பனித்துளி கடிதம்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

பனித்துளியின் நிரந்தரம் – கடிதம் வாசித்தேன். தலைப்பே இரண்டே வார்த்தைகளில் ஓர் பெரும் சித்தாந்தத்தை சுட்டுவதை இறுதியில் உணர்ந்தேன். வார்த்தைகளின் பேராற்றல் வியப்பூட்டுகின்றது.

அவ்வாசகரின் கேள்விகள் என் எண்ணங்களுக்கு குரல் கொடுத்தது போல் இருந்தது. மானுட வாழ்வின் காரணத்தை, அர்த்தத்தை தேடிக் கொண்டிருந்த என் மனம், அதன் அர்த்தமின்மையை ஒவ்வோருகணமும் உணரத் தொடங்கி சூனியத்தையே சுட்டுவதாக கண்டுகொண்டது. உயிரியியல் படிப்பின் காரணமாகவோ என்னவோ அனைத்து உயிர்களும் சமம், எல்லாம் ஓரிடத்திலே தொடங்கி ஒன்றை நோக்கியே நகர்கின்றன என்று புலப்பட்டு இதில் மனிதன் மட்டும் எதனால் இவ்வாறாக தன்னை மாறுபடுத்திக்கொண்டு இயற்கையையும் மாற்றிக்கொண்டிருக்கின்றான் என்ற கேள்விகளை என்னுள் எழும்பிக்கொண்டே உள்ளன. இந்த கேள்விகள் என்னை பல தருணங்களில் பெரும் குழப்பங்களுக்கு ஆளாக்கி விடுங்கின்றன..

மாமிசம் சாப்பிடுவதிலிருந்து, எறும்புகளையும் கொசுக்களையும் கொல்வது, பயிருக்கு பூச்சி மருந்து அடிப்பது வரை. அர்த்தமற்ற உலக நடப்புகளின் அன்றாட செயல்கள் பெரும்பாலானவையும் அனைத்து உரையாடல்களும் எண்ண வெளிப்பாடுகளும் இயல்பை திரிப்பதாகவும் மறுப்பதாகவும் மறைப்பதாகவும் தோன்றுகிறது. இதில் பங்கு கொள்ளவும் இயலாமல் விட்டு ஒதுங்கவும் இயலாமல் மனம் மொத்தமும் தடுமாறி பின் அதுனுள்ளேயே வீழ்ந்து அமிழ்கின்றன. உலகவியல் வாழ்விற்கும் இயல்பான இயற்க்கை, தத்துவ வாழ்க்கைக்கும் நடுவில் சிக்கி சிதறிக் கொண்டிருந்தது சிந்தை. உலகியல் வாழ்வின் சுகத்திற்காக மட்டும் செய்யும் செயல்களில் எதிலுமே மன நிறைவு கிட்டுவதில்லை ஆதலால் அவற்றில் மனம் ஒத்து போவதே இல்லை. ஆதலால் உலகவியல் சமுதாவியல் ரீதியில் வெற்றிகள் பேறுகள் செல்வங்கள் பெறாத ஓர் எளிய வறிய ஜீவனாக எந்நாளும் உழன்று, எங்கனமாவது விடுபட வழியைத் தேடித் திரிந்து கொண்டிருந்தேன்.

கிட்டியது வழி இக்கடிதத்தில். தங்களின் பதிலை வாசிக்கும் போழ்து பல்லாயிரம் ஆண்டுகளாக உயிர் சிந்தித் தேடிக் கொண்டிருந்த வினாவிற்கு மிக பழக்கமான மரியாதைக்குரியவர் அவ்விடையாகவே வாழ்ந்து காட்டி, அதற்கான அர்த்தங்களை அள்ளிக் கொடுத்தது போல் உணர்கிறேன். மிக்க நன்றி.

என்னை முழுமையாக ஆட்கொண்டு பிற உயிர்களுக்கு பயனளிக்கும் செயல் யாதென நெடுங்காலமாக தேடிக்கொண்டு இருக்கிறேன். என்னையும் என் கலையையும் கண்டறியும் பயணம் தொடர்கிறது, இனி அதுவும் ஓர் அனுபவமாக.. அற்ப நாட்களில், அற்புத வாழ்க்கையாய் இவ்வழகிய உலகில். நன்றி.

– சாலினி

அன்புள்ள சாலினி

அந்தவினா ஒரு பருவத்திற்குரியது. அதை நாமே எளிதில் கடந்துவிடுவோம். அது எந்த அளவுக்கு முன்னரே நிகழ்கிறதோ அந்த அளவுக்கு நல்லது. அதை ஒரு பாவனையாக, நடிப்பாகக் கொண்டுவிட்டோம் என்றால் கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய அடையாளமாக ஆகிவிடும். நம்மால் அந்தச்சிறையில் இருந்துவெளிவரவே முடியாமலாகிவிடும்

இந்தவகையான குறிப்புகளுக்கு உள்ள பயன் என்னவென்றால் அதைச் சொல்லிக்காட்டுவதுதான். கொஞ்சம் நிதானித்தால் அதையே உணர்ந்துகொள்ளமுடியும்

ஜெ

முந்தைய கட்டுரைநான்கு வேடங்கள்
அடுத்த கட்டுரைடொரெண்டோ உரைகள்