ஊட்டி காவிய முகாம் – சந்திப்பு குறித்து

ஊட்டிசந்திப்பு பற்றி நிறைய சந்தேகங்கள் வந்தன. ஆகவே ஒரு பொது விளக்கம்.

ஊட்டி சந்திப்பு குறித்த அறிவிப்பு வந்தபின் ஐம்பது பேருக்குமேல் இதுவரை வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். வரலாமா என்று மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் கோரியவர்களை பரிசீலித்தபின் அவர்களை அழைத்திருக்கிறோம். ஐம்பது என்ற எண்ணிக்கையே எங்களுடைய அதிக பட்சம். ஆகவே மேற்கொண்டு எவரும் வருகையை தெரிவிக்க வேண்டாம் என்று கோருகிறோம். இடவசதி உணவு ஏற்பாடு வசதி முதலியவற்றைக் கருத்தில்கொண்டே இந்த முடிவு என்பதை புரிந்துகொள்ளும்படி கோருகிறோம்.

வருவதாக்ச் சொன்னவர்கள் தங்கள் வருகையை வரும் ஆகஸ்ட் முதல்வாரத்துக்குள் உறுதி செய்யவேண்டும். அதை ஒட்டியே பிற ஏற்பாடுகள் செய்யப்படும். வருவதாக உறுதியளித்தபின் வராமலிருப்பதை ஒர் அவமதிப்பாகவே கொள்வது எங்கள் வழக்கம். மிகச்சிலர் அவ்வாறு செய்வதுண்டு, நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அவர்களை பிறகு எப்போதும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறோம் – நட்பைப் பேணியபடியே. இம்முறை வருவதாகச் சொல்லி கோரிக்கை விடுத்தும் அழைக்கப்படாதவர்களுக்கு அதற்கான காரணம் என்ன என்று புரிந்திருக்கும்.

தவிர்க்கமுடியாத காரணங்கள் இருக்கலாம். அதை ஏற்பதில் தடை இல்லை. ஆனால் இலக்கிய நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு ‘முடிந்தால் போகலாம்’ என்ற மனநிலை ஊக்குவிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்த அறிவிப்பு. இலக்கியம் வாழ்க்கையின் முக்கியமான ஓர் அங்கம்; அதற்காக சிறிது இழக்கவும், சிறிது உழைக்கவும், சிறிது பொறுத்துக்கொள்ளவும் தயாராக இருப்பவர்களை மட்டுமே நாங்கள் உத்தேசிக்கிறோம். அப்போதுதான் கூட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் இக்கூட்டங்களை போதிய அமைப்புபலம் இல்லாமல் செய்கிறோம். பணம் இழப்பு பிரச்சினை இல்லை. வேலை செய்ய எவரும் இல்லை என்பதே சிக்கல். நண்பர்களே அனைத்தையும் செய்கிறார்கள். நான் பொதுவாக வேலை எதுவும் செய்வதில்லை என்றாலும் வேலைசெய்யும் நிர்மால்யா போன்ற நண்பர்களின் உழைப்பு வீணாவதை விரும்புவதில்லை. ஆகவே இத்தகைய கறாரான விதிகள்.

*

நிபந்தனைகள் பற்றி ஒரு தன்னிலை விளக்கம்:

இந்நிகழ்ச்சிக்கு பலர் நெடுந்தூரம் பயணம்செய்து வருகிறார்கள். வெளிநாட்டில் இருந்தும் கூட. ஆகவே நிகழ்ச்சி முடிந்தவரை பயனுள்ளதாக இருக்கவேண்டுமென்பதே நோக்கமாகும். நேரம் வீணடிக்கப்படக்கூடாது என்பதற்காகவே நிபந்தனைகள் என்பதை நண்பர்கள் புரிந்துகொள்ள முடியும். இந்நிபந்தனைகள் அனைத்துமே கடந்தகாலத்தில் குற்றாலத்தில் பதிவுகள் போன்ற சந்திப்புகளில் இருந்து பெற்ற அனுபவத்தில் இருந்து உருவாக்கிக் கொண்டவை.

பதிவுகள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கலாப்ரியா சமீபத்தில் ’உயிரெழுத்து’ மாத இதழில் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில் பதிவுகளின் தோல்விக்கான காரணத்தைப்பற்றி சொல்லியிருக்கிறார். பதிவுகள் ஆரம்பத்தில் மிகுந்த வீச்சுடன் நிகழ்ந்த ஒரு சந்திப்பு நிகழ்ச்சி. பின்னால் அது சரிவடைந்ததற்கு முதல் காரணம் குடி. நண்பர் சந்திப்பு என்பதனால் ஒரு உற்சாகத்துக்காக தானே அதை ஊக்குவித்ததாக கலாப்ரியா சொல்கிறார். ஆனால் நிகழ்ச்சி முடிந்தபின்னர் இரவில் குடி என்பது விரைவிலேயே மாறி நிகழ்ச்சியின்போதே , ஏன் குற்றாலத்தில் வந்திறங்கியதுமே, குடி என்று ஆனது.

நம்மில் பலருக்கு அன்றாடக் குடிப்பழக்கம் இல்லை. எப்போதாவது குடிக்கும்போது எங்கே நிறுத்தவேண்டுமென தெரிவதில்லை. மிச்சபேர் தொழில்முறைக் குடிகாரர்கள். ஆக நிகழ்ச்சியின்போது குடித்துவிட்டு சத்தம்போடுவது சம்பந்தமில்லாமல் உளறுவது என ஆரம்பித்து ஒரு கட்டத்தில் வன்முறையை கட்டுப்படுத்தமுடியாத நிலை வந்தது. கலாப்ரியா பதிவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் குற்றாலம், செங்கோட்டைகாவல்நிலையங்களுக்கெல்லாம் முன்னரே சென்று மாமூல் கொடுத்து சொல்லிவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்கிறார். இருந்தும் பல ரசாபாசங்கள் நிகழ்ந்தன. காவல்துறை தலையிட்டு தீர்க்கவேண்டிய அளவுக்கு. ஆகவேதான் பதிவுகள் நிறுத்தப்பட்டது.

இரண்டாவதாக, அவ்வப்போது மட்டும் அமர்வுகளில் பங்கெடுப்பது, தாங்கள் சம்பந்தப்பட்ட அமர்வுகளில் மட்டும் பங்கெடுப்பது போன்ற வழக்கங்கள். இதனால் முன்பின் புரியாமல் உள்ளே வந்து எதையாவது பேசுவது, பேசியவற்றையே புதிதாக மீண்டும் எடுப்பது போன்ற சிக்கல்கள் உருவாயின. மையம் கொண்ட ஓர் உரையாடலே சாத்தியமல்ல என்ற நிலை ஏற்பட்டது.

பலசமயம் சந்திப்பு நிகழ்ச்சிகளில் குடித்துக்கொண்டிருப்பவர்களே திரும்ப ஊருக்குச் சென்றபின் ‘ஒண்ணுமே நடக்கலை, காசு வேஸ்ட்’ என்று சொல்லும் நிலை ஏற்பட்டது. சமீபத்தில் நாகர்கோயிலில் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி. அது நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் கிட்டத்தட்ட சர்வதேசத்தரம் பேணுபவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டது. ஆனால் ஆரம்பித்த முதற்கணம் முதலே குடிக்க ஆரம்பித்து நிகழ்ச்சியை குடிக்களியாட்டமாக ஆக்கினார்கள் பங்கேற்பாளர்கள். பின்புஅப்படி ஆக்கியவர்களே கசந்துகொண்டார்கள் . காரணம் அவர்கள் உள்ளூர இலக்கியவாதிகள். நல்ல இலக்கிய விவாதத்தையே அவர்களின் மனம் ஏங்குகிறது.

குடிக்களியாட்டம் தவறு என நான் சொல்லவில்லை. அதை ஒழுக்க ரீதியாக பார்க்கவுமில்லை. சராசரி மலையாளிக்கு என்ன மனநிலை உண்டோ அதுவே எனக்கும். குடி என்பது ஒரு வகை லௌகீகக் கொண்டாட்டம் மட்டுமே. அதையும் இலக்கியத்தையும் இணைத்துக்கொள்ளவேண்டியதில்லை. பதின்ம வயதை தாண்டிவிட்டால் பின்னர் குடிப்பது கலகமோ சமூக எதிர்ப்புச்செயல்பாடோ ஒன்றுமில்லை, குடிமட்டுமே. குடிப்பவர்களின் உரிமைபோலவே குடிக்காதவர்களுக்கும் சில அடிப்படை உரிமைகள் உண்டு.

இந்தச் சிக்கல்களைக் களையவே எங்கள் சந்திப்புகளில் நிபந்தனைகள். அவை அனைத்துமே அரங்க விவாதத்தை சீராக நடத்திச்செல்லும் நோக்கம் கொண்டவை என்பதை நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இத்தனைக்கும் பிறகும் சிறப்பான விவாதம் அமைவது உறுதியல்ல. காரணம் முன்பின் தெரியாத பலர் ஓர் இடத்தில் கூடி பேச ஆரம்பிக்கிறோம் என்பதே. யாராவது ஒருவர் அவையடக்கமிழந்தாலே போதும் சங்கடமாகிவிடும்.

ஆகவே நிபந்தனைகளை மீண்டும் சொல்கிறோம்.

1. வரக்கூடியவர்கள் எல்லா அமர்வுகளிலும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும்.

2 தனிப்பட்ட முறையில் விமரிசனம்செய்து பேசக்கூடாது.கடுமையான நேரடி விமரிசனங்களும் கூடாது.

3 சந்திப்பு நிகழும் மூன்று நாட்களிலும் அரங்கிலும் வெளியிலும் மது அருந்தக்கூடாது.

4 சந்திப்புகளின்போது விவாதத்தின் பொதுவான எல்லைக்கு வெளியே அதிகம் செல்லக்கூடாது. மட்டுறுத்தல் உண்டு.

5 வரவிரும்புகிறவர்கள் தகவல் தெரிவித்தால் அழைக்கப்படுவார்கள். அழைக்கப்படாதவர்களுக்கு அனுமதி இல்லை. அனுமதி இல்லாமல் எவரையும் கூட்டி வரக்கூடாது.

*

பங்கெடுக்கும் நண்பர்கள் கேட்ட சில விளக்கங்கள்.

1. சிலர் நிகழ்ச்சியை சனி ஞாயிறு என இரு நாட்களுக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாமே என்றார்கள். வெள்ளி விடுப்பு எடுப்பது கடினம் என்றார்கள். விடுப்பு எடுக்க முடிந்தவர்களுக்கு மட்டுமே உரிய சந்திப்பு இது. எங்கள் திட்டம் வெள்ளியன்று காலை 10 மணிக்கு முதல் அமர்வு என்பது. ஞாயிறு மதியம் அமர்வு முடியும். சனி ஞாயிறு மட்டும் நிகழ்ச்சி என்றால் சனி வந்து ஞாயிறு கிளம்புவது போல. உண்மையில் அது ஒருநாள் நிகழ்ச்சி மட்டுமே. ஓர் இரவுக்காக ஊட்டிவரை பயணம்செய்வதென்பது அபத்தம்.

மேலும் வெள்ளி சனி இருநாட்களிலும் பயணம் உள்ளது. வருவதும் போவதும். பொதுவாக நான் கவனித்தது என்னவென்றால் பயணம் உள்ள நாட்களில் ஒரு நிலைகொள்ளாமை இருக்கிறது. அது விடுமுறை மனநிலையை அளிப்பதில்லை. சனிக்கிழமை ’இன்று முழுக்கமுழுக்க ஊட்டிதான்’ என்ற எண்ணம் காலையிலேயே மனதில் உருவாகும். அந்த எண்ணம் அளிக்கும் விடுதலையே உண்மையான விடுமுறை இன்பம். அதை அனுபவித்தவர்கள் புரிந்துகொள்ள முடியும். ஆகவே இந்த மூன்றுநாள் நிகழ்ச்சியை மாற்ற முடியாது.

2 சிலர் வெளியே தங்கிக்கொள்ளலாமா என்றார்கள். அதுவும் பொதுவாக நடைமுறைச் சாத்தியம் அல்ல. ஊட்டி நாராயணகுருகுலம் உண்மையில் ஊட்டியில் இல்லை.ஃபெர்ன் ஹில் தாண்டி மஞ்சனகொரே என்ற கிராமத்தில் உள்ளது. ஊட்டி நகரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில். அந்த விலகியதன்மையே அதன் அழகு. ஊட்டியில்தான் தங்கும் விடுதிகள் உள்ளன. அதாவது குருகுலத்தில் இருந்து 5 கிமீ தூரம்வரை தங்குமிடமேதும் இல்லை

இந்நிலையில் சிலர் வெளியே தங்கினால் அவர்களை ஒவ்வொரு முறையும் கூட்டி சந்திப்புகளை ஒருங்கிணைப்பது கடினமானது. அவர்கள் இரவில் திரும்பிச் செல்வதும் கடினம். உணவுக்காக வெளியே சென்றாலும் இதே சிக்கல்கள் உருவாகும். குருகுலத்தில் சைவ உணவுதான். இலக்கியத்துக்காக இந்தமாதிரி சில சமரசங்களைக்கூடச் செய்ய முடியாது என்பவர்கள் தயவுசெய்து வரவேண்டியதில்லை.

மேலும் முக்கியமாக, சந்திப்புநிகழ்ச்சியின் அரங்குக்கு வெளியிலும் மது அருந்தக் கூடாது என்று சொல்லியிருந்தோம். என்ன காரணம் என்றால் நடைமுறையில் அரங்குக்கு வெளியேதான் பூசல்கள் நிகழ்கின்றன என்பது தமிழ்நாட்டு அனுபவம். பொதுவாகவே இலக்கியம் நுட்பமான ஒர் அகங்காரச் செயல்பாடு. ஓர் எழுத்தாளனின் ஆக்கத்தை விமரிசனம் செய்வது அவன் கருத்தை மறுப்பது எல்லாமே அவன் அகங்காரத்தை சீண்டுகின்றன. அரங்கில் அவன் அதை அடக்கிக் கொள்வான். அரங்குக்கு வெளியே குடியும் சேர்கையில் அது கட்டற்று வெளிவரும். அதன் பொறுப்புகளை ஒருங்கிணைப்பவர்கள் தாங்கிக்கொள்ளவேண்டியிருக்கும்

ஊட்டிகுருகுலத்தில் இருவர் தங்கும் 10 தனி அறைகள் மற்றும் ஒரு கூடம் ஆகியவற்றில் 50 பேர் தங்கமுடியும். நான்கு மரக்குடில்கள் உள்ளன. ஒரு சாகச அனுபவம் தேவைப்படுபவர்கள் அங்கேயும் தங்கலாம் – இப்போது காட்டெருதுகள் வழக்கமாக அங்கே வருகின்றன. சொகுசு வசதிகள் இல்லை என்றாலும் தேவையான வசதிகள் இருக்கும். அங்கேயே தங்கவேண்டும் என்பதும் நிபந்தனையே.

3. ஏன் பிற நண்பர்களை கூட்டிவரக்கூடாது என்று சொல்கிறோம் என்றால் சிலசமயம் உற்சாகமிகுதியால் சிலர் ஒன்றும் தெரியாத நண்பர்களை கூட்டி வந்துவிடுகிறார்கள். அப்படி ஒருமுறை நிகழ்ந்தது. அவ்வாறு வந்தவர் அந்த விவாதத்தின் பொதுவானதளம் குறித்த அறிமுகமே இல்லாதவர். உற்சாகமாக எதையெதையோ பேச ஆரம்பித்தார். அவரை கட்டுப்படுத்துவதே கடினமாகிவிட்டது. எந்த ஒரு விவாதமும் அதில் குறைந்தபட்ச ஈடுபாடு உள்ளவர்களால் ஆனதாக இருக்கும்போதே பயனுள்ளதாகிறது.

*


நிகழ்ச்சியின் விபரங்கள்:

இப்போதைக்கு நிகழ்ச்சியை முழுமையாகவே ஒருங்கிணைத்திருக்கிறோம். முதல்நாள், 27-8-10 வெள்ளி அன்று காலை 10 மணிக்கு முதல் அமர்வு. கூட்டம்பற்றிய அறிமுகத்துக்குப் பின் சிறில் அலெக்ஸ் அவரது ஆதர்ச சிந்தனையாளரும் கிறித்தவ மெய்யியலை நவீன நோக்கில் விளக்கியவருமான ஆண்டனி டி மெல்லோ பற்றி அரைமணிநேரம் பேசி அறிமுகம் செய்வார். அதன்பின் அவரிடம் வருகையாளர்கள் கேள்விகள் கேட்கலாம், விவாதிக்கலாம். அதன்பின் நான் இந்திய தத்துவ சிந்தனை மரபைப்பற்றிய ஒரு கோட்டுச்சித்திரத்தை முன்வைக்கிறேன். ஒருமணி அளவில் மதிய இடைவெளி.

மதியத்துக்குபின் இரண்டு மணிக்கு மீண்டும் கூடும் அரங்கில் இந்திய சிந்தனை மரபைப்பற்றி கேள்விகள் கேட்கலாம், விவாதம் நிகழும். மாலை ஐந்து மணிக்கு விவாதம் முடியும். அதன்பின் பங்கேற்பாளர்கள் ஒரு மாலை நடை செல்லலாம்.

மாலை ஏழரை மணிக்கு மீண்டும் கூடும் அரங்கில் பங்கெடுக்கும் 7 கவிஞர்கள் அவர்களுக்கு பிடித்த சங்க இலக்கியப்பாடல்கள் இரண்டை முன்வைத்து அவற்றை ரசிக்கும் விதம் குறித்து சொல்வார்கள். பங்கேற்பாளர்களின் வினாக்களுக்கு எதிவினையாற்றுவார்கள். மொத்தம் 15 சங்கப்பாடல்களை வாசித்து விவாதிக்கலாம். இரவு பத்துமணிக்கு விவாதம் முடியும்

மறுநாள் காலைநடை சென்றுவிட்டு ஒன்பதரை மணிக்கு அமர்வுக்கு கூடவேண்டும். முதலமர்வில் கரு.ஆறுமுகத்தமிழன் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த [காப்பியகாலம்] 10 சிறு பாடல்களை அறிமுகம்செய்து ரசிக்கும் விதத்தை முன்வைப்பார். அதன்பின்னர் நாஞ்சில்நாடன் 10 கம்பராமாயண பாடல்களை அவர் ரசிக்கும் விதத்தைச் சொல்லி அறிமுகம் செய்வார். ஒருமணிக்கு அமர்வு முடியும்.

மதியம் இரண்டுக்கு ஆரம்பிக்கும் அமர்வில் மரபின்மைந்தன் முத்தையா 10 சைவ இலக்கியப்பாடல்களை அறிமுகம் செய்து ரசிக்கும் முறையை சொல்லிக்கொடுப்பார். அதைத்தொடர்ந்து ஜடாயு 10 வைணவ இலக்கியப் பாடல்களை அறிமுகம்செய்து பேசுவார். இரவு அரங்கில் செல்வ புவியரசன் திராவிட இயக்கம் உருவாக்கிய 10 மரபுக்கவிதைகளை அறிமுகம்செய்து பேசுவார். அவற்றை ஒட்டி வாசகர்கள் தங்களுக்கு பிடித்த மரபுக்கவிதைகளை முன்வைப்பார்கள்.

ஞாயிறு காலைநடை முடிந்து 930க்கு கூடவேண்டும். அப்போது அரங்கில் பங்கேற்கும் கவிஞர்கள் தங்களுடைய இரு நவீனக்கவிதைகளை முன்வைப்பார்கள். அவற்றை தாங்கள் ரசித்த விதத்தை பங்கேற்பாளர்கள் சொல்வார்கள். இரண்டுமணிக்கு அரங்கு முடியும். மதியத்துக்குமேல் நண்பர்கள் அளவளாவிக்கொண்டிருக்கலாம். மாலை கிளம்புபவர்கள் கிளம்பலாம்

இந்த கவிதை அரங்குகளைப் பொறுத்தவரை கவிதை ரசனைக்கே முதலிடம். கவிதையின் உள்ளடக்கம் சம்பந்தமான விவாதங்கள் அல்ல. கோட்பாட்டு விவாதங்களும் அல்ல. ஒரு கவிதை ரசிக்கப்பட்டதுமே அடுத்த கவிதைக்குச் சென்றுவிடவேண்டும். ஒரேநாளில் தொடர்ச்சியாக எத்தனை அதிகமான கவிதைகளை ரசிக்கிறோம் என்பதே இலக்கு

சென்ற அரங்கில் அதுவரையிலும் தமிழ் நவீன கவிதையில் அறிமுகம் இல்லாதிருந்த , ஆர்வமும் இல்லாமலிருந்த நண்பர்கள் சிலர் வந்திருந்தார்கள். மூன்றுநாட்களில் 200 கவிதைகள் வழியாக செல்லும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. ஒவ்வொரு கவிதைக்கும் பல கோணங்களில் ரசனை அறிமுகமும் செய்யப்பட்டது. விளைவாக சட்டென்று அவர்களுக்கு கவிதையின் வாசல் திறந்து கிடைத்தது என்றார்கள். நவீனக் கவிதை அவர்களுக்கு எளிதாக ஆகியது. அது ஒருபரவசமூட்டும் அனுபவம் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

அதேபோல மரபுக்கவிதைக்கும் ஓர் அரங்கை ஏற்பாடுசெய்யலாமே என்று அப்போது சொல்லப்பட்டது. அதற்காகவே இந்த அரங்கு. ஒரேநாளில் 50 கவிதைகளை நாம் எவருமே தனியாக அமர்ந்து கவனம்கொடுத்து வாசிக்க முடியாது. ஆனால் கூடி அமர்ந்து வாசிக்கையில் அது மிக எளிதாக சாத்தியமாகும். தொடர்ந்து அது பற்றிய ரசனைவிளக்கமும் இருக்கையில் ஒரு போதைப்போல நம்மை அது கட்டிப்போடுவதைக் காணலாம். ஒரேநாளில் நம் மரபின் வழியாக தொடக்கம் முதல் இறுதிவரை ரச்னையுடன் கடந்து வரும்போது ஒரு நல்ல அறிமுகம் இயல்பாகவே சாத்தியமாகிறது. அதற்காகவே முயல்கிறோம்.

*

மேலும் :

குருகுலம் ஊட்டியில் ஓர் அழகான இடம். அங்கே மேலும் தங்க விரும்புபவர்கள் சிலநாள் தங்கலாம். நானும் சில நண்பர்களும் திங்களன்றும் தங்கி இருக்க திட்டமிட்டிருக்கிறோம். தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டிருப்போம். சிலர் அதை விரும்பினால் நல்வரவு.

தொடர்புக்கு:

[email protected]

அரங்கசாமி – கோவை 93444 33123 [email protected],

கிருஷ்ணன் – ஈரோடு 98659 16970

****************
நிபந்தனைகள் குறித்து

http://www.jeyamohan.in/?p=4808 இருகவிஞர்கள்

http://pesalaam.blogspot.com/2008/05/1.html

ஊட்டி நித்யா க‌விதை அர‌ங்கு – 1

ஊட்டி-கவிதையரங்கு http://www.jeyamohan.in/?p=416

நித்யா கவிதை அரங்கு http://www.jeyamohan.in/?p=329

முந்தைய கட்டுரைநமது மருத்துவம் பற்றி…
அடுத்த கட்டுரைமனித ஆயுதம்