‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 28

பகுதி ஆறு : மணிமருள் மலர் – 1

விழித்தெழுந்தபோது இசைக்கூடம் எங்கும் நிறைந்துகிடந்த உடல்கள் கொண்ட கை கால்கள், கவிழ்ந்த முகங்கள், கலைந்த குழல்கள், அவிழ்ந்து நீண்ட ஆடைகள் நடுவே தானும் கிடப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். கையூன்றி எழுந்து தன் தோள் நனைத்திருந்த உமிழ்நீரை துடைத்தபடி மயங்கும் கண்களால் காற்றிலாடும் திரைச்சீலை ஓவியமென அசைந்த அச்சூழலை நோக்கினான். நெடுநேரம் என்ன நிகழ்ந்ததென்று அறியாது அரக்கில் ஈயென அமர்ந்து சிறகடித்தது அவன் சித்தம். பின்பு அந்தமேடையில் அவன் கண்ட காட்சியின் இறுதி அசைவை கண் மீட்டுக்கொண்டது.

கான்குடிலில் தன் துணைவனுடன் கூடி நடனமிட்ட சத்யபாமா. அவ்விறலி அணிந்திருந்த செம்பட்டாடை காற்றில் இரு சிறகுகளென எழுந்து பறந்தது. அவள் கை பற்றி முகில் மேல் ஒரு கால் வைத்து ஏறி மேலும் மேலும் என அவளைத் தூக்கி விண்மீன் நிறைந்த நீலவானுக்குக் கொண்டு சென்ற நீலன். கருநீல பட்டுத் திரையாக அவர்களைச் சூழ்ந்திருந்த வானில் சிறு துளைகள் வழியாக மறுபக்கம் எரிந்த அகல்விளக்கின் ஒளி விண்மீன்களென அமைக்கப்பட்டிருந்தது. வெண்முகில் குவைகள் வரையப்பட்ட திரையில் கீழ்ப்பகுதியில் குங்கிலியம் புகைந்து முகில் நிறைந்த அரங்கை அமைத்தது.

ஆடலின் அசைவில் அவர்களின் கால்கள் மண் தொடவில்லை என்ற விழிமயக்கை உருவாக்கின. ஒவ்வொரு அடிக்கும் அவன் குனிந்து அவளை கண் நிறைந்த காதலுடன் நோக்கி வருக என்றான். அவளோ அவன் கால் முதல் குழல் வரை நோக்கி இவன் என்னவன் என்ற பெருமிதத்துடன் இதோ இதோ என்று புன்னகைத்தாள். அவர்கள் அணிந்திருந்த உடைக்குள் மறைந்திருந்த தோள்கொக்கிகளில் தொடுத்த பட்டு நூல்கள் வழியாக மேலிருந்து மெல்ல தூக்கப்பட்டனர். கால்கள் மண்விட்டு எழ, சிறகுகள் காற்றில் விரிய, எழுந்து பறந்து முகில்கள் மேவி விண்ணில் சிறகடித்து அரங்கின் மேற்பகுதி வழியாக மறைந்தனர். கூடியிருந்த அனைவரும் குரலெழுப்பி வாழ்த்துக் கூச்சலிட்டு ஆர்த்தனர்.

உள்ளிருந்து சூத்திரதாரன் நடந்து வந்து அரங்கம் நடுவே நின்றான். “அவையீரே, பெரும்காதல் அத்தகையது. அது தன் காதலனை சிறகுகளாக்கிக் கொள்கிறது. அவன் அணைப்பை ஆடையென்றாக்குகிறது. அவன் விழிச்சுடர்களை அணிகளாகப் பூண்கிறது. அவன் சொற்களை சிந்தையாக்குகிறது. அவன் முத்தங்களை மூச்சாக்குகிறது. அது வாழ்க!” என்றான்.  ‘ஆம் ஆம்’ என்று ஆர்த்தனர் அவையோர். வாழ்க வாழ்க என்று கைதூக்கி கூவினர். மேலிருந்து வெண் திரை சரிந்து வந்து அரங்கை மூடி மறைக்க உள்ளிருந்து ஆடிய கூத்தர் ஆட்டர் பாணர் அனைவரும் சேர்ந்து எழுப்பிய மங்கல இசை நிறைவுப் பாடல் ஒலித்தது. அதனுடன் சேர்ந்து பாடியபடி ஒவ்வொருவராக எழுந்தனர். ஏழாதவரே மிகுதியென அவன் கண்டான். இரும்புக் கலமென எடைகொண்டு நிலம் விழைந்த தன் தலையை கைகளில் சாய்த்து படுத்துக்கொண்டான். கண்களை மூடி உள்ளே எழுந்த பசும்காட்டில் புல் விரிவில் பெய்த இள மழையில் சூழ்ந்த மென்நீல ஒளியில் இரு காதலர்களை கண்டான். புன்னகைத்தபடி துயின்றான்.

திருஷ்டத்யும்னன் கை நீட்டி சாத்யகியின் கால்களைப் பற்றினான். அசைத்து “யாதவரே யாதவரே’ என்று அழைத்தான். திடுக்கிட்டு எழுந்த சாத்யகி “இங்குளேன் இளையவரே” என்றான். பின் அருகே கிடந்த தலைப்பாகையை எடுத்து தன் உமிழ்நீரைத் துடைத்தபடி “நீங்களா? நான் என் அரசர் என்றெண்ணினேன்” என்றான். ”இசையவை கலைந்து நெடுநேரம் ஆகிறது யாதவரே… நாம் இங்கு தனித்திருக்கிறோம்” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம்” என்று எழுந்து சாத்யகி கை நீட்டினான். அக்கை பற்றி எழுந்தபோது தன் உடலின் உள் புண் கால் முதல் வலக்கை வரை இழுபட்ட யாழ் நரம்பென வலியுடன் துடிப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். “தங்கள் உள் உடலில் புண் இன்னும் முழுதும் ஆறவில்லையா?” என்றான் சாத்யகி. “அது ஆற இவ்வுடல் புற உலகிற்கு தன்னை கொடுக்க வேண்டும் என்றனர் மருத்துவர்” என்றான் திருஷ்டத்யும்னன். “புண்பட்டு குறைபட்ட உடல் அக்குறை கொண்ட ஓருலகை உருவாக்கிக் கொள்வது வரை இவ்வலி தொடரும் என்றனர்” என்றான்.

புன்னகைத்து சாத்யகி சொன்னான் “உடல் புண்ணும் உளப்புண்ணும் உலகை அறிவது அங்ஙனமே.” திருஷ்டத்யும்னன் இதழ் வளைய மெலிதாக நகைத்து “இச்சிறு தத்துவங்கள் பேசும் வேளை இதுவல்ல என எண்ணுகின்றேன். வெளியே வண்ணங்கள் ஒளி கொள்ளும் நேரம்” என்றான். சாத்யகி இடையில் கைவைத்து உரக்க நகைத்து “ஆம், நானும் முயன்று நோக்குகிறேன். மதுவற்ற வேளையில் ஞானம் பிறப்பதேயில்லை” என்றான். “வெளியே பெண்களின் ஒளி” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி புன்னகைத்து “ஆம், காமம் களி கொள்ளும் வேளை” என்றான்.

இசையரங்கின் வெளியே படியிறங்கி ஒளி பெய்து நிறைந்த முற்றத்தை அடைந்தபோது நகர் நிறைத்து ததும்பிய வண்ணங்கள் சுவரெங்கும் அலையடிப்பதை காண முடிந்தது. மாளிகை நிழல் சரிந்த இடத்தில் நின்றிருந்த அவர்களின் புரவிகள் ஒற்றைக் கால் தூக்கி, தலை தாழ்த்தி கடிவாளம் தொங்க, எச்சில் குழல் மண்ணில் சொட்ட துயின்று கொண்டிருந்தன. துயிலிலேயே சாத்யகியின் மணத்தை அறிந்த அவன் குதிரை விழித்து தலையசைத்து காதுகளை உடுக்கோசையென ஒலித்து ‘பர்ர்…’ என்று அவனை வரவேற்றது. அருகே சென்று அதன் கழுத்தை நீவி விலாவைத் தட்டி சேணத்தில் கால் வைத்து ஏறிக்கொண்டான். “ஏறுங்கள் பாஞ்சாலரே” என்றான். அவன் ஏறிக்கொண்டதும் இருவரும் குளம்போசை தடதடக்க கல் பாவப்பட்ட தரைகளின் ஊடாக துவாரகையின் பெருவீதியை அடைந்தார்கள்.

உச்சி வெயில் நின்றெரிந்த அவ்வேளையிலும் நகரெங்கிலும் களிசோரா யாதவப் பெருங்கூட்டம் நின்றிருந்தது. அவர்களுடன் நதியில் கலக்கும் மழைநீர்ஓடைப் பெருக்கென யவனரும் காப்பிரிகளும் சோனகரும் பீதரும் ஊடறுத்து முயங்கி நின்றனர். பெரிய உதடுகளும் கருபுரிக் குழலும் பேருடலும் குறுமுழவின் குரலும் கொண்ட காப்பிரிகள் வண்ண உடைகள் அணிந்து சற்றே ஆடிச்செல்லும் நடையில் அலைமேல் செல்லும் படகுகளென தெரு நிறைத்துச் சென்றனர். நகர்ப்பெண்டிர் அவர்களை தொலைவில் நின்று மலர் அள்ளி வீசி களிச்சொல் கூவி பகடி ஆடினர். அவர்கள் சொல்லும் சொல்லென்ன என்று காப்பிரிகள் உணர்வதை அவர்கள் கொண்ட நாணம் காட்டியது. “என்ன சொல்கிறார்கள்?” என்றான் திருஷ்டத்யும்னன். “காப்பிரிகளை இப்பெண்கள் களியாடுவது ஒன்றிற்காகவே” என்றான் சாத்யகி. “எது?” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி நகைத்து “பெண்கள் கரிய தூண்களை விழைபவர்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் நகைத்து குதிரையை கால்களால் சுண்ட அவன் புரவி சிறு கனைப்புடன் சாலையைக் கடந்து ஓடியது.

பீதர்கள் குவை வைக்கோல் என தலைக்குடை அணிந்து சிறு குழுக்களாக அமர்ந்து பீங்கான் குவளைகளில் மது அருந்தி மயில் அகவலென ஓசையெடுத்து விரைந்து பேசிக்கொண்டிருந்த சிறுமன்றைக் கடந்து சென்றார்கள். தழல் என குழலும் முகமும் வெயிலில் நின்றெரிய யவனர் சிரித்தபடி சென்றனர். அவர்கள் அணிந்த வெண்ணிற ஆடையை காற்று பறக்க வைத்தது. அவர்கள் மேல் குங்குமக் களபக்குழம்பலை அள்ளி வீசி சிரித்தபடி கடந்து ஓடினர் யாதவப் பெண்கள். “இக்களியாட்டு முடிவதே இல்லை” என்றான் சாத்யகி. “இரவும் பின்பகலும் பின் இரவுமென ஒழியாது நகையாட இப்பெண்களால் மட்டுமே முடியும். எங்கிருந்தோ வந்த மோகினிகள், இயக்கியர், மலைத்தெய்வங்கள் இவர்கள் உடல்கூடி இங்கு தங்கள் விளையாட்டை நிகழ்த்துகின்றார்கள். மானுடர் வெறியாட்டு கண்டிருப்பீர். ஒரு நகரம் வெறியாட்டு கொள்வது இங்கு மட்டுமே.”

சாலையின் இருமருங்கும் பீதர்களின் மென்களிமண் கலங்களில் மது நுரைத்தது. ஊன் உணவு மணத்தது. உண்டும் குடித்தும் துயின்றும் பின் எழுந்தும் களியாடி சலித்தும் நகரில் நிறைந்த மானுடரின் வியர்வை இன்மணமாக காற்றுடன் கலந்திருந்தது. களியாட்டில் குதிரைகளும் கலந்துகொண்டிருப்பதை அவன் கண்டான். மானுட உடலசைவுகளின் வழியாக அவர்களின் உவகையை அறிந்து அதனுடன் இணைந்தது போல அவை உறுமி உடல் சிலிர்த்து கனைத்து கூட்டத்தில் அலைந்தன. யானைமேல் ஏறிய எட்டு பெண்கள் மேலாடை கழற்றி வீசி நகைத்தபடி வெயில்பட்டு பொன்னொளிர்ந்த இளம் கொங்கைகள் அசைய சென்றனர். “கருமுகில் மேல் செல்பவர்கள் போல இருக்கிறார்கள்” என்றான் திருஷ்டத்யும்னன். “அந்த மதகளிறு அறியும் தன் மேல் மதம் ஒழுகும் மங்கையர் அமர்ந்திருப்பதை” என சாத்யகி சிரித்துக்கொண்டு சொன்னான். “ஒருபோதும் உள்ளங்கையில் நீர்க்குமிழியை ஏந்திய மெல்லசைவுடன் யானை இப்படி நடந்து நீர் பார்த்திருக்க மாட்டீர்.” சிரித்தபடி “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன்.

வளைவுச் சுருளென வானோக்கிச் சென்ற சாலையில் இருமருங்கும் எழுந்த மாளிகைகள் அனைத்தும் வண்ணம் பொலிய தோரணங்கள் விரலசைக்க கொடிகள் சிறகென எழுந்து படபடக்க பட்டுப் பாவட்டாக்களும் சித்திரத் தூண்களும் பூத்து நிறைந்திருக்க வசந்தம் எழுந்த காடு என பெருகி நிறைந்திருப்பதை கண்டான். வட்டமிட்டு அமர்ந்து மூலிகைப்புகை இழுத்து விழிசிவந்து குறுமுழவு மீட்டி தங்களுக்குள் பாடி தன்னைமறந்து அமர்ந்திருந்தனர் பாணர் குழுவினர். நடுவே பற்றியெரிந்த தழலென எழுந்து ஒரு விறலி உடல் நெளித்து ஆடினாள். “ராதையே, நீ அறிவாய். கண்ணனை நீ அறிவாய். நீயன்றி யாரறிவார்? யாரறிந்தும் என்ன அவனறிந்தது உன்னையல்லவா? ராதையே நீ அறிவாய்…” என மீள மீள சுழன்று சென்ற பாடல் மகுடி இசையென தோன்றியது. அவள் படமெடுத்த நாகமென நெளிந்தாள். “தாபம் ஒரு தீ. எரிக! தாபம் ஒரு நதி. நெளிக! தாபம் ஒரு முகில். திகழ்க! தாபம் ஒரு கனல். சுடர்க! தாபம் மீள்பெருக்கு. நிறைக! தாபம் தனித்த விண்மீன். தெளிக!” என சுழன்று வந்த சொல்லாட்சி நா பறக்கும் நாகத்தின் நாதம் கொண்டிருந்தது. அவள் எழுந்தாடிய எரி என்றிருந்தாள்.

மாளிகை உப்பரிகைகளில் மதுவுண்டு அமர்ந்திருந்த பெருங்குடியினர் உரக்க சொல்லாடி மதுவை அங்கிருந்து சாலையில் செல்பவர் தலையில் வீழ்த்தி கூவி நகைத்தனர். “இந்நகரில் மது நீராடாத ஒருவரேனும் இப்போது இருக்க வாய்ப்பில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். “இக்காற்றின் மணத்தாலேயே மது மயக்கு கொள்ள முடியும்.” எழுந்த பேரொலி கேட்டு திருஷ்டத்யும்னன் தன் புரவியின் சரடை இழுத்தான்.  குதிரை திரும்பி வளைந்து நிற்க உடல் தூக்கி அப்பால் நோக்கி ஒரு மன்று மக்களால் சூழ்ந்து கரைகொண்டிருப்பதை கண்டான். நடுவே சகடை ஒன்றில் சரடு ஆட கலம் ஒன்று சுழன்று வந்தது. “பாஞ்சாலரே, மழலைக்கால நிகழ்வொன்றை ஒட்டி அமைக்கப்பட்ட ஆடல் இது. சிறுவராடும் விளையாட்டு. வாரும்” என்று சாத்யகி புரவியுடன் அம்மன்றிற்குள் நுழைந்தான்.

திறந்த சிறு செண்டு வெளியில் சூழ்ந்திருந்த மக்களின் நடுவே வட்டமாக வெளித்த தரையில் நாட்டப்பட்ட தூணின் மேல் எழுந்த பெருந்துலாவில் இருந்தது சகடை. அதில் ஓடிச்சென்ற நீள் கயிற்றின் முனையில் கட்டப்பட்ட மூன்றடுக்கு உறிக்கலங்கள் இருந்தன. அவை மலர்சூழ செம்பட்டு முடிச்சுகளால் அணி செய்யப்பட்டிருந்தன. மறுமுனையைப்பற்றிய முதியவர் ஒரு கையால் மீசையை நீவி சிரித்தபடி கயிறை இழுத்து உறியை சுழன்று பறக்க வைத்தார். கீழே நீல மணி உடலும் குழல் கொண்ட பீலியும் கழல் கொண்ட செங்கால்களும் ஒருகையில் வேய்குழலும் மறுகையில் செம்பஞ்சுக் குழம்பிட்ட அணிச்சக்கர குறியுமாக நின்ற இருபது இளஞ்சிறார் பாய்ந்து ஓடி நகைத்து அக்கலத்தை அடிக்க முயன்றனர். சூழ்ந்திருந்தவர்கள் பாணி கொட்டி பற்கள் ஒளிர நகைத்து கூவி அவர்களை ஊக்குவித்தனர். விண்ணில் இருந்து செம்பருந்தென இறங்கி வளைந்து அருகே வந்து அவர்கள் குழல் எட்டி அடிக்க போக்கு காட்டி சுழன்று மேலேறி மீண்டும் அணுகி விளையாடியது உறி. அதிலுள்ளது நறுவெண்ணை என்றான் சாத்யகி.

சிறுவர்கள் துள்ளி அடித்தனர். இலக்கு நழுவ புழுதி படிந்த மண்ணில் விழுந்து எழுந்து அவிழ்ந்த ஆடை அள்ளிச் சுற்றி மீண்டும் ஓடினர். ஒருவர் மேல் ஒருவர் தாவி எழுந்து பற்ற முயன்றனர் இளஞ்சிறுவர்கள்.  எல்லா முகமும் ஒன்றென தெரிந்தன. சில சினம் கொண்டு குவிந்திருந்தன. ஆவல் கொண்டு கூர்ந்திருந்தன. சலிப்புற்று சோர்ந்திருந்ததன. ஆனால் அக்களியை நின்று நோக்குகையில் அத்தனை முகங்களும் ஒரு முகமென விழிமயக்கு காட்டி உவகையில் ஆழ்த்தின. சுழன்று வந்த உறியின் நிழல் அவர்களைத் தொட்டு வருடி எழுந்து விலகியது. “அடியுங்கள் அடியுங்கள்!” என்றான் அருகிலிருந்த ஒருவன். “சின்னக் கண்ணா, அதோ உன் முன்னால்” என்று கைகாட்டிக் கூவினான் ஒருவன். அன்னையருள் சிலர் தங்கள் மைந்தனின் பெயர் சொல்லி அழைத்து உறியை சுட்டிக்காட்டினர்.

அங்கு நின்ற இளம் கண்ணன்களில் எவன் அவ்வுறியை அடிப்பான் என்பதை அக்கணமே திருஷ்டத்யும்னன் அறிந்துகொண்டான். சூழ்ந்திருந்த அன்னையரையும் பிறரையும் ஒரு கண்ணால் நோக்கி மறு கண்ணால் உறியை நோக்கி குறி வைத்து எம்பி ஏமாற்றமுற்று சலித்து பின் உறுதியை மீட்டு மீண்டும் தாவிக்கொண்டிருந்த அவர்கள் நடுவே அவன் மட்டும் தன்னைச் சூழ்ந்து சென்ற உடல்களை முட்டாமல் காலடிகளை ஊன்றி விழிகளைத் தூக்கி அவ்வுறி செல்லும் சுழற்பாதையை மட்டும் நோக்கிக்கொண்டிருந்தான். பின் விழிதூக்கி நோக்கலாகாது என்று உணர்ந்து கீழே சுழன்ற நிழல் நோக்கலானான்.

திருஷ்டத்யும்னன் திரும்பி “நிழலை நோக்குகின்றான். அவனே உறியை வெல்வான்” என்றான். “ஆம் நானும் அவ்வண்ணமே நினைத்தேன். உறியை நோக்குபவன் தானிருக்கும் நிலத்தை மறப்பான். ஒருபோதும் அவனால் உறியடிக்க முடியாது. நிழல் கொள்ளும் உருமாற்றம் வழியாக அதன் அண்மையையும் சேய்மையையும் எப்போது அறிகிறானோ அப்போது அவன் வென்றான்” என்றான். நான்கு வயது கண்ணன் சிறு கால்களை வைத்து புழுதியில் ஓடி உறி நிழலைத் தொடர்வதை ஆர்வத்துடன் திருஷ்டத்யும்னன் நோக்கி நின்றான். மூன்று முறை உறி நிழலை சரியாக கால் வைத்து அவன் தொட்டதும் “உறி அணுகி அகலும் நெறியை அறிந்து விட்டான்” என்றான் சாத்யகி. “ஆம், இக்கணம் இதோ அவன் வெல்லப் போகிறான்” என்றான் திருஷ்டத்யும்னன். தன் உள்ளம் பொங்கியெழுந்து நுனி ஊன்றி நின்று துடிப்பதை அவன் உணர்ந்தான். எளிய இளையோர் விளையாட்டு. அங்கும் வந்து நின்று தன்னைக் காட்டும் புடவி சமைத்த பேராற்றலின் பகடை நுட்பத்தை வியந்தான்.

இளையோன் நிழல் நோக்கி சுற்றி வந்தான். அவன் உறியை நோக்கவில்லை என்றெண்ணிய முதியவர் உறியைச் சுழற்றி அவன் தலைக்கு மேல் கொண்டு வந்த ஒரு கணத்தில் எம்பி தன் கையிலிருந்த வேய்குழலால் கலத்தை ஓங்கி அறைந்தான். கலம் உடைந்து அவன் மேல் பொழிந்தது வெண்நுரை வெண்ணை. துடித்து எழுந்து கை வீசி தலைப்பாகை கழற்றி வீசி மேலாடை சுழற்றி எறிந்து கூச்சலிட்டு ஆர்த்தது சூழ்ந்திருந்த கூட்டம். உடலெங்கும் பெய்த வெண்ணையுடன் கை நீட்டி உறியை பற்றிக்கொண்டான் சிறு குழந்தை. முதியவர் சிரித்தபடி உறியை மேலே தூக்க இறுகப் பற்றி உறிக்கலத்துடன் சற்று மேலெழுந்து நிலம் தொடாது அவர்களின் தலைகளின் மேல் பறந்து சென்றான். “கண்ணன்! கண்ணன்! கண்ணன்!” என்று பெண்கள் குரலெழுப்பினர்.

பாணர் ஒருவர் தன் துடியை மீட்டி “இனிய வெண்ணையில் ஆடுக மைந்தா! புல்வெளியின் பனித்துளிகளால், பசு விழிகளில் திரண்ட கருணையால், அன்னை மடி சுரந்த வெம்மையால், ஆய்ச்சியர் கை தொட்ட நுரைச் சிரிப்பால், இரவெலாம் உருகிய இனிமையால் ஆனது இவ்வெண்ணை. கொள்க! உன் இதழும் இளவயிறும் நிறைய உனக்கென இங்கு எழுந்தது இவ்வெண்ணை” என்று பாடினார். உறியை கைவிட்டு முதியவர் ஓடிச்சென்று இளையவனை எடுத்து தோளில் ஏற்றிக்கொண்டார். அன்னையர் ஓடிச்சென்று அவரவர் குழந்தைகளைத் தூக்கி தோளேற்றிக்கொண்டனர். அத்தனை குழந்தைகளும் அவர்களின் தந்தையர் தோளிலேறி அலை மேல் நீந்துபவர்கள் போல அக்கூட்டம் மேல் சுற்றி வந்தனர். எவர் வென்றனர் என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்று தெரிந்தது. அத்தனை குழந்தைகளும் வென்றவர் போல கை நீட்டி ஆர்ப்பரித்தனர்.

“செல்வோம்” என்றான் சாத்யகி. “அனைவரும் வெல்லும் ஓர் ஆடல் இம்முதிரா இளமைக்குப் பின் வருவதே இல்லை” என்றான் திருஷ்டத்யும்னன். “சிறு தத்துவம் பேசும் வேளை வந்து விட்டது என்று எண்ணுகிறீரா பாஞ்சாலரே?” என்றான் சாத்யகி. உரக்கச் சிரித்தபடி திருஷ்டத்யும்னன் தன் புரவியை முடுக்கினான். “மது அருந்திவிட்டு நாம் சிறுதத்துவத்தைக் கொண்டு ஒரு பகடையாடினால் என்ன?” என்றான்.

துவாரகையின் உள்கோட்டை வாயிலில் காவலன் கள் மயக்கில் விழுந்து கிடந்தான். அவனைக் கடந்து சென்ற அவர்களின் புரவிகளை நிறுத்தி மேலிருந்து ஒருவன் இறங்கினான். “இளையோரே, அரசர் அவை நின்றிருக்கிறார். தங்களைக் கண்டதும் அங்கு வரச் சொன்னார்” என்றான். “ஆம்” என்று சொல்லி திரும்பி சாத்யகி “அரசர் அவையிருக்கிறார். நாம் அவரை காண்போம்” என்றான். திருஷ்டத்யுமனன் “இந்நகரம் முழுக்க களிகொண்டிருக்கையில் அவர் மட்டும் மன்றிருப்பது வியப்பளிக்கிறது” என்றான். “இந்நகரைவிட கள்மயக்கு நிறைந்த சித்தம் கொண்டவர் அவர். ஆனால் அம்மயக்கின் நடுவே எப்போதும் அனல் விழித்திருக்கிறது என்பர் சூதர்” என்றான் சாத்யகி. “வருக ” என்று உள்ளே அழைத்துச் சென்றான்.

அரண்மனைப் பெருமுற்றம் எங்கும் எதிர்மாளிகை நிழல் விழ அங்கே அருகே உடைவாள் ஒளிர்ந்துகிடக்க மது மயக்கில் வீரர்கள் துயில்வதை கண்டனர். “இக்கணம் ஒரு சிறு யவனர் குழு வந்திறங்கி இந்நகரை கனிந்த பழமென கொய்ய முடியும்” என எண்ணிக்கொண்டான். அவ்வெண்ணத்தை அறிந்ததுபோல் திரும்பிய சாத்யகி “இந்நகரமெங்கும் இன்று வீரர்கள் கள்மயக்கு கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு கணமும் துயிலாத வீரர்களால் துறைமுகம் காக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இம்மயக்கு நகர்கொள்ளும் புறநடிப்பு மட்டுமே. அதன் மந்தண அறைகளில் கூர்வேல்கள் ஒளிரும் கண்களுடன் வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள்” என்றான். “இளைய யாதவருக்கு பல்லாயிரம் கைகள் பலகோடி கண்கள் என்றொரு சொல் உண்டு. இந்நகரில் அவர் பார்க்காத இடமென்று ஒன்றில்லை என்றறிக!” என்றான்.

அரண்மனைப் பெருமுகப்பில் புரவியைப் பற்ற வந்த காவலனின் கண்களைக் கண்டதும் திருஷ்டத்யும்னன் அதை உணர்ந்தான், அவன் கணமும் சோர்பவன் அல்ல என்று. கிருஷ்ணனின் நிழல்வடிவென அங்கு அவன் இருப்பதாக எண்ணிக்கொண்டான். இறங்கி கடிவாளத்தை அவன் கையில் அளித்து தரையில் நின்றபோது அவன் உடல் நீர் மேல் எழுந்த படகென சற்றே ஆடியது. திரும்பி “என் உடையெல்லாம் மது நாறுகிறது யாதவரே… இப்படியே துவாரகைக்கரசைப் பார்ப்பது முறையாகுமா? என்றான். “மது மயக்குடன் பார்க்கத்தக்க மன்னரென இப்புவியில் இன்றிருப்பவர் இவர் ஒருவரே” என்று சிரித்த சாத்யகி “வருக!” என்று அவன் தோளை தட்டினான்.

ஏழு வெண்பளிங்குப் படிகளில் ஏறி உருண்ட இரட்டைத் தூண்களால் ஆன நீண்ட இடைநாழியில் பளிங்குத் தரையில் குறடு ஒலிக்க நிழல் தொடர நடந்தனர். திறந்த விழிகளெனத் தெரிந்த கதவுகளுக்கு அப்பால் சாளர ஒளி நீர் நிழலென விழுந்துகிடந்த வெண்பளிங்குத் தரை கொண்ட அறைகளையும், அலுவலர்கள் அமர்ந்து பணியாற்றிய கூடங்களையும், காவலர் தங்கள் நிழல் துணையுடன் நின்றிருந்த முனைகளையும் தாண்டி நடந்து சென்றனர். வெண்பளிங்கால் ஆன அரண்மனை என்று திருஷ்டத்யும்னன் எண்ணிக்கொண்டான். மரம் அரிதாகவே இங்கு மாளிகைக்கு பயன்பட்டிருக்கிறது. அச்சொல்லையும் அப்போதே கேட்டவன் போல “இது கடல் துமி வழியும் நகரம் பாஞ்சாலரே. இந்நகரில் எரிவெயிலில் இத்தனை தொலைவு வந்தும் வியர்த்திருக்க மாட்டீர்கள். இத்துமி பட்டு நகரின் மாளிகைகள் அனைத்தும் வியர்வை வழிய நின்றிருப்பதை காண்பீர். வெண்பளிங்கு உப்பு நீரில் உட்காது. மரம் சில நாட்களிலேயே கறுத்து உயிரிழக்கும்” என்றான்.

வணங்கிய வீரர்களின் நடுவே வழிவிட்ட வேல்களைக் கடந்து ஏழு பெருவாயில்களுக்கு அப்பால் சென்று அமர்ந்திருந்த சிற்றமைச்சரிடம் தங்கள் வருகையை சொன்னார்கள். “வணங்குகிறேன் இளையோரே! அரசர் அவை அமர்ந்துள்ளார். உள்ளே செல்க!” என்று அவர் வழியமைக்க வீரன் ஒருவன் வழிகாட்ட மாளிகையின் அறைகளைக் கடந்து சென்று மூடிய பெருவாயிலின் முன் நின்றனர். வாசலில் நின்ற நான்கு காவலர்களும் அவர்களை பணிந்தனர். “உள்ளே மன்று கூடியிருக்கிறது” என்றான் சாத்யகி. “அமைச்சரும் அயலவர் சிலரும் இருக்கிறார்கள்.” வியப்புடன் “எப்படி தெரியும்?” என்றான் திருஷ்டத்யும்னன். “இவ்வாயிலில் உள்ள சிறு கொடிகள் குறிமொழியின் சொற்கள் போன்றவை” என்றான்.

பெருவாயில் விழி இமையென மெல்லத் திறந்து வெளிவந்த பொன்நூல் பின்னலிட்ட தலைப்பாகை அணிந்து குண்டலம் ஒளி விடும் ஏவலன் “இளைய யாதவர் தங்களைப் பார்க்க விழைகிறார். தாங்கள் அவைபுகலாமென ஆணை” என்றான். திருஷ்டத்யும்னன் “நான் கொணர்ந்த பரிசுப்பொருட்கள் என் கலத்தில் உள்ளன. அவை கரை சேர்ந்துவிட்டனவா?” என்றான். “அவற்றை இளைய யாதவர் முன்னரே கண்டிருப்பார். இங்கு எதுவும் செயல்பிழைப்பதில்லை” என்றான் சாத்யகி. கதவைத்திறந்து உள்ளே நுழைந்தபோது திருஷ்டத்யும்னன் சியமந்தக மணியை நினைவுகூர்ந்தான்.

முந்தைய கட்டுரைவெள்ளை மலைகளிடையே
அடுத்த கட்டுரைபாஸ்டன் உரை – வாசிப்பின் விதிகள்