கஸாக்- கடலூர் சீனு

நான் எங்குசென்றேனென்று

யாரும் தேடாதிருக்கட்டும்,

நான் எங்குளேனென்று

யாரும் சொல்லாதிருக்கட்டும்.

தனிமையில் என் உயிர் பிரியுமென்றால்

இந்த பிட்சுவின் ஆசை நிறைவேறும்,

பூதங்களின் இச்சைகளை இவ்வாசை வெல்லட்டும்.

இந்த பிட்சுவின் ஆசை நிறைவேறட்டும்.

[விஷ்ணுபுரம் நாவலிலிருந்து].

கசாக்கின் இதிகாசம் நாவல் இப்படி நிறைகிறது.

// நீலநிற முகம் உயர்த்தி அது மேலே பார்த்தது. பிளவுற்ற கருநாக்கை வெளியே சொடுக்கியது. பாம்பின் படம் விரிவதை ரவி ஆவலுடன் பார்த்தான். பேரன்புடன் பாதத்தில் பற்கள் பதிந்தன . பல் முளைக்கும் சிறு பயலின் குறும்பு. அவை மீண்டும் மீண்டும் பாதத்தில் பதிந்தன. படத்தை சுருக்கி, ஆவலுடன் பேரன்புடன் ரவியை பார்த்துவிட்டு , அது மீண்டும் பின்வாங்கி ஊடுருவிச் சென்றது. மழை பெய்கிறது. மழை மட்டும்தான் இருக்கிறது. கார்பருவத்தின் வெண்ணிற மழை. சாய்ந்து கிடந்த ரவி சிரித்தான்//

நாவல் இப்படி துவங்குகிறது.

// கூமன்காவில் பேருந்து நின்றபோது, ரவிக்கு அந்த இடம் அந்நியமாகத் தோன்றவில்லை. எதிர்காலத்தைக் குறித்த முன்னுணர்வுகளில் எங்கோ, அந்த இடம் பார்த்து பார்த்து மனப்பாடமாகிவிட்டிருந்தது//

இந்த இரு புள்ளிகளுக்கு இடையே , ரவியை மையமாகக் கொண்டு வாழ்வென்றும், சாவென்றும் விரிகிறது இருத்தல் எனும் வசீகர அமானுஷ்யம்.

ரவியின் காதலி பத்மா கேட்கிறாள் ”எதிலிருந்து தப்பிச்சி ஓட, ஓடி ஒளிய முயற்சி பண்ற நீ?”. ஒருக்கால் அதை சொல்ல முடிந்த நிலையில் ரவி இருந்திருந்தால் அவனது விதியின் முடிவை நாடி அவன் கசாக்குக்கு வந்திருக்கவே போவதில்லை. ரவி சிறு வயதிலேயே அம்மாவை இழந்தவன். [வயிற்றில் தங்கச்சிப்பாப்பாவோடு அவள் இறந்துவிடுகிறாள்] மறுமணம் செய்து வந்த,சின்னம்மா வழியே, ரமா சுமா என்று இரு தங்கைகள். அப்பாவுக்கு பக்கவாதம் . நன்கு படிக்கும் ரவிக்கு, தன் ப்ரொபசரின் மகளான பத்மா காதலி. சூழலோ இச்சையோ . ரவி சின்னம்மாவுடன் சம்போகம் கொள்கிறான். அகம் அலைக்கழிக்க , குடும்பத்தை விட்டுக் கிளம்பி எங்கெங்கோ அலைகிறான். இறுதியில் வேதாந்தி போதானந்தா ஆஸ்ரமத்தை வந்து அடைகிறான். அது பொதுக் கல்வி மெல்ல மெல்ல சமூகத்தை ஊடுருவும் காலம். பாலக்காடு மாவட்டத்தில் கசாக் என்னும் சிறு கிராமத்தில் ஓராசிரியர் பள்ளி,துவங்கும் வேலை ரவிக்கு கிடைக்கிறது. சக சாமியாரிணி நிவேதிதா உடனான தொடர்பால் விளைந்த ஒரு அவசர சூழலில், ரவி ஆசிரமத்திலிருந்து கிளம்பி [அல்லது தப்பி] கசாக் வந்து இறங்குகிறான்.

கசாக். செதலி மலை அடிவாரத்தில், இளவெயிலில் தும்பிகள் பறக்கும், பனைகள் செறிந்த கிராமம். பல வருடங்களுக்கு முன் படை நடத்தி சென்ற நபியுடன், உடன் நின்ற ஷெய்க்தங்கள், தனது முதிய குதிரைக்காக கசாக்கில் தங்க நேர்கிறது. தங்களின் சமாதி செதலி மலை மேல் உண்டு. கசாக்கின் முகமதிய குடிகள் யாவும், ஷெய்க் தங்களின் சந்ததி என்று நம்பிக்கை. அல்லாபிச்சை மொல்லாக்கா அங்கு மதகுரு[அசரத்], மார்க்க கல்வி சட்டம் போதிப்பவர், விஷ கடிகளுக்கு மந்திரித்து ஓதுபவர். வழி வழியாக முந்திய அசரத்தால் புதிய அசரத் கண்டடையப் படுவார்கள். [தலாய் லாமா போல] . அல்லாபிச்சை, வாவரால் கண்டெடுக்கப் பட்டவர். மொல்லாக்கா மனைவி தித்திப்பி. அவர்களுக்கு ஒரு [ஊரிலேயே அழகிய] இளம் பெண். மைமூனா. அல்லாபிச்சை, அடுத்த அசரத் எனும் நினைவில் நைசாம்அலியை கண்டெடுக்கிறார். அவனை மைமூனாவுக்கு திருமணம் முடிக்கும் எண்ணமும் அவருக்கு உண்டு. நைசாம் அலி மொல்லாக்காவின் கனவுகளுக்கு மாறாக நடந்து கொள்கிறான். ஊரை விட்டு ஓடுகிறான். மைமூனா முன்காங்க்கோழி என்று அழைக்கப்படும் , கிணறுகளில் மூழ்கி பொருட்களை மீட்கும் தொழில் புரியும், ஆமினா எனும் மகள் கொண்ட, ஐம்பது வயத்துக்கும் கூடிய சுக்ருராவுத்தருக்கு இரண்டாம் தாரமாக கட்டி வைக்கப் படுகிறாள். கசாக்கிலேயே சிறு மளிகைக்கடை வைத்து நடத்துகிறாள். அவளுக்கு ஆமினாவை கண்டால் ஆகாது. சில வருடம் கழித்து நைசாம் அலி திரும்ப வருகிறான். ஷெய்க் தங்களின் ஆவி தனக்குள் இறங்கி விட்டது, இனி நான்தான் இந்த ஊரின் காலியார் என அறிவிக்கிறான். ஊர் கடைசி சிதிலமடைந்த பள்ளி வாசல் அவனது வசிப்பிடமாகிறது. அவனுக்கு மைமூனாவுடன் ‘தொடர்பு’ வலுக்கிறது.

சிவராமன் நாயர், நாராயணி தம்பதிக்கு கல்யாணி செல்ல மகள்.மாதவன் நாயர் அவர்களின் மருமகன். நாராயணி எப்போதும் சிவராமன் கை மீறியே செயல்படுகிறாள். சொல்பேச்சு கேளாமல் நாத்துப் புரைக்கு அடிக்கடி செல்கிறாள். பனையேறி குப்புவச்சனை பார்க்கும்போதெல்லாம் சிவராமன் தன் மகள் முகத்தில் அவன் ஜாடையை தேடுகிறார். பாலக்காட்டு கேலன்நாயர் பாலக்காட்டில் பள்ளி ஒன்று திறந்து, புதுப் பணக்காரன் ஆகி சிவராமனை நிம்மதி இழக்க வைக்கிறான். கசாக்கில் ஓராசிரியர் பள்ளி திறக்க வாய்ப்பு வருகிறது. சிவராமன் நாத்துப்புரையை பள்ளிக்காக வழங்குகிறார்.

இது ஒரு பக்கம். புளியமர பகவதி. நல்லம்மதெய்வப் புரை அதன் சாமியாடி குட்டாடன், மந்திரவாதி கோபால் பணிக்கர் இவர்கள் ஒரு பக்கம். மொல்லாக்கா பள்ளி வருவதை எதிர்க்கிறார். இந்துக்கள் பள்ளி வருவதை ஆதரிக்கிறார்கள். இந்த சூழலில் இவர்கள் மத்தியில் வந்து இறங்குகிறான் ரவி. அந்த நிலம் அவன் உடலாகிறது. அந்த நில மக்களின் அறிவும், அறியாமையும், நம்பிக்கையும், பயமும், இச்சைகளுக்கும், அனைத்துக்கும் ரவி சில காலம் பார்வையாளராகவும், சில சமயம் பங்குதாரராகவும் விளங்குகிறான். வேட்கையின் சவுக்கால் சொடுக்கப்பட்டு இச்சைகளின் பெருஞ்சுழிப்பில் வந்து விழுகிறான்.

மைமூனாவின் நைசாம்அலி உடனான கூடலை புரிந்துகொள்ள முடிகிறது. மைமூனாவை ரவியுடன் கட்டிவைப்பது எது? சுக்று ராவுத்தர்க்கு தன்னை மண முடித்தபிறகு அவள் தன் தந்தையை எவ்விதம் எதிர்கொள்கிறாள்? மொல்லாக்கா தனது மனைவிக்காக, அவளது அம்மாவுக்காக கொஞ்சம் எண்ணை காக அவளிடம் கெஞ்சுகிறார். அவள் நிர்தாட்ச்சன்யமாக மறுக்கிறாள். அப்பாவின் சவம் ஊருக்குள் வரும் அரவம் கேட்கிறது. எந்த சலனமும் இன்றி தன்னுடன் கூடிக்கிடக்கும் ரவியை கிளப்பி அனுப்புகிறாள்.

நல்லம்ம தெய்வப் புரையின் சாமியாடி, பிரம்மச்சாரி. கோபால் பணிக்கர் மனைவி அவனது பால்ய தொடர்பு. அவளின் சந்தனநிற தொடைகள் நினைவில் மேலெழும் போதெல்லாம் அவனது வெறியாட்டு உச்சம் கொள்கிறது. அவன் சொல்லும் குறியில் நல்லம்மையே வந்து நிற்கிறாள்.

குப்புவச்சன் வாழ்வின் ஒரு கட்டத்தில் அவரது மனைவி அவரை விட்டு விட்டு சென்று விடுகிறாள். அவரது மகன் மருமகள் கேசியை தனியே விட்டு விட்டு எங்கோ சென்று விடுகிறான். குப்பு ஒரு இரவு, கேசிக்காக ரவியை தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறார். தவிர்க்க இயலா தேவையாக, தீர்க்கவேண்டிய வேட்கையாக, சிக்கிக் கொள்ளும் பொறியாக, வண்ண பேதம் கூடிய காமத்தின் தருணங்கள் வந்துகொண்டே இருக்கிறது.

காமம் மரணம் இடையே சிக்கி அலைக்கழியும் மனித உணர்வுகள். ஐந்து சகோதரிகள். ஐந்தாவது பெண்ணுக்கு[நீலி] பிறக்கிறான் அப்புக் கிளி. சகோதரிகளின் கணவர்களின் ஒருவன்தான் அவனுக்கு தந்தை. அது குறித்தெல்லாம் சகோதரிகளிடையே பெரிய சண்டை இல்லை. நான்கு சகோதரிகளும் விழி திறக்கா, தங்கள் ஸ்தனங்களின் குமிழ்களை, அப்புக்கிளியின் மென் உதடுகளில் பொருத்தி ஆசுவாசம் கண்ட பிறகே, அவனை பாலருந்த நீலிக்கு கை அளிக்கிறார்கள். அப்புக்கிளி மூளை வளர்ச்சி இன்றி வளருகிறான். நைசாம் அலி மீதான பீதியால் அப்புக்கிளியின் அப்பா இறக்க, தொடர்ந்து நோயில் நீலியும் இறக்கிறாள், பிற சகோதரிகள் யாருடனோ ஊர் விட்டு சென்று மறைகிறார்கள். அநாதை அப்புக்கிளி தும்பிகள் பிடித்துத் திரிகிறான். குடும்பத்தால் வெறுக்கப்படும் ஆமினாவை அன்பு செலுத்தும் ஒரே ஆத்மா அப்புக் கிளி.

காமம் போலவே மரணத்தின் களி நடன அரங்காகவும் விளங்குகிறது கசாக். வைசூரி பரவுகிறது. பள்ளிப் பதிவேடு வருகை பாதி ஆகிறது, ஊரில் சரிபாதியை வைசூரி வாரிச் செல்கிறது. சந்துமாவின் சிறிய மகன் மகளை தேடி அவர்களின் தாத்தா வருகிறார். குழந்தைகள் பிணத்தை அள்ளிக்கொண்டு செதலி மலையில் ஏறி மறைகிறார். தாய் பிள்ளை, உறவு, அப்பா பிள்ளை உறவை பேசிய கதைகள் நிறைய. தாத்தா பேரன் பேத்தி உறவை அதன் பிரிவுத் துயரை இந்தனை உக்கிரமாக சொன்ன பிரதிகள் குறைவே.

உறவும் பிரிவும், இச்சைகளும் மரணத்தாலும் அலைகழிந்த வருடங்கள் முடிந்து பத்மா ரவியை கண்டு பிடிக்கிறாள். அனைத்திலிருந்தும் விடுபட்டு ரவி மீள நினைக்கிறான். நல்லரவம் அவனுக்கான மீட்சியை அளிக்கிறது.

நவீனத்துவம் அதன் சிகரம் அடைந்தது, வங்கத்தில் சுனில் கண்கோபாத்யாயா வழியே, கன்னடத்தில் யு ஆர் அனந்தமூர்த்தி வழியே, தமிழில் சுந்தரராமசாமி வழியே, எனக் கொண்டால் மலையாளத்தில் ஒ வி விஜயன் வழியே அது நிகழ்ந்தது. ஒப்பு நோக்க இவர்கள் அனைவரை விடவும் ஒரு படி முன்னால் நிற்கிறார் விஜயன். காரணம் விஜயன் தான் பேசும் தளம் சார்ந்து சென்ற ஆழமும் கவித்துவமும். முன்காங் கோழி, கிணத்தில் விழுந்து இறந்து போகிறார். //கண்ணாடிக் கதவுகள் திறந்து திறந்து ஆழம் நோக்கி செல்கிறார்.அவருக்குப் பினால் கண்ணாடிக் கதவுகள் ஒவ்வொன்றாக மூடிக்கொண்டது// மரணம் நோக்கிய பயணம் இத்தனை கவித்துவமாக முன்வைத்த பிரதி பிறிதொன்றில்லை .

மரணம் எனும் அந்தகார இருளில் மின்மினி போல இந்த உயிர் வாழ்வு எனும் தரிசனத்தை தனது ஒவ்வொரு பாத்திரம் வழியாகவும் நாவல் தீவிரமாக முன்வைக்கிறது. நாவலுக்குள் ஒரு சிறுமிக்கு முன் ஜென்ம நினைவு வருகிறது. தனது முந்தய பெற்றோரை தேடி கண்டு பிடிக்கிறாள். அம்மா வசம் அப்பா எங்கே என்று வினவுகிறாள். அப்பா செத்துப் போய்ட்டார் என்று கண்கலங்கி அம்மா சொல்கிறாள். ஆம் பிறவி பிறவியாக எடுத்து மனிதன் இங்கு எய்த வந்தது மரணத்தை மட்டுமே.

இந்த தரிசனத்தின் சிகரம். மொல்லாக்காவின் ரணம். ரணதுக்குள் நுண் நோக்கி பார்க்கிறது. அங்கே ஒரு பிரபஞ்சம், அதில் தூசியாய் ஒரு உலகம், அதில் தூசியிலும் தூசியாக மொல்லாக்கா, அந்தி முடிந்து எழும் இரவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.

வைரத்தை ஆக்கும் நியதிகள் போல இந்த நாவலில், வடிவமும், மொழியும், தரிசனமும் உன்னதமாக முயங்கி இதை காலாதீதம் கொள்ள வைக்கிறது. வைசூரி அழிவுகள் முடிந்து ரவி பள்ளியை திறக்கிறான். அவன் வைத்த பொருட்கள் வைத்த இடத்தில் அப்படியே இருக்கிறது. தூசி அடைந்து. இப்படி ஒரு வரி வருகிறது. தூசி என்பது என்ன, ஜடங்கள் காலத்தில் நிகழ்த்தும் பயணத்தின் சாட்சிதானே.

ஒரு நிலையில் நின்று யோசித்தால், இந்த பூமி சூரிய மண்டலத்தை சுற்றிக் கொண்டிருக்கிறது. பூமி தன்னைத்தானே [ஒரு துப்பாக்கி வெடித்து தோட்டா பறக்கும் வேகத்தில்] சுற்றிக் கொண்டிருக்கிறது. ஆக எந்த பொருளும் இங்கு அசையாமல் இருக்க வழியே இல்லை. தூசி காலத்திநிடையே பொருட்கள் செய்யும் பயணம் என்பதன் பொருள் பேருருவம் கொள்கிறது.

நாவல் மிக மிக குறைவான சொற்களில் , எப்படி ஒரு கேள்விக்குறியை வரைந்தால் காந்தி வந்துவிடுகிராரோ அப்படி மனிதர்களை உருவாக்கி அவர்களை உயிர்த்துடிப்புடன் உலவ விடுகிறது. மிக மிக குறைவான சொற்களில் பெருமாண்ட நிலக்காட்சி ஒன்றினை உருவாக்கிக் காட்டும் மாயத்தையும் ஆசிரியர் நிகழ்த்திக் காட்டுகிறார். கூமன்கா துவரைக்காடு துவங்கி செதலி மலை சிகரம் வரை வாசகன் தும்பி போல பறந்து திரிகிறான்.

தும்பி முதல் தேன் சிட்டு வரை வித் விதமான உயிர் வெளி கொண்டு நாவல் நிறைகிறது. முற்றிலும் புதிய புதிய படிமங்கள். ரவி ஜன்னல் வழியே பார்க்கிறான் ஏரியில் ஒரு நீர்ப்பரவைக் குஞ்சு எழுந்து பறக்க வகையறியாமல் கொடிகளின் இடையே சிக்கி குரல் கொடுக்கிறது. அன்னைப் பறவை சுற்றி சுற்றி அதன் தலைக்கு மேல் பறந்து கொண்டு இருக்கிறது.
நிழலில் தூங்கும் ஆந்தைகள், தேக்கின் தளிர் பறித்து கசக்கி முகத்தில் பூசிக் கொள்ளும் குரங்குகள், பொன் துகள் என பறக்கும் தும்பிகள், மலர்கள் மொட்டவிழ்ந்து வாசம் தாங்கி வரும் காற்று, தேனடைகளில் பெய்யும் ஆலங்கட்டி மழை என தனித்துவமான காட்சிகள்.

நாவலுக்குள் எத்தனை நம்பிக்கைகள், கதைகள்? முன்பெல்லாம் கற்புக்கரசிகள் வாழ்ந்தார்கள். அவர்களின் பொருட்டு பனை தானே குனிந்து கொடுக்கும். இப்போ காலம் மாறிப் போச்சு. பனை குனியாமப் போச்சு. இப்படி பல கதைகள் நம்பிக்கைகள். பிசாசைக் கூட கெட்டி வைக்கும் நைசாம் அலி , மொல்லாக்காவுக்கு வைத்தியம் பார்க்க ஆஸ்பத்திரி போகிறார். ஊரே வைசூரியில் மாள , மைமூனா அம்மை குத்திக் கொள்கிறாள்.

நாவலுக்கு மிக அழகு இதில் இலங்கும் கொச்சை பாஷை.

”உஷைபாலிகளே ஒன்னி சேருங்கோ” போல .

தனித்தன்மை வாய்ந்த நகைச்சுவை. இந்த நாவலில் அன்றி எங்கும் வாசிக்க கிடைக்காத இடம் பல உண்டு. குறிப்பாக கதகளி வேடம் களையாமல் காலைக் கடன் கழிக்கும் சித்திரம்.

வடிவத்தால், மொழியால், தரிசனத்தால் இந்த நாவல் தரும் அனுபவம் அலாதியானது. ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஒன்பதில் எழுதப்பட்ட நாவல். இன்னும் ஐம்பது வருடம் கழித்து வாசித்தாலும் புதிதாகவே இருக்கப் போகும் நாவல்.

யூமா வாசுகியை இந்த மொழி பெயர்ப்பு சார்ந்து விஜயனுக்கு இணையான இணை படைப்பாளி என்றே சொல்லலாம்.
கடலூர் சீனு

முந்தைய கட்டுரைபயணம்- கடிதம்
அடுத்த கட்டுரைநியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தில்