கனடாவிலிருந்து கிளம்பினேன்…

ஜூன் 11 அன்று கனடாவுக்கு வந்துசேர்ந்தேன். இப்போது 12 நாட்கள் ஆகின்றன. முதலில் இருநாட்கள் விடுதியிலும் பின்னர் உஷா மதிவாணன் இல்லத்திலும் தங்கியிருந்தோம். தொடர் பயணங்கள், விழாக்கள், உரைகள். 13 அன்று இயல் விருது அளிக்கப்பட்டது. மிகச்சிறப்பான விழா. பழைய நண்பர்களை சந்தித்தது மிக உத்வேகமூட்டிய அனுபவமாக இருந்தது. செல்வமும், சுமதியும் மாறாமல் இருக்க செழியன் மாறிவிட்டிருக்கிறார். டி செ தமிழன் இன்னமும் சின்னப்பையனாகவே தெரிவது ஓர் ஆச்சரியம். வெங்கட்ரமணன் நரைத்து பேராசிரியக் களையுடன் இருந்தார். செல்வ கனகநாயகம் இல்லாததை அவ்வப்போது ஒரு சின்ன திடுக்கிடலாக உணர்ந்தேன்.

செல்வம் கூட்டிய நண்பர் சந்திப்பில் சிலப்பதிகாரம் பற்றி பேசினேன். டொராண்டோ தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் இன்றைய இலக்கிய மாற்றம் பற்றியும் டொராண்டோ தமிழ்ச்சங்கத்தில் இன்றைய இலக்கியப்போக்குகள் பற்றியும் மெட்றாஸ் கலையிலக்கியக் கழகத்தில் அறம் பற்றியும் பேசினேன். இதைத்தவிர பல நண்பர் சந்திப்புகள். அ. முத்துலிங்கம் அவர்களுடன் சவுண்ட் ஆஃப் மியூசிக் என்னும் இசைநாடகம் பார்க்கச்சென்றேன். உஷாவும் குடும்பமுமாக ஒரு காம்பிங் சென்றேன். அருங்காட்சியகத்தில் ரோமில் இரண்டாயிரம் வருடம் முன்பு வெடித்த எரிமலையால் அழிந்த பாம்பி நகரின் எச்சங்களைச் சென்று கண்டேன். [லிட்டன் பிரபுவின் நாவலான பாம்பியின் கடைசிநாட்கள் தமிழில் வெளிவந்துள்ளது]

சேரன் உடல்நலமில்லாதிருக்கிறார். நேற்று அவரைச் சென்று பார்த்தேன். இங்கே ஆனந்த் உன்னத் எனக்காக விடுப்பு எடுத்து முழுநேரமும் உடன் இருந்தார். ரீங்கா ஆனந்தும் துணையாக இருந்தார். அருகே பல இடங்களை சென்று பார்த்தோம்.

கனடாவில் வெண்முரசு (2)

இன்று மாலை 3 மணிக்கு இங்கிருந்து பாஸ்டன் செல்கிறேன். இம்முறை பயணக்குறிப்புகள் எழுதமுடியாத நிலை. வெண்முரசை எழுதுவதே பெரிய சவாலாக உள்ளது. தினம் விடியற்காலை எழுந்து எழுதியபின்னரே பயணங்கள். உஷா வீட்டில் உள்ள இந்தக் கண்ணாடி அறை அற்புதமான இடம். வெட்டவெளியில் அமர்ந்திருக்கிறேன். ஆனால் குளிரும் வெயிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

முந்தைய கட்டுரைசிவமயம் (சிறுகதை)
அடுத்த கட்டுரைஇயல் விருது விழா