ரத்தம், காமம், கவிதை:சேரனின் கவியுலகு

ரத்தம், காமம், கவிதை:சேரனின் கவியுலகு

December 28, 2008 – 12:10 am

ஒன்று

உலகளவில் கவிதைகளைப் பார்க்கும்போது விசித்திரமான ஒரு ஒத்திசையை நாம் காணலாம். கவிதைக்கும் காதலுக்கும் நடுவே. நவீனக் கவிதை வட்டாரத்தில் பெரும்புகழ் பெற்ற இரு கவிஞர்களை எடுத்துக்கொள்வோம் பாப்லோ நெருதா, மயகோவ்ஸ்கி. இருவர் கவிதைகளையும் காதல் பாதி புரட்சி பாதி என்று பிரித்துக் கொண்டு விடலாம். தமிழில் உள்ள கவிஞர்களில் நம் கவனத்துக்கு உடனடியாக வருபவர்கள் சுகுமாரன், சேரன் இருவரும்தான். இருவர் நடுவேயும் ஏராளமான பொதுத்தன்மைகள் உண்டு. இதில் இந்த அம்சம் முக்கியமானது. இருவருமே புரட்சிகரத்தில் இருந்து காதலுக்கு நகர்ந்து சென்றவர்கள். காமத்துக்கு என்று இன்னும் திட்டவட்டமாகக் கூறலாம்.

கவிதை காதலையும் புரட்சியையும் ஒரே தொடுநுனியால் அறிகிறதா என்ன? எளிய விளக்கம் சொல்வது என்றால் இங்குள்ள கவிஞர்கள் பாப்லோ நெருதா முதலிய மேலைக்கவிஞர்களை முன்னு தாரணங்களாகக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அந்தக்கவிஞர்கள் உருவாக்கிய கவிதை வரைவு அப்படியே பின்தொடரப்படுகிறது என்றும் கூற வேண்டும். ஆனால் அது பொருத்தமானதல்ல. குறிப்பாக, சேரன், சுகுமாரன் போன்ற அசலான கவிஞர்கள் விஷயத்தில்.

உலகப்புகழ் பெற்ற புரட்சியாளர்களின் வாழ்க்கையைக் கூர்ந்து பார்க்கும்போதும் இது தெரிகிறது. அவர்களுடைய வாழ்க்கையையும் புரட்சி மற்றும் காதல் என்று இரண்டாகப் பிரித்துவிடலாம். சிறந்த உதாரணம் சே குவேரா தான். ஆக,  புரட்சி என்பது காதலின் மன எழுச்சிக்கு மிக நெருக்கமானதாக உள்ளது. ஒன்று இன்னொன்றைத் தொட்டெழுப்புகிறது. காரணம் இரண்டுமே கற்பனாவாதம் சார்ந்தவை. இரண்டுமே இரண்டுவகை மன  எழுச்சிகள்.

அந்த மன எழுச்சி உண்மையில் என்ன? புரட்சிக்காரன் அல்லாத என்னால் அதைப் புரட்சிகரக் கவிதைகள் வழியாகவே ஊகித்துக் கொள்ள முடிகிறது. அது வாழ்க்கையை உக்கிரப்படுத்திக் கொள்ளும் உணர்வுதான். ஆம், அது சாகஸத்தில் இருக்கும் மன எழுச்சிதான். சாகஸம்  நோக்கி மனதைக் கொண்டு செல்லும் கற்பனாவாதம் அது.

மனிதனுக்கு ஏன் சாகஸம் தேவைப்படுகிறது? ஏன் என்றால் அவனுடைய அன்றாட வாழ்க்கை மிகவும் அலுப்பூட்டுவதும் சாதாரணமானதுமாகும் என்பதனாலேயே. வாழ்க்கை வெறிச்சிட்டு நகராமல் கண்முன் விரிந்து கிடப்பதைக் காணும் உத்வேகம் கொண்ட மனம் சாகஸத்தை நாடுகிறது. நூறுகுதிரைச் சக்தி கொண்ட இயந்திரத்துடன் ஒரு வாகனம் சாலையில் ஊர்ந்து செல்ல முடியாது. அதனுள் பொங்கும் சக்தி அதை இடித்துக் கொண்டிருக்கும். பயன்படுத்தப்படாத ஆற்றல் என்பது வீணான பெரும் சுமை. அச்சுமை அழுத்தமாக மாறுகிறது. அதற்கான வெளிப்பாட்டை நாடுகிறது. சிறு இடுக்கு கிடைத்தால்கூட விசையுடன் பீறிட்டு வெளிவருகிறது.

சாகசம் இளமையுடன் தொடர்பு கொண்டுள்ளது. வாழ்க்கையின் வாய்ப்புகளுக்கு முன் விடப்பட்ட இளைய மனம் அதற்கு அளிக்கப்படும் எளிய  வழிகளைத் தேர்வு செய்வதில்லை. தன் ஆற்றல்  அனைத்தையும் வெளிப்படுத்தும் ஒரு வழியையே அது நாடுகிறது. ஏனென்றால் அக ஆற்றல் வெளிப்படும்போதே ஒருவன் தன்னைக் கண்டடைகிறான். மனிதனுக்கு நிறைவு என்பது தன்னை முழுமையாக உணரும் தருணங்களிலேயே உள்ளது. தன் அனைத்து ஆற்றல்களையும் திரட்டி ஒன்றை நிகழ்த்துகையில் மனிதனின் உச்சம் வெளிப் படுகிறது. சாகசங்கள் அதற்காகவே நாடப்படுகின்றன. வாழ்க்கையனுபவங்களில் ஒரு வகையான பதப்படுத்தலை அடைந்த பிறகு மனிதர்கள் அந்த வழியை நாடுவதில்லை. அவர்கள் கண்ணில் ஆபத்துகளே அதிகமாகப் படுகின்றன. பிரபஞ்ச இயக்கத்தின் முடிவற்ற தற்செயல்களில் உள்ள மனதைப் பேதலிக்கவைக்கும் சாத்தியங்கள் கவனத்தில் நிற்கின்றன. அவர்கள் தங்கள் எல்லைகளை உணர்ந்திருப்பார்கள். அதற்குள் தங்களை ஒதுக்கிக் கொள்ள முயல்வார்கள். ஜொனாதன் லிவிங்ஸ்டன் ஸீகல் வானத்தை அளவிடுவதை நிறுத்தி தன் சிறகுகளை மதிப்பிட ஆரம்பித்து விடுகிறது.

புரட்சிகரம் என்பது எப்போதுமே இளமையுடன் தொடர்பு கொண்டுள்ளது. சாத்தியங்களைவிட வாய்ப்புகளை நோக்கிக் கவனம் திரும்பும் காலகட்டத் திற்கு உரியது புரட்சிகரம். உலகமெங்கும் உள்ள புரட்சிகர இயக்கங்கள் அதன் உறுப்பினர்களுக்கு அளிக்கும் முக்கியமான கவர்ச்சியே சாகசம்தான் என்று கூறலாம். வலதுசாரி, இடதுசாரி கருத்துவேறு பாடுகளைக் களைந்து அனைத்து வகையான புரட்சிகரச் செயல்பாடுகளையும் ஒரே இடத்தில் நிறுத்தி அவற்றில் ஈடுபடுபவர்களின் தனிப்பட்ட மனஅமைப்பை மட்டும் கவனத்தில் கொண்டு பார்த்தால் அவை அனைத்துமே சாகஸங்கள் மட்டும்தான் என்ற முடிவுக்கே நாம் வந்து சேர நேரும்.

புரட்சிகரமான நிலையை மூளைசார்ந்த சாகஸம் என்று வேண்டுமானால்  வரையறை செய்யலாம். சாகஸங்களை மேலும் தீவிரமான காரணங்களுக்காக நிகழ்த்த முற்படுவதுதான்அது. உலகில் உள்ள எந்த ஒரு புரட்சிகர இயக்கமாவது அதில் உள்ள அபாயம் என்ற அம்சத்தை விலக்கிவிட்டு புரட்சிகரத்தை மட்டும் இளைஞர்களுக்கு வெற்றிகரமாக அளிக்க முடியுமா? அபாயத்தின் முடிவற்ற கவற்சி  இல்லா விட்டால் புரட்சிகளே பொருளிழந்துவிடும். இதை உலக வரலாற்றில் பார்க்கலாம். ஒரு புரட்சிகர இயக்கம் அதன் அபாயகரமான நடைமுறைகளைக் கைவிட்டால் உடனே அது நீர்த்துப்போக ஆரம்பித்து விடுகிறது.

சொல்லப்போனால் காதல் என்பதும் அதுதானே? காமத்தின் சர்வசாதாரணத்தன்மையே காதலைப் படைத்தது என்று ஒரு முரட்டுத் தனமான வரை யறை உண்டு. கற்பனாவாதத்தன்மை இல்லாமல் காதல் இல்லை. காதல் அனைத்து உணர்ச்சிகளையும் உக்கிரப்படுத்திக் கொள்கிறது, புரட்சியைப் போலவே.   காதல் எந்நேரமும் உணர்ச்சிகளின் கொதிநிலையில் இருக்க விரும்புகிறது, புரட்சியைப் போலவே. காதலுக் கும் புரட்சிக்கும் கால்கள் இல்லை, சிறகுகள் மட்டுமே உள்ளன. சுதந்திரவெளியில் அவை ஒன்றை ஒன்று கண்டடைகின்றன.

சிறகுகள் தற்காலிகமாவை என்பதை இயற்கை நமக்குக் காட்டுகிறது. வண்ண மயமான சிறகுகளுடன் காற்றையும் ஒளியையும் துழாவிப் பறக்கும் சிறகுகளின் ஒவ்வொரு கணமும் நமது ஒவ்வொரு தினத்துக்குச் சமம். அந்த வாழ்க்கை நம் வாழ்க்கையைக் காட்டிலும் பலநூறு மடங்கு செறிவானது. அதேசமயம் அதன் ஒவ்வொரு கணத்திலும் அது நிலையற்றது என்ற எண்ணம் உள்ளது. அந்த நிலையின்மை குறித்த போதம்தான் அவற்றின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது போலும். காதலும் புரட்சியும் எப்போதும் மரணத்தை அருகே வைத்திருக்கின்றன. மரணத்தை விதைத்துத்தான் தங்கள் அதிதீவிரமான கூற்றுகளை அவை முன்வைக் கின்றன. மரணத்தால் அடிக்கோடிடா விட்டால் புரட்சிக்கும் காதலுக்கும் ஒளிமங்கிப் போகிறது. உணர்வெழுச்சியின் தற்காலிகத்தன்மையை மரணம் என்ற முடிவின் மூலம் அவை நிரந்தரப்படுத்திக் கொள்கின்றனவா என்ன?

இரண்டு

சேரனின் கவிதைகளை, தமிழில்  எழுதப்பட்ட அசலான புரட்சிக் கவிதைகளாக நான் காண்கிறேன். இன்னும் குறிப்பான வார்த்தைகளில் சொல்வதா னால் பாரதிக்குப் பின் தமிழில் தீவிரமான புரட்சிக் கவிதைகளை எழுதியவராக சேரனை அடையாளப் படுத்த விரும்புகிறேன் – அவரது அனைத்துப் பலவீனங்களுடன்.

புரட்சிகரக் கவிதைகள் நமக்குப் புதிதல்ல. சொல் லப் போனால் நமக்குக் கிடைக்கும் கவிதைகளில் புரட்சிக் கவிதைகளையே எண்ணிக்கையில் அதிகம் என்று கூறவேண்டும். அடுத்தபடியாகக் காதல் கவிதை கள். ஓ இளைஞனே என்றும்  அடி இவளே என்றும் தான் நமது கவிதைகள் ஓயாது அறைகூவிக் கொண்டி ருக்கின்றன. காரணம் இவ்வகைக் கவிதைகளை எழுதுவதற்குத் தேவையான மாதிரி வடிவம் நமது மொழியில் மிக ஆழமாகவே உருவாகிவிட்டிருக்கிறது. அத்துடன் இவற்றை எழுதுபவர்கள் அந்தக் கணங் களில் ஒரு போலியான மன எழுச்சிக்கு உள்ளாகி அதை உண்மையென்றே நம்பவும் செய்கிறார்கள். மேலும் தமிழ்ச் சூழலில் உண்மையான புரட்சியும் உண்மையான காதலும் கற்பனை மட்டும் சார்ந்த ஒன்றாக இருப்பதனால் இத்தகைய கவிதைகள் ஒருவகை வடிகாலாக அமைகின்றன.

தமிழில் எழுத்து வழியாகப் புதுக்கவிதை வடிவம் உறுதிப்பட்ட பிறகு அதைக் குலைக்கும் முகமாக [ எல்லாவகை வடிவக்குலைவும் வளர்ச்சிப்போக்கே ] உருவான வானம்பாடி இலக்கிய இயக்கம் புரட்சிகரக் கவிதைகளை உருவாக்குவதாகவே அமைந்தது. சிற்பி, அப்துல்ரகுமான், மு.மேத்தா போன்றவர்கள் இன்றும் அறியப்படுகிறார்கள்; மீரா, தமிழன்பன், கங்கை கொண்டான், நா. காமராசன் போன்ற அவ்வளவு கவனிப்பு பெறாத புதுக்கவிஞர் களும் உள்ளனர். இவர்கள் அனைவருமே கலீல் கிப்ரான், பாப்லோ நெரூதா ஆகியோரின் பாதிப்புடன் புரட்சிக்கவிதைகளையே அதிகமும்  எழுதியிருக் கிறார்கள்.

ஆனால் வானம்பாடிகளின் புரட்சிகரம் என்பது முழுக்க முழுக்கப் போலியானது. அவர்களைக் கவர்ந்தது புரட்சிகரக் கவிதைகளில் உள்ள வெளிப் படைத்தன்மையும் அறைகூவல் மனநிலையும் தான். மேடையில் தீவிரமாக முழங்குவதற்குப் பொருத்த மான உணர்ச்சி என்பது புரட்சிகரம்தான் என்று கண்டடைந்ததே அவர்கள் அதைக் கையாண்டதற்குக் காரணம். ரேஷனில் சீனி வேண்டுமானால் காதி சோப் கட்டாயம் வாங்கியாக வேண்டும் என்பது போன்ற நடுநிலை. வசன கவிதையின் தீவிரம் வேண்டுமானால் புரட்சிகரத்தையும் வாங்கியாக வேண்டும். அப்துல் ரகுமானை தனிப்பட்டமுறையில் அறிந்தவர்கள் அவர் எப்போதும் மத  வெறியராகத் தான் இருந்திருக்கிறார் என்பார்கள். ஆனால் அவரும் அக்காலத்தில் புரட்சிகரமாக இடதுசாரிக் கருத்து களைப் பொழிந்திருக்கிறார். சிற்பி, மு.மேத்தா என எவருமே இடதுசாரி மனநிலை கொண்டவர்கள் அல்லர், தனிவாழ்வில். ஆனால் அனைவருமே இங்கே இடது சாரிகளாக ‘அக்கினி மழை’ பெய்திருக்கி றார்கள்!

இந்த வரலாற்றுக் காரணத்தால் தமிழ் வாசிப்புச் சூழலில் பொதுவாகப் புரட்சிகரக் கவிதைகள் மேல் அழுத்தமான அவநம்பிக்கை உண்டு. இங்கு புரட்சி கரக்கவிதைகள் பெரும்பாலும் பொருட்படுத்தப்பட்ட தில்லை. அறுபதுகளின் இறுதியில் இந்தியா வெங்கும் இடதுசாரித் தீவிரவாதம் வலுப்பெற்றது. அரசாங்கத் தின் ஒடுக்குமுறையும் கூடவே வலிமை பெற்றது. இக்காலகட்டத்தில் வங்கம், இந்தி, தெலுங்கு மொழி களில் தீவிரமான புரட்சிகரக் கவிதைகள் எழுதப் பட்டிருக்கின்றன. (அவற்றில் ஒருபகுதியை நான் மொழியாக்கம் செய்தேன். 1989ல் வாக்கில் கோணங்கி நடத்திய கல் குதிரை இதழில் அவை பிரசுரிக்கப் பட்டுள்ளன.) ஆனால் அக்காலத்தில் தமிழில் புரட்சிகரக் கவிதை களில் குறிப்படும்படி எதுவும் எழுதப்பட்டதில்லை. இங்கே புரட்சிகர இயக்கங்கள் செயல்பட்டு நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் அரசால் ஒடுக்கப்பட்டன. அவற்றின் இலக்கியப் பங்களிப்பு சொற்பமே.

தமிழில் உண்மையான புரட்சிகரம் கொண்ட, கவிஞராக அடையாளம் காணப்பட்ட, முதல் கவிஞர் சுகுமாரனே. சுகுமாரன் முழுமையான புரட்சிகரக் கவிதைகள் எழுதவில்லை. அவரது மனம் புரட்சிகர மன எழுச்சியை இருத்தலியல் சார்ந்த ஐயங்களால் சமநிலைப்படுத்திக் கொண்ட ஊசலாட்டம் உடை யது. அந்த ஊசலாட்டத்தையே சுகுமாரன் அதிகமும் எழுதியிருக்கிறார். தனிமை, கசப்பு ஆகியவற்றுடன் இணைந்த எதிர்ப்பும் வேகமும்தான் சுகுமாரனின் புரட்சிகரம். அது தமிழின் அனைத்து வாசகர்களாலும் ஏற்கப்பட்டது. காரணம் அதில் இருந்த நேரடியான நேர்மை. பாசாங்கே இல்லாத குரல் சுகுமாரனு டையது. ரத்தமும் கண்ணீரும் தோய்ந்த வலிகள் அவருடையவை. அவ்வாறாக எழுபதுகளின் இந்திய யதார்த்தத்தின் தமிழ்க்குரலாக அவரது கவிதைகள் வெளிப்பாடு கொண்டன. சுகுமாரனின் ஆரம்பக்கால ஆதர்சங்கள் வானம்பாடிக் கவிஞர்களே. பின்னர் நெரூதாவும் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனும். சுகுமாரன், இடதுசாரிப் பண்பாட்டு இதழாக வெளி வந்த மன ஓசை இதழிலும் பங்களிப்பாற்றினார். சுகுமாரனின் புரட்சிகரக் கவிதைகளை இவ்வாறு வரையறை செய்யலாம், அவை கிளர்ந்து எழுந்த இளமையின் புரட்சிக் குரல் அல்ல, கைவிடப்பட்ட நிராதர வான இளமையின் புரட்சிக் குரல்.

சுகுமாரனுக்குப் பின்னர் தமிழில் அதிகமாகக் கவனிக்கப்பட்ட புரட்சிகரக்குரல் சேரனுடையதுதான். சுகுமாரனின் குரல் புரட்சியின் வீழ்ச்சியின் குரலாக ஒலித்தபோது நேரடியாகவே புரட்சியின் குரலாக ஒலித்தது சேரனின் குரல். இந்திய இடதுசாரி எழுச்சி வரலாற்றின் பக்கங்களுக்குள் மறைந்த பிறகு பதி னைந்து வருடம் கழித்து ஈழத்தில் எழுந்த தேசிய எழுச்சியின் குரலாக சேரன் தமிழகத்திற்கு வந்தார்.

ஈழப்பிரச்சினை தமிழகத்தில் சாதாரணமாக செய்திகளாக மட்டும்தான் எண்பத்தி மூன்று வரை இருந்தது. தென்தமிழ் நாட்டுக்கு ஈழத்துடன் உணர்வு சார்ந்தும் உறவு சார்ந்தும் நெருங்கிய தொடர்பு உண்டு. மதுரைக்குத் தெற்கே கதிர் என்னும் பெய ருள்ள சைவர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள். கதிர்காமம், தமிழர்களுக்கு பழனிபோல திருச்செந்தூர் போல அவர்களுடைய சொந்த ஊர். இந்நிலையில் 83ல் நிகழ்ந்த முதல் இனக்கலவரம் தமிழ்நாட்டில் பெரிய உணர்ச்சியலைகளை உருவாக்கியது இயல்பே. இனக்கலவரச் செய்திகள் வரும்தோறும் தமிழகமே தெருக்களில் இறங்கியது என்றால் மிகையல்ல.

அந்த உணர்வெழுச்சியின் ஒரு பகுதியாக இங்கே வந்தவைதான் சேரன் கவிதைகள். அப்போது வ. ஐ. ச ஜெயபாலன், சு. வில்வரத்தினம் போன்றவர் களின் கவிதைகளும் தமிழுக்கு வந்தன. ஆனால் சேரனின் ‘இரண்டாவது சூரிய உதயம்’ என்ற தொகுதிதான் மிகப்புகழ் பெற்றதாக இருந்தது. புரட்சிகரக் கவிதைகளின் முக்கியமான சிறப்பியல்பு என்னவெனில் அவை திடீரென்று இலக்கியம் என்ற எல்லையைத்தாண்டி ஒரு வெகுஜன இயக்கமாக ஆகிவிடும் என்பதுதான். கவிதை என்ற கலையுடன் தொடர்பே இல்லாத  கோடிக்கணக்கான மக்களின் கைக்கு அவை சென்று சேர்ந்து விடும். திருவிழாவில் மக்கள் வெள்ளத்தில் மிதந்து செல்லும் உற்சவர் போல அக்கவிதைகள் வரலாற்றின் ஒரு காலகட்டத் தில் ஒழுகிச் செல்லும் வரலாற்றையே அவைதான் நிகழ்த்தின என்றுகூடத் தோன்றும். தமிழ் நாட்டில் அதற்குச் சிறந்த உதாரணமாகக் கூறத்தக்கவை பாரதியாரின் தேசிய கவிதைகள். அதன் பிறகு மிகக்குறுகிய காலத்திற்கேனும் அத்தகையதோர் இடத்தைப் பெற்றவை சேரனின் கவிதைகள்தான்.

எண்பத்துமூன்று முதல் தமிழகத்தில் எழுந்து, ராஜீவ்காந்தி கொலைவரை தமிழகத்தில் வலுவுடன் நீடித்த ஈழ ஆதரவு அலையில் பல்வேறுவிதமாக சேரனின் கவிதைகள் படிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சேரனின் இரண்டாவது சூரிய உதயம் என்ற கவிதை

இரண்டாவது சூரிய உதயம்

அன்றைக்குக் காற்றே இல்லை
அலைகளும் எழாது செத்துப்போயிற்று
கடல்
மணலில் கால் புதைத்தல் என
நடந்து வருகையில்
மறுபடியும் ஒரு சூரிய உதயம்
இம்முறை தெற்கிலே

என்ன நிகழ்ந்தது?
எனது நகரம் எரிக்கப்பட்டது
எனது மக்கள் முகங்களை இழந்தனர்
எனது நிலம் எனது காற்று
எல்லாவற்றிலும்
அன்னியப் பதிவு.

கைகளை பின்புறம் இறுக்கிக்கட்டி
யாருக்காகக் காத்திருந்தீர்கள்?
முகில்களின் மீது நெருப்பு
தன் சேதியை எழுதியாயிற்று
இனியும் யார் காத்துள்ளனர்?

சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து
எழுந்து வருக

(1983)

எழுதப்பட்ட சிலநாட்களிலேயே இக்கவிதை தமிழகத்தில் கார்பன்தாள் பிரதியாக வாசிக்கக் கிடைத்தது என்கிறார்கள். ஈழ எழுச்சி மீது அன்று தமிழகம் கொண்ட உணர்வெழுச்சியை இன்று புரிந்து கொள்ள முடியுமெனத் தோன்றவில்லை. 1983ல் மதுரையில் நான் இருந்த போதுதான் அந்தக் கலவரச் செய்தி வந்தது. மதுரை நகரின் எல்லா தெருக்களிலும் மக்கள் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவைவிட அதிக நெரிசலுடன் குவிந்து கிடந் தார்கள். பலர்அழுதார்கள். பெண்கள் இழவு வீடு களில் கதறுவது போல கூந்தல் விரித்துப்போட்டு மார்பில் அறைந்து அலறியழுவதைக் கண்டேன். கோபமும் கையாலாகாமையும் கொண்ட இளைஞர் கள் சைக்கிளிலும் நடந்தும் தெருக்களில் திரிந்தார்கள். அன்று நான் கவனித்த மிக முக்கியமான ஓர் அம்சம் இப்போது என் பிரக்ஞையை அறைகிறது. அன்று மதுரையில் உச்சக்கட்ட உணர்ச்சிகளுடன் இருந்தவர் களில் பெரும்பாலானவர்கள் மதுரையில் வாழும் சௌராஷ்டிரர்கள்.

ஈழக்கொடுமைகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் எழுந்த உணர்வலையானது தமிழகத்தின் பலநூறு பேதங்களை இல்லாமலாக்கி அனைவரையும் ஒன்றாக் கியது. அந்த ஒன்றுபடும் தருணத்தில் இருந்த இலட்சி யவேகமே கோடானு கோடி மக்களை அதை நோக்கி  மேலும் இழுத்தது. மேலோட்டமான உலகியல் போட்டிகளுக்கு அடியில் தங்களுள் இருந்த ஆதார மான உணர்ச்சி ஒன்றைக் கண்டடைந்துவிட்டதாக மக்கள் எண்ணினார்கள் போலும் .

அது மிகவும் தற்காலிகமான ஒரு எழுச்சியாக இருக்கலாம். கற்பனாவாதப் பண்பு மிக்கதாக இருக் கலாம். ஆயினும் அது அடிப்படையானது; அந்தரங் கமானது. அத்தகைய ஓர் மன எழுச்சி கவிதையையே கண்டடையும். அப்படிக் கண்டடையப்பட்ட கவிதை யே சேரனின் கவிதை.

”முகில்கள் மீது நெருப்பு
தன் சேதியை எழுதியாயிற்று!”

”சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து
எழுந்து வருக!”

என்ற இருவரிகளும் பெரியதோர் மந்திரங்கள் போல மாறிய காலங்கள் அவை. குறிப்பாக ‘சாம்பல் பூத்த தெருக்கள்’ என்றவரி ஈழத்தவர்களை விட தமிழ்நாட்டில் பல்வேறு பொருள்களை அளிக்கக்கூடி யது. வெந்து தணிந்த ஒரு பழங்காலத்தில் வாழ்வ தான எண்ணம் தமிழக இளைஞர்களுக்கு எப்போதும் உண்டு. சென்ற காலத்தில் இடிபாடுகளில் சாம்பல் களில் தன்பாதங்கள் சிக்கியிருப்பதாக அவன் உணர்வது உண்டு. ‘சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து எழுந்து வருக’ என்ற வரியானது ஒரு புதிய கால கட்டத்தை நோக்கிச் செல்வதற்கான அறைகூவலாகவே அன்று ஒலித்தது.

அமைப்பிலும் தொனியிலும் பாரதியின் வரிகளுடன் ஒத்துப் போகிறது இக்கவிதையின் உச்சம்.

‘வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் மூப்பென்றும்
குஞ்சென்றும் உண்டோ?
சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து
எழுந்து வருக!’

என்று அந்தவரிகள் தமிழரின் ஓர் அந்தரங்க மொழிச் சுனையில் ஒன்று கலந்தன. இந்த வரிகளை இப்படி இணைத்து எனக்குப் பாடிக்காட்டிய வேகம் கொண்ட இளைஞனாகிய அரவிந்தனை இப்போது நினைவு கூர்கிறேன். இருபது வருடங்களுக்கும் மேலாக அவருடன் தொடர்பு இல்லை. அவர் இலக்கியம் ஏதும் வாசிக்கிறாரா இல்லையா என்றும் தெரிய வில்லை.

தமிழ்ப் புதுக்கவிதையில் எழுதப்பட்ட மிகச்சிறந்த புரட்சிக்கவிதை என்று சேரனின் இந்தக் கவிதை யையே நான் குறிப்பிடுவேன். மிக ஆதாரமான உணர்வெழுச்சிகளினால் ஆன இந்தக் கவிதையில் தலைசிறந்த புரட்சிக்கவிதைகளில் காணப்படும் அடிப் படையான பல கூறுகளை ஒரு விமரிசகனாக என்னால் அடையாளம் காணமுடிகிறது. எல்லா புரட்சிகரக் கவிதைகளையும் போலவே இக்கவிதையும் மிகவும் நேரடியானது. பூடகத்தன்மையோ குழப்பங் களோ இல்லாதது. எல்லா புரட்சிக் கவிதைகளும் மக்கள் திரளை நோக்கியே பேசுகின்றன. ‘நீங்கள்’ ‘உங்கள்’ என்று கைநீட்டிக் கூவுகின்றன. அப்படி ஒரு மக்கள் திரளை நோக்கி அறைகூவும் இடத்தில் கவிஞன் தன்னை வைத்துக் கொள்கிறான். தன் உணர்வுகளை உச்சப்படுத்தி, தன்னைக் காலத்தின் குரலாக ஆக்கிக் கொண்டு, கவிஞன் அந்த இடத்தை அடைகிறான். பெரும்பாலும் மாபெரும் புரட்சிக் கவிதைகளில் விசுவரூபம் கொண்டு நிற்கும் கவிஞனை நாம் காண்கிறோம். அகங்காரம் பேருருவம் கொண்ட தன் மூலம் வரும் பிரமாண்டம் அல்ல இது. மாறாக தன் அகங்காரத்தை முற்றிலும் அழித்துக் கொண்டு தன்னைத் தன் மக்களில் ஒருவனாக உணர்வதன் மூலம், தன்னையே ஒரு சமூகமாக ஒரு இனமாக ஒரு பெரும் திரளாக ஒரு காலகட்டமாகக் கண்டு கொள்வதன்மூலம் கவிஞன் அடையும் பேருருவம் இது. இக்கவிதையில் ‘நான்’ என்ற சொல்லே இல்லை. அக்காட்சியைக் கண்டவன் முற்றாகவே தன்னை உணரவில்லை. அதேசமயம் ‘எழுந்து வருக!’ என்று அவன் கைதூக்கி அறைகூவவும் செய்கிறான்!

பெரும்புரட்சிகரக் கவிதைகளில் அடிப்படை இயற்கைச் சக்திகளில் ஒன்று வலுவாக இடம்பெற்றி ருக்கும் என்பதைக் கவனித்திருக்கிறேன். இக்கவிதை மிக இயல்பாக ஐந்து பெரும் பருப்பொருட்களைச் சார்ந்து எழுந்திருக்கிறது. காற்று, கடல், நிலம், நெருப்பு, வானம் (முகில்) என்று. புரட்சிகரக் கவிதை என்பது பெரும்பாலும் தீவிரமான ஒரு சுய  கண்டடைதலாக இருக்கிறது. ‘எனது நகரம் எனது மக்கள் எனது நிலம் எனது காற்று’ என்று கூவும் இக்கவிதை அப்படிப் பட்ட ஆவேசமான சுய கண்டடைதல் ஒன்றின் தருணம். அந்தத் தருணத்தில் வான்முட்ட எழுந்த கவிஞன்தான் தன் மக்களை நோக்கி ‘எழுக!’ என்று அறைகூவுகிறான். இக்கவிதையின் துல்லியமான வடிவம், சொல் மிகாத ஆவேசம், சொற்களின் தொனியும் அழகும் அனைத்தும் அக்கணம் கவிஞனுக்கு அளிக்கும் கொடை. பலசமயம் புரட்சிகள் வரலாற்றில் அமிழ்ந்து மறையும். மொழியின் மடியில் கவிதை மட்டும் நிரந்தர இளமையுடன் வாழும்.

மூன்று

புரட்சிக்கவிதைகள் எதிர்கொள்ளும் மிக முக்கிய மான சிக்கல் என்ன? புரட்சிகரம் என்பது மிக அப் பட்டமான ஓர் உணர்வு. மிகமிக நேரடியானது. ஆகவே புரட்சியை மட்டுமே சொல்லும் ஒரு புரட்சிக் கவிதை பெரும்பாலும் மிகமிகத் தட்டையான தாக இருக்கும். அத்தகைய வரிகளை நாம் சேரனின் கவிதை களில் ஏராளமாகக் காணலாம். ஒரு நல்ல கவிதை வாசகன் எந்த ஒரு புரட்சிகரக் கவிஞனின் தொகுதி யிலும் மிகப் பெரும்பாலான வரிகளை ஆழமில்லாத தட்டையான உணர்ச்சி வெளிப்பாடுகளாகவே காண்பான். குறிப்பாக புரட்சிகரக் கவிதைகளை அவற்றின் காலகட்டத்தைத் தாண்டி வாசித்துப் பார்க்கும்போது. சமீபத்தில் நான் நெரூதாவின் முழுத் தொகுப்பைப் படித்த போது பக்கம் பக்கமாகச் சலிப்பையே உணர்ந்தேன்.

புரட்சிகரம் என்பது காலத்தில் மிக வேகமாகப் பழையதாக ஆகும் ஓர் உணர்வு. தனது தேசிய புரட்சி கரக்கவிதைகளை மட்டும் எழுதியிருந்தால் பாரதியை நாம் இன்று எவ்வாறு கணித்திருப்போம். ‘வந்தே மாதரம் என்போம்’ என்ற வரியைக் கேட்கும் போதெல்லாம் மனம் பொங்கி, கண்ணீர் விட்டிருப்பதாக சி.சு. செல்லப்பா ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார். இன்று அவ்வாறு நமக்கு அளிக்கும் உணர்வு என்ன? பெரும் மன எழுச்சியை எனக்கு அளித்த சேரனின் புரட்சி கரக்கவிதைகள் பல இன்று அர்த்தமில்லாத வெற்று வரிகளாக மாறி பக்கங்களை நிரப்பிக் கிடக்கின்றன.

ஆயினும் சேரனின் இரண்டாவது சூரிய உதயம் இன்றும் ஒரு மகத்தான கவிதையாகவே உள்ளது. இன்று நான் அதில் வாசிக்கும் அர்த்தங்களே வேறு! அந்தக் கவிதை சூரிய உதயத்தைப் பற்றியது. சூரிய உதயம் நடப்பது தெற்கில்.மணலில் கால் புதைய நடந்து வரும்போது இரண்டாவது சூரிய உதயம் நடப்பது தெரிகிறது. ஆனால் அது நெருப்பு. நகரம் பற்றி எரியும் நெருப்பு. அந்தத் தருணத்தைக் கற்பனையில் விரிவு படுத்துகிறேன். தென்திசை வானில் முகில்களில் சிவப்பு ஒளி. பறவைகளின் குரல் போல நகரமக்களின் அழுகையொலிகளும் அலறல்களும். அதைப் பார்த்து நிற்பவன் அதை ஒரு சூரிய உதயம் என்று எண்ணு கிறான். என்ன விசித்திரம்!

விளங்கிக்கொள்ள முடியாத ஒரு முறையில் அழிவைக் கண்டு மனம் குதூகலம் கொள்வதை, பொங்கி எழுவதைக் காட்டுகிறதா இக்கவிதை? 1983ல் அந்த நாளின் மன எழுச்சியை இப்போது நினைவு கூர்கி றேன். மேலமாசி வீதியில் இளைஞர்கள் டயர்களைச் சாலையில் போட்டுக் கொளுத்திக் கொண்டிருந்தார் கள். விபரீதமான ஒரு கலையாட்ட உணர்வுடன் இளைஞர்கள் தெருக்களில் வெறிநடனம் ஆடினார் கள். சாலையில் செல்பவர்களைக் கூவியபடி மறித்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் கோஷமிடும்படி வற்புறுத்தினார்கள். திறந்திருக்கும் கடைகளைக் கண்ட தும் ஆர்பரித்தபடி பாய்ந்து சென்று அதை மூடவைத் தார்கள். அப்போது அங்கே ஒரு சிங்களக்குடும்பம் அகப்பட்டிருந்தால் என்ன ஆகும்? அவர்களை அடித்துக் கொன்று நார் நாராகக் கிழித்து மாலை யணிந்து தாண்டவமாடியிருப்பார்கள்!

ஆம், கொண்டாட்டம்! கொண்டாட்டமாகவே இருந்தது அந்தத் துயரம். மனிதனால் அழிவையும் கொண்டாடமுடியும்! சுய அழிவுகூடக் கொண்டாட் டமாகலாம். பண்பாடு என்பது பலநூறு மனத்தடை களால், சமூகத்தடைகளால் ஆனது. அடிபப்டை உணர்ச்சிகள் தடுக்கப்பட்டு உருவானதே நாகரிகம். அணைகளை உடைத்துப் பிறக்கும் வேகம் என்பது எந்நிலையிலும் களியாட்ட மேயாகும். எதையும் செய்யலாம் என்ற சுதந்திரம்தான் எத்தனை வசீகரமானது! பளபளக்கும் கத்தியின் வசீகரம் அது. அது நம்மை அழித்தாலும் கூட அந்த அழிவின் கணத்தில்கூட நாம் குதூகலிக்கிறோம். நம்முன் தலைமுறைகளாக உறங்கும் பூதங்கள் சங்கிலி களை உடைத்து ஆரவாரம் செய்து எழுகின்றன.

அந்த அழிவின் குதூகலம் என ஏன் பாரதியின் அக்கினிக்குஞ்சு கவிதையையும் சொல்லக்கூடாது? வெந்து தணியும் காடு குறித்த அந்த பெரும் துள்ளலில் இருப்பது  தீகண்டு துள்ளிக்குதிக்கும் குழந்தை உள்ளத்தின் அடிப்படை மனஎழுச்சி அல்லவா? சேரனின் கவிதை ஏன் அழிவை உதயக்களியாட்டமாக எடுத்துக்கொண்டது?

ஆதி விலங்குகளை உடைக்கும் கணத்தின் பரவசத்தைச் சொல்லும் கவிதையா இது? இது உண்மையில் புரட்சிக் கவிதையா அழிவுக்கான எக்காளமா? சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து எழுந்து வந்தது என்ன? ‘அலெக்ஸி தல்ஸ்தோய்’ ‘மிகயில் ஷோலக் கோவ்’ போன்ற பெரும் நாவலாசிரியர்கள் புரட்சியின், கலகத்தின் கணங்களில் படைகளில் உருவாகும் களிவெறியை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அலறல்கள், மரண ஓலங்கள், புகை, வெடியொலி நடுவே ஆனந்தப்பரவசத்துடன் துப்பாக்கியைத் தூக்கியபடி நடனமாடும் வீரன் ஒருவனை நாம் அலெக்ஸி தல்ஸ்தோயின் சக்கரவர்த்தி பீட்டரில் காண்கிறோம். அந்த மனநிலை இயல்பாக வெளிப் படும் கணத்தைத்தான் சேரனின் இந்தக் கவிதை குறிப்பிடுகிறதா?

மேலான கவிதையானது, பாம்பு காலத்தை சட்டையுரிந்து மேலும் மேலும் உயிர் நீட்சி கொள் வதைப்போல அர்த்தங்களில் இருந்து அர்த்தங்களை நோக்கி நெளிந்து சென்றபடியே உள்ளது. தன்மீதான வாசிப்புகளில் இருந்து ஒவ்வொரு முறையும் விடுதலை பெற்று விடுகிறது சிறந்த கவிதை. ஒரு கவிஞனின் பிரக்ஞையை மீறி அவன் வழியாக வரலாறு தன்னைப் பேசிக் கொள்கிற தருணமே மகத்தான கவிதைக்குரியது. வியப்பொலியோ பரவசக் கூச்சலோ சாபமோ சுய நிந்தையோ வலிமுனகலோ போல அது தன்னிச்சையானது. அது ஒரு நிகழ்வு. அதற்கு அவன் பொறுப்பல்ல. சேரனின் இக்கவிதை அதற்கொரு சான்று.

அப்படியானால் தட்டையான கவிதைகள் எப்படி நிகழ்கின்றன? அவையும் தீவிரமான தருணங்களின் வெளிப்பாடாக இருக்கலாம்தான். ஆனால் அவை ஏற்கனவே நிகழ்ந்த கண்டடைதலை மீண்டும் வெளிப் படுத்துகின்றன. புதிய கண்டடைதல் ஏதும் அவற்றில் நிகழ்வதில்லை. புதிய கண்டடைதல் என்பது ஒரு முரணியக்கத்தின் விளைவு. சேரனின் இக்கவிதை யையே எடுத்துப் பார்ப்போம். அழிவில் ஆக்கம் ஒன்றைக் கண்டடையும் தருணம் அது. அந்த முரணி யக்கமே அந்தக் கவிதையின் உச்சப்புள்ளியைச் சாத் தியமாக்கியது. ஆக்கம் என்பதன் உள்ளே உறையும் அழிவின் தரிசனமாக அதற்கு ஒரு வாசிப்பை அதன் மீது அளிக்க அதன் வரிகளில் வாய்ப்பு இருப்பது இதனால்தான். அத்தகைய முரணியக்கம் நிகழாத போது கவிதை தட்டையாக ஒலிக்கிறது.

இருகாலைகளும் ஒரு பின்னிரவும்

இன்றைக்கு இப்படித்தான்
விடியல்

இருள் முழுதும் பிரியாது
ஒளி நிறைந்து விரியாத
ஒரு நேரம்
விழித்தெழுந்து வெளியில்வரக்
கிணற்றடியின் அரசமரக் கிளைகளிலே
குயில் கூவும்

ஓவென்று நிலத்தின்கீழ்
ஆழத்துள் விரிந்திருந்த
கிணறு
சலனமற்று உறங்கியது
என்மனம் போல

இன்றைக்கும் இப்படித்தான்
விடியல்.

நாளைக்கும்
இப்படித்தான் விடியும்
என்று நினையாதே
பாதிராத்திரியும் மெதுவாகப்
போனபின்பு கேற்றடியில்
அடிக்குரலில் ஜீப் வண்டி உறுமும்
சப்பாத் தொலிகள் தடதடக்கும்
அதிர்ந்ததென
எம்வீட்டுக் கதவுகளோ
வலிந்து திறந்துகொள்ள
அப்போதுதான்
அடுத்த நாள் பரீட்சைக்கு
விரிவுரைக் குறிப்புகள்
விழுங்கிக் களைத்ததில்
விழிகள் மூடிய
அந்த இரவிலே

அவர்கள் கூப்பிடுவது
கேட்கும் காதில்
ஊளையிடும் காற்று
எங்கே அவன் என்று
கேட்பார்கள் கேட்கையிலே
பிழைபட்ட தமிழ் நெஞ்சில்
நெருட எழுந்து வரும்.

வார்த்தையற்று
அதிர்ந்து போய்
இல்லை எனத் தலையாட
இழுத்தெறிவார்கள் ஜீப்பினுள்
நிறுத்தாத எஞ்சின்
அப்போதும் இரைந்தபடி

பிறகு
பிறகென்ன
எல்லாம் வழமைப்படி
காலை வெறும் சூரியன்
வெயில் நிலத்தில்
எனக்கு மேல்
புல்

சிலவேளை வீடுவந்து
கதவு திறப்பதற்காய்க்
குரல்காட்டி திறக்குமுன்பு
இருமிச் சளி உமிழ
முகம் திருப்ப
உள்ளிருந்தும்
அம்மா இருமும் ஒலி
கதவு திறப்பதற்காய்க்
காத்திருந்தேன்
வெளியுலகம்
இப்போதும் முன்போல
அடங்கி இருக்கிறது.
*
ஈழப்போர் சார்ந்து எழுதப்பட்ட பலநூறு தட்டைக் கவிதைகளுக்குச் சரியான சான்று இந்தக் கவிதை. இது உண்மையானதோர் அனுபவத்தளம் என்பதை நாம் அறிவோம். ஒடுக்குமுறைச் சூழல் உருவாக்கும் அச்சமும் கைவிடப்பட்ட நிலையும் தீவிரமான மானுடநிலை. ஆனால் இதை ‘அப்படியே’ பதிவு செய்ய முயல்கிறது இக்கவிதை. அந்த அனுபவத்தின் மீது ஒருவகையான திறப்பும் நிகழவில்லை. தகவல் களாக நின்றுவிடுகின்றன. ஓர் அனுபவத்தின் மீது அதற்கு நேர் எதிரான இன்னொரு நகர்வு நிகழும் போதுதான் கவிதை நிகழும் உச்சம் உருவாகிறது என்று நான் நினைக்கிறேன். இங்கே ஒரே இயக்கம் தான் உள்ளது. ஓர் அனுபவப் பதிவாக அது நின்று விடுகிறது.

இதே அனுபவத்தைக் கூறும் வங்கத்து நக்சலைட் கவிதை ஒன்று உள்ளது. சன்னலை ஒட்டி அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறான் கவிஞன். வெளியே முற்றத்து சாலமரங்கள் வரிசையாக நிற்கின்றன. சிறிய அசைவு கூட இல்லை. இலைநுனிகள்கூட அசையவில்லை. நூற்றாண்டுகளாக, யுகங்களாக அவை அப்படி அசை யாமல் நிற்கின்றனவா என்ற எண்ணம் ஏற்படு கிறது. சட்டென்று தூரத்துச் சாலையில் முன்விளக்கு கள் ஒளி உமிழ போலீஸ் ஜீப் உறுமி மேடேறுகிறது. சால மரங்களின் நிழல்கள் உயிர்கொண்டு வரிசையாக இருண்ட பேய்கள் போல வீட்டுக்குள் நுழைகின்றன! இக்கவிதைகளில் ஒரு அபூர்வமான தருணம் உள்ளது. மரநிழல்கள் வீட்டுக்குள் நுழையும் கணம். அதுவே அதைக் கவிதையாக ஆக்குகிறது. அனுபவம் கவிதை யாக ஆகும் மந்திரம் அப்போது நிகழ்கிறது. அவ்வாறு நிகழாத காரணத்தினால்தான் சேரனின் அந்தக் கவிதை தரையில் நிற்கிறது. இன்னொரு வங்கக் கவிதையில் இதே கதவு தட்டும் கணம் வருகிறது. ‘கதவைத் தட்டுகிறேன். அம்மா திறந்து என்னை வாரி அனைத்து முத்தமிட்டபடி அழுவாள். ஆனால் என்னைப் பார்த்த அந்த முதல் கணம் அவள் என்னை விரும்புவாளா அஞ்சுவாளா?’ என்று அக்கவிதை முடிவடையும். அதுவும் கவிதையின் உச்ச கணமே. கற்பனையின் எழுச்சி ஏதும் இல்லாத முழுமையான லௌகீகத் தளத்திலேயே கவிதையின் உச்சம் நிகழ்வதற்கான உதாரணம் அது.

சேரனின் இக்கவிதை சாதாரணமாக எதிர் பார்க்கக்கூடிய எல்லா பிழைகளும் கொண்டுள்ளது. வழக்கமான சித்தரிப்புகள். சலனமற்று உறங்கும் கிணறு, ஆலமரத்துக் குயில். அவை மனப்பிம்பங்கள் எதையும் உருவாக்குவதில்லை. கலைப்படைப்பில் உருவாகும் மனப்பிம்பம் அது அளிக்கும் புதுமை மூலமே உருவாகிறது. காட்சிக் கோணத்தின் புதுமை, அல்லது காட்சியின் புதுமை. சலசலவென்று ஓடும் நதி, சிலுசிலுவென்று தென்றல் என்றெல்லாம் எழுதப்படும் வரிகள் நம் கற்பனையைத் தூண்டுவதில்லை. இனிமையான விடியல் என்ற ஒரு எளிய சித்திரத்தை அளிக்க பல வரிகள் வீணடிக்கப்பட்டுள்ளன. தேவையில்லாமல் ‘நாளைக்கும் இப்படித்தான் விடியும் என்று நினையாதே’ என்று ஓர் உரையாடல் கீற்று. சப்பாத் தொலிகள் தடதடக்க அவர்கள்’ வந்தபிறகு நான் படித்துக் கொண்டிருப்பது பரீட்சைக்கு என்று தகவல் சொல்லும் நிதானம். அந்தக் கணத்தின் பீதியையும் பதற்றத்தையும் அனுபவத்தில் நிறுத்த முடியாமல் கீழே விழுகிறது இக்கவிதை. அவ்வனுபவம் காலத்தினுள் நிழலாக மாறிச் சென்றபின் இச்சொற்கள் மட்டும் எஞ்சுகையில் இச்சொற்களில் இருந்து அந்த அனுப வம் முழுமையுடன் திரண்டு வராது.

ஒரு அனுபவம் தீவிரமானதாக நமக்கு நிகழும் போது அதன் தீவிரத்தினாலேயே அதைக் கவிதையாக ஆக்கிவிடலாமென்று மனம் தாவுகிறது. குறிப்பாக போர்கள், இழப்புகள் போன்ற அவலங்களில் அந்த வேகம் ஏற்படுகிறது. அனுபவம் நம் மனதில் உருவாக் கும் அதிர்வுக்கும் கவித்துவமான எழுச்சிக்கும் இடையே யான வேறுபாட்டைக் கண்டடைவதே கடினமான செயல். கணிசமான அஞ்சலிக் கவிதைகள், எதிர் வினைக் கவிதைகள் உடனடி மதிப்புக்கு அப்பால் கவிதையின் நிரந்தர மதிப்பு ஏதும் பெறாமல் சரிவதற் கான காரணம் இதுவேயாகும். ஈழத்துப் போர் குறித்து எழுதப்பட்ட ஏராளமான கவிதைகளுக்குப் போர் ஆவணங்கள், காலப்பதிவுகள் என்ற முக்கியத் துவம் மட்டும்தான் உள்ளது என்று இப்போது தோன்று கிறது.

கவிதையாக மாறும் அனுபவம் உக்கிரமானதாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. தொட்டியில் மலர்ந்திருந்த ரோஜாமலர் காலையில் உதிர்ந்து இதழ் களாக வழியில் சிதறிக் கிடந்ததைப் பார்த்து மன எழுச்சி கொண்டு குமாரன் ஆசான் மலையாளத்தின் மிகச்சிறந்த நீள்கவிதைகளுள் ஒன்றான வீணபூவு (வீழ்ந்த மலர்) என்ற படைப்பை உருவாக்கினார். பெரிதோ சிறிதோ அனுபவத்தின் உள்ளே கவிதையின் விதை உள்ளது. கற்றாழைப் பழத்தின் உள்ளே ஊவா முள் இருப்பது போல. உண்ணும்போது தொண்டைக் குழியில் குத்தி நிற்கிறது அது. ரத்தம்கசிய தசையில் தைக்கிறது. ஆறாத காயமாகிறது. கவிதை என்பது அந்த விதையின் மீது மனம் உருவாக்கிக் கொள்ளும் முத்து. கவிதைக்குள் இருப்பது ஒருபோதும் நேரடி அனுபவம் அல்ல. அனுபவம் கவிஞனில் உருவாக்கும் விளைவே. அவனுடைய தரிசனத்தால் செறிவேற்றப்பட்ட, அதன் பொருட்டு மறு ஆக்கம் செய்யப்பட்ட அனுபவம்தான் அது. உடனடி எதிர்வினைகளாக எழுதப்படும் கவிதைகளில் திறப்புகள் இல்லாத நேரடி அனுபவம் வந்து அமர்ந்திருக்கிறது. சேரனின் பல ஆரம்பக்காலக் கவிதைகளை அப்படித்தான் வகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆகவே உறுதியான, சஞ்சலமேயற்ற, நேரடியான புரட்சிகரம் உயர்ந்த கவிதையை உருவாக்குமா என்றே எனக்கு ஐயமாக இருக்கிறது. கவிஞன் ஊக்க உணர்ச்சியின் உச்சத்தில் இருந்து சோர்வின் பாதாளத் திற்குச் சரிபவனாகவும் அறைகூவிய குரலாலேயே தன்னிரக்கத்துடன் புலம்புகிறவனாகவும் தான் இருக் கிறான். மயகோவ்ஸ்கியையும் பாரதியையும் இதற்கான மிகச்சிறந்த உதாரணங்களாகச் சொல்வேன். சேரனின் அரசியலைப் பற்றி இங்கே விவாதிக்கப் போவதில்லை. அது ஒரு சராசரி இந்திய வாசகனால் புரிந்து கொள்ள முடிவதல்ல. அவ்விவாதங்களுக்குள் புகுந்தால் கவிதையைப் பற்றிப் பேசமுடியாமல் போகும். ஆனால் சேரன் எப்போதும் ஆழமான ஐயங்களுடன் தடு மாறிக் கொண்டிருக்கும் உணர்ச்சிகரமான மனிதராகத்தான் இருந்திருக்கிறார். அவரது அரசியல் நிலைப் பாடு முரண்பாடுகளும் தள்ளாட்டங்களும் நிறைந்த தாகவே இருந்திருக்கிறது. கவிஞர்கள் எப்போதும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.

ஓர் அனுபவத்துடன் முரண்பட்டு மோதும் அகமே அவ்வனுபத்தைக் கவிதை நோக்கி நகர்த்த முடியும். கவிதையின் இயங்கியலே அதுதான். போராடுவதற்கான அறைகூவலை எழுதிய சேரன் போராடும் குழந்தைகளை நோக்கி மனம் பதைத்தும் எழுதியிருக்கிறார். போரின் அழிவைக்காணும் பதற்றத்தையும் போரின் கொலைவெறியையும் ஒரே சமயம் தான் ஏற்று எழுதியிருக்கிறார். இதைச் சார்ந்து ஈழ அரசியல் வட்டாரங்களில் அவரைக் கடுமையாக விமர்சிக்கும் ஒருசில குரல்கள் எப் போதும் ஒலித்து வருகின்றன. உறுதியான நம்பிக் கைகள் மற்றும் நிலைப்பாடுகளின் தளத்தில் நின்றபடி கவிஞனை நோக்கிக் குற்றம் சாட்டும் குரல்கள் எப்போதும் வரலாற்றில் உண்டு. நேற்று மதநம்பிக் கையின் தளத்தில் நின்றபடி அக்குரல்கள் எழுந்தன. இன்று அரசியல் நம்பிக்கைகளின் தளத்தில் நின்றபடி அக்குரல்கள் எழுகின்றன. அவை கவிதைகளைப் பார்ப்பதில் கவிஞனின் நிலைப்பாட்டை மட்டுமே பார்க்கின்றன. கவிஞனில் நிலைப்பாடுகளைக் கண்ட டைய முடியாது என்று அவை அறிவதில்லை.

எந்த ஒரு கவிஞனிலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தெளிவாக காணக்கிடைக்கும் ஒரு கருத்துநிலை இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நான் வாசித்த எந்தப் பெருங்கவிஞனும் அதற்குரிய ஆதாரங்களை அளிக்கவில்லை. கவிஞனின் பிரக்ஞை யுலகில் சீராக வளர்ந்து வரும் ஒரு மையக் கருத்தோ தரிசனமோ இருப்பதில்லை. இருக்கக்கூடாது என்று கூட நான் சொல்லத்துணிவேன். பாரதியே மிகச்சிறந்த உதாரணம். அவரைப் புரட்சியாளராக, பக்தராக, வேதாந்தியாக – எப்படிவேண்டுமானாலும் பார்க்க முடியும். உண்மையில் அவர் இந்தத் தரப்புகள் நடுவே ஓயாது முட்டிமோதிக் கொண்டு கிடந்தார். ஷெல்லிதாசன் என்றும் சக்திதாசன் என்றும் ஒரே சமயம் தன்னை எண்ணிக் கொண்டார். பெரும்பாலும் கவிஞர்கள் இறந்தபிறகு நாம் கவிஞர்களை தொகுத்து மையச்சரடுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிக்கிறோம். பாரதியைப் பொறுத்தவரை இன்றுகூட அவர் யார் என்று நாம் விவாதித்து முடிக்கவில்லை.

உலகம் முழுக்கவே புரட்சிக்கோட்பாட்டாளர்களுக்கு புரட்சிக்கவிஞர்கள் மீதிருந்த ஐயத்தையும் அவநம்பிக்கையையும் இவ்வாறுதான் புரிந்துகொள்ள முடியும். பாரதி அவன் வாழ்ந்த காலத்தில் போதையில் சீரழிந்த குழப்பவாதியாகவே இருந்திருக்கிறான். திருநெல்வேலிப்புரட்சியின் தோல்விக்குப்பின் அஞ்சி பாண்டிச்சேரியில் அடைக்கலம் புகுந்தபோது  அவநம்பிக்கையின் விளைவாகப் பலவகையான சரிவுகள் அவனுக்கு நிகழ்ந்திருக்கின்றன.  இன்று நாம் பாடப்புத்தகங்களில் காணும் உருக்காலான புரட்சிப்படிமம் அவருக்கு சுதந்திரப்போராட்டத்தின் இரண்டாவது காலகட்டத்தில் உருவாக்கப்பட்டு சூட்டப்பட்டது. அவரது உண்மையான புரட்சிக்கவிதைகள் வழியாக உருவாக்கிக் கொள்ளப்பட்ட பிம்பம் அது. உண்மையில் அது இயல்பானதே. ஏனென்றால் காலம் கடந்து வாழ்பவை கவிதைகளே. இதே கதைதான் மயகோவ்ஸ்கிக்கும்.

இன்றைய கோட்பாட்டாளன் அவர்களின் புரட்சிகர பிம்பம் மற்றும் கவிதைகள் வழியாக அவர்களின் உண்மையான ஆளுமை நோக்கிச் செல்லும்போது மீண்டும் குழப்பமும் ஐயமும் அடைகிறான். சீராக அமைந்த ஒற்றைப்படையான ஆளுமை அவனுக்குக் காணக்கிடைப்பதில்லை. ஐயங்கள் அவநம்பிக்கைகள் தள்ளாண்டங்கள் முரண்பாடுகள் ஆழ்மனத்தின் கட்டற்ற ஓட்டங்கள் கொண்டவனாகவே அவன் அறியப்படுகிறான். ஆகவே மீண்டும் கோட்பாட்டாளன் அதே பிழையை செய்கிறான். கவிஞன் வாழ்ந்திருந்தபோது அவனுக்குச் சூட்டப்பட்ட முள்முடிகளை மீண்டும் கையில் எடுக்கிறான். கோட்பாட்டின் இரும்பு அளவுகோலைக்கொண்டு  இலக்கியத்தை ஒருபோதும் அளவிடமுடியாது.

சேரனின் காலவரிசைப்படுத்தப்பட்ட தொகுப் பைப் பார்க்கும் ஒருவர் அவரது கருத்தியலைத் தேடினால் களைத்துத்தான் போவார். ஆக்ரோஷமான புரட்சிகரக் கவிதைகள், எளிய காதல் கவிதைகள், இயற்கை வர்ணனைக் கவிதைகள் என்று அவரது உலகமானது ஆரம்பித்திலிருந்தே தன்னிச்சையான, சிதறுண்டு  பரவக்கூடிய, போக்கையே கொண்டுள்ளது. அதுவே கவிஞனுக்கு இயல்பானது. அவனைப் பொறுத்தவரை கவிதை நிகழக் கூடிய அக்கணத்தில் அவன் எதை உணர்கிறானோ அதுவே அவன்அகம். ஒவ்வொரு கவிதையும் தன்னளவில் முழுமையானதே. தனக்கெனத் தனித்த தரிசனமும் நிலைப்பாடும் உடையதே. அவை ஒரு நீளமான உரையாடலின் துண்டுகள் அல்ல. ஆகவே அவை ஒன்றுசேர்ந்து நிறுவும் ஒரு மையம் என்பது  ஒருபோதும் இருப்பதில்லை. சேரனின் படைப்புகளை வகுத்துக் கொள்ள முயலும் ஒருவர் கையாளவேண்டிய அணுகுமுறை இதுவேயாகும்.

நான்கு
சேரனின் படைப்புலகில் நாம் காணும் பொது வான கூறு என்று அதன் கற்பனாவாதத் தன்மை யையே கூற வேண்டும். கற்பனாவாதத்தன்மை அல் லது புத்தெழுச்சி வாதத் தன்மை (romaticism£) தமிழ் நவீனக் கவிதையில் அதன் தொடக்கத்திலேயே இல்லாமலாகிவிட்டது. சற்றேனும் கற்பனாவாத இயல்பு கொண்ட நவீனக்கவிஞர் என்று ந. பிச்ச மூர்த்தியையே குறிப்பிடவேண்டும். எழுத்துக் கவிதை கள் கற்பனாவாதத்தை உதறி நவீனத்துவத்தின் எதிர் மறை அழகியலுக்குள் புகுந்தன. பசுவய்யா, நகுலன், பிரமிள் ஆகிய மூவரும் அதன் மூன்று வகைமாதிரி களை உருவாக்கினர்.  சி.மணி அத்தனை பிரபலமாகாது போன அங்கத பாணியை உருவாக்கினார். பிரமிள் பாணி கவிதைகள் தமிழில் அதிகம் வெற்றிபெற வில்லை. ஆத்மாநாம் கவிதைகளில் அதன் சில சாயல் கள் உள்ளன. சி. மணிக்கு ஞானக் கூத்தன் மட்டுமே தொடர்ச்சி. நகுலனுக்கும் பசுவய்யாவுக்கும் இன்று வரை தொடரும் ஒரு தலைமுறை நீட்சி உண்டு. தமிழில் ந. பிச்சமூர்த்தியின் கவிதைகளின் மரபு ஏறத்தாழ இல்லாமலாகி விட்டது. ஆனால் சேரனின் கவிதைகளுக்கு இங்கே நாம் முன்னோடியைத் தேட வேண்டுமென்றால் ந. பிச்சமூர்த்தியையே குறிப்பிட வேண்டும். அந்தப் பொதுக்கூறு கற்பனாவாதமே.

கற்பனாவாதம் உணர்வுகளை ஓங்கச் செய்து கொள்கிறது. கருத்துகளை இலட்சியங்களாகச் செறிவு படுத்திக் கொள்கிறது. இதற்கு ஏற்ற வடிவம் மரபுக் கவிதையே. மரபுக் கவிதையில் உள்ள வெளிப்படை யான தாளம் இத்தகைய கவிதைகளுக்கு மிகவும் ஏற்றது. ஒரு கற்பனாவாதக் கவிதை எப்போதும் அதன் உச்சங்களில் உலவ இயலாது. அது சித்தரிப்பு களை அளிக்க வேண்டியிருக்கும். தகவல்களைக் கொடுக்க வேண்டியிருக்கும். அப்போது அதன் கால் கள் தரைதட்டும். தாளம் உள்ள கவிதையானது அதன் உத்வேகம் மிக்க வரிகளின் தாளத்தை மொத்த கவிதைக்கும் அளிப்பதன் வழியாக அந்த எளிய வரிகளின் சாதாரணத் தன்மையை மறைத்துவிட முடியும். புதுக்கவிதையின் அமைப்பு அந்த வசதியை இல்லாமலாக்கி வருகிறது. வரிகள் தாளமில்லாமல் கூற்றுகளாக மட்டுமே இருக்கும்போது அவற்றின் அர்த்த தளத்தில் உள்ள கவித்துவத்தால் – குறிப்புணர்த்தப்படும் அர்த்தங்களில் உள்ள கவித்துவத்தால் – மட்டுமே நின்றாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆகவே புதுக்கவிதையின் வடிவம் கற்பனாவாதக் கவிதைகளில் பெரும் தடையாகவே அமைகிறது. மேலும் புதுக் கவிதை வடிவம் நவீனத்துவத்துடன் சேர்ந்தே பிறந்தது. நவீனத்துவ பிதாமகர்கள்தான் புதுக்கவிதையை உருவாக்கினார்கள் – வால்ட் விட்மன், எலியட், எஸ்ரா பவுண்ட் முதலியோர். நவீனத்துவத்தின் இறுக்கம், எதிர்மறைத்தன்மை, பூடகத்தன்மை அனைத் தும் புதுக்கவிதைக்கும் உரிய குணங்களாக அடை யாளப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆகவேதான் சேரனின் கவிதைகள் நவீனத் தமிழ் வாசகனுக்கு வடிவரீதியான போதாமைகளை உணர்த் தக்கூடியவையாக உள்ளன. சேரனின் தொடக்க காலக் கவிதைகளில் இளமைப் பருவத்திற்குரிய நேரடியான கற்பனாவாதம் வெளிப்பட்டது என்றால் பிற்காலத்துக் கவிதைகளில் சற்றே உணர்ச்சி இறுக்கம் சார்ந்த கற்பனாவாதம் வெளிப்பட்டது. ஆனால் நேரடியாக உணர்ச்சிகளையும் கருத்துகளையும் முன் வைக்கும் பாணியானது எப்போதும் காணப்படுகிறது.

யாழ்ப்பாணத்தின் சராசரி இதயமே

உனது உலகம் மிகவும் சிறியது
கிடுகுவேலி
வேலியில் கிளுவை
எப்போதாவது வேலியின் மீது
அழகாய்ப் பூக்கும்
சிவப்பு முள்முருக்கு. . .

(கைத்தடி 1979)

என்று அவரது கவிதை நேரடியாகப் பேசுகிறது. அல்லது,

எழுந்து வெளியே வா
வான்வெளி நீலச் சேலையில் தெரியும்
மூன்று வெள்ளிப்பூக்களைப் பார்த்து
என்னை நினைத்துக்கொள்

என்று காதல்மொழி கூறி நெகிழ்கிறது. அல்லது,

பூவரசு நிழல் விரிந்த
மாரிக் கிணற்றடி
நீர்மட்டம்மேல்
குளிரும்தான் எனினும்
குளிக்கிறேன்.

என்று வர்ணிக்கிறது. கவிதை என்பது அதன் மறைபிரதியாலேயே பொருள்படுவது என்று பழகிய தமிழக வாசகருக்கு இந்த நேரடித்தன்மையில் இடர் பாடுகள் உள்ளன. சேரன் உட்பட ஈழக் கவிஞர்கள் பற்றிப் பேசும்போது தமிழக வாசகர் பலர் குறிப்பிடுவதைக் கவனித்திருக்கிறேன். ஆழ்பிரதி இல்லாத காரணத்தால் பல கவிதைகளை தட்டையானவை என வாசகர் சிலர் எடுத்துக்கொள்வதுண்டு. ஏற்கனவே சு.வில்வரத்தினம் கவிதைகளைப் பற்றிய விவாதத் திலும் இந்தச் சிக்கல் விவாதிக்கப்பட்டது (அகமெரியும் சந்தம்: சு. வில்வரத்தினம் கவிதைகள்)

ஆனால் ஒன்றைக் கருத்தில் கொண்டு இதைப்பற்றி விவாதிக்க வேண்டும். நவீனத்துவ அழகியலை நாம் முற்றான அளவுகோலாகக் கொண்டு படைப்புகளை அணுகக்கூடாது. என்னுடைய திறனாய்வுக் கட்டு ரைகளில் அனைத்திலும் இதைப்பற்றி மீண்டும் மீண் டும் பேசியிருக்கிறேன். ஏனென்றால் சுந்தரராமசாமி ஈறாகத் தமிழில் உள்ள அழகியல் விமர்சகர்கள் நவீனத் துவத்தின் வடிவபோதத்தை அழகியல் வந்து சேர்ந்த இறுதி எல்லையாகக் காணும் போக்கை இங்கே நிறுவி விட்டிருக்கிறார்கள். ப. சிங்காரம், ஜெயகாந்தன், நீல பத்மநாபன் போன்றவர்களை மதிப்பிடுவதற்கு இது எந்தஅளவுக்குத் தடையாக அமையும் என்பதைப் பற்றி நான் அவர்களைப் பற்றி எழுதிய கட்டுரைகளில் ( இலக்கிய முன்னோடிகள் வரிசை, 7 நூல்கள்) விவாதித்திருக்கிறேன். நம் வாழ்வில் கற்பனா வாதத்திற்கு ஓர் இடமிருக்கிறது என்பதை ஏற்றோம் என்றால் கற்பனாவாதப் படைப்புகளை அவற்றுக் குரிய அளவுகோல்களினாலேயே மதிப்பிட வேண்டும்.

கற்பனாவாதம் அடங்கிய குரல் கொண்டதல்ல. அந்தரங்கமாக வாசகனுடன் பேசுவதல்ல. உணர்ச்சி கலவாத அறிவார்ந்த தன்மை உடையதல்ல. செறிவு, பூடகத்தன்மை ஆகியவற்றுக்கு எதிரானது அது. அனைத்துக்கும் மேலாக அது கட்டுப்பாடற்றது. தன்னிச்சையானது. நவீனத்துவப் படைப்புகளுக்கு நேர் எதிரானது என்றே கூறிவிடலாம். ஆகவே அந்த இலக்கணங்களைக் கற்பனாவாதக் கவிதைகளில் எதிர்பார்க்கக் கூடாது. அப்படியானால் கற்பனா வாதக் கவிதைகளில் அதன் கவித்துவம் எப்படி நிகழ் கிறது. கற்பனாவாதம் என்பதே கட்டற்ற உணர்ச்சி களின் நேரடி வெளிப்பாடுதான். எந்த வரிகளில் நேரடியான, தீவிரமான வெளிப்பாடு உண்மையுடன் நிகழ்ந்திருக்கிறதோ அதுவே சிறந்த கற்பனாவாதக் கவிதை.

பிரிதல்

கொடி எங்கும் மல்லிகைப்பூ
குளம் எங்கும் அல்லிமொட்டு
வேலி வரிச்சுகள் மேல்
முள்முருக்கு பூத்திருக்கு
பார்த்தபடி நானிருக்க
இப்படித்தான் விரியும் வசந்தம்
என்று சொன்னபடி
நீ போனாய் அன்றைக்கு
இன்றைக்கோ
தந்திமரக் கொப்பில் உடல்சிலுப்பி
இறகுதிர்க்கும் குருவி ஒன்று.
உயரே உலாப்போகும்
மஞ்சு
குளக்கரையில்
நீளக்காலூன்றி ஒரு
கொக்கு
தவமிருக்கு.

பிரிதலின் துயர் கற்பனாவாதக் கவிதையின் எப்போதுமுள்ள கரு. அதை இயற்கைமீது ஏற்றிக் கூறுவதும் அதன் வழிமுறையே. இக்கவிதை அதன் உண்மையான உணர்வெழுச்சியால் அந்தக் கவித் தருணத்தை மீண்டும் நிகழ்த்திப் பார்த்திருக்கிறது. ‘கொடியெங்கும் மல்லிகைப்பூ குளமெங்கும் அல்லி மொட்டு’ என்று தொடங்கும் வரிகளில் உள்ள துள்ளலான தாளம் கவிதையைத் தீவிரமாகவே தொடங்கி வைக்கிறது. ‘இப்படித்தான் வரியும் வசந்தம்’ என்று விழியால் சொன்னபடி செல்கிறாள் அவள் – வேலியில் முள்முருக்கு பூப்பதுபோல! பின்னர் வானில் பிரிந்து கரையும் மேகம், இறகு உதிர்க்கும் குருவி, நீளகால் ஊன்றி காத்திருக்கும் கொக்கு என ஒரு பிரிவாற்றாமை. தமிழின் நீண்ட அகமரபில் சரியாகச் சென்று அமரும் ஒரு கவிதை இது.

சிலசமயம் கவிதையில் எடுத்த எடுப்பிலேயே தீவிரமான உணர்ச்சியின் தன்னெழுச்சியான வெளிப் பாடு நிகழ்கிறது. ஆனால் சித்தரிப்பும் விவரிப்பும் விளக்கமும் வந்து கவிதை தரைக்குச் சரிகிறது.

நாள்

‘மூங்கில்கள் நெளியும் கரை
மஞ்சளாய் நெளியும் நதி
அக்கரையருகே நீ’

என்று தொடங்கும் கவிதை சுயவிவரிப்பாகச் சரிகிறது.

‘எனது மொழியில்தான்
பேச இயலும்
உனக்கு கோபம் வருகிறது
நான் என்ன செய்ய?’

அப்படியே இறங்கிச் சென்று

‘காற்று வீசுகையில்
மூங்கில்கள் நெளியும் கரையில்
நெருப்பு பற்றும்
பிறகு
உனது வீட்டிற்கும் பரவும்’

என்று முடியும்போது அந்த இறுதி கவியுருவகம் மிகவும் செயற்கையாக ஆகிவிடுகிறது. இவ்வாறு உண்மையான மன எழுச்சியானது தரைதட்ட நேர்வ தென்பது கற்பனாவாதக் கவிதைகளில் பொதுவாகவே அடிக்கடி நிகழக்கூடிய ஒன்றுதான்.

ஆனால் பொதுவாக கற்பனாவாதக் கவிதை களைப் பொறுத்தவரை வடிவநெகிழ்வு அனுமதிக்கப் பட்டிருக்கிறது. அதன் ஒட்டுமொத்த உணர்ச்சி வேகம், அதில் உள்ள சிறந்த வரிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கவிதையை மதிப்பிட வேண்டியுள்ளது. செறிவை வைத்து அல்ல. கற்பனாவாதத்தின் பொற்காலமாகிய பிரிட்டிஷ் கற்பனாவாதத்தின் பெரும் கவிஞர் களான வில்லியம் வர்ட்ஸ்வொர்த், டென்னிசன், ஷெல்லி, கீட்ஸ் ஆகியோருக்கும் இது பொருந்தும்.

எனது நிலம்

சிறகுவலை விரித்தபரவைக் கடல்
மேலே மூச்செறியும் காற்று
கடல்நடுவில்
கலையும் தலைமயிரை
விரல்களால் அழுத்தி நிமிர்கையில் எல்லாம்
கரை தெரிகிறது
பனைமரமும் இடையிடையே ஓடுகளும்

அலையும் எஞ்சின் இரையும் பொழுது
சிதறும் துளியும்
ஒன்றரை மணிநேரம்
எப்படி முடிந்ததாம்?

பிறகு மணல் நிமிர்ந்தவெளி
அதனுள் புதைந்த பனைகள்
ஒவ்வொன்றும் ஓராள் உயரமான
கன்னிமணல்மீது தலைநீட்டும்
மணலோ
கண்ணாடி விதையிட்டு
சூரியன் போய் குடியிருந்த
பொன்னின்துகள்
அதன்கீழ்
இரண்டாயிரம் ஆண்டுகள்
முன்பாக என் முன்னோர் நடந்த
நிலப்பரப்பு
ஒரு காலடி ஆனால்
ஓராயிரம் ஆண்டு
எம்வேர் நீண்டுள்ளது

துயிலாது இந்த அலைகரையில் நின்று
விண்மீன் சிதறிக் கடலுள்
விழுகிறதைப் பார்த்திறங்கிய ஒருத்தியின்
அல்லது
தொடுவான் வெளிபிளந்து
கரைசேரும் நாவாய்க்கு
காத்திருந்த ஒருத்தியின்
வெறும் மார்பில் புரண்ட மணி ஒன்றில்
பின்மாலை அந்திப் பொழுது
புடமிட்ட
தென்னோலைக் காற்றாடும் வெளியில்
மண்மூடிய சுவடுகளில்
என்முன்னோர்
விட்டுப் போயுள்ளார்கள்
எனக்கொரு சேதி

நூறு நூறாயிரம் தோள்களின்மீது
ஏறிநின்று
எனது நிலம் என உரத்துச் சொல்கிறேன்
ஏழு சமுத்திர வெளிகளைத் தாண்டி
அதன்மீது எழுகிற அலைகளைமீறி
அதனைக் கொண்டுபோய்
எங்கும் ஒலிக்கிறது காற்று

‘எனது நிலம்
எனது நிலம்!’

ஆங்காங்கே கவிதையின் உத்வேகம் மழுங்கினாலும் கூட சேரனின் சிறந்த கவிதைகளில் ஒன்று இது. யுசிறகுவலை விரித்த பரவைக் கடல்ரு என்ற அழகிய படிமத்துடன் தொடங்குகிறது. வலைகளை  சிறகுகளாக அசைத்த நீலக்கடல் நடுவே அந்த நிலம் எழுந்து வரும் காட்சியனுபவத்தை இக்கவிதை அளித்து விடுகிறது. பல சொல்லாட்சிகள் புதியவை ‘மணல் நிமிர்ந்த வெளி’. சில சமயம் வரிகள் கற்பனாவாதக் கவிதைகள் மட்டுமே அளிக்கக்கூடிய உத்வேகமான மொழி யனுபவமாக ஆகின்றன.

’கண்ணாடி விதையிட்டு
சூரியன் போய் குடியிருந்த
பொன்னின் துகள்’

கிட்டத்தட்ட பொருள் மீறிய அரற்றலாக ஆகும் இத்தகைய வரிகள் நவீனக் கவிதையில் நிகழ்வது கடினம் – புதுக்கவிதையின் வசனத்தன்மையும் கட்டுப்பாடும், வெளிப்பாட்டுக்குப் பதில் குறிப் புணர்த்தலை நாடும் இயல்புமே அதற்குக் காரணம். தமிழ்ப் புதுக்கவிதையில் பிரமிள், தேவதேவன், அபி ஆகியோரில் மட்டுமே நாம் அத்தகைய வரிகளைக் காணமுடிகிறது. அபூர்வமாக சுகுமாரனிலும். கற்பனா வாதக் கவிதைகளை நியாயப்படுத்தும் கூறு இதுவே. இத்தகைய வரிகளை வைத்தே அதன் கட்டற்ற தன்மை யை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

சங்ககால நெய்தல் திணையை, தேவி கன்னியாகுமரி யை நினைவில் மீட்டிச் சென்று மரபின் ஆழத்திற்குச் செல்லும் வரிகள் வழியாக வளர்கிறது இக்கவிதை.

தென்னோலைக் காற்றாடும் வெளியின்

மண்மூடிய சுவடுகளில்
என்
முன்னோர் விட்டுப்போயுள்ளார்கள்
எனக்கொரு சேதி

என்று மீண்டும் ஒரு உத்வேகமிக்க தருணத்தை அடைகிறது. மேலே குறிப்பிட்ட இரு உத்வேகமிக்க வரியமைவுகளிலும் எதுகையும் தாளமும் கூடியிருப் பதைக் கவனிக்கலாம் (கண்ணாடி- பொன்னின், தென்னோலை-முன்னோர்) இது மரபுக் கவிதையின் தேவையைக் காட்டுகிறது. அந்தக் குறையை, சுதந்தி ரமாக எதுகையையும் தாளத்தையும் அமைத்துக் கொண்டு கவிஞன் தாண்டியிருப்பதையும் காட்டுகிறது.

இறுதியில் ‘எனது நிலம் எனது நிலம்!’ என்ற அடிவயிற்று முழக்கம் பெறும் ஒலியாக இல்லாமல் உண்மையான உணர்வெழுச்சியுடன் உணரப்படு வதற்கு இந்தக் கவிதையெங்கும் அடையாளப்பட் டுள்ள வேகமும், தீவிரமான வரிகள் நம்மில் எழுப்பும் ஆழ்ந்த மொழியனுபவமும் காரணமாக அமைகின்றன.

இந்த அம்சத்தை வைத்தே நாம் புரட்சிகரக் கவிஞனை மதிப்பிட வேண்டும். புரட்சிகரக் கவிஞன் என்பவன் புரட்சிகரக் காலகட்டத்தின் பிரதிநிதிக்குரல் அல்ல. அக்காலகட்டத்தின் ஆகச்சிறந்த குரலும் அல்ல. அவன் அக்காலகட்டத்தின் ஒட்டுமொத்தக் குரல்களின் தொகை. ஊடுபாவாக பரவிச்செல்லும் பலவகையான குரல்களின் முரணியக்கமே அவன் கவியுலகின் விசையை உருவாக்கும். மயகோவ்ஸ்கியின் கவிதையை புரட்சியின் பொருளின்மையை, அபத்தத்தை முன்வைக்கும் கவிதைகளாகக் கண்டு ஒரு முழு வாசிப்பை நிகழ்த்திவிடமுடியும். சுதந்திரப்போராட்டகாலத்தின் எல்லா குரல்களையும் நாம் பாரதியில் காண்கிறோம். சேரனிலும் அதையே காண்கிறோம்.

எனது நிலம் என்று பொங்கும் குரலும் சரி, நிலமிழந்து காமத்திலும் மதுவிலும் தன்னைக் கண்டுகொள்ளும் குரலும் சரி, நாம் போராடுவோம் என்று வீறுகொள்ளும் குரலும் சரி, கைதுசெய்யப்படும்போது உள்ள அச்சத்தை மொட்டையாகப் பதிவுசெய்யும் குரலும் சரி ஒரே கவிஞனின் குரல்தான். அவனூடாக இயங்கும் அக்காலகட்டத்தின் குரல்கள் அவை.அவற்றில் நாம் கவிஞனின் சீரான பரிணாமத்தைக் காண்பது இயலாது. அவற்றின் மாறுதல்கள் அக்காலகட்டத்தின் உணர்ச்சிமாறுதல்கள் மட்டுமே.

ஐந்து

சேரனின் கவிதைகளின் பேசு பொருளாக அமைந் துள்ள புரட்சிகரமும் காதலும் கற்பனாவாதம் சார்ந்த மனஎழுச்சியின் காரணங்கள் என்ற அளவிலேயே கவிதையில் பொருள்படுகின்றன. காதலும் புரட்சியும் இரண்டுமே ஒரு மனம் தன் முழு ஆற்றலாலும் தூக்கி வானில் நிறுத்தியிருக்கும் போது மட்டுமே முக்கியமாக இருக்கக் கூடியவை. மிக எளிதில் பொருளி ழந்து விடக்கூடியவை. லௌகீகமாக மட்டுமல்ல ஆன்மீகமாகவும் இரண்டுக்கும் பெரிய அர்த்தம் ஏதுமில்லை. காதல் பேரன்பாகவும் புரட்சிகரம் முழு மையான நீதியுணர்வாகவும் பரிணாமம் அடையாத வரை அவற்றுக்குக் காலத்தை வெல்லும் தன்மை கிடையாது  என்றே கூறவேண்டும்.

அந்த பிரக்ஞை அந்தத் தருணங்களில் கவிதைக் குள்ளேயே நின்று துடிக்கிறது. அதனால் தான் புரட்சியும் காதலும் மரணத்தை சாட்சிக்கு அழைக் கின்றன. பஞ்ச பூதங்களை விரித்துப் பேசுகின்றன.

‘காலத்தைக் கேள்
சொல்லும் அது

காத்திருப்புக்கு அப்பாலே
பூக்கும் புல்வெளிகள்”
”நீரராய் பெருகி
நதியாய் நகர்ந்து
கடலாய் பரந்து செறிந்தோம்’

என்றெல்லாம் தற்காலிக உணர்வு எழுச்சியை நிரந்தரப் படுத்தும் எத்தனத்திற்காக மொழியைச் சரண் அடை கிறது கவிதை. அப்படிப்பார்த்தால் சேரனின் இக் கவிதைகளின் முனைப்பு என்பது அந்தந்தத் தருணங் களில் பீரிட்டெழும் உணர்வலைகளை முடிந்தவரை உக்கிரபடுத்தி நிரந்தரப்படுத்துவது தானே? அலை நுரையை எ·குச் சிற்பமாக்குவது போன்று? பனித் திவலைகளை வெண்கற்களாக்குவது போன்று? ஜீபனா னந்த தாசின் வரி என்று நினைக்கிறேன். ‘காற்றில் மிதந்து உதிர்ந்து விழும் இறகு ஒன்று மண்ணை மோதும் கணத்தில் ஓர் இடியோசையை எழுப்பச் செய்யும் எத்தனமே காதல்கவிதை’ உண்மைதான் போலும்!

சேரனின் புரட்சிக் கவிதைகளையும் காதல் கவிதைகளையும் நாம் மாறிமாறிப் படித்துக் கொண்டு செல்கிறோம். தொடக்க காலம் முதலே இருவகைக் கவிதைகளையும் அவர் மாறிமாறி எழுதியிருக்கிறார். தொகுப்புகளில் தெரியும் சமீபகாலத்தைய கவிதை களில்கூட அந்த சரிவிகிதம் அப்படியேதான் இருக்கி றது. காதல், புரட்சிகரம் இரண்டிலும் சேரனில் ஒரு விதமான மாற்றம் தெரிவதை இக்கவிதைகளை ஊன்றிப் பார்க்கும்போது பார்க்க முடிகிறது. இறந்த காலம் போன்ற ஆரம்பக்காலக் கவிதைகள் முதல் சேயுடனான உறவு முறிந்தபோது வரை சேரன் மீண்டும் மீண்டும் காதலின் பிரிவு, முறிவுக் கணங் களையே அதிகமும் எழுதியிருக்கிறார். ஆரம்பக்காலக் கவிதைகளில் காமம் உரத்து ஒலிப்பதில்லை. உறவின் புரிந்து கொள்ள முடியாத தன்மையைப் பற்றிய பதற்றமே ஓங்கி ஒலிக்கிறது. பிற்பாடு உறவு என்றாலே புரிந்து கொள்ள முடியாததுதான் என்ற தெளிவுடன் அக்கணத்தைக் காமத்தில் தோய்த்து சாஸ்வதப் படுத்திக் கொள்ளும் முயற்சி தெரிகிறது.

’அச்சந்தருகிறது காதல்
கலவியின் பின்
மெல்லிய வெட்கம் கெட்ட குரலில்
அவனுடைய வழமையான மந்திரம்

போய்வா உடைந்த கண்ணாடித்துண்டே
உனது அச்சம் வேறு
எனது அச்சம் வேறு’

என்று சொல்லி ‘அமையும்’ கவிதைகளாக அவை உள்ளன. இந்த அம்சத்தால் தான் சேரனின் தொடக்க காலக் காதல்கவிதைகளைவிட பிற்காலக் கவிதைகள் மேலும் தீவிரமும் ஆழமும் உடையனவாக எனக்குப் படுகின்றன. அவற்றில் சேரன், காதலில் தான் தேடுவது எதை-அல்லது தேடிக் கண்டடைய முடியாதது எதை-என்று அறிந்து விட்டிருப்பது போலப்படுகிறது. ஒரு விஷயத்தை இங்கே உதாரணமாகக் கூறலாம். சேரனின் ஆரம்பக்கால கவிதைகளில் அவர் நிறைய இயற்கை வருணனைகளை கூறுகிறார். அவை அந்தக் கவிதை நிகழும் புலம் மட்டுமாகவே உள்ளன. சேரனின் காதல் கவிதைகளுக்கு அவை தேவையே இல்லை அவை வெறுமே உணர்ச்சிகரமான உறவின் நெருக்கம் பிரிவு இரண்டில் மட்டுமே கவனம் செலுத்து பவை. இன்னும் மொத்தையாகச் சொல்லப்போனால் ‘ஏன் எல்லாக் காதல்களும் ஒரு புள்ளியில் விரிசல் விடுகின்றன?’ என்ற ஒரே கேள்வியில் மட்டும் மையம் கொள்பவை.

பிற்காலக் கவிதைகளில் சேரன் சூழல் விவரணை களுக்கு இறங்குவதேயில்லை. சூழலில் இருந்து ஒரு விவரணையை எடுத்துவைத்தால்கூட அதற்கு அக வயமான விளக்கத்திற்கு உதவும் தேவை இருக்கிறது. கவிதையில் அது படிமம் ஆக மாறியே நிலை கொள்கிறது. சொற்கள் பறந்தலைவதில்லை, சிறகடித்து சரியான மலர் இதழ்களில் அமர்ந்து விட்டுருக்கின்றன. சேரனின் காதல் கவிதைகளில் ஆகச்சிறந்தது என்று நான் மதிப்பிடும் கவிதை ‘கேள்’ தான். ‘கேள் எப்படிப் புணர்வது என்பதை பாம்புகளிடம்’ என ஆவேசமாகத் தொடங்கும் அந்தக் கவிதை சொல் மழைபோல காற்று டன் சுழன்றடித்து ‘துயரத்தின் சாறு பிழிந்த தனிமை எப்படியிருக்கும் என்பதை என் பனிப்பாறையுள் நெருப்பின் உயிர்ச்சுவட்டை எறிந்தவளிடம்’ என்று தீவிரம் கொண்டு முடிந்து ‘தண்டவாளங்களும் குளிரில் அடித்துப் பிளக்க ஒற்றைச் சிறகுடன் கையில் ஒற்றைப் பூவுடன் காத்திருப்பது எப்படி என்பதை என்னிடம்’ என்று விம்மித் தேய்ந்து மறைகிறது. தமிழ்மொழியின் சிறந்த சில காதல் கவிதைகளில் ஒன்று இது.

சேரனின் புரட்சிகரக் கவிதைகளிலும் அத்தகைய நுண்ணிய மாறுதல் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. தொடக்க காலத்துக் கவிதைகளில் ‘எனது நிலம் எனது மக்கள்’ என்ற சுய உணர்வே புரட்சிக் குரலாக ஓங்கி நிற்கிறது ஒடுக்கப்படுகையில் மனிதனுக்கு ஏற்படும் ஆங்காரம். மனித ஆத்மா தன்னை மீண்டும் மீண்டும் புறவய மாகக் கண்டு கொள்கிறது அப்போது. தன்னவர்களு டனும் தன்னைச் சூழ்ந்தவர்களுடனும் அடையாளப் படுத்திக் கொண்டு தன் இருப்பை அது விரிவாக்கிக் கொள்கிறது. அடிபட்ட பாம்பு பத்தி விரித்து எழுவது போல. குரோதமே அதன் விரிவாக்கம். ஆனால் எந்தப் பாம்பும் அதிக நேரம் பத்தி விரித்து நிற்க முடியாது. அந்த உணர்வு அதன் குரோதத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. ஆனால் மெல்ல மெல்ல அந்தத் தேசியத் தன்னுணர்வில் இருந்து மேலும் விரிந்த ஒரு வரலாற்றுணர்வை நோக்கி சேரன் நகர்ந்து விட்டிருப்பதை நாம் காண்கிறோம். ஆதிக்க மும் கிளர்ச்சியும், அடக்குமுறையும் மீறலும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். வரலாறெங்கும் அவை முரண்பட்டுப் பொருதி ரத்தம் வீழ்த்துகின்றன. ஒன்றில் இன்னொன்று பிரிக்கமுடியாதபடி கலந் துள்ளது. ஆகவேதான் ‘யுத்தம்’ என்ற சொல் சேரனில் அழுத்தம் பெறுகிறது. புரட்சி என்பது மெல்ல போர் என்பதாக அவரது ஆழத்தில் உருமாற்றம் பெற்று விடுகிறது.

யுத்தம் பற்றிய மிகச் சுருக்கமான அறிமுகம்

நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களானால்
அது கண்ணீரின் குருதி
நீங்கள் ஒடுக்குபவர்களானால்
அது குருதியின் கண்ணீர்

என்று அவரது கவிதை கண்டுகொள்கிறது. எந் நிலையிலும் எஞ்சுவது கண்ணீரும் குருதியும்தான் என்று. வரலாற்றுக்கு அது அன்றாட உணவு என்று. கிளர்ச்சிகளை, இலட்சியங்களை, இழப்புகளை, நினைவுகளை பொருட்படுத்தாமல் அந்தப் பெரும் சக்கரம் உருண்டு சென்றபடியே இருக்கும் என்று. இந்த வரலாற்றுப் புரிதல் சேரனின் பிற்காலத்துக் கவிதைகளுக்கு மேலதிக அழுத்தம் அளித்திருக்கிறது.

காற்றாகி நில்
கடலாகி அலைவீசு
போரிடும் நம்தோழர்களின்
வேட்டொலிக்கு புறம்காட்டி
தோற் றோடும் ராணுவத்தின்
அவலக் குரல்களின் மேல்
உனதும் உனைப் போன்ற
ஏராளம் மக்களதும்
நினைவுச் சாசனத்தை
இந்த நிலத்தில் நாம் பொறிப்போம்

(நாங்கள் எதை இழந்தோம்?)

என்று மிகத் தட்டையாக அறை கூவல் விடுத்த அவரது கவிதை அழிவுகளின் கண்ணீ ரின் காயங்களை மெல்லக் கண்டு கொள்கிறது.

தெருவில் வீசப்பட்டுள்ள
ஒற்றைச் செருப்பின்மீது
வீட்டுப்படிகளில் வீசியெறியப்பட்ட
மூக்குக் கண்ணாடி மீது
தெருமுனையில் புரட்டிவிடப்பட்ட
மோட்டார் சைக்கிளின்மீது
தயங்கித் தயங்கி நிற்கிறது

(கேள்வி)

அந்தத் தயக்கத்திற்குப் பிறகான கவிதைகளில் சேரனின் புரட்சிகரம் ஆழமான சுயபரிசீலனைக்கு ஆளாகிறது. அழிவின் எக்காளமாக அது பிறகு ஒலிப்பதில்லை. துயரத்தை நோக்கிய தார்மீகமான  எழுச்சியாகவே ஒலிக்கிறது. ஒற்றைப் படையான போர்க்குரலாக அது இருப்பதில்லை. மானுட அவலம் நோக்கிய பரிதவிப்பாகவும் அதிலிருந்து எழும் உத்வேகமாகவும் அது உருவம் கொண்டிருக்கிறது.

குழந்தைகள்
குழந்தைகளை யார் உருவாக்குகிறார்கள்
என்று நான் கேட்டேன்

திறந்து வைத்த யன்னலூடாக சலசலத்து
நானல்ல அவர்களின் குரலுக்குச்
சங்கீத நரம்புகளை தருவதே என்வேலை
என்றது காற்று

அவர்களின் கண்களுக்கு
ஆழமான நிறங்களைத் தருகிறேன் நான்
என்றது ஒளி

அவர்களுடைய பிஞ்சுப் பாதங்களுக்கு
ஒரு புன்னகையை தருகிறேன் நான்
என்றது செல்லரிப்பூ

அவர்களுடைய இதயத்தின் சுவர்களை
காதலின் இழைகளால் நெய்கிறேன்
என்றது கடல்

அவர்களின் சிரிப்புக்கு
மந்திர வலிமையை சேர்க்கிறேன்
என்றன காடுகள்

அப்படியானால்
அவர்கள் கைகளில் துப்பாக்கிகளையும்
கால்களுக்கு ராணுவச் சப்பாத்துகளையும்
இடுப்பில் வெடிகுண்டுகளையும்
கண்களில் வெறுப்பையும்
தந்தது யார் என்று கேட்டேன்

காற்றும் கடலும் உறைந்தன
வெளியில்
உலர்ந்து நொறுங்கிற்று
கண்ணாடித்துண்டுகளாக ஒளி
ஒரு மின்னல் வெட்டில்
எரிய ஆரம்பித்தன பூக்களும் காடுகளும்
எல்லா பறவைகளும்
கூட்டமாகப் பறந்து சென்று
அத்தீயில் விழுந்தன

குழந்தைகள்
எங்களுடைய குழந்தைகள்!

சேரனின் புகழ்பெற்ற இக்கவிதையை அவர் எரிந்து கொண்டிருந்த நேரம் எழுதிய புரட்சிகரக் கவிதை களின் மறுபக்கமாகவும் அவற்றின் பரிணாமமாகவும் நான் வாசிக்கிறேன். சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து எழுந்து வருவதற்கு அறைகூவிய சிறுவன் ஒரு தந்தையாக மாறிவிட்டிருக்கிறான்.

ஆறு

புரட்சிகரத்தின் வெம்மையில் இருந்து தப்ப, காதலில் அடைக்கலமாகின்றன சேரனின் கவிதைகள். காதலின் உருக்கத்திலிருந்து எழுந்து புரட்சிகரத்தின் தகிப்பை நாடுகின்றன. ஒன்றைக் கொண்டு இன் னொன்றை முழுமையாக சமன் செய்துகொள்கின்றன.

அகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்

எஸ்.பொன்னுத்துரை: யாழ்நிலத்துப் பாணன்

கோடுகளை மீறி…ஆழியாளின் கவிதைகள்

பேராசிரியர் மௌனகுரு

கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு

சுவாரஸியம் என்பது என்ன ? அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்

முந்தைய கட்டுரைதுவாரபாலகன்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்