‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 24

பகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 5

ஏழாவது நாள். காளநீலத்தின் ஆழத்திலிருந்து வந்த முதல் தூதன் அவர்கள் எண்ணிய செய்தியை கொண்டுவந்தான். யமுனை வழியாக வந்து படித்துறையை அடைந்து மூச்சிரைக்க மேலேறி “நான் காளநீலத்தின் கருமையில் இருந்து வருகிறேன். ஆயர்பாடியின் அமைச்சரை பார்க்க வேண்டும்” என்று அவன் கூவினான். ஒற்றருக்கு இல்லாத ஓசை கொண்டிருந்தான். பித்து எழுந்த விழிகளுடன் கைவிரித்து அமைச்சரின் அலுவல் கூடம் நோக்கி ஓடினான். அவனை அறிந்து அவனுக்குப் பின்னால் ஆயர் இளைஞர்கள் சென்றனர். அமைச்சர் அவை புகுந்து அங்கே சூழ்ந்திருந்த குடித்தலைவர் நடுவே சென்று கைவிரித்து “அமைச்சரே, மூத்தாரே, கேளுங்கள். நான் இளைய யாதவனை கண்டேன். சியமந்தகமணியை அவன் அடைவான் என்று உறுதி கொண்டேன். அச்செய்தியை விரைந்து சொல்ல இங்கு வந்தேன்” என்றான்.

அக்கணமே, மின்னல் தழுவியது போல் ஆயர் குடியின் அனைவரின் நெஞ்சிலும் ஒலி எழுந்தது. தொலைவில் மழை எழுவது போல் அவ்வுள்ள எழுச்சியை கேட்கமுடிந்தது. விதிர்ப்புகளாக, மூச்சுகளாக, மென்சொற்களாக, உடலசையும் உடைசலிக்கும் ஒலியாக. சற்று நேரத்தில் அலுவல் இல்லத்தின் சாளரங்கள் அனைத்தும் முகங்களால் நிறைந்தன. தன் குலக்கோலுடன் ஓடிவந்து மன்று அமர்ந்து “சொல்க ஒற்றரே!” என்று கிருஷ்ணசிலையின் தலைவர் பிரகதர் ஆணையிட்டார். “மூத்தாரே, நான் ஷியாமன். மறைந்த இளைய அரசர் பிரசேனரின் முதன்மை ஒற்றர்களில் ஒருவன். என்னை அவர் காளநீலத்தின் உள்ளடுக்கைக் காக்கும்படி பணித்திருந்தார். ஏழு மலைக்குலங்கள் வாழும் அக்கரியகாட்டின் ஏழாம் அடுக்கு கொலைதேர் கொள்கை ஜாம்பவர்களுக்குரியது. மலைக்குடிகளில் நிகரற்றவர் அவரே என்று நம் பாணர் சொல்லி அறிந்திருப்பீர். இங்கு நாம் வந்த இத்தனை நூற்றாண்டுகளில் நம் எவர் விழியும் ஜாம்பவரை நோக்கியதில்லை. கரடித்தோல் போர்த்த உடம்பும் கருநிற முகமும் சிறுமணி விழிகளும் கொண்ட அவர்களை மலைக்குடிகள் பிறர் அறுவரும்கூட அரிதாகவே பார்க்கிறார்கள்” என்றான்.

“காளநீலத்தின் கருவறையில் நூற்றியெழுபது கருங்குகைகள் அமைந்துள்ளன. அவற்றில் அவர்கள் வாழ்கிறார்கள்” என்று ஷியாமன் சொன்னான். “அவர்களின் முதுமூதாதை கரடி உருக்கொண்ட மானுடன் என்கிறார்கள். மலைத்தேன் உண்டு மரங்களில் வாழ்ந்தவர்கள். கரையான் புற்றுகள் சூழ்ந்த உள்காடுகளை விழைபவர்கள். அவர்கள் குலத்து மூதாதையர் முன்பு அயோத்தி ஆண்ட இக்‌ஷுவாகு குலத்து அரசன் ராகவ ராமனுடன் இலங்கை சென்று போர் புரிந்து பத்துதலை கொண்ட ராவணனை வென்று மீண்டதாக கதையுள்ளது. நூற்றி எழுபத்திரண்டாவது ஜாம்பவர் அப்படைக்கு தலைமை கொண்டார். தங்கள் குடிக்கு பெருமை கொணர்ந்த அந்த ஜாம்பவரின் மரச்சிலை ஒன்றை குகை ஒன்றில் நாட்டி ஆண்டிற்கு இருமுறை ஊன் பலியும் மலரீடும் அளித்து வழிபடுகிறார்கள். அவரது கொடிவழிவந்த இருநூற்று பதினேழாவது ஜாம்பவான் இன்று அக்குடி வணங்க கோல்கொண்டு ஆள்கிறார்.”

“இரவும் பகலும் விழிவணங்காது காளநீலத்தின் உள்ளடுக்கைக் காக்கும் பன்னிரண்டு ஜாம்பவர்களைக் கடந்து அவர்களின் மலைக்குகை வரை செல்ல இதுவரை மானுடரால் முடிந்ததில்லை. ராகவராமன்கூட அவன் தோழன் வானரகுலத்து அனுமனின் உதவியுடனேயே ஜாம்பவர்களை அணுகினான். நானும் சிலாத்ரயம் எனப்படும் மூன்றுபிளவாக எழுந்த பெரும்பாறை ஒன்றின் அடி வரை மட்டுமே செல்ல முடிந்தது. அங்கிருந்து ஜாம்பவர்களின் எல்லையில் தொலைவிலெழுந்த படைக்கலத்தின் அசைவை மட்டுமே கண்டேன். தேனும் ஊனும் உண்டு என் தூதுப்பறவைகளுடன் அம்மலைக்குகைகளில் இதுநாள்வரை தங்கியிருந்தேன். பிரசேனர் அளித்த பணி முடிவுறாமல் ஊர் திரும்புவதில்லையென்று உறுதி கொண்டவன் என்பதனால் காவலை தவமென்றாக்கினேன்.”

“எந்தையரே, அன்று காலை காட்டுக்குள் அசைவொன்று கேட்டு மரத்தின் மேல் எழுந்து நச்சு பூசிய கூர் அம்புடன் நான் கூர்ந்து நோக்கியபோது நீலம் ஒளிர்ந்த மேனியுடன் குழல் சூடிய பீலியுடன் ஒருவன் இலைத்தழைப்பை ஊடுருவி வரக்கண்டேன். இளங்கன்று போல் நடைகொண்டவன். இறுகி நெகிழும் நாகமென தோள்கள் கொண்டவன். அவனுக்குப்பின்னால் படையேதும் வருகின்றதா என்று நோக்கினேன். தன்னந்தனியன் என தெளிந்தேன். அத்தனை தொலைவு அவன் எப்படி வந்தான் என வியந்து கந்தர்வனோ என மயங்கி நோக்கி நின்றேன். அவன் கால்கள் மண் தொடுகின்றனவா என்று மீள மீள பார்த்தேன். பின் உய்த்தறிந்தேன், அவன் துவாரகை ஆளும் இளைய யாதவன் என்று…”

ஒற்றனின் சொல் கேட்டு சாளரங்கள் அனைத்திலிருந்தும் வியப்பொலி எழுந்தது. பிரகதர் “ஜாம்பவர்களைத் தேடியா அவன் சென்றான்?” என்று உரத்துக்கேட்டபடி எழுந்தார். ஒற்றன் வணங்கி “ஆம் மூத்தாரே..அவ்வியப்புடன் நான் மரமிறங்கி மெல்ல காலடி வைத்து அவனை அணுகினேன். யாதவர் குழூஉக்குறியைச் சொல்லி அவன் முன் சென்று வணங்கி என்னைப்பற்றி சொன்னேன். யாதவரே, இவ்வெல்லைக்கு அப்பால் ஜாம்பவர்களின் ஏழாம்காடு, அங்கு செல்வது உவப்பல்ல என்றேன். அவன் புன்னகைத்து ஜாம்பவர்களைத் தேடியே வந்ததாக சொன்னான். படைகொண்டுசென்று அவர்களை வெல்லலாகாதென்றும் ஆகவே தனியொருவனாக வந்ததாகவும் சொன்னான்” என்றான். யாதவ முதியவர் ஒருவர் “இளையோனே, எந்தையே” என்று கூவினார் . பாணன் ஒருவன் “வெற்றிகொள் கார்த்தவீரியன். ஆழியும் சங்கும் கொண்ட விண்ணளந்த பெருமான்!” என்று சொல்லி உடுக்கை விரல் தொட்டு உறுமச்செய்தான். ஒற்றன் “ஆம், அதையே நானும் உணர்ந்து மெய்சிலிர்த்தேன்” என்றான்.

“அவனை என் குகைக்குள் அழைத்து தேனும் ஊனும் இன்கூழும் அளித்தேன். தன் எழுநூறு ஒற்றர்களை காடுகள் எங்கும் ஏவி சியமந்தகமணி எங்குள்ளது என்று தேடியதாகவும் அவர்களில் ஒருவன் ஜாம்பவர் குலத்துக் குழந்தையொன்று இருளில் விளையாட விளக்கெனக் கொளுத்திய இந்திரநீலக் கல்லொன்றை வைத்திருப்பதைக் கண்டதாகவும் அவன் சொன்னான். அக்கல் சியமந்தகமே என்று உறுதி கொண்டதுமே அதைக் கொள்வதற்காக கிளம்பி வந்தான். நான் அவனைப் பணிந்து ‘இளையோரே, இவ்வெல்லைக்கப்பால் மானுடர் சென்றதில்லை. ஜாம்பவர் மானுடர் அல்ல என்றறிக! கரடி உடல் கொண்ட காட்டு மனிதர், நிகரற்ற புயவல்லமைகொண்டவர்’ என்றேன். புன்னகைத்து என் தோளில் தொட்டு ‘என்னுடன் வருக!’ என்று சொல்லி நீலமீன்குத்தி நீர்புகுவதுபோல காளநீலத்தின் உள்ளே புகுந்தான். கால்கள் நடுங்க, உள்ளம் ஒரு குளிர்ந்த உலோக உருளையாக மாறி அழுத்த, அவன் புன்னகை பட்டுநூல் என கட்டி இழுத்துச்செல்ல தொடர்ந்து சென்றேன்.”

“காடுகளில் அவன் கால்கள் வழியறிவது பெருவிந்தை என்று அப்போது அறிந்தேன். ‘இளையோனே, இவ்வழியில் முன்பு நீர் வந்துள்ளீரா?’ என்றேன். ‘நான் செல்லாத பாதை என்று பாரத வர்ஷத்தில் ஏதுமில்லை’ என்று சொன்னான். ‘எப்பொருளில் அதை சொல்கிறீர்?’ என்றேன். ‘ஊனுடம்பு செல்லா வழிகளில் எல்லாம் உள்ளம் செல்லமுடியுமல்லவா?’ என்று புன்னகைத்தான். ‘என் விழிகள் ஆயிரம். சிந்தையெழுந்த விழி பல்லாயிரம். நீலவான் என உடலெங்கும் விழியாக இந்த மண்மேல் கவிந்துள்ளேன்’ என்றான். ஜாம்பவர் எல்லை என புதர்ச்செறிவுக்குள் ஓசையிட்டு ஓடும் இருண்ட காட்டாறான கலிகையின் கரையை அடைந்தபோது கரடிகளின் குமுறல் ஒலியை தொலைவில் கேட்டேன். அவை ஜாம்பவர் தங்களுக்குள் உணர்த்தும் குறிச்சொற்களே என்றுணர்ந்தேன். என்னை திரும்பி நோக்கி புன்னகைத்து ‘கடக்கலாமா?’ என்றான். ‘இளையவனே, உம்மை நம்பி ஏழாம் இருளுக்குள்ளும் காலெடுப்பேன்’ என்றேன். ‘வருக!’ என்று என் தோளைத் தொட்டு அங்கிருந்த ஆலமரமொன்றின் விழுதைப் பற்றி ஆடி ஆற்றைக் கடந்து சென்றான். அவனைப் போலே நானும் தொடர்ந்தேன்.”

“ஜாம்பவர்களின் நிலத்தில் அவன் கால் பட்டதுமே மலைப்பாறை பிளக்கும் ஒலி எழுப்பியபடி மரத்திலிருந்து இறங்கிய பெருங்கரடியொன்று கைவிரித்து அவனை எதிர்கொண்டது. மறந்தும் படைக்கலம் தொடாது தன் இரு கை விரித்து புன்னகையுடன் அவன் நின்றான். அவன் பின்னால் மற்றுமொரு கரடி இறங்குவதை கண்டேன். ஏழு கரடிகள் கூரிய நச்சுதோய்த்த அம்பு தொடுத்த வில்லுடன் அவனை சூழ்ந்தன. எந்தையீர், அக்கணத்தை நான் பிறந்திறந்து கடந்தேன். பின் முதல் கரடி தன் முகமூடியை விலக்கி அவனை நோக்கியது. கரிய விழிகளில் சினத்துடன் ‘யார் நீர்? ஜாம்பவரின் மண்ணுக்குள் மானுடர் கால் வைத்ததில்லை என்றறிய மாட்டாயா?’ என்றது. அவன் புன்னகையுடன் ‘ஆம், இதுவரை அவ்வண்ணம் நிகழ்ந்தது. ஏனெனில் ஜாம்பவானை வெல்லும் ஒருவன் மண்ணில் இதுவரை இருந்ததில்லை. இன்று நான் அவனை வெல்ல முடியும் என்று உணர்ந்தேன். எனவே தேடி வந்தேன்’ என்றான். அக்கரடிமனிதன் முகத்தில் எழுந்த பெருவியப்பை கண்டேன். ஒருவரையொருவர் அவர்கள் நோக்கிக்கொண்டனர்.”

“அவன் ‘ஜாம்பவரே, ஐயமிருப்பின் உங்களில் எவரேனும் ஒருவர் இக்கணம் என்னிடம் பொருதலாம். ஐந்து சொல் எடுப்பதற்குள் அவரை நான் வெல்வேன். அவ்வண்ணமெனில் உங்கள் தலைவரிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள்’ என்றான். அடக்கமாட்டா பெருநகைப்புடன் பேருடல் கொண்ட முதல் கரடி மனிதன் தன் அம்புகளை தரையில் போட்டு இரு கைகளையும் விரித்து அவனை எதிர்கொண்டான். திரும்பி பிறரிடம் ‘எண்ணிக்கொள்ளுங்கள்’ என்றுரைத்து நெய்யில் தாவிப்பற்றிச்சூழும் நெருப்பென சென்றான். என் கண் முன் மூன்று சொல் ஒலிக்கும் நேரத்தில் அவன் இரு கைகளையும் முறித்து கீழே போட்டு நெஞ்சில் கால் வைத்து வான் நோக்கி தலையெடுத்து வஞ்சினப் பேரொலி எழுப்பினான். பிற கரடிகள் வில் தாழ்த்தி அவனை சூழ்ந்தனர். ‘மறுவழியென ஒன்றில்லை ஜாம்பவரே. உங்கள் தலைவருடன் நான் பொருதியாக வேண்டும். இல்லையேல் அவர் தோற்றார் என சொல்லளிக்கட்டும் மீள்கிறேன்’ என்றான். இரண்டாவது கரடி ‘வருக யாதவரே’ என்று முகமூடிக்குள்ளிருந்து குரலெழுப்பியது. அவன் சென்றபோது நானும் தொடர்ந்தேன். எந்தையரே, மூன்று சொல் பிறக்கும் கணத்தில் முழு உருவக்கரடியொன்றின் கழுத்தை முறிக்கும் கலையென ஒன்றுண்டு இப்புவியில் என நானே எனக்கு சொல்லிக்கொண்டேன்.”

“எங்களை அழைத்துச் சென்ற ஜாம்பவர்கள் வாயில் கைவைத்து எழுப்பிய ஒலிக்கு அங்கிருந்து மறுமொழி வந்தது. அணுகுவதற்குள்ளே ஐம்பது கரடிகள் மரக்கிளைகளில் இருந்து இறங்கி எங்களை சூழ்ந்து கொண்டன. முகமூடி விலக்கி முதல்தலைவன் தன் வீரனிடம் ‘இவனா?’ என யாதவனை நோக்கினான். புன்னகைத்து ‘ஆம், நானே’ என்று அவன் சொன்னான். ‘உங்கள் குல முறைப்படி முதன்மை ஜாம்பவானை போருக்கு அழைப்பவன் குலமுறை வரவேற்புக்குரியவன் என அறிவேன். அதன் பொருட்டு வந்தேன். ஆவன செய்க!’ என்றான். விழியிமைக்காது ஒரு கணம் நோக்கி பின் தலைவணங்கி ‘வருக!’ என்று அழைத்துச் சென்றான். எட்டு குகைகள் சூழ்ந்த வளைந்த பாறை நடுவே இருந்தது அவர்களின் ஊர்ச்சதுக்கம். அங்கே ராகவ ராமனைத் துணைத்து இலங்கை வென்று மீண்ட ஜாம்பவானின் பெருஞ்சிலை ஒன்று நெஞ்சில் அறைந்து விண்ணோக்கி முகம் தூக்கிய வடிவில் நின்றது. அருகே அவர்களின் ஆறு தெய்வங்கள் கோவில் கொண்டிருந்தன. அங்கிருந்த பீடத்தில் அவனை அமர வைத்தனர். அருகே என்னை நிற்கவிட்டனர். இன்கடுநீரும் அனல் சுட்ட ஊனுணவும் கொண்டு வந்து அளித்தனர். ‘இளையோரே, நீங்கள் இளைப்பாறுங்கள். உடல் திரட்டி இப்போருக்கு ஒருக்கமாகலாம்’ என்றான் காவல்தலைவன். ‘எக்கணமும் போருக்கென எழுந்து வந்தவன் நான்’ என்று இளையவன் மறுமொழி சொன்னான்.”

“மரங்களைக் குடைந்து மாட்டுத்தோலிட்டு அமைத்த நீளப்பெருமுழவுகள் கரடிக்குமுறல்கள் போல முழங்கத் தொடங்கின. மலைக் குகைக்குள் இருந்து ஜாம்பவகுலத்தார் ஒவ்வொருவராக வெளிவந்தனர். தோளும் முலையும் திரண்ட கரடித் தோலாடை அணிந்த கரிய பெண்கள். பின்னியிட்ட நீள்சடையில் செங்கழுகின் இறகு சூடிய இளம்கன்னியர். ஒளிரும் விழிகளுடன் இளையோனை கூர்ந்து நோக்கிய சிறுவர். அன்னை இடை அமர்ந்து எச்சில் வழிய கை நுணைத்து கால் நெளித்த குழவியர். அவையீரே, அப்போதுதான் ஜாம்பவரும் மானுடரே என்றறிந்தேன். அவர்கள் விழிகள் எம்மானுடர்க்கும் இல்லாத பேரழகு கொண்டவை என்று உணர்ந்தேன். அவ்வழகிய மகளிரை மீளமீள நோக்கினேன். அவர்களின் குழவியரை வாங்கி நெஞ்சு சேர்க்க எண்னினேன். அவர்கள் எவரும் என்னை நோக்கவில்லை. விழிகள் அலர்ந்த அத்தனை முகங்களும் இளையோனிலே இருந்தன. அவன் அசைவை அவர்களின் விழியசைவிலேயே அறியமுடிந்தது. எந்தையரே, அவன் இங்குள்ள பெண்டிர் விழிகளால் ஒன்றுநூறுபல்லாயிரம் என பெருக்கப்படுகிறான். அவர்களால் நோக்கி நோக்கி தீட்டப்படுகிறான்.”

“கொம்போசை பிளிறியதும் முதல் குகையிலிருந்து ஜாம்பவான் வெளிவந்தார். இளையவனைவிட இருமடங்கு பெரிய உடல் கொண்டு அவன் தலைக்குமேல் தன் தோள் நிற்க எழுந்தார். கரிய பெரும்தோள்கள். கோரைப்பல் எழுந்த வாய். திமில் எனச் செழித்த பெருங்கரங்கள் தேள்கொடுக்கென அசைந்தன. மண்ணறைந்து வந்த துதிக்கை கால்கள் அணுகியபோது நான் பின்னடைந்தேன். அவையீரே, மானுடரில் அவருக்கிணையான பேருடலொன்றை நான் கண்டதில்லை. அருகணைந்து அவர் நிற்க அண்ணாந்து முகம் நோக்கிய போதுதான் முதியவரென்று கண்டேன். கண்கள் கீழ் தசை தளர்ந்து மடிந்து தொங்கியது. மூக்கு தளர்ந்து வளைந்து உதடை மறைத்தது. கழுத்துத் தசைகள் கன்றுஅள்ளை என அசைந்தன. கரடிகளுக்குரிய துலாதூக்கியதுபோல் ஆடும் நடையுடன் அணுகி இளையோன் முன் வந்து நின்று இடையில் கைவைத்து குனிந்து நோக்கினார். இளையோன் எழுந்து அவர் கால் தொட்டு வணங்கி ‘விருஷ்ணிகுலத்து யாதவன் நான். ஜாம்பவர் குல முதல்வரை மற்போருக்கு அழைக்க வந்துள்ளேன்’ என்றான்.”

“இதழ் சற்றே வளைய சுருக்கங்கள் இழுபட புன்னகைத்து ‘இளையோனே, நூறாண்டுகளுக்கு முன் ராகவ ராமன் என்றொருவன் என் மூதாதை ஜாம்பவானை மற்போரில் வென்றான் என்று அறிந்துள்ளேன். அதற்கு முன்னும் பின்னும் மானுடர் எவரும் ஜாம்பவான்களின் முன் நின்றதில்லை. கதை கேட்டு அறியாது வந்த இளையோன் நீ. உன் குழல் அணிந்த மயிற்பீலி என்னை கவர்கிறது. உன் அன்னையின் புன்னகை அதில் உள்ளது. உனக்கென கனிந்தேன். என் வாழ்த்துக்களை கொள்க! நீ செல்லலாம்’ என்றார். இளையோன் ‘என் சொல் கொள்ளும் எடையறிந்தே உரைத்தேன் ஜாம்பவரே. மற்போரிடவே நான் வந்தேன்’ என்றான். ஜாம்பவான் என்னை நோக்கி ‘இவன் சான்றாகட்டும் உனக்கு மும்முறை வாய்ப்பளித்தேன். இது இரண்டாவது சொல். நீ செல்லலாம். உன்னை என் மைந்தனென நெஞ்சோடு அணைத்து சொல்லளித்தேன்’ என்றார். இளையோன் ‘மூத்தாரே, போரன்றி எதற்கும் ஒப்பேன்’ என்றான். ஜாம்பவான் என்னை நோக்கி ‘சான்று நிற்போனே, கேள்! இது மூன்றாவது முறை. இளையோனாகிய இவனைக் கொல்ல என் கரங்கள் ஒப்பா…’ என்றபின் திரும்பி ‘குழந்தை, செல்க நீ!’ என்றார்.”

“இளையோன் ‘தங்கள் கருணைக்கு முன் தலை வணங்கினேன் மூத்தவரே. இந்நெறி எனக்கும் என்றும் வழிகாட்டுவதாக! நான் போரிடவே எழுந்தேன்’ என்றான். ஜாம்பவான் சில கணங்கள் தன் முதிர்விழிகளால் நோக்கியபின் தலைவணங்கி திரும்பி கைகாட்ட நாற்புறத்திலும் இருந்து பெருமுழவுகள் உறுமத் தொடங்கின. அனைத்து குகைகளில் இருந்தும் கரடித்தோல் அணிந்த ஜாம்பவர்கள் வந்து அம்மன்றை சூழ்ந்து கொண்டனர். குலமூத்தாரே, தேனீக்கள் கூடிய தேன் தட்டு போல இருந்தது அக்களம்.”

யாதவர் சொல் தவறாது கொள்ளும் விழைவுடன் ஒற்றனை சூழ்ந்து நின்றனர். ஒருவர் கொண்டு வந்து அளித்த சூடான இன்கடுநீரை ஏழு மிடறுகளால் அருந்தி வாய் துடைத்து அவன் அப்போரை விளக்கினான். “மூத்தோரே, நூறு ஊன்பந்தங்கள் எரிய செவ்வொளி சூழ்ந்த வட்டத்தில் பிறை நிலவு விண்ணில் முகில்நீக்கி எழுந்த முதல் தருணத்தில் அப்போர் தொடங்கியது. கரடித்தோல் ஆடை அணிந்து கரிய பேருடலில் காளிந்தி அலைகளென தசைகள் நெளிந்தசைய ஜாம்பவான் எதிர் நின்றார். செவ்வாடை அணிந்து இடையில் மஞ்சள் கச்சை சுற்றி தலையில் அணிந்த பீலியுடன் இளையோன் எதிரே கைவிரித்து நின்றான். நூறு சிம்மங்கள் சூழ்ந்தொலித்தன என அதிர்ந்த முழவின் நடுவே ஒருவரையொருவர் நோக்கியபடி அவர்கள் சுற்றி வந்தனர். நீண்ட நான்கு கைகள் ஒன்றையொன்று புல்கத் துடித்த கணம் நீண்டு நீண்டு காலம் என்றாகி திகழ்ந்து. என் நெஞ்சை கையால் அழுத்தி கால் பதைக்க அதை நோக்கி நின்றேன்.”

“முழவோசை அதிர்ந்தெழுந்து சூழ்ந்திருந்த பாறைகளை திரைச்சீலையென அதிர வைத்தது. கரடி முகமூடியிட்ட நூறு ஜாம்பவர்கள் அக்களத்திற்கு எல்லை வகுத்தனர். அப்பால் தோலாடை அணிந்த ஜாம்பவர் குலத்துப் பெண்களும் ஆண்களும் முதியோரும் குழவியரும் நின்று வெள்விழிகளில் செங்குருதி ஈரமென பந்தங்கள் ஒளிர அச்சமரை நோக்கி நின்றனர். முழவோசை உச்சத்தை முட்டி ஒலியின்மையாக வெடித்தபோது நான்கு கைகளும் நீர் வந்து நீரை அறையும் ஒலியுடன் இணைந்தன. இரு உடல்களும் ஒன்றையொன்று தழுவி இறுக்கி சுழலத் தொடங்கின. தோள்கள் உரசும் ஒலி மலைப்பாம்புச் சுருள் நெளிவதுபோல் கேட்டது. காற்றிலாடும் மூங்கில்கள் என வலுத்தது. ஒருவரை ஒருவர் இறுக்கி அழுத்தியபடி ஏழு முறை சுழன்று மண்ணில் அறைந்து விழுந்து புரண்டு எழுந்து விலகாமலேயே அதிர்ந்தனர். தன் பெருங்கரத்தால் ஜாம்பவான் இளையோனை ஓங்கி அறைந்த கண நேரத்தில் அவன் புரண்டு விலக அந்த அடி பட்டு தரை அதிர்ந்தது. மும்முறை அவ்வாறு அறைந்த பின் அவர் உணர்ந்து கொண்டார். விரைவே இளையோனின் ஆற்றல் என. பின் ஒவ்வொரு அசைவையும் தான் அளந்து பின் அளித்தார். ஒவ்வொரு அடியிலிருந்தும் அவன் பறவை என புழு என நீர் என நெருப்பு என விலகினான். அவையீரே, ஒரு அடி அவன்மேல் விழுந்திருந்ததென்றால் இன்று இச்சொல்லுடன் நான் வந்திருக்கமாட்டேன் என்றறிக!”

“அப்போரை என் எளிய சொற்களால் இங்குரைக்க ஆற்றேன். உடல்கள் மற்போரில் மட்டுமே பிறிதொன்றை முழுதறிகின்றன என்பார் மூத்தோர். கைகளை கைகளும், தோள்களை தோள்களும், கால்களை கால்களும், இடையை இடையும், நெஞ்சை நெஞ்சும், வஞ்சத்தை வஞ்சமும், ,அச்சத்தை அச்சமும் அறியும் தருணங்களால் ஆனது மற்போர் என அப்போது அறிந்தேன். ஒவ்வொரு கணமும் இறப்பு நிகழ்ந்து, பின் நிகழவில்லை என்றாகி, மறுகணமே இறப்பு என அணைந்து, அக்கணமே அகன்று செல்லும் போரென்று பிறிதொன்றை கண்டதில்லை. நீண்டு நீண்டு சென்ற ஒரு கணத்தின் நுனியில் ஜாம்பவானின் நீண்ட சடைக்குழலை இளையோன் பற்றிக்கொண்டான். அவர் இடையில் கால் வைத்து தோளில் முழங்கால் சேர்த்து எம்பி மறுபக்கம் குதித்து தன் உடலைச் சுழற்றி அவர் பின் சென்று முழங்காலால் அவர் முதுகை அழுத்தி முன் சரித்தான். முறியும் மரமென அவர் எலும்புகள் முனகுவதை கேட்டேன். வலியின் ஒலியொன்று அத்தனை மலைப்பாறையும் அசைகின்ற பெரும் எடையுடன் எழுந்தது. தளர்ந்த அவர் வலக்காலைப் பற்றி தலைமேல் தூக்கி நிலத்தில் ஓங்கி அறைந்தான். ஜாம்பவர்கள் அனைவரும் எழுப்பிய வியப்பொலி அங்கு சூழ்ந்தது. வெற்றியின் கணம் என்றபோதும் நான் அஞ்சி ஓரடி பின்னகர்ந்தேன்.”

“ஜாம்பவான் சுழன்று மண்ணில் புரண்டு எழுந்தார். அவர் வலக்கை நீண்டு அவனைப்பற்றி வீசியது. மண்ணில் தெறித்து விழுந்தவன் விட்டிலென எழுந்து அவர் எழுவதற்குள் கைவிரித்து அவர் மேல் மீண்டும் பாய்ந்து எழுவதற்காகக் கையூன்றிய அவரை மீண்டும் அறைந்து மண்ணில் வீழ்த்தினான். தன் முழு எடையுடன் ஜாம்பவானின் நெஞ்சில் விழுந்து முழங்காலால் அவர் மார்பை அழுத்தி வலக்கையால் அவர் தலையைப் பற்றி இடக்கையால் கழுத்தைச் சுற்றி நெரித்துச் சுழற்றி அழுத்தினான். இருகால்களும் நிலத்தில் அறைய அப்பேருடல் மண்ணில் துடிப்பதை கண்டேன். பின் அவர் வலது கால் இழுபட்டு இழுபட்டு அதிர்ந்தது. மேலும் இரு கணங்கள் அவ்வழுத்தம் தொடர்ந்திருந்தால் அவர் உயிர் துறந்திருப்பார். ஆனால் இளையோன் உடனே விலகி எழுந்து இடை சேர்த்து கை வைத்து நின்று கருணை நிறைந்த புன்னகையுடன் நோக்கி ‘எழுக மூத்தாரே!’ என்றான். வெண்பல்காட்டிச் சீறி எழுந்து கைகளை ஓங்கியறைந்து அவன்மேல் மீண்டும் பாய்ந்தார் ஜாம்பவான்.”

யாதவர் மெய் சிலிர்க்க உடல் விதிர்ப்புற்று உள்ளெழுந்த விழிகளால் அச்சமரை நோக்கி அவனைச் சூழ்ந்து நின்றனர். விழி நோக்கியதை சொல்லறிந்தது என ஒற்றன் சொன்னான். “நிகர் நிலையில் நிகழும் போர்கள் தெய்வங்களுக்கு உகந்தவை என்பார்கள். அங்கு தெய்வங்கள் தங்கள் ஆற்றலை அளந்து கொள்கின்றன. இருளின் ஆற்றல் ஜாம்பவானின் தோள்கள் என்றால் ஒளியின் ஆற்றல் நீலனின் தோள்கள். அவை பின்னி முயங்கும் அக்கணத்தில் காட்சிகளாய் அசைவுகளாய் இங்கு நிறைந்திருக்கும் ஒவ்வொன்றும் தாங்கள் நிகழும் விந்தையை கண்டுகொண்டன. ஒவ்வொரு அடிக்கும் மறு அடி உண்டு என்றும், ஒவ்வொரு பிடிக்கும் விலகல் உண்டு என்றும் கண்டேன். ஒரு கணம் என்பது நூறு நூறு துடிக்கும் தசைகளால், அதிர்ந்து புடைத்த பல்லாயிரம் நரம்புகளால், உரசி இறுகும் நான்கு தோள்களால், பிதுங்கிய விழிகளால், இறுகிய பற்களால் ஆனது என்றறிந்தேன். ஒரு கணத்தில் நிகழும் போர் முடிவற்றது. கணங்களால் ஆன அப்போர் முடிவிலிகளால் ஆன ஆரம். அவையீரே, காலம் கடுகி விரைந்து செல்வதை மற்போர் போல காட்டக்கூடிய பிறிதொன்றில்லை.”

“காலமின்மையில் உடல்கள் இறுகி அசைவிழப்பதைக் கண்டபோது காலமென்பது அகமே என்று அறிந்தேன். என்றோ எங்கோ ஒரு கணத்தில் எவர் வெல்வார் என்பது முடிவாகும் விந்தையை அங்கு கண்டேன். இங்கு எத்தனை எண்ணி எண்ணி சொல்லெடுத்துச் சென்றாலும் அதை நான் தொட்டுவிட முடியாது. அவன் தன் கருநீலக்கொடியென வளைந்த கைகளால் கரிய பெருந்தோள்களை வளைத்து பின்இழுத்த போதா? மெல்லிய குதிரைக் கால்கள் ஜாம்பவானின் கரிய யானைக்கால்களுக்குள் நுழைந்து பின்னிச் சுழற்றிய போதா? தசை புடைக்க இடத்தோள் எழுந்து அவர் வலத்தோளை மண்ணோடு உரசி அழுத்திய போதா? ஒவ்வொரு அசைவுக்கும் நிகரசைவு கொண்டு ஒவ்வொரு துடிப்பிற்கும் எதிர்த் துடிப்பு கொண்டு ஒவ்வொரு எடைக்கும் மறு எடை கொண்டு நின்றிருந்த துலாக்கோல் அக்கணத்தில் முடிவெடுத்தது. அதை விழி அறியும் முன்னே என் உளம் அறிந்தது. துள்ளியெழுந்து கைபிடித்து கூச்சலிட்டேன் என்று நான் உணர்ந்தபோது செயலற்று குனிந்து உடல் விதிர்க்க நின்றிருந்தேன். நின்று நடுங்கிய நீர்த்துளி உதிர்ந்தது என போர் முடிந்தது” என்றான் ஒற்றன்.

“சூழ்ந்து நின்ற கரடிக்குலம் சோர்ந்த கைகளுடன் தளர்ந்த தோள்களுடன் தரையில் விழுந்து கையூன்றி எழுந்த தங்கள் தலைவனை நோக்கி நின்றது. உடைந்த தொடையின் வலி முகத்தில் சுளித்திருக்க பற்களைக் கடித்து மூச்சிரைக்க ஜாம்பவான் கேட்டார் ‘இளையோனே, எங்கள் குலத்திற்கு மூதாதையர் அளித்த சொல்லென ஒன்றுள்ளது. ராகவ ராமனன்றி எவர் முன்னும் நாங்கள் தோள் தாழ்த்த நேராது. எங்ஙனம் நிகழ்ந்தது இது? நீ யார்?’ நீலமுகம் விரிய விழிசுடர புன்னகைத்து இளைய யாதவன் சொன்னான் ‘அவனே நான்!’ எந்தையரே, என் குலத்தீரே, அக்கணம் அதை நானும் உணர்ந்தேன். அவன் இவனே என.”

“இரு கைகளையும் தலைமேல் கூப்பி எழுந்து இளையவன் கால்களைத் தொட்டு ஜாம்பவான் சொன்னார் ‘எந்தையே இத்தனை நாள் கழித்து தங்கள் இணையடி எங்கள் மண் சேர ஊழ் கனிந்துள்ளது. எங்கள் குல மூதாதையர் மகிழும் கணம். எங்கள் குலக்கொழுந்துகள் உங்கள் சொல் கொண்டு வாழ்த்தப்படட்டும்!’ புன்னகைத்து அவனும் ‘ஆம் அவ்வாறே ஆகுக!’ என்றான். அவனைச் சூழ்ந்து அணைத்துச் சென்று தங்கள் மன்று அமைந்த மேடையில் அமர்த்தினர். மலர்தார் கொண்டுவந்து அவன் மார்புக்குச் சூட்டினர். அவர்கள் குல மூதாதையர் கொண்டிருந்த முப்பிரி வேல் கொண்டுவந்து அவன் கையில் கொடுத்தனர். இன்கடுந்தேறல் அளித்தனர். ஆடவரும் பெண்டிரும் தங்கள் மைந்தருடனும் கையமர்ந்த மகவுகளுடனும் அவன் முன் அணிவகுத்து வணங்கி நற்சொல் பெற்றனர். அவர்களில் இளங்கன்னி ஒருத்தி மின்மினி என ஒளிர்ந்தபடி அவனருகே வந்தாள். மூத்தோரே, உடல்மென்மையில் பந்தச் செவ்வொளி சுடர்வதை அன்று கண்டேன். காராமணிப்பயறு என கருங்கல் உடைவென மேனி மிளிர்ந்தவள். ஜாம்பவ முதல்வரின் மகள் அவள். அவள் செப்புமுலைகள் நடுவே நீலக்கதிர் விரித்திருந்தது சியமந்தக மணி.”

“அஸ்வபாதத்தின் சரிவில் இருந்த சிம்மக்குகையொன்றிற்குள் இருந்து அவர்கள் கண்டெடுத்தது அது என்றனர். பெருங்கரடி நன்கறிந்த குகை அது. குகைக்கூரையில் பன்றி அகிடுகள் என பருத்துத் தொங்கும் தேனடைகள் கொள்ளச் சென்றவர்கள் அதனுள் புதிய ஒளி ஒன்று தெரிவதைக் கண்டு உள் நுழைந்து நோக்கும்போது கதிரவனின் விழியென மணியொன்று சுடர்வதை கண்டனர். அச்சிம்மத்தை வென்று அதைக் கொண்டனர். தங்கள் இளமைந்தர் களியாட அதை அளித்தனர். ‘மூத்தவரே, அந்த மணி எங்கள் குலம் கொண்ட செல்வம். அதைக்கொள்ளவே வந்தேன்’ என்று அவன் சொன்னான். ஜாம்பவான் ‘அதை உனக்கு வெற்றிப்பரிசிலென அளிக்கிறேன் இளையோனே’ என்று சொல்லி அதை பொற்பட்டு நூலில் கட்டி அவன் கழுத்தில் அணிவித்தார்.”

“யாதவரே, குல மூத்தாரே, அந்த நீலமணியை அவன் நெஞ்சு சூடக்கண்டு அங்கிருந்து ஓடி வந்தேன். அவர்கள் அளிக்கும் குல விருந்துண்டு மகிழ்ந்து நாளை அவன் இங்கு வருவான்” என்றான் ஒற்றன். வளைதடிகள் தூக்கி யாதவ மூத்தோர் உவகைக்குரல் எழுப்பினர். கைதூக்கி ஆர்ப்பரித்து கொந்தளித்தனர் இளைய யாதவர். கொப்பளித்துப் பெருகிச்சென்று அவள் இருந்த நீலக்கடம்பு வனத்தைச் சூழ்ந்து களியாடினர். ஆயர் இல்லத்தில் புகுந்து கள் மயக்கத்தில் கிடந்த சத்ராஜித்தை உலுக்கியெழுப்பி “அரசே உமது மகள் வென்றாள். யாதவ குலம் நின்றது” என்றனர். நோய் முற்றி மெலிந்து மஞ்சம் சேர்ந்த மாலினியை எழுப்பி அதைச் சொன்னபோது அச்சொற்கள் உள்நுழையாமல் விழித்து பதைத்த மொழியில் “என் மகள்… என் மகள்” என்று சொல்லி விழிநீர் உகுத்தாள் அவள்.

ராகினி ஓடிச்சென்று கடம்பமரத்தடியில் விழுவதுபோல் அமர்ந்து “எழுக தோழி! அவன் வருகிறான்! செய்தி வந்துள்ளது” என்றாள். தான் ஊணின்றி உறக்கின்றி மெலிந்து உடலொட்டிப் போயிருந்தபோதும் அவளோ அன்று அமர்ந்த அக்கோலத்தில் பொலிவதை ஒவ்வொரு நாளும் அவள் கண்டிருந்தாள். அவன் வரும் அச்செய்தியும் அவளை சென்றடையவில்லை என்பதை உணர்ந்தாள். அவளிருந்த செம்மலர் மேல் அவள் மட்டுமே அமர இடம் இருந்தது போலும் என எண்ணிக்கொண்டாள். கை நீட்டி அவள் மலர்ப்பாதங்களைத் தொட்டு ஆற்றாது விழிநீர் உகுத்தாள். அருகே மரத்தடியோடு ஒட்டி மெலிந்த நீர்க்கோலமென அமர்ந்திருந்த மஹதியும் அச்சொற்களுக்கும் உணர்வுகளுக்கும் அப்பால் இருந்தாள்.

முந்தைய கட்டுரைபேய்களின் உலகம்
அடுத்த கட்டுரைசிவமயம் (சிறுகதை)