பகுதி ஐந்து : கதிர்விளையாடல் – 1
குதிரைக்குளம்புப்பாறைக்குக் கீழே இருந்த குகைமுகப்பில் வைகாசிமாத ஏழாம் வளர்பிறைநாள் இரவில் அந்தகக்குலத்து யாதவர்களின் எழுபத்தெட்டு ஊர்களில் இருந்தும் வந்த குடித்தலைவர்கள் எரிகுளத்தைச் சூழ்ந்து அமர்ந்து அரசியல் தேர்ந்தனர். அந்தகக்குலத்தின் பன்னிரு பெருங்குடிகளில் இருந்தும் மூத்த யாதவர்கள் வந்திருந்தனர். கன்றுநலம்சூழும் மருத்துவர் எழுவரும் வான்குறியும் மண்குறியும் தேரும் நிமித்திகர் மூவரும் மூதன்னையருக்கு பலியும் பூசையும் ஆற்றும் பூசகர் பதின்மரும் அமர்ந்திருந்தனர். பிறை நிலவு பட்டுத்திரையை கிழிக்கும் வாள் என சென்றுகொண்டிருக்க காட்டிலிருந்து எழுந்த ஓசை அறுபடாதொலிக்கும் ஒற்றைச் சொல் என அவர்களை சூழ்ந்திருந்தது.
அவர்கள் சத்ராஜித்தும் பிரசேனரும் வருவதற்காக காத்திருந்தனர். ஒவ்வொருவரும் சற்று நிலையழிந்தது போலிருந்தமையால் உரையாடல் ஏதும் நிகழவில்லை. மைத்ரிவனத்தின் குடிப்பூசகர் தருமர் உறைந்த பசுநெய் நிறைந்த சிமிழை அனலருகே கொண்டுசென்று உருகச்செய்து அதை தன் கையில் இருந்த அப்பத்தில் பூசினார். “உணவருந்தாமலா வந்தீர்?” என்று பிரமதவனத்தின் தலைவரான ஹரிணர் கேட்டார். “ஆம், மலைமேல் அன்னையர் ஆலயத்தில் பூசனைசெய்ய சென்றிருந்தேன். கலமனின் பசுக்கள் சென்ற நாலைந்து நாளாக இறந்துகொண்டிருந்தன. ஆகவே ஒரு பிழைநீக்குபலி செய்யவேண்டுமென்றான். அங்கிருக்கையில்தான் முழவொலி கேட்டேன். ஊருக்குச் சென்று மீண்டுவர நேரமில்லை…” என்றார். அவரது தாழ்ந்தகுரலிலான பேச்சு அங்கே அனைவருக்கும் கேட்டது. ஆனால் எவரும் திரும்பி நோக்கவில்லை.
காட்டுக்குள் குறுமுழவின் ஒலி எழுந்ததும் அனைவரும் அசைந்து அமர்ந்தனர். சிலர் பெருமூச்சுவிட்டனர். ஒருவர் “இத்தனை பிந்திவருகிறார்கள்” என்று முணுமுணுத்தபோது அனைவரும் திரும்பி அவரை வெற்றுவிழிகளுடன் நோக்கினர். முழவோசை சற்று கழித்து அருகே கேட்டது. பின்னர் பந்த ஒளியில் எழுந்த நிழல்கள் அவர்கள் மேல் படர்ந்து சுழன்றுசென்றன. மலையஜபுரியின் தலைவர் அச்சுதர் “அவர்கள் மட்டும்தான் வருகிறார்களா?” என்றார். ரிஷபபதத்தின் தலைவரான பிங்கலர் “ஆம், அப்படித்தான் சொன்னார்கள்” என்றார். யாரோ பெருமூச்சு விட்டு “விடாய்நீர்” என்று கேட்டார். ஏவலர்களில் ஒருவன் குடுவையில் நீருடன் அவர் அருகே சென்றான்.
பந்தங்களின் ஒளி காட்டுக்குள் இருந்து பெரிய சட்டங்களாக எழுந்து சுழன்றது. பின்னர் இலைகளுக்கு அப்பாலிருந்து செந்நிறப்பெருக்காக எழுந்தது. இலைநிழல்கள் அதில் அசைந்தன. ஒளிபட்டு அஞ்சிய பறவைகள் ஓசையிட்டபடி கலைந்து எழுந்து இலைத்தழைப்புக்குள் சிறகுரச பறந்தன. புதர்களைக் கலைத்தபடி ஏதோ விலங்கு ஓடிச்செல்லும் ஒலி கேட்டது. நீருக்குள் என குரல்கள் கசங்கி கேட்டன. காலடி பட்டு உருளும் ஒரு கல்லின் ஓசையுடன் ஒருவன் மேலேறிவந்து தன் கையிலிருந்த பந்தத்தை தூக்கிக் காட்டினான். நீலநிற மரவுரியாடை அணிந்து பெரிய தலைப்பாகை சூடிய சத்ராஜித் ஆடையை ஒருகையால் பற்றியபடி மேலேறிவந்தார். பின்னால் பிரசேனர் திரும்பி நோக்கி ஏதோ ஆணையிட்டபடி வந்தார்.
அவர்கள் அருகே வந்ததும் அனைவரும் எழுந்து தலைவணங்கினர். சத்ராஜித் கைகூப்பியபடி வந்தபோது அவர்களில் முன்னால் நின்றிருந்த முதுபூசகர் “அந்தகக்குலம் வெல்க!” என்று சொல்லி தலைவணங்கினார். சிருங்கசிலையின் தலைவர் சத்ரர் கைகாட்டி சத்ராஜித்தை அங்கிருந்த மூங்கில்பீடத்தில் அமரச்செய்தார். பிரசேனர் அருகே இருந்த இன்னொரு பீடத்தில் அமர்ந்தார். ஏவலன் அவர்களுக்கு இன்கடும்நீர் கொண்டுவந்து கொடுத்தான். பிரசேனர் குவளையை வாங்கியபடி “இன்று காலை யமுனையில் ஒருவனை பிடித்தோம். அவனை உசாவியபோதுதான் சேதிநாட்டின் ஒற்றன் என்று தெரிந்தது” என்றார். “இத்தனை பெரிய ஒற்றர்வலை நம்மைச்சூழ்ந்திருக்குமென நான் எண்ணவில்லை. ஆகவே நன்றாக இருள் படிந்தபின்னர் கிளம்பலாமென முடிவெடுத்தோம்” என்றார்.
“இந்த மன்றுகூடலை நாம் மறைக்கமுடியாது. இங்கே அத்தனை குடித்தலைவர்களும் பூசகர்களும் வந்திருக்கிறோம்” என்றார் கிருஷ்ணசிலையின் தலைவரான பிரகதர். “ஆம், ஆனால் நாம் பேசுவதை அவர்கள் ஏதேனும் செய்து தடுக்காமலிருக்கலாம்” என்று பிரசேனர் சொன்னார். “இப்போதுகூட நம் சொற்கள் ஒவ்வொன்றும் அவர்கள் செவிகளுக்கும் செல்கின்றன என்பதை நாம் உணர்ந்திருப்பது நன்று” என்றார் பிரமதவனத்தின் தலைவரான ஹரிணர். சிருங்கசிலையின் தலைவர் சத்ரர் சற்று சினத்துடன் “அந்தகர்கள் எவரும் இரண்டகம் செய்பவர்கள் அல்ல. ஏனென்றால் அழிவது அனைவரும்தான்” என்றார். “நாம் ஏன் அழியவேண்டும்?” என்று கிருஷ்ணசிலையின் தலைவரான பிரகதர் கேட்டார். “அழிவோம் என்றால் அது எவரது பிழை? நம் இளவரசி இந்நேரம் துவாரகையில் அரசாண்டுகொண்டிருந்திருப்பாள்… நம் குலம் அப்பெருநகரில் வணிக உரிமைகளை பெற்றிருக்கும். கருடக்கொடியுடன் நம் நாவாய்கள் கடல்மீது ஏறியிருக்கும். இன்று இதோ இருண்டகாட்டில் கள்வர்கள் போல அமர்ந்திருக்கிறோம்.”
“இனி அதைப்பற்றி பேசிப்பயனில்லை” என்றார் பிரசேனர். “ஏன் பேசக்கூடாது? இதுவரை நிகழ்ந்ததெல்லாம் எவருடைய பிழை?” என்று பிரகதர் கூவியபடி எழுந்தார். பிரசேனர் எழுந்து கைகூப்பி “என் பிழை… என் பிழை மட்டுமே. நான் அனைத்தையும் பிழையாக கணித்தேன். என் பிழைகளில் முதன்மையானது என் தமையனைவிடப் பெரியவராக எவரையும் எண்ணாததுதான். அவையில் அவர் ஒருபடி மேலென நிற்கவேண்டுமென விழைந்தேன். அந்த மடமைக்கு விலையாக என் தமையன் சேதிநாட்டின் சிறுமதியாளன் முன் தலைகுனிந்து நிற்கச்செய்தேன்… இந்த அவையில் என் தலையை மண்மேல் வைக்கிறேன். குலமூத்தாரின் கால்கள் அதை மிதிக்கட்டும்” என்றார். பிரகதர் உரக்க “இச்சொற்களுக்கு எப்பொருளும் இல்லை பிரசேனரே. உமது ஆணவத்தின் விளைவை அந்தகக்குலம் சுமக்கிறது” என்றார்.
ஹரிணர் ஏதோ சொல்வதற்குள் சத்ராஜித் கைதூக்கி “இந்த அவையில் என் இளையோனைப்பற்றி சொல்லும் ஒவ்வொரு சொல்லும் என்னைக்குறித்தே. நான் அவனன்றி பிறனல்ல” என்றார். சிருங்கசிலையின் தலைவர் சத்ரர் “ஆம், நாம் இனிமேல் பேசிப்பயனில்லை. நிகழ்வதை பேசுவோம்” என்றார். சத்ராஜித் “என் தனயனை அன்னையிடமிருந்து நான் கைபற்றி ஆட்கொண்டது ஐம்பதாண்டுகளுக்கு முன். என் வாழ்க்கை என்பது அவனே. அவனுக்கு நானளிக்கக் கூடாதது என ஏதுமில்லை இப்புவியில். என் உயிர், அரசு, குடி, குலம் அனைத்தும் அவனுடையதே” என்றார். “அவனை விலக்கவேண்டுமென எண்ணுபவர்கள் எழலாம். என்னையும் விலக்கி அந்தகர்களுக்கு பிறிதொரு அரசனை தேரலாம்… நான் தடைநிற்கப்போவதில்லை.”
அச்சொற்கள் பிரகதரை தளர்த்தின. “நான் சொன்னது நம் இளவரசியைப்பற்றிதான் அரசே” என்றார். “என் இளையோன் சொன்னால் இக்கணமே அவளை குலமொழிவு செய்யவும் தயங்கமாட்டேன்…” என்று சத்ராஜித் உரத்தகுரலில் சொல்ல பிரகதர் ‘நான் என்ன சொல்ல?’ என்பதுபோல கைகளை விரித்தபின் அமர்ந்தார். யாதவர்கள் அவரது குரலைத்தான் விரும்பினர் என்பது முகங்களில் தெரிந்தது.
சுவனத்தின் தலைவரான அஸ்வகர் “என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்று பிரசேனர் சொல்லட்டும். நாம் எதற்காகக் கூடினோமோ அதைப்பற்றி பேசுவோம்” என்றார். “ஆம், அதை பேசுவோம்” என்று கூட்டத்தில் குரல்கள் எழுந்தன. சத்ராஜித் இளையவரை நோக்க அவர் சற்றுநேரம் தயங்கியபின் “….எங்கே தொடங்குவதென்று தெரியவில்லை மூத்தாரே. நேற்று வந்த செய்தியை சொல்கிறேன். சிசுபாலருக்கு நேற்று மீண்டும் உடல்நிலை சீர்குலைந்துள்ளது. தட்சிணநாட்டு மருத்துவர்கள் வந்திருக்கிறார்கள்” என்றார். யாதவர்கள் எழுப்பிய வியப்பும் சலிப்பும் கலந்த ஒலியைக் கேட்டு என்ன செய்வது என்பதுபோல கையை விரித்தார். “என்ன ஆயிற்று அவனுக்கு? இளைஞன். இங்கு வந்தபோது இளம்புரவிபோலத்தான் இருந்தான்” என்றார் சிருங்கசிலையின் தலைவர் சத்ரர்.
பிரசேனர் “ஆம், இங்கு வரும்வரை அவருக்கு எந்த நோயும் இல்லை என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள். இங்கு அவர் நம்மை சற்று இளக்காரமாக நடத்த நானும் யாதவரும் சினம்கொண்டோம் என்று அவரது அமைச்சர்கள் சான்றுரைக்கிறார்கள். அவருக்கு ஒரு குவளை பாலமுது வழங்கப்பட்டது. அது சற்று மாறுபட்ட சுவைகொண்டிருந்தது என்று அவர் சொன்னதையும் அனைவரும் கேட்டிருக்கிறார்கள். இளவரசி வந்ததும் முறைப்படி எழுந்து அவளைப்பார்த்தபோது தலைசுழன்று கீழே விழுந்திருக்கிறார். வலிப்பு வந்துள்ளது. நினைவு மீண்டபோதும் சித்தம் தெளியவில்லை. கலங்கியநிலையிலேயே அவரை மகதத்தின் காவலரணுக்கும் அங்கிருந்து சேதிநாட்டுக்கும் கொண்டுசென்றிருக்கிறார்கள். அவரது உளநிலை தெளிவடையவேயில்லை…” என்றார். “நாம் பாலமுதில் ஏதோ பச்சிலையை கலந்துவிட்டோம் என்பது அவர்களின் மருத்துவர்களின் குற்றச்சாட்டு. அவர்களின் குலப்பூசகர்கள் ஏதோ அணங்கை ஏவிவிட்டிருக்கிறோம் என்கிறார்கள்.”
யாதவர்கள் சலிப்பின் ஒலிகளுடன் உடல்தளர்ந்தனர். சுவனத்தின் தலைவரான அஸ்வகர் “அப்படி குற்றம்சாட்டலாயிற்றா? முதலில் ஏதேனும் திடச்சான்றை அவர்கள் காட்டியாகவேண்டும் அல்லவா?” என்றார். “காட்டியாகவேண்டும், நாம் அவர்களுக்கு நிகரான வல்லமை கொண்ட அரசாக இருந்தால். இன்றையநிலையில் நம்மை வேருடன் பிடுங்கி உண்ண அவர்களுக்கு இது ஒரு நல்ல முன்விளக்கம்” என்று சொன்ன பிரமதவனத்தின் தலைவரான ஹரிணர் சலிப்புடன் கையை வீசி “நாம் தனித்துவிடப்பட்டிருக்கிறோம். இன்று யாதவகுலங்கள் நம்முடன் இல்லை. அதுதான் வெளிப்படையான உண்மை. பிறிதெல்லாம் அரசு சூழ்தலின் நாடகங்கள் மட்டுமே” என்றார். யாதவர் அதை ஏற்பது போல ஓசை எழுப்பினர். ஒருவர் “நாம் சேதிநாட்டுக்கு கப்பம் கட்டுவோம். எப்படியானாலும் கப்பம் கட்டுபவர்கள் அல்லவா?” என்றார். “கப்பம் கட்டும்படி கோரினால் அத்துடன் நம் இடர் நீங்கியது. ஆனால் அதற்கு அவர்கள் நம்மை சிற்றரசர்களாக ஏற்கவேண்டும். அப்படி ஏற்பதற்கு எண்ணமிருந்தால் ஏன் இந்தப்பகைமை?”
“அவனுக்கு உண்மையிலேயே சித்தம் பிசகிவிட்டதா, இல்லை அதுவும் வெறும்கூற்றுதானா?” என்று பிரகதர் கேட்டார். பிரசேனர் “நான் அதை ஒற்றர்கள் வழியாக முற்றாக உசாவியறிந்தேன். இங்கிருந்து செல்லும்போது இருந்த நிலையிலேயே இப்போதும் இருக்கிறார்” என்றார். பிரகதர் குரல்தாழ்த்தி “முழுமையாகவே பித்தாகிவிட்டானா என்ன?” என்றார். “அதை பித்து என்றும் சொல்லமுடியாது. அணங்கு கூடிய நிலைபோலத்தான் தெரிகிறது. மானுடர் எவரையும் விழிநோக்குவதில்லை. கண்கள் விரிந்து மலைத்தவை போலிருக்கின்றன. விழித்திருக்கும்போதும் துயிலும்போதும் பேருவகையில் மலர்ந்ததுபோலிருக்கிறது முகம். அது ஏதோ மலையணங்கு என்று முதலில் எண்ணி பூசெய்கைகள் நிகழ்ந்தன. இசையிலும் மலர்களிலும் இடைவெளியில்லாமல் உள்ளம் தோய்வதைக் கண்டு அது கந்தர்வன் என்று பின்பு கணித்தனர். பேசும் சொற்களைத் தேர்ந்து ஆராய்ந்த நிமித்திகர் அவர் பெருமங்கலம் திகழும் தெய்வமொன்றை கண்டிருக்கிறார் என்றனர். எனவே பதினெட்டுநாட்களாக திருவாழும் ஆலயமொன்றில் வைத்து வழிபாடுகள் செய்தனர். மீண்டு வந்த இரண்டுநாள் தொடர்ந்து துயின்றபின் விழித்து மீண்டும் முன்பு என ஆகிவிட்டிருக்கிறார்.”
“அணங்கேதான்” என்றார் குலப்பூசகரான வராகர். “அணங்குகள் பல உண்டு யாதவரே. அணங்குகள் முப்பெரும் தேவியரில் ஒருவருக்கு அகம்படி செய்பவை. வெண்கலையன்னைக்குரிய அணங்குகள் காவியங்களிலும் இசையிலும் வாழ்கின்றன. அவை பற்றிய மானுடர் ஒருநூலை ஒருபாடலை ஓர் இசையை மீளமீளக் கேட்டு அவற்றில் ஆழ்ந்து பித்தென்றாகி அமர்ந்திருப்பர். பாய்கலைப்பாவைக்குரிய அணங்குகள் படைக்கலங்களில், பசுங்குருதியில் வாழ்பவை. அவை தொட்ட மானுடர் பெருஞ்சினம் கொண்டிருப்பர். படைக்கலத்தை துயிலிலும் கைவிடாதிருப்பர். வெண்ணிறம் மீது பற்றுகொண்டிருந்தால் கலைமகளின் அணங்கு அது. செங்குருதிநிறம் மீது பித்தெழுந்தால் அது கொற்றவையின் அணங்கு எனலாம்.”
“திருமகளின் அணங்குகள் அழகுள்ள அனைத்திலும் வாழ்பவை. மலர்களில், பட்டில், அணிகளில், ஓவியங்களில், அழகிய பெண்ணுடல்களில், மலர்க்காடுகளில், வெண்முகில்களில். எங்கிருந்தும் அவை மானுடரை பற்றக்கூடும். நாம் நடந்துசெல்லும் இந்த மண்ணில் விரிந்துள்ள கோடிகோடி கூழாங்கற்களில் சில கற்கள் பேரழகுகொண்ட சிற்பங்கள். ஊழ் வகுத்த ஒரு கணத்தில் அவற்றில் ஒன்றை எடுத்து நோக்குபவன் அவ்வணங்கால் பற்றப்படுகிறான். நம்மைச்சூழ்ந்துள்ள இந்த மலர்ப்பெருக்கில் சில மலர்கள் மட்டும் கொல்லும் பேரழகுடன் அணங்கு கொண்டு அலர்ந்திருக்கின்றன. நாமறிந்த பெண்களிலேயேகூட அவள் உடலசைவுகளின் பெருக்கின் ஏதோ ஒரு கணத்தில் அணங்கு எழுந்து வரக்கூடும். அக்கணத்தில் அகம் விழியாக அவளை காண்பவன் பித்தெழுந்து அழிகிறான். முன்பு பிரதீபன் என்னும் அரசன் தன் அரசி சத்யை என்பவள் கூந்தல்கோதி திரும்பும் ஓர் அசைவைக் கண்டு அணங்குகொண்டான். அதன்பின் அவன் சத்யையையும் நோக்கவில்லை. மானுடவெளிக்கு அப்பால் எழுந்த பேரழகைக் கண்டு பித்தேறி ஊணுறக்கம் மறந்து மெலிந்து அழிந்தான்.”
“அவன் நம் இளவரசியில் அணங்கை கண்டிருக்கிறான்” என்று சத்ரகுடியின் பூசகரான பாவகர் சொன்னார். “அப்போது நான் வாயிலில் நின்றிருந்தேன். அவன் அவளை முதலில் எதிர்ச்சுவரில் எழுந்த நிழலில் நோக்கினான். அவன் விழிகள் அஞ்சியவை போலவும் பேருவகைகொண்டவை போலவும் விரிந்தன. உதடுகள் துடித்து உடல் அதிர்வதை கண்டேன். தோள்தொடப்பட்டவனைப்போல திடுக்கிட்டுத் திரும்பி அவளை நோக்கினான். அக்கணமே உடல் உதறிக்கொள்ள மண்ணில் சரிந்தான். இளவரசி அப்போது முழுதணிக்கோலத்தில் கருணைநிறை விழிகளுடன் கைகளில் பாலமுதும் மலர்த்தாலமும் ஏந்தி மார்பிலணிந்த சியமந்தக மணியுடன் நிலைவாயிலில் நின்றிருந்தாள். கருவறை நின்ற திருமகள் போலத்தான் தெரிந்தாள்.”
“சியமந்தகம்தான்… அதைத்தான் அவன் கண்டிருக்கிறான்” என்று சிருங்கசிலையின் தலைவர் சத்ரர் சொன்னார். “அவனைப் பித்தாக்கிய திருமகள் எழுந்தது அதிலிருந்துதான்” என்றார் மலையஜபுரியின் தலைவர் அச்சுதர். அதை முன்னரே அவர்கள் பேசியிருக்கக்கூடும் என்பதைப்போல யாதவர் சொல்லின்றி அமர்ந்திருந்தனர். ஒருகுரல் “அதிலுள்ளது நம் நல்லூழா தீயூழா என்று தெரியவில்லை” என்றது. அனைவரும் திரும்பி நோக்க அதைச்சொன்னது எவரென காணமுடியவில்லை. சத்ராஜித் பெருமூச்சுடன் “நாம் வீண்சொற்கள் பேசிக்கொண்டிருக்கவேண்டியதில்லை. சேதிநாட்டின் பகைமையை எப்படி வெல்லப்போகிறோம்? அதைமட்டும் நாம் முடிவுசெய்தால்போதும்” என்றார். யாதவர்கள் பெருமூச்சுகளுடன் மீண்டுவந்தனர். மலையஜபுரியின் தலைவர் அச்சுதர் “மீள்வதற்கு என்ன பல வழிகளா உள்ளன? வல்லமையுள்ளவன் கால்களில் சென்று விழுவது ஒன்றே நாம் செய்யக்கூடுவது” என்றார்.
“நாம் சென்று பணியவேண்டிய கால்கள் இளைய யாதவனுக்குரியவை மட்டுமே” என்றார் சுஃப்ரகுலப்பூசகரான சபரர். “துவாரகையின் கால்கோள்நாட்டுவிழாவில் நாம் சொன்ன சொற்களுக்கான கழுவாயை செய்வோம். அங்கிருந்து அனைத்தும் சீரமைவதை காண்போம்.” யாதவர்கள் அதை ஏற்று ஒலியெழுப்பினர். சத்ராஜித் பிரசேனரை நோக்கினார். பிரகதர் “மூத்தாரே, இன்று நாம் மீண்டும் துவாரகைக்கு செல்வோம் என்றால் நமக்கு அங்குள்ள இடமென்ன? நாமிருந்த அரசமேடை நமக்கு மீண்டும் அளிக்கப்படுமா?” என்றார். மலையஜபுரியின் தலைவர் அச்சுதர் “அதை இழந்தது எவரது பிழை?” என்றார். சத்ராஜித் “நாம் பழையவற்றை எண்ணவேண்டியதில்லை… இன்று என்ன செய்யப்போகிறோம்?” என்றார். சிருங்கசிலையின் சத்ரர் “பழையவற்றை நாம் மீண்டும் செய்யத்தொடங்கியிருக்கிறோம். நான் சொன்னது அதை மட்டுமே” என்றார். “செய்யவேண்டியதை பேசுவோம்” என்று சத்ராஜித் உரக்க கைதூக்கி சொன்னார்.
பிரசேனர் “என் எண்ணங்களை சொல்லிவிடுகிறேன்… இன்றையநிலையில் நாம் செய்யக்கூடுவது அதை மட்டுமே” என்றார். “நாம் சேதிநாட்டின் பகையிலிருந்து தப்ப இரு வழிகள் மட்டுமே உள்ளன. துவாரகைக்குச் சென்று நாமிருந்த இடத்தை இழந்தவர்களாக கடைக்குடி யாதவர்களாக அமையலாம். மகதத்துக்கு கப்பம் கட்டி படைத்துணை கோரலாம்.” மலையஜபுரியின் தலைவர் அச்சுதர் எரிச்சலுடன் “இதைத்தான் பலநாட்களாக பேசிக்கொண்டிருக்கிறோம். மகதம் நம்மை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை… நாம் கப்பம் கட்ட சித்தமாக இருக்கிறோம் என அவர்களுக்குத் தெரியாதா என்ன? அவர்கள் நம்மை சிற்றரசாக ஏற்கவேண்டும். கோல்கொண்டு முடிசூட ஒப்பவேண்டும்… இன்றுவரை நம்மை சிற்றரசாக ஏற்றது மதுராபுரியின் உக்ரசேனரும் கம்சரும் மட்டுமே” என்றார்.
பிரசேனர் “எந்தப் பெரிய அரசும் சிற்றரசுகளின் எண்ணிக்கையை பெருக்க எண்ணாது. அது குடித்தலைவர்கள் தம்மை அரசர்களென எண்ணச்செய்யும். நாட்டில் ஒழுங்கு சிதையும். ஆகவே மகதத்தின் நிலை சரியானதே” என்றார். “மகதம் நம்மை சிற்றரசாக எண்ணவேண்டுமென்றால் நம் வலிமை இன்னும் சற்று மிகவேண்டும். நம் படைவல்லமையும் துணைவல்லமையும் பெருகினால் நம்மை அருகணைத்தாகவேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. அப்போது நாம் அவர்களிடம் நின்று பேசமுடியும்.” சில கணங்கள் நிறுத்தி அவர்களை நோக்கிவிட்டு “சிற்றரசாக நம்மை மகதம் ஏற்கும் நிலை வருமென்றால் நாம் துவாரகையிடமும் பேசமுடியும்.”
சத்ராஜித் பெருமூச்சுடன் சற்று உடலை அசைக்க அனைவரும் அவரை நோக்கினர். பிரகதர் “நம் இளவரசியை மீண்டும் இளைய யாதவர் கொள்வாரா?” என்றார். பிரசேனர் திகைத்து விழிகளை விலக்கி “அவ்வாறு நிகழுமென்றால் நன்று…” என்றார். பிரகதர் “மீண்டும் பட்டத்தரசியாக ஆகாவிட்டாலும் யாதவருடன் அவள் சேர்ந்தாள் என்றால் அதைவிட நம் குடிக்கு நன்மை என பிறிதில்லை” என்றார். சத்ராஜித் “நாம் அதைப்பற்றி பிறகு பேசுவோம்… நம் இக்கட்டு அதுவல்ல” என்றார். பிரகதர் உரக்க “நம் இக்கட்டைப்பற்றி நான் பொருட்படுத்தவில்லை. நம் குலவிளக்கு இங்கே தன் உளம்கொண்டவனுக்காக காத்திருக்கிறாள்… அவள் நெஞ்சுலைந்து நெடுமூச்செறிந்தால் நம் குலம் பற்றி எரியும். நான் எண்ணுவது அதைப்பற்றியே” என்றார்.
பிரசேனர் “நாம் அதையும் அவரிடம் பேசமுடியும் மூத்தாரே” என்றார். சிருங்கசிலையின் சத்ரர் “அதற்கு என்னசெய்யப்போகிறோம்? நாம் படைதிரட்டவிருக்கிறோமா? யாதவகுலங்கள் அனைத்தாலும் விலக்கப்பட்டிருக்கிறோம். இந்தப் பெருங்காட்டின் விளிம்பில் மலைக்குடிகளென வாழ்கிறோம்…” என்றார். “நான் சொல்லவந்ததும் அதுவே. நமக்கு வடக்கே பெருகி பரவியிருக்கும் இப்பெருங்காடு நமக்கு அரண். யமுனைக்கரை வணிகத்துக்காக மட்டுமே நாம் இங்கிருக்கிறோம். களிந்தகத்துக்கு நிகராக ஒரு கோட்டையை நாம் உள்காட்டில் அமைப்போம். மகதமோ பிறரோ நம்மை தாக்குவார்களென்றால் அங்குசென்று அமைவோம். வெல்லமுடியாதவர்கள் என்பதே நம்மை விரும்பத்தக்கவர்களாக ஆக்கும்… இன்று நமக்குத்தேவை அந்த வடிவம்தான். நாம் துவாரகையை பகைத்துக்கொண்டிருக்கிறோம். சேதிநாட்டை விலக்கியிருக்கிறோம். ஆரியவர்த்தமே இன்று நம்மை நோக்குகிறது. ஏதோ ஒரு அறியாவல்லமையால்தான் நாம் இத்தனை நிமிர்வுடனிருக்கிறோம் என அரசர்கள் எண்ணுகிறார்கள். காட்டுக்குள் ஒரு கோட்டை அவ்வென்ணத்தை வலுப்படுத்தும்.”
“ஆனால்…” என்று அச்சுதர் சொல்லத்தொடங்க “அஸ்வபதத்தின் மலைக்குடிகளுக்கும் நமக்கும் நெடுங்காலப் பூசல்கள் உள்ளன என்பது உண்மை. ஆனால் மிக எளிதில் அவர்களை நாம் நம் நண்பர்களாக்கிக் கொள்ளமுடியும்” என்றார் பிரசேனர். “ஏனென்றால் மலைக்குடிகள் இன்று மாறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வணிகப்பொருட்கள் தேவைப்படுகின்றன. உப்பும் மரவுரியும் படைக்கலங்களும் அவர்களால் விரும்பப்படுகின்றன. அவர்கள் நமக்கு மலையில் இடமளித்தால் அவர்களுக்கு யமுனையில் துறையமைத்துக் கொடுப்போம். உரிய வணிக ஒப்பந்தங்களை போட்டுக்கொள்வோம்.” யாதவர் நடுவே எந்த எதிர்வினையும் எழவில்லை.
பிரசேனர் ஒருகணம் பொறுத்துவிட்டு “அஸ்வபாதமலைக்கு அப்பால் களிந்தசிருங்கம் வரை ஊஷரர், பிங்கலர், சியாமர், கராளர், கன்னர், தசமுகர், ஜாம்பவர் என ஏழு மலைக்குடிகள் உள்ளன. அவர்களில் ஒருவரையாவது நம்மால் வென்றெடுக்க முடியும். ஒற்றர்கள் வழியாக விரிவாகவே செய்தி சேர்த்திருக்கிறேன். கன்னரும் கராளரும் பகைமை நிறைந்தவர்கள். அனைவருக்கும் முதல்குடிகளான ஜாம்பவர் எவ்வகையிலும் அணுகமுடியாதவர்கள். உள்காட்டின் இருளுக்குள் வாழ்பவர்கள். சியாமரும் பிங்கலரும் தயக்கம் கொண்டவர்கள். ஊஷரரும் தசமுகரும் இப்போதே யமுனைக்கரைத் துறைகளுக்கு வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஊஷரகுடித்தலைவர் சிருங்ககாலர் பிறகுடிகளை வென்று பெருங்குடித்தலைவராகும் இலக்கு கொண்டிருக்கிறார். அவருக்கு நம் நட்பு உகந்ததாகவே இருக்கும்… அவரை அணுகலாமென நினைக்கிறேன்” என்றார்.
யாதவர்கள் செந்தழல் அலையடித்த முகங்களுடன் வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தனர். “இந்த அவை ஒப்புதல் அளித்தால் முறையான தூதை அனுப்புவேன். நானே நேரில் சென்று அவர்களிடம் பேசி நட்புறுதி செய்வேன்” என்று பிரசேனர் தொடர்ந்தார். “சிருங்ககாலரை இங்கே நம் இல்லத்திற்கு அழைத்து நம் குலமுறைப்படி வரவேற்பும் வாழ்த்தும் அளித்து ஓர் இருகுல உண்டாட்டை நிகழ்த்தினால் நட்புறவு உறுதியாகும். மூத்தாரே, ஊஷரர் நம்முடன் இருந்தால் சியாமரையும் பிங்கலரையும் தசமுகரையும் எளிதில் நம்முடன் சேர்த்துக்கொள்ளமுடியும். நான்கு மலைக்குடிகளின் துணையிருந்தால் அஸ்வபாத மலைச்சரிவில் மரத்தாலான ஒரு கோட்டையை அமைப்பதற்கு ஏழுமாதகாலம் போதும். மலைக்குடிகளைக் கடந்து காட்டுக்குள் வந்து நம்மை வெல்ல மகதத்தாலும் துவாரகையாலும் முடியாது.”
“இப்போது இவை எல்லாம் வெறும் கனவுகள்” என்றார் பிரகதர். “ஊஷரர் நம்மை ஏற்பார்கள் என நம்பி இச்சொற்களை சொல்கிறீர்கள். அவர்கள் நம்மை ஏற்பார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இன்றில்லை. மலைக்குடிகள் அரசு சூழ்தல் அறியாதவர்கள். அவர்களின் எண்ணங்களை அவர்கள் வழிபடும் மலைத்தெய்வங்கள் முடிவுசெய்கின்றன. அவை இன்றுவரை அயலவரை ஏற்றதில்லை.” பிரசேனர் “அதையும் எண்ணியபின்னரே இங்கு வந்தேன் மூத்தாரே. ஏழு மலைக்குடிகளில் ஊஷரர் சூரியனை வழிபடுகிறார்கள். அவர்கள் வாழும் கஜமுகம் என்னும் மலைச்சரிவில் உள்ள மூன்று குகைகளில் நடுவே உள்ள குகையில் வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் மீனநாளின் உச்சிப்பொழுதில் நான்கு கணிகை நேரம் மட்டும் அங்குள்ள இருண்ட சிறிய சுனைக்குள் சுடர்மணியாக எழுந்தருளும் சூரியனே அவர்களின் தெய்வம்.”
அவர் சொல்லவருவதை யாதவர்கள் ஒரேகணத்தில் புரிந்துகொண்டனர். பலர் எழுந்து விட்டனர். பிரமதவனத்தின் தலைவரான ஹரிணர் “உண்மையாகவா?” என்றார். “ஆம், நாம் இங்கு வந்து நூறாண்டுகளாகின்றன. இன்றுவரை நாம் இந்த மலைக்குடிகளை அறிய முயன்றதே இல்லை. அவர்களை எதிரிகளென மட்டுமே எண்ணியிருக்கிறோம்… இப்புவியில் நமக்கு மிக அண்மையான எவரேனும் இருக்கமுடியும் என்றால் அது ஊஷரர்களே” என்றார். கிருஷ்ணசிலையின் தலைவரான பிரகதர் “அவர்கள் சூரியனை எப்படி வழிபடுகிறார்கள்?” என்றார். “சூரியன் குடியிருக்கும் ஏழு மணிகள் அவர்களிடமுள்ளன. அவற்றை தங்கள் ஊர்நடுவே உள்ள ஆலயத்தில் வைத்து முதல்கதிர் எழும் வேளையில் புதுமலர் அளித்து வழிபடுகிறார்கள்.” யாதவர்கள் உள எழுச்சியால் பெருமூச்சு விட்ட ஒலிகள் எழுந்தன. சுவனத்தின் தலைவரான அஸ்வகர் “அந்த மணிகள் எப்படி உள்ளன?” என்றார். பிரசேனர் புன்னகையுடன் “வானவில்லின் ஏழுநிறங்கள் கொண்டவை” என்றார். “ஆனால் சியமந்தகம் அவற்றை விட ஏழுமடங்கு பெரியது.”
பேசவேண்டிய அனைத்தையும் பேசிவிட்ட உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது போல மெல்ல உடல் தளர்ந்து அமைந்தனர். ஒருவர் எழுந்துசென்று இன்கடுநீர் கோப்பையை எடுத்துக்கொண்டார். இன்னொருவர் அதற்காக கைநீட்டினார். “மூத்தாரே, சியமந்தக மணியை கழுத்தில் அணிந்துகொண்டு அவர்களின் மன்றில் சென்று அமர்ந்தேன் என்றால் நான் ஒரு சொல்லைக்கூட உச்சரிக்கவேண்டியதில்லை” என்றார் பிரசேனர். “நான் கோருவது இந்த அவையின் ஒப்புதலை மட்டுமே.” யாதவர்கள் அனைவரும் தங்கள் வளைதடிகளைத் தூக்கி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று குரலெழுப்பி வாழ்த்தினர்.