சுஜாதாவின் அறிவியல்

சுஜாதா அறிமுகம்

அன்பு ஜெ,

சுஜாதாவின் சிறுகதைகள், நாவல்கள், கணையாழியின் கடைசிப்பக்கக் கட்டுரைகளின் நையாண்டி, திருக்குறள் பொழிவுரை, நானூறு காதல் கவிதைகள், கூரிய சினிமா வசனங்கள், கற்றதும் பெற்றதும், மற்றும் அவரின் கவிதை மோப்ப சக்தி, ஹைக்கூ அறிவு, ஆகியவற்றை இனிமேலும் எவரும் விரித்து எழுதத் தேவையில்லை.

பல்லவன் பஸ் லேட்டா வந்ததைப் பற்றியோ, பாத்ரூம் குழாயில் தண்ணீர் வராததைப் பற்றியோ அடி, தொடை, தளை தட்டாமல் உடனே ஒரு எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமோ, ஹைக்கூவோ, விஞ்ஞானச் சிறுகதையோ, கட்டுரையோ எழுதிவிடும் வல்லமை படைத்தவர் அவர். அவரின் தமிழ் நடையால் பாதிக்கப்படாதவர் கோணங்கி மட்டுமே என்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். உண்மைதான்.

தமிழில் அறிவியல் எழுதும் முதல் முன்னோடியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் சுஜாதா. தற்போது தமிழில் கிடைக்கும் ஓரளவேனும் தரமான, எல்லாருக்குமான அறிவியல் (Popular Science) எழுத்து பெரும்பாலும் அவருடையதே. போட்டியே இன்றி தமிழ் அறிவியலின் சிம்மாசனத்தில் அவர் மட்டுமே வீற்றிருந்தார். தொடரோ, துணுக்கோ அவர் எதை எழுதினாலும் அதை உடனே பதிப்பிக்கவும் படிக்கவும் உலகத் தமிழ்ச் சமுதாயமே காத்துக் கிடந்தது.

ஆனால், அறிவியல் கட்டுரைகளில் போகிற போக்கில் தன் வழக்கமான துள்ளள் மொழியின் ரசிப்பில் மேம்போக்கான எண்ண ஓட்டங்களை எழுதிவைத்தாரே தவிர, அவர் எழுதுவது அறிவியல் என்றோ, அதிலும், தான் அறிவியல் படித்து அறிவியலைத் தொழிலாக மேற்க்கொண்டவன் என்பதால், தன் எழுத்துக்களை, சம கால நவீன அறிவியலின் நம்பிக்கைக் குரலாக படிப்பவர்கள் எடுத்துக்கொள்ள நேரும் என்ற உண்மையின் தீவிரத்தையோ அவர் உணர்ந்திருந்தாரா, தன் மேல் உள்ள அதீத பொறுப்பின் பாரம் அறிந்தாரா தெரியவில்லை.

ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து, கடவுள் இருக்கிறார போன்ற புத்தகங்களில் சுஜாதா முன் வைத்திருக்கும் அறிவியல் தீவிர விவாதத்துக்குரியது. காட்டாக, கடவுள் இருகிறாரா -விலிரிந்து ஸாம்பிளுக்கு மிகச் சுருக்கமாக சில:

1.’பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து, அன்று உடனே விழுங்கி கரந்து,உமிழ்ந்து, கடந்து, இடந்தது கண்டும் தெளிய கில்லீர்’ என்னும் நம்மாழ்வாரைப் போல் அத்தனை நிச்சயமாக சொல்லமுடியாமல் தவிக்கிறார்கள் விஞ்ஞானிகள் (பக்கம் 34).

2. கடவுளே பார்க்காத காட்சியாக, கேளாத கானமாக், புரியாத வார்த்தையாக இருக்கலாமல்லவா (பக்கம் 36).

3. கடவுளுக்கு ஒரு ‘மனம்’ இருக்கிறது என்பதை பெரும்பாலான அறிஞர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். கடவுளே ஒரு மனம் தானோ என்று வியக்கிறார்கள் (பக்கம் 53).

4. எனவே கடவுள் இருக்கிறார என்ற கேள்விக்கு அறிவியலின் பதில் – “இருக்கலாம்’. ஆன்மிகத்தின் பதில் “இருக்கிறார்”. என் பதில் it depends.

இவை சுஜாதா என்ற தனி மனிதரின் கருத்து என்றால் எந்தச் சிக்கலும் இல்லை.

அறிவியல் இப்படிக் கூறுகிறது, விஞ்ஞானிகள் இப்படிக் கூறுகிறார்கள் என்ற வரிகள் மறு விமர்சனதிற்க்கும் நேர்மையான கண்டனத்துக்கு உரியவை. இதை முழுமுதல் உண்மையென நம்பிப் படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் சாதாரண வாசகர்களுள் விளையும் சிந்தனை நிகழ்வுகள் ஆபத்தானவை அல்லவா?.

தமிழில் எழுதிக் கொண்டிருக்கும், எழுதப்போகும் எவரையும் பாதிக்கும் அவரின் அபார நடையை நீக்கிவிட்டால், மேற்சொன்ன இரண்டு புத்தகங்கள் மற்றும் ஏன் எதற்க்கு எப்படி, தலைமைச் செயலகம், ஜீனோம், உயிரின் ரகசியம் போன்றவற்றில் உள்ள ஒட்டு மொத்த விஷயங்கள், ஆங்கிலம் படிக்கத்தெரிந்த ஒரளவு பொது அறிவுடைய எவரும் நெட்டில் தட்டிப் பார்த்துச் சொல்லி விடக்கூடியதே.

படிக்கும்போது ஒரு பட்டாம்பூச்சி பறக்குமே தவிர. ’மனுஷனுக்கு எவ்வளவு விஷயம் தெரிஞ்சுருக்கு பாரு’ என்று பிரம்மிக்கத் தோன்றுவதோடே அவை நின்றுவிடுகின்றனவே அன்றி படித்து முடித்ததும் வாசகனுக்குள் அடிப்படையான, ஆழமான அறிவியல் புரிதலை, தெளிவை அவை நிகழ்த்துவதில்லை. அவற்றில் ஆழமான அறிவியலின் தெளிவோ, தர்க்க ஒழுங்கின் கடுமையோ இல்லை. அடிப்படையான தகவல் தவறுகளும் (factual errors and mistakes) இவற்றில் உண்டு.

அறிவியலைப் பாடமாகப் படிக்காத சில எழுத்தாளைர்களிடம், சாதாரண விஷய விவாதங்களில் கூட, தேர்ந்த விஞ்ஞானியின் துல்லியத்துடன், பிறழாத நடுநிலையோடு கறாரான உண்மைகளின் வழி அலசி ஆராய்ந்து தெளியும் அணுகுமுறையைக் காணலாம். அவர்களை உலகத்தரம் வாய்ந்த தேர்ந்த சமூக விஞ்ஞானிகள் என்று துளி சந்தேகமும் இன்றி உடனடியாகக் கூறி விட முடியும். அறிவியலைப் பாடமாகக் கற்ற சுஜாதாவின் அறிவியல் எழுத்துகளில் ஏனோ அது காணக்கிடைப்பதில்லை.

அறிவியல் கட்டுரைகளுக்கு உரிய கறாரான நடுநிலையான விவாதத்தில், தன் தனிமனித நம்பிக்கையை வெல்ல அவராலேயே முடிந்ததில்லை. இதை அவரே, “ஓர் ஆறுதல் வார்த்தை என்ன என்றால் இதையெல்லாம் படித்ததில் உங்களுடன் நானும் குழம்பித்தான் போகிறேன் என்று சொல்ல விரும்புகிறேன்” (க. இ. பக்கம் 36) என்று எழுதுகிறார். அவரின் அறிவியல் விவாதங்கள் நமக்குக் காட்டுவது நாலாயிர திவ்ய பிரபந்தமும் சுலோகங்களும் கழுத்தை நெரிக்க விழிபிதுங்கி மூச்சு முட்டும் ஒரு நடுவயது வைணவரையே. அறிவியலைத் தொழிலாக மேற்கொள்ள நேர்ந்த ஒரு அறிவியல் தொழிலாளியே அவர்.

என் வலைப்பூவிலோ, வேறு எங்கோ அறிவியல் தொடரோ கட்டுரையோ எழுத நேர்ந்தால் சின்ன சுஜாதா அல்லது சுஜாதா தாசன் என்ற பெயரை ஒருவேளை நானே எனக்கு வைத்துக் கொள்ளக் கூடும். என்னை அறிந்தவர்கள் ஆச்சரியப்பட மாட்டார்கள்.

எந்த ஒரு தமிழ் இளைஞனயும் போல சுஜாதாவின் எழுத்துகளை நானும் சின்ன வயசிலிருந்தே வாசித்து வருகிறேன். அந்த வயதில் ஜேம்ஸ் பாண்ட், இரும்புக்கை மாயாவி, கமல் ஆகியோருக்கு நிகரான ஒரு ஹீரோவே அவர். அச்சில் வந்த அவரின் எல்லா வரிகளையும் படித்திருக்கும் அவரின் தீவிர ரசிகன் நான்.

எளிமையாகவும் சுவையாகவும் சொல்ல நினைத்து மேம்போக்காக எழுதிவிடுவது -அறிவியலைப் பொறுத்தவரை தவறானது, ஆபத்தானதும் கூட என்பதே நான் சொல்ல நினைத்தது.

இதையெல்லாம் வேறு யாரேனும் எழுதியிருக்கலாம். நானே எழுத நேர்ந்ததில் எனக்கு வருத்தமே.

வேணுகோபால் தயாநிதி

அன்புள்ள வேணு

நீங்கள் சொன்ன இதே விஷயங்களை இதற்கு முன்னரே பல அறிவியலாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். சுஜாதாவை முன்னுதாரணமான அறிவியல் எழுத்தாளர் என்று சொல்ல முடியாதென்பதே என் எண்ணமும். அவரது பாணி உண்மையில் அறிவியலுக்கே எதிரானது. எளிமையாக்கிச் சொல்கிறேன் என்ற பாவனையில் அவர் அறிவியல் விஷயங்களை சல்லிசாக ஆக்குகிறார். பலசமயம் ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டு பக்கவாட்டில் திரும்பி வேடிக்கை காட்டுகிறார். தமிழில் அறிவியல் எழுதவந்த பலரும் சுஜாதாவை முன்னுதாரணமாகக் கொண்டமையால் எளிமையான, ஆனால் அறிவியலில் ஈடுபாட்டை வளர்க்கக்கூடிய, கட்டுரைகள் எழுதுவதற்கான முனைப்பே இங்கே திசை திருப்பப்பட்டுவிட்டது. அறிவியல் தமிழுக்கு சுஜாதாவின் பங்களிப்பு எதிர்மறையானது என்று சொல்ல வருத்தமாகவே இருக்கிறது

அதேபோல அறிவியல்புனைகதைகளுக்கும் அவரது பங்களிப்பு அதிகமில்லை. [அவர் இருக்கும்போதே நான் எழுதிய பழைய கட்டுரையில் அதைச் சொல்லியிருக்கிறேன்.]. அவரது அறிவியல் கதைகள் அறிவியல்புனைவு குறித்த தெளிவான பார்வை அற்றவார். எளிய திகில் கதைக்கு அல்லது துப்பறியும் கதைக்கு ஒரு அறிவியல் அடிக்குறிப்பு கொடுக்கவே அவர் முனைந்தார்.அறிவியல் புனைகதை என்பது ஒன்று அறிவியலின் ஒரு கேள்வியை புனைவு மூலம் சந்திப்பதாக இருக்கும். அல்லது வாழ்க்கையை சித்தரிப்பதற்காக அறிவியலை குறியீடாக ஆக்கும். சுஜாதா பெரும்பாலான தருணங்களில் வேடிக்கை காட்டவே அறிவியலை பயன்படுத்துகிறார். விதிவிலக்குகள் சிலவே. சுஜாதாவின் பல அறிவியல் கதைகளில் அவற்றின் அறிவியல் அடித்தளம் பலவீனமானது – என்னைப்போன்ற பொது வாசகனே சுட்டிக்காட்டும் அளவுக்கு

சுஜாதா எழுதிய பிற தளங்களில் தத்துவம் இலக்கியக் கோட்பாடு சார்ந்த எழுத்துக்கள் மிக மேலோட்டமானவை, தவறானவை, உபயோகமற்றவை என்ற வகைகளிலேயே அடங்குபவை. அவற்றை அவர் பொருட்படுத்தி வாசிக்கவும் இல்லை, புரிந்துகொள்ளவும் இல்லை. இதை அவற்றை பல ஆண்டுகளாக கவனிப்பவன் என்றமுறையில் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அதை அவை வெளிவந்த காலங்களிலேயே சுட்டிக்காட்டியிருக்கிறேன்

சுஜாதாவின் பங்களிப்பு என்பது இவற்றில் அல்ல. அவரது நடையில். உரையாடல்களை அவர் அமைத்த விதத்திலும் கதைச்சூழலை சித்தரித்த விதத்திலும். Hஎமிங்வே முதல் ஜான் அப்டைக் வரையிலான அமெரிக்க எழுத்தாளர்களிடம் இருந்து உருவான நடை தமிழில் அவருக்கு இருந்த பயிற்சியுடன் இணைந்து அவரது தனித்தன்மையாக ஆகியது. அதுவே முதன்மையாக அவரது பங்களிப்பு. அத்துடன் நாடகங்களிலும் சில சிறுகதைகளிலும் வெளிப்பட்ட பிராமண மத்தியவற்க சித்தரிப்பின் யதார்த்தம். சில சிறுகதைகளை தமிழின் சாதனைகள் என்பேன்.

அவ்வளவுதான் அவரது இடம். சுஜாதா தமிழின் நல்ல எழுத்தாளர்களில் ஒருவர். ஆதவன், இந்திரா பார்த்த சாரதி ஆகியோரின் தளத்தைச் சேர்ந்தவர். அசோகமித்திரன், சுந்தர ராம்சாமி ,தி ஜானகிராமன்,கு அழகிரிசாமி போன்றவர்களுக்கு பல படிகள் கீழே நிற்பவர். அவர்களின் தரிசனமும் தீவிரமும் ஒருபோதும் அவரிடம் கூடியதில்லை. அவரது எல்லைகள் மிக மிக வலுவானவை. அவரது எழுத்துக்களில் மிகப்பெரும்பாலானவை இதழியல் தேவைகளுக்காக எழுதபப்ட்ட ஆழமற்ற வெற்றுரசனைக்குரிய அவசர வெளிப்பாடுகள்தான்.

சுஜாதாவை முற்றிலும் நிராகரிக்கும் ஒரு தரப்பு உண்டு, சிற்றிதழ்களில். அதை நான் ஏற்கவில்லை. அவரது ந்டை மற்றும் சிறுகதைகளை தமிழின் இலக்கிய சாதனையாக முன்வைத்துவருகிறேன் – இருபது வருடங்களாக.. அவர்களிடம் விவாதிக்க தயாராக இருக்கிரேன். அவரை இலக்கியமேதை என்று தூக்கி வைக்கும் மேலோட்டமான வாசகர்களை முற்றிலுமாக புறமொதுக்குகிறேன். இதுவே என் நிலைபாடு.

சுஜாதாவின் அறிவியல் நூல்களை முழுமையாக தவிர்த்துவிடலாம் என்றுதான் நான் பொதுவாசகர்களுக்குச் சொல்வேன். கொஞ்சம் காலாவதியானவை என்றாலும் நான் பரிந்துரைப்பவை சோவியத் ருஷ்யாவால் வெளியிடப்பட்ட அறிவியல் நூல்கள் -ராதுகா மற்றும் முன்னேற்ற பதிப்பக ஆக்கங்கள். அனைவருக்குமான’உடலியங்கியல் ,அனைவருக்குமான இயற்பிய்ல், நம்முள் செயல்படும் சைபத்தீனியம், வேதியயலைப்பற்றிய கதைகள், மனிதன் எங்ஙனம் பேராற்றவல் மிக்கவன் ஆனான்பொழுதுபோக்கு பௌதீகம் அனைவருக்குமான இயற்பியல் போன்றவை முக்கியமான ஆக்கங்கள். அவை தமிழின் அறிவியல் கலைச்சொற்களை உருவாக்கியவை. போலியாக வேடிக்கை காட்டாமல் அறிவியலையே ஆர்வமூட்டும் விஷயமாக முன்வைத்தவை. அத்தனை நூல்களையும் நான் வாங்கி சேமித்தேன். என் பிள்ளைகளுக்கும் கொடுத்தேன். ஒரு பொதுவாசகனாகிய நான் அறிவியலுக்குள் நுழைய அவை உதவின

அடுத்தபடியாக நெடுஞ்செழியன் கல்வியமைச்சராக இருந்த எழுபதுகளில் தமிழில் பட்டப்படிப்புகளைக் கொண்டு வருவதற்காக உருவாக்கப் பட்ட பாடநூல்களைச் சொல்வேன். கிட்டத்தட்ட 600 நூல்கள் வெளி வந்துள்ளன. எல்லா துறைகளிலும். பொது வாசகனும் எளிதாக தமிழில் வாசிக்கலாம். இவற்றையெல்லாம் எவரேனும் மீண்டும் தமிழில் பதிப்பிப்பது நல்லது. ருஷ்ய நூல்களுக்கு பதிப்புரிமை இல்லை

ஜெ

முந்தைய கட்டுரைதூய அத்வைதம்
அடுத்த கட்டுரைஓர் இணைமனம்