நச்சரவம்-சிறுகதை

வரலாற்றில் உள்ள நுட்பமான ஒரு சிக்கலை நாம் வரலாற்றாசிரியர்களில் பெரும்பாலானவர்களிடம் விவாதிக்க முடிவதில்லை. அவர்கள் உறுதியான தகவல்கள் மூலம் திட்டவட்டமாக உருவாக்கப்படுகிற ஒரு கட்டுமானம் போல்தான் வரலாற்றைக் கற்பிதம் செய்து கொள்கிறார்கள். தங்கள் வீட்டின் திண்ணையில் அமர்ந்து பேசுவதுபோல வரலாற்றை முன்வைத்து விவாதிக்கிறார்கள். வரலாற்றுக் கோட்பாட்டாளன் என்ற முறையில் எனக்கு அதில் உடன்பாடில்லை. நான் வரலாற்றை ஒரு நாடகமேடையின் பின்புறத் திரைச்சீலைகள்போல உருவகிக்கிறேன். நாம் நடிக்கும் காட்சிக்கு ஏற்ப கணநேரத்தில் அவற்றை மாற்றிக்கொள்கிறோம். வீடுகள், மலையடிவாரம், கடற்கரை, அரண்மனை சபை. இதை நான் எந்த வரலாற்றாசிரியரிடம் பேசினாலும் அவர் உடனே முகம் சிவந்துவிடுகிறார். அவர் நிரந்தர உண்மைகளை உருவாக்கும் அறிஞரல்ல, கதைகள் புனையும் கற்பனையாளர் என்று நான் சொல்வதாக எடுத்துக்கொள்கிறார். ஒரு பேச்சுக்கு ஒருவரிடம் அவர் உண்மைகளைப் புனையும் கற்பனையாளர் என்று சொல்லிப் பார்த்தேன். கண்களில் நீர் கோர்க்குமளவுக்குக் கத்தித் தீர்த்துவிட்டார்.

திட்டவட்டமான உதாரணத்திலிருந்து தொடங்குகிறேன். திற்பரப்பு மகாதேவர் கோயில் இப்போது எப்படி இருக்கிறது? சைவப் பெருமதத்தின் முக்கியமான மையங்களில் ஒன்று. கோட்டை மாதிரியான சுற்றுச் சுவருக்குள் மண்டபங்களும் பிரகாரங்களுமாக விரிந்த எழுப்புகள். செம்புத்தகடு வேயப்பட்ட கருவறைக்குள் தூக்கு விளக்குகளும், குத்துவிளக்குகளும் ஒளிவீச, பொற்கவசம் அணிந்து வீற்றிருக்கும் லிங்கம். ஐம்பது வருடம் முன்புவரை அவர்ண சாதியினர் ஆலயத்தில் மட்டுமல்ல ஆலயத்தை ஒட்டிய தெருக்களில் நடமாடவே தடை இருந்தது. மீறி உள்ளே வந்தவர்கள் தென்னை மரத்தில் கட்டப்பட்டு பச்சைச் சாரைப்பாம்புத் தோலால் இறுகக் கட்டப்பட்டு வெயிலில் விடப்படுவார்கள். பாம்புத்தோல் உலர்ந்து சுருங்கும்போது சதையைப் பிய்த்து உள்ளே சென்றுவிடும். எளிய தண்டனை இது. இதைவிடப் பெரிய தண்டனைகள் அக்காலத்தைய தாந்திரிய விதிகளடங்கிய `தந்த்ர பிரபோதினி’பில் காணமுடியும். செல்வம் குவிந்து கிடந்த கோயில். அக்காலத்தில் வருடம் முழுக்க பிராமணர்களுக்கு இலவச உணவு அளித்த மூன்று ஊட்டுப் புரைகள் இடைவிடாது இயங்கின. மாட்டு வண்டி வரிசைகள் நதிகள்போல நாலா பக்கமிருந்தும் வந்து கோயில் வளைப்பில் கலந்தபடியே இருக்கும். பிராமண அதிகாரம் உச்சத்திலிருந்த இடம்.

ஆனால் வரலாற்றில் பின்னகர்ந்து போனால் நாம் காண்பது என்ன? கல்வெட்டுகள், செப்பேடுகள் வழியாகத் தெரியும் கதை வேறு. இந்த மலையாளப் பிராமணர்களை சோழர்கள் காக்காக் கூட்டத்தை விரட்டி அடிப்பதுபோலத் துரத்தியிருக்கிறார்கள். ஆகம வழிபாட்டை வலுக்கட்டாயமாகப் புகுத்தியிருக்கிறார்கள். நூற்றுக் கணக்கான தந்திர நூல்கள் எரிக்கப்பட்டு தந்திரிகள் கழுவேற்றப்பட்டிருக்கிறார்கள். ஊட்டுப்புரை உணவு நிறுத்தப்பட்டு சோற்றுத் துருத்திகள் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். அதை `கலமறுத்தருளிய வீரச்செயல்’களாகத் தங்கள் மெய்க்கீர்த்திகளில் சோழர்கள் பொறித்தார்கள். எல்லாவற்றையும் கவிமணியும், கே.கே. பிள்ளையும், அ.கா. பெருமாளும் விரிவாக எழுதியிருக்கிறார்கள்.

நான் சொல்வது, ஏன் இதற்கு அப்பாலும் செல்லக்கூடாது என்று தான். வரலாற்று ஆய்வாளர்களுக்குக் கல்வெட்டும் செப்பேடும் ஓலைச்சுவடியும் ஆதாரங்கள். ஐயா, இவை பருப்பொருட்கள். தூலங்கள். நுண்ணிதில் நுண்ணிதான அழியாப் பெரும்பரப்பான மொழியில் எழுதப்பட்டுள்ள ஆதாரங்களை ஏன் நீங்கள் கணக்கிலெடுப்பதில்லை? அவர்கள் ஒன்றும் சொல்வதில்லை. திற்பரப்பு மகாதேவர் இன்றும் உக்கிர மூர்த்தியான சிவன் என்றுதான் கூறப்படுகிறார். கோயில் போத்திகள் பல கதைகளை அதற்குச் சொல்வார்கள். முப்புரம் எரித்து அதன் வெம்மை அடங்காமல் வந்து அருவிக்கரையில் தன் புலித்தோலை சிவபெருமான் அவிழ்த்து வைத்தார். அங்கு முளைத்த லிங்கம் இது. அருவியில் நீராடி உடலும் உள்ளமும் குளிர்ந்த பிறகு அவர் கைலாயம் சென்றார். ஆனால் பழைய தந்திர நூல்கள் அனைத்திலுமே இந்த சிவலிங்கம் `கிராத மூர்த்தி’ என்று குறிப்பிடப்படுகிறது.

தெந்திருவிதாங்கூரின் ஒரே கிராதமூர்த்தி இதுதான். கிராதன் என்றால் காட்டுமிராண்டி, வனவாசி, பாசுபத அஸ்திரம் தேடிப்போன அர்ச்சுனனை சிவன் கிராதனாக வந்து வழிமறித்துப் போரிட்டு பிறகு பாசுபதம் அளிக்கும் கிராத விருத்தம் என்ற கதகளி ஆட்டத்தை இங்கு ஒவ்வொரு வருடமும் போட்டாக வேண்டும் என்று நடைமுறை விதி உள்ளது. ஆட்டத்திற்காக உடல் முழுக்க கரி வாரிப் பூசி, பெரிய வெண்பற்களும் சிவந்த விழிகளும், செம்பருந்து இறகுகளாலான மணிமுடியும் அணிந்து அலறியபடி வரும் கிராத வேடதாரியை மேடையிலேயே நம்பூதிரிப் பிராமண வேடதாரி விழுந்து வணங்கிப் பூசை செய்கிறான். அன்று ஊரே கூடியிருக்கும். கிராத மூர்த்தி மேடையில் வந்ததுமே எழுந்து நின்று `அரஹர மகாதேவா சம்போ மகாதேவா’ என்று கூவி வணங்குகிறார்கள். மேடையில் அபய வரத கரமுத்திரைகளுடன் நிற்கும் கிராதனின் கரிய வடிவை, சிப்பிகளை அடுக்கியது போன்ற, சிரிப்பைக் கண்டதும் என் கண்முன் ஒரு திரை அறுந்து விழுந்ததுபோல உணர்ந்தேன். மேலே சொன்னேனே, அந்த வரலாற்றுத் தரிசனம் எனக்குக் கிடைத்தது அப்படித்தான்.

அதன் பிறகு தான் நான் தாந்திர நூல்களை விரிவாகக் கற்று திற்பரப்புக் கோயில் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். முதலில் தெரிந்த விஷயம் எல்லாத் தாந்திரிக நூல்களும் வேறு ஏதோ மூலநூலின் மொழிபெயர்ப்புகளோ விளக்கங்களோ இணைப்புகளோதான் என்பது. அந்த முதல் மூலநூல் என்றோ அழிந்துவிட்டது. எட்டு வருடம் அதைத்தேடி அலைந்தேன். திற்பரப்புக் கோயிலுக்கு ஏழு நம்பூதிரிக் குடும்பங்களே தந்திரிகள். அவர்கள் எவருமே கோயில் பொறுப்பில் இல்லை. படித்து பல்வேறு வேலைகள் தேடி பலவிதமாக மாறி விட்டிருந்தனர். மூன்று குடும்பங்கள் முற்றாகவே வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்துவிட்டன. இரண்டு குடும்ப வாரிசுகளுக்கு அவர்களுக்கு திற்பரப்பு கோயிலில் உரிமை உண்டு என்ற தகவலே தெரியவில்லை.

தேடி அலைந்து கடைசியில் பெங்களூரில் வாழ்ந்த வயோதிகரான ஸ்ரீதரன் நம்பூதிரிபாடிடம் இருந்து ஒரே ஒரு உபயோகமான தகவலைப் பெற்றேன். அவரிடம் அவருக்கு ஒன்றுமே புரியாத ஏடுகள் சில இருந்தன. அவை அவர் குடும்பத்திலிருந்தவை. பெங்களூர் தொல்பொருள் கழகத்துக்கு அவை அன்பளிப்பாகத் தரப்பட்டுவிட்டன. பெங்களூர் தொல்பொருள் கழகத்தில் அச்சுவடிகளை எளிதாகக் கண்டுபிடித்தேன். அவற்றில் பல சுவடிகள் நான் ஏற்கெனவே படித்தவை. ஒரு சுவடிக்கட்டு பிராமி மொழியில் இருந்தது. அதை தொல் மொழியியலாளர் சங்கரக் குறுப்பு உதவியுடன் படித்தேன். நான் தேடியது கிடைத்துவிட்டது. அதுதான் மூல தாந்திரிக நூல்.

அதுகூட மொழிபெயர்ப்புதான் என்று அதை முழுக்கப் படித்த போது தெரிந்தது. ஆனால் எந்த மொழியில் இருந்து என்று தெரியவில்லை.

அதன் மொழியமைப்பை விரிவாகக் கூர்ந்து ஆராய்ந்தேன். சமஸ்கிருதத்தைப் பொறுத்தவரை எந்த மொழிபெயர்ப்பும் மூலமொழியின் ரகசியத் தடங்கள் கொண்டிருக்கும். மூலமொழி தமிழாக இருக்குமோ என்ற ஐயம் வலுத்து வலுத்து வந்தது. ஆனால் தமிழிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டால் உருவாக வேண்டிய சிக்கல் இல்லை. நான் குழம்பிப் போயிருக்கும் தருணங்களில் மீண்டும் மீண்டும் திற்பரப்புக் கோயிலுக்குச் செல்வேன். அங்குள்ள ஏதேனும் ஒரு பொருளில் ஒரு சடங்கில் விடை இருக்கும் என்று உள்ளுணர்வால் அறிந்திருந்தேன். ஒரு கோயில் என்பது வினோதமான புராதனமான ஒரு நூல். அதன் அட்டையை மட்டுமே நாம் சாதாரணமாகப் பார்க்கிறோம். உள்ளே நாமறியாத எத்தனையோ விபரங்கள் குவிந்து கிடக்கின்றன. ஆனால் இந்த விஷயம் எனக்கு போக்குக் காட்டிக் கொண்டிருந்தது.

அந்நாட்களில் ஒருமுறை கோயில் ஸ்ரீகாரியம் நாராயண பிள்ளையின் வாசலருகே ஒரு கிழவன் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். பரட்டைத் தலையை பெரிய குடுமியாகச் சுற்றி, காதில் மரவளையங்கள் அணிந்து, வெற்றிலைக்காவி அப்பிய வாயும் சிவந்த கண்களும் கொண்டவன். தாடி மீசை இல்லை. அதாவது அவனுக்கு முகத்தில் முடி முளைக்கவே இல்லை. வயோதிக சீனர்களின் முகத்தில் இருப்பதுபோல நெருக்கமான சுருக்கங்கள் முகம் கழுத்து எங்கும். கூடவே ஒரு பெண். அவள் சாதாரண கிராமச் சிறுமி போலிருந்தாள். ஆனால் நல்ல கம்பீரமான கறுப்பு நிறம். பெரிய யட்சிக் கண்கள். என்னைப் பார்த்ததும் பொரிதாகக் கும்பிடு போட்டார் அந்த ஆள். பெண் தன் எருமை விழிகளில் ஒளிமின்ன திரும்பிப் பார்த்து அசையாமல் நின்றாள்.

நாராயண பிள்ளை உள்ளே இருந்தார். தேவஸ்தலம் போர்டு அலுவலகங்களுக்குள் மட்டுமே காணக்கிடைக்கிற புராதனமான மேஜை நாற்காலி பீரோ. செம்பில் பாலில்லாத டீ. வெற்றிலைச் செல்லம், கோளாம்பி, பீடிக்கட்டு.

`ஆருவோய் அது வாசலிலே?’ என்றேன்.

`வாசலிலேயா? ஆருமில்லியே’

`யாரோ கிழவயசு…’

`அவனா? … மலையன். அவனுக்கு ஒரு நூற்றிஎம்பது ரூபா பில் உண்டும். எங்க சாங்ஷன் ஆகிறது? சூபாரிண்டன்ட் ஒரு கடுவா. சொல்லப் போனா வள்ளுன்னு விழுவான். சாயா குடிக்கேரா, கடும் சாயா.’

`அவருக்கு எதுக்கு பில்?’

`இந்தால ஆதிகிராதமூர்த்திக்கு அவன்தானே பூசை? பண்டு முதலே உள்ள சடங்குல்லா?’ நாராயண பிள்ளை டீயை ஊற்றினார்.

`ஆதிகிராத மூர்த்தியா – கோயிலா?’

`கோயில்ன்னுட்டு இல்லை. ஆற்றுக்கு அந்தக் கரையில் காட்டுக்குள்ள ஒரு அரசமரத்துக்கு அடியில ஒரு லிங்கம் உண்டு. அதுக்க பேரு அது. சாஸ்திரப்படி அதாக்கும் முதல் கிராத மூர்த்தி. அங்க தினப்படி பூசை ஒன்றும் இல்லை. இங்க திருவாதிரை விழா தொடங்கணுமானா அங்க ஒரு ஆடோ கோழியோ பலி குடுத்து பூசை செய்து சாந்தி வாய்க்கணும். திருவிழா முடிஞ்சதம் அங்க மறுபடியும் பூசைபோட்டு பலி குடுத்து குறைதீர்க்கணும். எல்லாம் சாஸ்திர விதி. அது ஒரு மட்டுக்கு நடந்து போகுது.’ நாராயண பிள்ளை டீயைக் குடித்தார்.

`திருவாதிரை முடிஞ்சு மாசம் எட்டாச்சே.’

`பில்லுக்க காரியமா? நல்ல கதயாக்கும். சர்க்கார் பில் சாமானியமா எறங்குமா? எப்படியும் ஒரு வருசம் ஆயிப்போகும். சிலசமயம் சித்திரை வரை கிடக்கும். ஆடிட்டு தொடங்கின பிறகு சூபாரிண்டென்டு ஓடிவருவாரு. மலையனைப் பிடிடே, கணக்கு சிக்குதேண்ணுட்டு. பழைய காரணவன்மாரு சொல்லியிட்டுண்டுல்லா, சர்க்காரு காரியம் முறைபோலே. ஏது?’

`அங்க மலையன்தான் பூசை செய்யனுமா?’

`ஆமா. அதாக்கும் தந்திர விதி. மலையம்மாரு இப்பம் மலைமேல ரொம்பக் குறவு. இவன் போயிட்டாண்ணா ஒரு கள்ளு குடியன் பய கிடக்கான். அவன் செய்யணும். பண்டு, மகாராஜா இருந்த காலங்களில், மலையன் மலையிறங்கும்பம் ராஜாவுக்க வாளும் குடயுமா ஒரு சமந்தன் நாயர் போயி எதிரேற்று கூட்டிட்டு வருவான். மலையனுக்குப் பாத பூசை உண்டுன்னு சொன்னா பாத்துக்கிடும். அப்பிடி ஒரு காலம். இந்த நூற்றியெண்பது ரூபா ஆயிரத்தி தொல்ளாயிரத்தி இருபதிலே மகாராஜா கனிஞ்சு பண்டார வகை உண்டியிலேருந்து குடுக்கச் சொன்னது. அண்ணைக்கு ஒரு போலிசுகாரனுக்கு மாசச் சம்பளம் மூணு ரூவாயாக்கும். ஏது? இந்தப் பைசாவ பவுன் சக்கரமா மாத்தித் தட்டில வச்சு தேங்கா, பூ, வெத்திலை எல்லாம் சேத்து அபிடியே தூக்கிக் குடுத்துடுவாங்க. பின்ன நாலுமாசம் மலையில கள்ளும் கறியும் பாட்டும் கூத்தும் மேளவும் தாளமும் பெகளம்தான். அதொரு காலம். இப்பம் இந்தா பாருங்க அவனுக்கு பீடிக்குத் திகையாது பைசா. வந்து நிக்குதான்.’

`அவர்ட்டே வவுச்சர் வாங்கிட்டு பைசாவக் குடும். நான் தாறேன் உமக்கு’ என்றேன்.

`ஏம் வேய்?’

`ஒரு காரியமுண்டு.’

`ரிசர்ச்சாக்கும். உமக்கும் வட்டுவே. ரிசர்ச் செய்து வல்ல அணுகுண்டோ அவரைக்காயோ கண்டுபிடியும். பைசா உண்டு. அல்லாம மலையம்மாரை என்னதுக்கு ரிசர்ச் செய்யணும். மலையத்திய ரிசர்ச் பண்ணினா அதுக்கொரு நியாயம் உண்டு. ஏது?’

மலையன் கைநாட்டு நடுநடுங்க நாட்டி ரூபாயை மேல்துண்டை நீட்டி போடப் பெற்று அப்படியே பெண் கையில் கொடுத்தார்.

அவள் அதை எச்சில் தொட்டுப் பரபரவென்று எண்ணினாள். கும்பிடு போட்டுவிட்டு அவர் இறங்கியதும் நான் கூடவே போனேன்.

அந்தப் பெண் என்னைத் திரும்பிப் பார்த்து அவரிடம் எதோ சொல்ல அவர் திரும்பி கையைக் கண்மீது வைத்து என்னை உற்றுப் பார்த்தார். நெருங்கியதும் கும்பிட்டார். கேள்வி வாய்திறப்பில் தெரிந்தது.

`மலையனுக்கு நாடு எங்கே?’ என்றேன்.

`வடக்கே மலைமேல’ என்றார். காது தெளிவாக இருப்பது ஆச்சாரியமளித்தது.

`மலையனுக்கு வயது கொறே ஆச்சுன்னு தோணுதே.’

`ஆமா’ என்றார் சிரித்தபடி. வாயில் பற்களும் இருந்தன. `ஒம்பது குறிஞ்ஞி கண்டாச்சு. பத்து கண்டா நிறையுமிண்ணாக்கும் கணக்கு.’

`நான் இந்தக் கோயிலைப்பத்தி கொஞ்சம் காரியங்கள் அறிய வந்த ஆளாக்கும். மலையன் என்னை சகாயிக்கணும். மலையனுக்கு வேண்டது நான் செய்தேன்.’

`கோயிலுக்குக் காரியங்க மலையனுக்கு அறியாதே. போத்திமாரோ நம்பூதிமாரோ உண்டெங்கி…’

`அதெல்லாம் கேட்டாச்சு. நான் அந்த ஆதிகிராத மூர்த்தியைப் பற்றியாக்கும் கேட்க வாறது.’

`அதுவா?’ என்றார் மலையன். `ஒரோ கதைகள். அது சிவன் தம்புரான் புலித்தோலாடைய முதலிலே கழட்டி வச்ச இடம். பிறகு அங்க எறும்பிருக்கதனால இங்க கொண்டு வச்சாரு. இங்க சாமி கும்பிட பிராமணம்மாரு. அங்க மலையம்மாரு. அது பண்டு முதலே உள்ள வழக்கமாக்கும்…’

`இது பிராமணன்மாரு சொல்லுத கதையில்லா… உங்க சாதியில உள்ள கதை என்ன?

`எங்க சாதிலையும் இதே கத’ என்றார் மலையன். அவர் எதையும் மறைப்பதுபோலத் தெரியவில்லை.

`உங்களுக்கு ஏதாவது பாட்டு உண்டா இதைப்பற்றி?’

`பாட்டாட்டு ஒண்ணுமில்லியே. சடங்கு பூசைதான்.’

நான் அந்த பிராமி மொழி நூலில் உள்ள விஷயங்களைத் தமிழுக்கு மாற்றிச் சொன்னேன். `பழைய காலத்தில் உள்ள தாந்திரிக சடங்குகளாக்கும் இது. பலி கர்மங்கள் மந்திரங்கள் எல்லாம் இந்தப் பாட்டிலே இருக்கு. இந்தப் பாட்டு உங்க பாஷையில முன்னால இருந்த பாட்டா?’

`எங்க சாதியில பாட்டு உண்டு. பல பாட்டுகள். இங்க சாமி கும்பிடுத பாட்டாட்டு ஒண்ணுமில்லியே…’

மலையனுக்கு ஒரு கிலோ கருப்பட்டி, முன்னூறு கிராம் புகையிலை, கால்கிலோ டீத்தூள் வாங்கிப் பரிசளித்தேன். இரண்டு கிலோ உப்பு அவரே வாங்கிக்கொண்டார். அவரது வீடு இருக்கும் இடத்தை விரிவாகச் சொல்லக் கேட்டுக் கொண்டேன். ஆற்றைக் கடந்து களியல் மலைப் பாதையில் ஏறி அவர் காட்டுக்குப் போனார்.

நான் ஆதிக்கிராத மூர்த்தியின் பிரதிஷ்டை இருந்த இடத்திற்குச் சென்று பார்த்தேன். அம்மாதிரியான பிரதிஷ்டைகள் தெற்குத் திருவிதாங்கூரில் எப்படியும் அரை லட்சம் தேறக்கூடும். ஒரு மரத்தடியில், கிடைக்கல்மீது நாட்டப்பட்ட குத்துக்கல் களபம் சந்தனம் குங்குமம் பூசப்பட்டு அரளி மாலையோ தெற்றி மாலையோ காய்ந்து கிடக்க சருகுகள் சூழ்ந்து, நிழலில் குளிர்ந்து அமர்ந்திருந்தது. அப்பகுதி கோயிலுக்குச் சொந்தமான எஸ்டேட்டாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் காடுதான். காட்டுக்கே உரிய அறுபடாத சீவிடு ஓசை, காற்று பாய்ந்தோடும் ஓசை, மட்கும் சருகுகளின் வீச்சம், சருகுகளில் விதவிதமான ஊரும் விலங்குகள் எழுப்பும் திடுக்கிட வைக்கும் ஒலி. வெகுநேரம் அங்கேயே அமர்ந்திருந்தேன். அங்கே இருக்கும்போது வெறும் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு மிகப்பெரிய ஆலயமும் அதைச்சுற்றி விரிந்த ரதவீதிகளில் மாளிகை வீடுகளும் இருக்கும் என்பதை நம்பவே முடியாது. அங்கிருக்கும்போது கோயிலின் ஒலிகளில் ஒன்றாகக் கேட்கும் அருவியோசை இங்கிருக்கும்போது காட்டின் ஓசையாகக் கேட்டது.

ஒருவாரம் கழித்து மலையனை மலையில் ஏறிச்சென்று சந்தித்தேன். நீலிமலையின் உச்சியில் மட்டும்தான் காடு எஞ்சியிருந்தது. நான்கு பக்கமும் ரப்பர் எஸ்டேட்டுகள். சாலையிலிருந்து பார்த்தபோது பட்டளத்தான் கிராப்புபோலத் தோன்றியது.

மலையனின் குடிசை ஒரு பெரிய பாறையின் அடியில் நீரோடை ஒன்று பாறைகளில் மோதிச் சுழித்துச் சரியும் இடத்தில் இருந்தது. மண்ணில் மூங்கில்களை ஆழ நாட்டி அதன்மீது சற்று உயரத்தில் எழுப்பப்பட்ட குடிசை ஒரு சிறு தெப்பம் போலவோ பெரிய குருவிக்கூடு போலவோ பட்டது. மலையன் நான் போனபோது வீட்டில் இருந்தார். ஒரு சிறு முழவை நாரால் இறுக்கிக் கட்டிக் கொண்டிருந்தார். அவரது பேத்தி அல்லது கொள்ளுப்பேத்தி வெளியே பாறைமீது சுள்ளிகள் குவித்து கிழங்கு சுட்டுக் கொண்டிருந்தாள். மலையனின் காதுகள் மிகக் கூரியவை. நான் தொலைவில் வந்த ஒலி கேட்டே எழுந்து நெற்றியின்மீது கைவைத்துக் கூர்ந்து பார்த்துச் சிரித்துத் தலையசைத்தார். திண்ணைமீது அமர்ந்ததும் தேன் சேர்த்த தண்ணீர் தந்து உபசாரித்தார். பிறகு சுட்ட கிழங்குகளை வாழை இலையில் உடைத்துப் பரப்பி ஆவிபறக்கச் சாப்பிட்டோம். மலையன் அவரது குடும்பக் கதையைச் சொன்னார். அவருடைய ஏழு மகன்களும் இறந்துவிட்டனர். பேரப்பிள்ளைகள் எங்கோ சிதறிப்போக எஞ்சிய ஒரே பேத்தி தேன் எடுக்கச் சென்றிருக்கிறாள். அவளுடைய ஒரே மகள் இந்தப் பெண். பெயர் ரெஜினா.

`ரெஜினாவா?’ என்றேன்.

`ஓம். வேதக்கார ஸ்கூளிலயில்லா அவ படிக்கா.’ என்றார் மலையன். மலையனின் மகனும் வேதக்கார மதத்துக்கு மாறி விட்டான். `கோதம்பும் பால்பொடியும் கிட்டும். கிறிஸ்மஸுக்கு சட்டை உண்டும்’ என்றார் மலையன்.

`மலையன் மாறலியா?’ என்றேன்.

`நமக்கு சில்லறை மந்திரவாதமும் செபமும் ஒக்கெ உண்டுல்லா. அதுக்கொண்டு மாறக் களியல்ல’ என்றார்.

அன்றிரவு வரை மலையனிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினேன். ஒரு லாபம் மலையனின் மொழியிலிருந்துதான் அந்த மூல தாந்த்ரிக நூல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்று எனக்கு உறுதியாயிற்று. மலையன் பேசிய தாய்மொழி தமிழ் போன்ற ஆனால் தமிழைவிட முந்திய ஏதோ ஒருவகைப் பண்டைய மொழி. அதன் பல சொல்லாட்சிகள் அப்படியே அந்த தாந்திரிக நூலிலும் இருந்தன. உதாரணமாகக் கமுகம்பாளை எப்போதுமே கமுகின் காது என்றே குறிப்ப்டப்பட்டது. தெச்சிப்பூவின் மொட்டுகள் தெச்சிமூக்கு என்றும்.

ஆனால் மலையனுக்குத் தாந்திரிக நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் எதுவுமே தெரியவில்லை. திற்பரப்பு ஸ்தலபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதைகளைத்தான் அவரும் சொன்னார். மீண்டும் மீண்டும் போய்ப் பேசிப் பார்த்த பிறகும் அதுதான் வெளிவந்தது. கிட்டத்தட்ட எனக்கு ஒரு சலிப்பே ஏற்பட்டு விட்டது. அதற்கேற்ப நான் மலையனைத் தேடிச் செல்வதும் குறைந்துவிட்டது. முக்கியமான காரணம் செலவுதான். மலையன் நான் அவருக்காகச் செலவு செய்வேன் என்பதை அறிந்து கொண்ட பிறகு புகையிலை, கருப்பட்டி, டீத்தூள் வாங்குவதை முற்றிலும் நிறுத்திவிட்டார். அதைவிட முக்கியமாகச் சொல்ல வேண்டியது காலப்போக்கில் இவற்றை வாங்கித் தரவேண்டியது என் கடமை என்றும் நம்பி, நான் வாங்கிச் செல்பவற்றின் தரம் அளவு ஆகியவற்றைப்பற்றி என்னிடமே குறைகூற ஆரம்பித்ததுதான். ஒருமுறை வேண்டுமென்றே எதுவும் வாங்காமல் அவரைப் பார்க்கச் சென்றேன். அன்று அவர் நான் வந்திருப்பதை அறிந்ததாகவே பாவனை செய்யவில்லை. அவரது பேத்திக்கும் கொள்ளுப் பேத்திக்கும் அவிசுவாசிகள் வீட்டுக்கு வரும்போதே கொஞ்சம் சாத்தானின் அம்சமும்கூட வந்துவிடுவதாக நம்பிக்கை. முகம் கொடுத்தே பேசமாட்டார்கள்.

ஏழெட்டு மாசம் கழித்து மீண்டும் மலையனைச் சந்திக்கச் சென்றேன். அதற்குள் ஒரு திருவாதிரைப் பலி முடிந்து விட்டிருந்தது. அதற்கு மலையனால் வரமுடியவில்லை என்று இன்னொரு மலையந்தான் எல்லாம் செய்தான். முட்டக் குடித்து, எழுதிருக்க முடியாதவனாகத்தான் வந்தான். ஏழு கோழிகளையும் வெட்டி ரத்தத்தை சிவலிங்கத்துக்குப் படைத்து தெச்சியும் அரளிப்பூவும் வில்வமும் சேர்த்துக் கட்டிய பூமாலையை அதற்குச் சூட்டினான். இரண்டுமுறை தடுமாறி லிங்கம்மேதே கையூன்றும்படி ஆயிற்று. நானும் நாராயண பிள்ளையும் செண்டைக்காரர்களும் மட்டுமே சாட்சி. நாராயண பிள்ளை தான் மலையனுக்கு உடல்நிலை சாரியில்லை என்றார். `செத்துப் போவதற்கும் வாய்ப்பு உண்டு. பழைய கட்டை’ என்றார். சரி போய்த்தான் பார்ப்போமே என்று நானும் கிளம்பினேன். வழியெல்லாம் ஒருவேளை மலையன் இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை உருட்டியபடியே வந்தேன். ஆனால் அவர் அப்படி சாகக் கூடியவரல்ல என்றும் என் மனம் அறிந்திருந்தது. குடிலில் மலையன் இல்லை. அந்தச் சிறுமி மட்டும்தான் இருந்தாள். `அப்பு மலைகேறிப் போயி’ என்றாள்.

`எங்கே?’

`மலைவாதையப்பச்சிக்கு பெலி கொடுக்க.’

`எங்கே?’

அவள் வெளியே இறங்கி `தோ அந்த மலையில்’ என்று சுட்டிக் காட்டினாள்.

அன்று நல்ல இதமான தட்பவெப்பநிலை. காற்றில் குளிர், ஆனால் ஈரம் இல்லை. நானும் பெரும்பாலான தூரம் லாரியொன்றில் ஏறி வந்ததனால் களைப்பின்றி இருந்தேன். ஆகவே ஒரு உற்சாகத்தில் அந்த மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். ஒருமணி நேரத்தில் ஒன்று தெளிவாயிற்று. ஓடைக்கரையில் நின்று பார்த்தபோது அம்மலை மரங்கள் இல்லாததும், அருகே உள்ளதுமான ஒன்றாகப்பட்டது. இரண்டு தவறு, மரங்கள் கிளைகளை இறுக்கக் கை கோர்த்து விரல் பின்னி சிலசமயம் இடைதழுவி நின்றன. சிக்குக் கூந்தல்போல முள் செடிகளும் கொடிகளும் பின்னிப் பிணைந்து வழி மறித்தன. ஊடே வகிடுபோலப் பாதை இருந்தது.

இரு இடங்களில் ஓடையில் தண்ணீர் குடித்து அமர்ந்து ஓய்வெடுத்துச் சென்றேன். மலையனை இந்தக் காட்டில் எங்கே கண்டுபிடிப்பது என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இந்தப் பாதை அந்தத் தெய்வப் பிரதிஷ்டைக்குப் போவதற்கே உருவானது என்றும் தோன்றியது. களைத்து அமர்ந்து காதுகளில் ரத்தம் சூடாகப் பெருகி மெல்ல வடிவதை உணர்ந்தபடி காட்டைக் கவனமின்றிப் பார்த்தபோதுதான் அந்தச் சிறு பிரதிஷ்டையைக் கவனித்தேன். எழுந்து சென்று அதைக் கூர்ந்து பார்த்தேன். ஒரு சிறிய கல் அகலமான பெரிய கல்மீது வைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட சிவலிங்கம். ஆனால் அது பல வருடங்களாக எவராலும் தீண்டப்படாமல் பாசிபிடித்து செடிகொடிகளும் சருகுகளும் மூடிக்கிடந்தது. அருகே இருந்த பள்ளத்தில் செடிகள் அடர்ந்து சிறு வெண்ணிறப்பூக்கள் மலர்ந்திருந்தன. ஓர் ஆயிரங்கால் அட்டை சிவலிங்கம் மீது ஏறி ஊர்ந்தது. அங்கே ஒரு பெரிய அரசமரம் நின்றிருக்கலாம் என்று ஊகித்தேன். அது பட்டு மட்கிப் போயிருக்கலாம். சிவலிங்கம் மட்குவதில்லை.

மேலும் பாதையில் ஏறிச் சென்றேன். என் கண்கள் அதற்குள் தன்னிச்சையாகவே தேட ஆரம்பித்துவிட்டிருந்தன. பாதையோரமாகவே அப்படிப்பட்ட ஏழெட்டு சிவலிங்கங்களைக் கண்டேன். அப்படியானால் காட்டுக்குள் இன்னும் பல இருக்கலாம். நூற்றுக் கணக்கில். ஆயிரக்கணக்கில். மரங்கள்போல அல்லது புதைந்த வேர்கள்போல. மண்ணுக்குள் புதைந்து மேலும் ஆயிரம் லிங்கங்கள். முடிவேயில்லாமல். ஒருவகை அமைதியின்மைதான் ஏற்பட்டது.

நான் மலையனைக் கண்டபோது அவர் பூசையை முடித்து விட்டிருந்தார். விரிந்து தழைந்த வேங்கை மரத்தடியில் வைக்கப்பட்ட அக்கற்கள் பெரிய சிவலிங்கம் போலவும் வெறும் கற்கள் போலவும் ஒரே சமயம் தெரிந்தன. மலையன் மரத்தடியில் ஒரு வேரில் தலை வைத்துப் படுத்திருந்தார். கழுத்தில் மரமேறுவதற்குக் கால் தளைப்பாகவும் உதவும் பொருட்டு சுருட்டிய அழுக்குத் துண்டு. இடுப்பில் சிவப்புத் துண்டு கட்டியிருந்தார். தலையில் நொச்சிப்பூமாலை சூடியிருப்பது கூர்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது. நான் அருகே சென்று `மலையா’ என்றேன்.

அவர் தன் சிவந்த கண்களை விழித்து என்னைப் பார்த்தார். மீண்டும் கண்களை மூடிக்கொண்டார். நான் சற்றுத் தள்ளி பெரிய வேர்ப்புடைப்புமீது அமர்ந்து கொண்டேன். காட்டு மண் போன்ற உடல். அதில் வேர்ப்புடைப்புகள் போன்று நரம்புகள். கழுத்துத் துணிகூட ஏதோ வேர்போல அவரது கரிய நிறம் காட்டுடன் இயல்பாகவே இணைவது தெரிந்தது. என் வெளிர்நீல உடைகளும் தோல்நிறமும்தான் துருத்தின. இப்போது ஒரு காட்டு யானை வந்தால் முதலில் என்னைத்தான் துரத்திப்பிடித்துப் பேனை நசுக்குவதுபோல நசுக்கும். யானைக்கு வெண்ணிறமே பிடிக்காது. ஆகவே காட்டில் கட்டப்படும் தடுப்பணைகள் மதகுகள் எல்லாமே சாம்பல் நிறம்தான். இருந்தும் யானை அவற்றை வெறுத்து அழிக்க முயல்கிறது. காடல்லாதனவற்றை அது வெறுக்கிறது.

மலையன் எழுந்தபோது துண்டு அவிழ்ந்து மடியில் விழுந்து நெளிந்தது. எடுத்துப் போட்டுக்கொண்டு நடக்க நான் பின்னால் நடந்தேன். கிட்டத்தட்ட ஓடினேன். அவர் மனநிலையை மாற்றும் பொருட்டு `சாமாங்கள் வீட்டில் குடுத்திருக்கு’ என்றேன். ஆனால் அவர் அதைக் கேட்டது போலவே தெரியவில்லை.

நான் வந்த வழிக்கு மாறாக மலையன் வேறு ஒரு பாதையில் இறங்கி நடந்தார். மலையன் வீடுவழியாக ஓடும் ஓடையை அங்கிருந்து பார்க்க முடிந்தது. பலநூறு அடி ஆழத்தில் வெள்ளிச் சாரிகை ஒன்று விழுந்து கிடப்பது போலிருந்தது. வெவ்வேறு நீல நிறங்களில் சிறிய மலைகள். அப்பால் அகஸ்தியர் கூட மலையின் இள நீலத்திரை. மலைகளே விதவிதமான படுதாக்கள். சரசரவென்று அவற்றை விலக்கினால் என்ன தொரியும்?

`இந்த வழி சுருக்கமா?’ என்றேன் மலையனிடம்.

அவர் பதில் பேசாமல் மூங்கில் கூட்டங்களின் ஊடாகச் சென்ற பாதையில் நுழைந்தார். சரசரவென்று இருட்டி வந்தது. தலைக்குமேல் மூங்கில் இலைகளிலான பச்சை இருட்டு. இருபக்கமும் மூங்கில்களின் மஞ்சள் கோடுகளின் சுவர்.

`இந்தப் பிரதிஷ்டைதான் உங்க குலதெய்வமா?’ என்று கேட்டேன்.

மலையன் அதற்கும் பதில் சொல்லவில்லை. என்னை அப்போதுதான் பார்ப்பவர் போலத் திரும்பிப் பார்த்தார். மூங்கில் காடுகளுக்குள் காற்றில் மூங்கில்கள் உரசும் ஒலி மூங்கில் துளைகள் வழியாகக் காற்று அரிபட்டு சலிக்கப்படும் விதவிதமான ஒலிகள். பலவகை மிருகங்கள் வலியுடன் முனகுவதுபோல, உறுமுவது போல, சீறுவதுபோல. மலையனின் கண்களில் என்னை அடையாளம் கண்ட பாவனையே இல்லை. வனவிலங்கு ஒன்றின் பார்வை. இல்லை, இங்கே நான்தான் ஊன்மிருகமா?

என் குரலை மீட்பது சற்றுக் கடினமாக இருந்தது. இருந்தாலும் நான் பேச விரும்பினேன். பேசித்தான் அந்தச் சூழலை சாதாரணமாக வைத்திருக்க முடியும். `இந்தச் சாமி யாராக்கும்?’ என்றேன்.

மூப்பன் முகம் அசையவில்லை. ஆனால் அவருக்குச் சற்றுப் பின்னால் அந்தக் குரலைக் கேட்டேன். `நான்தான்.’

என் உடம்பு சிலிர்த்து உறைந்த நிமிடங்களில் பல இடங்களில் பலவகையான ஓசைகளில் அதே சொல் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

நான் பின்னால் திரும்பி ஓடிப் பாதையில் விழுந்து புரண்டு சிற்றயம்பலம் என்னும் வழியில் வந்து விழுந்தேன். லாரியில் மீட்கப்பட்டு ஊர்வந்து சேர்ந்தேன். என் நண்பர்கள் மனப்பிரமை என்றார்கள். காட்டில் பலவித ஒலிகள் கேட்கக்கூடும். இருக்கலாம். எத்தனையோ விதங்களில் விவாதிக்கலாம். விளக்கலாம். எல்லாம் பிரமைதான். அக்கணத்தில் மலையன் கழுத்தில் போட்டிருந்த அழுக்குத்துண்டு படமெடுத்து மணிக்கண்களையும் இரட்டை நாக்கையும் காட்டிச் சீறியது கூட.
– புதிய பார்வை, 2004

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 17
அடுத்த கட்டுரைஅமெரிக்கா – சந்திப்புகள்