பகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 6
அத்தனை விழிகளும் நோக்கி இருந்த வழியின் வான்தொடு எல்லையில் இளங்கதிரோன் போல் ஒரு புரவி எழுந்தது. ஆயர் மன்று முன் சூழ்ந்து நின்ற அனைவரும் ஒற்றைப் பெருங்குரல் எழுப்பி உவகை ஆர்த்தனர். இல்லங்களுக்குள் இருந்து பெண்கள் முற்றங்களுக்கு ஓடி வந்தனர். சற்று நேரத்தில் அங்கிருந்த அத்தனை மரங்களும் மனிதர்கள் செறிந்து அடர்ந்தன. இளையோர் அத்திசை நோக்கி கை தூக்கி ஆர்த்தபடி ஓடினர். அலகு நீட்டி அணுகும் பறவை என, பின் நெளியும் தழல்கொடி என, பின் காலைமுகில்கீற்று என அது தன்னை விரித்து விரித்து அணுக்கம் கொண்டது. செந்நிறமான முதற்புரவிக்கு பின்னெழுந்த வெண்புரவியை அதன்பின்னரே அவர்கள் கண்டனர். முதல்புரவிமேல் அமர்ந்திருந்தவன் நீலன். தொடர்ந்ததன் மேல் அமர்ந்திருந்தது கரிய பேருருக்கொண்ட கரடி.
புரவிகளின் குளம்போசை ஆயர்பாடியின் சுவர்களிலிருந்தும் எழத்தொடங்கியது. பெண்கள் முலைக்குவை மேல் கைவைத்து விழிவிரித்து இதழ்திறந்து நோக்கி நின்றனர். அணுகி வரும் புரவியின் உலையும் குஞ்சிக்கு அப்பால் நீலமுகம் தெரிந்து மறைந்து பின் தெரிந்து அவர்களின் ஆவலுடன் விளையாடியது. முந்தானை பிடித்திழுத்து பின்னால் சென்று ஒளிந்து விளையாடும் மகவு என எண்ணினர் மூதாய்ச்சியர். துயில்கையில் வந்து முத்தமிட்டு, விழிக்கையில் தூணுக்குப்பின் ஒளிந்து பொன்னிற ஆடை நுனி மட்டும் காட்டும் காதலன் என மயங்கினர் கன்னியர். என்றும் பின்னால் துணை நின்று பகையெழும்போது மட்டும் படைக்கலம் கொண்டு முன்வந்து பின் மறையும் துணையென எண்ணினர் ஆயர். அக்கணம் வரை ஏற்றும் பழித்தும் ஆயிரம் ஆயிரம் சொல் கொண்டு அவனை மட்டுமே உளம் சூழ்ந்திருந்தனர் அனைவரும் என அக்கணம் தெரிந்தது. அவனையன்றி எவரையும் அவர்கள் ஆழம் ஏற்றிருக்கவில்லை என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள் அறிந்து நின்ற தருணம்.
புரவிக்குளம்புகள் துடி தாளம் எழுப்பி அணுகி வர ஆயர் குடியெங்கும் ஆழ்ந்த அமைதி பரவியது. தேன்களிம்பு போல அனைத்து ஓசைகளையும் மூடிய அமைதியில் அக்குளம்படி மட்டும் தொட்டுத் தொட்டு நெருங்கிவந்தது. நீள் முகம் திருப்பி மூச்சிழுத்து குஞ்சி மயிர்குலைத்து முன்வலக்காலை சற்று தூக்கி செம்புரவி நின்றது. மேலும் இரு குளம்படிகள் வைத்து இழுபட்ட கடிவாளத்திற்கு தலை வளைத்து செருக்கடித்து நின்ற புரவியை மெல்லத்தட்டி அமைதிகொள்ளச்செய்தபடி அவன் குதித்திறங்கினான். தொடர்ந்து வந்த வெண்புரவி விரைவழிந்து பின்னால் வந்து நின்றது. அதிலிருந்த கருங்கரடி இறங்காமல் மின்னும் சிறு விழிகளால் நோக்கி அசையாதிருந்தது. வெறும் விழிகளென அசைவற்ற இதழ்களென மெய்ப்புற்ற உடல்களென சூழ்ந்திருந்த ஆயரை நோக்கி அவன் கேட்டான் ”மூத்தோரே! எங்குளார் உங்கள் அரசர்?”
ஒரு கணமேனும் அவன் திரும்பி அவளை நோக்கவில்லை. அதை உணர்ந்து நெஞ்சதிர்ந்து திரும்பி நோக்கிய ஆய்ச்சியர் ஒரு கணம் கூட அவளும் அவனை நோக்கி திரும்பவில்லை என்று கண்டனர். அவன் விழி ஆயரில்லம் நோக்க அவளோ அலையெழு யமுனை பெருவிரிவு நோக்கி அக்கணம் அமர்ந்தது போல் இருந்தாள். மூதாயர் ஒருவர் முன்வந்து, ”இளையோனே! நீ வரும் செய்தியறிந்தோம். உனக்கென மன்று கூடி அங்கிருக்கிறார் எம் குடி மூத்தோர். அவையமர்ந்திருக்கிறார் அரசர்” என்றார். “அரசரை வழுத்துகிறேன் யாதவரே” என்றபின் திரும்பி கரடியிடம் “அய்யனே, இது ஆயர்மன்று. தங்கள் சொல் இங்கு திகழட்டும். வருக!” என்று சொல்லி அவன் நடந்தான்.
இருமருங்கும் கூடி நின்ற ஆயர் அவன் கால் பட்ட மண்ணை விழிகளால் ஒற்றி ஒற்றி தொடர்ந்தனர். அவன் உடல் தொட்ட காற்றை தங்கள் ஆகம் தழுவப் பெற்று சிலிர்த்தனர். ஏன் விழைந்தோம் இவனை என மயங்கினர். ஏனித்தனை வெறுத்தோம் இவனை என நெஞ்சழிந்தனர். விருப்புக்கும் வெறுப்புக்கும் அப்பால் ஒன்றென அவனை எப்போதும் அறிந்ததை அக்கணம் தெளிந்தனர். நாண் இறுகிய வில் என செல்லும் அவன் காலடிகளைத் தொடர்ந்து சென்ற இளையோர் அவன் அருகே செல்லவோ சொல்லெடுக்கவோ துணியவில்லை. மன்று கூடிய ஆயர்குடி மண்டபத்தின் வாயிலில் சென்று நின்றான். உள்ளிருந்து இறங்கி வந்த கிருஷ்ணசிலையின் தலைவர் பிரகதர் அவனை வணங்கி, “இளைய யாதவருக்கு அந்தகக்குடி தலை வணங்குகிறது. எம் இளவஞ்சி விடுத்த வஞ்சினம் இங்குளது. தங்கள் செயல் நாடி ஆயர் மன்று அமைந்துளது” என்றார்.
”ஆம்! அதற்கெனெவே வந்தேன்” என்று சொல்லி அவன் அதன் ஏழு படிகளை ஏறி அவை நுழைந்தான். மன்றமர்ந்திருந்த முதியோர் அவன் காலடி கண்டதும் ஒருங்கு என எழுந்து தங்கள் வளைதடிகளைத் தூக்கி ”வெல்க, யாதவர் குடி! வெல்க, ஆழி வெண்சங்கு அலைகடல் நிறத்தோன்! அவன் அமர்ந்த பெருவாயில்புரம்!” என்று குரலெழுப்பினர். இரு கை கூப்பி அவன் நடக்க பின்னால் கரடி தடித்த பெருங்கால்களை வைத்து கைகளை ஆட்டி நடந்தது. மன்று நடுவே அரசபீடத்தில் அமர்ந்திருந்த சத்ராஜித் அவனை விழி தூக்கி நோக்கவில்லை. அசைவற்றவர் போல, ஒரு கணம் உயிர் துறந்தவர் போல அங்கிருந்தார். அவர் முன் சென்று நின்று வணங்கி “அரசே! தங்கள் இளங்குமரி விடுத்த செய்தியை அமைச்சர் ஓலை வழியாக அறிந்தேன் அவ்வஞ்சினம் நிறைவேற்ற காடு புகுந்து உங்கள் குலமணியை கொண்டுவந்துள்ளேன். பெறுக!” என்றுரைத்து தன் இடைக் கச்சையை அவிழ்த்தான். மலைச்சருகில் பொதிந்து அங்கு வைத்திருந்த சியமந்தகத்தை எடுத்து அவர் முன் நீட்டினான்.
அவன் கையிலிருந்தது விண்ணின் விழி. உலகு புரக்கும் நகைப்பின் ஒரு துளி. அதை நோக்கி விழி இமை சலிக்காது அமர்ந்திருந்தார் சத்ராஜித். கையை நீட்டி “அரசே, உமது இது, கொள்க!” என்று அவன் சொன்னான். உலர்ந்த நாவை இதழ் வருடிச் செல்ல தொண்டை முழை அசைந்திறங்க மூச்சிழுத்து அமைந்தபின் “இளையோனே!” என முனகினார் சத்ராஜித். மேலும் சொல் எழாமல் கையை மட்டும் மெல்ல அசைத்தார். “மூத்தோரே! உங்கள் குடி திகழ்ந்த இவ்விழியை ஒருபோதும் விழைந்தவனல்ல. ஆயின் ஒவ்வொரு குடியும் தனிப்பெருமை பேசுவதை துவாரகையின் யாதவர் பெருமன்றம் ஒரு போதும் ஒப்பலாகாது. பன்னிரு குலமும் எண்ணிலா குடியும் கொண்ட யாதவப் பெருந்திரள் ஆழி, வெண்சங்கு இரண்டையும் ஏற்று ஆவளர்குன்று ஒன்றே இறையெனத் தொழுது ஒன்றானால் அன்றி இங்கு வென்று நகர் கொண்டு வாழ முடியாதென்றறிக! அதன் பொருட்டே துவாரகையின் நெறிகள் அமைந்தன. இம்மணியை நான் கவரவில்லை. கவர்ந்தது இவர்” என்று திரும்பி கரடியை சுட்டிக் காட்டினான்.
தலையணிந்த கரடி முக கவசத்தைக் கழற்றி கையில் எடுத்து புண்பட்ட காலை மெல்ல அசைத்து அருகணைந்து ஜாம்பவான் சொன்னார் “யாதவரே! இம்மணி என்னிடமிருந்தது. இதை கவர்ந்து சென்ற சிம்மத்தின் குகையிலிருந்து நான் பெற்றேன். எவருடையதென்று அறிந்திலேன். எம்மைந்தர் விளையாடும் விழிமணியாக இதை அளித்தேன். என் மகளின் தோளை இது அணிசெய்தது. என்னை வென்று பரிசிலென இம்மணி கைக்கொண்டவர் இவர். இது உங்கள் குலமணி என்றறிந்தேன், கொள்க!” என்றார். அவர் முகத்தை நோக்கும்பொருட்டு சாளரங்களில் யாதவர் நெருங்கி அழுந்தினர். மூச்சொலிகள் எழுந்து சூழ்ந்தன. பாணன் ஒருவன் “ராகவராமன் தழுவிய தோள்கள்” என்றான். “ஆம், இலங்கை எறிந்த கால்” என்றார் இன்னொருவர்.
சத்ராஜித் அப்போதும் கை நீட்டாது தலை குனிந்து அமர்ந்திருந்தார். அவர் விழி நோக்கி அவன் சொன்னான் “அந்தகர்க்கு அரசே! நெடுங்காலம் முன்பு உங்கள் குலமூதாதை கொண்ட விழி இது. தான் கண்டதை தன் குலமும் காணும் பொருட்டு இவ்விழியை அளித்து அவர் சென்றார். மூதாதை விழி நெஞ்சில் துலங்குவதென்பது பெரும் பேறு. அவ்விழி கொண்டீர். அந்நோக்கை இழந்தீர். உங்கள் இளையோன் கொண்ட விழைவு இம்மணியை கதிர் மறைக்கும் முகிலென இருளச்செய்தது. இனி இதன் ஒளி திறக்கட்டும். அந்தகர் இனி ஆவதென்ன என்று அறிவதாக!” என்று அளித்தான். சினம் திகழ்ந்த விழி தூக்கி சத்ராஜித் சொன்னார் “இம்மணியுடன் இம்மன்றுக்கு நீர் வருவதென்பது என் மகள் உரைத்த வஞ்சினம் நிறைவேறுவதற்காக. அவள் உயிர் விழைவதால் இதை நான் ஒப்புகிறேன். ஆனால் பிறிதொருவன் வென்று கொண்டு வந்த பொருளை எனக்குரியதென பெறுமளவுக்கு இழிந்ததல்ல அந்தகக்குலம். உம்மிடம் தோள் கோர்த்து மற்போரிட்டு இதைப்பெறுவேனென்றால் எனக்குப் பெருமை. உம் கொடையென கொள்ள நான் கை தாழும் குலத்தவனல்ல. கன்று மேய்த்து காட்டருகே வாழினும் அரசன்.”
புன்னகைத்து இளைய யாதவன் சொன்னான் ”அரசே! இது கொடை அல்ல. உங்கள் குல கன்னியை பெரும்பொருட்டு நான் அளிக்கும் மகட்செல்வம். கன்யாசுல்கமாக இதைப்பெறுக!” ஒரு கணமும் அதை நோக்கி விழி திருப்பாமல் சத்ராஜித் சொன்னார் “இளையோனே! கன்யாசுல்கம் கன்னியை கொள்ள வந்த மணமகனால் அளிக்கப்படுவதல்ல. அவன் சுற்றம் சூழ வந்திருந்து தன் தந்தையின் வழியாக அளிக்கப்படுவது. உமது தந்தை இங்கு வரட்டும். அவர் கையில் இருந்து இதை பெறுகிறேன்” என்றார். “இல்லையேல் என் மகளை காந்தருவமாக கவர்ந்து செல்க! உம்மிடம் போர்கொண்டு நேர்நிற்க எம்மவரில் எவரும் இல்லை.” அவன் சிரித்து “என்னுடன் நிகர்நிற்க உங்கள் மகளால் முடியும் அரசே. கன்யாசுல்கம் அளித்து கைகொள்ள அவள் சொல்லி மீண்டாள். அதுவன்றி எதற்கும் அவள் ஒப்பமாட்டாள்” என்றான். “அவ்வண்ணமென்றால் உங்கள் தந்தை இங்கு வரட்டும்” என்று சொல்லி சத்ராஜித் எழுந்தார்.
யாதவர் சத்ராஜித்தை நோக்கி சினந்து சீறியபடி வளைதடிகளுடன் சூழ்ந்தனர். பிரமத குலத்தலைவர் ”அரசே! தாங்கள் பேசும் சொற்களை எண்ணியிருக்கிறீர்களா? எவரிடம் சொல்கிறீர்? துவாரகையில் நாம் இழந்த அத்தருணம் நல்லூழால் இதோ மீண்டு வந்துள்ளது. இதை மீண்டும் இழப்போமா?” என்றார். சத்ராஜித் விழி தாழ்த்தியவண்ணம் “ஆம். அறிவேன். ஆயினும் என் செயலால் அந்தகக் குலம் கொடி தாழ்த்தியது என்றிருக்கக்கூடாது” என்றபின் சினம் நிறைந்த விழிகளைத்தூக்கி “இளைய யாதவரே! இனி மறு சொல் இல்லை. இம்மணியை உங்கள் தந்தை கன்யாசுல்கமாக அளிக்கட்டும். அதுவரை இது நீர் அளிக்கும் கொடையே. வீரசேனர் கொடிவழி வந்தவன் நான். என் கை தொடாது இதை” என்றார்.
நீல நீள்வட்ட முகத்தில் பால் நுரையென புன்னகை விரிய ”ஆம். அது முறையே” என்றான் இளைய யாதவன். பின்னர் திரும்பி அருகில் நின்ற ஜாம்பவானிடம் “மூத்தாரே! முன்பு வில்லேந்தி உங்கள் புறம் புகுந்த ராகவ ராமன் சொன்ன ஒரு சொல் உள்ளது. உங்கள் குல மூதாதை அவன் தந்தை தசரதனின் இணையன். எனவே உங்கள் பாதம் தொட்டு தந்தை என நிகர் வைப்பதாக அவன் உரைத்தான். அவனே நான் என்று கொள்க! இந்த யுகத்தில் இன்று என் தந்தை வடிவாக நின்றருள்க!” விழி நெகிழ்ந்து கை கூப்பி ஜாம்பவான் சொன்னார் “ஆம் இளையோனே, உள்ளத்தான் நீ என் மைந்தன். உன் கால் என் நெஞ்சில் அழுந்தியபோது என் அகம் அறிந்த பேருவகையால் அதை உணர்ந்தேன். என் குலம் அவன் நீலச்சேவடியால் வாழ்த்தப்பட்டது. இன்று மறுமுறையும் அவ்வாழ்த்து கொண்டது. இளையோனே! என் மைந்தன் என்று அமர்க! இம்மணியை உன் பொருட்டு இவருக்கு கன்யாசுல்கமென அளிக்கிறேன்” என்று தன் பெருங்கரங்களை நீட்டி அந்த மணியைப் பெற்று திரும்பி சத்ராஜித்திடம் வழங்கினார்.
முழங்கும் குரலில் ”யாதவர்க்கரசே! என் இள மைந்தனும் துவாரகைக்கு அரசனும் இப்புவிக்கெல்லாம் இறைவனுமாகிய இந்நீலன் உம்மகளைக் கொள்ள இதோ தொல்விழியெனச்சுடரும் இம்மணியை கன்யாசுல்கமாக அளிக்கிறேன். கொள்க!” என்றார். மெய் விதிர்ப்புற்று யாதவர் மூச்சொலி எழுப்பினர். பின்பு ஒருவர் “வாழ்க! யாதவர் குலம் வாழ்க!” என்று கூவினார். எழுந்து இருகை நீட்டி அந்த மணியை பெற்றுக் கொண்டார் சத்ராஜித். தன் சென்னியில் அதைச்சூடி இருவிழிகளில் ஒற்றி நெஞ்சோடு அழுத்திக் கொண்டார். கண்ணீர் வழியும் கன்னங்களுடன் “ஆம். இழந்தது என் குடிக்கு திரும்ப வந்தது. ஆனால் இதை என் நெஞ்சணியும் துணிவு எனக்கில்லை. இளையோனே! நீர் அறியாத ஒன்றில்லை. இம்மணியை என் இளையவன் தோளிலிட்டு அனுப்புகையில் அவன் திரும்பமாட்டான் என நான் உள்ளூர அறிந்திருந்தேன்” என்றார். மாறாப் புன்னகையுடன் “ஆழம் எப்போதும் அறிந்திருக்கிறது” என்று அவன் சொன்னான்.
கண்ணீர் வழிய இடறும் குரலில் சத்ராஜித் கேட்டார் “இம்மன்று நின்று கேட்கிறேன் இளையோனே, இங்கு குருதியாக கண்ணீராகத் திகழ்வது எது? உறவாக வஞ்சமாக நடிப்பது எது? எங்கிருக்கிறேன்? ஏன் இங்கிருக்கிறேன்?” அவர் முன் ஒளிதிகழ் விழியுடன் நின்று இளைய யாதவன் சொன்னான் “தந்தையிலும் மைந்தர்மேல் வஞ்சம் என ஒன்று உறைகிறது எனில் தமையனிடம் இருக்காதா? இருளை அறிய யோகியரே துணிவுள்ளவர். இருளில் மின்னும் ஒளியை மட்டுமே காண்க!” அவர் கைகளைப்பற்றி “அந்தகரே, இன்று பாதியென ஆனீர். உங்கள் இளையோன் நிறைத்த இடமெல்லாம் எஞ்சியுள்ளது. கண்ணீரால் பின் தவத்தால் அதை நிரப்புக! அன்றறிவீர். அப்போது நிறைவீர்” என்றான்.
சியமந்தகத்தை அவனிடம் திரும்ப நீட்டி சத்ராஜித் சொன்னார் “இளையவனே, இந்த மணி என்னை அச்சுறுத்துகிறது. அனைத்தையும் அறியும் விழியொன்றுடன் எவரும் வாழமுடியாது. இம்மணியை இனி நான் என் குலத்தில் வைத்திருக்கலாகாது. அந்தகக் குலம் ஒன்று இனி தனித்திருக்கத் தேவையில்லை. என் குடியும் என் குலமும் இதன் குடிகளனைத்தும் கடல் சேரும் நதியென விருஷ்ணி குலத்தில் இணையட்டும். என் மகளை கொள்க! இதை நான் அளிக்கும் பெண் செல்வமாக ஏற்றருள்க!” இளையவன் இரு கைகூப்பி சொன்னான் ”அரசே! பதினான்கு நாட்கள் அதோ கடம்ப மரத்தடியில் ஊண் துறந்து உறக்கிழந்து அமர்ந்திருப்பவள் என் நெஞ்சு வாழ் நிலைமகள். இம்மணியை கொள்வேனென்றால் அவளுக்கு நிகரென ஒன்றை வைத்தவனாவேன். அறிக! இப்புவியும் இதன் மேல் கவிந்த அவ்விண்ணும் விண்ணாளும் தேவர்களும் தெய்வங்களும் எதுவொன்றும் எந்நெஞ்சில் அவளுக்கிணையென வாழ்வதில்லை. அவளுடன் கொள்ளத்தக்க ஒன்றை அப்பரம்பொருளும் படைத்ததில்லை.”
அறியாது “ஆம் ஆம் ஆம்” என்றனர் பாணர். யாழ் ஒன்றை மீட்டி “திருவாழ் மார்பன் திருவாழ்க!” என்றார் முதுபாணர் ஒருவர். “அந்தகர்க்கரசே, இந்த மணி உங்கள் குடியிலேயே அமையட்டும். இவ்விழி உங்கள் இல்லத்தில் உறங்காதிருக்கும். இதன் திசை தேரும் வழிகள் இனியும் நீளுமென்றறிக!” சத்ராஜித் இரு கரத்தாலும் நடுங்கும் சியமந்தகத்தை தன் மடிமீது வைத்து அரச பீடத்தில் கால் தளர்ந்து அமர்ந்தார். அவனைச் சூழ்ந்து நின்று யாதவர் ஒவ்வொருவரும் ஒன்று சொல்ல விழைந்தனர். எவரும் சொல்லெடுக்கவொண்ணாது வெறுமனே நின்றனர். அவன் திரும்பி ஜாம்பவானிடம் “எந்தையே, இது நல்தருணம். எனக்கென இத்திருமகளை கை கொண்டு அளியுங்கள்” என்றான்.
அந்தகர்களின் ஏழு குடித்தலைவர்கள் தங்கள் முதியகால்கள் நடுங்க “அன்னையே!” என்று கூவியபடி மன்றைவிட்டு வெளியே ஓடினர். கடம்ப மரத்தின் அடியில் அமர்ந்திருந்த அவளிடம் சென்று வணங்கி ”அன்னையே, உன் வஞ்சினம் நிறைந்தது. நீ கோரிய இந்திரநீல விழிமணியுடன் உன் தலைவன் வந்துளான். உன் தந்தையின் குல மூத்தார் என உன் கை பற்றி அளிக்க இங்கு வந்துள்ளோம். எழுக!” என்றனர். கடம்ப மரத்தின் வேர்க்குவைக்குள் உடலொடுங்கி விழி தழைந்து அமர்ந்திருந்த மஹதி எழுந்து அவள் கைகளைப்பற்றி ”எழுந்திரு குழந்தை! இன்று உன் மண நாள்” என்றாள். பாமை தன்னை உணர்ந்து விழி மலர்ந்தபோது யமுனை சரிவேறி வந்த காற்றில் இலை சிலிர்த்து கிளை அசைந்தது. மலர் பொழிந்தது நீலக் கடம்பு. குனிந்து அதிலொரு மலரை எடுத்து வலக்கையில் வைத்தபடி எழுந்தாள்.
குழல் இளம்காற்றில் உலைய, சுற்றி சற்றே வழிந்த ஆடை நெளிய கனவில் மலர்ந்த விழிதூக்கி அங்கே தன்னைச் சூழ்ந்திருந்த தன் குடியை நோக்கி புன்னகைத்தாள். நெகிழ்ந்து உளம் பொங்கி ஆர்ப்பரித்தனர் யாதவர். மங்கல இசை பொழிந்து நடனமிட்டனர் பாணர். மூதாய்ச்சியர் இரு கை தூக்கி “திருமகள் பொலிக! உலகு பசுமை கொள்க! நீர் பெருகுக! காடு பூக்கட்டும், கன்று மடிகள் நிறையட்டும்” என்று வாழ்த்தினர். வண்ணச் சீரடி மண்மகள் மேல் வைத்து மெல்ல ஏகி அவள் அவையமர்ந்திருந்த ஆயர்மன்று நோக்கி சென்றாள். ஏழு குடித்தலைவர்களும் அவளுக்கு இருபக்கமும் அகம்படி வந்தனர். ஆடியும் பாடியும் கண்ணீர் உகுத்து ஆயரும் பாணரும் அவளை தொடர்ந்தனர். மன்று மேடையில் ஏறும் ஏழு படிகளில் முதல் படியில் அவள் கால் வைத்தபோது குரவை எழுந்து சூழ்ந்தது. ஏழு விண்ணுலகங்கள் ஒவ்வொரு படியாக மாறி உள்ளங்கை நீட்டி அவள் பாதங்களைப் பெற்று மேலெடுத்தன. ஏழாம் விண்ணில் முகில் மேல் காலோச்சி நடந்து அவள் அவனை சென்றடைந்தாள்.
சத்ராஜித் நெடுநாட்களுக்குப்பின் விழி தூக்கி அவளை நோக்கினார். முதற்கணம் ’இவளா! இத்தனை நாள் இவளா என் மகள்!’ என்று துணுக்குற்றது அவர் உள்ளம். ஒரு போதும் அவர் அறிந்திராத ஒருத்தி அங்கு நின்றிருந்தாள். வளர்பிறைக்காலமெல்லாம் உணவருந்தாதவள், விழிமயங்காதவள், ஒரு கணமும் சோர்வுறாத விழிகளுடன் மலர்ந்து அங்கே நின்றிருந்தாள். “வருக!” என்றார் குல மூதாதை. ”வருக கன்னி” என்றார் குலப் பூசகர். ”இத்தருணம் மங்கலம் கொண்டது. மலர் இதழ் மொக்கவிழ தன் கணத்தை தான் கண்டடைகிறது என்பர் மூத்தோர். இது விண்ணவர் விழையும் ஒரு அருமலர்க்கணம்” என்றார். நிமிர்ந்த தலையுடன் புன்னகை திகழும் விழிகளுடன் நடந்து தன் தந்தை அருகே வந்து அவருக்கு வலப்பக்கம் நின்றாள்.
“அந்தகக் குல இளவரசி, உங்களை வேட்கும் பொருட்டு விருஷ்ணி குலத்து இவ்விளையோன் சியமந்தகமென்னும் ஒளி மணியை கன்யாசுல்கமாக அளித்துள்ளான். அவன் தந்தை தங்கள் கரம் கோரி இங்கு நிற்கிறார். இவனை நீங்கள் கொள்வீர்களென்றால் ஒரு மலரெடுத்து உங்கள் தந்தையின் வலக்கையில் அளியுங்கள்” என்றார் குலப்பூசகர். முதல் முறை என விழி தூக்கி அவள் அவனை நோக்கினாள். அவன் விழிகளை நேர்கொண்டு சந்தித்து இதழ் மலர்ந்து புன்னகை செய்தாள். ஒரு கணம் அவன் உளம் நாணி விழி சரித்தான். சிவந்த நீள் விரல்களில் இருந்த கடம்ப மலரை அவள் அவர் கையிலளித்து ”ஆம், அந்தகக்குலத்து யாதவப் பெண்ணாகிய நான் இவரை என் கொழுநனாகக் கொள்கிறேன். எந்நிலையிலும் இவருக்கு நிகர் நின்று அறத்துணைவியாவேன்” என்றாள். சூழ்ந்திருந்த யாதவர் ”ஓம்! அவ்வாறே ஆகுக” என்று பெருங்குரலெடுத்து வாழ்த்தினர்.
பாணர் இசைத்த மங்கலப் பேரிசை மன்றைச் சூழ்ந்து சுவர்களை அதிரச் செய்தது. குரவையொலியும் வாழ்த்தொலியும் எழுந்து அதிர்ந்தன. சத்ராஜித் தன் வலக்கையால் அவள் வலக்கையை பற்றினார். திரும்பி ஜாம்பவானிடம் “பெருங்கரடி குலத்து மூத்தாரே! இதோ என் மகளை உம் மைந்தர் யாதவ கிருஷ்ணனுக்கு மனைத்துணையாக அளிக்கிறேன். நலம் சூழ்க! திரு வளர்க! மூதாதையர் மகிழ்க! தெய்வங்கள் நிறைக! விண் பொலிக! மண் விளைக!” என்று சொல்லி அவர் கையில் அளித்தார். தன் வலக்கையை நீட்டி பாமாவின் கரம் பற்றிய ஜாம்பவான், தலை வணங்கி ”பெரும் திருவை மருமகள் என அடைந்தேன். இத்தருணம் என் மூதாதையரால் வாழ்த்தப்பட்டது” என்றார். பின் அவள் கரத்தை அவன் கரத்தைப் பற்றி அதில் வைத்து அளித்து “விருஷ்ணிகுலத்து இளையோனே, இவளை உன் அறத் துணையாகக் கொள்க! இவள் வாழும் நாளெலாம் இறைவனாக இவள் நெஞ்சில் வாழ்க!” என்றார். யாதவர் களிக்குரல் எழுப்பி கொந்தளிக்க மங்கல இசையொலியும் வாழ்த்தொலியும் குரவையொலியும் சூழ இளையவன் அவள் கரம் பற்றி தன் இடப்பக்கம் நிறுத்திக் கொண்டான்.