந்துப் பயணத்தின் அலாதியான சிறப்பு! பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் மனிதர்களில் பலர் இன்னும் பரிமாண வளர்ச்சி அடையாமல் விலங்குகளாகவே இருப்பதைக் காணும் பாக்கியம் பேருந்துப் பயணத்திலேயே நமக்குக் கிடைக்கிறது.

பேருந்தில் இருக்கை பிடிக்க நம் உடன் பிறவா சகோதர, சகோதரிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் நம்மை வியப்பில் வாயடைக்கச் செய்பவை. அதில் அவர்கள் காட்டும் வீரமும், ஆவேசமும் வெள்ளையனை எதிர்த்துப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனிடம் கூட நாம் காணமுடியாதது. என்ன ஆவேசம்! என்ன ஒரு போராட்டம்! அடுத்தவனை உதைத்து மிதித்து, அவன் மீது சாடி விழுந்து, அவன் முகவாயில் முழங்கையால் ஓங்கி இடித்து, கால்களை நச்சென மிதித்து, இருக்கையில் வெற்றிக் களிப்புடன் உட்காரும் அவர்கள் ஒவ்வொருவரும் நவீனப் பாண்டவர்கள்! கௌரவர்கள் எத்தனை பேராக இருந்தாலும் அவர்களைத் துவம்சம் செய்து இருக்கையைக் கைப்பற்றும் வித்தையில் அவர்கள் கைதேர்ந்தவர்கள். எதிர்த்துப் போராட முடியாமல் சிலர் ஒதுங்கி, இயாலாதவர்களாக நிற்பது பரிதாபமான காட்சி. இந்த அப்பாவிகளையும் பூமி மாதா இந்த நிலத்தின் மீது தாங்கிப் பிடித்திருக்கிறாளே என்ற எண்ணம் நம் நெஞ்சத்தைப் பெருமிதத்தால் விம்மச் செய்யும்.

இத்தோடு பிரச்சினை முடிந்ததா என்றால் இல்லை. உட்கார்ந்திருந்தாலும் நின்றிருந்தாலும் நம்மை இம்சிப்பதில் நம் சக உதிரங்களுக்கு இருக்கும் உற்சாகம் சொல்லி மாளது! உங்களுக்கு ஜன்னலோர இருக்கை கிடைத்தால் முனியப்பனுக்குக் கிடா வெட்டி பொங்கல் வைப்பதாக பிரார்த்தித்துக் கொள்ளலாம். அதைத் தவிர வேறு இடங்களில் அமர்ந்திருக்கும் போது இடத்திற்குத் தகுந்தாற் போல் வெவ்வேறு அனுபவம் கிட்டும்! இடது கைப்பக்கமுள்ள இரண்டு சீட்டில் வலப்புறமாக அமர்ந்திருப்பது ஒரு பெரிய கலை. ஏனென்றால் பக்கத்துச் சீட் ஆசாமி தன் அருகே ஒரு மனிதன் அமர்ந்திருக்கிறான் என்ற பிரக்ஞையின்றி மோனத்தில் அமர்ந்திருப்பார். எனவே குறிப்பறிந்து நகர்ந்து இடம் கொடுக்கும் ஒரு ரத்தத்தின் ரத்தத்தையாவது இதுவரை நான் பேருந்தில் கண்டதில்லை. எனவே நமது உடலின் வலது பக்கப் பகுதி இருக்கைக்கு வெளியே இருக்கும்படிதான் அமர முடியும். பக்கதில் இருப்பவர்தான் அவரது இருக்கையை விலைகொடுத்து வாங்கியிருக்கிறாரே! நாம் சற்றே நெளிந்து வளைந்து பார்த்தாலும் ஆசாமி அசைந்து கொடுக்கமாட்டார்.

சுந்தர ராமசாமியின் வரிகள் ஒவ்வொரு பேருந்துப் பயணத்திலும் கண்டிப்பாக என் நினைவில் வரும். “பக்கத்து இருக்கையில் இருந்துகொண்டு அழிச்சாட்டியம் பண்ணுவது. இரண்டு இருக்கையில் அமர்ந்து தொலைக்கும் உடம்பும் இந்த ஜன்மத்தில் லபிக்கவில்லை.” (சரியான வரி நினைவில்லை). போதாதற்கு பக்கத்து ஆசாமி தூக்கத்தில் நம் மேலே விழுந்து பிரண்டாதவராக இருக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்வது நல்லது. கடவுள் செவி சாய்த்தால் நமது அதிர்ஷ்டம்! இல்லையேல் நாம் முன் ஜன்மத்தில் செய்த பாவத்திற்கு கிடைத்த தண்டணையாகக் கருதிப் பிரயாணத்தைத் தொடரவேண்டியதுதான்!

சில சமயம் ஜன்னலோர ஆசாமி நம்மைப் போன்றவராக இருந்துவிட்டால் அப்போது ஆபத்து நமக்கு வலதுபுறமாக நிற்கும் ஆசாமிகளிடமிருந்து வரும்! நமது தோள்பட்டையை அது ஒரு மனிதனின் தோள் என்று கருதாது, அதுவும் இருக்கைதான் என்று நன்றாக சாய்ந்து எருமையைப் போல உரசி இடித்துக்கொண்டு பயணிக்கும் ஆசாமிகள் அநேகம். கடவுள் அவர்களின் இடுப்பை வலிமையாக வைக்கமால் நம் தோளின் வலிமையைச் சோதிப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. நாம் தலையை உயர்த்தி அவரை நிமிர்ந்து பார்த்து முறைத்தாலும் அவர்கள் அதைப்பற்றி ஏதும் அறியாதவராக, அப்படி ஒரு செய்கையில் தங்கள் உடல் ஈடுபட்டிருக்கிறது என்பது பற்றிய உணர்வே லவேசமும் இல்லாதவர்களாக இருக்கும் அவர்களின் மனிதாபிமானம் போற்றுதற்குரியது. அவ்வப்போது நடத்துனர் என்ற ஆசாமி இடையிடையே அந்தக் கூட்டத்தில் நீந்தித் தத்தளித்து நம் முகவாயில் அவரது பையால் இடித்துச் செல்வது நமக்குக் கிட்டும் போனஸ் அல்லது இலவசம்! அதுவும் அவர் பெருத்த சரீரமாக இருந்துவிட்டால் அவர் கடந்து போகும் ஒவ்வொரு தடவையும் கதவிடுக்கில் சிக்கிய விரலாக நம் எலும்புகள் நொருங்கிவிடும்.

வலது புறத்தில் மூன்று பேர் அமரும் இருக்கையில் இடது ஓரமாக அமர்ந்தால் ஏறக்குறைய மேற்சொன்ன அனுபவம்தான். என்ன ஆங்காங்கே குறுக்குக் கம்பிகள் இருப்பதால் சக உதிரங்கள் நம் மீது உராயும் உராய்வின் விசை குறைவாக இருக்கும். ஆனால் நடு இருக்கையில் இடம் பிடித்தால் அவ்வளவுதான். பாற்கடலைக் கடைந்த தேவர்கள் அசுரர்கள் சகிதமாக இருபுறமும் நம்மைக் கடைந்து எடுத்துவிடுவார்கள். நாம் கைகளைத் தொங்கவிடமுடியாமல் இருக்கையின் கம்பிகளையே நீட்டிப் பிடித்தபடி பயணிக்க வேண்டும். இரண்டு புறமும் இருப்பவர்கள் தாங்களும் ஏதாவது ஒரு கையைப் அப்படிப் பிடித்தால் கொஞ்சம் லகுவாக வரலாமே என்ற எண்ணம் சற்றேனும் மூளைக்கு எட்டாதவர்களாக நம்மைக் கசக்கிப் பிழிவார்கள். அதுவும் பெருத்த உடல்களுக்கிடையே மாட்டிக் கொண்டால் சாலை போடும் இயந்திரத்தின் அடியில் சிக்கிக் கொண்டது போல மூச்சுத் திணற வேண்டியதிருக்கும்.

கூட்ட நெரிசலில் நின்று கொண்டு பயணிப்பது வேறு ஒரு மாதிரியான அனுபவம். கால் வைத்து நேராக நிற்கமுடியாமல் கால்களை எக்ஸ் ஒய் போல் இடம் கிடைத்த இடத்தில் வைத்து பயணிக்க வேண்டும். சில சமயம் நம் கால்கள் எங்கே இருக்கின்றன என்பதே நமக்குத் தெரியாது. சக பயணிகள் இறங்கும் போதும் ஏறும் போதும் நம் கால்களை ஏதோ செத்த எலிகளை மிதிப்பது போல மிதித்துச் செல்வார்கள். பலர் கம்பிகளைப் பிடிக்கும் விதமே அலாதிதான். அது நம் காதுகளை உரசியபடி நாம் தலையை நேராக வைக்க முடியாதபடி தடுக்கும். எனவே அவஸ்தையுடன் தலையைச் சற்றே சாய்த்து வைக்கவேண்டியதிருக்கும். அப்போது எதிராளியின் எண்ணெய்த் தலை நம் கன்னத்தில் உரசி அருவருப்பை உண்டாக்கும். சில சமயம் கைகளைத் தூக்கிப் பிடித்தமையால் சட்டையின் அக்குள் பகுதியிலிருந்து வெளியாகும் துர்நாற்றம் நம்மை மூச்சுத் திணறவைக்கும்! இன்று ஒரு நாளோடு சரி, இனிமேல் ஜன்மத்திற்கும் கூட்டமாக இருக்கும் பேருந்தில் ஏறக்கூடாது என்று சங்கல்பம் செய்துகொள்வோம். ஆனால் ஏறிய பிறகு இத்தகைய சோதனைகளை நம் பின்னால் அனுப்பிவைக்கும் கடவுளுக்கு இரக்கமே இல்லையே என்ன செய்ய? ஒவ்வொரு பயணம் முடிந்து திரும்புவதும் ஒரு சாகசம்தான்! இறங்கி நிலத்தில் கால்வைத்து வெளிக்காற்றைச் சுவாதித்த நொடி சுதந்திரம் என்பதன் அர்த்தம் நமக்குத் தெளிவாகப் புரியும்.

ஒரு பேருந்தில் எத்தனை பேரை ஏற்ற முடியும் என்ற கணக்கு நடத்துனருக்குத் தெரிவதில்லை என்பதைவிடத் தெரிந்துகொள்ள விருப்பப்படவில்லை என்பதுதான் உண்மை. அவருக்கு நினைவெல்லாம் மாலையில் எவ்வளவு சேரும் என்ற கணக்கின் மீதுதான். ஏற்கனவே இத்தனை பேர் பயணிக்கும் பேருந்தில் இன்னும் எத்தனை பேர் போக முடியும் என்ற விவேகம் பயணிகளுக்கும் இருப்பதில்லை. எனவே இதுதான் கடைசிப் பேருந்து என்பதாகவே ஒவ்வொரு பேருந்தும் நிரம்பி வழிந்து செல்கிறது. பேருந்து என்றில்லை எல்லாவற்றிலும் முந்துவதும், முதலில் செல்வதும் இன்று மனிதனின் மிகப் பெரிய சமூக நோயாக ஆகியிருக்கிறது. இந்த நிலை நீடிக்குமானால் வாழ்க்கையில் விபத்துகள் நேர்வதை யாராலும் தடுக்க முடியாது. இன்னும் சொல்ல ஏராளமாக இருக்கிறதுதான். ஆனால் சொல்வதாலும் கேட்பதாலும் மட்டுமே மனிதர்கள் மாறிவிடுவார்கள் என்று நினைப்பது அறிவீனம். அப்படி மாறுவது என்பது உண்மையானால் எத்தனை எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் மாறியிருக்க வேண்டும்!

பகவான் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு எவ்வளவோ சொல்கிறார். ஆனால் அவன் செவிசாய்க்கவில்லையே. திரும்பத் திரும்பத் தன் சந்தேகங்களையே கேட்டுக் கொண்டிருக்கிறான். பகவானும் விடாமல் ஸாங்கிய யோகத்திலிருந்து ஆரம்பித்து நீண்ட உபதேசம் செய்கிறார். அவர் சொல்வது ஒன்றுதான். அவரிடம் இருக்கும் மாவையே தோசை, இட்லி, பனியாரம், ஊத்தப்பம் என்று சுட்டு தருகிறார். ஏதாவது ஒன்று அவனுக்குப் பிடித்துவிடாதா என்ற நப்பாசையில். ஆக, மனிதர்கள் எதையும் கேட்பதில்லை! கேட்பதாக நடிக்கிறார்கள். கேட்பதால், படிப்பதால் மாறியவர்கள் சொற்பமானவர்களே. அவர்களே இன்றய சமூகத்தில் எதற்கும் லாயக்கற்றவர்களாக, முந்த முடியாதவர்களாக இருக்கிறார்கள். பேருந்தில் இருக்கை பிடிப்பதாக இருந்தாலும் வாழ்க்கையில் இடம் பிடிப்பதாக இருந்தாலும் தோற்றுப் போகிறவர்கள் இத்தகைய துரதிருஷ்டசாலிகளே!

அன்புடன்,
கேசவமணி.

முந்தைய கட்டுரைதேவியர் உடல்கள்
அடுத்த கட்டுரைகஸாக்- கடலூர் சீனு