முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை,தொடர்ச்சி 

3. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]
                                  

யோகத்தின் இன்றைய முகம்
பதஞ்சலி யோக சூத்திரம் முன்வைக்கும் யோக தரிசனத்தை நாம் சாங்கியதரிசனத்தின் துணைத்தரிசனமாகவே கற்கவேண்டும். இந்து ஞானமரபின் அனைத்து குருகுல அமைப்புகளிலும் கபில முனிவரின் சாங்கிய காரிகையும் பதஞ்சலி யோக சூத்திரங்களும் சேர்த்தே கற்பிக்கப்பட்டன. சொல்லப்போனால் ஆறுதரிசனங்களையும் ஒன்றாகவே கற்பது சிறந்தது. நாராயண குருவின் உவமையை இங்கே நினைவுகூரலாம். ஐந்து தரிசனங்களும் ஐந்து விரல்களைப் போன்றவை. அவை ஒன்றுசேர்ந்து செயல்பட்டாக வேண்டும். அந்த ஐந்துவிரல்களில் வேதாந்தம் சுட்டு விரல் என்றும் யோகம் கட்டைவிரல் என்றும் சொல்லப்படுவதுண்டு.அதாவது பிற  அனைத்துத் தரிசனங்களுடனும் இணைந்து செயல்படும் தன்மை யோகத்துக்கு உண்டு. யோகம் ஒரு தரிசனத்துடன் இணையும்போது அது செயல்வடிவம்கொள்கிறது.

ஆனால் கடந்த ஐம்பதாண்டுகளாக யோகம் உலகளாவ பெற்ற கவனம் காரணமாக யோகசூத்திரம் மைய இடத்துக்கு வந்துவிட்டிருக்கிறது. பல குருகுலங்களில் பதஞ்சலி யோகசூத்திரம் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. பதஞ்சலி யோகசூத்திரம் பிற தரிசனங்களின் துணை இல்லாமலேயே நிற்கக் கூடிய ஒரு சுதந்திரமான பிரதி என்ற கௌரவம் அதற்கு கைவந்திருக்கிறது. ஆகவே இன்று அதை சாங்கியதரிசனத்தின் ஒரு பகுதியாக கருதவேண்டியதில்லை. எங்காவது சூத்திரங்கள் புரியாமல் ஆகுமென்றால் மட்டும் சாங்கிய தரிசனக் கருத்துக்களை தொட்டுக்கொண்டால்போதும்.

இத்தகைய மாறுதல் மரபுக்கு உகந்ததா என்ற கேள்வி எழலாம். இதன் மூலம் நாம் எதையாவது இழக்கிறோமா என்பது இன்னும் பொருத்தமான கேள்வி. காலமாறுதல்கள் பல விஷயங்களை தவிர்க்க முடியாதவையாக ஆக்குகின்றன என்பதே அதற்குப் பதில். நாம் இன்று கல்வி கற்கும் முறையும்சரி, சிந்திக்கும் முறையும் சரி, விவாதிக்கும் முறையும் சரி, நம் மரபு சார்ந்தவை அல்ல. நம்முடைய மரபான அறிவியங்கியல் இப்போது ஒரு பழைய விஷயமாக ஆகிவிட்டிருக்கிறது. 

பண்டைக்காலத்தில் கருத்துக்களை நியாய சாஸ்திர அடிப்படையில் விவாதித்தார்கள். உண்மையை புறவயமாக வகுத்துக்கொள்வதற்கும் விவாதிப்பதற்குமான தர்க்க அடிபப்டைகளை வகுத்துச் சொல்லும் சிந்தனைமுறையே நியாயம். ஆறுதரிசனங்களில் ஒன்றாகவும், வைசேஷிக தரிசனத்தின் கிளையாகவும் விளங்கிய நியாயம் பின்னர் தனித்த வளர்ச்சியை அடைந்தது. அது வைசேஷிகத்தில் இருந்து முழுமையாகவே பிரிக்கப்பட்டது. நியாயம் ஒரு பிரபஞ்ச தரிசனம் என்ற  நிலையில் இருந்து எல்லா பிரபஞ்சதரிசனங்களையும் வகுத்துக்கொண்டு விவாதிப்பதற்கான அடிப்படைத் தர்க்கக் கட்டுமானமாக ஆகியது.

இந்த வளர்ச்சிக்கு பௌத்தம் ஆற்றிய பங்களிப்பு மிக மிக முக்கியமானதாகும். பௌத்த ஆசிரியர்களில் அஸங்கர், வசுபந்து, நாகார்ஜ்ஜுனர், திக்நாகர், தர்மகீர்த்தி போன்று பெரும்பாலானவர்கள் நியாயத்துக்கு தங்கள் உரை ஒன்றை வழங்கியிருக்கிறார்கள். இந்த உரைகள் வழியாக நியாயம் மீண்டும் மீண்டும் பிறவி கொண்டு வளர்ந்தது. சென்ற நூற்றாண்டுவரைக்கும் நியாயமே நம்முடைய விவாத அரங்குகளை தீர்மானித்தது. நியாயம் கற்பதென்பது அறிவுச்செயல்பாட்டின் அடிப்படையாகக் கருதப்பட்டது.

இன்றும்கூட நாம் பழைமையான குருகுலங்களில் மரபான தத்துவக் கல்வி கற்றவர்களிடம் நம்முடைய அறிதல்களைப் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. அவர்களின் கல்வி நியாய அடிப்படையில் அமைந்ததாக இருக்கிறது 1988 ல் விஷ்ணுபுரம் எழுதுவதற்காக பாலக்காட்டில் ஒரு மீமாம்சை அறிஞரைப் பார்க்கச்சென்றேன். அவருக்கு நான் சொன்னது புரியவில்லை. மீமாம்சை குறித்து மேலைநாட்டு அறிஞர்களின் எந்தக் கருத்தும் புரியவில்லை.  காரணம் முற்றிலும் வேறான ஒரு அறிவியங்கியல் சார்ந்து நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.

ஆங்கிலக் கல்வி இந்தியாவில் பரவியபோது மேலைநாட்டு அறிவியங்கியல் நம்மிடையே செல்வாக்கு பெற்றது. ஐரோப்பிய சிந்தனைகள் அனைத்துமே கிரேக்க தர்க்கவியலை அடிபடையாகக் கொண்டவை.  ஆங்கிலக் கல்வி இந்தியாவில் பரவிய ஆரம்ப நாட்களில் தர்க்கவியல் [லாஜிக்] மிக முக்கியமான ஒரு கல்வியாக இருந்தது. தர்க்கவியலின் ஒரு பகுதியாகவே மேலைத்தத்துவம் கற்பிக்கப்பட்டது. தர்க்கவியலில் பட்டப்படிப்பும் பட்டமேற்படிப்பும் படிப்பதும் ஆதாரமான கல்வியாகக் கருதப்பட்டன.

காரணம் அன்றைய பிரிட்டிஷ் அரசால் முன்னிறுத்தப்பட்ட சட்டம், அறிவியல் என்ற இரு துறைகளும் கிரேக்க தர்க்கவியலில் வேரூன்றியவை. அவையே நம் இன்றைய நவீன வாழ்க்கையை உருவாக்கின. ஆகவே மெல்லமெல்ல நியாயத்தின் அறிவியங்கியல் காலாவதியானது.

அக்காலத்தில் இந்தியவியல் [இண்டாலஜி] உருவாகியது. இந்திய மூலநூல்கள் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழியாக்கம்செய்யப்பட்டன. ‘இந்திய ஞானத்தை கிரேக்க தர்க்கவியல் சார்ந்து புரிந்துகொள்ளும் பெருமுயற்சி ‘ என்று நாம் இந்தியவியலை வகுத்துக் கொள்ளலாம்.

இந்தியவியல் வழியாகவே நாம் அனைவரும் இந்திய ஞானமரபை புரிந்துகொண்டிருக்கிறோம். இது ஒருவரலாற்று விபத்து. பலநூற்றாண்டுக்கால இடைவெளியால் நம் மரபான கல்வியமைப்புகள் அழிந்தன. நம்முடைய பொதுக்கல்வியும் மரபான முறையை அறவே மறந்து மேலைக்கல்விமுறையை சார்ந்ததாக ஆகியது. எனவே வேறு வழியில்லை

விவேகானந்தருக்கும் ராமகிருஷ்ணபரமஹம்ஸருக்கும் இடையேயான உரையாடலில் இந்த முரண்பாடு மீண்டும் மீண்டும் மேலெழுந்து வந்ததை விவேகானந்தர் பலவாறாகப் பதிவுசெய்திருக்கிறார். குறிப்பாக உருவ வழிபாடு சார்ந்து அவருக்கும் ராமகிருஷ்ணருக்கும் நிகழ்ந்த உரையாடலையும், பின்னர் விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப்புரிந்து கொண்டதையும் உதாரணமாகச் சொல்லலாம்.

ராமகிருஷ்ணர் வேதாந்தி.  ‘பிரம்மமே நான்’ என உணர்ந்து சமாதியோகத்தில் அமர்பவர். ஆனால் கிருஷ்ணபக்தியிலும் காளிபக்தியிலும் ஆடிப்பாடி நெகிழ்ந்து கண்ணீர் விட்டு திளைக்கவும் செய்தார். அதை ஏற்க விவேகானந்தரால் முடியவில்லை. ஒன்று இன்னொன்றை மறுப்பது என்று அவர் புரிந்துகொண்டார். நீண்ட ஒரு ஆன்மீகப் பரிணாமத்திற்குப் பின்னரே அதிதூய ஆன்மீக அனுபவமும் உருவவழிபாடு சார்ந்த பக்தியும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்று உணர்ந்தார்.

இதே முரண்பாட்டை நாராயணகுருவுக்கு நடராஜகுருவுக்கும் இடையேயான உரையாடல்களிலும் நாம் காணமுடியும். விவேகானந்தர் பிற்பாடு ஆற்றிய பெரும்பணி என்பது இந்தியவியல் உருவாக்கி அளித்த மேலைத்தர்க்கரீதியான இந்தியசிந்தனைக் கட்டுமானத்த்தில் உள்ள இடைவெளிகளை கீழைத்தர்க்கத்தின் அறிதல்கள் மூலம் நிரப்புவதைத்தான். அதையே நடராஜ குருவும் செய்தார் என்று சொல்லலாம்.

நியாயத்தைப்போலவே யோகமும் அதன் மூலத்தரிசனமாகிய சாங்கியத்தில் இருந்து பிரிந்து தனியான வளர்ச்சியை அடைந்தது. அதை நிகழ்த்தியவர்களும் பௌத்தர்களே. பௌத்த யோகாசார மரபுக்குப் பின்னர் யோகம் என்பதே முற்றிலும் இன்னொன்றாக ஆகிவிட்டது. பின்னர் அந்த யோகமரபையே அத்வைதம் போன்ற பிற்காலத்தைய வேதாந்த மரபுகள் எடுத்தாண்டன.

இன்று நாம் காணும் யோகம் என்பது உண்மையில் இவ்வாறு பல படிகளிலாக பரிணாமம் கொண்டு வளர்ந்துவந்த ஒன்று. அந்த ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மூலநூலாக நின்றுகொண்டிருக்கிறது பதஞ்சலி யோக சூத்திரம். இந்திய மரபில் ஒரு சிறப்பியல்பு உண்டு என்பதை நாம் காணலாம். பெரும்பாலும் மூலநூல்களை மறுவாசிப்பும் மறுவிளக்கமும் கொடுப்பதன் மூலமே சிந்தனை பரிணாமம் கொள்கிறது. பதஞ்சலி யோக சூத்திரமும் அவ்வாறு வளர்ந்ததுதான். இந்த உரை வரை.

ஆக, இந்த நூற்றாண்டில் நாம் பதஞ்சலி யோக சூத்திரத்தை அணுகும்போது அணுகும் அறிவுச்சூழலும் மாறிவிட்டிருக்கிறது. அந்நூலைப் பொருள்கொள்ளும் முறையும் மாறியிருக்கிறது. மேலைத்தருக்கப்பின்னணியில் பௌத்தம் வழியாக வளர்ந்து வந்த யோகத்தை நாம் இன்று வாசிக்கிறோம். ஆகவே அதை ஆறுதரிசனங்களில் ஒன்றாக வாசிக்க ஆரம்பிப்போம் என்றால் அது அதைச் சுருக்குவதாகவே அமையும்.

யோகத்தின் நவீனவாசிப்பு

இன்றைய உலகளாவிய சிந்தனைச் சூழலில் யோகத்தை நாம் எப்படி வாசிப்பது? வழக்கமாக செய்யப்படும் இரு வகை வாசிப்புகள் உண்டு. ஒன்று மத ரீதியான வாசிப்பு. பண்டைய ரிஷிகள் கண்டடைந்த மெய்ஞானத்தின் இறுதி வடிவம் அது என்று எடுத்துக்கொண்டு அதை வழிகாட்டிக் கட்டளைகளாக மட்டும் காண்பது. இரண்டு, பண்டைய சிந்தனைகளை தெரிந்துகொள்ளும் வரலாற்று ரீதியான ஆர்வம். இரண்டுக்கும் அவற்றுக்கான பங்களிப்பு உண்டு.

அவற்றுக்கும் அப்பால் ஒரு வாசிப்புச் சாத்தியமும் உண்டு என்பதைச் சுட்ட விரும்புகிறேன். கிரேக்க தத்துவ நூல்கள் கிரேக்க மதம் மற்றும் கிரேக்கப் பண்பாட்டின் விளைவுகள். ஆனால் மேலைத்தத்துவம் அவற்றை தத்துவமூலநூல்களாகக் கண்டு காலந்தோறும் வளர்ந்து வரும் தத்துவசிந்தனைகளுடன் தொடர்பு படுத்தி விவாதித்துக்கொண்டே இருக்கிறது. அத்தகைய ஒரு வாசிப்பு பதஞ்சலி யோக சூத்திரம் போன்ற நூல்களின் அடிப்படை மெய்யறிதல்களை மானுடப்பொதுவாக ஆக்கவும், மானுடசிந்தனையின் அனைத்து தளங்களுடனும் இணைத்து விரிவாகப்புரிந்துகொள்ளவும் உதவக்கூடியதாகும். அதுவே இன்றைய அடிப்படைத்தேவை என்பது என் எண்ணம்.

இவ்வாறான நவீன வாசிப்பில் நாம் தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டிய நவீனச் சிந்தனைகள் மூன்று தளங்களைச் சார்ந்தவை. ஒன்று தத்துவம். மேலைத்தத்துவ சிந்தனை என்பது தொடர்ச்சியான வளர்ச்சிப்போக்கு கொண்ட ஒன்று. அத்தகைய ஒரு சீரான வளர்ச்சி இந்திய சிந்தனையில் இல்லை என்பது உண்மை. அதற்கு பல காரணங்கள் உண்டு என்றாலும் முக்கியமான காரணம் இந்தியாவில் இன்று இந்திய சிந்தனை கற்பிக்கப்படுவதில்லை என்பதே. நாம் எட்டாம் வகுப்பு படிப்பதற்குள் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் வரை அறிமுகம் செய்துகொண்டு விடுகிறோம். இந்திய தத்துவத்தை சிறப்புப்பாடமாக எடுத்து பட்டமேற்படிப்பு படித்தாலொழிய கபிலரை நாம் அறிமுகம்செய்துகொள்ள முடியாது.

அத்துடன் நம் கல்விமுறையின் அடித்தளமாக இருப்பது மேலைநாட்டு அறிவியலும் தத்துவமும்தான். ஆகவே நம்முடைய சிந்தனைமுறையின் அடியில் இந்திய தத்துவமரபின் அம்சமே இல்லை. இதனால் நம்மால் இந்திய தத்துவ மரபை ஒரு தொல்பொருள் என்ற அளவில் தகவல்களாக மட்டுமே அணுக முடிகிறது. அதை நம் சிந்தனைகளுக்கான கருவியாகக்கொள்ள முடிவதில்லை. ஆகவே நம் தத்துவ மரபு நவீனகாலகட்டத்தின் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்படியாக வளர்க்கப்படவில்லை. சிற்சில விதிவிலக்கான தனிச்சிந்தனையாளர்கள் மட்டுமே கண்ணுக்குப் படுகிறார்கள்.

அது போதாது. ஒரு தத்துவமரபு ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தின் பொதுச்சிந்தனையின் உள்ளே செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது மட்டுமே அதில் உண்மையான வளர்ச்சி நிகழமுடியும். கிரேக்க தத்துவ மரபு ஐரோப்பிய சிந்தனையின் அடித்தளமாக எப்போதுமே இருந்துகொண்டிருக்கிறது. இன்றைய நவீன சிந்தனையாளன்கூட கிரேக்க மரபில் இருந்துதான் தன் கருதுகோள் உருவாக்கத்தை தொடங்குகிறான், ஏற்றோ மறுத்தோ. ஆகவே மேலைத்தத்துவத்தில் உண்மையான வளர்ச்சி உள்ளது.

மேலும் இந்தியசிந்தனை சார்ந்த எதுவுமே உதவாத பழங்குப்பை என்று சொல்ல நாம் ஒரு நூற்றாண்டாக பழக்கப்பட்டிருக்கிறோம். மெக்காலேயின் புகழ்பெற்ற மேற்கோளில் அவர் ஒட்டுமொத்த இந்திய சிந்தனை அனைத்த்தையும் சேர்த்தால்கூட பத்தாண்டுகால பிரிட்டிஷ் இலக்கியம் மற்றும் தத்துவசிந்தனையின் அளவுக்கு நிகராகாது என்று சொல்கிறார். மெக்காலேயில் தொடங்கும் நம் கல்வித்துறை தலைமுறை தலைமுறையாக நம்மிடம் அந்த எண்ணத்தை உருவாக்குகிறது.

அதை ஒரு மானசீகமான அடிமைத்தனம் எனலாம். ஆனால் நம்முடைய பேரறிஞர்கள் இலக்கியவாதிகள் என பலர் அந்த எண்ணத்தை மீற முடியாதவர்கள். உதாரணமாக, நான் நன்கு அறிந்த இலக்கியவாதியான சுந்தர ராமசாமி இந்திய சிந்தனை என்பது அர்த்தமில்லாத பழங்கால தர்க்கங்களும் மூடநம்பிக்கைகளும் கலந்தது என்று எண்ணினார்.அவை காலாவதியாகிவிட்டன என்று குறிப்பிட்டார். ஆனால் அவருக்கு இந்திய சிந்தனை பற்றி எளிய அறிமுகம் கூட இருக்கவில்லை. அதேசமயம் மூவாயிரமாண்டு பழமையுள்ள சாக்ரடீஸ்,பிளேட்டோ, அரிஸ்டாடில் சிந்தனைகள் மானுட சிந்தனையின் அடித்தளங்கள் என்று அவர் சொல்வார், அவை அவருக்கு பழங்குப்பைகள் அல்ல.

இந்திய சிந்தனைகளை மத சிந்தனைகள் என அவர் சொன்னபோது சாக்ரடீஸ¤ம் கிரேக்க மதத்துக்குள் நின்றவரல்லவா, அவரும் ஆத்மா போன்ற உருவகங்கள் வழியாக சிந்தித்தவர் அல்லவா என்று நான் கேட்டேன். அப்போதுதான் அச்சிந்தனைகளிலும் அவருக்கு பெரிதாக அறிமுகம் இல்லை என்று உணர்ந்தேன். ஆனால் இந்த மனப்பிம்பம் அவரில் ஆழ வேரூன்றியிருந்தது. இது சராசரியான ஒரு இந்தியமனத்தின் அமைப்பு. நம்மைச்சூழ்ந்துள்ள பெரும்பாலானவர்கள் இந்தத் தளத்திலேயே இருக்கிறார்கள் என்பதைக் காணலாம்.

ஆகவே மேலைத்தத்துவத்தின் அடிப்படைகளுடனும் இன்றைய பரிணாமத்துடனும் பதஞ்சலி யோகசூத்திரத்தை நாம் ஒப்பிட்டு வாசிக்கும்போது ஏராளமான புதிய சாத்தியங்களைக் கண்டடைய முடியும். அதற்கு பதஞ்சலி யோகசூத்திரத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நாம் தத்துவப்படுத்திக்கொள்ள வேண்டும்.மேலைத்தத்துவம் உருவாக்கியிருக்கும் கோட்பாடுகளுடன் அவற்றை இணைத்து யோசிக்க அது நமக்கு உதவும்

இரண்டாவதாக, மேலை உளவியல். பதஞ்சலி யோக சூத்திரத்துடன் ஒப்புநோக்கையில் மேலை உளவியல் குழந்தைப்பருவத்திலேயே இருக்கிறது என்பதே என் எண்ணம். அதை முக்கியமான சில உளவியலாளர்களுடனான உரையாடலிலும் நான் கேட்டதுண்டு. மேலும், மேலை உளவியலின் பல ஆதாரக் கோட்பாடுகள் பதஞ்சலி யோகம் போன்ற கீழை யோகவியலில் இருந்து கடன்பெற்றவை.

ஆனால் மேலை உளவியல் நவீன அறிவியலுக்குரிய தர்க்கத்தைக் கொண்டிருக்கிறது. அதாவது கிரேக்க தர்க்கவியலில் இருந்து பிறந்து இன்று எல்லா சிந்தனைகளுக்கும் அடிபப்டையாக இருக்கும் மேலை அறிவியங்கியலில் அது அமைந்திருக்கிறது. நாம் கல்விக்கூடங்களில் கற்பதும் சிந்திப்பதும் அதில்தான். ஆகவே பதஞ்சலி யோகம் போன்ற பண்டையச் சிந்தனைகளை நாம் மேலை உளவியலுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது அவற்றை புரிந்துகொள்வதும் விவாதிப்பதும் எளிதாகிறது.

பதஞ்சலி யோகத்தை உளவியலும் உளம் கடந்த இருப்பு குறித்த ஆய்வும் என்று பொதுவாக வகுத்துக்கூறலாம். அதன் அடிப்படைகள் பல மேலை உளவியலை வைத்துப்பார்த்தால் புரிந்துகொள்ள எளிதானவை. அதே சமயம் பதஞ்சலி சொல்வதை ‘நிரூபிக்க’ மேலை உளவியலை துணைகொள்வது போன்ற அபத்தமும் வேறில்லை. பட்டப்படிப்புப் பாடத்தை பத்தாம் வகுப்புப் பாடத்தை வைத்து நிரூபிக்க முயல்வது போன்றது அது

மூன்றாவதாக, மொழியியல். பதஞ்சலி அடிப்படையில் மனித இருப்பு அல்லது தன்னிலை குறித்த தரிசனத்தை முன்வைக்கிறார் எனலாம். சமகாலச் சிந்தனையில் இந்த கருதுகோள்கள் குறித்த விரிவான ஆய்வுகள் மொழியியலில்தான் நிகழ்ந்துள்ளன. ஆகவே மொழியியலின் கோட்பாடுகளை பதஞ்சலியை புரிந்துகொள்ள பயன்படுத்தலாம்.

அத்தகைய ஒரு நவீன வாசிப்புக்கு இன்றியமையாத தேவை பதஞ்சலி யோகசூத்திரத்தை நவீன மனநிலையுடன் அணுகுவதாகும். நவீன மனநிலை என்றால் நான் இப்படி வகுத்துக் கொள்கிறேன். 1. ஒரு ஞானத்தை ஒரு இனம், மொழி, மதம், பண்பாட்டுக்குள் நிறுத்திவிடாமல் மானுடப்பொதுவான ஞானமாக அதை எடுத்துக்கொண்டு ஆராய்வது. 2. ஒரு ஞானத்தை ஒரு குறிப்பிட்ட காலத்தின் வெளிப்பாடாகக் கருதாமல் எப்போதைக்குமான ஞானமாக எடுத்துக்கொண்டு ஆராய்வது 3. அதன் மீது பக்தியோ வெறுப்போ இல்லாத தர்க்கபூர்வ  அணுகுமுறை

அத்தகைய ஒரு வாசிப்பு பதஞ்சலியை நமக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டுவரக்கூடும்

தந்திரமும் யோகமும்

இத்தகைய ஓர் ஆய்வுக்கு முன் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. தாந்திரீக மரபு உருவாக்கியிருக்கும் தியான, உபாசனை முறைகளுக்கும் பதஞ்சலிக்கும் நேரடித் தொடர்பு இல்லை. அவை வேறு வேறு. பல ஆசிரியர்களின் யோக முறைகளில் இந்த மயக்கம் நிகழ்ந்து பலவகையான புரிதல் இடர்களை உருவாக்கியிருக்கிறது. பலர் பதஞ்சலி யோகசூத்திரத்தையே தாந்திரீக பாணியில் விளக்குவதையும் நான் வாசித்திருக்கிறேன்.

நெடுங்காலமாகவே யோகமரபும் தாந்த்ரீக மரபும் இரு தனிப்போக்குகளாக செயல்பட்டு வந்துள்ளன. இரு மரபுகளும் கொண்டும் கொடுத்தும் வளர்ந்தவை என்பதனால் அவற்றுக்கு இடையே பல பொதுக்கூறுகளும் உண்டு என்பதை மறுக்கமுடியாது. இந்து தாந்த்ரீக மதங்களும் சரி, பௌத்தத்துக்குள் உள்ள வஜ்ராயனம் போன்ற தாந்த்ரீக பிரிவுகளும்சரி,  யோகத்தை தங்களுக்காக மறு ஆக்கம் செய்து கையாண்டன என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். ஆனாலும் அவை இரண்டும் வேறு வேறுதான்.

என்ன வேறுபாடு? அடிப்படையே வேறு வேறு என்பதுதான். யோகம்  தன் மனத்தை அவதானிப்பதில்  தொடங்குகிறது. அதை கட்டுப்படுத்தி அதன் ஆழங்களை அறியும் ஒரு தொடர்செயல்பாடு அது. மனத்தின் வெளிப்பாடுகளில் அதற்கு ஆர்வம் இல்லை. அதன் மூலத்தை நோக்கிச் செல்வதையே அது இலக்காகக் கொள்கிறது. அதற்காக பலவகையான பயிற்சிகளை அது உருவாக்கிக் கொள்கிறது. அத்தனை பயிற்சிகளுக்கும் நோக்கம் அகத்தை அறிந்து கடந்து சென்று அதன் சாரத்தில் அமர்தல் மட்டுமே.

நேர் மாறாக தாந்த்ரீக மரபு என்பது மனவெளிப்பாடுகளையே முதலில் கருத்தில் கொள்கிறது. மனத்தின் வெளிப்பாடுகளை ஒவ்வொன்றாக பயின்று அறிந்து  வென்று கடந்துசெல்லுதல் அதன் வழிமுறை. அச்சம் காமம் வன்முறை போன்று மனத்தின் ஆதார வெளிப்பாடுகள் ஏராளமானவை. ஒவ்வொன்றையும் அறிவதே தாந்த்ரீகம் முன்வைக்கும் விடுதலை மார்க்கமாகும்.கடந்துசெல்லுதலே விடுதலை அல்லது முக்தி என்பது அதன் அறிதல்.

மனம் வெளிப்படுவது குறியீடுகள் வழியாகவே. ஆகவே தாந்த்ரீகம் குறியீடுகளை ஏராளமாக உருவாக்கிக் கொள்கிறது. நம்முடைய புராணங்கள் சிற்பங்கள் போன்ற ஏராளமான குறியீடுகள் தாந்த்ரீகத்தால் உருவகிக்கப்பட்டவையே. அதேபோல நம் உடல், மனம் பற்றியும் தாந்த்ரீகம் ஏராளமான குறியீடுகளை உருவாக்கியிருக்கிறது. அக்குறியீடுகளை பருண்மையான உண்மைகளாக எடுத்துக்கொள்வர்கள் பலர்.

தாந்த்ரீகம் இரு வழிகளை கடைப்பிடிக்கிறது. அவை இடது வலது என பிரிக்கப்பட்டு வாமாசாரம் தட்சிணாச்சாரம் என்று சொல்லப்படுகின்றன. மனவெளிப்பாடுகளை அறிய அவ்வெளிபபடுகளையே மனதால் நிகழ்த்தி அதன் எல்லையை அறிவது ஒரு வழி. அதாவது காமத்தை வெல்ல காமத்தையே பழகுவது. அச்சத்தை வெல்ல அச்சமூட்டுவதற்குள்ளேயே நுழைவது. மரணத்தை அச்சமென்றால் சுடுகாட்டு பிணம் மீது அமர்ந்து தியானம்செய்வது போன்ற ஒரு உக்கிரமான வழி அது.  இதுவே இடதுமுறை. அல்லது வாமாச்சாரம்.

மன வெளிப்பாடுகளை வெல்ல அவ்வெளிப்பாடுகளை உன்னதமாக்கிக் கொள்ளலாமென்பது இன்னொரு வழி. காமத்தை வெல்ல அதை குறியீடாக ஆக்கி அக்குறியீட்டை கலைகளாக ஆக்கி அக்கலையின் உன்னதங்கள் வழியாக காமத்தை அறிந்து கடந்துசெல்லலாம். அச்சம் வன்முறை அருவருப்பு என அனைத்தையுமே அவ்வாறு கடந்துசெல்லலாம். உன்னதமாக்கல் என்பது இம்முறையின் முக்கியமான வழிமுறை. சடங்குகள் பூஜைமுறைகள் கலைகள் என அதற்கு பல வழிகளை அது கண்டடைந்துள்ளது. இது வலதுமுறை–தட்சிணாச்சாரம்.

நாம் தமிழ் சித்தர் மரபு என்று சொல்லும் மரபில் இருவகை தாந்த்ரீகர்களும் உள்ளனர். இரு மரபுகளுமே யோகத்தை தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்கின்றன. இவ்விரு மரபுகளும் பலவகையான உருவகங்களையும் குறியீடுகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.அக்குறியீடுகள் எளிமையான சித்தர் பாடல்கள் வழியாக சாதாரண மக்களிடம் வரும்போது அவை அப்படியே நேரடியாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு யோகம் குறித்து ஏராளமான நம்பிக்கைகள் நம்மிடையே புழங்குகின்றன. உடலில் உள்ள மூலாதாரம் முதலிய ஒன்பது சக்திமுனைகள் பற்றிய பேச்சு ஓர் உதாரணம். அவை முறையே காமம்,பசி,மூச்சு,பேச்சு,இதயம், சிந்தனை, உள்ளுணர்வு, உயிருணர்வு, பேருணர்வு என்ற நிலைகளைச் சுட்டுபவை. ஆனால் உடம்பிலேயே அவை உள்ளன, தொட்டுக்கூட பார்க்க முடியும் என்ற அளவில் அவை புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. தியானத்தில் நெற்றிப்பொட்டில் ஒளி தெரிவது போன்ற பல நம்பிக்கைகள் இவ்வாறு தாந்த்ரீக உருவகங்களை நேரடியாக எடுத்துக்கொள்வதன் விளைவுகளே.

இன்னும் அடுத்தபடிக்குச் சென்று அணிமா மகிமா போன்ற அட்டமாசித்திகளும் யோகத்தால் வசமாகும் என்றும் முக்காலமும் தெரியும் என்றும் சொல்லக்கூடியவர்கள் உள்ளனர். சிலர் கல்லைக் கடித்து தின்னுதல் போன்ற ஹடயோக வித்தைகளையும் யோகத்துடன் தொடர்புறுத்துகிறார்கள். அவையெல்லாமே தாந்த்ரீக மரபின் குறியீடுகள். பதஞ்சலி யோகத்துக்கும் அவற்றுக்கும் தொடர்பில்லை என்பதை உணரலாம். அத்தகைய எளிய உருவகங்களை உதறிவிட்டுத்தான் நாம் பதஞ்சலி யோகத்தை அணுக வேண்டும்.

பதஞ்சலி யோகம் மாயவித்தையோ, ரகசிய வித்தையோ ஒன்றும் அல்ல. அது மிக திட்டவட்டமாக எழுதப்பட்டு புறவயமாக முன்வைக்கப்பட்ட ஒரு ஞானம். அதை குருமரபுகளில் தெளிவாகவே கற்றறிந்திருக்கிறார்கள். அதில் சில பகுதிகள் நமக்கு விளங்காதவையாக இருக்கலாம்– ஏனென்றால் அது பயிலப்பட்ட மரபுகளில் பதினேழாம் நூற்றாண்டு முதல் ஓர் அறுபடல் உள்ளது. அதில் இடைச்செருகல்களும் இருக்கலாம். ஆனாலும் அது திட்டவட்டமான ஒரு தத்துவ -நடைமுறை நூலேயாகும்.

பதஞ்சலி யோகம்: ஒரு கடிதம்

முந்தைய கட்டுரைகுறள்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைவற்கீஸின் அம்மா:கடிதங்கள்