இந்த கதைகளை நான் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகவே எழுதினேன் என்று சொல்லமுடியாது. கதைகள் வழக்கம்போல சம்பந்தமில்லாத ஏதோ தொடக்கப்புள்ளியில் இருந்து முளைத்து கிளைவிட்டு எழுந்தவைதான். ஆனால் இவற்றை எழுதும்போது பலகாலமாகவே என் மனதில் இருந்த ஓர் எண்ணம் துணையாக அமைந்தது. அதாவது அறிவியல் என்று நாம் இன்று சொல்லிக்கொண்டிருப்பது ஐரோப்பிய அறிவியலை மட்டுமே. கிரேக்க ஞானமரபில் வேர்கொண்டு ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்தில் பேருருவம்கொண்ட அறிவியல் அது. உலகமெங்கும் உள்ள அறிவியல் ஞானங்களை முழுக்க அது தன்னுடைய தர்க்கக் கட்டுமானத்துக்குள் கொண்டுவந்து இன்று உலகின் ஒட்டுமொத்த அறிதல்முறையாக மாறிவிட்டிருக்கிறது.
ஆனால் இது அல்லாத அறிவியல்கள் உலகில் இருந்திருக்கின்றன. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தனித்தன்மை கொண்ட அறிவியல்கள் இருந்தன. அவை ஐரோப்பிய அறிவியல்களைப்போல நவீனகாலத்துக்காக புதுப்பிறவி கொள்ளவில்லை. இன்றைய தேவைகளை சந்திக்குமளவுக்கு வளர்ச்சியும் அடையவில்லை. ஆனால் அவற்றின் மூலங்கள் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்திய அறிவியலைப் பொறுத்தவரை மருத்துவம் ,யோகம் ஆகிய இருதளங்களில் அது மேலை அறிவியலை தாண்டிய பல நுண்ணிய தளங்களை தொட்டிருக்கிறது.
சமீபமாக உளவியலாளர் சி.ஜி.யுங்கின் எழுத்துக்களை விரிவாக வாசிக்கும்போது அது மேலும் உறுதிப்படுகிறது. யுங் இந்த உண்மையை உணர்ந்திருந்தார். மேலை உளவியல் என்பது இந்திய யோகமுறையுடன் ஒப்பிடும்போது குழந்தை நிலையிலேயே இருக்கிறது என்று அவருக்கு தெரிந்திருந்தது. தன் எழுத்துக்களில் மேலை அறிவியலின் தருக்கத்தைக்கொண்டு அதைப் புரிந்துகொள்ள யுங் மிகத்தீவிரமாக முயற்சி செய்கிறார்.
அறிவியல்புனைவு குறித்தும் எனக்கான ஒரு புரிதல் உள்ளது. அறிவியல்புனைகதைகள் என்பவை ஒரு வழக்கமான திகில் கதை அல்லது துப்பறியும் கதையில் சில அறிவியல்கூறுகளை கலந்துகொள்வன என்ற அளவிலேயே தமிழில் நம்மால் இதுவரை புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. அறிவியல் என்றால் தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் அல்லது வியப்பூட்டும் ஊகங்கள் என்றும் நாம் எண்ணுகிறோம். ஆகவே நம் அறிவியல்கதைகள் எந்திரன்கள் வான்வெளிப்பயணம் வேற்றுக்கோளுயிர்கள் ஆகியவை சார்ந்தே உள்ளன. இவையல்லாமல் அறிவியல்கதைகளை நம்மால் கற்பனைசெய்ய இயலவில்லை.
என் நோக்கில் அறிவியல்கதை என்பது இருதளங்களில் செயல்படக்கூடியது. ஒன்று அறிவியலின் கேள்விகளுக்கு இலக்கியத்தின் வழிமுறையான கற்பனையைக் கொண்டு பதில் சொல்ல முயல்வது. இது ஒரு மேலோட்டமான தளம். இரண்டு, வாழ்க்கையின் அடிப்படைக்கேள்விகளுக்கு அறிவியலின் படிமங்களை பயன்படுத்திக்கொண்டு பதில்தேட முயல்வது. எப்படி புனைகதையானது வரலாற்றில் இருந்து படிமங்களை எடுத்துக்கொண்டு வரலாற்றுக்கதைகளை உருவாக்குகிறதோ அப்படி. காலம், மரணம், பிறப்பு மற்றும் இறப்பின் பொருள், இருத்தலின் நோக்கம், மானுட உறவுகளின் சிக்கல்கள், மானுட உணர்ச்சிகள் என எவற்றையெல்லாம் வழக்கமாக இலக்கியம் ஆராய்கிறதோ அவற்றையே அறிவியல்புனைகதைகளும் அறிவியலின் படிமங்களைக் கொண்டு ஆராய்கின்றன.
இவ்விருவகைகளில் எழுதப்படும் அறிவியல்புனைகதைகளுக்கே இலக்கிய மதிப்பு இருக்க முடியும்.மற்றவை வெறும் வேடிக்கைகள் மட்டுமே. அப்படிப்பட்ட இலக்கியத்தரமான அறிவியல்புனைகதைகள் அறிவியலும் மானுட ஆழ்மனமும் சந்திக்கும் புள்ளியில் இருந்து உருவாகின்றன. நம்முடைய ஆழ்மனமானது நம் மரபில் இருந்து வந்துள்ள நம் அறிவியலுடனேயே அதிகமும் உரையாடுகிறது. அதில் இருந்தே அது வலுவான படிமங்களை பெற்றுக்கொள்ளமுடியும். ஆகவே நாம் எழுதும் அறிவியல்புனைகதைகள் நம்முடைய சொந்த அறிவியலை இன்னமும் நுணுகி கையாளக்கூடியவையாக இருக்கவேண்டும். எப்படி நம் இலக்கியம் நம் பண்பாட்டில் இருந்து உருவாகின்றதோ அப்படி நம் அறிவியல்புனைகதைகளும் நம் பண்பாட்டில் இருந்து உருவாக வேண்டும்.
அந்த நம்பிக்கையுடன் நான் நான்கு வருடங்கள் முன்பு இந்தக்கதைகளை எழுதினேன். இவை இந்திய அறிவியல்கதைகள். தமிழ் அறிவியல்கதைகள். இந்திய, தமிழ் எழுத்தாளனால் மட்டுமே எழுதப்படத்தக்கவை. இவை ஒரு முன்னுதாரண முயற்சிகள். இன்னமும் வீரியம் கொண்ட கதைகள் இந்த தளத்தில் மேலும் தமிழில் உருவாகி வரவேண்டும். இவ்வகை அறிவியல்புனைகதைகள் மேலைநாட்டு அறிவியலைஒட்டி அங்குள்ள அறிவியல்புனைகதைகளைச் சார்ந்து எழுதப்படும் கதைகளை விட தமிழ் மனதை ஆழமாகப் பாதிக்கக்கூடியவை.
இந்த நம்பிக்கை கடந்த வருடங்களில் இந்நூல் மூலம் மிக மிக உறுதிப்பட்டது. இத்தொகுப்பில் உள்ள ’உற்று நோக்கும் பறவை’ ‘ஐந்தாவது மருந்து’ போன்ற கதைகளை பற்றி இன்றுவரை தொடர்ச்சியான விவாதங்கள் பல தளங்களில் நடந்தபடியே உள்ளன. தமிழில் வேறெந்த அறிவியல்புனைகதைகளையும்பற்றி இத்தனை கவனம் குவிக்கப்பட்டதில்லை. இவ்வளவு நீண்ட தொடர் விவாதம் நிகழ்ந்ததில்லை. காரணம் இவை பேசும் கேள்விகள் ஏற்கனவே தமிழ்மனத்தை அலைக்கழித்துக்கொண்டிருப்பவை என்பதும் அக்கேள்விகளை மிகத்தீவிரமாகவே இக்கதைகள் எதிர்கொள்கின்றன என்பதும்தான். அறிவியல்புனைகதை என்பது மனமகிழ்வூட்டும் ஒரு வேடிக்கைபுனைவுதான் என்ற தளத்தில் இருந்து இக்கதைகள்மூலம் தமிழிலக்கியம் முன்னகர்ந்திருக்கிறது.
முதலில் இக்கதைகளை வெளியிட்ட திண்ணை இணையதளத்துக்கும் முதற்பதிப்பை நூலாக வெளியிட்ட எனி இண்டியன் பதிப்பகத்துக்கும் இப்போது மீண்டும் வெளியிடும் கிழக்கு பதிப்பகத்துக்கும் நன்றி
[ கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் விசும்பு அறிவியல் புனைகதைகள் இரண்டாம் பதிப்புக்கான முன்னுரை]