மன்னிக்கவும்…

sorry-cute-dog

நேற்று முன்தினம் பேருந்தில் நாகர்கோயில் வந்து இறங்கினேன். பெட்டியையும் மடிக்கணினியையும் எடுத்துக்கொண்டு ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்தேன். அருண்மொழியிடம் அன்பாக நாலு வார்த்தை பேசிக்கொண்டிருந்தபோது ‘பாஸ்போர்ட் எல்லாம் எங்கே?” என்றாள். ‘பெட்டியில் இருக்கிறது’ என்றாள். ‘இப்பவே எடுத்து வச்சிடறேன்….அப்றம் மறந்திருவேன்’ என்று வந்து பார்த்தால் பெட்டி வேறு

அதே நிறம்தான். ஆனால் என் பெட்டியில் ஏகப்பட்ட பயணவிழுப்புண்கள். என்னைமாதிரியே ஏராளமான லேபிள்கள். இது புத்தம்புதியதாக இருந்தது. பயணத்திற்கு இனி நாலைந்து நாட்கள்தான். பதறியடித்து வெளியே ஓட முயன்றேன். அருண்மொழி பேருந்துநிறுவனத்தின் குறுஞ்செய்தியை பார்த்தாள். அதில் நல்லவேளையாக ஓட்டுநர் எண் இருந்தது.

உடனே அவரை கூப்பிட்டேன். அவர் மார்த்தாண்டம் கடந்திருந்தார். ‘சார் பெட்டி மாறிட்டுது… கொண்டு வாரேன்” என்றேன். ‘நான் நிப்பாட்ட முடியாது சார். பாசஞ்சர்ஸ் இருக்காங்க. நீங்க திருவனந்தபுரம் வந்திருங்க” என்றார். ‘என் பெட்டி இருக்கா ?” என்றேன். ‘அதை களியக்காவிளையிலேதான் பாக்கமுடியும்’ என்றார்

கிளம்பி பஸ்ஸ்டாண்ட் போனேன். திருவனந்தபுரம் பஸ் வந்தது. அரசாங்க பஸ். தக்கலை செல்வதற்குள் முப்பது இடத்தில் நிறுத்தினார்கள். எனக்கு செங்குத்தாக அமரவும் முடியவில்லை. முதுகுவலி. தக்கலையில் இறங்கி ஒரு டாக்ஸி பிடித்தேன்.

அருண்மொழி போனில் அழைத்தாள். ‘ஜெயன் ஆட்டோக்காரர் வந்திருக்கார். பேசு’ ஆட்டோக்காரர் கெத்தாக ‘சார் ஆட்டோல ஒரு லேப்டாப் விட்டுட்டுப்போனீகளா?” என்றார். பதறிப்போய் ’ஆமா சார்’ என்றேன். ‘அடையாளம் சொல்லுங்க’ என்றார். ‘உள்ள என் பொண்டாட்டி போட்டோ ஒண்ணு இருக்கும் சார். அவதான் இப்ப உங்ககிட்ட பேசிட்டிருக்கா’

அவர் சென்றதும் அருண்மொழி ‘ஜெயன் நீ என்னதான் நினைச்சிட்டிருக்கே?’ என்றாள். நான் என்ன நினைக்கிறேன் என்று என்ன சொல்ல? ‘உன்னைத்தான் அருணா’ என்றேன். போனை வெட்டிவிட்டாள்.

திருவவனந்தபுரம் செல்வதற்குள் நகம் முழுக்க கடித்து துப்பிவிட்டேன். முந்தையநாள் மதியம் இயக்குநர் சங்கர் அலுவலகத்தில் சாப்பிட்டது. பச்சைத்தண்ணீர்தான் அதன்பிறகு. காலையில் டீகூட குடிக்கவில்லை.

மார்த்தாண்டத்தில் சாலைபோட்டார்கள். களியக்காவிளையில் பாலம் கட்டினார்கள். நெய்யாற்றின்கரையில் இரண்டையும் செய்தார்கள். பேருந்துகள் ஹாரனை மிக அதிகமாக பயன்படுத்திக்கொண்டிருக்க பைக்குகள் சந்துகளில் புகுந்துசென்றன

பத்து மணிக்கு திருவனந்தபுரம் சென்றேன். அதற்குள் ஓட்டுநர் பன்னிரண்டு முறை கூப்பிட்டுவிட்டார். ‘சார் இங்க பஸ்ஸ ரொம்ப நேரம் நிப்பாட்ட முடியாது. நாங்க டிப்போ போணும்… இங்க ஒரு பொம்புள நின்னு அளுகுது பாத்துக்கிடுங்க’

அந்தப்பெண்மணிக்கு சன்னமாக மீசை இருந்தது. என்னை நல்ல தெற்குதிருவிதாங்கூர் மொழியில் வசைபாடுமெனத் தெரிந்தது. கடவுள் அருளால் தம்பானூரில் அப்பகுதியில் காரை நிறுத்தக்கூடாது. ‘சாரி சாரி சாரி’ என்று சொல்லிக்கொண்டே சூட்கேஸுடன் திரும்ப ஓடி காருக்குள் ஏறிக்கொண்டேன். ‘நிங்ஙள் எந்தாணு மனுஷ்யா…’ என்று அந்த அம்மாள் சொன்னதை வரலாறு பதிவுசெய்யவில்லை.

பன்னிரண்டு மணிக்கு வீட்டுக்குவந்தேன். இரண்டாயிரம் ரூபாய் டாக்ஸி செலவு. அருண்மொழி அழைத்து ‘எவ்வளவு டாக்சிக்கு?” என்றாள். சொன்னதும் மறுமொழி இல்லாமல் போனை வெட்டினாள். அதற்குமுன் அமெரிக்காவிலிருந்து திரும்பும் தேதியை ஜூலை 26 என்பதற்குப்பதில் ஜூன் 26 என்று தவறாகச் சொல்லி முன்பதிவுசெய்து அதை கனடாவிலிருந்து உஷாமதிவாணன் சுட்டிக்காட்டியிருந்தார். அதை ரத்துசெய்து திரும்ப பதிவுசெய்யப்போக பதிநான்காயிரம் வீணாகியது. அருண்மொழி கணக்கில் கவனக்குறைவுக்கான மீட்டர் ஓடிக்கொண்டே இருக்கிறது.

உள்ளே போய் முதலில் ஒரு சிங்கிள் டீ குடித்தேன்.மேற்கொண்டு எதையும் சாப்பிடத்தோன்றாமல் படுத்துக்கொண்டேன். தூக்கம் வரவில்லை. வெண்முரசு எழுதவேண்டும். பத்து அத்தியாயமாவது முன்னால்செல்லாமல் நான் நிம்மதியாகக் கிளம்பமுடியாது எழுந்துகொண்டேன்

வெண்முரசு ஒரு நிரந்தரச் சவால். ஒவ்வொருநாளும் ஏதாவது ஒன்று திறந்து தானே அந்த அத்தியாயம் நிகழவேண்டும். நாலைந்து பத்திகளுக்குள் நிகழ்ந்தால்தான் அன்றைய எழுத்து. இல்லையேல் வீண். அமர்ந்து கண்மூடித் தியானிக்கத் தொடங்கினேன்

சுமார் நாற்பத்தைந்து நாட்களாக ஒரு ஷேவர் வாங்கவேண்டுமென நினைக்கிறேன். நினைவு வரும்போது பணமில்லை. பணமிருக்கும்போது நினைவில்லை. பழைய ஷேவர் முகத்தை புண்ணாக்கி வைத்திருக்கிறது. சின்னச்சின்ன விஷயங்களில் கூட நினைவு நிற்கவில்லை

ஆனால் பெரும் பரவசத்துடன் துவாரகையில் அலைகிறேன். அஸ்தினபுரியை கண்ணருகே காண்கிறேன். அங்கே ஒவ்வொன்றும் அவ்வளவு எளிதாக இருக்கிறது. துல்லியமாக தெரிகிறது. ஒவ்வொரு கணமும் அடுத்த கணம் ரயிலைப்பிடிக்கவேண்டியிருப்பதுபோல ,சூதாட்டத்தில் பகடையை பார்ப்பதற்கு முந்தைய கணம்போல சென்றுகொண்டிருக்கிறது. உயிராற்றலின் உச்சம் இது. நினைவுத்திறன், கற்பனை, காமம், சினம் எல்லாமே.

நடுவே அமெரிக்கப் பயணநிரல்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றை பார்க்கும்போதுதான் அமெரிக்கா போவதே நினைவுக்கு வருகிறது. எந்தத் தகவலும் நினைவில் நிற்கவில்லை. ஆகவே எவர் எதைக்கேட்டாலும் ஆமாம், ஓக்கே,ரைட் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்

ஆயிரம் மின்னஞ்சல்களுக்குமேல் பதில்போடப்படாமல் காத்திருக்கின்றன. நூறுக்கும் மேல் கடிதங்கள் படிக்கப்படாமல் காத்திருக்கின்றன. எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை

ஆகவே பதில் பெறாத நண்பர்கள், தொலைபேசி எடுக்கப்படாத நண்பர்கள், குழப்பத்திற்கு ஆளான நண்பர்கள் அனைவரிடமும் தாழ்ந்து மன்னிப்பு கோருகிறேன். இப்படி இருந்துகொண்டிருக்கிறேன்

முந்தைய கட்டுரைஸ்ரீனிவாசின் பதிவு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 7