நச்சரவம் -வரலாறும் கதையும்

“நான் வரலாற்றை ஒரு நாடகமேடையின் பின்புறத் திரைச்சீலைகள்போல உருவகிக்கிறேன். நாம் நடிக்கும் காட்சிக்கு ஏற்ப கணநேரத்தில் அவற்றை மாற்றிக்கொள்கிறோம். வீடுகள், மலையடிவாரம், கடற்கரை, அரண்மனை சபை. இதை நான் எந்த வரலாற்றாசிரியரிடம் பேசினாலும் அவர் உடனே முகம் சிவந்துவிடுகிறார். அவர் நிரந்தர உண்மைகளை உருவாக்கும் அறிஞரல்ல, கதைகள் புனையும் கற்பனையாளர் என்று நான் சொல்வதாக எடுத்துக்கொள்கிறார்.ஒரு பேச்சுக்கு ஒருவரிடம் அவர் உண்மைகளைப் புனையும் கற்பனையாளர் என்று சொல்லிப் பார்த்தேன். கண்களில் நீர் கோர்க்குமளவுக்குக் கத்தித் தீர்த்துவிட்டார்.”என்று கதை சொல்லியின் கூற்றோடு தொடங்கும் சிறுகதை திற்பரப்பு மகாதேவர் கோயிலின் வரலாற்றுக்குள் நுழைகிறது.

கோயிலின் தோற்றகாலத்தை நோக்கி புறவயமாக ஆராய்ந்துகொண்டு செல்லும் கதை சடுதியில் அகத்தினை நோக்கி திரும்பி நாம் புறவயமான வரலாறு என்று நினைப்பதற்கும் அகத்தின் பிரமைக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறதா என்றகேள்வியை எழுப்புகின்றது.கடந்து சென்றபின்னர் அனைத்து வரலாறும் வாழ்பவர்களின் மனதின் உருவாக்கம்தானே.

வரலாற்றாய்வாளர் கோயிலின் மூலவரலாற்றைத் தேடிச்செல்லுகின்றார்.புறவயமான வரலாறு ஒரு கட்டத்தில் முடிந்து தலைமுறை தலைமுறையாகக் கூறப்பட்டுவந்திருக்கக்கூடிய ஐதீகங்களால் உருவான அகவரலாற்றை நோக்கி திரும்புகிறார் என்றும் கொள்ளலாம்.பழம்பெரும் மரமொன்றை குறுக்காகவெட்டி அதிலுள்ள வளையங்களின் எண்ணிக்கையால் அதன் வயதை அறிந்துகொள்ளமுடியும்.ஆனால் அதை நட்டவனை அறிந்துகொள்ளமுடியுமா?புறவயமான ஆதாரங்கள் ஒரு எல்லைக்குட்பட்டு நின்றுவிடும்போது வரலாறு வேறுவிதமாக மனதில் நிகழ்கின்றது.

இந்தச் சிறுகதையை வரலாற்று நோக்கில் இல்லாமல் இறைதேடலாகவும் நோக்கலாம்.புறவயமான ஆன்மீகப் பயணம் கொண்டை ஊசிவளைவில் திரும்பி அகத்தில் நிகழத்தொடங்குகின்றது எனலாம்.

சிறுகதையின் உச்சத்தின் பின்னர் கதையை மீளநோக்கும்போது “அதற்கேற்ப நான் மலையனைத் தேடிச் செல்வதும் குறைந்துவிட்டது.முக்கியமான காரணம் செலவுதான்.மலையன் நான் அவருக்காகச் செலவு செய்வேன் என்பதை அறிந்து கொண்ட பிறகு புகையிலை, கருப்பட்டி, டீத்தூள் வாங்குவதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.அதைவிட முக்கியமாகச் சொல்ல வேண்டியது காலப்போக்கில் இவற்றை வாங்கித் தரவேண்டியது என் கடமை என்றும் நம்பி, நான் வாங்கிச் செல்பவற்றின் தரம் அளவு ஆகியவற்றைப்பற்றி என்னிடமே குறைகூற ஆரம்பித்ததுதான். ஒருமுறை வேண்டுமென்றே எதுவும் வாங்காமல் அவரைப் பார்க்கச் சென்றேன்.ஒருமுறை வேண்டுமென்றே எதுவும் வாங்காமல் அவரைப் பார்க்கச் சென்றேன்.அன்று அவர் நான் வந்திருப்பதை அறிந்ததாகவே பாவனை செய்யவில்லை.”என்ற கதைசொல்லியின் கூற்று வேறொரு அர்த்தத்தை எடுத்துக்கொள்கின்றது.

மனிதன் தனது தேவைகளுக்காக காணிக்கைகளையும்,நேர்த்திகளை வைத்து கடவுளை திருப்திப்படுத்துவதென்றெண்ணி தன்னை திருப்திப்படுத்திக்கொள்கிறான்.தொடர்ந்து செய்யும்போது ஒரு கட்டத்தில் அது அவனுக்கு சுமையாகிவிடுகின்றது.இறைவனே அதை அவனிடம் இருந்து எதிர்பார்ப்பதாக எண்ணும் அவன் அதில் இருந்துவிடுபடமுடியாமல் அச்சமடைகின்றான் என்ற நடைமுறை உண்மையையும் சுட்டுகின்றது.

கவனத்தை ஈர்க்கக்கூடிய பலதகவல்கள் கதையினூடாக வந்தபடியே இருக்கின்றன.’மீறி உள்ளே வந்தவர்கள் தென்னை மரத்தில் கட்டப்பட்டு பச்சைச் சாரைப்பாம்புத் தோலால் இறுகக் கட்டப்பட்டு வெயிலில் விடப்படுவார்கள். பாம்புத்தோல் உலர்ந்து சுருங்கும்போது சதையைப் பிய்த்து உள்ளே சென்றுவிடும்.’ என்ற தகவல் கதையின் மையத்துக்கு நிகராகவே மனதில் அதிர்வை ஏற்படுத்துகின்றது.அவர்ணர்களில் இருந்து தொடங்கியது நிறுவனமயப்படுத்தப்பட்டு அவர்ணர்களுக்கே தண்டனையளிக்கும் இடமான மாறிய வரலாற்றுப்போக்கை என்னவென்பது!

சிவநெறிப் பின்னணியிலான இச்சிறுகதை சுவாரசியமான வாசிப்பனுபவத்தையும் தருவதாக உள்ளது.

சிவேந்திரன்

அன்புள்ள சிவேந்திரன்,

நலம்தானே? நானும் நலமே

அந்தக்கதை அந்தக் காலகட்டத்தில் நான் எழுதிய பல கதைகளின் வகையைச்சார்ந்தது. உண்மைத்தகவல்களுடன் சிறிதே புனைவைக்கலந்து எழுதுவது. தகவல்களை புனைவாக மறு அமைப்பு செய்வது. கன்னடத்தில் வெளியாகி புகழ்பெர்ற கதை இது

இப்போதுதான் வலையேற்றம் செய்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 25
அடுத்த கட்டுரைவணங்காதவர்கள்