வணங்காதவர்கள்

இனிய ஜெயம்,

சமீபத்தில் தோழி ஒருவருக்கு, பி ஏ கிருஷ்ணன் எழுதிய ஒரு களிறு போதுமா எனும் கட்டுரையின் சுட்டியை அனுப்பி இருந்தேன். சிதம்பரம் நந்தனார் பள்ளி விழாவுக்கு சென்ற கிருஷ்ணன், அவ் விழாவுக்கு வந்த திருமா அவர்களை [திருமாவளவன்] அவரின் ஆளுமையை, கம்பீரத்தை காதலுடன் கண்டு, அக் காதல் குறையாமல் எழுதிய கட்டுரை. அங்கு திருமாவுக்கான அன்பை,ஆதரவை, எழுச்சியை காண்கிறார். பட்டத்து யானை. ஒரு சமூகத்தின் எழுச்சிக்கு ஒரு களிறு மட்டும் போதுமா? என்ற வினாவுடன் அக் கட்டுரை நிறைகிறது.

தோழி சொன்னார். ஜெயமோகன் உட்பட அவரது ஆளுமையால் வசீகரிக்கப்படாத எழுத்தாளர்கள் குறைவு என்றே தோன்றுகிறது. திருமா அவர்களை அடிப்படையாகக் கொண்டு அரசியலிலும் சமூகத்திலும் நிகழ்ந்த மாற்றத்தை நுணுகி ஆய்ந்து விரித்து பேசும் நூல் ஒன்றனை பரிந்துரைக்க முடியுமா என்று வினவினார். உடனடியாக எந்த நூலின் பெயரும் நினைவில் தோன்றவில்லை. ஒரு வேலை அத் தகு காத்திரமான நூல்களை நான் வாசிக்காமல் இருந்திருக்கக் கூடும்.

நான்பார்க்க என் கண் எதிரே நிகழ்ந்த மாற்றம் ஒன்றின் சித்திரத்தை தோழிக்கு சொன்னேன். கடலூர் அருகே ஒரு கிராமம். விவசாய நிலங்கள் எல்லாம், தெலுங்கு மொழி பேசும் ”ஆண்டை” ஒருவருக்கு சொந்தம். ஊரில் பிறர் எல்லாம் அவரது பண்ணையாட்கள் . மொத்த ஊரே இதுதான். அடக்குமுறைகள் பற்றி சொல்லத் தேவையே இல்லை. மேலத் தெருவில் யாரும், மேல் சட்டையோ, செருப்போ அணிந்து நுழைந்துவிட முடியாது. முன் வாசல் வழியே நோக்கக் கூடாது. இரட்டைக் கிணறு.இரட்டைக் குவளை. ‘புழக்கட சனம்’ எனும் நாராச வார்த்தை தென்னார்க்காடுக்கு சொந்தமான வட்டாரவழக்காக இருக்கலாம்.

நான் கண்ணால் கண்டேன். திருமா வந்தார். பேச்சோ வீச்சோ எந்த மொழியில் பேசினால் செருக்கின் செவியில் விழுமோ அந்த மொழியில் பேசினார். இன்று நிலவரமே வேறு. ஒடுக்குமுறை தேய்ந்து வெளியில் சொல்லாத ‘புறக்கணிப்பாக’ மட்டுமே இந்தக் கீழ்மை எஞ்சுகிறது.

திருமா சினிமாவில் நடிக்கப் போனது ஏனோ எனக்கு மிக கோபத்தை வர வழைத்தது. அவர் எதை செய்ய வந்தாரோ அதை தவறவிடுகிறார் என்ற கோபம். இந்தக் கோபத்தை சொல்லில் விளக்க இயலாது. இன்று எந்த பெருந்தலைவர்களின் சிலைகளையும் விட, அந்த நிலத்தின் முச்சந்தியில் பறக்கும் கொடியின் கீழ் இருக்கும் சிமென்ட் உதிர்ந்த சிறுத்தை பொம்மை தரும் உவகை அளப்பரியது.

திருமா வந்து கேட்பார் என்பதே இங்கு கடலூர் மாவட்டத்தில் பலவற்றை மாற்றி அமைத்தது என்பதே உண்மை.

வணங்கான் கதையில் இஞ்சிக்குடி கிராமத்துக்குள் நேசமணி நுழையும் சித்திரம், எனக்கு அக் கிராமத்துக்குள் நுழைந்த திருமாவின் எழுச்சியுடன் இணைந்தே பொருள்கொண்டது. சமீபத்தில் எனது குலதெய்வம் கோவிலில் என்னைக்கண்ட சொந்தம் ஒருவர் மகிழ்ச்சியுடன் சொன்னார். ”உங்காளு கத ஒண்ணு படிச்சேம்ப்பா” ”வணங்காந்தானே” . வெற்றிலை மைக்காரனை பய பக்தியுடன் நோக்குவதுபோல என்னை நோக்கி கேட்டார் .”எப்டிப்பா கரக்ட்டா சொல்ற?” ”இதுல என்னங்க ஆச்சர்யப்பட இருக்கு நீங்கதான் நம்ம சாதி விஷயம் எல்லாத்துலயும் அப்டேட்டா இருக்குற ஆளாச்சே என்றேன்” அவருக்கு பெருமை பிடிபடவில்லை.

இங்கே சம்பந்தமே இல்லாத ஆனால் அவசியம் பகிரவேண்டிய ஒன்றினை பகிர்ந்துகொள்கிறேன். நமது குழுமத் தோழி ஒருவர். எப்போதும் என்னுடன் வெண்முரசு குறித்து பேசிக்கொண்டிருப்பவர். அவர் ஒரு முறை தாள இயலா சிரிப்புடன் சொன்னார் ”சீனு என் தோழி ஒருத்தி, பிள்ளை சமூகத்தில் முக்கியஸ்த்தர்கள் யாரோ அவர்களை தொகுத்து ஒரு முகநூல் பக்கம் உருவாகி இருக்கிறாள். அதை பார்வை இட்டேன். அதில் எழுத்தாளர் ஜெயமோகன் பெயரும் இருந்தது. மிகுந்த குழப்பத்துடன் அவளிடம் வினவினேன். அவள் சொன்னாள் அவர் அப்பா பாகுலேயன் ‘பிள்ளை’ தானே ?”

எல்லா சாதியிலும் இப்படித்தான் சாதிப்பற்று அணை உடைத்து அண்டை மாநிலங்களை வெள்ளத்தில் மூழ்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கோமாளிகளின் கண்ணிகளில் ஒருவர்தான் என் சொந்தமும். அவர் பொங்கி பூரித்து முடித்ததும் நான் சொன்னேன். அது நாடார் சாதி பத்துன கதை இல்லை. என் சொந்தம் ”இது தெரியாம அந்தக் கதைய என் பொண்டாட்டி புள்ளைகள வேற படிக்க சொல்லிட்டனப்பா” என்ற பீதியுடன் நோக்கினார்.

அது தன்மானம் குறித்த கதை. மானம்னா என்னான்னு தெரியுமா? தன்னிலை தாழாமையும்,அந்நிலை தாழ்ந்தக்கால் உயிர் வாழாமையும் மானம் எனப்ப்படும்னு வள்ளுவர் சொல்லிருக்கார். அவமான்ம்னா என்னான்னு தெரியணும்னா அதுக்கு மானம்னு ஒண்ணு இருக்கணும். தனக்கு மானம்னு ஒண்ணு இருக்குரத முதல் முதலா தெரிஞ்சு, அதக் காப்பாத்திக்க போராடுன மனுஷனோட கதை. எது மனுஷன, மனுஷன் அப்டின்னு அடையாளப் படுத்துதோ அதைப் பத்தின கதை.

அவர் ஒரு மாதிரி தயங்கி பின்வாங்கி காணாமல் போனார். ஒன்றும் செய்வதற்கில்லை என்று நினைத்துக் கொண்டேன். சமீபத்தில் ஒரு கட்டுரை எழுதுகையில் வணங்கான் கதை நினைவில் மீண்டது. தன் ஒவ்வொரு சொல்லிலும் மீறலின்,அந்த ஆற்றலின் தழல் சுடரும் கதை.

தீ நின்றெரியும் கூரை போல பசியை மட்டுமே அறிந்த வணங்கானின் பாட்டி. வாழ்வெனும் பெரு வதை. மரணம் அவளுக்கு மீட்சி அளிக்கிறது. எழான் வணங்கானின் தாத்தா. வீட்டு நாய் கூட சிலசமயம் உதைத்தால்,திருப்பிக் கடிக்கும், நாயினும் கடையர். விசுவாசத்தில் நாயையும் விஞ்சியவர்.

தோப்பில் முகமது மீரானின் சன்னதியில் கதையில் ஒரு சித்திரம். வேலைக்காரர்களை நாய் அளவு கூட மதிக்காத பாய். அவர் வீட்டு வேலையாள் வள்ளி. கதையின் முடிவில் சகலத்தையும் இழந்து, கொட்டும் மழையில், அனாதையாக பாய் சாவுக்காக விழுந்து கிடப்பார். அவரின் அழுகை கேட்டு குடிசைக்குள்ளிருந்து வள்ளியின் பேரன் ”அம்மா நம்ம முதலாளிம்மா” என்றவாறு அவரை காக்க ஓடுவான்.

ஆம் விசுவாசம்.இது நிலஉடமை சமுதாயத்தை கட்டி வைத்த விழுமியங்களில் ஒன்று. இன்று அதன் தீவிரத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. [குறைந்தபக்ஷம் என்னால் அதை புரிந்துகொள்ளவே முடியவில்லை]. எழான் உண்ணும் கஞ்சியில் காலாலேயே மணலை அள்ளிக் கொட்டுகிறான், பதினைந்து வயது சின்ன எஜமான். பண்ணையாளின் விசுவாசம் போல, இந்த ஆண்டைத் திமிரும் குருதிக் குணமோ? எழான் மௌனமாக அதைக் குடிக்கிறார்.

தன்னை விலகி நின்று அறிபவன் அடையும் துயர்க்கு இணை இவ் வுலகில் எதுவுமே இல்லை. எதோ ஒரு ஆற்றல் [சுய மானம்]கருத்தானை இதிலிருந்து விலகி நோக்க வைக்கிறது.அப்பாவை அடிமனதிலிருந்து வெறுக்கிறார். ‘இதுதான் நான் இங்க திங்குற கடைசி சோறு’ சொல்லும் வணங்கான். சொல்லும் வண்ணம் செய்கிறான். தப்பி ஓடுகிறான். பிடிபடுகிறான்.

அவன் பிடிபடும் வரை, எழான் ஏறுக்குழிக்குள் புதைக்கப்படுகிறார். உடல் வெந்து சதை வழண்டு, குழியில் இருந்து வெளியில் வரும் எழான் மகனை கொன்றுவிடாதீர்கள் என்று கெஞ்சுகிறார். அதுவும் எப்படி ”ஏமானே பொன்னேமானே” என்று. பொன்னை நிகர்த்த ஏமான்.

‘அவன என்ன செய்றதுன்னு கொம்பன் தீர்மானிக்கட்டும்’ கருத்தான் கொம்பனின் கால்களுக்கு கீழ் கட்டிவைக்கப் படுகிறான். மல்லாந்து கிடக்கும் கருத்தானின் தலைக்கு மேல் யானை. பீதி அளிக்கும் காட்சி. பயத்தில் மலஜலம் பிரிகிறது. இங்கே காடு நாவலில் குட்டப்பன் சொல்வது நினைவில் எழுகிறது. செத்தா யானை கையால சாகனும், மனுஷன் அடையுற சாவுல உயர்ந்தது அதுதான். சக மனிதனை துன்புறுத்தி இன்பம் காணும் உயர்ந்த ஆத்மா மனிதன் மட்டுமே. வேழம் மிருகமே ஆனாலும் சிரியன சிந்தியாது. காலுக்கிடையில் கருத்தானை அறிந்து கவனம் கொண்டு நிற்கிறது கொம்பன்.

கருத்தான் தப்புகிறான். வணங்கான் சொல்லில் உளம் பொங்கும்வண்ணம் அது முன்வைக்கப் படுகிறது.

//புனிதமான அறியாமை என்று ஒன்று இருக்கிறது. அதற்கு நம்பமுடியாத அளவுக்கு ஆற்றல் உண்டு. என்னுடைய இத்தனைநாள் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று அது. மனிதன் கள்ளமற்று இருக்கும்போது கடவுள் அவரது இரக்கமில்லாத விதிகளை எல்லாம் கொஞ்சம் தளர்த்திக்கொள்ள வேண்டும். வேறு வழியே இல்லை அவருக்கு. அந்த சக்தியால்தான் அப்பா அவ்வளவுதூரம் சென்றார்//.

தான் எனும் ஒரே நினைவில் நின்று கருத்தான் மேலே மேலே எழுகிறார். அதிரிப்தியாக தலை அசைக்கும் ஐயங்கார் கருத்தானை அரசுப்பணிக்கு தேர்வு செய்வது இங்கு முக்கிய சித்திரம். கற்றாரை கற்றாரே காமுறுவர். கருத்தான் அங்கு வந்து நிற்ப்பதை அவரால் செரிக்க இயலவில்லை. ஆனால் அவர் கற்ற கல்வி அவரை பண்புடன் இருக்க வைக்கிறது. சில சொற்களே கொண்டு கதைக்குள் வந்து போகும் பெயரற்ற இந்த ஐயங்கார், கருத்தானின் வாழ்வில் மிக முக்கிய ஆளுமை.

ஜமீன் முகத்தில் உமிழ்ந்த கோழையுடன் கருத்தான் அலுவலகம் வருகிறார். மீண்டும் தன்னை திரட்டிக் கொள்கிறார். அவரது ஆற்றல் முன் முதலில் சரிபவர் தலையாரி தேவர்தான். ஜமீனின் அனைத்து கள்ளங்களயும் கேள்வி கேட்கிறார். ஊரிலிருந்து மிரட்டல் வருகிறது. கருத்தான் சொல்கிறார்,

‘வே, நான் எருக்குழியிலே இருந்து கேறி வந்தவனாக்கும். மரணத்தைக் காட்டிலும் மோசமான பலதையும் கண்டவன். இனி இந்த சென்மத்திலே நான் ஒண்ணுக்கும் பயப்படமாட்டேன் பாத்துக்கிடும். உமக்கெல்லாம் கணக்குவேலைண்ணா பல அர்த்தம் உண்டு. நீரு அதை வச்சு என்ன ஆட்டமும் ஆடலாம். நான் இப்பதான் கேறி வந்து பிடிச்சிருக்கேன். இந்தப்பிடி எனக்க பிடியில்லவே, எனக்கும் எனக்கு பின்னால வாற ஏழு தலைமுறைகளுக்கும் சேத்து உண்டான பிடியாக்கும். இப்பம் நான் இத விட்டா எட்டு தலைமுறைகளாக்கும் கீழ விழுகது, கேட்டேரா? சாவுறதுக்கு நாடாரு ரெடியாக்கும்னு போயி சொல்லும்..போவும் வே’

எருக்குழியில் இருந்து கேரி வந்தவன் என்று தன் தகப்பனை நினைத்தே சொல்கிறார். எந்த தகப்பனை வெறுத்து தன் பயணத்தை துவங்கினாரோ அதே தகப்பனை நினைத்து. எழான் வரும் காட்சிகள் யாவுமே தீவிரத்தின் சிகரத்தின் மீதே நிற்கிறது. கருத்தான் வெளியேறிய அந்த நாள் தொட்டு, எழான் தான் விரும்பிய அந்த உணவை தொடுவதே இல்லை. ஆம் பாவப்பட்டவன் பழிவாங்க தன் வயித்தையும் ஆத்மாவையும் விட்டால் வேறு என்ன இருக்கிறது?

ஜமீன் அலுவலகத்துக்குள் நுழைந்து கருத்தானை நோக்கி துப்பாக்கியை உயர்த்துகிறார். இனி இந்த சென்மத்துல ஒண்ணுக்கும் பயப்புட மாட்டேன் என்று சொன்ன கருத்தான் ஒரு கணம், மறுமுறை செத்துப் பிழைக்கிறார். ஜமீன் பின்வாங்க வீட்டு சிறை போல,தேவர் காவலுடன் பல நாட்கள் அலுவலகத்திலேயே கழிக்கிறார். வெளியில் வந்தால் மரணம்.

உதவி கேட்டு தனது ஆதர்சம், எதிர்ப்பால் மட்டுமே உருவாகிவந்த நேசமணிக்கு கடிதம் எழுதுகிறார். இஞ்சிக் குடிக்கு நேசமணி, குடி படை, யானை சகிதம் ஆயுதங்களுடன் அறுபது எழுபது பேருடன் வந்து இறங்குகிறார்.கருத்தானின் அலுவலகத்தை அடைகிறது படை.

சில வரிகளில் வரும் ஐயங்காரின் பேருருவம் போல, இப்போது தேவர் விஸ்வரூபம் கொள்கிறார். எதிரில் யானை. ஆயுதங்களுடன் அறுபது பேர். தேவர் சொல்கிறார். ”சார் நீங்க உள்ளேயே இருந்துக் கிடுங்க , என்ன மீறி ஒரு பய உள்ள வர முடியாது”. நூறு நூறு கருத்தான். யானையை பொருதும் வீரம். இந்த வரியைவாசிக்கும்போது என்றேனும் ஒருநாள் அந்தத் தேவரை நேரில் பார்ப்பேன், இதற்காக அவரை ஆவிசேர்த்து அணைத்துக்கொள்வேன் என்று பைத்தியக் காரத் தனமாகத் தோன்றியது. இருக்கட்டும். இலக்கியம் என்பதே ஆசீர்வதிக்கப்பட்ட பைத்தியங்களுக்காத்தானே எழுதப்படுகிறது.

நேசமணி கருத்தானை அணைத்துக் கொள்கிறார். ‘ஆணுக்கு பொறந்தவம்ல நீ. நிரூபிச்சிட்ட”. கருத்தானை யானையில் ஏற்றுகிறார் நேசமணி.

கரும்பு கடித்து, வெல்லம் தின்று, வீட்டின் முன் நின்று ஐஸ்வர்யம் அருளும் யானையை மட்டுமே ஆண்டைகள் அறிவர். அவன் வன ராஜா. கொம்பன். ஆம் கருத்தானை என்ன செய்யவேண்டும் என கொம்பன் தீர்மானித்து விட்டான்.

//அவர் உயர்ந்து சென்றுகொண்டே இருந்தார். மண் அவரில் இருந்து கீழே இறங்கிச்சென்றது. அலுவலகம் அதன் ஓட்டுக்கூரையுடன் கீழிறங்கியது. மரக்கிளைகள் கீழே சென்றன. சாலையும் மனிதர்களும் கீழே சென்றார்கள். ஒளியுடன் வானம் அவரை நோக்கி இறங்கி வந்தது. அவரைச்சுற்றி பிரகாசம் நிறைந்திருந்தது. வானத்தின் ஒளி. மேகங்களில் நிறைந்து ததும்பும் ஒளி//.

கருத்தான் எங்கு இருக்கவேண்டுமோ கொம்பன் அவரை அங்கு கொண்டுசென்று விட்டான்.

கருத்தான் தன் மகனுக்கு சூடும் பெயர் வணங்கான். பெயரிலேயே மீற இயலாக் கட்டளை. யாரறிவார் அது கருத்தானுக்கு கொம்பன் அந்தரங்கமாக அளித்த சொல்லாகவும் இருக்கலாம்.

வணங்கான். வணங்கான். இனிய ஜெயம் இந்த வினாடி உங்களை பார்க்கவேண்டும் போல் உள்ளது.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைநச்சரவம் -வரலாறும் கதையும்
அடுத்த கட்டுரைதேவகாந்தாரி