சோர்வு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் எழுதும் முதல் கடிதம் இது உங்களுக்கு. நான் உங்களது இணையதளத்தை விடாது படிப்பவன். உங்களது எழுத்து ஒரு புரட்சி, எனக்கு ஒரு போதை. நான் பலமுறை எனக்கு நானே அறிய முயன்ற கேள்விகளுக்கு உங்கள் எழுத்து பதில் அளித்து உள்ளது. நான் வாழ்க்கையில் சில தோல்விகளை சந்தித்தவன் ஆனால் அந்த தோல்விகளில் உறங்க மறுப்பவன். உறக்கமற்ற விழிப்பில் தேடிய விடை உங்கள் எழுத்து. இது தொடர வேண்டும்.

நன்றி

பாகர்

அன்புள்ள பாகர்,

அறிவுரைகள் சொல்வது எளிது என்பார்கள். ஆனால் உண்மையான அறிவுரைகள் சொந்த அனுபவம் சார்ந்து சொல்லப்படுபவை. ஆகவே அவை அரிதானவை. கடினமானவை

என் அனுபவத்தைச் சொல்கிறேன். எனக்கும் கடினமான தோல்விகள், கசப்புகள் வந்துள்ளன. வந்துகொண்டும் உள்ளன.அவற்றை எப்படிக் கடந்தேன் என்றே சொல்ல விரும்புகிறேன். பெரும்பாலான சோர்வுகள் விழுந்த இடத்திலேயே கிடப்பதனால் வருபவை என்பதே என் எண்ணம்.எண்ணி ஏங்கி சலித்து ஒரு கட்டத்தில் அதுவாகவே நம் மனம் ஆகிவிடும். அது இல்லாவிட்டால் செய்வதற்கொன்றும் இல்லாமல் ஆகும். அதையே செய்ய ஆரம்பிப்போம். இதுதான் நடப்பது

என் வாழ்நாள் முழுக்க ஒரு தோல்வி வரும்போது அந்த உச்சநிலையில் சரிதான் இது சிலநாட்களுக்கு மட்டும்தான் என்று சொல்லிக்கொள்வேன். அந்த மையமான நாலைந்து நாட்களை எப்படியாவது கடந்தால் பிரச்சினை பெரும்பாலும் முடிந்துவிடும். அந்த நாட்களில் எந்த தீர்வையும் சிந்திப்பதில்லை. எதையும் கற்பனைசெய்வதில்லை. தன்னிரக்கத்தை வளர்த்துக்கொள்வதில்லை மாறாக என்னை இடம் மாற்றிக்கொள்வேன். மானசீகமாகவும் உடல்ரீதியாகவும். எனக்கு எப்போதும் பயணம் உதவியிருக்கிறது

பின்னர் அந்த செயலின் சூழலிலிருந்து விலகி மேலும் விரைவுடன் அடுத்ததை நோக்கிப் பாய்வேன். செயலில் இருந்து செயலுக்குச் செல்வேன். ஒருபோதும் நின்றுவிடமாட்டேன். நான் சோர்வை அடைவதில்லை. காரணம் வாழ்க்கை மிகமிகக் குறுகியது, நேரமில்லை என்ற உணர்வே என்னை இயக்குகிறது

ஜெ

முந்தைய கட்டுரைகரடி – கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 16