ஒரு கணத்துக்கு அப்பால் -விஜய்ரங்கன்

11

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

ஒரு கணத்துக்கு அப்பால் சிறுகதையை இரண்டு முறை படித்தேன். நீலம் நாவல் முடித்துவிட்டு நீங்கள் பித்துநிலையில் நாகர்கோயிலில் அலைந்து திரிந்ததைப் பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அம்மனநிலையில் இருந்து வெளிவருவதற்கு பாலியல் தளத்தைப் பார்த்ததைப் பற்றியும். அப்படி வெளிவந்த பிறகு நீங்கள் எழுதிய சிறுகதையாக இருக்குமோ என்று தோன்றியது.

இந்தக் கதையில் வரும் இருவருமே சற்று மனப்பிறழ்வு கொண்டவர்கள்தான். ‘பிறழ்வு’ சற்று கூடுதலான வார்த்தையோ… சோர்வு என்பது சரியாக இருப்பதாகப்படுகிறது. அல்லது அந்த இருவேறுபட்ட மனநிலையும் கூட இங்கு பலரும் தாங்கள் ஒருவரே அடைவதாகவோகூட இருக்கலாம்.

அவனுக்கு மனச்சோர்வு வரும்போது பாலியல் தளத்தை நாடுகின்றான். அதனால் சோர்வு தற்காலிகமாக மட்டுப்படுத்தப்படுவதாக உணர்கின்றான். அவனுடைய தந்தையின் மனச்சோர்வுக்குக் காரணமே பாலியல் ரீதியாக உண்டான அதிருப்திதான். பாலியல் சார்ந்து இருவேறுபட்ட மனநிலைகள் சுட்டப்படுகின்றன.

அவனுடைய அப்பா புராஸ்டேட் சுரப்பி நீக்கம் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். புராஸ்டேட் சுரப்பி நீக்கம் என்பது பெரும்பாலும் புராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் உள்ளவர்களுக்கே செய்யப்படுகிறது. புராஸ்டேட் சுரப்பி நீக்கம் செய்தபிறகு பெரும்பாலானவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை பாலியில் ரீதியாக உண்டாகும் அதிருப்திதான். அவர்களால் சரியாக ஈடுபட முடியாது. அந்த எண்ணங்கள் ஏற்படாமல் போக வாய்ப்புண்டு. சிறுநீர் வெளியேறுதிலும் பிரச்சினை இருக்கும். மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டவர்களாக உணரக்கூடிய வாய்ப்புண்டு.
அவருடைய ஆழ்மனது தன்னை விட்டுப்போன இளமையை, இளமையில் தான் கொண்ட கனவுகளை மீட்டெடுக்க முயல்கிறது. அதில் கிடைக்கும் வெற்றிக்காக ஏங்குகிறது. எல்விஸின் அந்தப் பாடலைப் பாட ஆரம்பித்த உடனேயே அவருடைய மனது அவரறியாமல் அந்தப் பாடலுக்குள் சென்றுவிடுகிறது. அந்தப் பாடலின் முதல் வரியேகூட அவரின் ஆழ்மனநிலையை வெளிப்படுத்திவிடுவதாகக் கொள்ளலாம். எந்த விசயத்திலும் கட்டுப்பாடாக, எச்சரிக்கையாக இருப்பவர்கள் செய்யத் தவறியதை அல்லது தவறுவதை மற்றொருவன் மிகச்சாதாரணமாகச் செய்துவிட்டுப் போகின்றான். இந்த இருவேறு மனநிலையையும் கொண்டவர்களாகவே நாம் இருக்கிறோம். சுதந்திரமாக தம் மன இச்சைகளை வெளிப்படுத்திக்கொள்ள இயலாதவர்களாகவும், தன் மனம் எதில் மகிழ்ச்சி கொள்கிறதோ – அது காமம் சார்ந்ததாகவே இருந்தாலும் அதை நிறைவேற்றிக்கொள்பவர்களாகவும்;. அவனுடைய அப்பா இளமையில் தன்னுடைய இளமையைக் கொண்டாடுபவராக அல்லது கொண்டாடத் துணிபவராக இருந்திருக்கிறார்.

All I needed was the rain என்று எல்விஸ் பாடியதைப் போல இளமை பெருமழையெனப் பொழிந்து கொள்ளும் நிறைவையே அடைய விரும்பியிருக்கிறார்.

ஃமின்தூக்கி கீழிறங்குவது அவனுக்குப்பிடிக்கும். தரையைத் தொடும் கணத்தில் சிறிய உற்சாகம் எழுவது தவறுவதேயில்லை.
மின் தூக்கி தரையைத் தொட்டபோது அவனுக்கு ஒரு சிறிய திடுக்கிடல் ஏற்பட்டது.ஃ

உடல், மனநிலை சரியில்லாத அவனுடைய தந்தையைப் பார்த்துக்கொள்வதிலேயே தன்னுடைய காலம் கழிகின்றது. இந்த இளமை, இந்த உடல்… இதைத் திருப்திப்படுத்த அவன் மனம் ஏக்கம் கொண்டலைகிறது. அதற்காக அவன் தேர்ந்தெடுத்துக்கொண்ட வழிதான் அத்தகைய பாலியல் தளங்கள். தனக்கான உலகத்தில் சென்று வாழ்ந்து உடன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு திரும்புவது அவனுக்குப் பிடித்திருக்கிறது. அவனுடைய தந்தையும் அத்தகையதொரு ஆத்மதிருப்தியைத்தான் எதிர்பார்க்கிறாரா? அதை நோக்கித்தான் அவருடைய மனது செல்கிறதா என்று நினைக்கும்போது திடுக்கிடுகிறான். ஆனால் அவரையும் அந்த வழியிலேயே செலுத்திவிடுவது என்று முடிவெடுத்துவிடுகிறான். லீலாகூட இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருக்கவிரும்பாத வேறொருவனைத் தேடிச்சென்றுவிட்ட அவனுடைய துணைவியாகத்தான் தெரிகிறாள்.
காமத்தை எதிர்கொண்டதிலும் தற்போது அவன் காமத்தை எதிர்கொள்வதிலும் உள்ள வேறுபாடு தொலைக்காட்சியில் வரும் பாடல்களைப் பார்த்து அவன் கொள்ளும் எண்ணங்களில் தெரிகிறது. எங்கும் நிறைந்திருக்கும் காமம் அவன் மனதில் அவனுக்கேற்றவாறு தன்னைப் பரப்பிக்கொண்டு வீற்றிருக்கின்றது.

Yow saw me crying in the chapel… அவனுடைய மனமென்னும் கூண்டிற்குள்ளேயே அவன் அழுதுகொண்டிருக்கிறான்.

ஒரு கணத்துக்கு அப்பால்…அனைவரும் அடைய முயற்சிக்கும் அந்த ஒரு கணத்திற்கு அப்பால்…அந்த நிலைக்குப் பின்னால்… என்ன இருக்கிறது என்று இக்;கதை பேசுவதாக எனக்குப்படுகின்றது. அப்படி அந்தக் கணத்தை அடைந்துவிட்டால், அதற்குப்பிறகு என்ன…நிறைவு கிடைத்துவிடுகிறதா என்று கேட்டுக்கொள்ளச் சொல்வதாகவும். நமக்கு நாமே.

விஜய்ரங்கன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 20
அடுத்த கட்டுரைஏறும் இறையும் [சிறுகதை]