ஓர் இணைமனம்

இனிய ஜெஎம்

1986 ஆம் வருடத்தைய கந்தல் புத்தகம் ஒன்றை புரட்டிகொண்டிருந்தேன். அது பிட்மேன் சுருக்கெழுத்தை அறிமுகம் செய்து 100 வருட நிறைவு வருடமாம். விவேகானந்தரின் பல சொற்பொழிவுகளை நேரடியாகக் கேட்டு ஜெ ஜெ குட்வின் என்பவர் சுருக்கெழுத்தில் பதிவுசெய்தாராம். தன் 28 ஆவது வயதிலேயே மரணமடைந்துவிட்ட அவருக்கு அவரது அப்பணியைப்பாராட்டி ஊட்டியில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டதாம் சுருக்கெழுத்தின் நூற்றாண்டி ஒட்டி கார்த்திகேயன் என்பவர் இச்செய்தியை அந்த இதழில் எழுதியிருந்தார். நினைக்க ஆச்சரியமாக இல்லை? தொழில்நுட்ப வளர்ச்சி எத்தனை விஷயங்களை காலாவதி ஆக்கிவிட்டிருக்கிறது, காலாத்தால் கரைத்தழிக்க முடியாமல் மிஞ்சி நிற்கின்றன விவேகானந்தரின் மொழிகள்.

இந்த அனுபவத்தை வேறு வடிவில் தந்தது ‘மதராசப்பட்டிணம்’ படம். மற்றொரு வணிக உற்பத்திதான் என்றாலும் மிகமிக மரியாதைக்குரிய விஷயமாக அந்த வணிகத்தை கையாண்டிருக்கிறார் இயக்குநர் விஜய். ‘சிங்கம்’ போன்றவற்றுக்கு பரிகாரமாக ‘களவாணி’ ‘மதராசப்பட்டினம்’ போன்றவை சமகாலத்திலேயெ எநிகழ்வது ஆச்சரியமான விஷயம்தான். மதராசப்பட்டினத்தில் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் தனக்கான அத்தனை சவால்களுடன் இலக்கியவாதியாகவே இயங்கியிருக்கிறார்.

பொதுவாக இலக்கியவாதிகள் சினிமாவுக்குப்போனால் கற்பிழக்கப்போகிறாள் கண்ணகி என்ற விதாத்தில் கலாச்சராக்காவலர்கள் பதறுவார்கள். ஏதேனும் நல்ல விஷயங்கள் – குறிப்பாக மதராசப்பட்டினம் பாடல்கள் போன்றவை – நிகழ்ந்தால் சர்வ ஜாக்ரதையாக வாய் திறக்க மாட்டார்கள். என் நோக்கில் இலக்கியவாதிகள் தங்கள் பங்களிப்பை தமிழ் சினிமாவில் செலுத்த சரியான நேரம் இதுவே. அடுத்த அலை எப்போது எழும் என தெரியாது. இடைநிலை சினிமாக்களின் காலம் இது. இலக்கியவாதிகளின் பங்களிப்பு இல்லாமல் அது செழுமை அடையாது.

கோணங்கியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது குறிப்பிட்டார் ‘நிறையபேர் பணம் புகழுக்காக சினிமாவுக்குப்போய் இலக்கியத்தை இழந்துட்டாங்க’ என்று. அப்போது அவரிடம் வாதம் புரியும் மனநிலை எனக்கில்லை. எஸ்.ரா சினிமாவுக்குப்போனபின் எழுதியதுதானெ ‘யாமம்’. சினிமாவால் யாமத்தில் நிகழ்ந்த பாதிப்பு ஏதேனும் உண்டா என்ன? இவர்களின் பதற்றத்தைப்பார்த்தால் சினிமாவுக்குப்போனபின் எழுதியதனால அசோகவனம் ஒரு இலக்கியப்படைப்பல்ல என்று சொல்லிவிடுவார்கள் என்று நினைக்கிறேன்

என்வரையில் சொல்ல ஒன்றுண்டு ‘நான் கடவுள்’ ‘அங்காடித்தெரு’ போன்றவற்றை விலக்கிவிட்டு நல்ல தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதிவிட முடியாது. உங்கள் பங்களிப்பு இவ்வகை படங்களுக்கு இருக்கட்டும். சினிமாவால் உங்களுக்கு கிடைக்கும் பொருளாதார நிறைவு கொற்றவை போல இன்னும் பல கிளாசிக்குகள் உங்களிடம் இருந்து வர வழிவகுக்கும் என்று தெரிகிறது.

சென்ற ஞாயிறு 26-7-10 அன்று பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தில் பொருளாதாரம் காரணமாக தள்ளாட்டத்தில் இருந்த அரசு நூலகத்துக்காக நண்பர்கள் சேர்ந்து ஓர் இலக்கிய அரங்கம் நிகழ்த்தினோம். மொத்த பங்கேற்காளர்கள் ஆரம்பத்தில் 15 பேர். சிறிது சிறிதாக கூட்டம் கூடியது. கிராமத்து பஞ்சாயத்து தலைவர் வந்துவிட்டார். இறுதியாக நூலக வைப்புநிதிக்காக 2000 ரூ சேர்த்தோம். ஒரு நண்பர் மேஜை நாற்காலி வாங்கியளிக்க பொறுப்பேற்றுக்கொண்டார். மிக இனிய அனுபவம்.

இரண்டு தமிழ் வாத்தியார்கள் நான் குறிப்பிட்ட கவிதைகள் யார் எழுதியவை என்று கேட்டார்கள். தேவதேவன் என்று சந்தோஷமாகச் சொன்னேன். அந்த நூலகம் சொந்தக் கட்டிடத்தில் தொடங்கி 45 வருடங்கள் ஆகின்றன இந்த ஆண்டுக்கான இருப்புநிதி 7000 ரூபாய். இந்த 45 வருடங்களில் பதிவான உறுப்பினர்கள் வெரும் 927 பேர். ஆச்சரியம் அதில் 46 பேர் பெண்கள். நூலகர் காமராஜ் சொன்னார் அவர் கண்ட முதல் ‘இலக்கிய மன்றம்’ இதுதான் என்று. நான் காணப்போகும் இலக்கியமன்றம் ஆகஸ்ட் 27 அன்று ஊட்டியில் . ஒரு வெறும் பார்வையாளராக ஓரத்தில் அமர்ந்து கவனிக்க மிகுந்த விருப்பத்தில் இருக்கிறேன்.அன்றாடப்பிழைப்புக்காக தொழில்புரிதல் என்பது புலிவாலை பிடித்த கதை. நல்லவேளை இடையில் ஒரு மாதம் இருக்கிறது

ஞாயிறன்று நடுவீரப்பட்டு ஊரில் இலக்கியமன்றம் முடித்தபின்னர் ஒரு குன்றுக்குச் சென்றோம். அதன் மேலே சமணகோயில். எல்லாத்தையும் துரத்திவிட்டு லிங்கத்தை நட்டு சைவக்கோயிலாக ஆக்கியிருக்கிறார்கள். மிக அழகான கோயில் என் நண்பர் வெங்கடாசலத்துடன் இரவு 9.30 முதல் அதிகாலை 330 வரை இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றினேன். கடலூர் முதல் பண்ருட்டி வரை கெடிலம் ஆற்றை ஒட்டி ஒரு பாதை உண்டு. அதில் பயணம். பௌர்ணமி இரவு. சாம்பல் நிறத்தில் ஒளிரும் வானம். குளுமையை கரைத்து ஊற்றியதுபோல முடிவில்லாத ஆற்றுப்ப்படுகை. சாலைவிளக்குகள் அற்ற பால்நிலாச்சாலை. இதெல்லாமே வெறும் பௌதிகம். மன விகாசம் என்பதெல்லாம் ‘சித்தத்தின் பேத நிலையில்’ இருந்து எழுவது என எவரேனும் சொன்னால் நான் பேதையாக இருந்துவிட்டுப்போகவே விரும்புவேன்.

கடலூரில் 15 நாட்களாக மழை. தூவானம்போல. என் அலுவலகம் எதிரே சன் ஷேடில் குடி இருக்கும் மாடப்புறாவை 20 நாட்களாக பார்க்க முடியவில்லை. இன்று காலை பார்த்தேன். மென் மழையில் சிறகுகளை உதறியபடி தத்தித்தி நடந்தது. பக்கத்து மாத்தில் மழைத்துளிகள் தெறிக்க சுடர்வெட்டு போல துடித்துக்கொண்டிருந்தன ஆரஞ்சு நிற மலர்கள். மனிதனாகப் பிறந்ததனாலே பார்க்கக்கிடைக்கக்கூடிய பேரானனந்தம்

பழைய புத்தகக் கடையில் க.நா.சு மொழிபெயர்த்த பாரபாஸ் என்ற சுவீடிஷ் நாவல் ஒன்று படிக்கக் கிடைக்ர்கர்கு. நாவலாசிரியர் மனிதன் என்றாலே அவன் தீமையின் உருவம்தான் என்று எண்ணுகிறார் போலும். இறுதியாக பரபாஸ் தன் சிலுவைத்ன் தனக்கான மீட்சியைக் கண்டுகொள்கிறான். வித்தியாசமான நாவல். குற்றவுணர்ச்சி என்றை கூறினை எடுத்திவிட்டால் கிறிஸ்துவத்தில் மிஞ்சுவது என்ன?

சீனு
கடலூர்

அன்புள்ள சீனு,

என்றும் என் மனதுக்கு நெருக்கமானவர் நீங்கள். இன்று உங்கள் கடிதம் கண்டபோது அது இன்னமும் ஆச்சரியமளித்தது. கிட்டத்தட்ட என் எல்லா உணர்ச்சிகளையும் சமானமாக தொடர்கிறீர்கள். என் இணையதளத்தை நீங்கள் வாசிப்பதில்லை. வாசிக்கும் வசதி இருந்திருந்தால் பால விஷயங்களை நான் ஏற்கனவே அதில் எழுதியதைக் கண்டு வியந்திருப்பீர்கள்.

‘மதராசப்பட்டினம்’ எனக்கு பிடித்த படம். நீங்கள் சொல்வதுபோல அனைத்தையும் காலாவதியாக்கிக்கொண்டு ஓடும் காலத்தை அது நினைவுறுத்திக்கொண்டே இருந்தது. காதலை காலவெளியின் முன்னால் சும்மா வைத்தாலே போதும் ஒரு வகை கவித்துவம் அதற்கு வந்துவிடுகிறது. நா. முத்துக்குமார் எழுதியபாடல்கள் அவரது கவிஞனின் உள்ளத்தால் ஆக்கப்பட்டவை. ஏற்கனவே ‘பூக்கள் பூக்கும் தருணம்’ பற்றி நான் எழுதிவிட்டேன்.

அதேபோல இந்த கலாச்சாரக் காவலர்கள் சமாச்சாரம் பற்றியும் கடுமையாகவே எழுதியிருந்தேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் அனேகமாக வெறும் அற்ப சமரசக்காரர்கள், தங்கள் சமரசங்களைக் கொண்டு பிறரை அளப்பவர்கள். எதையுமே செய்யாதவர்கள், செய்ய இயலாதவர்கள். தமிழில் இந்த மனநிலை ஆரம்பம் முதலே உண்டு. எதையுமே வாசிக்காமல் எழுதாமல் சும்மாவே இருக்கும் ஒருகூட்டம் தாங்கள் சமரசம் செய்யாத காரணத்தால்தான் அப்படி இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும். எதையாவது செய்பவர்களை சமசரம் செய்து ‘வீழ்ந்து’ விட்டவர்கள் என்று சொல்லும். ‘சரி நீ சமரசமற்ற தியாகத்தால் என்ன சாதித்துக்காட்டினாய்?’ என்றால் பதில் இருக்காது.

இவர்களுக்கு எப்போதுமே செயலூக்கத்தையும் படைப்பூக்கத்தையும் அச்சம். நான் விஷ்ணுபுரம் எழுதியபோது ‘தலைகாணி’ நாவல் எழுதி ‘நீர்த்துப்’போய்விட்டேன் என்று இவர்கள் சொன்னார்கள். பதிமூன்று வரி கவிதை, அதிகம்போனால் மூன்றுபக்க சிறுகதை மட்டும் எழுதினால்தான் சமரசம் இல்லா எழுத்தாளனாம். ஆறுமாதம் [தண்ணி போட்டு] தியானம் பண்ணி ஆறு உதவாக்கரை வரிகளை எழுதும் இக்கும்பல் இப்போது மெல்ல மெல்ல வழக்கொழிந்து வருவது ஆறுதலான விஷயம் . அதற்குக் காரணம் வந்துகொண்டே இருக்கும் புதிய வாசகர்கள். அவர்கள் வாசிக்கக் கேட்கிறார்கள், பாவனைகளை அல்ல.

ஆனால் கோணங்கி அப்படிப்பட்டவரல்ல. அவரை நான் ஒரு தூய்மைவாதி என்பேன். எந்த ஒரு பண்பாட்டுச்சூழலிலும் தூய்மைவாதிகளுக்கு அவர்களுக்குரிய வரலாற்றுப்பாத்திரம் உண்டு. அவர்கள் நிலைச்சக்தி. மாற்றங்கள் தறிகெட்டுப்போகாமல் சில விழுமியங்களை சார்ந்து செயல்பட வைப்பவர்கள். அவர்களை தாண்டித்தான் மாற்றம் நிகழமுடியும். புதுமை அடையப்பட முடியும். ஆனால் அவர்கள் எதிர்நிலையில் இருந்தாகவேண்டும். நான் கோணங்கி சொல்வதை ஏற்கவில்லை. அது அவரது அச்சம், வெறும் மனப்பிரமை. ஆனால் அவரை ஒரு தார்மீக சக்தியாகவே காண்கிறேன். எனக்குள் அவர் இருந்துகொண்டு என்னை எச்சரித்துக்கொண்டே இருக்கவேண்டுமென ஆசைப்படுகிறேன்.

நடுவீரப்பட்டு நூலகம் உயிர்பெற்றது அறிந்து மகிழ்ச்சி. அதேபோல குமரிமாவட்டத்தில் உள்ள அருமனை, பயணம் நூலகங்களைப்பற்றி நான் எழுதியிருந்தேன். ஆனால் நூலகம் வாழவேண்டுமென்றால் எத்தனை இளைஞர்கள், சிறுவர் சிறுமியர் அங்கே வருகிறார்கள் என்பதே முக்கியமானது. அது நிகழ வேண்டும்.

‘கெடிலக்கரை நாகரீகம்’ என்று ஒரு முக்கியமான நூல் உண்டு. நான் பள்ளிநாட்களில் வாசித்தது. ஒரு தமிழாசிரியர் எழுதியது. கெடிலக்கரையின் வாழ்க்கை, வரலாறு இரண்டையும் இணைத்து எழுதப்பட்டது. ஒரு ‘மைனர் கிளாசிக்’ என்றே சொல்லிவிடலாம் சமீபகாலமாக அச்சுக்கே வரவில்லை. எங்காவது கிடைத்தால் மறு அச்சு கொண்டுவந்துவிடலாம். பார்க்கவும்

நீங்கள் பேர் லாகர் குவிஸ்டின் ‘பாரபாஸ்’ நாவலைச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். அதை க.நா.சு அன்புவழி என்ற பேரில் மொழியாக்கம் செய்தார். தமிழிலக்கியத்தில் ஆழமான பாதிப்பைச் செலுத்திய மொழியாக்கநூல் அது. வண்ணநிலவன் தன் ஆதர்ச நூலாக அதைத்தான் சொல்வார். கிறித்தவத்தின் மெய்யியலை அது கலையனுபவமாக ஆக்குகிறது. பாவம்- குற்றவுணர்ச்சி – தியாகம் என அதை வகுக்கலாம். பாவம் மூலம் உருவாகும் குற்றவுணர்ச்சியை தியாகம் மூலம் வெல்வதே கிறித்தவத்தின் வழி.

உங்கள் சொற்களை மிகுந்த உவகையுடன் வாசித்தேன். நீங்கள் எழுதிய இக்கடிதத்தை நானே தட்டச்சிட்டு வலையேற்றுகிறேன். ஒரு காரணத்துக்காக. அன்புள்ள சீனு, வாசகன் எழுத்தாளனாக ஆகும் ஒரு தருணம் உண்டு. அதை நோக்கி வந்திருக்கிறீர்கள். நீங்கள் எழுதுவது உங்கள் விருப்பம். ஆனால் நீங்கள் எழுத முடியும்

அன்புள்ள

ஜெ

முந்தைய கட்டுரைசுஜாதாவின் அறிவியல்
அடுத்த கட்டுரைநமது மருத்துவம் பற்றி…