மாகாவில் திரு ஜெயமோகன் சொற்பொழிவு
ஒரு திருமண மண்டபம் போல் ஜோடனை செய்யப்பட்டிருந்த அரங்கு. அதற்கேற்ப இருவர் அமரும் மேடை. எல்லோரும் வந்துவிட்டார்களா என்ற விசனத்துடன் அங்குமிங்கும் நடைபயிலும் மணமகளின் தந்தையார் போல் நீண்ட ஜிப்பாவில் கையில் பொன்னாடையுடன் மாகாவின் ஒருங்கிணைப்பாளர் இரகுராமன் ஒருபக்கம். சிற்றுண்டியுடன் நல்ல வரவேற்பு மறுபக்கம். கையில் அழைப்பிதழ் போன்ற தமிழ்த்தாய் வாழ்த்து வேண்டியவருக்கு நான் விநியோகம் செய்து கொண்டிருந்தேன். கோயில் குருக்களும் அருகிலேயே இருந்தார்.
‘என்ன நடக்க இருக்கிறது இங்கே, கல்யாணமா? கருத்தரங்கா?’ என்று உள்ளே வந்தோருக்கு ஓர் ஆச்சர்யம்.
கங்குலும் பகலும் சரிசமமாய் ஒரு நாளின் நேரத்தைப் பகிர்ந்து கொள்ளும் கோடைக்கால உச்சத்தை(Summer Solstice) உள்ளுணர்த்துவது போல் அறமும், அறமல்லாததும் இணைந்து கிடக்கும் இந்நாளில், அறத்தைப் பற்றி உரையாற்ற வந்திருந்தார் எழுத்தாளர் ஜெயமோஹன்.
நீராரும் கடலுடுத்த நிலமடந்தையின் திருமுக மண்டலமாகிய பாரத தேசத்தின் மக்கள் வேறொரு நாட்டில் வந்தேறியிருந்தாலும், அம்முகத்தின் திலகமெனத் திகழும் தமிழ் மொழியின் நறுமணத்தை மறவாமல் தம்முடனே ஏந்திவந்த வகை சொல்லும் முறையாக, ‘தமிழ்த்தாய் வாழ்த்தினை’ முதன்வைத்து நிகழ்ச்சியைத் தொடங்கினர்.
மோகனைப் பற்றி மோகன் என்னும் வகையில் ஜெயமோகனை அறிமுகம் செய்தார் உள்ளூர் மோகன்.
ஒன்றும் தேவும் உலகும் யாதுமில்லா அன்று, நான்முகனையும் படைத்திராத அன்று, தனது நாபியில் கமலம் இல்லாமல் எழுந்தருளியிருக்கும் திருவாட்டாறு எம்பெருமானின் அரவணைப்பள்ளி கொண்ட திருவுருவத்தைத் தம் இளமைக் காலத்தில் தாயின் அரவணைப்பிலிருந்து கண்டு களித்ததின் தாக்கம் இவரை ‘விஷ்ணுபுரம்’ என்ற புதினத்தை எழுத வைத்தது. இந்தத் திருவுருவத்தின் அமைப்பினைப் பின்புலமாகக் கொண்டு பிற்காலத்தில் எழுப்பப்பட்டதுதான் திருவனந்தபுரம் கோயில். இங்கு அண்மையில் கண்டெடுக்கப்பட்டக் கருவூலத்துச் செய்தியின் பின்னணியில் தொடங்கியது ‘அறத்தின்’ அறிமுகம்.
‘அறம்’ எனப்படுவது யாதெனக் கேட்பின், அது ஒரு பிரம்மாண்ட அடுக்கு மாளிகை. அதைக் கட்டுவிக்கும் ஒவ்வொரு செங்கல்லும் ஒரு துளி ‘அறத்தின்’ வெளிப்பாடு. அறத்தின் நுண்பகுப்பாய்வு (micro analysis) என்று சொல்லுமாப்போலே, மனிதத்தின் ஒவ்வொரு நற்செயலிலும் உள்ளுறையும் நல்லறத்தை ஒவ்வொன்றாக அடுத்தடுத்து எடுத்துச் சொன்னார் ஜெயமோகன். ஆங்கிலத்தில் சொல்வதுபோல், ஒவ்வொரு தனிமனிதனும் தன்னளவில் தன்பங்கிற்கு செய்யும் அறம்தான் (play the game) அதன் ஒட்டுமொத்த அளவில், சமூகத்தின் அறமென்றும், கலாசாரத்தின் பேரறமென்றும் வடிவெடுக்கும்.
1.இன்றைய அமெரிக்க நாட்டின் கருவூலத்தின் மொத்த்ச் சொத்தின் மதிப்பீட்டினையும் விஞ்சி நிற்கும் திருவனந்தபுரக் கோயில் சொத்து, திருவிதாங்கூர் அரசரின் நேரடி மேற்பார்வையில் இருந்தும், அது பொதுச் சொத்து என்ற நோக்குடன் அதனைச் சுயநலத்திற்காகத் தொடாமால் காப்பாற்றி பொதுமக்கள் சேவைக்கு மட்டுமே (1949-ல் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் போது, கஞ்சித் தொட்டி திறந்த எடுத்துக்காட்டு) பயன்படுத்தியதும், இப்படி மிதமிஞ்சிய செல்வம் இருக்கிற செய்தியையும் அந்நியர்களிடமிருந்து காப்பாற்றி வைத்ததும், அந்த அரச குடும்பத்தினரின் ‘அறம்’ என்று சொல்லலாம்.
2. தாய் காட்டியவர்தான் தந்தை என்ற அன்றைய அறத்தை (குந்தியின் மக்கள் ஏற்பது) மகாபாரதத்திலும், 3. யக்ஷன் ஒருவனிடமிருந்து தம்பிகளை மீட்டும் கட்டத்தில், யுதிஷ்டிரன் முதலில் நகுலனை மீட்டுக் கொடுக்கும்படிக் கேட்டதும் இதிகாசங்கள் காட்டும் அறச் சான்றுகள்.
4.தனது சொந்த வாழ்க்கையிலிருந்து சில காட்டுகள் என்கிற முறையில், தன் பெற்றோர் எழுதிவைத்த சொத்தை அவர் சகோதரி, ‘இந்தச் சொத்து மகன்களையே சாரும்’ என்ற தனது ஸ்வதர்மத்தின் எழுச்சியால், மீண்டும் தனது சகோதரர்களுக்கே திருப்பித் தந்தமையும், 5. தக்கலை பேருந்து நிலையத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை சுந்தர் ராமசாமியுடன் கூடிப்பேசுகையில், அவர் எடுத்துச் சொன்ன நியாயமும் ‘சமூக அறத்திற்கு’ சான்றாக அமைகின்றன.
6.இந்திய சுதந்திரத்தைத் தொடர்ந்து நாட்டில் நடந்த இனக்கலவரத்தின் போது நிகழ்ந்த செயல்களுக்காகப் பச்சாதபப்பட்ட ஒருவனிடம், காந்திஜி, அவனை, ‘நீ செய்த செயலுக்காக, ஒரு இஸ்லாமியக் குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்கும்படி’ சொல்வதும் அக்காலத்திற்குப்பொருந்திய அறம் என்றே கொள்ளலாம்.
7.நாஞ்சில் நாடன் எழுதிய வனம் என்ற கதையில் வருகின்ற ஒரு நிகழ்ச்சி. அந்தக் கதையில், ஒருவன் கோவையிலிருந்து கேரளா செல்ல பஸ் பிடிக்கிறான். மானந்தவாடிக்கு செல்லும் பஸ்ஸில் கூட்டம் தேனடையில் தேனீ போல அப்பியிருக்கிறது. ஆண்கள் பெண்கள் கூடைகள் சிப்பங்கள் பெட்டிகள் பைகள். எங்கும் கூச்சல் வியர்வை அழுக்கு வெப்பம். பஸ் மெல்ல நகர்கிறதுகண்டக்டர் மேலும்மேலும் ஆட்களை ஏற்றுகிறான். டிரைவர் வசை பாடுகிறான். எப்படி வண்டியை ஓட்டுவது என எரிந்து விழுகிறான். வண்டியை முரட்டுத்தனமாக ஓட்டுகிறான். வாய் வசை துப்பியபடியே உள்ளது. அவன் தசைகள் முறுகியுள்ளன. வியர்வையை துடைத்துக் கொள்கிறான். மலையை அடையும்போது குளிர்காற்றில் மெல்ல இறுக்கம் தளர்கிறது. ஒருவரோடொருவர் சாய்ந்து பயணிகள் தூங்க ஆரம்பிக்கிறார்கள். இருபுறமும் அடர்ந்த பெருங்கானகம். சட்டென்று பஸ் உலுக்கி நிற்கிறது. வழியில் சாலையின் குறுக்காக ஒரு பெரிய மலைப்பாம்பு. இரையெடுத்ததா இல்லை கர்ப்பிணியா தெரியவில்லை. ஒரு அவசரமும் இல்லை. மெல்ல மெல்ல நகர்கிறது.
டிரைவர் புன்னகையுடன் ஹாரனை அடித்தான். ”போ மோளே வேகம்” [சீக்கிரம் போ மகளே] என்று சொன்னான்.அவன் வந்த வேகத்திற்கும், மனநிலைக்கும் அவன் பாம்பின் மேல் பஸ்ஸை ஏற்றி இருக்கலாம். ஆனால் அவன் செய்தது அவனை அறியாமலேயே அவனிடம் ஊறிப்போன அறம். தமிழர் பண்பாட்டிலே ஊறிப்போயிருக்கும் ஜீவகாருண்யம். ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்பது வள்ளலார் பெருமான் தொடங்கி இந்த பஸ் டிரைவர் வரைக்கும் டி.என்.ஏ (DNA) வில் உறைந்த அறம்.
8. மேற்சொன்ன ஜீவகாருண்யம் உலகளாவியது. ஒரு காட்டுக்காக, நமிபியா நாட்டின் பாலைவனப் பகுதிகளில் காணப்படும் நாட்டியக்காரி வெண்சிலந்தி (Dancing While Lady Spider) என்று ஓர் இனத்தைப் பற்றிய செய்தி. சுற்றுலாப் பயணிகளுக்காக பாலை மணலில் புதைந்திருக்கும் இச்சிலந்தியைத் தோண்டி எடுத்துக் காட்டும் அந்நாட்டு மக்கள், மீண்டும் அச்சிலந்தியை மணலிலேயே புதையுள்ளச் செய்வர். கொல்வதில்லை. விஷ ஜந்துக்களான பாம்பையும், தேளையும் கண்ட மாத்திரத்தில் அடித்துக் கொல்வது ‘அநாகரிகம்’ என்பது இவர்கள் கருத்து. இது நமிபிய நாட்டினரின் ஜீவகாருண்ய அறம்.
9.தர்ம சங்கடம் என்பது இருவகை அறத்திற்கிடையே எதை மேற்கொள்வது என்று புரியாத மனநிலை. எப்படிச் செய்தாலும் ஒன்று அறவழி சார்ந்திருந்தும் மற்றொரு அறத்தின் பார்வையில் தகாத செயலாய் முடியும். இந்நிலையை எடுத்துக்காட்டும் ஜெயகாந்தனின் சிறுகதை ஒன்றை முன்வைத்து, ‘நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ’ என்று கதாபாத்திரம் கேட்கும் கேள்வியே கதையின் கருவாக அமைந்ததை விளக்கினார்.
இந்த உரையைத் தொடர்ந்து, இரகுராமனிலிருந்து தொடங்கி, ரங்கநாதன், புகாரி, பார்த்தா, துரைக்கண்ணன், தயாநிதி, மோகன் முதலானோர் சில வினாக்களை முன்வைத்தனர். அவை ஒவ்வொன்றுக்கும் தக்க விடையளித்தார் ஜெயமோகன்.
இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது பெற்ற ஜெயமோகனை வாழ்த்தி, பேராசிரியர் பசுபதி அவையில் அளித்த வெண்பா.
தொரந்தோ இலக்கியத் தோட்டம் அளித்த
பெருமை இயல்விருதுப் பேறு — பரந்த
திறமை தெறிக்கும் ஜெயமோகன் நூல்கள்
சிறப்புக்கு மற்றுமோர் செண்டு
திரு முத்துலிங்கம் பொன்னாடை அணிவிக்க, மாகா அமைப்பின் தலைவர் திரு வாசன் அன்பளிப்பும் வழங்கினார். மாகாவின் கோடைகாலச் சிறப்பமர்வு இனிதாய் நிறைவேறியது.
(செய்தித் தொகுப்பு: சௌந்தர்)