அன்புள்ள ஜெ,
நான் எட்டு வருடங்களுக்கு முன்பு என் தந்தையாரிடம் இருந்து சிவதீக்கை பெற்றுக்கொண்டேன். ஆனால் இப்போதெல்லாம் என்னால் மனம் ஒன்றி பூஜைசெய்ய முடியவில்லை. என் மனம் உருவ வழிபாட்டை ஏற்கவில்லை. என்னுடன் நான் கொண்டுபோகும் சிவலிங்கங்களை புனிதமானவையாக என்னால் நினைக்க முடிவதில்லை. ஆகவே பூஜைகள் சலிப்பை தருகின்றன. வீட்டில் இருக்கும்போது மட்டும் பூஜைசெய்வேன். மற்ற நேரங்களில் செய்வதில்லை. கடவுளுக்கு உருவம் உண்டா என்ன? இந்தமாதிரி ஒரு உருவத்தில் கடவுளை கற்பித்துக்கொண்டு வழிபடுவதனால் என்ன பயன்? இவையெல்லாம் பண்படாத காட்டுமிராண்டிக்கால வழக்கங்கள் அல்லவா? இந்து மதத்தில் உள்ள இந்த உருவ வழிபாட்டை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? எனக்கு இந்தமாதிரி உருவங்களை கும்பிடுபவர்கள் எல்லாரும் முட்டாள்கள் என்ற எண்ணம் சமீபகாலமாக உருவாகி வருகிறது, ஆகவேதான் இந்த கடிதத்தை எழுதினேன்.
சிவக்குமார் பொன்னம்பலம்
அன்புள்ள சிவக்குமார்,
உருவ வழிபாட்டைப்பற்றி ஒருமுறை சுவாமி விவேகானந்தரிடம் கேட்கப்பட்டது. ’அத்வைதியான நான் உருவ வழிபாட்டை கண்டிக்கவேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். ஆனால் உருவ வழிபாடு வழியாக அனைத்தையும் அடைந்த ஒருவரின் கால்களில் அமர்ந்துதான் நான் அனைத்தையும் கற்றுக்கொண்டேன் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது’ என்று அவர் பதில் சொன்னார்.
உருவ வழிபாடைப்பற்றிப் பேசும்போதெல்லாம் நான் நினைவில்கொள்ளவேண்டிய விஷயம் இதுதான், நாமறிந்த மாபெரும் மெய்ஞானியர் பலர் உருவ வழிபாட்டாளார்களே. அவர்களை ஞானமறியா மூடர்கள் என்று சொல்லவேண்டுமென்றால் நமக்கு அன்றாடமூடத்தனத்தை கடுகுமணியாகச் சிறுக்கவைக்குமளவுக்கு அதிபிரம்மாண்டமான மூடத்தனம் தேவை. கண்மூடித்தனமான மதம் அல்லது கோட்பாட்டு நம்பிக்கையால் மட்டுமே அந்த அளவு மாபெரும் மூடத்தனத்தை மனித மனத்தில் உருவாக்க முடியும். இயல்பாக அவனில் அது உருவாக வழியில்லை.
நான் உருவ வழிபாடு செய்வதில்லை. என் ஆசிரியர்களும் உருவ வழிபாட்டாளர்கள் அல்ல. ஆனால் அவர்கள் உருவ வழிபாட்டின் எதிர்ப்பாளர்களும் அல்ல. உருவவழிபாடு அவர்களுக்கு தேவையில்லை என உணர்ந்தார்கள், அவ்வளவுதான். உருவ வழிபாடு எவ்வாறு உருவானது எவ்வாறுசெயல்படுகிறது என்பதை அறிந்தவர்களாக இருந்தார்கள். ஆகவே அதன் இடத்தையும் பங்களிப்பையும் அங்கீகரித்தார்கள், மதித்தார்கள்.
இரு விஷயங்களை முதலில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். ஒன்று இந்துமதம் உருவவழிபாட்டை மட்டும் முன்வைக்கும் மதம் அல்ல. இந்துமரபின் ஒரு வழிமுறைதான் உருவவழிபாடு. இந்துமரபு மூன்று அடுக்குகள் கொண்டது என்று புரிந்துகொள்வது தெளிவை உருவாக்கும். முதல்தளத்தில் பழங்குடிப்பண்பாட்டில் வேருள்ள வழிபாட்டுமுறைகள் உள்ளன. செயல்தெய்வ வழிபாடுகள், குலதெய்வ வழிபாடுகள், மூத்தார் வழிபாடுகள், நீத்தார் வழிபாடுகள் என அதன் முகங்கள் பல. நாட்டார் பாடல்கள் இவற்றின் இலக்கியம். இறைவனை இவை அன்றாடவாழ்வுடன் நேரடி தொடர்புள்ள இருப்புநிலைகளாக உருவகம்செய்தன. உண்மையில் இதுவே பிற இரண்டுக்கும் விளைநிலம்.
இரண்டாம் தளத்தில் உள்ளது நிறுவன மதங்கள். மையத்தெய்வமும் ஒருங்கிணைவுள்ள வழிபாட்டுமுறையும் தத்துவக் கட்டுமானமும் கொண்டவை. முன்பு ஆறுமதங்களாக இருந்தவை இன்று சைவம் வைணவம் என இரு பெரும் மதங்களாக உள்ளன. புராணங்கள் இவற்றின் இலக்கியங்கள். மூலதத்துவநூல்களுக்கு தத்தம் மதநோக்கில் எழுதப்பட்ட உரைகள் இரண்டாம் கட்ட இலக்கியங்கள். இறைவனை இவை ஆக்கி அழித்து காக்கும் அனைத்துவல்லமை கொண்ட ஆளுமைகளாக உருவகித்தன.
மூன்றாம் தளத்தை தத்துவத்தளம் எனலாம். உபநிடதங்கள் முதலிய மூல தத்துவ நூல்கள் இவற்றின் இலக்கியங்கள். இறைவனை தூய தத்துவ உருவகமாகவே இவை பார்க்கின்றன. இன்றைய அறிவியல் பிரபஞ்சப்பெருவெளி [காஸ்மோஸ்] என்று சொல்லும் உருவகத்துக்கும் வேதாந்தத்தின் பிரம்மம் என்ற உருவகத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை.இன்றைய அறிவியல் ஊகங்களை விட இன்னும் பிரம்மாண்டமானதாக , அறியவோ விளக்கவோ வரையறை சொல்லவோ முடியாத ஒன்றாக, அது பெருவெளியை வகுக்கிறது. அந்தப்பெருவெளி ‘அங்கே’ இருப்பது அல்ல. ‘எங்கும்’ இருப்பது. அதுவே நான் உணரும் நிலையே முக்திநிலை என்கிறது வேதாந்தம்.
உயர்தத்துவத் தளம் கொண்ட இந்திய மதங்களான இந்து,பௌத்தம்,சமணம் ஆகியவை ஞானத்தை சாமானியம் விசேஷம் என இரண்டாகப் பகுத்துவிடுகின்றன. சாமானியம் என்பது நம் அன்றாடத்தளம் சார்ந்தது. அதாவது புழக்க உண்மை. விசேஷம் என்பது தூய கருத்தியல் உண்மை. நுண்ணுணர்வாலும் தர்க்கத்தாலும் அறியப்படுவது.
இந்து மரபின் மூன்று படிகளில் மூன்றாம் படியான வேதாந்தம் முழுக்கமுழுக்க விசேஷ தளத்தைச் சார்ந்தது. அது தூய தர்க்கமாகவும் தரிசனமாகவும் பிரபஞ்சத்தை அறிய முயல்கிறது. முதல்படியான பழங்குடிமரபு முழுக்க முழுக்க சாமானியதளத்தைச் சார்ந்தது. முழுக்கமுழுக்க அன்றாடச் செயல்பாடுகளாக அது பிரபஞ்சத்தை அறிய முயல்கிறது. இரண்டாம் படியான மதங்கள் இவ்விரு தளங்களையும் இணைக்கக்கூடியதாக உள்ளன.
சைவம், வைணவம் என்ற இரு பெருமதங்களை எடுத்துக்கொண்டோமென்றால் அவற்றில் ஏராளமான பழங்குடி வழிபாட்டுக்கூறுகள் இருப்பதைக் காணலாம். பல வழிபாட்டுமுறைகள் காலப்போக்கில் உருமாறியிருக்கும், சண்டீஸ்வரர் போல. பல வழிபாட்டுமுறைகள் அப்படியே நீடிக்கும், காலபைரவன் போல. இவற்றை சிவ-சக்தி என்ற மையத்தரிசனத்தில் அல்லது மையப்படிமத்தில் சைவம் தொகுக்கிறது. இதற்காக புராணங்களை அது உருவாக்கிக் கொள்கிறது. அதன்பின்னர் அந்த மையத்துக்கு தத்துவ அடிப்படை அமைக்க அது இந்து ஞானமரபின் தூய தத்துவத்தளத்தை எடுத்தாள்கிறது. சைவ சித்தாந்தம், விசிஷ்டாத்வைதம் போன்றவை இவ்வாறு உருவானவை. இவ்வாறு பெருமதங்கள் மூன்று முகம் கொண்டவையாக அமைகின்றன.
இந்து மரபின் முதல் அடுக்கான பழங்குடிப்பண்பாடு என்பது முழுக்க முழுக்க உருவ வழிபாடு சார்ந்தது. சொல்லப்போனால் உருவத்தை வழிபடுவதாகவே அது ஆரம்பித்தது. பழங்குடிமதங்களின் தோற்றம் குறித்த ஆய்வுகள் பழங்குடித் தெய்வங்கள் நான்கு வகைகளில் தோன்றுகின்றன என்று சொல்கின்றன. ஒன்று இறந்துபட்ட மூதாதையரை வழிபடுதல். அவர்கள் கனவுகளில் வருவதனால் அவர்கள் வேறெங்கோ இருப்பதாக பழங்குடி மனம் நினைக்கிறது. ஆகவே அவர்களை நுண்வழிவ இருப்புகளாக உருவகிக்கிறது. அவர்களை மகிழ்விக்கவும் அவர்களின் உதவிகளை நாடவும் அது வழிபாடுகளை நிகழ்த்துகிறது.
இரண்டாவதாக குல அடையாளங்களாக சில மிருகங்கள் மரங்கள் போன்றவற்றை பழங்குடிகள் கொண்டிருக்கிறார்கள். அவற்றை புனிதமானவையாக எண்ணுகிறார்கள். காலப்போக்கில் அவை தெய்வங்களாக ஆகின்றன. மூன்றாவதாக உயிருள்ள மூத்த தாய்தந்தையரை அவர்கள் தெய்வங்களாக எண்ணி வழிபட ஆரம்பிக்கிறார்கள். நான்காவதாக குறிப்பிட்ட சில செயல்களுக்கான வல்லமைகளை அளிப்பதற்காக அச்செயலுடன் தொடர்புடைய ஒன்றை தெய்வமாக வழிபடுகிறார்கள். விளைச்சலை அளிப்பதற்காக கலப்பையை வழிபடுவதைப்போல.
இந்த நான்கு நிலைகளிலும் முதலில் உருவம்தான் வழிபடப்படுகிறது, அதன் பின்னரே அந்த உருவம் ஒரு கருத்துருவாக மாற்றம் பெறுகிறது. அந்த உருவத்தின் இயல்புகள் மெல்ல மெல்ல திரட்டப்பட்டு ஒரு கருத்துருவமாக அவர்கள் அனைவராலும் உணரப்படுகின்றன. அந்த உருவம் அந்த கருத்துருவத்தின் அடையாளமாக ஆகிறது. அந்த உருவத்தைப்பார்த்தாலே அந்த கருத்துநிலைகள் மனதில் உருவாகின்றன. அதுவன்றி ஏற்கனவே மனதில் உருவான ஒரு கருத்துக்கு பருவடிவப் பிரதிநிதியாக உருவம் கற்பனைசெய்யப்படவில்லை. இதுவே மானுட மனத்தின் இயல்பான செயல்பாடு.
பெருமதங்களாக மாறியவை பழங்குடிப் பண்பாட்டில் உதித்த வழிபாட்டுமுறைகளே. அவை காலப்போக்கில் வளர்ந்து வேறுபல வழிபாட்டுமுறைகளை இணைத்துக்கொண்டு தத்துவ விளக்கம் பெற்று பெருமதங்களாகின்றன. அதாவது ஒரு கருத்துருவமாக மாறிய உருவமே அதன் மையம். ஆனால் அக்கருத்துருவம் வலிமையாக நிலைநாட்டப்பட்ட பின்னர் அதை விளக்கும்பொருட்டும் வேறு பலவற்றுடன் இணைக்கும் பொருட்டும் அதில் இருந்து புதிய உருவங்கள் ஏராளமாக உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக சைவம் உருவாவதற்கு முன்னரே சிவலிங்கம் உருவாகி விட்டது. சிவநடனம் என்ற கருத்துருவில் இருந்தே நடராஜர் உருவம் பெற்றார்.
ஆகவே உருவ வழிபாடு இந்து மரபின் இரு அடுக்குகளில் மிக முக்கியமானதாக உள்ளது. சைவ வைணவ மதங்களில் உருவ வழிபாடுதான் அடிப்படை. ஆனால் அவற்றின் தத்துவத்தளம் நோக்கி நகரும் தோறும் நாம் உருவ வழிபாட்டை விட்டு வெளியே செல்ல அவற்றில் வழி உள்ளது. மிகச்சிறந்த உதாரணம் காந்திதான். அவர் ஒரு வைணவர், ஆனால் உருவ வழிபாடு செய்தவர் அல்ல.
ஒரு சைவசித்தாந்தி சிவன் என்ற உருவை வழிபட்டுத்தான் ஆகவேண்டியதில்லை. பிரபஞ்ச பேரியக்கமான சிவசக்தி நடனத்தை அவர் மலத்தைச் சுற்றி பறக்கும் ஈக்களிலும் காண முடியும். உங்களால் அப்படி காண முடியுமென்றால், அந்த இடத்துக்கு கற்றும் உணர்ந்தும் செல்லும் சிந்தனையாற்றல் உங்களிடம் இருக்கும் என்றால் தாராளமாக சிவலிங்கங்களை காகிதஎடையாக பயன்படுத்தலாம். எந்த பிழையும் இல்லை.
மதங்களுக்கு அடுத்த அடுக்கு என்பது வேதாந்தம். வேதாந்திக்குரிய மூல வாக்கியங்கள் அனைத்துமே உருவ வழிபாட்டுக்கு எதிரானவை. ‘இவையனைத்திலும் இறை உறைகிறது’ [ஈஸோவாஸ்யம் இதம் சர்வம்] என்றும் ‘தன்னுணர்வே இறை’ [பிரக்ஞானம் பிரம்மாஸ்மி] என்றும் ‘அது நீதான்’ [தத்வ மசி] என்றும் ‘அகம் பிரம்மாஸ்மி’ [நானே கடவுள்] என்றும் அவன் உணர்கிறான். அந்த உணர்வே அவனாக ஆகும்போது அவன் விடுதலை பெறுகிறான்.
உருவங்கள் சாமானியதளத்தைச் சேர்ந்தவை. அதாவது அவை நம்மில் இருந்து நாம் பிரபஞ்சத்தை பார்க்கையில் உருவாகி வரக்கூடியவை. விக்ரஹம் என்றான் வி+கிரகம் என்று பிரித்து நித்ய சைதன்ய யதி பொருள்கொள்கிறார். கிரகிப்பதற்கும் கிரகித்ததைச் சொல்வதற்குமான வழி அது. என்னுடைய அறிதலை பிறருக்குச் சொல்லி பொதுவான அறிவாக ஆக்குவதற்கான வழிமுறைதான் அது.
ஏன் அது தேவைப்படுகிறது என்றால் நம் உடல் பருவடிவம்கொண்டது என்பதனால்தான். நமக்கு உருவம் இருப்பதனால்தான் நாம் கடவுளுக்கும் ஓர் உருவத்தை அமைத்துக்கொள்கிறோம். அது ’நம்’ கடவுள். ஒரு வைணவரிடம் எறும்புக்கு பரந்தாமன் எப்படி தோற்றமளிப்பார் என்று கேட்டால் ஒளிவடிவான ஒர் எறும்பு வடிவில் என அவர் சொல்லக்கூடும்.
நாம் உடலில் இருக்கிறோம். உருவில் இருக்கிறோம். நம் உடலால் நம் புலன்களால் நாம் இந்த புற உலகை பருவடிவாக, உருவங்களின் பெருவெளியாக அறிந்துகொண்டிருக்கிறோம். அந்த உருவங்களே நம்முடைய அகத்தை கட்டமைக்கின்றன.எல்லா கருத்துருவங்களும் உருவங்களாக ஆகின்றன. கருத்துக்களைச் சுமந்த உருவங்களையே நாம் படிமங்கள் என்கிறோம். நம்முள் மனம் என்பது முடிவில்லாத படிமவெளியாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லா கவிஞர்களும் எல்லா கலைஞர்களும் படிமங்களையே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அறிவியல் அதற்கான படிமங்களை உருவாக்குகிறது. சொல்லப்போனால் சிந்தனை என்பதே படிம உருவாக்கம்தான்.
ஆகவேதான் மதங்களும் பிறஅமைப்புகளும் அடிப்படையான தரிசனங்களை பொதுவான படிமங்களாக ஆக்குகின்றன . சிவலிங்கமும், சிலுவையும், சுத்தியல்அரிவாளும், கைராட்டையும் எல்லாம் மிகவிரிவான கருத்துருவங்களைச் சுட்டியபடி கண்முன் நிற்கும் பருவடிவங்கள் மட்டுமே. அந்த உருவங்கள் வழியாக நம் ஆழ்மனத்துக்குள் அக்கருத்துருவம் சென்று சேர்கிறது. படிமங்களின் தனித்தன்மையே அதுதான். அவை நம் தர்க்கமனத்துடன் உரையாடுவதில்லை. நம் ஆழ்மனத்தில் அவை நம்மையறியாமலேயே சென்று தொட்டு அங்கே அலைகளாக ஆகின்றன.
ஒரு கருத்துருவம் தர்க்கபூர்வமாக முன்வைக்கப்பட்டால் அதை அந்த தருக்கத்தை அறிந்த ஒருவர் மட்டுமே உள்வாங்க முடியும். ஒரு படிமம் அதை அந்தப் பண்பாட்டில் இருக்கும் ஒருவருக்குள் இயல்பாகக் கொண்டுசென்று சேர்த்துவிடும். சைவசித்தாந்தத்தின் விரிவான தர்க்கமுறையை விட ஒரு அழகிய நடராஜர் சிலை அந்த தரிசனத்தை சைவனின் அகத்தில் நிறுவிவிடும். ஆகவேதான் உருவ வழிபாடு தேவையாக ஆகிறது. சிவலிங்கத்தை உங்களுக்குக் கொடுத்த உங்கள் தந்தை உங்களுக்கு பல நூற்றாண்டு வரலாறு கொண்ட ஒரு கருத்துருவைத்தான் அளித்திருக்கிறார். அந்தக்கருத்துருவை உள்வாங்கி வளர்த்துக்கொள்ளும் ஒரு முறையையும் அளித்திருக்கிறார்.
சென்ற காலங்களில் பழங்குடி மரபு என்பதை மேலோட்டமாக அணுகி தூக்கி வீசும் ஒரு மனநிலை சிந்தனையாளார்களிடம் இருந்தது. பழங்குடி மரபு என்பது நவீனச்சிந்தனைகளுக்கு எதிர்நிலை என்று கொள்ளப்பட்டது. காட்டுமிராண்டித்தனம் என்ற சொல்லாட்சி அந்த மனநிலையின் விளைவு. இந்த மனநிலையை அதிகமும் ஐரோப்பிய கிறித்தவச் சிந்தனையாளர்களிடம் காண்கிறோம். உலகம் முழுக்க பழங்குடிகளை கிறித்தவம் வேட்டையாடி அழித்தமைக்கு இந்த மனநிலையே காரணம்.
ஒருவர் கிறித்தவராக ஆகும்போது அவரது பழங்குடிப் பிரக்ஞைக்கு எதிராக ஆகிறார். அதை மறக்க முனைகிறார். அதன்பொருட்டு அதன் மேல் வெறுப்பை உருவாக்கிக் கொள்கிறார். தான் அதை விட மேம்பட்டவர் என்று எண்ணிக்கொள்கிறார். ஆனால் உண்மையில் செமிட்டிக் பழங்குடி மரபின் நீட்சியான கிறித்தவத்தை அவர் ஏற்றுக்கொள்கிறார். அவர் அதன் பின் பேசுவதெல்லாமே யூதப்பழங்குடிகளின் குலக்கதைகளையும் படிமங்களையும்தான்.
கிறித்தவத்தை அதி தீவிரமாக எதிர்த்த ஐரோப்பிய நாத்திகவாதச் சிந்தனைகள் பழங்குடிமரபுகளைப்பற்றிய கிறித்தவத்தின் கொள்கைகளை தாங்களும் ஏற்றுக்கொண்டன. நாகரீகம் என்பது பழங்குடிப்பண்பாட்டுக்கு எதிரானது என்று நம்பின. கிறித்தவத்தையும் அந்த பழங்குடி நம்பிக்கைகளில் ஒன்றாக அவை வரையறை செய்தன. அந்த நாத்திகப்பின்புலத்தில் இருந்து உதித்த மார்க்ஸியமும் அந்த நம்பிக்கையையே கொண்டிருக்கிறது. சோவியத் கம்யூனிசம் பழங்குடிகளை மிருகத்தனமான அடக்குமுறைகள் மூலம் ‘நாகரீக’ப்படுத்தியது. பழங்குடிப் பண்பாட்டை அவர்கள் நெஞ்சில் இருந்து அகழ்ந்தெடுக்க அது முயன்றது.
காட்டுமிராண்டித்தனம் என்ற ஒற்றைச்சொல் வழியாக நீங்கள் கூறும் விமரிசனம் இந்த வரலாற்றுப்பின்புலம் உள்ளது. ஐரோப்பிய சிந்தனையில் எப்போது சி.ஜி.யுங் நனவிலி குறித்தும் கூட்டுநனவிலி குறித்தும் எழுத ஆரம்பித்தாரோ அப்போதே இந்த வகையான வாதங்கள் பொருளிழந்து போக ஆரம்பித்தன. பழங்குடி மனம் என்பது எந்த ஒரு நவீன மனிதனின் ஆழத்திலும் உறையக்கூடிய ஒன்று. பண்பாடுகள் அனைத்துமே தொன்மையான பழங்குடிவாழ்க்கையில் இருந்து வளார்ச்சிபெற்றவை. மனிதமனத்தையும் பண்பாட்டையும் கட்டமைத்துள்ள ஆழ்படிமங்கள் [ஆர்க்கிடைப்புகள்] பழங்குடி வாழ்க்கையில் இருந்து முளைத்தவை.
நாம் மதங்களில் காணும் உருவங்களும் சடங்குகளும் பழங்குடி வாழ்க்கையில் இருந்து இந்தக் காலம் வரை வந்த ஆழ்படிமங்கள்தான். ஆகவே கண்டிப்பாக சிவலிங்கம் நம் ’காட்டுமிராண்டி’க்கால வாழ்க்கையின் நீட்சிதான். ஆனால் அந்தக் காட்டுமிராண்டிக்காலமே நம்முடைய அனைத்துச் சிந்தனைகளையும் அனைத்துக்கற்பனைகளையும் தீர்மானிக்கிறது. அந்தக் காட்டுமிராண்டிக்காலத்தின் ஆழ்படிமங்கள்தான் நம் பண்பாட்டின் கட்டுமானப்பொருட்கள்.
பக்தி என்பது என்ன? அந்தப் படிமத்தை நம் அகத்தில் மேலும் மேலும் வளரவிடுவதே. பிரபஞ்ச ஆற்றலை சின்னக் கண்ணனாக உருவகித்துக்கொண்டு பாலூட்டி சோறூட்டி தொட்டிலில் ஆட்டி மடியிலிட்டுக் கொஞ்சி கண்கசியும் ஒரு பக்தன் அந்த படிமத்தை பேருருவம் கொள்ளச் செய்கிறான். அவனுக்கு மட்டும் அனைத்து அர்த்தங்களையும் அளிக்கும் ஒரு படிமப்பெருவெளி உருவாகிவிடுகிறது. அதனூடாக அவன் அறியும் தரிசனங்களும் ஞானங்களும் பிரம்மாண்டமானவை. அதற்கு வெளியே நின்று கொண்டு அதை நாம் விமர்சிக்க முடியாது.
ஆனால் அந்த வகையில் நெகிழ்ந்து உருகி ஒரு படிமத்தை விதையாகக் கொண்டு ஒரு படிமப்பெருவெளியை உருவாக்கிக் கொள்ள முடியாத ஒருவருக்கு அந்த வழி பயன்படாது. அவருக்கு உரியது தர்க்கமே. ஆனால் வேதாந்தம் அறிந்து முன்வைக்கும் அதே மையத்தை நோக்கியே பக்தி வழியாகவும் வந்துகொண்டிருக்கிறார்கள் என்ற தெளிவு அவருக்கு இருக்க வேண்டும். ஆகவே வேதாந்தி ஒருபோதும் ஒரு உருவ வழிபாட்டாளனை நிராகரிக்க மாட்டான்.
பக்தியும் உருவவழிபாடுமே எளிமையான வழிகள் என்று மீண்டும் மீண்டும் இந்து மரபில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு மாபெரும் கட்டுரை உணர்த்தாத உண்மையை ஒரு நல்ல கவிதை உணர்த்திவிடுமல்லவா அதைப்போல. கட்டுரை தர்க்கம் வழியாக படிகளில் ஏறி மேலே வரும்போது கவிதை படிமம் வழியாக பறந்து அங்கே சென்று விடுகிறது. நம் ஆழ்மனம் நம்முடைய பண்பாட்டில் ஊறி உருவான ஒன்று. படிமங்கள் முளைப்பதற்கான ஈர நிலம் நம்முள் ஏற்கனவே உள்ளது.
ஆனால் நாம் இன்று மேலைச் சிந்தனையின் தர்க்கங்களால் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். மெல்லமெல்ல நம்முடைய உள்ளுணர்வை விட தர்க்கம் அதிக அழுத்தம் கொண்டதாக ஆகிவிட்டிருக்கிறது. ஆகவே நமக்கு இன்று உருவ வழிபாடுமீது மனத்தடை உள்ளது. அந்த மனத்தடையை வெல்ல முடிந்தவர்களுக்கு, அதில் உண்மையாக உள்ளம் தோய முடிபவர்களுக்கு கண்டிப்பாக அதுவே மிகச்சிறந்த வழியாகும்.
இந்து மரபில் இந்த இருபாதைகளும் முறையே சகுணபிரம்ம உபாசனை என்றும் நிர்க்குணபிரம்ம உபாசனை என்றும் சொல்லப்பட்டிருக்கின்றன. இரண்டுமே பிரம்மம்தான். ஒன்று உருவம் உடையது. இன்னொன்று உருவம் அற்றது. ஒன்று சாமானிய தளத்தைச் சேர்ந்தது இன்னொன்று விசேஷ தளத்தைச் சேர்ந்தது. ஒன்று நம்மில் இருந்து அதை பார்ப்பது, இன்னொன்று அதை மட்டும் பார்க்க முயல்வது. இரண்டுமே நம்முடைய உருவகங்கள் மட்டுமே. . ஒன்றுக்கு கற்பனை ஆயுதம் பிறிதுக்கு தர்க்கமே ஆயுதம். நம்முடைய ஆளுமை எப்படி கோருகிறதோ அப்படி நாம் உருவகித்துக்கொள்பவை.
அந்தப்படிமங்களின் ஊடாக நாம் கடைசியில் அறியும் அது ஒர் அக அனுபவம். அதை அறிந்தவன் அதுவாக ஆகிறான். அவனால் அதை பிறருக்குச் சொல்லிப்புரியவைக்க முடியாது. ஆகவே எப்போதும் அது சொல்லப்படமுடியாதது [அநிர்வசனீயம்] என்றே சொல்லப்படுகிறது.
இரண்டு வழிகளுக்குமே இந்துமரபில் இணையான இடம்தான். ஒன்றுமேல் இன்னொன்று கீழ் அல்ல. ‘உருவாய் அருவாய் உளதாய் இலதாய்’ என எல்லா நிலைகளிலும் இருப்பது இறையே என்பதே இந்து மரபின் புரிதலாகும்.
ஜெ
மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Aug 7, 2010