«

»


Print this Post

அரங்க மனிதன்


அரங்க மனிதன் The Truman Show

ஜிம்கேரியை முகமூடியாகப்பார்த்தபின் அவரது படங்களை இனிமேல் பார்ப்பதேயில்லை என்ற சபதம் கொண்டிருந்தேன். ஆகவே ஒத்திப்போட்டு ஒத்திப்போட்டு கடைசியில் பார்த்த போது அவரது முகம் அல்லது முகமூடி இந்த படத்தில் இல்லை என்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டேன். பல தளங்களில் கற்பனையையும் சிந்தனையும் கொண்டு செல்ல தூண்டுதலாக அமைந்த குறிப்பிடத்தக்க கலைப்படைப்பு இந்தப்படம்.

ஏற்கனவே படத்தைப்பற்றி வாசித்திருந்தேன். ’யதார்த்த தொலைநிகழ்ச்சி’க்காக ஓர் இளைஞன் படப்பிடிப்புக்குழுவினரால் உருவாக்கப்பட்ட ஒரு கட்டரங்கச் சூழலில் சின்னஞ்சிறு வயது முதல் வளர்க்கப்படுகிறான். தான் வாழும் நகரம் உண்மையல்ல என்று அவன் அறிவதே இல்லை. உண்மையான ஒரு நகரத்தில் உண்மையான தாயுடனும் மனைவியுடனும் நண்பர்களுடனும் வாழ்வதாகவே அவன் எண்ணிக்கொண்டிருக்கிறான். அவர்கள் அனைவருமே அந்த நிகழ்ச்சியில் வரும் நடிகர்கள். அவனுடைய ஒவ்வொரு கணமும் பல்லாயிரம் ஒளிப்பதிவுக்கருவிகளால் தொலைக்காட்சியில் இடைவிடாது காட்டப்பட்டு உலகம் முழுக்க ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு பலகோடி ரசிகர்கள். அவர்கள் அவனுடன் வாழ்கிறார்கள் என்றே சொல்லலாம்.

தற்செயலாக அங்கே சில்வியா என்ற ஒரு பெண்ணை அவன் காண்கிறான். அவளும் அந்த நிகழ்ச்சியின் ஒரு நடிகைதான். அவள் மீது அவனுக்கு காதல் உருவாகிறது. அவளுக்கும். அவள் முதன்முதலாக அவன் மனத்தில் அங்கே நிகழும் நிகழ்ச்சிகள் மேல் ஐயத்தை உருவாக்குகிறாள். படிபப்டியாக ட் ரூ மேன் தன்னைச்சுற்றி நிகழ்வனவற்றில் ஒரு திட்டமிடலும் எளிமையான சுழற்சியும் இருப்பதைக் கண்டுபிடிக்கிறான். அந்த வாழ்க்கைநாடகத்தின் பிழைகள் கண்ணுக்குப் படுகின்றன. ஒருகட்டத்தில் அவன் எல்லாமே செயற்கையாக கட்டமைக்கப்பட்டவையாக இருக்கலாமென்ற எண்ணத்தை வலுவாக அடைகிறான்

அவன் ஊகித்துவிடுவதை உணர்ந்த அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கிறிஸ்டோஃப் அவனை அங்கிருந்து தப்பிச்செல்ல விடாமல் தடுப்பதற்காகவும் அவனுடைய நம்பிக்கையை நீட்டிக்கவும் முயல்கிறார். ட்ரூமேன் ஒரு படகில் தப்பி ஓடமுயல்கிறான். அந்தக்கடல் உட்பட அவனது மொத்த உலகமே ஒரு பெரிய கோளத்துக்குள் அமைக்கப்பட்ட கட்டரங்குதான். அந்த கடலில் அலைக்கொந்தளிப்பை உருவாக்கி அவனை மூழ்கடிக்க முயல்கிறார் கிறிஸ்டோஃப். கடைசியாக தொடுவானை நெருங்கும் ட்ரூமேன் அது ஒரு வரையப்பட்ட திரை என்று அறிகிறான். அதில் உள்ள வாசல் வழியாக வெளியேற முயல்கிறான்.

அப்போது அவனுடைய உலகை உருவாக்கிய படைப்பாளிக்கும் அவனுக்குமான உரையாடல் நிகழ்கிறது. அது ஒரு நாடகம்தான் என்கிறார் கிறிஸ்டோஃப். நான் உனக்காக உருவாக்கிய உலகம் இது. வெளியே உண்மையான உலகம் உள்ளது. அது ஈவிரக்கமற்றது. அங்கே உள்ள எல்லா விஷயங்களும் இங்கும் உள்ளன. ஆனால் அங்கே அதைக்கட்டுப்படுத்தும் ஒரு படைப்பாளி இல்லை. இங்கே உன்னை கவனமாக பாதுகாக்க பொறுப்பாக நாங்கள் இருக்கிறோம். இங்கே நீ மகிழ்ச்சியாக பத்திரமாக இருக்கலாம். இதையும் மீறி வெளியே செல்வதென்றால் உன் விருப்பம் என்கிறார் படைப்பாளி.

படைப்பு யோசிக்கிறது. அதன்பின் வெளியேறும் முடிவையே அது எடுக்கிறது. நாடகீயமாக வணங்கி அரங்கைவிட்டு வெளியே செல்கிறான் ட்ரூமேன். உலகம் முழுக்க அவனை அதுவரை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் அவன் வெளியேற வேண்டும் என்றே துடிக்கிறார்கள். அவன் வெளியேறியதைக் கொண்டாடுகிறார்கள்.

*

ட்ரூமேன் ஷோ தெளிவாகவே மேலைச்சிந்தனையை பலநூற்றாண்டுகளாக இயக்கிவரும் சில முரணியக்கங்களைச் சுட்டுகிறது. கடவுள் x மனிதன், அறிவு x நம்பிக்கை ஆகிய முரணியக்கங்களைப்பற்றி மேலைநாட்டு இலக்கியங்கள் பலகோணங்களில் பேசிக்கொண்டே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் இந்த அடிப்படை ஆழ்படிமங்களை தாண்டி வரவே இவர்களால் இயலவில்லையோ என்ற எண்ணம் ஒரு கீழைநாட்டு வாசகனுக்கு ஏற்பட்டு விடுகிறது.

இந்தப்படமும் ஏதேன் தோட்டத்தின் கதைதான். படம் அக்குறியீடுகளை தெளிவாகவே உருவாக்குகிறது. படைப்பாளியின் பெயர் கிறிஸ்டோஃப். மனிதனின் பெயர் ட்ருமேன். ஏதேன் தோட்டம் என்பது கடவுளால் மனிதனுக்காக உருவாக்கப்பட்ட சொற்கம் — ஆம், சும்மா ஒரு ‘யதார்த்த நிகழ்ச்சியை’ கண்டு களிக்கும் பொருட்டுத்தான். அது தீமை என்ற அம்சமே இல்லாதது, கடவுளின் இச்சையை மட்டுமே தன் நோக்கமாகவும் இயங்குவிசையாகவும் கொண்டது, பாதுகாக்கப்பட்டது. அங்கே மனிதனின் களங்கமின்மைதான் அவனுடைய வல்லமை. கடவுளின் அந்த பொன்னுலகை முழுமையாக அவன் அனுபவிக்கவேண்டுமென்றால் அவன் ஏதுமறியாதவனாக இருக்க வேண்டும்.

ஆகவே அறிவு என்பது களங்கமின்மையை அழித்து கடவுள் அளித்த உலகை அவன் இழக்கும்படிச் செய்கிறது. அது சாத்தானின் ஆயுதம். சாத்தான் ஏவாளுக்கு அறிவைத்தான் அளிக்கிறான். அந்த அறிவுதான் ஆதித்தம்பதிகளை முதல் பாவத்துக்குக் கொண்டு செல்கிறது. அழிவுச்சக்தியான அறிவுக்கு எதிரான ஆற்றல் என்பது ஆணித்தரமான நம்பிக்கையே. களங்கமற்ற நம்பிக்கைமூலம் அறிவின் சபலங்களை வென்று கடவுள் அளித்த ஏதேன் தோட்டத்தில் வாழ முடியும். செமிட்டிக் மதங்கள், குறிப்பாக கிறித்தவம் மூலம் மேலைச்சிந்தனையில் ஆழமாக நிலைநாட்டப்பட்டது இந்த ஆழ்படிமம்.

இதற்கு நேர் எதிரான கருத்துருவங்களால் ஆன ஒரு ஆழம் ஐரோப்பாவுக்கு உண்டு. அதை பாகன் என்று கிறித்தவம் அடையாளப்படுத்தியது. கிறித்தவம் அங்கே வருவதற்கு முன்பு பல நூற்றாண்டுக்காலம் அங்கே இருந்த தொன்மையான நம்பிக்கைகளும் சடங்குகளும் கொண்ட மதங்களையே அச்சொல் சுட்டுகிறது. அந்த பாகன் மதங்களில் கிரேக்க மதம் அதன் செவ்விலக்கியங்களாலும் தத்துவச்சாதனையாலும் மானுடசிந்தனையின் உச்சங்களில் ஒன்றாக இன்றும் நீடிக்கிறது.

கிட்டத்தட்ட பதினைந்து நூற்றாண்டுக்காலம் மேலைச்சிந்தனையை கிறித்தவ மதச் சிந்தனைகள் அடக்கி ஆதிக்கம் செலுத்தின. ஆனால் பாகன் பண்பாடும் சிந்தனைகளும் கிறித்தவத்துக்குள் பலவகைகளில் உருமாறி உள்ளே நுழைந்தன. ஐரோப்பியப் பண்பாட்டில் அவ்வாறு கிறித்தவத்துக்குள் இருந்து பாகன்பண்பாடு பொங்கி வெளிக்கிளம்பியதையே நாம் ஐரோப்பிய மறுமலர்ச்சி என்கிறோம். பல காலகட்டங்களில் பல படிகளிலாக நிகழ்ந்த ஒரு பண்பாட்டு கொந்தளிப்பு இது. இன்றைய மானுட சிந்தனையும் பண்பாடும் இந்தப் பெருநிகழ்வுக்குக் கடன்பட்டுள்ளன.

பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் மெல்லமெல்ல கிறித்தவ சிந்தனைகளின் தாக்கம் கலை, இலக்கியம், தத்துவம் போன்றவற்றில் வெகுவாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டது. கிரேக்கப் பண்பாட்டை மையமாகக் கொண்ட ஒரு நவஐரோப்பியப் பண்பாடு உருவாகி வந்தது. பண்டையரோம் ஐரோப்பிய மனத்தின் பெருமிதக்குறியீடாக ஆகியது. நாஜி ஜெர்மனியின் கழுகுச்சின்னமும் அமெரிக்காவின் கழுகுச்சின்னமும் எல்லாம் ரோமாபுரியின் கழுகுச்சின்னத்தின் மறுவடிவங்கள் என்பதைக்காணலாம்.

இந்த மீறலின் போது ஏதேன் தோட்டத்தின் கவியுருவகம் புது அழுத்தம் பெற்றது. கிறித்தவ மரபில் அறிவின்மூலம் பாவத்தை நோக்கிச் சென்ற ஒரு வீழ்ச்சியாகவே ஆதிதம்பதிகளின் செயல் கருதப்பட்டது. ஆனால் இந்த புதுஐரோப்பிய சிந்தனைகள் அதை அறிவின் மூலம் பெற்ற விடுதலையாகக் கருதின. கடவுளின் பாதுகாக்கப்பட்ட சொர்க்கத்தில் இருந்து மனிதன் தன் அறிவையே துணையாகக் கொண்டு வெளியேறுகிறான்! தன் விதியை தானே தீர்மானித்துக்கொள்ள முடிவெடுக்கிறான்.

அறிவின் மூலம் மானுடன் களங்கமின்மையை இழக்கலாம். கடவுளின் பாதுகாப்பு இல்லாத ஒரு இடத்துக்கு சென்றுசேரலாம். தன் வாழ்க்கையின் அனைத்துப் பொறுப்புகளையும் தானே சுமக்கலாம். ஆனாலும் அதுவே மானுடன் செய்தாகவேண்டியது. அறிதல் என்பது அவனுக்கு இயற்கை அளித்திருக்கும் அறைகூவல். அந்த கடமையில் இருந்து அவன் தவற முடியாது. அந்தப்பொறுப்பை அவன் ஏற்றே ஆகவேண்டும். இந்தப் புது விளக்கம்தான் நவீனத்துவம் என்று பிற்பாடு கூறப்பட்ட அறிவியக்கத்தின் விதை.

கிரேக்க சிந்தனையில் உள்ள புரமித்தீயுஸ் என்ற படிமத்தை இத்துடன் இணைத்து யோசிக்கலாம். டைடனின் மகனாகிய புரமித்தீயுஸ் சர்வவல்லமை கொண்ட கடவுளான ஸியஸிடம் இருந்து தீயை திருடிக்கொண்டுவந்து மானுடகுலத்துக்குக் கொடுத்தான். அதன்வழியாக மானுடர் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒளியை பெற்றார்கள். கோபம் கொண்ட ஸீயஸ் புரமித்தீயுஸை காகஸஸ் மலையில் பாறையில் கட்டிப்போட்டார். ஒவ்வொரு நாளும் ஒரு ராட்சதக் கழுகு வந்து அவன் ஈரலைத் தின்னும். ஈரல் மீண்டும் வளரும். முடிவிலாக்காலம் இவ்வாறு இருந்தபின் ஹெர்குலிஸ் வந்து அந்தக் கழுகைக் கொன்று புரமிதியூஸை மீட்டான்.

இங்கே புரமித்தியுஸ் ஞானத்துக்கான மானுடனின் தணியாத தாகத்தின் பிரதிநிதியாக வருகிறான். அந்த ஞானம் கடவுள்களால் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை தேடிச்செல்வதும் கடவுளை ஏமாற்றிக்கூட அதை பெறுவதும் மானுடனுடைய உரிமை. அதற்காக அவன் தண்டிக்கப்படுகிறான். புரமித்தியுஸின் ஆன்மா முடிவிலாது குதறப்படுவது ஞானத்தின் அறைகூவலை ஏற்றவனுக்கு எக்காலத்திலும் உள்ள விதி. ஆனால் அவன் தோற்பதில்லை. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஐரோப்பிய கலையிலக்கியத்தில் ஏதேன் தோட்டம் அளவுக்கே புரமித்தியுஸின் கவியுருவகமும் பேசப்பட்டிருக்கிறது என்பதை நாம் காணலாம். நவீன அறிவியலையும் ஆய்வுச்சிந்தனைகளையும் உருவாக்கிய நவீனத்துவத்தின் மையப்படிமமே புரமித்தியுஸ்தான்.

நவீனத்துவம் உலகமெங்கும் சென்ற போது மரபில் சிக்கிக்கொண்டிருந்த கோடானுகோடி மக்களின் விடுதலைக் கருதுகோளாக அது ஆயிற்று. நவீனத்துவச் சிந்தனைகளை ஏற்று உலகமெங்கும் எழுதிய எல்லா முக்கியமான படைப்பாளிகளும் ‘கடவுள் xசாத்தான்’ ‘கடவுள் xமனிதன்’ என்ற அடிப்படைப் படிமத்தை கையாண்டு கவிதைகளும் கதைகளும் எழுதியிருக்கிறார்கள் என்பதைக் காணலாம். அத்தனை படைப்புகளும் சாத்தானின் குரலுக்குச் சாதகமானவையாக இருப்பதையும் காணலாம்.

உதாரணமாக மலையாள்ப்புதுக்கவிதை முன்னோடியான எம்.கோவிந்தனின் இக்கவிதை

நானும் சைத்தானும்

தேவனுக்கு உரியதை தேவனுக்கும்
தேசத்துக்கு உரியதை அதற்கும்
தந்துவிட நான் முன்வந்தபோது
ஒருவன் என் முன் வந்து சொன்னான்
“எனக்குரியது எனக்கே” என.
‘யார் நீ” என்றேன்
“தெரியாதோ சைத்தானை?” என்றான்
“அப்படியானால் கேள்
என்னுடையதெல்லாமே எனக்கே
என்பதே என் வேதம்”
என்றேன்
‘என்னுடையதை தந்தாய் நன்றி ”
என்று சிரித்து போனான்,
சைத்தான்

இன்னொரு உதாரணம் புதுமைப்பித்தனின் ’மனக்குகை ஓவியங்கள்’. அதில் ஒருகதையில் மேலிருந்து கீழே கனிவுடன் நோக்கி ’நான் உதவலாமா?’ என்று கேட்கும் கடவுளுக்கு ‘நீ உன் உலகில் இருந்துகொள். நான் இங்கே இந்தப்புழுதியில் என்னுடன் பிறந்த இந்த இரும்புத்துண்டை வைத்து என் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறேன்’ என்று மனிதன் பதில் சொல்கிறான். கிட்டத்தட்ட ட்ரூமேன் ஷோ படத்தின் உச்சகாட்சி இதுதான்.

தேவதேவன் தேவதச்சன் முதல் எம்.யுவன், மனுஷ்யபுத்திரன் வரை ’நான் – கடவுள் -சாத்தான்’ என்ற முக்கோணம் சார்ந்து ஏராளமான கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. கடவுளால் உருவாக்கப்பட்ட உலகில் இருந்து வெளியேறும் மனிதன் நவீனத்துவத்தின் மையப்படிமம் என்பதே காரணம். ட்ரூமேன் ஷோ பேசுவதும் அதையே. இப்படத்தில் கிறிஸ்டோஃப் உருவாக்கி அளித்திருக்கும் அந்த பொன்னுலகில் இருந்து ட்ரூமேன் வெளியேறுவதை ஒட்டுமொத்தமாக அனைத்துப் பார்வையாளர்களும் கண்ணீருடன் அங்கீகரிப்பதைக் காணலாம்.

[மேலும்]

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7631/

9 comments

Skip to comment form

 1. Dondu1946

  இதே ஆதாமும் ஏவாளும் அக்கனியை புசிக்காதிருந்தால் என்ன வாகியிருக்கும் என்பதை சுவையாக கற்பனை செய்து எழுதியுள்ளார் ஃபிரெஞ்சு எழுத்தாளர் Pierre Boulle.

  அது பற்றி நான் இட்ட இடுகை:
  http://dondu.blogspot.com/2006/10/quia-absurdum.html

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 2. V.Ganesh

  ஒண்ணுமே புரியலே.

 3. சார்லஸ்

  ட்ரூமேன் ஷோ படத்தின் கதையோடு ஐரோப்பிய மறுமலர்ச்சி, கிரேக்க ஐதீகமான புரமித்தீயுஸ் ஆகியவற்றை இணைத்துச் சொல்லியிருப்பது மிகவும் சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கிறது. ட்ருமேன், தான் விரும்பிய பெண்ணின் மூலமே உண்மையை அறிகிறான் என்பதும், அவள் ‘ஸீஹெவன்’ எனப்படும் அந்த ஊரிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிறாள் என்பதும் அப்படியே ஏவாள்-ஏதேன் தோட்டம் எல்லாவற்றுக்கும் பொருந்தி வருவது. கடவுளை நிராகரிக்கும் மனிதன், பாதுகாப்பில்லாத இயற்கையிடம் தன்னை ஒப்படைக்க வேண்டியிருந்தாலும், உண்மையை அறியவேண்டும் என்கிற தேடல் உள்ளவன் அந்த வழியையே தேர்ந்தெடுப்பான் என்பதை ஒரு புனைவின் வழி விவரித்த திரைக்கதையாசிரியரின் பெயர் ஆண்ட்ரு நிக்கோல், இவர் எழுதி இயக்கிய ‘கட்டகா’ ‘சீமோன்’ படங்களும் குறிப்பிடத்தக்கவை.
  இறுதியில் நீங்கள் மொழியாக்கம் செய்த கவிதையும், புதுமைப்பித்தனின் சிறுகதையும் மிக நல்ல உதாரணங்கள்.

 4. kthillairaj

  கடுவுளான கடந்து உள்ளே சென்று விட்டவனை ஒருமையாக வெளியே கொண்டு வந்து விட்டால் என்ன நடக்குமோ அதை தான் எல்லாரும் சொல்ல வருகிறார்கள். தாங்கள் இன்னும் தெளிவாக நீடித்து சொன்னிர்கள் என்றால் எல்லோருக்கும் இந்த முக்கோண பரிமாண கடவுள்-மனிதன்-சாத்தான் என்பவை புரிந்து கொள்ள முடியும் என்னை உட்பட

 5. samyuappa

  ஒருமுறை விஷ்ணு பன்றி அவதாரம் கொண்டு பூமியில் வாழ்ந்தாராம். நெடுநாட்களாகியும் திரும்பாததைகண்டு தேவர்கள் பூலோகம் வந்து பன்றியை (விஷ்ணு) அழைத்தார்களாம், ” சுவாமி! தாங்கள்தான் உலகை ரட்சிக்கும் மகாவிஷ்ணு!.தங்கள் பணி முடிந்தது. தேவலோகம் திரும்பலாம்…வாருங்கள்”. பன்றி, இங்கு சுகமாக வாழ்வதாக கூறி வர மறுத்து தேவர்களை அனுப்பிவிட்டது. பின்னொருநாள் தேவலோகம் அடைந்தது. மற்றுமொருநாள் விஷ்ணு தன் மனைவியுடன் பூமியை வலம்வரும்போது, சேறு சகதிகளோடு விளையாடிக்கொண்டிருந்த பன்றிகளை காட்டி அன்னை சொன்னாள்.. ” இவர்களோடுதான் இத்தனை காலம் இருந்தீர்!…தேவலோகம் வரமுடியாது என தேவர்களை அனுப்பிவிட்டீர்” . விஷ்ணு கூறினார் ” பன்றியாக இருக்கும்போது நான் பன்றியாகத்தான் பாவிக்கவேண்டும். அதன் சுக துக்கங்களைதான் நான் ஏற்கவேண்டும். அந்த உலகம் எனக்கு அப்போது சந்தோஷமாக இருந்திருக்க வேண்டும்”…. இது …நாமே கூட விஷ்ணுவாக இருந்தால் அதை உணர முடியாதோ?

 6. mmurali

  அன்புள்ள ஜே,

  அரங்க மனிதன் குறிப்பு பற்றி மகிழ்ச்சி. ஜிம் காரியின் உள்ளே ஒரு சிறந்த நடிகன் உள்ளான்.

  Man on the moon மற்றும் eternal sunshine of spotlessmind சிறப்பான படங்கள். இவை வெவேறு கதைகள். வெவேறு தளங்கள். majestic சுமாரான கதை.கதை ஓட்டத்தில் ஒரு நேர்மை உண்டு. வேறு வேலை இல்லை என்றால் பார்க்கலாம் :)

  உங்கள் சுஜாதா பற்றிய குறிப்பு, நேர்மையுடனும், துல்லியமாகவும் இருந்தது. எனது எண்ணங்களுடன் சரி பார்த்து கொள்ள முடிகின்றது.

  எல்லாவற்றையும் படிக்க ஆவல் இருப்பினும், எனக்கு தேவையானவைகளை மட்டும் படித்து கொள்கிறேன்.

  விழித்திருந்து எழுதும், எழுப்பும் எழுத்துக்களுக்கு நன்றி.
  அன்புடன் முரளி

 7. Parthiban

  இப்படி கூட சினிமா விமர்சனம் எழுதமுடியுமா? உண்மையில் நல்ல சுவையான விமர்சனம் ஜி.

 8. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெ.
  Trueman Show படம் பற்றியும் அதில் உள்ளீடாக இருக்கும் மேலை சிந்தனை முரண்களை பற்றியும் எழுதி இருக்கிறீர்கள். (முதல் பாகத்துக்கான கடிதம் எழுதுமுன் இரண்டாம் பாகமும் எழுதி விட்டீர்கள்.!!)

  இன்னும் சொல்லப்போனால் நம் கடவுளர்களின் அவதார நோக்கம் நிறைவேறிய பின் இவை எல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்டவை என்ற உண்மையை கடைசியில் சொல்வது, சாப விமோசனம் இவை கூட இந்த வகையில் வரும் அல்லவா.
  உதாரணத்துக்கு ஹரிச்சந்திரன் மயானத்தில் மனைவியிடமே தட்சணை கேட்கும் நேரத்தில் எல்லா கடவுளர்களும் வந்து இது உனக்கான ‘சத்திய சோதனை’ என்று சொல்லி இறந்த அவன் மகனை உயிர்ப்பிக்கும் வரை , நடந்தவற்றை ‘இயக்கியது’ விஸ்வாமித்திரர் என்றும் சொல்லலாம் அல்லவா?

  என் அனுபவத்தில் பள்ளி நாட்களில் சோதனையான காலங்களில் (பரீட்சைக்கு படிக்க நேரும்போது, கிடைக்கப்போகும் தண்டனைகளை நினைத்து)
  இது வெறும் பிரம்மையோ , நாம் இருக்கும் இடம் தவிர மற்றவை கிடையாதோ , என்றெல்லாம் நினைப்பேன். நான் நடக்க நடக்க சாலை வளர்கிறதோ என்று பயத்துடன் கற்பனை செய்ததுண்டு.
  நிறைய பேர் அதுபோல் நினைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

  Chandramohan Vetrivel,
  New Delhi.

 9. samyuappa

  Yes chandramohan Vetrivel, It is true. Most of us do not know how to express those experience and feelings. They are really attached with our emotional illusion. That can not be avoided any sensitive or artistic people. Those fear and feelings were not comfortable which now turned to a fantastic experiences.

Comments have been disabled.