இலக்கியமெனும் நுகர்பொருள்

அன்புடைய ஜெயமோகன் ஐயா,

நான் உங்களது இணைய வாசகன். உங்களது அறம் சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை…குறிப்பாக யானை டாக்டர். முதலில் உங்களுக்கு நன்றி. காந்தியம், திராவிடம், இந்திய பண்பாட்டு பாரம்பரியம், ஜனநாயகம், மெய்ஞானம்-மதம்-மதவெறி, இடதுசாரி இயக்கவியல் ஆகியவற்றில் மாற்றுச்சிந்தனைகளை அறிமுகப்படுத்தியமைக்காக….

எனக்கு இலக்கிய அறிவு கிடையாது. எனது குடும்ப மத பின்னணி காரணமாக இருக்கலாம். ஆனாலும் வாசிக்கும் பழக்கம் சிறுவயது முதலே உள்ளது. ஜெயகாந்தனை பிடிக்கும். அவரது சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். நாவல்களை வாசித்ததில்லை ஒரு வீடு ஒரு மனிதன்…….தவிர. உங்களது விளக்க உரையால் பாரீஸுக்கு போ வாசிக்கும் ஆவல் உள்ளது. ஆயினும் அவரிடம் ஒரு திமிர் (நேர்மை) இருக்கும். அதுவே என்னை அவரிடம் என்னை ஈர்த்தது. அது தங்களிடமும் உள்ளதாகவும் உணர்கிறேன்….உங்களது கத்தி கூர்மையாக உள்ளது. உங்களது நாவல்களை வாசிப்பதற்கு முன் எனை சிறிதாவது தயார் படுத்தி கொள்ள வேண்டும். மென்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்….. நன்றி வணக்கம்….

ப்ளெஸிங்டன்,
திருநெல்வேலி.

அன்புள்ள பிளெஸிங்டன்

தமிழகத்தில் மிகப்பெரும்பாலான குடும்பங்களில் கலை -அறிவு சார்ந்த பின்னணி கிடையாது. ஒவ்வொருவரும் தங்கள் சொந்தத் தேடலால்தான் அதைக் கண்டடைகிறார்கள். அதை சூழலில் எவரும் மதிப்பதில்லை. ஒருகட்டத்தில் அவர்களுக்கே அதன் பயன்மதிப்பு சார்ந்த ஐயம் வந்துவிடுகிறது. ஆகவே இருபதுகளில் இலக்கியத்திற்குள் வருபவர்கள் நாற்பதுகளில் வெளியேறிவிடுகிறார்கள்.

கலையிலக்கியம் உலகியலில் ஒன்றும் தருவதில்லை என்றுதான் சொல்லப்படும். ஆனால் ஒருகோணத்தில் அது பிழை. நாம் இன்று மேலும் மேலும் சிறிய வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கிறோம். மாதாந்திரத் தவணைகளைக் கட்டுவதற்காக வாழ்வதே நம் நாட்களாக இருக்கிறது. மகிழ்ச்சி என்பது வாங்குவது தின்பது கேளிக்கை என்பதாக ஆகிவிட்டிருக்கிறது

அவை நம்மை மகிழ்விப்பதில்லை என்பதையும் நாம் உணர்ந்துகொண்டிருக்கிறோம். நாம் உண்மையில் இந்த ஒவ்வொரு தருணத்திலும் சோர்வுறுகிறோம். ஒன்றை வாங்கியதும், நல்ல உணவுக்குப்பின், ஒரு கேளிக்கைக்குப்பின் அதிருப்தியையே அடைகிறோம் உண்மையான இன்பம் என்பது என்ன என்று தெரியவில்லை

கலைகளும் இலக்கியமும் நாம் எதுவோ அதை நிறைவுறச்செய்கின்றன. நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றன. ஒரு கேரளநண்பர் சொன்னார், ஒரு நல்ல கதையை வாசித்து நான் அடையும் மகிழ்ச்சியை வேறு வகையில் அடைய ஒரு மெர்சிடஸ் பென்ஸ் கார் வாங்கவேண்டும், ஆகவே இலக்கியம் மிக மலிவானது என்று

அந்தக்கோணத்தில் இன்றைய நம் வாழ்க்கையில் மிகமலிவான அற்புதமான நுகர்பொருளே இலக்கியமும் கலையும்தான். அதைநோக்கி வருபவர் ஒரு பெரிய உலகைக் கண்டடைகிறார். வாழ்நாள் முழுக்க சலிப்பின்றி வைத்திருக்கும் ஒன்றை

வாழ்த்துக்கள்

ஜெ