அன்புள்ள ஜெ
மீண்டும் ஒரு கேள்வி. இதெல்லாமே என்னுடைய மன உறுத்தல்கள்தானே ஒழிய உங்களை சீண்டுவதற்காகவோ வெட்டி சர்ச்சைக்காகவோ கேட்கவில்லை. இந்தமாதிரி பிரபஞ்ச உண்மைகளைப்பற்றி பேசுவதனால் மனிதனுக்கு என்ன பயன்? மனித வாழ்க்கையை அது மேம்படுத்துகிறதா என்ன? இந்தப் பேச்சுகள் மூலம் கண்ணெதிரே உள்ள வாழ்க்கையை நாம் நிராகரிக்க நேரும் அல்லவா? இது நம்மை மனிதாபிமானம் இல்லாதவர்களாக ஆக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. உங்கள் கருத்தை கோருகிறேன்.
சிவகுமார் பொன்னம்பலம்
அன்புள்ள சிவக்குமார்,
கார்ல் சகனின் ’புரோக்காவின் மூளை’ [ [Broca’s Brain, Carl Sagan] என்ற நூலை வாசித்துக்கொண்டிருக்கும்போது ஒருவரி மனதில் தடுக்கியது. ’பிரபஞ்சவெளியின் முடிவில்லாத தூசிப்பரப்பில் அதன் ஒரு பருக்கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு தற்காலிக நிகழ்வுதான் உயிர் என்பது. அதில் ஒரு சிறுகூறுதான் மானுடம். மனிதனுக்கு சிறப்புக்கவனம் கொடுக்கும் படைப்புசக்தியோ காக்கும்சக்தியோ ஏதுமில்லை. அது மனிதவாழ்வில் தலையிடுவதும் இல்லை.நவீன அறிவியல் மானுடமைய ஆன்மீகத்தை முழுமையாகவே ரத்து செய்துவிட்டது’
உண்மைதான். ஆனால் இந்து ஞானமரபின் உச்சமாகிய வேதாந்தமும் அதனுடன் உரையாடி உருவான யோகாசார பௌத்தமும் முன்வைக்கும் ஆன்மீகம் முற்றிலும் மானுட மையம் இல்லாதது. அந்த ஆன்மீக உருவகத்தில் மனிதனுக்கு மட்டுமல்ல பூமிக்கேகூட பெரிய இடம் ஏதுமில்லை. பிரம்மாண்டத்தை உணரும்தோறும் அது மனிதனையும் பூமியையும் துளியிலும் துளியாகச் சிறிதாக்கிக்கொண்டே செல்கிறது. இந்த விஷயத்தை பிற்பாடு கார்ல் சகன் அவரது தொடர்பு [Contact] என்ற நாவலில் அவரே குறிப்பிடுகிறார். நவீன வானியலின் மானுடமையமில்லாத பிரபஞ்ச உருவகத்துக்கு ஒத்துப்போகும் இரு தரிசனங்கள் வேதாந்தமும் மகாயானபௌத்தமும்தான் என.
இக்காரணத்தாலேயே வேதாந்தம் மேலைநாட்டு தத்துவஞானிகளால் மானுடவிரோத தன்மை கொண்டது என்று குற்றம் சாட்டப்பட்டதுண்டு. இரு உதாரணங்கள் சட்டென்று நினைவில் தோன்றுகின்றன. தத்துவ ஞானியும் கிறிஸ்தவ சீர்திருத்த இறையியலாளருமான ஆல்ஃப்ரட் சுவைட்சர் இந்து மெய்யியலின் சாரமான பகுதி [அதாவது வேதாந்தம்] மானுடநேயத்துக்கு இடமில்லாததாகவும் ஆகவே அறச்சார்பு குறைபட்டதாகவும் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
ஐரோப்பாவில் நடந்த முதல் உலகப்போர்பற்றி ரமண மகரிஷியிடம் பேசும்போது மேலைநாட்டு ஆய்வாளாரான பால் பிரண்டன் அவர் அதை ஒரு மானுட அவலமாக காணாமல் பிரபஞ்சத்தின் இயல்பான நிகழ்வாக கண்டதைப்பற்றி துணுக்குற்றார். பால் பிரண்டன் வழியாக ரமணரை அறிந்த சமகால தத்துவ அறிஞரான கென் வில்பர் ரமணரின் ஆன்மீகம் அறக்குறைபாடு கொண்டது என்று குறிப்பிடுகிறார்.
இந்த விஷயத்தை புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தை நான் சொல்வதுண்டு. தொலைக்காட்சிகளில் கானுயிர் சார்ந்த நிகழ்ச்சிகளைக் காணும்போது சிங்கமும் புலியும் எளிய உயிர்களை துரத்திப்பிடித்து கிழித்து உண்பதைக் கண்டு நாம் மனம் பதறுகிறோம். ஒரு குட்டியானையை சிங்கங்கள் அதன் உயிர் துடிதுடிக்கும்போதே தின்றுகொண்டிருந்ததைப்பார்த்து நான் கண்ணீர்விட்டிருக்கிறேன். இடுப்பு ஒடிந்த ஒரு சிங்கக்குட்டி உயிர்வாழ்வதற்காக தன் கூட்டத்தை நொண்டி நொண்டி பின்தொடர்ந்து பட்டினியால் மெல்லமெல்லச் சாவதைக் கண்டு பலநாட்கள் நிம்மதி இழந்திருக்கிறேன்
அந்நிகழ்ச்சிகளை படமாக எடுக்க ஒரு குழு அங்கே இருந்தது என்ற உண்மை உடனே நம்மை அறைகிறது. அவர்கள் அந்த உயிரைக் காப்பாற்றியிருக்கக் கூடாதா? அவர்கள் அந்த பெரும் துன்பங்களைக் கண்டு ஏன் சும்மா இருக்கிறார்கள்? அவர்களுக்கு மிருகங்கள் மேல் கொஞ்சம்கூட கனிவே இல்லையா? ஆனால் டேவிட் அட்டன்பரோ பொன்றவர்கள் மாபெரும் உயிர்நேயர்கள் என நாம் அறிவோம். அந்த நேயம் அவர்களை ஏன் செயல்படச்செய்யவில்லை?
அதற்கான பதில் அவர்கள் வெறும் சாட்சிகள் என்பதே. காடு என்பது ஒட்டுமொத்தமான ஒரு பேரியக்கம் என அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும் இன்னொன்றுடன் இயல்பாக இணைந்து சமன்செய்யப்பட்டிருக்கிறது. கண்ணுக்கு தெரியும் ஒன்றில் அவர்கள் தலையிடலாம். காடெங்கும் அதேபோல பல்லாயிரம் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றை என்ன செய்வது? மேலும் அப்படி தலையிடுவது காட்டின் சமநிலையை அழித்து மேலும் சிக்கலையும் அழிவுகளையுமே உருவாக்கும்.
அந்த அழிவுகளை தடுக்க வேண்டுமென்றால் மொத்தக் காட்டின் செயல்பாட்டையும் அவர்கள் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் . அது சாத்தியமல்ல. காட்டின் பேரியக்கத்தை அவர்களால் புரிந்துகொள்ளக்கூட முடியாது. ஆகவே அது நிகழ்வதைக் கண்டபடி வெளியே இருப்ப்பதே உசிதமானதாகும். அதுவே உயிரியலில் அங்கீகரிக்கப்பட்ட வழி. உயிர்நேயம் என்பது உயிர்களை புரிந்துகொள்வதே. ஒரு காட்டை தன் கட்டுக்குள் வைத்திருக்க முடியும், அதன் ’குறை’களை தன்னால் தீர்த்துவிட முடியும் என்ற நம்பிக்கையை கானியலாளர் அறியாமை உருவாக்கும் ஆணவம் என்றே சொல்வார். அந்த ஆணவம் கொண்டு செயல்பட்டானென்றால் படிப்படியாக அவன் காட்டை அழிக்கக்கூடும். அந்த ஆணவத்தை வென்றவனே கானியலாளனாக முடியும்.
அந்தக் காடாக இப்பிரபஞ்சத்தை உருவகிப்போம். ஞானி என்பவர் அந்த கானியலாளர் போல. அவருக்கு இப்பிரபஞ்சத்தின் பேரியக்கம் தெரியும். அதன் சமநிலையை அவர் அறிவார். ஆகவே ஒரு வெறும் சாட்சியாக அதை கண்டு வெறுமே அமர்ந்திருக்கிறார். இப்பிரபஞ்சத்தின் இயக்கத்தை தன்னால் சீர்திருத்த முடியும் என்ற அகங்காரத்தையே அவர் முதலில் வென்றிருப்பார். தான் அந்த பேரியக்கத்தின் ஒரு சிறு துளி மட்டுமே என அறிந்திருப்பார். ஆகவே ஞானியர்களில் எப்போதும் இருப்பது சமநிலையும் அதில் இருந்து வரும் இனிய நகையுணர்ச்சியும்தான். ஞானி ஏன் உலகின் துயர்களை களைவதற்காக முயல்வதில்லை என்ற வினாவுக்கான விடை இதுவே.
ஞானியர் என்னதான் தருகிறார்கள்? அவர்கள் ஞானியராக இருப்பதன் மூலமே மானுடனின் உச்சகட்ட சாத்தியம் ஒன்றை நமக்குச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஒரு ஞானி எதையும் சொல்லாமலேயே அவரது சன்னிதியில் பேரமைதி ஒன்றை உருவாக்குகிறார். காரணம் நாம் அனைவருமே நம்மைச்சூழ்ந்துள்ள பிரபஞ்சத்திடம் நம் அகங்காரத்தால் முரண்பட்டு முட்டி மோதிக்கொண்டிருக்கிறோம். சிராய்ப்புகளும் காயங்களுமாக தத்தளித்துக்கொண்டிருக்கிறோம். ஒரு ஞானியிடம் நாம் காண்பது முழுமையான பிரபஞ்ச ஒத்திசைவை. ஆகவே ஓரு அழகிய மலைச்சரிவை, மலர்வெளியை, மலையடுக்குகளை ,பசும்புல்வெளியை காணும் அதே உணர்வை நாம் அவரைக் காணும்போது அடைகிறோம்.
அப்படியானால் உயர்தத்துவம் முன்வைக்கப்படும் மதங்களில் மனிதாபிமானத்துக்கு இடமே இல்லையா? மனிதமையம் இல்லாத ஆன்மீகம் மனிதாபிமானமற்றதாகவே இருக்க முடியுமா? மனித மைய ஆன்மீகங்களே மனிதாபிமானத்தை பேசக்கூடியவையா? இந்து,பௌத்த ஞான மரபுகளில் இந்த வினாவும் விடையும் உள்ளது. அவர்களின் பிரபஞ்ச தரிசனத்தில் மனிதமைய நோக்கு இல்லை. ஆகவே மனிதாபிமானத்துக்கு அதில் இடமில்லை. பிரபஞ்சத்தை அலகிலாத ஒரு பெரும்பிரவாகமாக அவை உருவகிக்கின்றன. அதில் நிகழும் எந்த செயலும் அனைத்து வகையிலும் மானுடனை மீறிய ஒன்றே. மானுடமே அதில் வெறுமொரு கொப்புளம்தான். ஆகவே மானுட அறங்களைக் கொண்டு பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள முடியாது.
இதற்கான தீர்வாக இந்து-பௌத்த ஞானமரபுகள் கண்டது ’சாமானியம் – விசேஷம்’ என்ற பிரிவினை. சாமானிய தளத்தில் உண்மை என்பதற்கு விசேஷ தளத்தில் ஒரு பொருளும் இருக்காது. சாமானியம் என்பது மானுடனைச் சார்ந்தது. அதாவது நம்மிடமிருந்து பார்க்கும் கோணத்தில் உருவாவது. நம்மைச்சுற்றி நம்மைக் கட்டுப்படுத்தும் நியதிகளால் ஆனது. நம் புலன்களாலும் நம் அறிவுத்தர்க்கத்தாலும் அறிந்து கையாளப்படுவது. விசேஷம் என்பது பிரபஞ்சம் சார்ந்த கோணத்தில் அனைத்தையும் பார்ப்பது. அப்போது மனித வாழ்க்கையும் மானுட அறிதல்முறையும் அதில் துளியினும் துளியாகவே இடம் பெற முடியும்.
ஃப்ரிஜோ காப்ராவின் ’தாவோ ஆஃப் பிசிக்ஸ்’ நூலில் ஒரு நல்ல உதாரணம் உண்டு. பொருட்கள் அனைத்தும் மூலக்கூறுகளால் ஆனவை. மூலக்கூறுகள் அணுக்களால். அணுக்கள் துகள்களால். துகள்கள் என்பவை வெறும் மின்குவியங்கள் மட்டுமே. ஆகவே பொருள் என்பதே இல்லை, ஆற்றல் மட்டுமே உள்ளது. ஆனால் அதற்காக நான் சுவர் வழியாக அந்தப்பக்கம் சென்றுவிட முடியாது. முதலில் சொன்னது விசேஷ உண்மை. இரண்டாவதாகச் சொன்னது சாமானிய உண்மை. இரண்டும் முரண்படுவதில்லை. உண்மை எப்போதுமே இந்த இருபட்டை கொண்டதே.
ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன உதாரணம் இரண்டாவது. வேதாந்தி ஒருவன் சாலைவழியாகச் சென்றான். மதம்கொண்ட யானை முன்னால் வந்தது. பாகன் ’ஓடு ஓடு’ என்று எச்சரித்தான். ’யானையும் பிரம்மம் நானும் பிரம்மம் , பிரம்மம் பிரம்மத்தை என்ன செய்யும்?’ என வேதாந்தி யானையை நோக்கி சென்றான். அது தூக்கி வீசிவிட்டது. காயம்பட்ட அவன் குருநாதரிடம் புலம்பினான். குருநாதர் சொன்னார், ’நீ யானை என்ற பிரம்மத்தை பார்த்தாய். அருகே பாகன் என்ற பிரம்மம் விலகு விலகு என்று கூவியதை ஏன் கேட்கவில்லை?’
இன்றைய அறிவியலையேகூட சாமானியம் விசேஷம் என்று பிரிக்காமல் நாம் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் இந்த பிரிவினை ஐன்ஸ்டீனிய அறிவியலுக்குப் பின்னரே இன்றியமையாத ஒன்றாக மேலைச்சிந்தனையில் உணரப்பட்டது. ஆல்ஃப்ரட் சுவைட்சரின் பிரச்சினை என்னவென்றால் அவர் இந்து ஞானமரபை இந்தப்பிரிவினையை உணராமல் வாசித்தார் என்பதே. அவர் கண்ட ’மனித மையம் இல்லாத’ ஞானம் என்பது விசேஷ தளத்தில் உள்ளது. சாமானிய தளத்தில் அது முழுக்க முழுக்க மானுடமையம் கொண்டதுதான்.
பால் பிரண்டனும் கென் வில்பர்ரும் ரமணரைப் புரிந்துகொள்ளாததும் இதனாலேயே. ரமணரிடம் கேட்கப்பட்டது போர் என்ற நிகழ்வைப்பற்றி. அவர் அதை ஒரு கருதுகோளாகவே அறிகிறார், யதார்த்தமாக அல்ல. ஆகவே அதை விசேஷ தளத்தில் வைத்து விளக்குகிறார் – டேவிட் அட்டன்பரோ காட்டைப்பற்றி விளக்குவதைப்போல. கண்முன் உள்ள ஓரு யதார்த்தத்தை அவர் அப்படி பார்த்திருக்க மாட்டார். ரமணாசிரமத்தில் வரும் ஒரு பக்தரின் மகள் சிறுமியாக விதவையாக ஆனபோது அவளுக்கு உடனடியாக மறுமணம் செய்து வைக்க அவர் ஆசியளித்தார் என்று பார்க்கிறோம். அங்கேதான் மனிதமைய நோக்கு, மனிதாபிமானம் செயல்படுகிறது.
நம்முடைய ஞானியரை இந்த இருநிலைகளில் நாம் காணலாம். அவர்களின் ஞானத்தின் பீடம் முடிவிலாவெறுமை மீது கட்டப்பட்டது. அங்கே சவரக்கத்திநுனிபோல கூரிய அறிவுக்கு மட்டுமே இடம். கனிவோ கருணையோ மனிதாபிமானமோ அங்கு இல்லை. ஆனால் அந்த விசேஷதளத்துக்கு கீழே சாமானிய தளத்தில் அவர்கள் மனம் கனிந்த அன்னையைப் போன்றவர்கள். வாடிய பயிரைக்கண்டாலே வாடுபவர்கள்.
உதாரணமாக, சுவாமிவிவேகானந்தரை எடுத்துக்கொள்வோம். அவர் அத்வைதி. அவரது விசேஷ ஞானத்தில் மனிதாபிமானம் என்பது அர்த்தமற்ற ஒரு மனநெகிழ்வு மட்டுமே. அது பிரபஞ்சப்பேரியக்கத்தில் ஒரு பொருட்டே அல்ல. ஆனால் இந்தியாவில் அவர் உருவாக்கிய பேரியக்கம் செய்த மனிதாபிமானப்பணிகள் அளவுக்கு வேறெந்த இயக்கமும் பணியாற்றியதில்லை – எந்த கிறித்தவ அமைப்பும். ’பசித்த ஏழைக்கு உணவாக வருவதே என் கடவுள்’ என்ற அவரது அறைகூவல் ஒருநூற்றாண்டாக இந்தியாவில் பல லட்சம் செயலாளிகளை ஊக்குவிக்கும் மந்திரமாக இருந்து வருகிறது
நாராயணகுருவும் தூய அத்வைதிதான். ஆனால் சமூகசேவைக்கான பேரியக்கம் ஒன்றை நிறுவி வழிநடத்தி வெற்றிபெற்றவர் அவர். இந்திய வரலாற்றை எடுத்துக்கொண்டீர்கள் என்றால் சாதியமைப்புக்கு எதிராகவும் சுரண்டலுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்த மாபெரும் மனிதாபிமானிகள் ஏராளமானவர்கள் அத்வைதிகள் என்பதைக் காணமுடியும். அத்வைதம் அதன் விசேஷதளத்தில் முன்வைக்கும் அனைத்தும் ஒன்றே என்ற கொள்கையை அன்றாடவாழ்க்கையில் சமத்துவத்துக்கான அறைகூவலாக அவர்கள் விளக்கினார்கள்.
இந்த மனிதாபிமான அம்சம் மேலைநாட்டு மனிதாபிமான இயக்கங்களைப் பார்த்து உருவாக்கிக்கொண்ட ஒன்றல்ல. வேதாந்தியான ராமானுஜர் மனிதாபிமானத்தையே மதமாக முன்வைத்தார். கைங்கரியம் என்ற மானுடசேவையே மிகச்சிறந்த வழிபாடு என்பதுதான் விசிஷ்டாத்வைதத்தின் முக்கியமான தரிசனம். நர-நாராயண சேவை என மனிதாபிமானத்தை முன்வைத்தது வைணவம். அந்தக்கொள்கையே காந்தி வரை ஏராளமான சமூகசேவகர்களின் வாழ்க்கையை வடிவமைத்தது.
மனிதாபிமானசேவைகள் என்பவை ஐரோப்பாவில் இருந்து கிறித்தவம் வழியாக உலகம் முழுக்கப் பரவியவை என்ற எண்ணம் நெடுங்காலம் எனக்கும் இருந்தது. இந்தியாவில் இருந்தது கிராமசமூக அமைப்பின் சமூகப்பாதுகாப்புமுறைகளே என நினைத்திருந்தேன். ஆனால் சமீபகாலமாக வாசிக்கும் ஆய்வுகள் மாறான சித்திரத்தை அளிக்கின்றன. இந்தியாவில் இந்துமதத்தின் ஓர் அம்சமாக மனிதாபிமானசேவை எல்லாக்காலத்திலும் இருந்திருக்கிறது. அதற்கான அமைப்புகள் இருந்திருக்கின்றன. இந்தியா பிரிட்டிஷ் சுரண்டல் காரணமாக மாபெரும் பஞ்சங்களை நோக்கிச் சென்றபோது அவ்வமைப்புகளே கோடிக்கணக்கான மக்களை சாவிலிருந்து காத்திருக்கின்றன
கடைசியாகச் சொல்லவேண்டியது சமண பௌத்த மதங்களைப்பற்றி. அவை முழுக்க முழுக்க உயர்தத்துவத்தளம் கொண்ட மதங்கள். ஆனால் மனிதாபிமானசேவையை மதச்செயல்பாடாக முதன்முதலில் முன்வைத்தவை அந்த மதங்கள்தான். உணவளித்தல், மருந்து அளித்தல், கல்வி அளித்தல் ஆகியவற்றை நிறுவனமயமாக்கி பரப்பியவை. உலகின் முதல் ‘மிஷனரி’கள் அவர்களே. அவர்களிடமிருந்தே அது உலகமெங்கும் சென்றது. ஒரு திகம்பர சமணருக்கு பிரபஞ்சம் என்பது அறியமுடியாமை என்ற துக்கத்தால் மூடிய பெரும் பிரவாகம். அந்த வெறுமையின் பீடத்தில் இருந்து கொண்டு மனிதர்களை இன்னொரு தளத்தில் பெரும் கருணையுடன் பார்க்கவும் அவரால் முடிகிறது.
பிரபஞ்சதரிசனம் சாமானிய மனிதனுக்கு எதற்கு என்ற எளிய கேள்வியை பல சந்தர்ப்பங்களில் எதிர்கொண்டிருக்கிறேன். இந்த பூமியில் வாழும் எந்த ஒரு மனிதனும் தனக்கான பிரபஞ்ச தரிசனம் இல்லாதவனாக இல்லை என்பதே உண்மை. இந்த உலகத்தின் பிறப்பு செயல்பாடு அழிவு குறித்து அவனுக்கு ஒரு மன உருவகம் கண்டிப்பாக இருக்கும். அந்த உருவகம் இருந்தால்தான் அவனால் தன் சொந்த வாழ்க்கையை புரிந்து வகுத்துக்கொள்ள முடியும். மரணம், அறம், வாழ்க்கையின் இலக்கு போன்றவற்றைப்பற்றி அவன் புரிந்துகொள்ளமுடியும். பிரபஞ்சத்தை வகுத்துக்கொள்ளாமல் அன்றாட வாழ்க்கையின் விழுமியங்களை தீர்மானித்துக்கொள்ள முடியாது.
பெரும்பாலான மனிதர்கள் தங்கள் மதத்தாலும் சூழலாலும் இளமையில் அளிக்கப்பட்ட பிரபஞ்ச தரிசனத்தையே தாங்களும் கொண்டிருப்பார்கள். ‘என்னத்த கொண்டு வந்தோம் கொண்டுபோறதுக்கு? ‘ என்றோ ’எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்’ என்றோ சொல்லும் ஒரு எளிய மனிதர் இந்து மரபின் பிரபஞ்ச உருவகம் ஒன்றைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் அதை பிரக்ஞைபூர்வமாகச் சிந்திக்காமல் ஏற்றுக்கொண்டிருக்கிறார். சிந்திக்கும் வழக்கம் உடையவர்கள் அதைப்பற்றி பிரக்ஞைபூர்வமாக கற்றும் விவாதித்தும் புரிந்துகொள்ள முயல்கிறார்கள்.
நவீன இயற்பியல் மனிதாபிமானம் அற்றதா? அல்லது மனிதாபிமானத்துக்கு எதிரானதா? வான்வெளியைப்பற்றி தெரிந்துகொள்வதனால் மானுட இனத்துக்கு என்ன லாபம்? இவ்வினாக்களை இயற்பியலை நோக்கி கேட்க முடிந்தால்தான் நாம் தத்துவத்தை நோக்கியும் தத்துவ மதங்களை நோக்கியும் கேட்க முடியும்
பௌத்தம் வேதாந்தம் போன்றவை அவற்றின் விசேஷதளத்தில் மானுடமையமின்மையை முன்வைக்கின்றன. சாமானிய தளத்தில் மானுட மைய நோக்கை அதன் விளைவாக மனிதாபிமானத்தை முன்வைக்கின்றன. நம்முடைய அத்தனை பக்திக்கதைகளிலும் நாம் காண்பது மானுட மைய நோக்கையும் மனிதாபிமானத்தையும்தான் . மனிதனுக்கு இரங்கி கடவுள்கள் பூமிக்கு வருகிறார்கள். எளியவர்களுக்கு உதவுபவர்களையே மாபெரும் பக்தர்களாக தெய்வங்கள் சான்றுரைக்கின்றன. மறுபக்கம் அத்தனை ஞானநூல்களிலும் காண்பது மனிதனின் ஞானத்துக்கு அப்பாற்பட்ட அளப்பரும் வெளியையும் அதன் சாரமான இறைவனையும்.
இந்த முரண்பாட்டை உணர்வுபூர்வமாக இணைக்கவே இந்து மரபில் புராணங்கள் எழுதிக்குவிக்கப்பட்டுள்ளன. தர்க்கபூர்வமாக இதை இணைக்கவே அறவிளக்க நூல்களும் உரைநூல்களும் இயற்றப்பட்டுள்ளன. வானுக்கும் மண்ணுக்குமான இந்த தூரத்தை நிரப்பவே இந்து மரபின் அமைப்புகள் அனைத்தும் உருவாகி வந்தன. இந்து ஞானமரபின் ஒவ்வொரு துளியிலும் இந்த இரு தளங்களும் இணைந்து செயல்படும் முரணியக்கத்தை நாம் காணலாம்.
ஜெ