‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 15

பகுதி மூன்று : வான்தோய் வாயில் – 4

சாளரம் வழியாக கடல்நீலத்தை நோக்கியபடி அமர்ந்திருந்தாள். அவள் பார்த்த முதற்கடல் அதுதான். மஹதியும் ராகினியும் மாலினியும்கூட கடலை பார்த்திருக்கவில்லை. துவாரகைக்குள் நுழைந்து வளைசுருள்பாதையில் மேலேறத் தொடங்குவதுவரைக்கும் அவர்கள் கடலை அறியவில்லை. பலமுறை தென்மேற்குதிசையில் எழுந்திருந்த நீலச்சுவரை அவர்கள் நோக்கியிருந்தும்கூட அது வானத்தின் ஒரு தோற்றம் என்றே சித்தம் காட்டியது.

சுருள்பாதையில் மேலேறி மூன்றாவது வட்டத்தை அடைந்தபோது கீழே கட்டி முடியாத துறைமுகப்பு தெரியத்தொடங்கியது. கடலுக்குள் இரண்டு நீண்ட பாறைச்சுவர்கள் நீட்டி நின்றிருந்தன. அவற்றின் உயரமான முகடுகளை உடைத்து நடுவே இருந்த பள்ளத்திற்குள் போட்டு நிரப்பி தட்டையான நீட்சியாக ஆக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. பாறைகளை நெருப்பிட்டு பழுக்கச்செய்து பின் குளிர்நீர் ஊற்றி வெடிக்கவைத்து நெம்புகோல்களால் சரித்துவீழ்த்தினர்.

இரும்பாலான நெம்புகோல்கள் பெரிய தூண்கள் என நிரையாக நின்றிருந்தன. அவற்றுடன் கட்டப்பட்டிருந்த வடங்களை கடலில் நின்ற சிறுகலங்கள் பற்றியிருந்தன. கரையில் இருந்த காவல்மாடத்தின் பெருமுரசு ஒலித்ததும் அத்தனை படகுகளும் ஒரே சமயம் பாய்களை விரித்தன. காற்று அவற்றை அள்ளி தெற்குநோக்கி கொண்டுசென்றபோது வடங்கள் இறுகி நெம்புகோல்களை அசைத்துத்தாழ்த்த பிளவுபட்டிருந்த பெரும்பாறை முனகத்தொடங்கியது.

முரசொலி கேட்டு திரும்பிய பாமா அந்தப் பாறையின் ஒலியை அருகே என கேட்டாள். சிட்டுக்குருவிகள் போல கலங்கள் சிறகுவிரித்து இழுத்துக்கொண்டிருந்தன. அக்காட்சியில் தன்னை மறந்து அவள் நோக்கிக்கொண்டிருந்தபோது மாலினி “என்னடி அது?” என்று அவள் தோளைத் தொட்டு திரும்பி அப்போதுதான் கடலை நோக்கினாள். “அய்யோடி! என்னடி இது? இவ்வளவு பெரிய ஏரி?” என்று கூவி அவளை தழுவிக்கொண்டாள். ராகினி “நான் அப்போதே பார்த்தேன். பெரிய கோட்டை என்றல்லவா நினைத்தேன்?” என்றாள். மஹதியும் திகைப்புடன் எழுந்து கடலை பார்த்தாள்.

“மறுகரையே இல்லாதது கடல் என்று சூதர்கள் சொன்னபோது நான் நம்பவே இல்லை” என்றாள் மாலினி. ராகினி முற்றிலும் சொல்லிழந்து நோக்கிக்கொண்டிருந்தாள். “அலைகள் மிகச்சிறியவைதான்” என்றாள் மாலினி. “அரசி, நாம் இங்கே உயரத்தில் இருக்கிறோம். அங்கிருக்கும் மனிதர்களை பாருங்கள்” என்று ராகினி சொன்னாள். உலோக ஒலியுடன் பாறை வெடித்து கற்கள் பெயர்ந்து பள்ளத்தில் சரிந்து அங்கிருந்த நீருக்குள் விழுந்தன. அவை விழுந்த இடத்தில் நீர் துள்ளிச் சிரிப்பதுபோல தோன்றியது. அலைகள் எழுந்து நாற்புறமும் பரவி முன்னரே விழுந்துகிடந்த பெரும்பாறைகளைச் சூழ்ந்து வெண்ணுரையால் அலைத்தன.

“என்னடி செய்கிறார்கள்? என்ன இடிகிறது?” மஹதி “பாறையை உடைத்து அந்தப்பள்ளத்தில் இட்டு நிரப்புகிறார்கள் அரசி” என்றாள். மாலினி பதற்றத்துடன் “எதற்கு?” என்றாள். “துறைமேடை அமைக்கிறார்கள்.” மாலினி “கல்லாலா?” என்று கேட்டாள். ராகினி “அந்தக் கலங்களா இப்பணியை செய்கின்றன?” என்றாள். “அவற்றை பூதங்கள் இயக்குகின்றன என்று நினைக்கிறேன். எங்கள் விருஷ்ணிகுலத்திற்கு பணிசெய்யும் பல பூதங்கள் உண்டு. முன்பு எங்கள் குலமூதாதை ஒருவர் தன் ஆநிரைகளுடன் காட்டுக்குச் சென்றபோது இதேபோல மலையிடிந்து விழுந்து பாதைமூடிவிட்டது. அவரது வேண்டுகோளை ஏற்று சண்டன் பிரசண்டன் என்னும் இரண்டு பூதங்கள் கிளம்பி வந்து அந்தப்பாறைகளைத் தூக்கி அகற்றி அவரை மீட்டுக்கொண்டுவந்தன.” மாலினி பெருமிதத்துடன் புன்னகை செய்து “இந்தக் கலங்களிலும் சண்டனும் பிரசண்டனும் இருக்கக்கூடும்” என்றாள். “ஆம் அரசி. சண்டன் பிரசண்டன் என்று தெற்கு மேற்குக் காற்றுகளை சொல்வதுண்டு” என்றாள் மஹதி. மாலினி “அப்படியா?” என்றாள்.

பாமா கடலில் கலங்கள் பாய் திருப்பி மீள்வதை நோக்கிக்கொண்டிருந்தாள். கடலை அப்போதுதான் அவளும் பார்க்கிறாள் என எண்ணிக்கொண்டிருந்தாள். ஆனால் பல்லாயிரம் முறை நோக்கி முற்றிலும் அறிந்ததுபோல் உணர்ந்தாள். தொலைதூர வான்கோட்டில் ஒளி ததும்பிக்கொண்டிருந்தது. நெடுந்தூரம் நீலப்பட்டின் கசங்கல். அதன் பின் அலைவளைவுகளின் தளிர்மெருகு. அதன்பின் வளைந்து நீளும் நாக்கு. கரைப்பாறைகளில் ஓசையின்றி நெளிந்து மோதி திரும்பிய வெள்ளிநூல்பின்னல்.

துவாரகையை கடல் மூன்றுதிசைகளிலும் சூழ்ந்திருந்தது. கடல் ஒரு நீல விரிமார்பு. துவாரகை அதில் ஆடும் ஒரு பொற்பதக்கம். கடல் ஒரு நீலத்தாமரை. துவாரகை அதிலமர்ந்த பொன்வண்டு. கடல் ஒரு நீலப்பட்டு. துவாரகை அதில் ஒரு பொன்னிறச் சுட்டி. கடல் ஒரு நீலவானம். துவாரகை அதில் பறக்கும் ஒரு சாரங்கம். கடல் ஒரு நீலப்பருந்து. துவாரகை அதன் உகிர்கள் கவ்விய சிறு மணி. எண்ணிச்செல்லும் தன் சிந்தையை உணர்ந்தபோது அவளுக்கு புன்னகை வந்தது.

காலந்தோறும் கேட்டுவந்த சூதர்பாடல்களின் அத்தனை அணிகளும் பொருள்கொண்டுவிட்டன. அணிகளற்று நிற்கும் உண்மைகளனைத்தும் வெறுமையடைந்துவிட்டன. பூக்காத செடிகளை பார்க்கப்பிடிக்கவில்லை. அணிகொள்ளாத ஒன்றில் விழிநிலைக்கவில்லை. இந்தக்கடலை என்றாவது பார்த்துமுடிப்போமா? இங்கே இப்படி ஒரு சாளரத்தடியில் அமர்ந்து நீலம் நீலம் என்று நோக்கி நோக்கி வாழ்ந்து முடிப்பேனா? நீலம் மீது நான்கொண்ட பித்து என்னை மறுபிறவியில் நீலமென்றாக்கும். நீலமணிச்சிறகுள்ள மீன்கொத்தியாவேன். நீலமென விரிந்த பெருங்கடலில் ஓயாது முத்தமிட்டு முத்தமிட்டு பறந்துகொண்டிருப்பேன்.

காலை செண்டுவெளியிலிருந்து மீண்டதுமே அவள் ஆடைகளைக்கூட மாற்றாமல் ஓடிச்சென்று சாளரத்தடியில் அமர்ந்து நீலம் நோக்கி விழிவிரித்தாள். அவளருகே வந்தமர்ந்த ராகினி “கன்னியின் ஆணவத்தை கவிஞர் பாடி கேட்டிருக்கிறேன். இத்தகையது என்று இன்றுதான் அறிந்தேன்” என்றாள். “என்னடி?” என்றாள். “நீ ஒருமுறைகூட அவனை பார்க்கவில்லை. அங்கிருந்த அத்தனை பெண்களின் விழிகளும் கணம்கூட விலகாமல் அவனை தொட்டிருந்தபோது நீ எங்கோ என இருந்தாய். உன்னைச்சூழ்ந்து வாழ்த்தொலி எழுந்ததை நீ காணவில்லை. அனைவர் நோக்கையும் வாங்கிய அவன் உன்னையே நோக்கியிருந்ததைக்கூட நீ அறியவில்லை…” என்றாள் ராகினி.

”நான் இக்கடல்நீலத்தை மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தேனடி” என்றாள் பாமா. “இன்று கிருஷ்ணப்பருந்து வந்து உன்னருகே அமர்ந்தபோது என்ன சொல்லிக்கூவியது இந்த நகரம் என்று அறிவாயா?” என்றாள் ராகினி. “நான் எதையும் கேட்கவில்லையடி” என்றாள் பாமா. “ஆம், நீ அணங்கெழுந்த விழிகொண்டிருந்தாய்” என்றாள் ராகினி. “உன்னை துவாரகையின் அரசி என்றுகூவிக்கொண்டிருந்தனர்” என்றாள் ராகினி. “அப்படியா?” என்ற பாமா “கடல்நீலம் வான்நீலம்… நீலம் அன்றி பிற நிறம் இப்புவியிலுள்ளதா என்றே தோன்றுகிறது, ராகினி. நீலச்செப்பு திறந்து உள்ளிருக்கும் சிறுமுத்து போன்ற இப்புவியை எவரோ காட்டுகிறார்கள்” என்றாள்.

“நீ என்ன விளையாடுகிறாயா? நான் என்ன சொன்னேன் என்று அறிவாயா? பிச்சி, உன்னை இந்நகரின் பேரரசி என்கிறார்கள். உன்னை யாதவர் மனம் வென்ற இளையவரின் அறத்துணைவி என அவர் மக்களே கூவி அறிவித்துவிட்டனர். அவ்விண்ணே இறங்கி வந்து உன்னை அடையாளம் காட்டிவிட்டிருக்கிறது” என்று ராகினி சினத்துடன் சொல்லி “நீ நடிக்கவில்லை. உன் விழிகளில் பொய் இல்லை. ஆனால் ஏனிப்படி இருக்கிறாய்? உனக்குள் உவகையே திரளவில்லையா?” என்றாள். “உவகையா?” என்று பாமா கேட்டாள். “நான் எதையும் உணரவில்லை, ராகினி. இந்த நீலமன்றி எதுவும் என் நெஞ்சில் இல்லை.”

ராகினி அவளையே நோக்கிக்கொண்டிருந்தாள். “உன் உள்ளம் அலையடிக்கவில்லையா? துயரெல்லாம் நீங்கி இன்பம் அடையவில்லையா?” பாமா அவளை விழிதூக்கி நோக்கி ஒருகணம் சிந்தனைசெய்தபின் “துயரென எதையேனும் நான் உணர்ந்ததே நினைவில்லையே? ஒவ்வொரு கணமும் ஒன்றையன்றி பிறிதை நினைக்காமல் இருக்கிறேன் என்று தோன்றுகிறது…” என்றாள். ராகினி பெருமூச்சுடன் அமர்ந்துகொண்டு “என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை தோழி. நீலமாயனின் கைபற்றுவதை எண்ணிக்கூட ஒரு பெண் உவகைகொள்ளாமலிருக்க முடியுமா? நீயன்றி எந்தப்பெண்ணிடமும் இச்செய்தி சொல்லப்பட்டிருந்தால் ஆடைகளை கிழித்துவீசி மாடமுகடேறி நெஞ்சு வெடிக்க கூவியிருப்பாள். இக்கணமே சித்தம் அழிந்து பிச்சியென்றாகியிருப்பாள்” என்றாள்.

ஏதோ சொல்ல வாயெடுத்தபடி பாமா நீலவிரிவை நோக்கி விழி திருப்பி சிலகணங்களிலேயே அருகே ராகினி இருப்பதை மறந்தாள். அவள் நீள்மூச்சுடன் எழுந்தபோது மஹதி பின்னால் நிற்பதை கண்டாள். கண் கனிந்த சிரிப்புடன் மஹதி “அவள் கனவில் கண்டறிந்த பெருநகரடி இது. நினைவறிந்த நாள் முதல் அவள் இதன் அரசியாகவே இருந்தாள். ஒருகணமும் மாயனை அவள் நெஞ்சு விலக்கியதும் இல்லை. தன் உடலை தன் நெஞ்சை எவரேனும் மீண்டும் அடையவேண்டுமா என்ன?” என்றாள். ராகினி திரும்பி பாமாவை நோக்கிவிட்டு “அந்த மெய்மறந்த நிலைதான் இவளை பேரழகு கொண்டவளாக்குகிறதோ? சக்ரவர்த்தினியின் நடையை அளிக்கிறதோ?” என்றாள். மஹதி “அறியேன். ஆனால் விண்ணவர் விரும்பும் நிலை அது என்று மட்டும் சொல்வேன். இன்று கருடன் அதை விரும்பியே வந்தமர்ந்தது” என்றாள்.

உச்சி கடந்ததும் அரண்மனையிலிருந்து மணத்தூது வந்தது. வெள்ளித்தேர் வந்து அவர்களது பாடிவீட்டின் முன் நின்றது. அதன் முன் வந்த வெண்குதிரையில் இருந்த காவலர்கள் இறங்கியதுமே முகப்பறையில் இளையவனுடன் அமர்ந்திருந்த சத்ராஜித் எழுந்து கைகளைக் கூப்பியபடி நின்றார். பிரசேனருக்குத்தான் முதலில் புரிந்தது. “மூத்தவரே, அரண்மனைத் தூது. நான் சொல்லிகொண்டிருந்தேனே” என்றார். சத்ராஜித் என்ன செய்வதென்று அறியாமல் “இது சிறிய இல்லம்… இங்கே…” என ஏதோ சொல்ல “இது முறைமைசார்ந்த அறிவிப்பு மட்டும்தான் மூத்தவரே. நாம் சொல்கேட்டு சொல்லளிப்போம்… பிறகு அனைத்தையும் பார்த்துக்கொள்வோம்” என்றார்.

சத்ராஜித் “வருக வருக” என்று முகப்பு வீரர்களிடம் சொல்லியபடி கைகூப்பி முற்றத்திற்கு செல்ல பிரசேனர் திரும்பி அருகே நின்ற சேவகனிடம் “மூன்று அரசிகளையும் முறைமை ஆடைகளுடன் முகப்பறைக்கு வரச்சொல். அரண்மனை மணத்தூது என்று அறிவி” என்று ஆணையிட்டார். தேர்வந்து வளைந்த ஒளி அறைக்குள் சுழன்றது. அவரும் திரும்பி ஓடிச்சென்று தமையனருகே நின்றுகொண்டார். தேரிலிருந்து ஐந்து மங்கலப்பொருட்கள் ஏந்திய தாலங்களுடன் மூன்று அணிப்பரத்தையர் இறங்கினர். தொடர்ந்து அக்ரூரர் இறங்கி அவர்களை வணங்கினார்.

கைகூப்பி முன்னால் சென்ற சத்ராஜித் “வருக வருக மூத்தவரே. நாங்கள் வாழ்த்தப்பட்டோம்” என்றார். அணிப்பரத்தையர் எதிரே வந்து மங்கலம் காட்டி வணங்கினர். அக்ரூரர் கூப்பிய கரங்களுடன் வந்து படியேறினார். சத்ராஜித் குனிந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கி “மூத்தவர் என் இல்லம் வந்த மகிழ்வை சொற்களாக்க அறியேன்” என்றார். பிரசேனரும் அவர் கால்களைத் தொட்டு வணங்க அவர் தலைதொட்டு வாழ்த்தியபடி “உன் இல்லம் மூதன்னையரின் அருள் நிறைந்தது அந்தகனே. திருமகள் வாழும் இடம் இது” என்றார் அக்ரூரர். “அமரவேண்டும் மூத்தவரே” என்று சொல்லி சத்ராஜித் பீடம் காட்டி அவரை அமரச்செய்தார். அணிப்பரத்தையர் மங்கலப்பொருட்களை குறுபீடத்தில் வைத்தனர்.

உள்ளிருந்து பத்மையும் சித்ரையும் பட்டாடை சரசரக்க வந்து வணங்கினர். “குலமூதாதையர் உடல்கொண்டு வந்ததுபோல் வந்துள்ளீர்கள் மூத்தவரே. இத்தருணத்தில் எங்கள் மூதன்னையரின் விழிகள் எங்களை கனிந்து சூழ்ந்துள்ளன” என்றாள் பத்மை. அக்ரூரர் நகைத்து “சத்ராஜித்தின் துணைவி சொல்லறிந்தவள் என முன்னரே அறிவேன்” என்றார். காலடி ஓசை அதிர விரைந்து வந்த மாலினி “உள்ளே இருந்தேன். மாலைநேரச் சமையலுக்கு அடுமனையாளனுக்கு ஆணையிட்டுக்கொண்டிருந்தேன். தாங்கள் வந்ததை சொன்னார்கள். நான் சரியாக ஆடைகூட அணியவில்லை…” என்றாள். சத்ராஜித் ஒருகணம் விழிசுருங்கி பின் புன்னகையை மீட்டுக்கொண்டார்.

பத்மை “நம் இல்லம்தேடி மூத்தவர் வந்தது உங்களுக்கும் பெருமை என சொல்லிக்கொண்டிருந்தேன் மூத்தவரே” என்றாள். மாலினி அவளை நோக்காமல் தலைதிருப்பி “அது எனக்கும் தெரியும்… அவர் எங்கள் விருஷ்ணிகுலத்தைச் சேர்ந்தவர்” என்றாள். அக்ரூரர் சிரித்துக்கொண்டு “கன்றுமேய்க்கும் ஆய்ச்சியாகவே இருக்கிறாய் மகளே. உன் கன்றுகள் உனக்காகக் காத்திருக்குமென நினைக்கிறேன்…” என்றார். “நான் வந்தது ஏன் என்று அறிந்திருப்பாய்.” மாலினி சிரித்தபடி இடைமறித்து “ஆம், அதை என் தோழி சொல்லிக்கொண்டிருந்தாள். அரண்மனைத்தூது எக்கணமும் வரும் என்று. அதைத்தான் கருடனே விண்ணிறங்கி வந்து சொல்லிவிட்டதே…” என்றாள்.

அக்ரூரர் வாய்விட்டு சிரித்துவிட்டார். “ஆம், அதற்காகவே வந்துள்ளேன். என்னை அரசர் வசுதேவரும் தேவகியும் அரண்மனைக்கு வரவழைத்து செய்தியை சொன்னார்கள். முறைப்படி பெண்கேட்டு உறுதிச்சொல் பெற்றுவரும்படி ஆணையிட்டார்கள். அப்போது மூத்தவர் பலராமரும் உடனிருந்தார்.” மாலினி “இளையவர் இல்லையா? அவருக்கும் பிடித்திருக்கிறதுதானே?” என்றாள். பிரசேனர் “அரசி, தாங்கள் மகளிரில்லம் செல்லுங்கள். அரசமுறைமையை நாங்களே பேசிக்கொள்கிறோம்” என்றார். “ஏன், இது என் மகளின் மணம். நானே பேசுவேன். மேலும் இது விருஷ்ணிகுலத்தவரின் மணமுறை வேறு” என்று சொன்ன மாலினி “எதற்குச் சொல்கிறேன் என்றால் இளையவர் என் மகளை இன்னமும் அணுகிப் பார்க்கவில்லை…” என்றாள்.

பிரசேனர் பெருமூச்சுடன் தமையனை நோக்க அவர் தலையை தாழ்த்தினார். பத்மையும் சித்ரையும் விழிகளால் சந்தித்து இதழசையாமல் புன்னகைசெய்தனர். மாலினிக்குப்பின்னால் மஹதி வந்து நின்றாள். ஆனால் அக்ரூரர் மகிழ்வுடன் சிரித்துக்கொண்டு “நன்றாகவே பார்த்திருக்கிறார் அரசி. அவர்கள் இளமையிலேயே சந்தித்தவர்கள்தான்…” என்றார். “ஆம், மதுராவுக்காக படைகோரி வந்தபோது. அன்று அவள் முதிரா சிறுமி அல்லவா? என் மகள் கன்னியான பின்னர் அவர் பார்க்கவில்லையே” என்றாள் மாலினி.

“அவர்கள் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். சொல்லப்போனால் உங்கள் மகள் இந்நகர் நுழைந்ததே அரசியாகத்தான்…” என்று சொன்ன அக்ரூரர் திரும்பி சத்ராஜித்திடம் “இளவரசி நகர்நுழைந்த நேரம் என்ன என்று அறிவீர்களா?” என்றார். சத்ராஜித் இல்லை என தலையசைத்தார். “அதை மைத்ரேய முகூர்த்தம் என்பார்கள். செவ்வாய்கிழமையும் அஸ்வினி மீனும் சேரும் நாள். அஸ்வினி இருக்கும் வேளையில் மேஷம் அணையும் தருணம். மிகச்சரியாக மைத்ரேய நிலைக்காலத்தில் இளவரசி தோரணவாயிலை கடந்தாள்.”

சத்ராஜித் “நான் அறியவேயில்லை” என்றார். “ஆனால் இளைய யாதவர் அறிந்திருந்தார். நீங்கள் ஹரிணபதத்திலிருந்து கிளம்பும் நாள் முதல் வந்துசேர்வது வரை ஒவ்வொரு கணமும் திட்டமிடப்பட்டது. அந்த நேரத்தில் நகர்நுழைவை நிகழ்த்துவதற்காகவே நூறு யாதவர் அயலவராக வேடமிட்டு உங்களை சூழ்ந்திருந்தனர். அதற்காகவே மணல்மேட்டில் உங்களை அமர்த்தியிருந்தனர்…” அக்ரூரர் சிரித்து “அரசி நகருள் நுழைந்ததை நகரம் முன்னரே அறிந்துவிட்டிருந்தது. அவர்களின் உள்ளமென்றுதான் கருடன் வந்தமர்ந்தது” என்றார்,

சத்ராஜித் பெருமூச்ச்சுடன் கைகூப்பி “நான் சொல்வதற்கேதுள்ளது மூத்தவரே? நீங்கள் சொல்வதற்கெல்லாம் உடன்படுகிறேன். என் மகள் இப்பெருநகரை ஆளவேண்டுமென்பது மூதன்னையரின் ஆணை என இப்போது தெரிகிறது. வளைதடி ஏந்தி காட்டுக்குள் அலையும் வயதிலேயே அவளுக்கு வில்லும் வாளும் கற்கவேண்டுமென்னும் விழைவை உருவாக்கியவர்கள் அவர்கள். எந்த யாதவச்சிறுமிக்கு செம்மொழியும் மந்தணமொழியும் தெரியும்? நான்கு வாள்வீரர்களை ஒற்றை வாளால் செறுத்து நிறுத்தும் வல்லமை யாருக்கு உண்டு? என் மடியில் வளர்ந்தமையாலேயே அரசியை என்னால் காணமுடியாமலாயிற்றோ என்று இப்போது தோன்றுகிறது. அவள் அங்கு பிறந்து அந்நிலத்தை உண்டு அக்காற்றை உயிர்த்தாள். ஆனால் என்றும் இந்நகரை ஆளும் சக்ரவர்த்தினியாகவே இருந்தாள்.”

மாலினி விசும்பி அழத்தொடங்க பத்மை அவளை மெல்ல அணைத்து தோள்சேர்த்துக்கொண்டாள். “மலர்பெற்றுக்கொள்ளுங்கள் அந்தகரே” என்றார் அக்ரூரர். “ஆம், நான் அவளுக்கு நிகராக பெற்றுக்கொள்ளவேண்டியது மலரை மட்டும்தான்” என்று சொன்னதுமே சத்ராஜித் தொண்டை அடைத்து அழத்தொடங்கினார். “நான் விழைந்தது இது. என் மூதாதையருக்கு உவப்பானது இது. ஆனால் இப்போது என் குலநிதியுடன் இங்கிருந்து தப்பி ஓடிவிடவேண்டுமென்றே என் உள்ளம் விழைகிறது மூத்தாரே. இவளை இன்றுடன் நான் இழந்துவிடுவேன் என்று எண்ணும்போது…” அவர் கண்ணீரை மேலாடையால் மூடிக்கொண்டு தலைகுனிந்தார்.

பிரசேனர் “மூத்தவரே” என்று தோளைத்தொட “நீங்கள் திருமகளைப் பெற்றீர். இப்போது அவள் வாழும் திருநகரையும் அடைந்திருக்கிறீர் அந்தகரே. எதையும் இழக்கவில்லை” என்றார் அக்ரூரர். “ஆம், அவ்வாறெல்லாம் எண்ணிக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் நான் அவளை இழந்துவிட்டேன். மூத்தவரே, உண்மையில் நான் அவளை அணுகவே இல்லை. ஒரு சொல் கனிந்து சொன்னதில்லை. மடியிலும் முடியிலும் தூக்கிவைத்து கொஞ்சியதில்லை” என்ற சத்ராஜித் தன்னுள் இருந்து சொற்கள் எழுவதை உணர்ந்தார். என்ன இது என அகம் பதைக்க அவர் சொல்லிக்கொண்டே சென்றார்.

“உண்மையில் நான் அவளை அஞ்சினேன். ஏனென்றால் என் உள்ளத்தில் அவள் என்றும் அரசியாக இருந்தாள். நான் வழிபடும் ஒரே காலடிகளை கொண்டிருந்தாள். என் மூதன்னையர் வடிவமாக கனவுகளில் வந்தாள். அவளை குழந்தையென்றோ பெண்ணென்றோ எண்ண முடியாதவனாக இருந்தேன்…” சத்ராஜித் மேலும் சொல்ல முனைந்து சொல்லின்மையை உணர்ந்து கைகளை வீசி தவித்தார். மறுகணம் எழுந்து ஒரு சொல்லும் பேசாமல் விரைந்த காலடிகளுடன் உள்ளறைக்குள் சென்றுவிட்டார். பிரசேனர் “தமையன் மகள்மேல் பேரன்புகொண்டவர்” என்று விளக்கம் சொல்ல முயல அக்ரூரர் “சக்ரவர்த்தினிகளை பெற்றவர்கள் வாழ்த்தப்பட்டவர்கள் இளையோனே. அவர் தந்தை. தன் மகளை கையில் வாங்கிய கணமே அறிந்திருப்பார் அவள் யாரென” என்றார்.

சாளரத்துக்கு அப்பால் நீலம் அடர்ந்து வந்தது. “இந்நகரமே நீலமானது என்று தோன்றுகிறது இளவரசி” என்றாள் ராகினி. “எத்தனை வண்ணங்கள் இருந்தாலென்ன? இங்குள்ள காற்றில் நீலம் கலந்திருக்கிறது.” மஹதி வந்து “கிளம்பு… இதோ இருட்டிவிடும். இன்று நகரெங்கும் சுடரேற்றுகிறார்கள். லட்சம் சுடர் என்று சொன்னார்கள். நகரமே வேங்கைபூத்த காடு போலிருக்கும் என்று நினைக்கிறேன்” என்றாள். பாமா எழுந்து ஆடையை சீரமைத்துக்கொண்டு கலைந்த குழலை அள்ளித் தொகுத்து “இன்னும் சற்றுநேரம்தான்” என்றாள். “மீண்டும் நீராடவேண்டியதுதான். இங்கே காற்றிலேயே உப்பு நிறைந்திருக்கிறது” என்றாள் ராகினி.

விரைவிலேயே இருட்டிவிட்டது. தொடுவானில் மட்டும் கூர்வாள்முனை என ஒளி இருந்தது. ராகினி “இது ஐப்பசி மாதம். வழக்கமாக மழைமுகில்கள் வானை மூடியிருக்குமாம். இம்முறை குறைவு என்றார்கள்” என்றாள். பாமா இளநீலப்பட்டாடையும் பொன்னிறமேலாடையும் அணிந்தாள். குழலில் வெண்முத்துமாலைகளை சூடினாள். அணிகொண்டு ஆடிமுன் நின்ற அவளை பின்னால் நின்று நோக்கிய மாலினி கண்களிலிருந்து வழிந்த நீரை மேலாடையால் துடைத்தாள். “என்ன இது அரசி?” என்று மெல்லியகுரலில் மஹதி சொன்னாள்.

“என்னால் தாளமுடியவில்லையடி… இன்று அரசர் சொன்னபோது என் உள்ளம் துணுக்குற்றது. அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஆகவே அவளை அணுகவில்லை. எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. அவளை ஒருநாளும் மூடக்குழந்தையென்றல்லாமல் நான் நடத்தியதில்லை” என்றாள். “நீங்கள் நல்லூழ் கொண்டவர்கள் அரசி. அவ்வாறு எண்ணியமையால்தானே சக்ரவர்த்தினியை குழந்தையென மடியிலிட்டு ஆட்டும் பேறுபெற்றீர்கள்?” என்றாள் மஹதி. “அரசர் இழந்த அனைத்தையும் நீங்கள் பெற்றீர்கள் அல்லவா?”

மாலினி விழியில் நீர்த்துளிகளுடன் புன்னகைத்து “ஆம், இதுவரை அந்த அறியாமைதானே என்னை மகிழச்செய்தது?” என்றாள். மஹதி திரும்பி ஆடியிலேயே பாமையை நோக்கி “சித்திரமெழுதினால்கூட இப்படியொரு முழுமையை அடையமுடியாது” என்றாள். “கண்ணேறு விழுந்துவிடும் என்று என் அடிவயிறு பதைக்கிறது” என்றாள் மாலினி. “அரசி, திருமகளுக்கு மானுடக்கண்ணேறு உண்டா என்ன?” என்று மஹதி சொன்னாள். “ஆம், உண்மை” என்று மாலினி புன்னகைத்தாள்.

அவர்கள் இல்லத்தைவிட்டு வெளியே வந்தபோது நகரம் முழுக்க அகல்சுடர்கள் எழுந்திருந்தன. “பெரியதோர் சிறுத்தைபோலிருக்கிறது நகரம்!” என்றாள் ராகினி. அந்தக் கற்பனையைக் கேட்டு வியந்து மஹதி திரும்பி நோக்கி புன்னகைத்தாள். அத்தனை மாளிகைகளிலும் சுடர்நிரை இருந்தது. கட்டப்படாத மாளிகைச்சுவர்களிலும் மேடுகளிலுமெல்லாம் சுடரேற்றியிருந்தனர். அவர்களின் வெள்ளித்தேர் செஞ்சுடர் பட்டு பொற்தேரெனப் பொலிந்தது. அதன் உடலெங்கும் சுடர்விளக்குகள் அசைந்தன. குதிரைகளின் வெள்ளை உடல்பரப்பில் செவ்வொளி ஈரமென வழிந்தது. விழிகளுக்குள் கனல்துளியெனச் சுழன்றது. அவர்களின் அணிகளிலெல்லாம் சுடர் எழுந்திருந்தது.

“நோக்க நோக்க சித்தம் பற்றி எரிவதுபோலிருக்கிறது” என்றாள் ராகினி. “வானிலிருந்து உருகிச்சொட்டிய பொற்குழம்புத் துளி போல தெரிகிறது நகரம்.” மஹதி சிரித்தபடி “சொற்கள் வந்துகொண்டே இருக்கின்றன உனக்கு” என்றாள். “ஏதாவது சொல்லாவிட்டால் என் நெஞ்சு வெடித்துவிடும் அன்னையே” என்றாள் ராகினி. மாலினி முற்றாக சொற்களை இழந்திருந்தாள். பாமா பெரியதோர் சுடர் என மெல்ல அசைந்து உடன் வந்தாள். அவர்களின் தேர் சுழற்பாதைகளில் சூழ்ந்த செவ்வொளி நடுவே நீந்திச்சென்றது. உருகும் நெய்மணம் நிறைந்த இரவு. பித்து நிறைந்த விழிகளுடன் நகர்மக்கள் தெருக்களில் முட்டிமோதினர். பெரும்பெருக்காக மேலே சென்றுகொண்டிருந்தனர்.

குன்றின் உச்சியில் போடப்பட்ட வேள்விப்பந்தலில் எரிந்த தழல் தெரிந்தது. வேள்வியின் முழுமைச்சடங்குகள் நடந்துகொண்டிருந்தன. வேதநாதத்தை வெறும் மீட்டலாகவே கேட்கமுடிந்தது. தேர் மேலே செல்லச்செல்ல கூட்டத்தால் தடுக்கப்பட்டு அலைக்கழிந்தது. அவளை அடையாளம் கண்டுகொண்ட மக்கள் வாழ்த்தொலியும் உவகையொலியுமாக குறுக்கே பாய்ந்தனர். கையிலிருந்த துவாலைகளையும் மலர்களையும் தூக்கி ஆட்டினர். குழந்தைகளை தலைக்குமேல் தூக்கி அவளை காட்டினர். பெண்கள் கொழுநரின் தோள்பற்றி எழுந்து அவளை நோக்கி சிரித்தனர்.

மலையுச்சியில் இரண்டு பெரிய செங்குத்தான பாறைகள் எழுந்து நின்றன. ஒன்று கால்மடித்து அமர்ந்திருக்கும் எருதைப்போலவும் இன்னொன்று உடல்குறுக்கி சேற்றில் புதைந்த யானைபோலவும் தோன்றியது. “இந்தபாறைகளைத்தான் பெருவாயிலாக செதுக்கவிருக்கிறார்கள்” என்றாள் மஹதி. ”இவற்றின்மேல் பெரிய பாறைகளை அடுக்கி வாயில் அமைப்பார்களாம். கடலுக்குள் இருந்து பாறைகளை வெட்டி மேலே எடுத்துக்கொண்டுவருவார்கள் என்று வணிகன் ஒருவன் சொன்னான்.” ராகினி “இத்தனை உயரத்துக்கு எப்படி பாறைகளை கொண்டுவருவார்கள்?” என்றாள். “கீழே கலங்களைக் கொண்டு நெம்புகோல்களை இழுப்பதை பார்த்தாயல்லவா? அதைப்போலத்தான்” என்றாள் மஹதி.

இரண்டு பாறைகளுக்கு அருகிலும் பெரிய குழிகள் அகழப்பட்டு அவற்றைச் சுற்றி மலர்த்தாலங்களும் மங்கலப்பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. பெரிய ஏழு கல்விளக்குகள் உடலெங்கும் செறிந்த சுடர்கள் கடற்காற்றில் துடிக்க அக்குழியைச் சூழ்ந்து நின்றிருந்தன. அருகே நிரையென நின்றிருந்த துவாரகையின் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அணிந்திருந்த பட்டாடைகளில் அவற்றின் ஒளி தழலாடிக்கொண்டிருந்தது. அவர்களின் வாள்களிலும் கவசங்களிலும் குருதியென வழிந்தது. அரசமேடையில் முன்னரே யாதவச்சிற்றரசர்களும் குலத்தலைவர்களும் வந்து அமர்ந்திருந்தனர். அவர்களின் தேர்வந்து நின்றதும் இசைச்சூதர் மங்கல இசையெழுப்ப வாழ்த்தொலிகள் எழுந்து சூழ்ந்தன.

பாமா ராகினியும் மஹதியும் இருபக்கமும் வர எவரையும் நோக்காத விழிகளுடன் மேடை நோக்கி சென்றாள். அவளுக்குப்பின்னால் வந்த மாலினி தலைகுனிந்து உதடுகளை அழுத்தியபடி நடந்து வந்தாள். அவளிடமிருந்து விசும்பல் ஒலி கேட்ட மஹதி திரும்பி “அரசி” என்று மெல்ல சொன்னாள். ராகினி “அத்தனை விழிகளும் உங்கள் மீதிருக்கிறது இளவரசி… ஒரு பெண்கூட விழி திருப்பவில்லை” என்றாள். பாமா எச்சொல்லையும் கேட்கவில்லை. அவள் தொலைவில் அலையடித்துக்கொண்டிருந்த நீலத்தின் ஓசையைத்தான் செவிநிறைத்திருந்தாள்.

முந்தைய கட்டுரைஒவ்வொருநாளும் விருது
அடுத்த கட்டுரைகரடி – கடிதம்