அன்புக்கும் வணக்கத்திற்கும் உரிய ஆசிரியர்களே, தோழர்களே,
அஜிதனை சின்னக்குழந்தையாக கையில் தூக்கிக்கொண்டு அலைந்த நாட்கள் என் வாழ்க்கையில் மிக முக்கியமானவை. அப்போது எனக்கு இரண்டு தலைகள். இரண்டு முகங்கள். ஒன்றுக்கு முப்பத்திரண்டுவயது. ஒன்றுக்கு ஒருவயது. ஒன்றில் இருந்து முப்பத்திரண்டுவரை நீண்டுபரந்த ஒரு மனம். ஆச்சரியமான ஓர் இணைவு. தெருவில் நான் செல்லும்போது என்னை ஒருவர் பின் தொடர்ந்து வந்தால் எனக்கு ஒருவயதா இல்லை முப்பத்திரண்டு வயதா என்ற சந்தேகம் எழும். அந்த உற்சாகத்தை அடைந்தபின் இன்றுவரை நான் அந்த ஒருவயதுக்குழந்தையை கீழே இறங்கவிடவில்லை.
தெருவில் ,வானத்தில் ,வயல்களில் எங்கும் ஆச்சரியமளிக்காத எதுவுமே இல்லை என்பதை உணர்ந்த நாட்கள் அவை. பல்லாயிரம்கோடி ஆச்சரியங்களை ஒவ்வொரு கணமும் நிகழ்த்தியபடி எதுவுமே தெரியாததுபோல சாதாரணமாக இருக்கும் இயற்கைதான் எத்தனை பெரிய குறும்புக்காரி. அவளுடன் விளையாடவும் அதேயளவு குறும்பு இருக்கவேண்டும். நம்மை அவள் மனிதர்கள் என்று நினைத்திருந்தால் நாம் குரங்காக ஆகிவிடவேண்டும். நாயாக குரைக்க வேண்டும். அப்போது அவள் என்ன செய்வாள் பார்க்கலாம்.
வியப்பு கொள்ளும்போது அஜிதன் திரும்பி அவனுடைய பிரகாசமான சிறிய கண்களால் என்னைப் பார்ப்பான். சிலசமயம் கைகளை நீட்டுவான். சுட்டிக்காட்டும்போது குட்டிச்சுட்டுவிரல் மேல்நோக்கியோ கீழ்நோக்கியோ வளைந்திருப்பதனால் அவன் காட்டுவது எதை என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் அதே கணத்தில் நானும் அதைக் கண்டுவிடுவேன். மரத்தில் இருந்து இறங்கி தரையில் எட்டிப்பார்த்த அணில் மீண்டும் மரத்திலேயே ஏறிக்கொள்ளும், மரமே ரகசியமாக கைநீட்டி எதையோ தரையிலிருந்து பொறுக்க முயன்றபின் எங்கள் காலடியில் பயந்து திரும்ப இழுத்துக்கொண்டதுபோல.
ஏரிக்கரை முனியப்பன் கோயிலுக்குச் செல்வோம். நாலாள் உயரமான முனியப்பன் கையில் பிரம்மாண்டமான அரிவாளுடன் அமர்ந்திருப்பார். ஆனாலும் முகத்தில் கிராமியக்களை, பவ்யம். லௌகீகக்கவலைகள் கூட கொஞ்சம் தெரியும். நன்றாகத் தெரிந்த ஒருவரைப்போன்ற சிரிப்பு. முனியப்பனைப்பார்க்க அஜிதனை மல்லாக்கப் பிடித்துக்கொள்ள வேண்டும். முனியப்பன் மீது காகங்கள். அவர் உடலில் வேகமாக ஒன்றையொன்று துரத்தி ஓடும் அணில்கள். வாள்நுனியிலேயே உட்கார்ந்து சிறகுகளை பிரித்துப்போட்டு சாவகாசமாகப் பேன் பார்க்கும் ஒரு காக்கைமாமி.
அதன்பின் ஒருமுறை அஜிதனை பிள்ளையார் கோயிலுக்கு கொண்டுபோனபோது கும்பிட மறுத்துவிட்டான்.”கும்ப மாட்டேன்” என்று தெளிவான அறிவிப்பு. ”சாமிடா” என்றால் ”போ…இது சின்ன சாமி..”என்றான். அங்கே அவ்வளவு பெரிய சாமியே இருக்கும்போது சற்று பெரிய கொழுக்கட்டை மாதிரி இருக்கும் இந்த சாமி எதற்கு? அத்துடன் உள்ளே விளக்கும் மலர்மாலையும் எல்லாம்தான். அணிலும் காகமும் இல்லை.
வரிசையாக லாரிகள் நின்ற சாலையில் நானும் அஜிதனும் வந்தபோது அவன் ஒவ்வொரு லாரியிலும் நீட்டிக்கொண்டிருந்த உச்சியில் உருண்டை கொண்ட கம்பியை தொட்டபடியே வந்தான். நடுவே ஒரு லாரி அசோக் லேலண்ட். அதற்கு குச்சி இல்லை. தாண்டி வந்துவிட்டேன். ”அந்தலாரியிலே குச்சீ” என்று அலறினான். திரும்ப வந்தேன். ”இந்த லாரியிலே குச்சி கெடையாதுடா” என்றேன். ”இந்த லாரியிலே குச்சியக் கொண்டா” என்று கதறல்.
கீழே கிடந்த ஒரு சோளத்தட்டையை எடுத்து அந்த லாரியின் முன்பக்கம் பல்லிடுக்கில் செருகி வைத்து ”இந்தா குச்சி…”என்றேன். திரும்பி என்னை ஐயத்துடன் பார்த்தான். அதை அசைத்தால் கௌரவக்குறைவாக ஒன்றும் ஆகிவிடாதே என்று தலை சாய்த்து சிந்தித்தான். பின்னர் கைநீட்டி அதைத் தொட்டபின் என்னைப்பார்த்து புன்னகைசெய்தான். நானும் புன்னகை செய்தேன். சிரித்தபடி ”ல்லார்ரீ ப்ர்ர்ர்” என்று கூவியபடி உற்சாகமாக குச்சியை ஆட்டி என்னைப்பார்த்து விரிய வாய்திறந்து சிரித்தான்.
எங்கள் கண்கள் சந்தித்த அந்தப்புள்ளியில் எனக்கும் அவனுக்கும் ஒரு விஷயம் புரிந்தது. அந்தப்புள்ளிவழியாக அந்த ஞானத்தை முழுமையாகவே பகிர்ந்துகொண்டோம். அதன்பின் எங்களுக்கு ‘உண்மையில்’ அங்கே எதுவும் இருக்க வேண்டியதில்லை என்றாயிற்று. இரு பலாமர இலைகளை பறித்து இரு தோள்களிலும் வைத்துக்கொண்டால் சிறகுகள் ஆயின. அவற்றை அசைத்தால் இருவரும் விரிந்த வயல்வெளிகளை தாண்டிப்பறந்து நீலம் படர்ந்த கல்ராயன் மலைகளின் மீது எங்கள் நிழல்கள் எழுந்தமர வட்டமிட்டோம். இரு சிறு குச்சிகளை காதில் வைத்துக்கொண்டால் எருமைகளாக ஆகி மண்டை உடைய முட்டிக்கொண்டோம்.
அத்தகைய ஒரு புள்ளி மனிதகுலத்துக்கே எப்போதோ ஒரு முறை தட்டுபட்டிருக்க வேண்டும். அந்த தருணத்தில் பிறந்தன கலையும் இலக்கியமும். ஒரு பூவிலிருந்து ஒரு வசந்தத்தை அறியமுடிவதுதான் கலை என்றார் [மலையாள] மகாகவி வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன். ஒரு பெருமூச்சாக பிரிவையும் ஒரு துளிக்கண்ணீராக மரணத்தையும் அறிந்துகொள்ளும்போது கலையும் இலக்கியமும் முழுமைகொள்கின்றன.
மீண்டும் மீண்டும் இலக்கியம் செய்துகொண்டிருப்பது இதையே. ஒரு துளி தனி அனுபவத்தை கற்பனையால் பெருக்கி ஒரு மானுடப்பொதுஅனுபவமாக ஆக்கிவிடுகிறது. அனுபவமும் அனுபவித்தவனும் அது நிகழ்ந்த சூழலும் எல்லாம் மறைந்தழிந்தபின்னரும் மானுட அனுபவமாக அந்த தருணம் அழியாமல் நின்றுகொண்டிருக்கிறது. தன்னுடைய மனைவியின் மரணத்தை எண்ணி கண்ணீர் விட்ட நாலப்பாட்டு நாராயண மேனன் ‘கண்ணீர் துளி’ யை எழுதினார். இன்று அவர் இல்லை. அவர்காலத்து மானுடர் எவருமில்லை. மரணம் அனைத்தையும் மூடிவிட்டது.பிறந்து பிறந்து வரும் தலைமுறையில் மீண்டும் மீண்டும் நிகழும் பிரிவுத்துயரின் அடையாளமாகக் கவிதை மட்டும் நின்றுகொண்டிருக்கிறது.
ஓர் இலக்கியவாதியாக இலக்கியத்தைப்பற்றி என்னால் இதை மட்டுமே உறுதியாகச் சொல்ல முடிகிறது. இலக்கியம் ஞானத்தை அளிக்குமா? இலக்கியம் விவேகத்தை உருவாக்குமா? இலக்கியம் பண்படுத்துமா? இலக்கியம் நுண்மைப்படுத்துமா? இலக்கியம் நம்மை விடுவிக்குமா? தெரியவில்லை. இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் சொல்ல முடியும் இலக்கியம் நம் வாழ்க்கையை விரிவு படுத்தும். ஒரு வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்க்கையை வாழச்செய்யும்.
இலக்கியம் அறியாதவனின் வாழ்க்கை ஓர் அரசு அறிக்கை அல்லது ரயில்வே அட்டவணை அல்லது ஆய்வேடு போன்றது. அது மிகமிகப் பிரம்மாண்டமானதாக இருக்கலாம். சிக்கலானதாக இருக்கலாம். தகவல் களஞ்சியமாக இருக்கலாம். அந்த மனிதன் விண்வெளியில் பறக்கலாம். இமயத்தில் ஏறலாம். கடலுக்குள் நீச்சலிடலாம். ஆனாலும் அந்த வாழ்க்கை எல்லைக்குட்பட்டது. அதன் சொற்களுக்கு ஒரே பொருள்தான். அது கூழாங்கற்களை அடுக்கிக் கட்டிய கட்டிடம் போல
இலக்கியம் அறிந்தவனின் வாழ்க்கை ஒரு கவிதைபோல. அது ரத்தினச்சுருக்கமாக இருக்கலாம். எளிமையானதாக இருக்கலாம். அவனுடைய அன்றாட நாட்கள் மிகச்சாதாரணமாகக் கடந்துசெல்லலாம். ஆனாலும் அவன் வாழ்க்கை எல்லையற்றது. அதன் ஒவ்வொரு சொல்லுக்கும் முடிவிலாத பொருள் உண்டு. அவன் வாழ்க்கை விதைகளின் குவியல். அது உறங்கும் பெருங்காடு.
ஒரு பூவின் இதழிலிருந்து மானுடத்தின் அனைத்து வசந்தங்களையும் உணர்ந்துவிட முடியுமா? வசந்தங்களை உருவாக்கி உருவாக்கி விளையாடும் பிரபஞ்ச லீலை வரை சென்றுவிட முடியுமா? முடியும் என்றால் அதுதான் ஆன்மீகம். நான் புரிந்துகொண்டது அதுவே. ஆகவேதான் நல்ல இலக்கியம் தாய்மடியில் சிசு போல ஆன்மீகத்தில் அமர்ந்திருக்கிறது என நான் நினைக்கிறேன்.
விதை ஒன்று முளைப்பதற்கு மழை போதும். ஒரு தனி அனுபவம் விரிந்து இலக்கியப்பேரனுபவமாக ஆவதற்கு கற்பனை மட்டுமே போதும். ஆனால் ஒரு விதையில் இருந்து ஒரு பிரபஞ்சத்தை முளைக்கவைப்பதற்கு கற்பனை போதாது. எந்த ஆற்றலால் இவையெல்லாம் உருவாகியிருக்கின்றனவோ அந்த ஆற்றல் நம்முள் குவிய வேண்டும். அதையே நான் உள்ளுணர்வு என எளிய சொல்லால் சொல்கிறேன். உள்ளுணர்வு என்பது ஓரு தொடக்கமே. தொடர்ந்து விரியும் ஒரு பெரிய பாதையின் வாசல் அது.
ஆகவே பிரக்ஞையே பிரம்மம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிரம்மத்தை பிரம்மம் அன்றி வேறெதுவும் அறிந்துவிட முடியாதென்பதனால். நம்முள் இருக்கும் பிரம்மம் தன்னை அறிய முயல்வதே ஆன்மீகம் என்று சொல்லலாமா?
இருக்கலாம். ‘நானே பிரம்மம்’. இப்புடவியை படைத்து அழித்து புடவியாகி நிற்பது எதுவோ அதுவே நான். மெய்ஞானிகள் ஞானத்தின் உச்சியில் நின்று திளைக்கும் ஞானமென இதைச் சொல்கிறார்கள். ஆனால் இந்தச் சொற்றொடர் நேரடியாகச் சொல்லபப்ட்டால் இந்தப்பூமியில் உள்ள அனைவருக்குமே ஓரளவு புரியும். அதனால்தான் இன்றுவரை இது ஒரு பெருமொழி என நீடித்திருக்கிறது.
இயற்கையின் பேரழகின் முன் மலைத்து நிற்கையில், மானுடவெள்ளத்தின் நடுவே தன்னை உணர்கையில், மக்கள் மெய்தீண்டி கண் பனிக்கையில் எப்போதேனும் ஒருமுறை ‘இவையெல்லாம் நானே’ என்ற பெரும் மன எழுச்சியை அடையாத மானுடர் இருக்க முடியாது. அந்த அனுபவத்தைச் சென்று தீண்டுவதனால்தான் அது மகாவாக்யமாகிறது.
அந்த மெய்யனுபவத்தை தன் உச்சத்தில் அளிப்பது எதுவோ அதுவே பேரிலக்கியம். இயற்கையும் வாழ்வனுபவங்களும் நம்மிடமிருந்து மொழியால் மறைக்கப்பட்டிருக்கின்றன. மரம் என்ற சொல்லே மரமெனும் அனுபவத்தைத் தடுத்துவிடுகிறது. மரத்தை மறைத்தது மாமதயானை. இலக்கியம் மொழியாலேயே மொழியெனும் திரையை விலக்கிக் காட்டும். ஒவ்வொரு நாளும் சிட்டுக்குருவியைப் பார்ப்பவன் கவிதையில் கானும் சிட்டுக்குருவி புத்தம் புதியது. சிட்டுக்குருவியென்ற சொல்லில் இருந்து சிறகடித்து வெளியேறிய சிட்டுக்குருவி அது.
இலக்கியம் அனுபவத்தின் மீது பழக்கத்தின் பாசி படிவதை விலக்கிக் கொண்டே இருக்கிறது என்கிறார் சுந்தர ராமசாமி. இலக்கியத்தின் அனைத்தும் புத்தம் புதிதாக நிகழ்கிறது. இலக்கிய அனுபவம் என்பது நாம் ஏற்கனவே அனுபவித்தவற்றை கற்பனைமூலம் மீண்டும் அனுபவித்தல். அனுபவங்களை கற்பனைமூலம் தொகுத்துக்கொள்ளுதல். ஓர் அனுபவத்தின் மீது பல்லாயிரம் அனுபவங்களை ஏற்றி அனுபவங்கள் அனைத்தையும் பல்லாயிரம் மடங்கு பிரம்மாண்டமானதாக ஆக்கிக் கொள்ளுதல்
அப்போது உண்மையான வாழ்க்கையில் எப்போதாவது நிகழும் அந்த உச்ச அனுபவம் எளிதில் நமக்கு நிகழ்கிறது. கண்கலங்க மெய் சிலிர்க்க நாம் சொல்லிக் கொள்கிறோம். ‘இவையெல்லாமே நானே’. பூமியெங்கும் துயருறும் மனிதர்கள், பேரழகுடன் விரிந்த இயற்கை, ஓயாது நீளும் காலப்பெருக்கு, அதை வென்று விரியும் நினைவின் பெருவெள்ளம்– அனைத்தும் நானே. அந்த உச்சமே பேரிலக்கியங்களில் மீண்டும் மீண்டும் நாம் அடைவது
தேர்ந்த இலக்கியவாசகன் அப்போது அத்வைதத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்த ஞானிக்கு இணையாக ஆகி மீள்கிறான் அப்போது. ஒரு கணமாகக் கூட இருக்கலாம். ஆனால் மண்ணில் வாழும் எளிய மானுடனுக்கு அது எத்தனை பெரும் பேறு
வணக்கம்
[ நவம்பர் 26, 2006 அன்று வர்க்கலை நாராயணகுருகுலத்தில் ஆற்றிய உரை]
[மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 13 நவம்பர், 2008 ]
நித்ய சைதன்ய யதி பற்றிய கட்டுரைகள்
இலக்கியம் பற்றிய கட்டுரைகள்