இலக்கியமும் பாலுணர்வும்

வணக்கம் ஜெயமோகன்,

ஒரு படைப்பாளிக்கு சமூகப் பொறுப்புணர்வு அவசியமா? இல்லை தனது புனைவுலகத்தில் எவ்வித வக்கிரங்களையும், இழிசெயல்களையும் திணித்து எழுதுவது படைப்பாளியின் தனிப்பட்ட உரிமையா? என்கிற கேள்வி எனக்குள் சமீப காலங்களாக எழுகிறது என்றால் சில இளந்தலைமுறை படைப்பாளிகளின் கதையைப் படிக்க நேர்ந்த போதுதான். மனித அறத்தை வலியுறுத்திதான் நமது பண்டைய இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இன்றைக்கு கட்டுடைத்தல் என்கிற எண்ணமோ தெரியவில்லை படைப்பு என்பது சுய அரிப்பைத் தீர்த்துக்கொள்ளும் களமாக இருப்பதாகவே தோன்றுகிறது. குறிப்பாக பாலியல் சார்ந்த வக்கிரங்கள்தான் இன்றைக்கு இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படுமோ? என்கிற கேள்வியும் எனக்குள் எழுகிறது.

பாலியல் அற்ற இலக்கியம் என்பதை நான் கோரவில்லை. பாலியல் என்பது ஒரு தாகம், பசி அது இன்றியமையாதது என்றாலும் சமீபகாலப் படைப்புகள் அதைக் கையாளும் விதம் மிகவும் வக்கிரத் தன்மையுடன் இருக்கிறது. தமிழில் ஓரினச்சேர்க்கை குறித்து பதிவு செய்த பசித்த மானிடத்தில் ஓரினச்சேர்க்கை குறித்து நேர்த்தியாக முகத்தில் அறையா வண்ணம் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இன்றைக்கோ நிலைமை அப்படியில்லையே. உள்ளதைத்தானே சொல்கிறோம் என்று என்னதான் நியாயப்படுத்திக் கொண்டாலும் அது போன்ற படைப்புகள் படிக்கிறவர்களுக்கு பாலியல் கிளர்ச்சியைத் தூண்டுவதைத் தவிர்த்து என்ன செய்து விடப்போகிறது? ஆகவேதான் இக்கேள்வியைக் கேட்கிறேன் ஒரு படைப்பு என்பது படைப்பாளியின் தனிப்பட்ட உரிமை என்று விட்டுவிடலாமா? சமூகப் பொறுப்புணர்வுடன் படைக்க வேண்டியது படைப்பாளியின் கடமை இல்லையா?

பதிலை எதிர்நோக்கும்

கிருஷ்ணவேணி

***

அன்புள்ள கிருஷ்ணவேணி

நவீன இலக்கியம் ஒரு கட்டற்ற வெளி. பொதுவான அறிவுவெளி என்பது சபைநாகரிகத்தால் ஆனது. ஆகவே உள்ளே வருகையில் ஓர் அதிர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது

நவீன இலக்கியத்தைக் கட்டுப்படுத்தக் கூடாது. அப்படி கட்டுப்படுத்தும்போது எவர் கட்டுப்படுத்துவது, எந்த அடிப்படையில் என்ற வினா எழுகிறது. இலக்கியத்தின்மேல் இன்னொரு தரப்பின் அதிகாரம் வந்து விழுகிறது. அதன்பின் இலக்கியம் இல்லை. இலக்கியத்தின் சாரம் என்பது ஞானத்தேடல். சுதந்திரத்தில் இருந்தே அது வரமுடியும். சுதந்திரம் என்பது முழுச்சுதந்திரம்தான்.

ஆகவே அது எப்போதும் இப்படி குப்பையும் கூளமும் மலரும் கனியுமாகத்தான் இருக்கும். உங்களுக்குத்தேவையானதை நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். பிறவற்றைக் கடந்துசெல்லவேண்டும்.

பாலுணர்வு பலவகையில் இலக்கியத்துக்கு இன்றியமையாது.

  1. அது மானுடமனத்தின் ஆழம். ஆகவே மானுட அகத்தை எழுதும் படைப்பாளி அதை எழுதிக்கொண்டே இருப்பான். என்றும் எப்போதும் பாலுணர்வு இலக்கியத்தின் அடிப்படைகளில் ஒன்று.
  2. பாலுணர்வுத்திரிபு நிலை மானுட மனதின் உச்சகட்டநிலை. இலக்கியம் சாதாரணநிலைகளை விட திரிபு நிலைகளை அதிகம் கவனிக்கும். அந்நிலையில் நாம் பேசும் அன்பு அறம் உறவு போன்றவற்றின் மதிப்பென்ன என்று ஆராயும்., ஆகவே காமம், வன்முறை ஆகியவற்றைப்பற்றி அது எப்போதும் கவனம் கொண்டிருக்கும்.
  3. பாலுணர்வு என்பது அழகியலுடன் தொடர்புடையது. அழகும் பாலுணர்வும் பிரிக்கமுடியாதவை. அழகை உருவாக்க பாலுணர்வை எழுதியே ஆகவேண்டும்.

இலக்கியம் என்பது பாலுணர்வை எழுதுவதனூடாக வாழ்க்கையை அழகாக்கும். நுணுகி அறியவைக்கும். அப்படி நிகழவில்லை என்றால் அது எளிய பாலுணர்வுக் கேளிக்கை எழுத்து. அதைக் கடந்துசெல்லுங்கள்.

ஆகவே இலக்கியம் எப்போதும் இப்படித்தான் இருந்தது, இருக்கும். இன்றைய எந்த எழுத்தாளனும் மகாபாரதத்தைவிட பாலுணர்வை, பாலியல் திரிபை எழுதிவிடவில்லை.

ஜெ

***

முந்தைய கட்டுரைஒரு கணத்திற்கு அப்பால்-கடிதம் 3
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 12