‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 32

பகுதி ஆறு : மணிமருள் மலர் – 5

திருஷ்டத்யும்னன் சொல்சூழ்ந்த சித்தத்துடன் சூதனின் கலைந்த குழலையும் அசையும் குரல்வளையையும் நோக்கி நின்றான். அவனில் குடியேறிய அந்த அறியாத தேவன் அச்சுறுத்தினான். அனைத்தையும் அருகிருந்து காண்பவன். மானுடர் சிந்தும் அனைத்து உணர்ச்சிகளையும் அந்தந்த கணங்களிலேயே அள்ளி வைத்துக்கொள்பவன். அந்த நேரத்தில் அவனைச்சூழ்ந்திருந்த அத்தனை பொருட்களிலும் மின்னும் விழிகள் அவர்களுடையவை. வாழும் அனைத்தும் மண்ணிலும் சூதர் சொல்லிலும் இறுதியில் சென்று படிகின்றன. மண்ணில் விழுபவை முளைக்கின்றன. உப்பாகி முளைப்பவற்றுக்கு உணவாகின்றன. தண்டுகளில் இலைகளில் தளிர்களில் மலர்களில் கனிகளில் நிறைந்து மீண்டும் எழுகின்றன.

“அவர் சொற்கள் எப்பொருள் கொண்டவை என்பதை எவரறிவது? நாம் விரும்பும் பொருளை அவற்றில் அள்ளிக் கொண்டிருக்கிறோம். அள்ள அள்ளக்குறையாத சொல் உண்டு. சொல்லில் அள்ள அள்ளப்பெருகும் செயல்கள் கொண்டவர் அல்லவா அவர்?” என்றான் சூதன். “புடவி சமைக்கும் பெருங்கனல் அன்றி எவர் சொல்லமுடியும் ஏனென்றும் எதற்கென்றும் இவ்வண்ணம் இனியென்ன என்றும்?” சூதன் பாடினான். “அன்றுகாலை அவள் முன் நின்றது ஆடிப்பாவை ஒன்று. ஆடியின் ஆழம் அவளறிந்திருக்கவில்லை. அகல்பவர்களைச் சுருக்கி அணுவாக்கி உண்ணும் ஆடி அனைவருடனும் தீரா ஆடலொன்றுக்குள் இருக்கிறது. ஆடுவதனால் அது ஆடி என்றறிக!”

பாமா அவன் குழலோசையை கேட்டாள். எழுந்தோடி சாளரக்கதவை ஓங்கி அறைந்தாள். மாறிமாறி கதவுகளை ஓசையுடன் இறுகமூடி உள்ளே இருளில் முழங்காலில் முகம்சேர்த்து அமர்ந்தாள். அவளுக்குள் இருந்து எழுவதுபோல ஊறி அறைக்குள் நிறைந்தது குழலின் இசை. பெரும்பாலைப்பண். ‘கன்னி, கன்னல் சொல்லழகி, கருவிழி கொண்டவளே, காலையென புலர்க! இங்கு உன் விழியொளி நிறைக! உன் இதழ்ச்செம்மை எழுக! உன் மூச்சென தென்றல் வருக!’ எழுந்து சென்று கதவை திறக்கப்போனவள் ‘சீ’ என தன்னை இகழ்ந்து திரும்பி வந்தமர்ந்தாள். உடலை இறுக்கி இறுக்கி அட்டைச்சுருளென ஆனாள். மண்ணில் புதைந்து ஆழத்தில் அடங்கிவிடவேண்டுமென விழைந்தாள். சிறுமியாகி குழவியாகி கருவாகி அன்னை வயிறுபுகுந்துவிடவேண்டுமென்பதுபோல தன்னை உட்கிக்கொண்டாள்.

பின்பு அறிந்தாள், பலநூறுமுறை அவள் எழுந்தோடி வாயிலைத் திறந்து ஈரம் படர்ந்த முற்றத்தில் ஓடி அக்குடிலை அணுகி அவன் கால்களில் விழுந்துவிட்டிருப்பதை. அவன் ஒளிரும் கால்நகங்களை முத்தமிடுவதை. அவன் மடியில் முகம் புதைத்து மெய்சிலிர்ப்பதை. ‘தோற்பதில்லை. எவர்முன்னும் பணிவதில்லை. அன்னையரே, என்னை காத்தருள்க!’ என்று அமர்ந்திருந்தாள். மூதன்னையர் அவளைச்சூழ்ந்து நின்று புன்னகைத்தனர். ஒரு கணத்தில் எழுந்தோடி கதவைத்திறந்து முற்றத்தில் பாய்ந்து குடிலை அணுகி குழல்சூடிய செவ்விதழும் இசைநிறைந்த கருவிழிகளுமாக அமர்ந்திருந்த அவன் முன் சென்று நின்று முலைவிம்ம மூச்சிரைக்க குழல் அலைய விழி சோர நின்றாள். அவன் குழல் தாழ்த்தி அவளை நோக்கி புன்னகைத்தான். அப்புன்னகையும் இசையென ஒலிக்கக் கேட்டாள்.

அவன் “வருக என் அழகி” என்றான். அக்கணம் அச்சொல்லை அன்றி பிறிது எதையும் சொல்லலாகாதென்றறிந்தவன். “என்னை விட்டு போய்விட்டீர்கள் என எண்ணினேன்” என குழறினாள். “உன் சொல் என்னை கட்டுகிறதே” என்றான். “என் சொல்லை மீறாதவரா நீங்கள்?” என்றாள். “ஆம்” என்று சொல்லி புன்னகைத்து “அது எப்போதும் ஆணை அல்லவா?” என்றான். “ஆணையேதான். மீறலாகாது” என்றாள். அவன் நகைத்து “இல்லை, உன் சொல்லை மீறவில்லை” என்றான். “இங்கிருந்து செல்லலாகாது” என்றாள். “ஆம், செல்லப்போவதில்லை” என்றான். “என் தலைதொட்டு சொல்லளியுங்கள்” என்றாள். தலையில் கைவைத்து “நீ ஆணையிடாது எதையும் செய்யப்போவதில்லை” என்றான். “எனக்கென மட்டுமே இரு” என்றாள். “உனக்கென மட்டுமே இங்கிருப்பேன்” என்றான்.

அவள் மலர்ந்து களிச்சிறுமியென்றாகி சிரித்து “இன்று என் கரங்களால் உண்ணுங்கள்” என்றாள். “நான் சமைத்த அமுது உங்களுக்கு இன்று.” அவன் “உன் கை தொடுவதெல்லாம் அமுதே” என்று அவளுக்கென்றே ஒலிக்கும் குரலில் சொன்னான். சிறு துள்ளலுடன் இல்லத்திற்குள் ஓடி செவிலியன்னையிடம் “அன்னைய, நான் அவருக்கென அமுது சமைக்கிறேன்” என்றாள். செவிலியும் ஆய்ச்சியரும் விழிகளை நோக்கி புன்னகைத்தனர். “நீ கலம் தொட்டு சமைத்து காலம் எவ்வளவு ஆகிறது என்று அறிவாயா?” என்று ஒருத்தி கேட்டாள். “சமைக்கட்டும். இன்று அவள் சமைப்பது எதுவும் அவனுக்கு அமுதே” என்றாள் இன்னொருத்தி. “அமுதில் இனிப்புக்கு பதில் துவர்ப்பு அமைய முடியுமா?” என்று இன்னொருத்தி கேட்டாள். “அமுதென்பது உண்ணப்படுவதல்ல உணரப்படுவது” என்றாள் இன்னொருத்தி.

அவளைச் சூழ்ந்து நகைப்புகள் ஒலித்தன. வீம்புடன் தலை திருப்பி “அடுமனை புகுவதும் அமுது சமைப்பதும் எனக்கொன்றும் புதியதல்ல. இங்கு நான் வந்தது குறைவென்றாலும் பல்லாயிரம் முறை அவனுக்கென இவ்வமுதை சமைத்திருக்கிறேன். அவன் உண்டு எஞ்சிய எச்சத்தை என் உடலெங்கும் சுவை துலங்க உண்டிருக்கிறேன். விலகுங்கள்” என்றாள். அவள் கைதுடிக்க யாழ் மீட்டும் சூதனைப் போல, அவ்விசைக்கு நடமிடும் விறலியைப் போல இயங்குவதை அவர்கள் கண்டனர். “அவள் உள்ளம் கொண்ட இசை அக்கைகளில் உள்ளது” என்றாள் ஒருத்தி. “என்னடி இது, நடனமிட்டபடியும் ஒருத்தி சமைக்க முடியுமா?” என்றாள் இன்னொருத்தி. “கைகளால் இங்கு சமைக்கிறாள் உள்ளத்தால் எங்கோ எதையோ ஆள்கிறாள்” என்றார்கள்.

ஏழு வகை இன்னமுதை எளிதில் சமைத்துவிட்டாள். அதன் மணமெழுந்தபோது ஆய்ச்சி ஒருத்தி “இத்தனை இனிய அமுது இங்கு எவராலும் சமைக்கப்பட்டதில்லை, ஐயமேயில்லையடி” என்றாள். “ஆயிரம் முறை அவள் சமைத்த மணம் இங்கெழுந்திருக்கிறது. நாமறிந்ததில்லை போலும்” என்றாள் இன்னொருத்தி. மாலினி ஓடிவந்து “யாரடி சமைத்தது? இல்லமெங்கும் நறுமணமெழுகிறதே” என்றாள். ”உன் மகள் சமைத்தாள் அரசி, இது அவள் கை கனிந்த அமுது” என்றாள் மஹதி. ”அவளா? பொய் சொல்லாதே. பாலை பொங்கவிட்டு விழி மயங்கி அமர்ந்திருக்கும் பேதையல்லவா அவள்” என்றாள் மாலினி. “மகளை அறிந்த தாய் என எவருமில்லை. அவர்கள் தங்கள் மகளை தாங்களே இயற்றிக்கொள்கிறார்கள்” என்றொருத்தி சொல்ல “போடி, எனக்குத் தெரியாதா இவளை? இவள் கைகள் மலர்கொய்யவே நோகும்” என்றாள் மாலினி. மஹதி “அரசி தன் இனியவனுக்கென சமைக்கும் பெண் கைகளில் உள்ளம் மலர்ந்தவள். வசந்தத்தில் மலரெழுந்த மரக்கிளைகள் போன்றவை அவை” என்றாள்.

மாலினி எழுவகை அமுதையும் ஒவ்வொன்றாக நோக்கி அவள்தான் சமைத்தாளென்றுணர்ந்து திரும்பி “என் கண்ணே, இத்தனை நாள் இவ்வினிய அமுதையா உனக்குள் வைத்திருந்தாய்?” என்றாள். நாணி முகம் சிவந்து விழி திருப்பி பாமை அவ்விடம் விட்டு நீங்கினாள். ஆயர் மன்றின் திண்ணையில் தோழருடன் களியாடி அமர்ந்திருந்த அவனை அணுகி ”இனியவரே! அமுது கொள்க!” என்றாள். திரும்பி நோக்கிய அவன் அங்கு கண்டது அரசியை அல்ல, யாதவ குல கொடியையும் அல்ல, மண்ணில் எழுந்த முதல் ஆணுக்கு துணையென நின்ற முதல் பெண்ணை. கேளுங்கள், பெண் சூடிய அணிகலன்கள் கோடி. பொன்னால் பூவால் சொல்லால் சித்தத்தால். அணிகளால் அழகு கொள்கிறாள். அணிகளைந்து பேரழகியாகிறாள்.

புன்னகையுடன் அவன் சொன்னான் “அவ்வினிய அமுது என் உள்ளத்தை இனிதாக்கட்டும். என் மூதாதையர் அனைவருமே இவ்வினிமையை உண்ணட்டும்.” நாணிச் சிரித்து அவள் உள்ளே சென்றாள். அவன் நீராடி வர தான் நீராடி புத்தாடை அணிந்து புது மலர்சூடி வந்து ஏழு பொற்கலங்களில் அவ்வமுதை அளித்தாள். பாலமுது, தேனமுது, அக்கார அமுது, பழஅமுது, இன்கிழங்கமுது, தளிரமுது, மலரமுது என ஏழு. சிற்றிலை கோட்டிய சிறுகரண்டியால் ஒவ்வொன்றாய் அள்ளி வாயிலிட்டு கைக்குழந்தை என உடலெங்கும் சுவை தெரிய, தலை அசைத்து முகம் மலர்ந்து உண்டான். விழிதூக்கி அவளை நோக்கி சிரித்து நன்று என்று உணர்த்தினான். அவன் உண்ண உண்ண மடி முட்டிக் குடிக்கும் கன்றை நாவால் நக்கும் அன்னைப் பசுவென நோக்கி நின்றாள். அவன் உண்ணுவது தன்னை அள்ளித்தான் என்றுணர்ந்தாள். தன் உடலை அவன் முன் கிடத்தி உண்ண அளித்தது போல் உண்ணுக உண்ணுக என் இறைவா என்று அவள் உள்ளம் பூத்தது.

உண்டு எழுந்து அவன் கை கழுவச் செல்ல பின்னால் சென்றாள். அவனுக்கு மரக் குடுவையில் இருந்து இளவெந்நீரை ஊற்றினாள். அவன் கை கழுவ அதை பற்றி தன் கையால் மேலும் கழுவி விட்டாள். அவன் விழி தூக்கி அவளை நோக்க புன்னகைத்து “எண்ணைப் பிசுக்கு” என்றாள். “ஆம், முற்றிலும் கழுவ வேண்டாம். இன்றிரவு என் கையிலிருக்கட்டும் இந்நறுமணம்” என்றான். அவன் இதழோரம் இருந்த உணவுத்துளியை தன் கையால் துடைத்து “சீராக உண்ண இன்னும் கற்கவில்லையா?” என்றாள். அவன் அவள் மேலாடையில் கைதுடைத்தபோது எழுந்த உவகையை அவளே வியப்புடன் கண்டாள்.

திரும்பி உள்ளே செல்லும்போது ஆய்ச்சியர் விழித்து நோக்கா ஒரு தருணத்தில் அவள் இடை வளைத்து சுவர்மேல் சாய்த்து இதழ் முத்தம் ஒன்றை அளித்தான். பின்னாலிருந்த கூடை சரிய அள்ளிப்பற்றி “அய்யோ ” என நாணி அவள் உடல் திருப்ப அவள் இட முலை அவன் மார்பில் உரசிச் சென்றது. உளம் விழைந்ததை அறியாதெனச் செய்யும் கலை உடலறிந்திருப்பதை அவள் அக்கணம் உணர்ந்தாள்.

அவன் அவள் காதில் குனிந்து “உன் உடல் சொன்னதை அறிந்தேன்” என்றான். விழிதூக்கி சினந்து “எதை?” என்றாள். “இதை” என்று இடையில் கைவைத்து இறுக்கி அவள் இதழ்களிலும் கன்னங்களிலும் கழுத்திலும் வெம்மை கனிந்த இதழ்களால் கோடைவெம்மழைத் துளிகள் விழுவதுபோல் முத்தமிட்டான். இளவெம்மை தொட்ட முத்தம் மறுகணமே குளிர்ந்து ஈரமாவதை அறிந்து உடல் மெய்ப்புகொள்ள கண்மயங்கினாள். தளர்ந்து அவன் மார்பில் தலை சாய்ந்த அவள் குழலை கையால் பற்றி முகத்தை மேலே தூக்கி இதழ்சுவைத்து விலகி பெருமூச்சுவிட்டு விழி நோக்கி சொன்னான் “இனியது இவ்வமுது.”

அவள் “இதை முன்பு உண்டதில்லையா?” என்றாள். “நெடுநாளுக்கு முன் உன் பெயரை அறிந்தபோது பல கோடி முறை அப்பெயரை என் வாயால் சொல்லிச் சொல்லி இவ்வமுதை ஒவ்வொரு துளியாக உண்டிருக்கிறேன்” என்றான். “என் பெயரா? எளிய பெயரல்லவா அது?” என்றாள். “காதல் கொண்டவனுக்கு கன்னியின் பெயரன்றி அமுது எது?” என்றான். “ஆம்” என்றாள். “ஆனால் உங்கள் பெயர் எனக்கு வெங்கனல். எந்நெஞ்சில் என்றும் அது எரிந்து எரிந்து இறங்கிக் கொண்டிருந்தது. ஒரு போதும் எந்நாவால் அதை சொன்னதில்லை” என்றாள் அவள். “ஏன்?” என்றான். “ஒரு முறை சொன்னால்கூட அது என் இல்லம் மீது பற்றும். என் புரங்களை எரிக்கும். சாம்பலென என்னை இங்கு எஞ்சியிருக்கச் செய்யும். இளையோனே, அது அங்கிருக்கட்டும்” என்றாள்.

“ஒரு முறை அதை சொல்” என கொஞ்சினான். “மாட்டேன்” என்றாள். “சொல், என் கண் அல்லவா? என் நெஞ்சமர்ந்த தேவி அல்லவா?” அவள் விழி திருப்பி “இப்போதல்ல. பின்னர் ஒருநாள். அன்று என் கொடிவழியில் பிறக்கவிருக்கும் என் பெயர்மைந்தரின் கருவில் நீ நிறைந்திருப்பாய். அன்று அச்சொல் ஒரு புகழ்க்கொடியென என் நகர்களின் மேல் பறக்கும்” என்றாள். அப்போது அவள் விழிகள் சுடர்விட்டன. பெண்ணென வந்த மாயம் களைந்து பெருந்திருவென அங்கு நின்றிருந்தாள்.

அவள் விழிகளையே நோக்கி “ஆயிரம் மூதன்னையர் குடி கொண்ட ஆலய முகப்பு அல்லவா உன் விழி?” என்றான் அவன். மூதாய்ச்சி ஒருத்தி அப்பால் வந்து நின்று தொண்டை கமறும் ஓசையிட்டாள். “அய்யோ” என திடுக்கிட்டு அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளி ஓசையிட்டாள். “ஒவ்வொரு முறையும் நீ அஞ்சும் இப்பாவனையைப் போல இனிதாவது ஒன்றுமில்லை” என்றான். “அஞ்சுவது உன் இயல்பல்லவே?” என்றான். “இது அச்சமில்லை, நாணம்” என்றாள். “நாணுவதும் உன் இயல்பல்ல” என்றான். சிரித்து “ஆம். நாண நான் இனிமேல்தான் கற்க வேண்டும்” என்றாள். “கற்க வேண்டியதில்லை. என் துணைகளில் நாணிலாத ஒருத்தி இருக்கட்டும்” என்றான்.

விழிகூர்ந்து “துணைகளிலா?” என்று சீறினாள். “எத்தனை துணை அமைந்தாலும் அவர் அனைவரும் உன் ஆடிப்பாவைகளே” என்றான். “இன்று செல்கிறீரா?” என்று அவள் கேட்டாள். “நீ ஆணையிடு செல்கிறேன்” என்றான். அவள் அவனை கூர்ந்து நோக்கி “நான் மறுத்து ஆணையிட்டால் செல்ல மாட்டீரா?” என்று கேட்டாள். “ஆணை! உன் சொல்லின்றி செல்லமாட்டேன்” என்றான். அரசி அவன் நீல விழிகளில் சில கணங்கள் நோக்கிய பின் சொன்னாள் “இளையோனே! உங்கள் வெற்றியும் புகழும் அன்றி நான் விழைவதொன்றில்லை. இம்மண்ணில் விண் மாரியும் மண் பொறையும் கடல் எல்லையும் கதிர் ஒழுங்கும் காற்றின் கணக்குகளும் பிழைக்கலாம். உம் சொல் பிழைக்கலாகாது. சென்று ஜாம்பவதியை கொண்டு வருக! அவளுக்கென இங்கிருக்கும் நான் வைக்கும் மலர் வரிசை.”

சூதன் யாழை மீட்டியபடி விழிசரித்து அமர்ந்திருக்க சாத்யகி தன் இடையிலிருந்த பொன்முடிச்சை எடுத்து எண்ணாமல் அவன் காலடியில் வைத்து வணங்கினான். அவன் இடக்கையால் சாத்யகியின் தலையைத் தொட்டு வாழ்த்தினான். திருஷ்டத்யும்னன் வணங்க அவன் தன் குருதிபடிந்த விழிகளைத் தூக்கி “மூடா, மண்ணில் எவரும் பேறெனக்கொள்ளும் பெருங்காதலைப் பெற்றவன் நீ. அந்தப் பூமரத்தடியில் அமர்வதன்றி வேறென்ன வேலை உனக்கு?” என்றான். திருஷ்டத்யும்னன் திகைத்து “ஆம், அவ்வண்ணமே ஆசிரியனே” என்றான். யாழை எடுத்துக்கொண்டு சூதன் பொற்கிழியை திரும்பிப்பாராமல் நடந்து சென்றான்.

திருஷ்டத்யும்னன் “பொன்” என்றான். “அவர் எவரென கேட்டு கொடுத்தனுப்பிவிடலாம்” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் பெருமூச்சுவிட்டான். சாத்யகி புரவியில் ஏறிக்கொண்டு மெல்ல நடைசெலுத்த திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான். சாத்யகி இருமுறை திருஷ்டத்யும்னனை திரும்பிப்பார்த்தான். அவனை எவரோ என அவன் மீள நோக்கினான்.

துவாரகையின் தெருக்களில் மலர்ந்த உள்ளத்துடன் நகை விரிந்த முகத்துடன் முகிலென தவழ்ந்த புரவி மேல் அமர்ந்து சென்றனர். புரவிகளின் குளம்படியே அவர்கள் உள்ளத்தின் தாளமாக இருந்தது. நகரம் மிதக்கும் இறகுகளால் ஆனது போல விரைவழிந்து ஓசையற்று அழகு கொண்டிருப்பதாக திருஷ்டத்யும்னன் எண்ணினான். சிறகு முளைக்காத ஒருவரும் அங்கில்லையென, அத்தனை மாளிகைகளும் அடியிழந்து மிதக்கின்றன என்பதாக, காலுக்கடியிலும் வானமே உள்ளது என்பது போல நகரெங்கும் நெய் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. மாளிகைக் குவை மாடங்கள் செவ்வொளியில் மென்பட்டு சரிந்த அழகிய இளமுலைகளென ஒளிவிட்டன.

சாளரங்களுக்குள் பட்டுத்திரை தொங்கியது போல் செவ்வொளி தெரிந்தது. திறந்த கதவுகள் வழியாக திரைச்சீலை சரிந்ததென விழுந்து கிடந்தது. மான்கண் சாளரங்களின் துளைகள் வழியாக நீள்சட்டங்களாக நீண்டு இருண்ட வானில் நீட்டி நின்றது. வெண்புரவிகள் ஒளியில் அனல் பற்றி எரிந்து இருளில் அணைந்து மறைந்தன. பெண்டிர் குழலின் மயிர்ப்பிசிர்கள் பொன்னாலானவை என அசைந்தன. நுதல் வளைவிலும் மூக்கின் குழைவிலும் கன்னக்குவையிலும் பொன்னொளி வழிந்தது. குவிந்த சிற்றிதழ்களில் இருந்த ஈரத்தில் நெருப்பே ஈரமெனத்தெரியும் விந்தை!

“இவர்கள் விறலியர் அல்ல, வணிகர் பொருள் கொள்ளும் பெண்கள்” என்றான் சாத்யகி. “ஆனால் இங்குள்ள பெண்கள் அப்பொருள் கொள்வதற்கென காதல் கொள்வதில்லை, அவர்கள் கொண்ட காதலுக்காக பொருள் கொள்கிறார்கள்.” ஒவ்வொரு விழியிலுமிருந்த பித்தை நோக்கி நோக்கி சென்ற திருஷ்டத்யும்னன் திரும்பி “புவியில் அழகாலும் காதலாலும் அடையும் பித்தன்றி பொருள் உள்ள ஏதேனும் உள்ளதா?” என்றான். சாத்யகி “இல்லாதிருக்கலாம். இருக்கலாம். ஆனால் இக்கணம் இது ஒன்றே உண்மையெனக் காட்டுகிறது இப்புடவி” என்றான்.

கீழ்நகர்ச் செண்டுவெளியில் பெருங்களியாட்டம் நடந்து கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான கந்தர்வர் விரிந்த மணிமுடிகளும் பலவண்ண முகமூடிகளும் அணிந்து பொய்க்கரங்கள் எழுந்த உடல்களுடன் சுழன்று சுழன்றாட அருகே மின்னும் பட்டாடைகளும் பொன்னணிகளும் அணிந்த சேடியர் நடமிட்டனர். பொன் பூத்த காடு. அனல் கொண்ட காடு. தென்றல் சூழ்ந்து களிவெறிகொண்ட காடு. விழி விரித்து அள்ளிய காட்சிகளால் உள்ளம் நிறைய அங்கு சொல் மறந்து நின்றிருந்தான் திருஷ்டத்யும்னன்.

கந்தர்வர்கள் ஒவ்வொருவராக இருளுக்குள் இருந்து ஒளிபடர்ந்த அரங்குக்கு வந்து கொண்டிருந்தனர். ஏழடுக்கு மணிமுடியணிந்த, செந்நிற முகம் கொண்ட, சினத்தின் இறைவனான ரௌத்திரன். மூன்றடுக்கு மணிமுடியணிந்த பொன்னிற முகம் கொண்ட காதல் கனகன். பச்சை முகம் கொண்ட வளமுறையும் ஹரிதன். வெண்முகம் கொண்ட அறச்செல்வனாகிய தவளன். நீலமுகம்கொண்ட தாமஸன். கரியமுகம் கொண்ட மகாபயன். கந்தர்வர் வான் கனிந்து துளித்துச் சொட்டி வந்திறங்கினர். அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது மானுட உணர்வுகளின் விழித்தோற்றப்பெருக்கு.

கீழிருந்து வந்த குளிர் காற்று நகரை மாற்றத் தொடங்கியிருப்பதை செல்லச் செல்ல சாத்யகி உணர்ந்தான். மாலையில் நீராவியும் வெக்கையும் கொண்டிருந்தது கடற்காற்று. உப்பு மணம் நிறைந்து நனைந்திருந்தது. அது தொட்ட இடங்களில் பளிங்குப் பரப்புகள் உப்புப் படலத்துடன் வியர்த்து பளபளத்தன. இரவில் அது தன் நீராவியை துளிகளாக்கி இலைப் பரப்புகளிலும் சுவர் விரிவுகளிலும் பூசிவிட்டு எடையழிந்து எளிதானது போல் தோன்றியது. கடலோசை எழுந்து மிக அண்மையென நகரைச் சூழ இருளுக்குள் நாற்திசையும் கடலே சூழ்ந்து அதன்மேல் பெரும் கலம் போல துவாரகை மிதந்து கொண்டிருப்பதுபோல உளமயக்கு ஏற்பட்டது.

காற்றிலிருந்த வெம்மைக்கு இறகைப்போல் வருடிக்கொடுக்கும் தண்மை கொண்டிருந்த கடற்காற்று சுழன்று சுழன்று குளிர்ந்து உடலை நடுக்கத் தொடங்கியது. வெற்றுடல்கள் புல்லரித்து மெய்ப்புப் புள்ளிகள் கொண்டன. சால்வைகளை போர்த்திக்கொண்டும் தலையில் காதைச்சுற்றி கட்டிக்கொண்டும் சென்றனர் துவாரகை மக்கள். ஆனால் ஃபாங்கமும் சிவமூலிகையும் மதுவும் அருந்தியவர்கள் எதையும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் இருக்கும் உலகில் அவர்களின் எண்ணங்களே துவாரகையாக காற்றாக வானமாக நிரம்பியிருந்தன.

“குளிரத் தொடங்கி விட்டது” என்றான் சாத்யகி. “இந்நகரம் நிசிக்குப் பிறகு குளிரத் தொடங்கும். விடியலில் நடுக்கும். முன்னிரவில் வெறும் வெளியில் படுப்பதே இனிது. இந்நேரத்தில் எழுந்து அறைக்குள் சென்றாக வேண்டும். தவறாது விடியலில் இளமழை பொழியும்” என்றான். “எல்லா பருவத்திலுமா?” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். “ஆம். அனைத்துப் பருவங்களிலும். இந்நகர் கடலிலிருந்து ஒரு கைப்பிடி மழையை ஒவ்வொரு நாளும் அள்ளி எடுத்துக் கொள்கிறது” என்றான் சாத்யகி. நகரின் தென்மேற்கு முனையில் அமைந்திருந்த கோட்டை முனம்பை அடைந்து புரவியை நிறுத்திவிட்டு சாத்யகி இறங்கினான். “இங்கிருந்து கடலை நெடுந்தொலைவு நோக்க முடியும். இவ்வேளையில் கலங்கள் கிளம்பத் தொடங்கியிருக்கும்” என்றான்.

அவன் மடிந்து மடிந்து சென்ற கோட்டைப் படிகளில் ஏறத்தொடங்க திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான். குறுகலான படிக்கட்டு வானிலிருந்து விடப்பட்ட நூலேணி போல் இருளில் அப்படிகளில் மட்டுமே விழுந்த ஒளியில் விழிமயக்களித்தது. பன்னிரண்டாவது அடுக்கு வரை காவலர் எவருமில்லை. பன்னிரண்டாவது அடுக்கில் ஒரே ஒரு சதக்னி அருகே மூன்று காவலர் இருந்தனர். ஒருவனே விழித்திருந்தான். மற்ற இருவரும் கள் மயக்கில் துயின்று கொண்டிருந்தனர். விழித்திருந்தவன் திருஷ்டத்யும்னனையும் சாத்யகியையும் திரும்பிநோக்கி எழுந்து ஓசையின்றி தலை வணங்கினான். அவர்கள் அவனை நிழல்கள் என கடந்துசென்றனர்.

சதக்னிக்கு மேலே இருந்த சிறிய கல் அறையில் நான்கு பக்கமும் திறந்த சாளரங்கள் வழியாக குளிர் காற்று தூக்கி கீழே வீசிவிடுவது போல பீரிட்டுக் கொண்டிருந்தது. அங்கு சென்று நின்றபோது நான்கு பக்கமும் விண்மீன்கள் மின்னும் வானுக்கு நடுவே நிற்பது போல திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். மிக அருகே என வியாழன் இளநீல நிறத்துடன் கரும்பட்டில் பதிக்கப்பட்ட வைரம் போல தெரிந்தது. ஒவ்வொரு விண்மீனையாக சுட்டுவிரல் தொட்டு தெறித்து விளையாட வேண்டும் என்று அவா எழுந்தது. கால் கீழே மிக ஆழத்தில் துவாரகையின் பெரும் துறைமுகம் பல்லாயிரம் எரிவிழிகள் திறந்த கலங்கள் சேர்ந்து நீண்டிருந்தது. மின்மினிகள் அடர்ந்த மரக்கிளை என, ஆயிரம் பல்லாயிரம் விழிகள் திறந்த அபூர்வ மீன் என, பற்றி எரிந்து பின் கனலாகிக் கிடந்த கரிவிறகென.

அத்தனை தொலைவில் இருக்கையில் துறைமுகத்தின் பல்லாயிரம் ஒலிகள் இணைந்த முழக்கம் பொன்வண்டு ரீங்காரம் போல கேட்டது. மறுபக்கம் துவாரகையின் சுழல் தெருக்களின் விளக்கொளிச்சரம் வளைந்து வளைந்து செல்ல, அதில் வண்டிகளின் விளக்குகள் எரிநீர் என ஒழுகிக் கொண்டிருந்தன. மாட முகடுகளில் இருந்த விளக்குகள் விண்மீன்களுடன் கலந்துவிட்டிருந்தன. தொலைவில் எழுந்த பெருவாயிலுக்கு மேல் சுடர்ந்த மீன்நெய் விளக்குகள் ஏழு விண்மீன்கள் நடுவே முழக்கோல் மீன்தொகை தெரிவது போல் தெரிந்தன. அக்காட்சிகளால் தன்னை இழந்து எங்கோ என நின்றிருந்தான் திருஷ்டத்யும்னன். இது மானுடர் பிறிதொரு முறை நோக்கமுடியாது மண்ணில் மலர்ந்து விடிவதற்குள் அழியும் விண்ணவர் நகர். ஒரு முறையே பூத்து வாடும் பெருமலர். முகிலரசி முலை சூடிய வைர மணியாரம். அலைகடல் காதிலணிந்த முத்து.

தாள முடியாத உள எழுச்சியால் நடுங்கியபடி நின்றிருந்தான். பிறிதொருமுறை இத்தகைய பெருநகர் இம்மண்ணில் நிகழாது போய்விடலாம். பல்லாயிரம் ஆண்டுகள் தலைமுறைகள் இந்நகரை தங்கள் சிந்தையில் மீள மீள எழுப்பிக் கொண்டிருக்கலாம். சொற்களில் மட்டுமே இது வாழலாம். கற்பனைகளால் பலகோடி முறை தீட்டி எடுக்கப்படலாம். இக்கணம் இது நின்றிருப்பதே இறையருளால் என்றிருக்கலாம். இங்கிருக்கும் ஒவ்வொரு விளக்கும் விண்ணவரால் வாழ்த்தப்பட்டதாக இருக்கலாம். இதிலொரு துளியென ஆவதே அருளென்றிருக்கலாம். ஒரு கணம் அலையென வந்து அறைந்து, குளிர மூடி நடுங்க வைத்து நுரை பரப்பாகி பின்னகர்ந்த எண்ணமொன்றால் அவன் விழி நிறையப்பெற்றான்.

முந்தைய கட்டுரைஅசைவும் குரலும்
அடுத்த கட்டுரைஆரோக்யநிகேதனம்- சௌந்தர்