மதம்

1

 

அப்பாவுக்கு சின்னவயதிலேயே ஒழுங்கு என்பது மண்டைக்குள் நுழைந்துவிட்டது. பிரிட்டிஷ்காரர்கள் அவர்களின் ராணுவமனநிலைகொண்ட பள்ளிகள் வழியாக அளித்த ஒழுங்கு அல்ல. அதற்கு முன்னரே நம்முடைய மரபில் இருந்து உருவாகி வந்த ஒழுங்கு. இங்கே அதற்கு ஆசாரம் என்று பெயர். அப்பா உயிர்வாழ்ந்த காலம் முழுக்க காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்துவிடுவார். அவரது சின்னவயதில் திருவட்டார் கோயிலுக்கு அருகே வாழ்ந்தமையால் அது எளிதாக இருந்திருக்கும், அர்த்தமும் இருந்திருக்கும். கோயிலில் பிரம்ம முகூர்த்ததிலேயே மணி ஒலிக்கும். நிர்மால்ய பூஜை கும்பிடுவதற்காக ஆட்கள் வர ஆரம்பிப்பார்கள். அப்பா இளமைப்பருவத்தில் தினமும் வள்ளியாற்றில் குளித்து ஆதிகேசவப்பெருமாளின் உஷத்பூஜை கும்பிட்டிருக்கிறார்.

திருவரம்பில் காலையில் எழுந்து கொட்டக்கொட்ட விழித்திருப்பதற்கு பொருளே இல்லை. ஆனால் உடலும் மனமும் பழகிவிட்டது. கோழிக்கு முன்னரே எழுந்து வெளியே சென்று சிறுநீர் கழித்துவிட்டு விரிவாக வாய் கொப்பளிப்பார். அந்த ஒலியிலேயே அம்மா எழுந்துவிடுவாள். அப்பா சாவகாசமாக அமர்ந்து வெற்றிலை போடுவார். அது முறுகி வருவதற்குள் சூடான கட்டன் காப்பி வரும்.

காபி குடித்துவிட்டு ஆற்றுக்கு கிளம்புவார். தோளில் ஈரிழைத்துவர்த்து. இடுப்பில் ஒரு பாலராமபுரம் ஒற்றைவேட்டி. உப்பு, சுக்கு, சீனாப்படிகாரம் சேர்த்து நன்றாக பொடித்த உமிக்கரிதான் பல்பொடி . அதைபூவரச இலையில் மடித்து எடுத்துக்கொள்வார். கைதோநி இலைச்சாறும் நல்லமிளகாயும் போட்டு சுண்டக்காய்ச்சிய தேங்காயெண்ணையை தலையில் பொத்தி தேய்த்து மயிரடர்ந்த மார்பெங்கும் நீவி இலையில் எடுத்த லைபாய் சோப்புடன் மெதுவாக நடந்துசெல்வார்.

தோட்டம் வழியாக ஆற்றுக்குச் செல்லும்வழியில் அவருக்கான சில பிரத்யேக நண்பர்கள் உண்டு. சரியாக அந்நேரத்தில் இடப்பக்கம் கோயில் நந்தவனத்தில் இருந்து வலப்பக்கம் அச்சு தோட்டத்துக்குச் செல்லும் எட்டடி நீளமுள்ள கிழட்டு சாரைப்பாம்பு அதில் முக்கியமானது. அதற்கப்பால் போட்டுப்பலாவின் பொந்தில் இருக்கும் ஒரு காட்டுப்பூனை அப்பாவைப்பார்த்து ங்கியாவ் என்று கிளம்பிச் செல்லும். அப்பா ஆற்றில் இறங்கும்போதுதான் இரவுமீன்கள் மெல்ல சேற்றுப்படுகைகளுக்குள் செல்லும். யாருக்கும் காலம் அணுவளவும் தவறுவதில்லை.

திரும்பிவருவது கோயில் நந்தவனம் வழியாக. அப்பாவின் நண்பரான நாராயணன் போற்றி உஷத்பூஜையை வழக்கமாக சுள்ளென்ற வெயில் அடிக்க ஆரம்பித்தபின்னரே செய்வார். அவருக்கு வீட்டில் இருபது பசுக்கள். அவற்றுக்கு உரிய சேவைகளைச் செய்துமுடிக்க நேரமாகும். சிவன் காத்திருக்க வேண்டியதுதான். அப்பா கோயிலின் முற்றத்தில் நின்று மூடியகதவின் மீது செதுக்கப்பட்ட சிவலிங்கத்தை வணங்கி சுவர் விளிம்பில் உள்ள விபூதி எடுத்து தீற்றிவிட்டு வந்து மீண்டும் அமர்ந்து அடுத்த தரம் வெற்றிலை போடுவார்.

வெளுக்கும்நேரம் வரை பழைய சுவடிகள் ஏடுகள் என எதையாவது படித்துக்கொண்டிருப்பார். கண்களில் இரு சுடர்களாக மண்ணெண்ணை விளக்கு தெரியும். விடியும்வேளையில் நானும் அண்ணாவும் எழுந்து ஆளுக்கொரு வேலையாக ஆரம்பிப்போம். அண்ணா நாலைந்துகிலோமீட்டர் நடந்து சென்று வயல்களை ஒரு சுற்று பார்த்து வருவார். நான் பசுக்களை அவிழ்த்து கட்டி, சாணி அள்ளி ,அவற்றை குளிப்பாட்டி, நீர் காட்டி நிறுத்துவேன். அப்பா தொழுவருகே வந்து அமர்ந்து பசுக்களை கொஞ்சுவார்.

ஒன்பதுமணிக்கு காலை உணவு. பெரும்பாலும் புட்டுதான். மூங்கிலில் கயிறு சுற்றி உருவாக்கப்பட்டது குழாய். உலோகக்குழாய் என்றால் ஓரம் உலர்ந்து புட்டின் சுவை கெட்டுவிடும். புட்டுக்கு என்றே சிலவகை அரிசிவகைகள் உண்டு. சூடான புட்டு அப்பா முன் வாழையிலையில் பிறந்து வெளியே வரவேண்டும். பிசைந்து உண்ண பயிறுச்சுண்டல், பப்படம். கடைசிப் பகுதிக்கு மட்டும் வாழைப்பழம். பித்தளை வங்கா நிறைய பசும்பால் விட்ட டீ. அதன்பின் மீண்டும் வெற்றிலை. பிறகு முகக்கண்ணாடியை களமுற்றத்தில் ஸ்டூலில் நிறுத்தி இன்னொரு ஸ்டூலில் அமர்ந்து கொண்டு பளபளக்கும் ஜெர்மானிய சவரக்கத்தியை கண்ணாடிக்கல்லில் பலமுறை கிச் கிச் என சிட்டுக்குருவி குரல்போல உரசி குனிந்து சவரம் செய்துகொள்வார். அப்பா அந்த கத்தியை பதினெட்டு வயதில் மூன்று ரூபாய்க்கு வாங்கினார். அதன் பின் சவரம்செய்யாத நாளே இல்லை. பின்னர் மீண்டும் ஒரு குளியல். இம்முறை வீட்டிலேயே கிணற்றடியில்.

அப்பா அலுவலகம்போவது காலை பத்தரை மணிக்கு. அதற்கு முன் சரியாக பத்து மணிக்கு கடிகாரத்துக்கு சாவி கொடுபபர். வீட்டின் காலத்தையே சரியாக அவர்தான் முடுக்கிவிடுகிறார் என்று தோன்றும். நாற்காலியை இழுத்து போட்டு ஏறி கண்ணாடிமூடியை திறந்து சாவியை எடுத்து பதனமாக திருகி முள்ளை சரிசெய்து பெண்டுலத்தை ஆட்டி விடுவார். தலைவழியாகப் போடும் சட்டை. ஜிட்டை என்று சொல்லவேண்டும், ஒரு ஜிப்பா சட்டை கலப்பு. அதற்கு தனியாக எடுக்கக்கூடிய பொன்னாலான பித்தான்கள். அவை ஒரு சிறு வெள்ளிக்கிண்ணத்தில் இருக்கும். தினமும் துடைத்து போட்டுக்கொள்வார். பேனா, பர்ஸ், கைக்குட்டை, மூக்குக் கண்ணாடி எல்லாமே அதனதன் இடத்தில் இருக்கும். அப்பாவின் அறை பயமுறுத்துமளவுக்கு சுத்தம். தினமும் எல்லா பொருட்களையும் துடைகக்வேண்டும். ஜன்னல்கம்பிகளைக்கூட. பத்தரை மணிக்கு அப்பா கோயில்முன் கும்பிட்டு விடைபெற்று ஆற்றில் இறங்கிச் செல்வார்.

அப்பாவின் நேரக்கணக்கு பிந்தவேண்டுமென்றால் கோபாலன் ஆற்றில் குளிப்பாட்டப்பட்டுக்கொண்டிருக்கவேண்டும். ஆற்று நீர் கோபாலனை ஓட்டம் நடுவே வந்த பாறை போல எண்ணி பவ்யமாக வளைந்து செல்லும். நீருக்குள் நெளியும் துதிக்கை ஆங்காங்கு வெளிக்கிளம்பி நீர்த்துளிகளுடன் பீரிட்டு மூச்சுவிடும். ராமன்நாயர் அப்பாவை பணிவாக வரவேற்பார். வெள்ளாரங்கல்லை வாங்கி அப்பா காதுகளைக் கொஞ்சம் தேய்த்துவிடுவார். கொம்புகளில் தட்டி ‘எந்தடா?’ என்று கொஞ்சுவார். ராமன்நாயர் அப்பாவை மேலும் பணிவாக கிளப்பிவிடவில்லை என்றால் அவர் அலுவலகம்போய்ச்சேர மதியமாகும்.

கோபாலனுக்கு அவன் ஒரு யானை என்ற தகவலே தெரியாதென்பது ஊரில் பரவலான பேச்சு. ஏழுமாத கைக்குழந்தையாக ஊருக்கு வந்தவன். அதன்பின் எப்போதும் மனிதர்கள்தான் சுற்றும். எப்போதாவது வேறு யானையைப்பார்த்தால் ‘என்ன இப்படி பெரிதாக இருக்கிறது?’ என்ற வியப்பு அவனில் தெரியும். மனிதர்கள் யாராவது அருகே இல்லாமல் இருக்கமுடியாது. தனிமைப்பயம். ராமன்நாயர் அவசரமாக எங்காவது போகவேண்டும் என்றால் யாரையாவது காவலுக்கு வைத்துவிட்டுச் செல்லவேண்டும். ஒருவயதுக்குழந்தைகூட போதும்.

மதமிளகும்போதுதான் கோபாலன் ஒரு யானை என்பது அவனுக்கும் மற்றவர்களுக்கும் நினைவுக்கு வரும். மதம் வழிய ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு மணம் வரும். ‘அச்சு அசல் மத்த மணமாக்கும்… கண்டுபிடிச்சிரலாம்.’ என்றார் ராமன்நாயர். உடனே கொண்டுபோய் கரும்பனையடியில் கட்டிபோடவேண்டும். ’மதயானைக்கு ஏழு பூட்டு’ என்று சாஸ்திரம். நான்கு கால்கள் கழுத்து வயிறு பின்பக்கம் என கனத்த சங்கிலிகள் கட்டப்பட்டிருக்கும். அப்போது கோபாலனின் உடலுக்குள் கரும் தோலுக்குள் வேறு யானை வந்து குடியேறிவிட்டதுபோலிருக்கும். ஆட்டம், தும்பிக்கை, நெளிவு, காதசைவு எல்லாமே முற்றிலும் வேறு போலிருக்கும். மனித அசைவைக் கண்டால் செவி நிற்கும். கொம்புகளை குலுக்கியபடி கிணற்றுக்குள் தகரப்பானை உரசுவதுபோன்ற ஒலியில் உறுமுவான்.

அக்கரை வைத்தியர் வந்து நவமூலி மருந்து காய்ச்சி சோற்றில் பனைவெல்லம் போட்டு பிசைந்து உருட்டி கமுகுப்பாளையில் வைத்து தூரத்தில் இருந்து நீக்கி வைத்துக் கொடுப்பார்கள். மதயானை நாள்கணக்கில் இரையெடுப்பதில்லை. உருளை எடுத்தது என்றால் மெல்ல மதமிறங்கப்போகிறதென்று பொருள். நள்ளிரவின் அமைதியில் அதனுள் முளைத்த அந்த காட்டுயானை பெருங்குரலெடுத்து பிளிறுவதைக் கேட்கையில் மயிர் சிலிர்க்கும். வெகுதொலைவுக்கு அப்பால் திற்பரப்பு கோயிலின் கரையில் கட்டப்பட்டிருக்கும் பார்க்கவிக்குட்டி அதைக்கேட்டு திரும்ப பிளிறுவாள்.

அதிகபட்சம் நாற்பது நாள். மதமிறங்கியதும் செம்மண் குன்றாக முதுகில் புல்முளைத்து நிற்கும் கோபாலனை நேராக ஆற்றுக்குள் கொண்டுபோய் படுக்க வைப்பார்கள். ஊறவைத்து ஊறவைத்து கழுவக் கழுவ செம்மண் கரைந்துகொண்டே இருக்கும். திருவட்டார் மடப்பள்ளி உருளியை கவிழ்த்தது போல கன்னங்கரேலென ஆனதும் கூட்டி வந்தால் நேராக எங்கள் வீட்டுமுன் நின்று தலையை தலையை ஆட்டி முன்னங்காலை தூக்கி தூக்கி வைத்து கருப்பட்டியும் தேங்காயும் எதிர்பார்ப்பான். அப்பா அவரே ஊட்டி விடுவார். முழு பலாப்பழத்தைக் கொடுத்தால் சுளைசுளையாக பிடுங்கி சாப்பிட்டு பின்பே மடலைச் சாப்பிடும் ருசிபேதம். சாப்பிடும்போது கரிய உடலெங்கும் ஏரிநீரில் காற்று செல்வது போல அலையலைலாக பரவும் பரவசம்.

அப்பாவுக்கு கோபாலன் பாலிய நண்பன். ஊருக்கு கோபாலன் வரும்போது அவருக்கு பத்து வயது. கோபாலனுக்கு முதலில் மூக்குப்பொடி போட கற்றுக்கொடுத்தது அப்பாதான். அதன்பின் யாரிடம் பொடி வாசனை வந்தாலும் கோபாலன் துதிக்கை நீட்டி சிமிட்டா வாங்கிக்கொள்வான். அப்பாவும் நல்ல குண்டுதான், ஆனால் மாநிறம். யானையும் அப்பாவும் வந்தால் ‘ரெண்டுபேரும் எங்க போறீங்க?’ என்று அச்சு ஆசான் கேட்பதுண்டு.

அப்பா மாலை ஆறுமணிக்கு வீட்டுக்கு திரும்பி வருவார். நாய் அவருக்காக ஆற்றங்கரையில் காத்துகிடக்கும். அதனுடன் செல்லமாகப் பேசியபடியே வரும்போது கோயில் திறந்திருக்கும். கோயிலுக்குள் சென்று ஆளில்லாத கோயிலில் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் மலர் ஆராதனைசெய்யும் போற்றியிடம் சில நகைமுகமன் சொல்வார். கருவறையில் நின்று போற்றி அற்புதமான சொற்களால் பதிலுரைப்பார். போற்றி அவரது தூயமலையாளத்தில் சொல்லும் அசல் சிவாஷ்டகம் எப்படி இருக்கும் என அப்பா செவித்தூரத்தில் பெண்கள் இல்லை என்றால் சொல்லிக் காட்டுவார்

வீட்டுக்கு வந்து பித்தான் பேனா பர்ஸ் என முறையே எடுத்து அதனதன் இடங்களில் வைத்துவிட்டு சட்டையை தலைவழியாகக் கழட்டிவிட்டு சாய்வுநாற்காலியில் அமர்ந்து வெற்றிலை போடுவார். அந்த ஒலியில் சூடான டீ வரும். துண்டு எடுத்துக்கொண்டு ஆற்றுக்குப்போய் குளித்து வர எட்டரை. இரவுணவுக்குக் கஞ்சி. தொட்டுக்கொள்ள ஊறவைத்த மாங்காய் , நார்த்தங்காய் ஊறுகாய், காய்ச்சில்கிழங்கு மசியல், பொரித்த பப்படம், மரவள்ளிக்கிழங்கு வறுவல், பொரித்த மீன் என ஏழெட்டு இருக்கும். மீண்டும் வெற்றிலைபோட்டு அமரும்போது ஒன்பதரை மணி. போற்றி கோயில் நடை சாத்திவிட்டு வருவார். இருவரும் இரவு வெகுநேரம் பேசி சிரித்துக்கொண்டிருப்பார்கள்.

ஆகவேதான் ஏழரை மணிக்கும் அப்பா வீடு திரும்பாதபோது அம்மா பதற்றமடைந்தாள். போற்றி வந்து ‘வருவான்… எங்க போறான்’ என்றார். ஒன்பது மணிக்கு அவருக்கும் பதற்றம் ஏற்பட்டது. பத்துமணிக்கு வீட்டில் நல்ல கூட்டம். ஒரு குழு கிளம்பி அலுவலகம்சென்றுவிட்டு அப்பா அன்று அலுவலகம் வரவே இல்லை , எந்த தகவலும் இல்லை என்று வந்து சொன்னது. விடிகையில் நாலைந்து குழுக்கள் திருவட்டாறு திற்பரப்பு என கிளம்பிச் சென்றன. அன்று முழுக்க தகவல் இல்லை. மாலை அம்மா படுத்து விட்டாள். அன்றிரவு இன்னும் விரிவாக தேட ஆரம்பித்தார்கள். அம்மாவிடம் ஏதாவது சண்டையா என்றார்கள். கடனா, வேறேதும் பிரச்சினையா என்றார்கள். ஒன்றுமே இல்லை. எல்லாமே வழக்கம்போலத்தான்.

மறுநாள் மதியம் அப்பா இருக்குமிடம் தெரிந்தது. கூட்டாலுமூடு பகவதிகோயில் அருகே ஒரு வீட்டில் இருந்தார். ’யாரும் போய் ஏதும் கேட்கவேண்டாம், அங்கே இருந்தும் போனான் என்றால் பிறகு கண்டுபிடிக்க கஷ்டம்’ என்று போற்றி சொன்னார். அவர் என்னையும் கூட்டிக்கொண்டு அப்பாவைப்பார்க்கச் சென்றார். ஒரு சிறிய ஓடைக்கரையில் பாழடைந்த பழைய வீடு. சுவர்களில் காரை முற்றிலுமாக பெயர்ந்து விழுந்திருந்தது. கதவே கிடையாது. ஓலைக்கூரை மட்கி கரிய கந்தலாக காற்றில் பிய்ந்து பறந்தது. அருகே நின்ற புளியமரத்தின் சருகுகள் கூரைமேல் குவிந்து கிடந்தன. அப்பாவின் தூரத்துச் சொந்தமான ஒரு கிழவர் மட்டும்தான் அங்கே இருந்தார். அவருக்கு வயது எண்பதுக்கும் மேல். கோயிலில் இருந்து அவருக்கு மானியமாக ஒருபட்டை சோறு கிடைக்கும். அப்பா மாதம் பத்து ரூபாய் அனுப்பி வைப்பார். அதுதான் அவரது வாழ்க்கைக்கு ஆதாரம்.

வீட்டுக்கு முன் அப்பா இருப்பது தொலைவிலேயே தெரிந்தது. வீட்டு முற்றத்திலேயே கிழவர் மலம்கழித்து அவை பல பதங்களில் காய்ந்து கிடந்தன. நெருங்க நெருங்க நாற்றம் ஓங்கி வந்தது. அப்பா சவரம்செய்யாமல் மெல்லிய வெள்ளை நுரை போல தாடியுடன் வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தார். தூரத்திலேயே போற்றி நின்றுவிட்டார். ‘அவனுடைய இருப்பைப் பார்த்தாயா? இது மூதேவி அடித்ததுதான். கண்டிப்பாக மூதேவி வேலைதான். இப்போது அருகே போய் பேசுவதில் பயன் இல்லை. என்ன ஏது என்று விசாரிப்போம்’ என்றார்.

அப்பா வந்தது முதல் குளிப்பதோ வெளியே போவதோ இல்லை என்றார்கள். தனிமையும் நோயுமாக மனம் கசந்து இருண்ட கிழவர் இடைவெளியில்லாமல் இருமி துப்பி கெட்டவார்த்தையாக கொட்டிக்கொண்டிருந்தார். அப்பா எதையுமே பொருட்படுத்தாமல் அந்த திண்ணையிலேயே நாள்முழுக்க அமர்ந்திருந்தார். அவர் வந்ததைக் கண்டதனால் கோயிலில் இருந்து இரண்டு பட்டைச்சாதம் அனுப்பினார்கள். அதை மட்டும் சாப்பிட்டுவிட்டு அப்படியே அமர்ந்திருக்கிறார் என்றார்கள். அவரைப்பார்க்க என் மனம் அவர் என் அப்பா இல்லை என்றே சொல்லிக்கொண்டிருந்தது. கோயிலருகே ஒரு போற்றிவீட்டில் தங்கினோம்.

மறுநாள் காலை போற்றி அப்பாவை சென்று பார்த்தார். ‘பாகுலேயா, நீ வீட்டுக்கு வா. இது என்ன கோலம்’ என்றார். ‘ம்ம்?’ என்றார் அப்பா. என்னை அவர் பார்த்தபோது என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை என்று தோன்றியது. ‘டேய் வீட்டுக்கு வாடா..’ என போற்றி கெஞ்சினார். அப்பா ‘ம்ம்’ என்று மட்டும் சொன்னார். கிழவர் வசைமாரிப்பொழிந்தார். கொஞ்சநேரம் அமர்ந்து விட்டு போற்றி வந்துவிட்டார். ஊராரைப் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு ஊர் திரும்பினோம். மேலும் மூன்றுநாள் அப்பா அங்கே இருந்தார். நாலாம்நாள் அதிகாலையில் கிளம்பி நடந்தே வீட்டுக்கு வந்தார். வரும்வழியிலேயே ஆற்றில் இறங்கி குளித்துவிட்டு உடைகளை துவைத்து உடுத்துக்கொண்டு கோயில் முன் நின்று கும்பிட்டார். அவர் வீட்டில் நுழைந்தபோது அம்மா விசும்பினாள்.

அன்று முழுக்க அப்பா தூங்கினார். பின்னிரவில் எழுந்து வெற்றிலை போட்டுக்கொண்டபின் கொஞ்சநேரம் அமர்ந்திருந்தார். அம்மா எழுந்து ’சோறு போடவா?’ என்றாள். சோற்றை வேகமாகச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் படுத்து சில கணங்களிலேயே தூங்கிவிட்டார். மறுநாள் சரியாக பிரம்ம முகூர்த்ததில் எழுந்து தோளில் ஈரிழைத்துவர்த்தும் , இடுப்பில் ஒரு பாலராமபுரம் ஒற்றைவேட்டியும், பூவரச இலையில் உமிக்கரியும், லைபாய் சோப்புமாக குளிக்க கிளம்பினார்.

வெகுநாள் அம்மாவிடம் கேட்டிருக்கிறேன் என்னதான் காரணம் என. அம்மாவுக்கே அதிசயம்தான். அவளறிய எந்தக் காரணமும் இல்லை. ஆகவே அது ‘தேவி விளயாட்டு’ என்றாள். காரணமில்லாத அனைத்துக்கும் காரணமாக இருப்பது தெய்வம்தானே?

 

 

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Aug 3, 2010

முந்தைய கட்டுரைதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’
அடுத்த கட்டுரைஒரு செல்லசிணுங்கல்போல….