சூத்திரம் ஒன்று
“அத யோக அனு சாசனம்”
[ஆதலால் யோகத்தை வகுத்துரைப்போம் ]
அத என்ற இந்த சொல்லாட்சி குறித்து இந்து மெய்ஞான மூலநூல்களை ஆய்வுசெய்தஅறிஞர்கள் பலர் பலவாறாக பேசியுள்ளார்கள் . அத என்றால் ஆதலால் என்றோ , இனிமேல் என்றோ பொருள் கொள்ளலாம். இதை நமது சூத்திரங்கள் பல ‘என்ப’ என்று முடிவதுடன் நாம் ஒப்பிட்டு பார்க்க முடியும். அதாவது பதஞ்சலி முனிவர் யோகத்தைப்பற்றி பேசும் முதல் அறிஞர் அல்ல. ஏற்கனவே விரிவாக பேசப்பட்டுள்ளது. அவர் அதை வகுத்தும் தொகுத்தும் உரைக்க மட்டுமே முற்படுகிறார் .
பெரும்பாலான சூத்திர நூல்களில் இந்த அமைப்பு காணப்படுகிறது . உதாரணமாக வேதாந்த சூத்திரம் ” அதாதோ பிரம்ம ஜிக்ஞாஸா ” என்று துவங்குகிறது. [ ஆதலால் பிரம்ம ஞானம் தேடுபவனே…] இதற்கு இரு வகை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது அந்த தளத்தின் ஞானியால் முன்வைக்கப்படும் அதிகாரபூர்வ குரல் ஆதலால்தான் ‘ஆதலால்’ என துவங்குகிறது என்கிறார்கள்.
அதனுடன் சங்கரர் வேறுபடுகிறார் . பிரம்ம ஞானத்தை அடைவதற்கு முன்பு பலவிதமான பயிற்சிகளை செய்யவேண்டியுள்ளது. ஞானத்தில் பக்குவபப்ட்ட பிறகே யோகம் பயில வேண்டும். ஞானமில்லா யோகப்பயிற்சி வெறும் பழக்கமாகவே ஆகும். ஆகவே தத்துவ ஞானம் கனிந்தபின் பிரம்மஞானத்தை பெற முன்வரும் மாணவனை அழைத்து பேசுவதனாலேயே இந்த சொல்லாட்சி வந்துள்ளது என்கிறார் அவர்.
ராமானுஜர் சற்று மாறுபட்ட சித்திரத்தை அளிக்கிறார் . அவரை பொறுத்தவரை வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கர்ம காண்டத்தை அதாவது உலகியல்செயல்பாடுகளை முடித்த பின்னரே ஒருவன் யோகத்துக்குள் நுழைதல் வேண்டும். ராமானுஜர் ஜைமினியின் மீமாம்சா சூத்திரங்களில் உள்ள நெறிகளை தர்ம அனுசாசனமாக அதாவது தர்மநெறிகளாகக் காண்கிறார் . அவற்றைச் செய்து அதன் வழியாக தர்மத்துக்கான தேடல் அடங்கிய பிறகே பற்றற்ற ஞானத்துக்கான தேடல்– அதாவது யோகம்– துவங்குகிறது என்கிறார் ராமானுஜர். ராமானுஜ மரபில் இல்லறம் முழுமை பெறாமல் துறவறம் அனுமதிக்கப்படவில்லை.
பதஞ்சலிக்கு முன்னரே பல யோக நூல்கள் பல வடிவில் இருந்திருக்கின்றன என்பதற்கு ஐயமில்லை .அவற்றை பரிசோதித்து ‘சூத்திரங்கள்’ ஆக வகுத்தார் பதஞ்சலி. இப்படி வகுப்பதையே அவர் ‘அனுசாசனம்’ என்கிறார் . இதுவே பதஞ்சலியின் கொடை ஆகும்.
சம்ஸ்கிருதத்தில் அனுசாசனம் என்ற சொல்லுக்கு கட்டளை நெறிகாட்டல் வகுத்துக்கூறல் என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது. ஆகவே ஒரு விவாதத்தின் மூலம் உருவான இறுதிக் கணிப்புகள் இவை என கொள்ளலாம்.
சூத்திரம் என்பதை தமிழில் தேற்றம் என்ற சொல்லால் குறிப்ப்பிடலாம். இங்கே ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சூத்திரங்கள் தர்க்கங்கள் அல்ல. அவை முடிவுகள். அவை நம்மிடம் விவாதிக்க முற்படவில்லை. ஆகவே காரண காரிய விளக்கத்தை அளித்து விளக்கும் குரலோ, வாதிடும் போக்கோ இவற்றில் இல்லை. சூத்திரங்களின் இயல்பும் நோக்கமும் அது அல்ல. நாம் இவற்றை மனப்பாடம் செய்யவேண்டும். அதன் பிறகு அச்சொற்களை மனதுள் போட்டு உருட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது அவை மேன்மேலும் பொருள்களை அளித்தபடி நம் மனதில் விரிந்தபடியே போகும்.
அதாவது இவை மனன மந்திரங்கள். தியானத்தில் நாம் வழிகாட்டியாக கொள்ள வேண்டியவை. தியானத்தில் நமக்கு உருவாகும் அனுபவம் மூலமே இவற்றை நாம் உண்மையில் புரிந்துகொள்ள முடியும். ஓவியத்தைப்பற்றிய ஒரு பயிற்சித் தகவல் ஓவியம் வரையும்போது மேலும் பொருள் பொதிந்ததாக ஆவைதைப்போல . ஒவியம் வரையாமல் அதை வெறும் சொற்பொருளாக மட்டுமே பெற்றுக் கொண்டோமென்றால் அவற்றை நாம் சில சமயம் தவறாகவும் பல சமயம் அரைகுறையாகவும் புரிந்து கொள்ளலாம். அது அபாயகரமானதாகும்
ஆகவே இந்த வரிகளை நமது தர்க்கத்தை நோக்கி திருப்பிக் கொள்ளக் கூடாது . அப்படித் திருப்புவோமெனில் நாம் மிக அர்த்தமற்ற ஒரு மன இயக்கத்தை சென்றடைவோம். ஆனால் அகங்காரம் காரணமாக அதை மிக அறிவார்ந்த ஒரு செயல்பாடாக எண்ணி சுய திருப்தியும் கொண்டிருப்போம். இது மிக அகவயமான ஒரு கருத்துரு பற்றிய விவாதம் . அந்த அகவய அனுபவத்தின் தளத்துக்கு செல்லாமல் இதை புறவய தளத்தில் வைத்து விவாதிப்பதையே அபத்தம் என்றேன். உதாரணமாக ஒரு முறை கூட இசை கேட்காத ஒருவர் இசையைப்பற்றிய இலக்கணங்களை மட்டும் கற்று அவற்றைப்பற்றி ஓயாமல் பேசிக் கொண்டிருந்தால் அதை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள்?
உண்மையில் நமது தேசத்தில் இம்மாதிரி ‘திண்ணை வேதாந்தம் ‘ ஆலமரக்காடு போல விழுதும் வேரும் பரப்பி வளர்ந்துள்ளது. நமது பெரிய சாபமே இதுதான். நமது மரபில் உள்ள அகவயமான கருத்துக்களை அரையும் குறையுமாக கற்றுக் கொண்டு அவற்றை புறவயமான கருத்துருக்களுடன் ஒப்பிட்டுக்கொண்டும், பலவகையான உருவகங்களை கற்பனையால் உருவாக்கியபடியும் நாட்களை கழிப்பது. அனுபவத்தால் அர்த்தப்படுத்தப்படாதவரை இவ்வகை மூளையோட்டல்களினால் எந்த பயனும் இல்லை. மட்டுமல்ல, இவை அகங்காரத்தை வளர்த்து சிந்தனையை தவறான திசையில் கொண்டு சென்று விட்டிருப்பதனால் சம்பந்தப்பட்டவர் எதையுமே ஒழுங்காக யோசிக்க முடியாத குதர்க்கவாதியாக மாறிவிடும் அபாயமும் உண்டு. வேதாந்தம் உட்பட எல்லா ஞானமரபும் இவ்வகை ஆட்களை உருவாக்குகின்றன. இம்மாதிரி மனிதர்கள் அதிகமாக படிக்கப் படிக்க மேலும் மேலும் அபத்தமான குதர்க்கவாதிகளாக ஆகி பொருளிழந்து போகிறார்கள்.
இவை இந்த நூலை அணுகுவதற்கு அவசியமான மனத்தயாரிப்புகள். இந்த சூத்திரம் ஒரு நூல் வரையறைசெய்து சொல்லும் செயலை தொடங்குவதற்கான முகாந்திரமாக அமைகிறது எனலாம்
சூத்திரம் இரண்டு
” யோக: சித்த விருத்தி நிரோத: “
[யோகமென்பது உளச்செயல் தடுத்தல் ]
பதஞ்சலி யோகத்தின் இந்த சூத்திரமளவுக்கு புகழ்பெற்ற சூத்திரங்கள் நமது மரபில் குறைவு. தேவைப்பட்ட இடத்திலும் தேவைப்படாத இடத்திலும் சகட்டுமேனிக்கு இந்த சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது . இவ்வாறு பலவகையான அறிஞர்களால் பலவிதமாக பயன்படுத்தப்படுவதனால் மிதமிஞ்சி விளக்கப்பட்டு ஒரு கட்டத்தில் இச்சூத்திரமே ஓர் அடர்ந்த புதர் போல ஆகிவிட்டிருக்கிறது . ஆகவே நாம் இதன் சொற்களை மட்டுமே கணக்கில் கொண்டு பேசுவது நல்லது என்பது என் எண்ணம்.
ஓர் உவமை .பிரபஞ்சத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அது எல்லா திசையிலும் பரவி விரிந்து சென்றபடியே இருப்பதாக கண்டார்கள். கற்று நிரம்பும் பலூன் ஒன்று விரிவடைகையில் அதில் உள்ள புள்ளிகள் விலகி செல்வது போல பால்வழிகள் விலகி செல்கின்றன என்றார்கள். இது ·ப்ரிஜோ காப்ரா தன் ‘தாவோ ஆ·ப் ·பிசிக்ஸி’ல் அளிக்கும் உவமை.
இவ்வாறு பால்வழிகள் விலகி செல்லும் வேகத்தை கணக்கிட்டார்கள் . அதை எதிர் திசைக்கு போட்டு பார்த்து இப்பிரபஞ்சம் எப்படி ஒரே பொருளாக ஒரு காலத்தில் இருந்திருக்க கூடும் என்று கண்டடைந்தார்கள். எப்போது பெருவெடிப்பு ஒன்று நிகழ்ந்து அதன் துகள்கள் நட்சத்திர மண்டலங்களாக மாறி விலகிச் செல்ல ஆரம்பித்திருக்கும் என்று கண்டார்கள்.
இதை நாம் மனதுக்கும் ஓர் உதாரணமாக போட்டுப் பார்ப்போம். நாம் நம் மனதை அறியும்போது அது ஓயாமல் இயங்கியபடியே இருப்பதைக் காண்கிறோம். நாம் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் அது செயல்பட்டபடியே இருக்கிறது அல்லவா? நாம் மனம் என்று சொல்வது எதை? மனதின் பிம்பங்களின் இந்த ஓட்டத்தைத்தான்.
ஆனால் மனம் என்பது அதுதானா? எந்தக் கருவி அந்த படங்களை தயாரிக்கிறது? எது அவற்றை ஒளிபரப்புகிறது ? எதன் மீது அவை ஓடுகின்றன? அதை பார்ப்பது எந்த விழி?
மனம் என்பது எண்ணங்களின் தொடரோட்டமும் அந்தத் தொடரோட்டத்தை அறியும் இன்னொரு ஓட்டமும் ஆகும். அவற்றில் எது எதை கண்காணிக்கிறது என்பது அந்தத் தருணத்தில் நாம் எப்படி உணர்கிறோம் என்பதைப்பொறுத்தது மட்டுமே. நாம் மனதைக் கவனிக்க ஆரம்பித்ததுமே நாம் கவனிக்கிறோம் என்பதைக் கவனிக்க ஆரம்பிக்கிறோம்.
ஆம், மனம் இயங்கியபடியே இருக்கும் நிலையில் சாதாரணமாக நம்மால் அதை அறிய முடியாது. அப்படி அறிய முயன்றோமெனில் அம்முயற்சி இன்னொரு மன ஓட்டமாக மாறி ஏற்கனவே ஓடியபடி இருக்கும் மற்ற மன ஓட்டங்களுடன் கலந்து விடும். பெரும்பாலானவர்கள் தியானம் செய்யும்போது ”இதோ நான் தியானம் செய்கிறேன்.ஆம் நான் தியானம் செய்கிறேன் . அடாடா நான் தியானமல்லவா செய்கிறேன் . சரி இனி தியானம் செய்யலாம். சரி மீண்டும் முயன்று பார்ப்போம் ” என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.
இங்கே உள்ள சித்தவிருத்தி என்ற சொல் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது. ‘உளச்செயல்’ என்று உள்ளத்தை வரையறுக்கிறது பதஞ்சலி சூத்ரம். அதாவது மனதை ஒரு அமைப்பாக அல்லது பொருளாக அது காணவில்லை. ஒரு நிகழ்வாகவே காண்கிறது. தீபோல. அது ஒரு நிகழ்வு மட்டுமே. மனமெனும் ஓயா நிகழ்வே மனம். மனமெனும் நிகழ்வை மனம் அறிவதே மனம்.
அந்த அறியும் மனம் எது? அதுவும் நிகழ்வா? அந்நிகழ்வில் மாறாதுள்ள விதி என ஏதும் உள்ளதா? நட்சத்திர மண்டலங்களை எதிர்திசைக்கு கொண்டு செல்ல வைப்பதுபோல பிரிந்து சிதறி செல்லும் நம் மனதையும் நேர் எதிர்த் திசைக்குச் செல்லவைத்தால் அவை சென்று சேரும் அந்த துவக்கப்புள்ளி எதுவாக இருக்கும்? யோசித்திருக்கிறோமா? காமம் குரோதம் மோகம் அகங்காரம் என்று விரியும் இந்த ஓயாத மனநாடகத்தின் விதைகள் எங்கே உள்ளன? ஆன்மீக தாகம் ,அறிவுத்தாகம், விடுதலைத்தாகம், சுயத்துக்கான தவிப்பு என்றெல்லாம் நாம் அடையாளம் கொடுக்கும் இச்சா சக்தியின் ஊற்றுக்கண்கள் எங்குள்ளன?
யோகம் என்றால் மனதைக் கையாள்வதற்கான ஒரு பயிற்சி . கையாளும் விஷயத்தை முதலில் அறிந்தாக வேண்டும். அதற்கு மனதை நிறுத்தி அதை கூர்ந்து கவனிக்கவேண்டும். எனவேதான் மனதை கட்டுப்படுத்துதல் , நிறுத்துதல் என ‘ நிரோத ‘ த்தை முதலிலேயே பதஞ்சலி சொல்கிறார்.
இது நம் மூலநூல்களில் பலவற்றின் முக்கியமான இயல்பாகும். எது அந்நூலின் சாராம்சமான கருத்தோ அது முதலிலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. உதாரணமாக ஈசாவஸ்ய உபநிடதம் முதல் வரியிலேயே அதன் மையக்கருத்தைச் சொல்லிவிடுகிறது– இவற்றிலெல்லாமே இறை குடிகொள்கிறது . [ ஈசோ வாஸ்யம் இதம் சர்வம் ] .
யோகம் என்றால் என்ன? மனம் என்பது ஒரு நதி, அதி ஊற்றுக்கு கொண்டு செல்லல். மனம் ஒரு மரம் , அதை விதைக்குக் கொண்டு செல்லல். மனம் ஒரு பறவை, அதை முட்டைக்குக் கொண்டு செல்லல். அதை முதலிலேயே சொல்லிவிட்டு எப்படி என்ற வினாவை எதிர்கொள்கிறது பதஞ்சலி யோக சூத்திரம்.
[தொடரும்]
1 முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை
2 முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை,தொடர்ச்சி
3. முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்