குட்டப்பனுக்கு ஏன் தெரியவில்லை?

kaadu
எத்தனை நாட்களுக்குள் படித்தேன் என்று தெரியாது . டிவியை ஆன் செய்து எத்தனை நாட்கள் ஆயிற்று என்றும் தெரியாது . பார்சிலோனா விளையாடும் கால்பந்து ஆட்டங்கள் நடக்கும் நாட்களை தவிர தொ.கா எனக்கு முக்கியமான பொருளாகவே படவில்லை . அரபு நாட்டில் , தனி அறையில் டிவி மட்டுமே பேசிக்கொண்டிருந்த என் அறையில் இது எப்படி சாத்தியமானது என்று தெரியவில்லை . பாலைவனத்தை பறந்து கடந்து மேற்கு தொடர்ச்சி மலைகளுக்குள் புகுந்துவிட்டேன் . கீரக்காதனோடும் , மிலாவோடும் , அயனி மரத்தோடும் வாழத்தொடங்கிய அற்புத நாட்கள் இவைகள் . சந்தனமர காடுகளில் அலைந்து திரிந்து , காட்டாற்றில் குளித்து முழுகி நீலியோடு சுற்றி திரிந்த அற்புத காலங்கள் . இங்கு ஜெயமோகனும் இல்லை , கிரியும் இல்லை . மனிதர்களில் நீலி மட்டும்தான் இருக்கிறாள் ..

புதுத்தாளின் வாசனையோடு விஷ்ணுபுரமும் , கொற்றவையும் வா வா என்று அழைத்தாலும் , சில நாட்களுக்கு எதையும் படிக்க கூடாது என்று மனம் மன்றாடுகிறது . நல்ல உணவு (பிடித்த உணவு ) ஒன்றை சாப்பிட்ட பிறகு வேறு எதையும் சாப்பிட்டு வாயை கெடுத்துக்கொள்வது மடமை என்கிறது.

சிலவரிகள் உலுக்கிவிட்டன, வேறெங்கோ கொண்டு சென்று விட்டன என்பது உண்மை . பாதை போட்டு மரங்களை வெட்டி , காடுகளை அழிக்க சிலர் வந்ததும் மனம் வேறொங்கோ சென்றுவிட்டது . காடுகளை வெட்டி அழித்து காடுவெட்டி என்ற பட்டபெயர்களை பெருமையாக சுமந்து நிற்கிறது தமிழகம்(வன்னியர் , தஞ்சை கள்ளர் களில் இந்த பட்டப்பெயர் உண்டு). மலை காடுகளே மயக்குகிறதே ..வேங்கடம் முதல் குமரி வரை அன்று சமதள நிலபரப்பில் காடுகள் நிறைந்து இருந்திருக்குமே.. அது எவ்வளவு அழகாக இருந்திருக்கும் என்ற ஏக்கம் தொற்றிக்கொண்டது . கடல் தொடும் ஆசையில் காவிரிக்கு பலகால் முளைத்த தஞ்சை மண் பெரும் வனமாக இருந்திருக்கும் . வண்டல் மண்ணில் அடர் காடு இருந்திருக்கும். கீரக்காதனின் முன்னோர் நிலம் அது . எல்லாவற்றையும் அழித்தாகி விட்டது . மலைகளில் மட்டுமே ஒட்டிகொண்டிருக்கும் பச்சையை பிடுங்கவும் ஆரம்பித்துவிட்டோம் . அது ஆரம்பித்து நூறாண்டுகள் கடந்துவிட்டு இருக்கலாம் என்று நினைக்கும் போதே வேதனை தொற்றிகொண்டது .

நகைச்சுவைக்கும் காட்டில் பஞ்சமில்லை .கதை முழுவதும் நகைச்சுவை இழைந்தோடிக்கொண்டிருக்கிறது என்றாலும் கிரியின் மாமா இறந்த வீட்டில் நடப்பவை அனைத்தும் குபீர் சிரிப்பை வரவழைப்பவை என்று சொல்லவேண்டும் .

கிரியும் , நீலிக்குமான உறவு பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும் வேளையில் எல்லாம் தெரிந்த குட்டப்பனுக்கு ஏன் தெரியவில்லை ? ஏன் அவன் நீலி இறந்ததை யாரையோ பற்றி சொல்வது போல கிரியிடம் சொல்கிறான் ? அந்த இடம் நிச்சயமாக ஒட்டவில்லை. எவ்வளவோ சமாதானம் சொல்லிப்பார்த்தும் மனம் கேட்கவில்லை . குட்டப்பனுக்கு தெரியாமலா ? அது எப்படி சாத்தியம் ? இந்த கேள்விக்கு என்னிடம் விடையில்லை ..

இறுதியாக , இதில் ஜெயமோகன் என்ற ஒருவரும் இருக்கிறார்தான் ஆனால் அவரை முன்னிலைபடுத்தி பெரிதாக பேச மனம் இல்லை . எனினும் இரண்டு தசம ஆண்டுகளாக மலையாளமும் தமிழும் கலந்த வினோத பாஷையில் பேசிக்கொண்டிருக்கும் எனக்கு(நாஞ்சில் நாட்டு மொழி போல அல்ல , இது வேறு , தமிழும் மலையாளமும் அதன் இஷ்டத்திற்கு ஒன்றை ஓன்று தழுவி நிற்கும் மொழி, மலையன்களின், நீலியின் மொழி போல இது தனிமொழி , நாக்கின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப அமைந்த மொழி ) இந்த எழுத்துநடை மிகவும் பழக்கப்பட்ட ஓன்று போல இருந்தது . உடனே குதித்து விட முடிந்தது .அதற்கு நன்றி .

கோபு

அன்புள்ள கோபு,

நன்றி

குட்டப்பன் பற்றி ஒரு விளக்கம். ஒன்று, இம்மாதிரியான எழுத்து என்பது தயாராக யோசித்து விடைகளுடன் எழுதுவதல்ல. எழுதும்போது வருவது எதுவோ அது சரியாக இருக்கும். அவ்வளவுதான். குட்டப்பனுக்குத்தெரியவில்லை. ஏன் என்றால், தெரியவில்லை, அவ்வளவுதான். வாழ்க்கையிலும் அப்படித்தான்

வாசகனாக இப்போது சொல்வதென்றால் குட்டப்பன் காடு பற்றி அனைத்தும் அறிந்தவன். ஆனால் மானுட உறவுகளைப்பற்றிய அக்கறை அற்றவன் அல்லது பெரிதாக நினைக்காதவன். அவனைப்போன்றவர்கள் அப்படித்தான். அய்யர் குட்டப்பனின் மறுவடிவம். அவரும் அப்படித்தான் இருக்கிறார்

காட்டில் லட்சக்கணக்கான பறவைகள். அவை எப்படிச் சாகின்றன, என்ன ஆகின்றன? பறவைச்சடலங்களை மிக அரிதாகவே காணமுடியும். அதேபோலத்தான் நீலியும். இயல்பாக சருகு போல உதிர்ந்து மறைகிறாள். அதிலுள்ள கவித்துவம் எனக்கு உவப்பாக இருந்தது

ஜெ

காடு விமர்சனங்கள்

முந்தைய கட்டுரைபழக்கப் படுத்துதல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 10