டொரெண்டோ விழா- ரசனை ஸ்ரீராம்

ஜெயமோகன் அவர்கட்கு,
வணக்கம். பாதி உலகம் பறந்து வந்த களைப்பு, நேரவித்தியாசங்கள், எங்கள் நகரச்சூழல் எல்லாவற்றிற்கும் உடலும், மனதும் இந்நேரம் பழகியிருக்கக்கூடும் என நம்புகிறேன்.

இயல் விருதுகள் விழாவில் தங்களையும், தங்கள் மனைவியையும் சந்திக்க முடிந்தது வெகுமகிழ்ச்சி. இன்னமும் கனவு போல் இருக்கிறது. என்னால் முடிந்த அளவு அதை என் பதிவிலும் ( http://www.rasanai.net/2015/06/blog-post_14.html ) ,முகநூல் பக்கத்திலும் ( https://www.facebook.com/rasanaikkaaran/posts/1621309168111116 ) பதிந்திருக்கிறேன்.

இந்தக் கட்டுரை சிலருக்கு அதீதமாய், ஒருவித Fanboy இயல்போடு இருப்பதாய் சொல்வதை பார்க்கமுடிகிறது. ஆனால், வெகுநிச்சயமாக நான் அனுபவித்ததை பாசாங்கின்றி சொல்லவே முடிந்திருக்கிறேன். முக்கியமாய் என்னை பாதித்தது இரு விஷயங்கள்.

1. உங்கள் ஏற்புரை. நீங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசியிருக்கலாம். உங்கள் படைப்புகளில் சிலதை கட்டுடைத்து பின்புலங்களை விலக்கியிருக்கலாம். ஆனால், உங்களை தினசரி முன்னே செலுத்தும் விசையை, உங்களை மாற்றிய தருணத்தை பற்றி பேசினீர்கள். அது எந்த உலகத்தரமான TED Talk உரைக்கும் குறைந்ததல்ல. அமைப்பாளர்கள் கொடுத்த குறைந்த அவகாசத்தில் இதைவிட அழகான ஒரு செய்தியைப் பகிர்ந்திருக்கவே முடியாது.

2. பழகிய விதம். என்னிடம். மற்றவர்களிடம். முக்கியமாய் பேசிய ஒருசில மணித்துளிகளுக்குள் தங்கள் மனைவியை எனக்கு அறிமுகம் செய்துவைத்த பாங்கு. யாரும் செய்யமாட்டார்கள். நான் குடும்பத்தோடு வராததற்கு வெட்கப்பட்டேன். கர்நாடக சங்கீதக்காரர்கள், தொலைக்காட்சி பிரபலங்கள், பேச்சாளர்கள் என பலரையும் கடந்த 12 வருடமாய் சந்தித்த அனுபவங்களிலிருந்தே இதை சொல்கிறேன். இரு மாதங்களுக்கு முன் இங்கு ஒரு வெகு இளைய வைணவப் பிரச்சாரகர் வந்திருந்தார். ஐந்து நாள் பாகவதம் முடிவில் உங்களை சந்தித்ததை விடவும் இளகிய,நெகிழ்ச்சியான மனநிலையில் நன்றி கூறி பேச முற்பட்டேன். ’சரி’ என்றார். அதற்கு மேல் என்ன பேச? நானும் சரி என்று நகர்ந்தேன்.

பிறகு கட்டுரையில் உள்ளது போல் சற்று தள்ளி நின்றும் உங்களை அவதானித்தேன். எல்லோரிடமும் அதே இயல்பில் உரையாடினீர்கள். ஒருவர் ஏதோ சொன்னார். சிறுகுழந்தைகளிடம் ‘நீயே எல்லா சாக்லேட்டையும் சாப்பிட்டுட்டியா?’ என்பது போல் ஒரு கேள்வியை வைத்தால், நாக்கை ஒரு நொடி வெளியில் காண்பித்து சிரிக்குமே, அது போன்ற முகபாவனை செய்தீர்கள். உங்கள் இயல்பு, பழகும் விதம் என்பது இது வலிந்து செய்வதல்ல என உணர்ந்தேன்.

இது உங்கள் இயல்பான சுபாவம்தானா ஜெயமோகன்? இந்த Politeness, போலித்தனம் இல்லாத இயல்பு எப்படி சாத்தியமானது?

மறுபடி, ”எந்த புற உலகு விஷயமும் என்னை துயரப்படுத்தவே முடியாது” என்கிற எனக்கான வாழ்நாள் செய்திக்கு நன்றி. என் கவலையெல்லாம் இதை மறந்துவிடக்கூடாது நான்.

வணக்கம்.

ரசனை ஸ்ரீராம்

அன்புள்ள ஶ்ரீராம்

நன்றி. உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. பெரும்பாலான கணிப்பொறியாளர்களைப்போல நீங்களும் சிலிக்கான் வேலி என்று எண்ணியிருந்தேன். ஆகவேதான் டொரெண்டோ என்றதும் ஆச்சரியம் கொண்டேன். பொதுவாக இத்தகைய நிகழ்வுகளில் ‘விஐபி’க்கள் நடுவே நான் சற்று அயலவனாக உணர்வதுண்டு. உங்களைப்போன்ற நண்பர்களைக் காண்பது உற்சாகம் அளிப்பது

நீங்கள் சொல்வதை நானும் கவனித்திருக்கிறேன். ஆனால் இதுபற்றி முன்பு இருந்த பொறுமையின்மை இப்போது இல்லை பெரியமனிதர்களுக்கு பலவகையான கட்டாயங்கள் உள்ளன. அவர்கள் எந்நிலையிலும் எவரையும் புண்படுத்தாமலிருந்தாகவேண்டும். அவர்களின் ஆகிருதி காரணமாக அவர்கள் சாமானியரைப் லேசாகத் தொடுவதுகூட இரும்புச் சுத்தியலால் அடிப்பதுபோல ஆகிவிடக்கூடும். ஆகவே அவர்கள் ஒரு நன்கு சமன்செய்த பொதுப்பழக்கத்தை பயின்று வைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் அதை சமானமாக அளிக்கிறார்கள். அது சிலசமயம் தனிப்பட்ட நட்புக்காக விழையும் நம்மைப்போன்ற சாமானியர்களை விலக்குவது போல அமையலாம். ஆனால் வேறுவழியில்லை அவர்களுக்கு. ஆகவே விஐபிக்களை நம்மைப்போன்றவர்கள் பொது இடங்களில் தனிப்பட்டு நெருங்கமுயலாமல் இருப்பதே நல்லது.

இங்கே எழுத்தாளனுக்கு அந்த விஐபி பாவனைகள் தேவை இல்லை. அவன் விரும்பியதுபோல இருக்கலாம். அவன் எவரையாவது புண்படுத்தினால்கூட ஃபேஸ்புக்கில் நாலு வசை வரும், அடுத்தமுறை நேரில்பார்த்தால் சமாதானம் செய்துவிடலாம். அந்தச் சுதந்திரத்தைத்தான் நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள். ஒரு விஐபி இறுக்கமாக இருக்கிறார் என்பதனால் அவர் கறாரானவர், போலியானவர் அல்ல. என்னைப்போன்ற சாமானியனான எழுத்தாளன் சாதாரணமாக இருக்கிறான் என்பதனால் அவன் அவர்களைவிட மேலானவனும் அல்ல. இவன் இன்னும் கொஞ்சம் சுதந்திரம் கொண்டவன் , அவ்வளவுதான். இதை நான் அணுகியறிந்த சில விஐபிக்களின் சார்பில் சொல்ல விழைகிறேன் ;)))

ஜெ

முந்தைய கட்டுரைஉப்புவேலி பற்றி பாவண்ணன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 17