பகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 7
அவன் விரல்கள் நீளமானவை என அவள் அறிந்திருந்தாள். வெம்மையானவை என உணர்ந்திருந்தாள். அவை முதல் முறையாக தன் விரல்களைத் தொடும்போது அறிந்தாள், ஒருபோதும் அவற்றை அவள் உணராமல் இருந்ததில்லை என்று. அவ்விரல்கள் தொட்டு வரைந்த சித்திரம் தன்னுடல் என்று. அவ்விரல்கள் வருடி குழைந்து வனைந்த கலம் தன் உடல் என்று. மன்று நின்ற அவன் இடப்பக்கம் அவனுக்கிணையான உயரத்துடன் அவனுடல் நிகர்த்த உடலுடன் தலை தூக்கி விழிநிலைத்து புன்னகைத்து அவள் நின்றாள். சூழ்ந்த பின்நிரையில் எவரோ “பெண்ணெனில் நாணம் வேண்டாமோ?” என்றார். பிறிது எவரோ ”யாதவ குல மூதன்னையர் எங்கும் நாணியதில்லை” என்று மறுமொழி சொன்னார். அவள் இதழ்களில் நின்ற புன்னகையை நோக்கி “வென்றவள் அவள். வெல்லப்பட்டவன் அவன்” என்றாள் மூதாய்ச்சி ஒருத்தி. இளைய ஆய்ச்சியர் வாய்பொத்தி நகையடக்கிக்கொண்டனர்.
சத்ராஜித் அவர்கள் இருவரையும் தலைதொட்டு வாழ்த்தி “மணியில் ஒளியென இவள் உம்மில் திகழட்டும் இளையோனே! நீங்கள் இருவரும் கொண்ட இந்நிறைவு முன் நிற்கையில் ஒன்றை அறிகிறேன். நான் எளியவன். இங்கு நிகழும் ஒவ்வொன்றும் எனக்கப்பால் ஏதோ எனத் தன்னை நிகழ்த்துகிறது. ஆயினும் இரு கைதூக்கி உங்கள் இருவரையும் தலை தொட்டு வாழ்த்தும் தகுதியை இவளை மகளெனப் பெற்றேன் என்பதனால் மட்டுமே அடைகிறேன். அப்பேறுக்கென மூதாதையரை மீண்டும் இத்தருணம் வணங்குகிறேன். நீடூழி வாழ்க!” என்றார். அச்சொல் முடிக்கும் முன்னரே இடக்காலிலிருந்து உடல் எங்கும் ஏறிய விதிர்ப்பால் நிலையழிந்து விழப்போனவரை அமைச்சர் பற்றிக் கொண்டார்.
குலப்பூசகர் முன் வந்து ”இளையோனே! உன் கன்னியுடன் வந்து எம் குடி மூதன்னையரை வணங்குக! எங்கள் மணமுறைகளை நிறைவு செய்க!” என்றார். அவள் கரம் பற்றி மூத்தோர் சூழ்ந்த அம்மன்றில் ஏழு அடி வைத்து மணநிறைவு செய்து அவன் நின்றான். இளம்பாணர் ஒருவர் இரு மலர் மாலைகளை கொண்டுவந்து அவர்களிடம் அளித்தார். அவற்றை தோள் மாறி மும்முறை சூட்டிக் கொண்டனர். மங்கலமுதுபெண்டிர் மூவர் தாலத்தில் எட்டு மங்கலங்களுடன் கொண்டுவந்த மஞ்சள் சரடில் கருமணி கோத்த மங்கல நாணை அவன் அவள் கழுத்தில் கட்டினான். அவள் இடையை தன் இடக்கையால் வளைத்து சுட்டு விரலால் மெல்லிய உந்திச் சுழி தொட்டு யாதவர் தம் குலம் வகுத்த மணமுறைச் சொல்லை சொன்னான். “இந்த இனிய நிலம் மழை கொள்வதாக! இங்கு அழகிய பசும்புற்கள் எழுவதாக! முகில் கூட்டம் போல் பரவிப்பெருகிச்செல்லும் கன்றுகள் இதை உண்ணட்டும். அமுத மழையென பசும்பால் பெருகட்டும். பாலொளியில் இப்புவி தழைக்கட்டும். ஓம்! அவ்வாறே ஆகுக!”
பின் இருவரும் கைகள் பற்றி யாதவர் குடிசூழச் சென்று குறுங்காட்டின் விளிம்பில் கற்பீடத்தில் உருளைக் கற்களென விழி சூடி மலரணிந்து அமர்ந்திருந்த மூதன்னையரை வலம் வந்து வணங்கினர். சிருங்கசிலையின் சத்ரர் தன் வளைகோல் தூக்கி “இன்று அந்தகர் குலத்து மாபெரும் உண்டாட்டு நிகழும். அறிக ஆயரே, இன்று தொடங்கி நிறைவு என இனி ஏதும் இல்லையென அனைவரும் உணரும் வரை உண்டாட்டு மட்டுமே இங்கு நீளும்” என்று கூவ யாதவர் கை தூக்கி ஆர்ப்பரித்து சிரித்தனர். உண்டாட்டுக்கென ஊனும் குருதியும் ஒருக்க மூதாயர் கத்திகளுடன் விரைந்தனர். நெய்ப்புரைகள் நோக்கி மூதாய்ச்சியர் சென்றனர். அடுமனையாளர்கள் நூற்றுவர் செங்கல் அடுக்கி அடுப்பு கூட்டத் தொடங்கினர். ”கடி மணம் கொண்ட காதலர் இருவரும் நீடூழி வாழவென்று உண்ணுவோம்” என்று பாணன் யாழ் மீட்டி தன் சொல்லெடுத்தான்.
அவர்கள் விழிகலைந்த பொழுதில் அவன் திரும்பி அவள் விழிகளை நோக்கி மெல்ல “உன் வஞ்சினத்தின் பொருட்டே வந்தேன்” என்றான். சினந்து சிறுமூக்கு அசைய “இல்லையென்றால் வந்திருக்க மாட்டீர்களா?” என்றாள். “வருக என நீ அழைத்தாக வேண்டும், அதற்கென்று காத்திருந்தேன்” என்றான். முகம் கனல்கொள்ள உடல் பதற எழுந்த பெரும் சினத்தால் அவள் அவன் கையை உதறி ”நான் அழைத்திருக்காவிடில் வந்திருக்க மாட்டீர்களா?” என்றாள். சிரித்து “ஆம். அதிலென்ன ஐயம்?” என்றான். நாகமென மூச்சொலிக்க “நான் அழைத்ததை மீளப் பெற்றுக் கொள்கிறேன். விட்டுச் செல்க!” என்றாள். நெஞ்சிலணிந்த மலர் ஆரம் சினங்கொண்டு திரும்பிய தோளுக்குக் கீழே ஒசிந்த இடமுலை மேல் இழைய “எவராலும் நிறைக்கப்படுபவளல்ல நான். என் நிறைநிலைக்கு இறைவனும் தேவையில்லை!” என்றாள்.
அவன் அவள் தோளைத் தொட்டு ”என்ன சினம் இது பாமா! ஒரு ஆணென உன் அழைப்பை நான் எதிர்நோக்கலாகாதா?” என்றான். அவன் கையை தன் இடக்கையால் தட்டிவிட்டு “என் பெண்மையை கொள்வதென்றால் என் அழைப்பை ஏற்றல்ல, உங்கள் விழைவை உணர்ந்து நீங்கள் வந்திருக்க வேண்டும்” என்றாள். ”என் விழைவுதான் உன் அழைப்பாயிற்று” என்றான். அவள் தன் கன்னம் தொட வந்த அவன் கையை முகம் திருப்பி விலக்கி ”வீண் சொல் வேண்டியதில்லை. என் அழகை விரும்பி வருக! என் காதலை நாடி வருக! என் குலம் நாடி வந்திருந்தால் என்னுள் வாழும் தெய்வங்கள் இழிவடைகிறார்கள்” என்றாள். ”ஆம் தேவி, உன் அழகின்பொருட்டே வந்தேன். உன் காதலுக்காகவே வந்தேன்” என்றான். “காமம் இருந்தால் காதல்கொண்டிருந்தால் ஏன் அழைப்புக்கென காத்திருந்தீர்?” என்று அவள் குரல் எழுப்பிக் கேட்டாள். “உன் கேள்விகளுக்கு மறுமொழிசொல்லும் கலை அறியேன். என்மேல் கருணைகொள்க!” என்று அவன் கைகூப்பினான்.
அருகே கூடியிருந்த மூதாய்ச்சியர் வாய் பொத்திச் சிரித்து ”முதல் பூசல் இன்றே தொடங்கியிருக்கிறதா?” என்றனர். சீறும் விழிகளை அவர்களை நோக்கித்திருப்பி ”ஆம், அடிபணியாத ஆண்மகனை நான் அணுக விடேன்” என்றாள் பாமா. அவன் சிரித்து ”அடிபணியக் கற்றவன் சிறந்த காதலன் என்று அறிவேன்” என்றான். மூதன்னை ஒருத்தி ”அவ்வண்ணமெனில், அடி பணிக யாதவனே!” என்றாள். ”அவ்வாறே ஆகுக!” என்றுரைத்து அங்கேயே மண்டியிட்டு அவள் கால்களைத் தொட்டு தன் முடி வைத்து வணங்கி, ”உன் காதலன்றி பிறிதெதையும் நாடேன்” என்றான். சூழ்ந்திருந்த யாதவர் திகைத்துத் திரும்பி நோக்க பாமா புன்னகைத்தாள். யாதவர் பெருங்குரலெடுத்து நகைக்க அங்கெங்கும் வெண் குருவிக்கூட்டம் ஒன்று வானில் சுழல்வது போல் பல்லாயிரம் புன்னகைகள் எழுந்தன.
முகம் சுளித்து மஹதி அவர்கள் அருகே வந்தாள். “என்ன இது? பெண்ணே, நீ நகையாடலுக்காக என்றாலும் இதைச்செய்யலாமா? மண்ணாளும் மன்னனின் முடி அது. பெண்முன் பணியலாமா?” என்றாள். “இது பெண்ணல்ல அன்னையே, பெருந்திரு. இம்மண்ணில் நான் நகராக செல்வமாக வெற்றியாக புகழாக நாடுவது அதைமட்டுமே” என்றான் இளைய யாதவன். “இம்மலர்ப்பாதங்கள் என் சென்னியில் என்றுமிருப்பின் அருள்கொண்டவன் நான்.”
“என்ன பேச்சு இது இளையோனே? முதல் கயிறை விட்டவன் கன்றை எப்போதைக்கும் என விட்டவனே என்பார் ஆயர்” என்றாள் மஹதி. அவனோ முழுதும் விட்டு அவள் காலடியில் உதிர்ந்தவன் என்றிருந்தான். அவன் தோள் தொட்டு தூக்கி தன் குழலில் மலரென சூடிக் கொண்டவள் போலிருந்தாள் அவள். குலமுறை பூசனைக்கு கூட வந்த ஆயர் மகளிர் அவரிருவரையும் நோக்கி நோக்கி நகையாடினர். ”விருஷ்ணி குலத்தோனே! நீ விழுந்துவிட்டாய். இனி எஞ்சிய வாழ்நாளெல்லாம் அக்கால்களே உனக்கு கதியென்றாகும்” என்றாள் முதுமகள். ”அவனை அள்ளி உன் கழுத்திலொரு மணியாரமாக வைத்துக்கொள். இனி அங்கு நெளிவதே அவன் காதலென்றாகும்” என்றாள் இன்னொருத்தி.
சிரித்து கைப்பாணி கொட்டி அவளைச் சூழ்ந்து களியாடினர் ஆய்ச்சியர். அவளோ சிறு சினம் சிவந்த முகத்துடன் அவனை நோக்கி, “மாயனே, உன் ஆடலை இவர் அறிந்திருக்கிறார்கள் போலும். இல்லையேல் ஏன் இச்சொற்களை சொல்கிறார்கள்?” என்றாள். ”எவ்வாடல்?” என்று அவன் குனிந்து கேட்டான். ”எத்தனை பெண்களை அறிவாய் நீ? இப்போதே சொல்!” என்றாள் அவள். புன்னகையுடன் ”பெண்கள் என்னை அறிந்துள்ளார்கள். நானென்ன செய்வேன்?” என்றான். ”கீழோனே, இப்பசப்புகள் என்னிடம் தேவையில்லை. விலகு!” என்று தன் கரம் பற்றிய அவன் கையை உதறி முகம் திருப்பி தோள் விலகினாள்.
மீண்டும் அவள் கரம் பற்றி அவள் காதில் அவன் சொன்னான் “என்னை அறியும் பெண்களை எல்லாம் நானுமறிவேன். துவாரகையின் சூதர் ஒவ்வொரு வீட்டிலும் அந்திச் சுடரென என் விழி எழுவதாக சொல்கிறார்கள். நீருள் மீன்களென நீந்தி நான் அவர்கள் உடல்கொள்ளும் அழகை நோக்குவதாக பாடுகிறார்கள். நானொன்றறியேன்.” ”நன்று. இன்று இச்சுடர் சான்றாக இதைச் சொல்லுங்கள்! உங்கள் விழி தொடும் முதல் பெண் நான் அல்லவா?” என்று அவள் கேட்டாள். ஒரு கணமும் மாறாப் புன்னகையுடன் “தேவி! ஆண் உடலெங்கும் பூத்திருப்பது அவன் விழியல்லவா? அவன் மொழியிலெல்லாம் திறந்திருப்பது கண் ஒளியல்லவா?” என்றான்.
“சீ, நீ என்ன அரங்கேறிய ஆட்டனா? நேர்வரும் சொல்லுக்கு ஒருபோதும் மறுமொழி சொல்லாதே! சொல்வதெல்லாம் கவிதை. பொருள் பிரித்தால் நஞ்சு!” என்று சொல்லி அவள் திமிறி விலகிச் சென்றாள். அவன் சிரித்துக்கொண்டு நீட்டிய கையில் அவள் மேலாடை சிக்கியது. “நில்! நில் பாமா! இன்று நம் மணநாள். இன்று ஒருநாள் நாம் பூசலிடாதிருப்போம்” என்றான். “விடு என்னை, வீணனே. நீ காதலன் அல்ல. கரந்து வரும் கள்வன்” என இடக்கையால் அதை சுண்டி இழுத்து திரும்பி நடந்து சென்று தன் தோழியர் பின்னே அமர்ந்தாள். பூத்து சிரிக்கும் தோழியர் முகங்கள் நடுவே கடுத்து திரும்பி அமர்ந்திருந்தாள். அவன் முகம் நோக்கி விழிசுருக்கி சிரித்தபின் அவளை நோக்கி நகையாடி “சூரியனைக் கண்டு திரும்பிய தாமரை உண்டோ தோழி!” என்று ஒருத்தி பாட “இது நீலச்சூரியன், களவால் கருமைகொண்டவன். அவனை நான் வெறுக்கிறேன்” என்றாள் பாமா.
“அவ்வாறே ஆகுக!” என சினம் காட்டி திரும்பிச் சென்றான். விட்டுச் செல்லும் அவன் கால்களைக் கண்டதுமே ஒவ்வொரு அடிக்கும் ஒருமுறை என இறந்து பிறந்தாள். எழுந்தோடிச் சென்று அவன் கால்களில் விழவேண்டுமென அகம் எழுந்தாள். ஆயிரம் முறை பறந்தும் அக்கிளையிலேயே அமர்ந்திருந்தாள். அவன் தலை திரும்புவான் என்று விழிகூர்ந்திருந்தாள். சென்று அவன் மறைந்த பின் ஒரு கணம் விசும்பி விழிநீர் சொரிந்து மேலாடை முனை எடுத்து முகம் மறைத்து தலை குனிந்தாள். சூழ்ந்திருந்த ஆய்ச்சியர் மகளிர் “கைபிடித்த மறுகணமே ஊடல் கொண்டு வந்தமர்ந்திருக்கிறாள். இனி நாளும் ஒரு ஊடலென இவள் உறவு வளரும்” என்று களியாடினர். அவள் அச்சொற்களை ஒவ்வொன்றும் காய்ச்சிய அம்புகளென உணர்ந்தாள்.
”நான் ஒரு கணமும் ஊடியதில்லை தோழியரே! என் சிறு கைகளில் இருந்து இந்நீலமணி ஒவ்வொரு கணமும் வழுவுவதை நீர் அறிவீரோ?” என்றாள். நீலக் கடம்பு அவள் மேல் மழைத்துளி என மலருதிர்க்க, நிமிர்ந்த போது அக்கிளை பற்றி உலுக்கி அவள் மேல் கவிந்திருந்த நீல முகத்தைக் கண்டாள். அதிலிருந்த புன்னகை உதிராத சுடர்மலரென நிற்க திரும்பி எழுந்து அவனை அள்ளி அணைத்துக் கொண்டாள். ஆனால் அதை தன் உடல் நிகழ்த்தாமை அறிந்து சிலையின் விழிகளுடன் அங்கே அமர்ந்திருந்தாள்.
அவள் நெற்றியில் விழுந்து, இதழ் சரிந்து, கழுத்தை வருடி முலைக்குவையின் மடிப்புக்குள் விழுந்த மலரை அவன் நோக்க மேலாடையை இழுத்து அதை மூடி தலை குனிந்து உடல் குறுகினாள். அவள் பின் மண்டியிட்டு அமர்ந்து “என்னடி கோபம்?” என்று அவன் கேட்டான். ”கோபமொன்றில்லை. கோபிக்க நான் யார்?” என்று அவள் சொல்ல, “ஏன்? நீ எவரென ஆக வேண்டும்?” என்றான். சினத்துடன் விழி தூக்கி ”நான் விழைவதொன்றே. உன்னைத் தின்று என் உடலாக்க வேண்டும். எனக்கு அப்பால் நீயென ஏதும் எஞ்சியிருக்கலாகாது. நீ விளையாட ஒரு மலர்வனம். நீ விழி துயில ஒரு மாளிகை என் வயிற்றுக்குள் அமைய வேண்டும்” என்றாள். ”ஆம்! நான் விழைவதுவும் அதுவே! உன்னில் கருவென்றாகி ஒரு மைந்தனென மண் திகழ” என்று அவன் காதில் சொன்னான்.
“சீ!” என்று சினந்து உடல் மெய்ப்புற்று அவன் கை விலக்கி எழப்போனவளை இடை வளைத்து அணைத்து திருப்பியபோது கச்சை நெகிழ்ந்து முலைகளின் இடைக்கரவு வழி சரிந்து உந்திமேல் படிந்த அவன் கைமேல் அம்மலர் விழுந்தது. அதை எடுத்து முகர்ந்து ”புது மணம் பெற்ற மலர்!” என்றான். சிவந்த முகத்துடன் “அய்யோ” என்று மீண்டும் சினந்து அவன் கையை தட்ட முயன்றாள். “கள்வா, இந்தக் காதல் கலை எல்லாம் கை பழகாது வருமா என்ன? எத்தனை மகளிர் தங்கள் உடலளித்தார்கள் உனக்கு?” என்றாள். ”உள்ளம் அளித்த மகளிர் பல்லாயிரம் பேர் தேவி! உடலளித்தவர் என எவரையும் அறியேன்” என்றான். “பொய்” என்று சொல்லி அவன் தோள்களில் அவள் தன் இரு கைகளாலும் அறைந்தாள். ”பொய் சொல்லி என்னை மயக்குகின்றாய்! என்னை உன் அடிமையாக்குகிறாய்! அறிக! நான் அந்தகக் குலத்து யாதவப் பெண். ஒரு போதும் ஆண் மகனுக்கு அடிமையாக மாட்டேன். ஒரு போதும் ஆண் மகன் முன் நிகரிழக்க மாட்டேன்” என்றாள்.
“ஆம்! அதை அறிவேன். என் அருகே சரியென அமர்ந்து அரியணை நிறைக்கவென்றே உன்னை கொண்டேன்” என்றான். “என் குடியின் மூதன்னையர் கொண்ட முகமல்லவா உன்னுடையது? நீ என் மடிதவழும் அவர்களின் அருள் அல்லவா?” அம்மலரை அவள் குழலில் சூட்டி ”உன்னை முத்தமிட்ட மலர். ஒரு முத்தம் உன் குழலில் இதோ என்னால் சூட்டப்பட்டது” என்றான். உடல் எங்கும் பரவிய மழை வருடலை உணர்ந்தாள். கை தூக்கி அம்மலரைத் தொட்டபோது தன் நெஞ்சு கனிந்து கண் கசிந்து உடல் உருகி வழிவதை அறிந்தாள்.
“உண்டாட்டுக்கு எழுக யாதவரே” என்று கூவியபடி வந்தான் பாணன். “உண்டு உடல் நிறைக! பண் கொண்டு உளம் நிறைக!” என்று சுற்றிவந்தான். கூச்சலிட்டபடி யாதவர்கள் எழுந்து உண்டாட்டுக்கென ஒருக்கப்பட்ட திறந்தமுற்றத்திற்கு சென்றனர். முற்றத்தின் முதல்வாயிலில் நின்ற சத்ராஜித் கைகூப்பி குலமூத்தாரையும் பிறரையும் அமுதேற்க அழைத்தார். குடித்தலைவர்களும் பூசகர்களும் ஒவ்வொருவராக சென்று அமர்ந்தனர். நீளமான ஈச்சைமரத்தடுக்குகள் விரிக்கப்பட்டு அதன்பின் மண்தாலங்கள் வைக்கப்பட்டிருந்தன. மூத்தாரும் பெண்டிரும் அமர்ந்தபின் பிறர் என யாதவர்முறைப்படி அனைவரும் அங்கே நிறைந்தனர். மஹதியும் ஏழு மூதன்னையரும் சேர்ந்து பாமையையும் கிருஷ்ணனையும் அழைத்து வந்து பந்தி நடுவே இட்ட மைய இருக்கையில் அமர்த்தினர்.
இளம்விறலி ஒருத்தி நீலமுகிலென பட்டாடை அணிந்து இரு தோளிலும் ஒன்றுபோல் இருந்த இரு பொற்குடங்களுடன் நடந்து வந்தாள். அவளுக்கு வலப்பக்கம் வெண்ணிற ஆடை அணிந்து புதுப்பாளையால் ஆன பொன்முடி சூடி தேவர்கள் என ஏழுபாணர் நடனமிட்டு வர இடப்பக்கம் கரிய ஆடை அணிந்து நீலமுடிசூடி அசுரர்களாக எழுவர் வந்தனர். குறுமுழவை மீட்டி மெல்ல ஆடி பண்டு பாற்கடல் கடைந்து அமுது கொண்ட கதையை பாடியபடி அவர்கள் வந்தபோது யாதவர் கை கொட்டியும் சிரித்தும் ஊக்கினர். அமுதக்கலங்களை கொண்டுவந்து பாமாவின் முன்வைத்தனர்.
மூதன்னை ஒருத்தி “இது நம் குலமுறை மகளே. இதில் ஒருகலத்தில் வேம்பின் கசப்புநீர் உள்ளது. இன்னொன்றில் இருப்பது இன்நறும்பால். உன் கைகளால் ஒன்றிலிருந்து அமுதள்ளி அவனுக்கு அளி” என்றாள். “உன் கைகளால் நீ எடுப்பது இனிப்பா கசப்பா என்று அறிய விழைகிறது ஆயர்குலம்.” யாதவர் கைகொட்டி சிரித்து “கசப்பைக்கொடு… கள்வனுக்கு உன் கசப்பைக்கொடு” என்று கூவினர். “ஓசையிடாதீர்” என்றாள் மஹதி. “இளையோளே, மணத்தை தேர். உன் நெஞ்சிலுள்ள பெருங்காதலை எண்ணு. நீ அமுதையே அள்ளுவாய்.”
பாமா இரு கலங்களையும் ஒருகணம் நோக்கியபின் தன் வலக்கையை நீட்டி ஒரு கலத்தை எடுத்தாள். அக்கணமே விறலியரும் பாணரும் சோர்ந்து கை தளர்ந்தனர். அவர்களின் உடல்கண்டு அனைவரும் அது கசப்பென்று உணர்ந்து ஓசையழிந்தனர். அவள் அதை சிறு குவளையில் ஊற்றி அவனுக்குக் கொடுத்தாள். புன்னகையுடன் அவன் அதை வாங்கி மும்முறை சுவைத்தான். “இனிய அமுது. உன் இதழ்களில் எழும் சொல் போல” என்று பாமாவிடம் சொன்னான். அவள் நாணி தலைகவிழ “உன் அன்னைக்கும் செவிலிக்கும் தந்தைக்கும் உன் குடிப்பிறந்த அனைவருக்கும் இவ்வமுதைக் கொடு” என்றான்.
பாமா அதை மேலும் சிறுகுவளைகளில் ஊற்றி மஹதிக்கும் மாலினிக்கும் அளித்தாள். மஹதி அதை ஒருதுளி அருந்தியதுமே முகம் மலர்ந்து மாலினியை நோக்க “நான் அப்போதே நினைத்தேன். இவர்களுக்குத்தான் கலம் மாறிவிட்டது. அவள் கைபடுவது கசக்குமா என்ன?” என்றாள் மாலினி. பாமா குவளையை தந்தையிடம் கொண்டு சென்று நீட்ட அவர் வாங்கி முதல்மிடறை அருந்தி அது இனிய பாலமுதென அறிந்தார். ஒவ்வொருவரும் அதை ஐயத்துடன் பெற்று அருந்தி உவகை கொண்டு “பாலமுது! இனியது” என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டனர். சற்றுநேரத்தில் உண்டாட்டுப்பந்தல் உவகையால் கொந்தளிக்கத் தொடங்கியது.
அவர்களனைவரும் அமர இனிப்பும் துவர்ப்பும் கசப்பும் புளிப்பும் என உணவு வரத்தொடங்கியது. உணவுமணம் கொண்ட காற்று அங்கே எழுந்து காட்டுக்குள் செல்ல காட்டுச்செந்நாய்கள் மூக்கை நீட்டியபடி புல்வெளிவிளிம்புக்கு வந்தன. உண்டாட்டின் உவகையாடலைச் செவிமடுத்தபடி இனிப்பும் கசப்புமென கலங்களை நிறைத்த பாணர் மற்ற கலத்தை எடுத்துச்சென்று திறந்து சற்றே ஊற்றி குடித்தனர். அதுவும் பாலமுதே என்று கண்டு ஒருவரை ஒருவர் நோக்கினர்.
“இளையோனே, உன் முதல் கை உணவை அவளுக்கு அளி. அவள் கொள்ளும் அமுது அது” என்றார் பூசகர் கிரீஷ்மர். ஊனுணவை ஒரு கைப்பிடி அள்ளி அவள் இதழ்களில் அவன் வைக்க அவள் நாணிக்குனிந்து வாயால் அள்ளி விழுங்க முடியாது மூச்சடைத்தாள். “அவன் அளிக்கும் அமுதால் உன் ஆகம் நிறைவதாக!” என்று கிரீஷ்மர் வாழ்த்த முதல் கை உணவை எடுத்து நீட்டி “அவ்வாறே ஆகுக!” என வாழ்த்தினர் ஆயர்.