அன்புள்ள ஜெயமோகன் சார் ,
ஒரு சிறந்த படைப்பு என்பது, அதை அனுகுபவரை, முழுவதுமாக உள்ளிழுத்து,…. அவருக்குள்ளே இருப்பதை வெளிக்கொணர்ந்து .., ஒத்து நோக்கி.., விமர்சித்து.., , அனுபவித்து.., மறுத்து…, ஒரு முடிவின்மைக்கோ, முடிவுக்கோ, வருதலே.
அவ்வகையில், கொற்றவை எனக்கு பெரும் வியப்பு,
குனிந்து படித்துகொண்டிருக்கும் வேளையில், கண்முன்னேயும், தலைக்கு மேலும், வேறு ஒரு உலகம் உணரப்பட்டுக்கொண்டே இருப்பது இந்த நாவலின் அடிநாதம்.
”அறியமுடியாமையின் நிறம் நீலம் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள் ” என்று நம் முன்னோரில் தொடங்கும் நாவல், முன்னோர் பற்றி நம்புவதற்கும், கற்பனை செய்துகொள்வதற்கும், அனைத்து சாத்தியங்களையும் வகுக்கிறது.
ஒருமுறை கணிகையின் இல்லத்தில் மதுவுண்டு களித்து, யாழின் மீது சரிய, அது விம்மியது கேட்டு, அகம் விழித்து, அன்றிரவே யாழின் எண் தொழிலும், கற்று யாழின் இறைவி மாதங்கியை வணங்கி, இனி இசை அன்றி தனக்கு மீட்பு வேறில்லை என்று கனியும் ,
கோவலனும்.
மாநாய்க்கனின் மாசற்ற செல்வியாய் கண்ணகியும், கணிகையர் வீதியின் மாதவியும், இந்த கொற்றவை கூத்தின் படை கருவிகள் .
கோவலனும் கண்ணகியும், புகார் நகரை விட்டு வெளியே வர, கண்ணகியை நிழலன்றி வேறு ஒன்றும் பின் தொடர்வதை அறிந்து அஞ்ச, ” அஞ்சற்க ” எனும் இனிய பெண் குரல் கொண்ட கவுந்தி அடிகள் இணைய, மதுரை நோக்கிய ”ஊழின்” பயணம் தொடர்கிறது.
ஐவகை நிலங்களையும் ”நீலி” எனும் கவுந்தி அன்னையின் துணையுடனும் எண்ணற்ற அனுபவங்களின் மூலமாகவும் கடக்கும் தோறும் ,கண்ணகியில் ஒவ்வொரு நொடியிலும்,கணக்கற்ற காலங்களின் மாற்றம் கண்டு கோவலன் அவளை அஞ்சுகிறான், மறுகணம் தன்னிரக்கம் கொண்டு விழி நிறைக்கிறான் அவளோ தாய்மையின் கனிவுடன் நிறைந்தே இருக்கிறாள்.
ஒவ்வொரு நிலத்தையும் நோக்க கண்ணகிக்கு நீலியால் அதற்கான விழிகள் வழங்கப்படுகிறது. இதுவும் அவளுள் சிறிது சிறிதாய் கொற்றவை எழும் தருணம்.
பாண்டிய நாட்டிற்கு தீயூழ் சூழும் தருணமாக,…..
அரசவையில் மறவர் நெறி ஓங்குவதும்
பழையன் குட்டுவன் மறவர் குடி, நெல் கவர்தலுக்கு, துணை போவதும்
..,
மற்ற எண் குடியினர் சினம் அரும்புவதும்,….
சிலம்பு விற்க வணிக மன்றிற்கு வரும் கோவலனை, மாட்டிவிடும், தலை பொற்க்கொல்லரும்….. ” செய்வன செய்து சிலம்பு கொண்டு பெயரும் என்று பாண்டியன் உரைப்பதும்…….,
காவலர் தலைவன் சொல்லி முடிப்பதற்குள் , கல்லாக்காவலன், கோவலனை வெட்டி வீழ்த்துவதும்…..,
அணங்கு எழும் காதையில் அனைவரிலும் பேரன்னை எழுவதும்….,
வழக்குரை காதையில்,பாண்டியனின் இறப்பும் ……
பத்து, நூறு, ஆயிரம் என மதுரை நகர் வீதி அனைத்திலும், அனைவரிலும் அணங்கு எழ, அறம் தேய்ந்த மதுரையை முலைக்குறை காதையில் முடித்தாள் கண்ணகி.
அறத்தின் மீது சிறிதளவேணும் நாட்டம் உள்ள எவருக்கும் இக்கதையின் காட்சிகளில்,தானும் ஒருவராய் இருக்க அகம் விளைவது திண்ணம்.
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே,
பாண்டியன் மஞ்சத்தில் புரள்கிறான்,தான் தினம்தோறும்,துதித்து கொண்டாட வேண்டிய மக்கள் என்னும் தெய்வத்தை,புறக்கிறான்…..இங்கே அன்னையர் அணங்காக மாறுகின்றனர் .
சேரன் காடேகி, மலைவாழ் மக்களையும்,காட்டையும், அதன் தொண்டு கதைகளையும்,குடி மூத்தோரையும், வணங்கி , தொழுது, ஆரத்தழுவி, கொண்டாடுகிறான். ……..இங்கே கொற்றவை அன்னையாகிறாள் .
அதன் பின், சேரன் செங்குட்டுவனுக்கு , சீத்தலை சாத்தனார் சொல்லும், கண்ணகியின் கதையில் தொடங்கி, டச்சு காரர்களின் வருகை, கண்ணியன்னையின் முகமும், தூய அன்னையின் முகமும் பொருந்தி இருத்தல், மணிமேகலை காணும் காப்பிரிய சுவரோவிய காட்சி, ஐய்யப்பன் எனும் மலைவாழ் தெய்வம் இளங்கோவடிகளாக, மருவுதல், என மிக நீண்ட பின்னணியில் கதை தொடர ,….
இன்றைய எழுத்தாளனாக தன் குடும்பத்துடன் கன்னியாகுமரி செல்லும் மனிதர் தன் மகளில், கண்ணியன்னையை யும் , நீல கடல் வெளியில் தாயையும் உணர்தல்.நீண்டு முடிகிறது வரை , இந்நாவல் .
கொற்றவை காட்டும் சித்திரம் என்ன ….
அறம் தாழ்ந்து , பிரபஞ்சம் சமநிலை தவறும் தோறும், அனைத்திலும் மேலான சக்தி, பழையனவற்றை அழித்து, தன்னை தானே, புதுப்பித்துக்கொள்கிறது , இது தொன்று தொட்டு இன்றுவரை, நடைபெறும் பெரும் நிகழ்வு, காட்டை அழித்து, வீடுகள் கட்டும் ஒவ்வொரு கிராமங்களும், அந்த காட்டு மிருகங்களால், தாக்கப்படுவதும்,மறுபடியும் தங்கள் எல்லையை அவை நிறுவிக்கொள்வதும்…. கங்கையின் கரையை 30 வருடங்களாக சுருக்கிக்கொண்டே வந்த மனித குலத்தை ஒரே வாரத்தில் விழுங்கி தன முழு கொள்ளளவுடன் மீண்டும் ஓடும் கங்கையும், இயற்கை சக்தியின் சமநிலை கொள்கையின் நீட்சியே.
முழுவதுமாய் உள்ளே இழுத்து ,அழுத்தி மூடிக்கொள்கிறது மிகப்பெரிய மலர், உள்ளிருப்பது மதுவோ, நஞ்சோ, அறியாது அள்ளி அள்ளி பருகிவிட்டு, வெளிவர விரும்பாது , கிறங்கியோ, மறந்தோ, உள்ளேயே கிடக்கிறது மனம் என்னும் வண்டு. இந்நூலின் வாசிப்பு அனுபவம் இப்படித்தான் இருந்தது .
ஆக, இந்நூல், மறத்தின் குருதி பருகிய அறத்தின் குறுவாள்,
கொற்றவை காவியம் இந்த வெளியில் யாருக்கோ அல்லது அறம் பிழைக்கும் ஒவ்வொருவருக்கும் விடுக்கப்பட்ட, எச்சரிக்கை அல்லது செய்தி.
பி.கு :- அடுத்த ஒரு மாதத்திற்கு என் மகள் காயத்ரிக்கு கொற்றவை கதை தான்,….அத்தனை அணங்குகள் போல் எப்படி நடித்துக்காட்டுவது என்று தான் புரியவில்லை .
அன்புடன்
சௌந்தர் .G